PDA

View Full Version : டொமைன் ரகசியம்



பகுருதீன்
03-12-2007, 07:51 AM
குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா?
குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான, விதிகளுக்கு விரோதமான செயல் என்பதே ஒரு பொதுக் கருத்தாக இருப்பதால் இவை நேர்மை யானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் குறுக்கு வழிகள் புதிய வழியாக இருக்கும் பட்சத்தில் அவை நேர்மையாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதெப்படி என்று கேட்பவர்கள், "டாட் டிகே' மூலம் தானும் சம்பாதித்து ஒரு நாட்டுக்கும் வருவாயை தேடித் தரும் டச்சு தொழிலதிபரான ஜூஸ்ட் ஜூர்பியர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

.
ஜூர்பியர் பணம் சம்பாதிக்க தேர்வு செய்திருக்கும் முறையை குறுக்கு வழி ஆனால் நேர்மையான குறுக்கு வழி என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. எதையுமே செய்யாமல் எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் அதிக முதலீடுமின்றி, சுலபமாக பணத்தை அல்லது பலன்களை அள்ளிக் குவிப்பது என்பதே குறுக்கு வழிக்கான இலக்கணமாக இருக்கிறது.

ஜூர்பியரும் இப்படித்தான் பணம் சம்பாதிக்கிறார். அவரது வர்த்தக திட்டம் பற்றி ஒரே வரியில் சொல்லி விடலாம். "டாட் டிகே' எனும் முகவரியின் உரிமையை பதிவு செய்து கொண்டு, அந்த முகவரியில் கூடுதலாக பதிவு செய்யப்படும் ஒவ்வொரு முகவரிக்கும் அவர் வருவாயை தேடிக் கொண்டிருக்கிறார்.

இது எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள டொமைன் பெயர் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இன்டெர்நெட் முகவரிகள் பொதுவாக டொமைன் பெயர் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பல ரகம் உண்டு. பரவலாக அறிந்த டாட் காம்ஐ தவிர டாட் ஓஆர்ஜி, டாட் நெட் போன்ற முகவரிகளும் இருக்கின்றன. இதைத் தவிர ஒவ்வொரு நாட்டின் பெயரை குறிக்கும் சுருக்கத்தை கொண்ட முகவரிகளும் இருக்கின்றன.

உதாரணத்திற்கு இந்திய முகவரிகள் என்றால் டாட் இன். பிரிட்டன் முகவரிகள் என்றால் டாட் யு.கே. ஆஸ்திரேலிய முகவரி என்றால் டாட் ஏ.யு. இவை சம்பந்தப்பட்ட நாடு களுக்கான பிரத்யேக இணைய முகவரிகள். டொமைன் பெயர்கள் வரலாற்றில் அவற்றில் முக்கியமானதாக கருதக் கூடியவற்றை முதலிலேயே பதிவு செய்து கொண்டு பின்னர் அதற்கு தொடர்புடையவர்கள் அதனை கேட்டு வந்தபோது பேரம் பேசி அதிக பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்.

இதற்கு ஏறக்குறைய தடை விதிக்கப்பட்டு விட்டது. இதை தவிர டொமைன் தயாரிப்புகள் மூலம் சம்பாதிக்க மற்றொரு சுவாரசியமான வழி இருக்கிறது. அது பிரபலமாக இருக்கக் கூடிய இணையதளங்கள் போல தோன்றக் கூடிய ஆனால் சிறிய வேறுபாட்டை கொண்ட முகவரிகளை பதிவு செய்து கொள்வது.

இணைய முகவரிகளை டைப் செய்யும்போது கை தவறி ஒரு எழுத்து கூடுதலாக அல்லது குறைவாக அல்லது மாறி அடித்து விடுவது உண்டல்லவா. அப்போதெல்லாம், நாம் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த எழுத்து தொடரக் கூடிய இணையதளம் எட்டிப் பார்த்து வியக்க வைக்கும். அந்த தளத்தில் அநேகமாக அதிக விவரங்கள் இருக்காது.

ஒரு சில தகவல்கள் பட்டியலிடப்பட்டு ஏதாவது இணைப்புகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் நிச்சயமாக கூகுல் விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த விளம்பரங்களில்தான் விஷயமே இருக்கிறது. கூகுல் விளம்பரங்களில் க்ளிக் செய்யப்படும் ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு ஒரு சிறிய தொகை வருவாயாக கிடைக்கும்.

இந்த விளம்பர முறை கூகுலுக்கு வருவாயை அள்ளித் தந்து கொண்டிருக்கிறது. கூகுலுக்கு மட்டுமல்ல; அதனோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இணையதளங் களுக்கும் இது சீரான வருவாயை தருகிறது. இத்தகைய விளம்பரங்களுக்கு உள்ளடக்கம் சார்ந்த விளம்பரம் என்று பெயர். அதாவது இணையப் பக்கத்தில் இடம் பெற்றிருப்பதற்கு பொருத்தமான

இணையதளங்களில் விளம்பர இணைப்புகள் இடம் பெற்றிருக்கும். அந்த பக்கத்தை படிப்பவருக்கு ஆர்வமுட்டக் கூடிய வகையில் இருக்கும் என்பதால் மாமூலான, பொதுவான விளம்பரங் களை விட இவை க்ளிக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுவான விளம்பரங்கள் எரிச்சலூட்டக் கூடும். இந்த விளம்பரங்கள் அவற்றின் பொருத்தம் காரணமாக பயனுள்ள இணைப்புகள் போலவே கருதப்படும்.

எனவே முன்னணி தளங்கள் உட்பட பல தளங்கள் இந்த விளம்பரங்களை விரும்பி பயன்படுத்தி வருகின்றன. இந்த முறையையே மற்ற இணைய தளங்களும் புத்திசாலிதனமாக பயன்படுத்தி வருகின்றன.

முன்னணி தளங்களுக்கு இவை கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்திருக்கின்றன.
நிற்க! ஒரு சில புத்திசாலிகள் இத்தகைய விளம்பரங்களை இடம் பெற வைப்பதற்காக என்று பெயருக்கு என்று ஒரு இணைய தளத்தை நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகின்றனர். அநேகமாக இவை உள்ளடக்கம் ஏதும் இல்லாமல் வெறுமையாகவே இருக்கும். இந்த வெற்று இணைய தளங்களை தேடி இணையவாசிகளை வர செய்வதற்கு சுலபமான வழி இருக்கிறது. அதுதான் குறுக்கு வழி.

.
கூகுல் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுவதற்காக நடத்தப்படும் உள்ளடக்கமில்லா வெற்று தளங்களை நோக்கி இணையவாசிகளை வருகை தர வைப்பதற்காக என்று மிகவும் சுலபமான வழி இருக்கிறது. அது, சாமர்த்தியமாக இணையதள முகவரிகளை தேர்வு செய்து பதிவு செய்வது. உதாரணமாக ஒரு சில பெயர்களின் மூலமே, அது மகத்தானதாக இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்தி விடலாம்.

அத்தகைய பெயர்களை யோசித்து இணையதள முகவரிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது பிரபலமான இணையதளத்திற்கு இணையான வேறு மாற்று முகவரிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேடியந்திரங்களில் தேடும் போது அல்லது முகவரிகளை மாற்றி டைப் செய்யும் போது இந்த இணைய தளங்களுக்கு இணையவாசிகள் வருகை தர நேரிடும்.

அப்போது உள்ளடக்கம் இல்லாமல் அவர்கள் ஏமாந்து திரும்புவதால் ஒன்றும் நஷ்டம் இல்லை. அவர்களில் 10ல் ஒருவர் அல்லது நூறில் ஒருவர், ஏன் ஆயிரத்தில் ஒருவர் இந்த தளங்களில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்தால் போதும் வருவாய் வந்து விடும்.
இத்தகைய சாமர்த்திய முகவரிகள் பலவற்றை பதிவு செய்து கொண்டால் அதிக வருவாய் பார்க்கலாம்.

இப்படி பலர் செய்து வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் கோடீஸ்வர அதிபர்களாகி இருக்கின்றனர். அதிக உழைப்பின்றி பணம் சம்பாதிப்பதால் இவையும் குறுக்கு வழிதான். ஆனால் இவற்றில் எந்த சட்ட விரோதமான செயலும் இல்லை. மற்றவர்கள் பரவலாக அறிந்திராத நடைமுறையை புத்திசாலிதனமாக பயன்படுத்திக் கொள்ளும் செயல் மட்டுமே.

எனவே இவற்றை நேர்மையான குறுக்கு வழி என்று சொல்லலாம்.
டொமைன் பெயர் மூலம் சம்பாதிப்பதிலேயே மற்றொரு வழி இருக்கிறது. அது நாடுகளுக்கு உரிய டொமைன் உரிமை பதிவு செய்யப்படாமல் இருக்கிறது என்று தெரிந்தால் அதனை ஒட்டு மொத்தமாக பதிவு செய்து கொண்டு, அதன் பிறகு அதன் மூலம் வருவாயை பெருக்கிக் கொள்வது. அந்த நாடுகளுக்கான இணைய முகவரிகள் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு முறையும் அதன் மூலம் வருவாய் வந்து கொண்டிருக்கும்.

அதெப்படி ஒரு நாட்டுக்கான முகவரியின் உரிமையை பதிவு செய்யாமல் இருப்பார்கள். விஷயம் தெரிந்த உடனேயே பெரிய நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் போட்டிப் போட்டு கொண்டு பதிவு செய்து கொண்டு விடாதா? வாஸ்தவம்தான். முன்னணி நாடுகளின் பெயர் உரிமைகள் இப்படி உடனேயே பதிவு செய்யப்பட்டு விட்டன. மற்ற நாடுகளும் விழித்துக் கொண்டு பெயர் உரிமையை பதிவு செய்து கொண்டு விட்டன. ஆனால் பெயர் தெரியாத உலகம் அறியாத நாடுகள் சில இருக்கின்றன.

அவற்றுக்கு டொமைன் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயம் தெரியவில்லை. அந்த பெயரில் டொமைன் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்ற விஷயம் மற்றவர்களுக்கும் தெரியவில்லை. உண்மையிலேயே இப்படி பல நாடுகள் இருக்கின்றன.

அத்தகைய அபூர்வ நாடுகளில் ஒன்றுக்கான டொமைன் பெயர் உரிமையை டச்சு தொழிலதிபர் ஜூஸ்ட் ஜூர்பியர் பதிவு செய்து வைத்துக் கொண்டார். இப்போது இந்த நாடுகளின் முகவரி யில் அமைக்கப்படும் ஒவ்வொரு இணையதள முகவரிக்கும் அவருக்கு வருவாய் கிடைத்துக் கொண்டி ருக்கிறது. ஆனால் இதனை அவர் முற்றிலும் நேர்மையான முறையில் பயன்படுத்தி வருகிறார்.

நேர்மையான முறையில் மட்டு மல்ல, பாராட்டக் கூடிய வகையிலும் தான். சொல்லப் போனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கே அவர் உதவுகிறார். அடிப்படை வசதிகள் அதிகமில்லாத ஒரு நாட்டுக்கு தகவல் தொடர்பு வசதியை அவர் தேடி தந்து தானும் வளமாகி தன்னை வளமாக்கிய நாட்டுக்கும் செல்வத்தை பெற்றுத் தந்து வருகிறார்.

உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த விவரம் தெரியும். பசுபிக் மகா கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டமாக இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கான இணையதள முகவரி டாட் டிகே என்று முடிகிறது. இந்த முகவரிக்கான உரிமையைத் தான் ஜூர்பியர் தனது பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டார்.
.

ஆனால் இந்த முகவரியை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை பெற அவர் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. காரணம் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருக்கிறதா? என்பது இணைய முகவரிகளை பதிவு செய்யும் மூல அமைப்பான ஐகானுக்கே தெரியவில்லை. எனவே இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஜூர்பியர் இல்லாத நாட்டின் பெயரை குறிப்பிட்டு கதை விடுகிறாரா என்று சந்தேகப்பட்டனர்.

பின்னர் ஜூர்பியர் அரும் பாடுபட்டு அந்த நாட்டின் இருப்பை நிரூபித்து அதற்கான உரிமையை பெற்றுக் கொண்டார். உண்மையில் 2001ம் ஆண்டு டொமைன் பெயர் உரிமையில் முதலீடு செய்ய அவர் முடிவு செய்த போது நான்கு நாட்டு முகவரிகளை பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது.

அவை பாலஸ்தீனம், கிழக்கு தைமூர், பிட்கைரன் மற்றும் டோகேலா. அதாவது இந்த நான்கு நாடுகளின் முகவரி உரிமையும் பதிவு செய்யப்படாமலேயே இருந்தது. பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு தைமூர் இரண்டுமே பிரச்சனை பூமிகளாக இருப்பதால் அந்நாடுகளின் முகவரிகள் பதிவு செய்யப்படாமல் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியது.

தினசரி வாழ்க்கையே செத்துப் பிழைக்கும் அனுபவமாக இருக்கும் போது டொமைன் பெயர் பற்றியெல்லாம் யோசிக்க யாருக்கு தோன்றும். இவற்றில் டோகேலா பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று ஜூர்பியர் தீர்மானித்தார். பதிவு செய்து கொண்டதுமே டாட் டிகே எனும் பெயரில் ஒரு திட்டத்தையும் தொடங்கினார்.

முன்னணி நிறுவனங்களை டிகே எனும் பதத்தோடு முடியும் முகவரிகளை பதிவு செய்து கொள்ள ஊக்குவிக்கும் திட்டமாக இது அமைந்தது. இந்த பெயரில் முகவரிகள் பதிவு செய்து கொள்ளப்படும் போது அவருக்கு ஒரு வருமானம் கிடைக்கும். அந்த பெயரில் உள்ள தளங்களில் கூகுல் விளம்பரங்களை இடம் பெற செய்து அதன் மூலமும் வருமானத்தை பெற முடியும்.

இவ்வாறு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை அவர் டோகேலா நாட்டிற்கு வழங்கி விடுகிறார். அதுதான் டாட் டிகே திட்டத்தின் முக்கிய பகுதி. இந்த திட்டம் டோகேலா நாட்டின் பொருளாதாரத்திற்கு பக்கபலமாக நிற்கும் வகையில் அமைந்துள்ளது. பசுபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இந்த தீவுக் கூட்ட நாட்டில் அதிகம் போனால் 1500 பேர் இருப்பார்கள். இந்த நாட்டில் உள்ளவர்களை விட இந்த நாட்டிலிருந்து வெளியே போய் வசிக்கும் டோகேலாவாசிகள்தான் அதிகம்.

நியூசிலாந்து நாட்டுக்கு அருகே உள்ளது இந்நாடு. அரசியல் ரீதியாக தனி நாடு அந்தஸ்து இல்லை. நியூசிலாந்துக்கு கீழ்பட்ட தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக இது அமைந்துள்ளது. நிதியுதவி உட்பட பல விஷயங் களுக்கு இந்நாடு நியூசிலாந்தைத் தான் நம்பி இருக்கிறது. 1994 வரை இந்நாடு தகவல் தொடர்புக்கு ரேடியோ தொலைபேசித்தான் நம்பி இருந்தது. அதன் பிறகு செயற்கைக் கோள் தொலைபேசிக்கு மாறியது. ஆனால் டாட் டிகே திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அந்நாட்டில் இன்டெர்நெட் தொலைபேசி வசதி சாத்தியமானது.

அதற்கு முன்பு இந்நாட்டில் மொத்தமே 12 கம்ப்யூட்டர்கள்தான் இருந்தன. ஆனால் டாட் டிகே வருவாய் மூலம் இன்டெர்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 200ஐ தொட்டது. அது மட்டுமல்லாமல் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இணையதளங்களின் மூலம் பாடல்களை டவுன்லோடு செய்வது, மை ஸ்பேஸ் போன்ற தளங்களை பார்ப்பது ஆகிய செயல் களிலும் ஈடுபட தொடங்கினர்.

இன்று இந்த நாட்டிற்கான பொருளாதாரத்தில் 10 சதவீத நிதி டாட் டிகே திட்டத்தின் மூலம் கிடைத்து கொண்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற வேண்டும் எனும் நோக்கத்தை இந்த திட்டம் நிறைவேற்றி வருவதாக டோகேலா நாட்டை சேர்ந்தவர்கள் பெருமைப்படுகின்றனர். இதற்காக இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிந்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் பஃகா பேட்டாய் என்கின்றனர். அதாவது அவர்கள் மொழியில் நன்றி என்று அர்த்தம்.

இப்படியாக ஜூர்பியர் டாட் டிகே முகவரிகளை பதிவு செய்வதன் மூலமே வருவாயை தேடிக் கொண்டு வருகிறார். இது குறுக்கு வழிதான். ஆனால் ஒரு நாட்டுக்கே உதவும் நியாயமான குறுக்கு வழி.

நன்றி:மாலைச்சுடர்.காம்

ஜெயாஸ்தா
04-12-2007, 02:07 AM
டாட்.டிகே முகவரிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய கதை இருக்கிறதா? நான் கூட இதே டாட்டிகே டொமைனில் ஒரு வெப்சைட் வைத்துள்ளேன். ஆங்கிலத்தில் படித்த போது புரியாத வரலாறு தமிழில் நன்றாக புரிந்தது. தங்களின் மீள்பதிவுக்கு நன்றி.

நேசம்
04-12-2007, 04:10 AM
நல்ல தகவல்.பகிர்தலுக்கு நன்றி

செல்வா
04-12-2007, 05:41 AM
உக்காந்து யோசிக்கிறாய்ங்கயளேப்பா.........

ஜெயாஸ்தா
04-12-2007, 10:00 AM
உக்காந்து யோசிக்கிறாய்ங்கயளேப்பா.........

அப்படி யோசிக்கப்போய்தானே... இது மாதிரி உருப்படியான ஐடியாக்கள் எல்லாம் கிடைக்கிறது.

நுரையீரல்
05-12-2007, 09:59 AM
நல்ல தகவல் பகுருதீன் அவர்களே...

தமிழ்ப்புயல்
07-12-2007, 07:57 PM
தகவலுக்கு நன்றி.

அறிஞர்
07-12-2007, 10:15 PM
அறியாத தகவல்.... என்னம்மா யோசிக்கிறாய்ங்க.....

நன்றி நண்பா...

மனோஜ்
12-12-2007, 07:03 AM
குறுக்கு வழியில் ஒரு நல்ல வழி அருமை பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி பக்ருதீன்