PDA

View Full Version : இன்று கடைசி நாள்யவனிகா
30-11-2007, 11:04 AM
"டே தருண்...எழுந்திருடா...நேரமாச்சி பாரு...பஸ் போயுடும்டா..." ஏழு வயது தருணை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் காவ்யா.

"அம்மா...கொஞ்ச நேரம்மா...குளிருதும்மா..பிளீஸ்மா...இன்னைக்குத்தான் நாம இண்டியா போறமில்ல...நான் ஸ்கூலுக்கு போகலைம்மா பிளீஸ்.." அழுகையுடன் கெஞ்சுகிறான் தருண்.

"டேய் இன்னைக்குத்தான் ஸ்கூல் கடைசி நாள்...மாங்கு மாங்குன்னு படிச்சு எக்ஸாம் எழுதினேல்ல... கரக்சன் முடிஞ்சு பேப்பர் தருவாங்கடா..அதை போய் வாங்கிட்டு வந்திடுமாம் எம் பட்டு குட்டி...அப்புறம் மூணு மாசம் நோ ஸ்கூல்...நோ ஹோம் வொர்க்...ஊருக்குப் போறோம்...ஜாலி தானே..." சமாதான முயற்சியில் காவ்யா.

"சரிமா இந்ததடவையும் நான் ஃபர்ட் ரேங்க் வாங்கினா...என்ன வாங்கித்தருவே?"

இந்தத் தடவ நான் எதும் வாங்கித்தர மாட்டேம்பா...உன் செல்லப் பாட்டி உனக்கு எல்லாம் வாங்கித் தருவாங்க.அவங்க கிட்டயே நீ என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ?

அம்மா எத்தனை மணிக்கு ஏர்ப்போர்ட் போகணும்? என் ட்ரெஸ்,ஸ்டோரி புக்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டயா?அந்த ஸ்பைடர் மேன் ட்ரெஸ் மட்டும் மறந்திராதம்மா. பி.எஸ்.2 எடுத்து வைம்மா பிளீஸ்.

சரிங்க சார், எல்லாம் எடுத்து வைக்கிறேன் முதல்ல வா குளிக்கலாம்.

அம்மா...பாட்டி நமக்காக சென்னை ஏர்போர்ட்ல வெயிட் பண்ணுவாங்கல்லமா?

கண்டிப்பா வருவாங்க...எல்லாருமே வருவாங்கடா...நீ யூனிஃபார்ம் போடு சீக்கிரம். இந்தா சாக்ஸ்...சீக்கிரம் ...பஸ் போயிடும். பாலைக் குடி..

அம்மா இன்னைக்கு ஸ்கூல் ஹாஃப் டே தாம்மா...கிளாஸ் நடக்காது...பேப்பர் மட்டும் தான் தருவாங்க...எதுக்குமா டெய்லி கொண்டு போற ட்ராலி பேக் எடுத்து வெச்சிருக்க...சின்ன பேக் குடுமா...

அய்யோ தருண் சின்ன பேக் அப்பா எங்க வெச்சாங்கன்னு தெரியலடா...எப்பவும் கொண்டு போற பேகை இன்னைக்கும் கொண்டு போனா என்ன?

போம்மா நீ ரொம்ப போர்.

என்னடா கண்ணா...இன்னைக்குத் தானடா கடைசி நாள்...அனத்தாமப் போயிட்டு வாயேன்.

அம்மா டுவல்வோ கிளாக் சார்ப்பா பால்கனில நில்லு...நான் தான் ஃப்ர்ஸ்ட் ரேங்க்குன்னு
நான் கத்திட்டே வருவேன் சரியா...

சரிடா செல்லம்...பஸ் வந்திருச்சு பாரு...சீக்கிரம் ஓடிப்போய் ஏறிக்கோ...

மதியம் வரை வேலை பெண்டு எடுத்து விட்டது காவ்யாவை. பேக் செய்பவற்றை எல்லாம் செய்து முடித்து வீட்டை சுத்தமாக வாக்குவம் செய்து என....ஆனால் வேலைகளூடே விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் நினைவு மெல்லிய சந்தோச சரிகையாய்
ஓடிக்கொண்டிருந்தது.

தருணுக்குத் தான் எத்தனை சந்தோசம்...சிறைபட்ட பறவைகளாய் மனிதர்கள் வெளி நாடுகளில்...ஆண்டுக்கொருமுறை சிறை திறக்கப் படுகிறது...விரும்பியே மறு முறையும் சிறை புகுகிறோம்...அடுத்த ஆண்டு விரைவில் வரப் ப்ரார்த்தித்தபடி....

சென்ற ஆண்டு, இந்தியாவிற்குப் போய் வந்ததிலிருந்து தருண் நச்சரிக்கத் துவங்கி இருந்தான். "மறுபடி எப்பம்மா இந்தியா போவோம்?" என்பது அவனது தினசரிக் கேள்விகளில் ஒன்றாகப் பழகிப்போய் விட்டது காவ்யாவிற்கு. ஒருவருடமாய் தருண் எதிர் நோக்கியிருந்த தினம் இன்று. இன்று பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்ப அவளுக்கும் விருப்பமில்லை தான். என்ன செய்ய பரீட்சை பேப்பர் தரும் தினமாயிற்றே. முடிவுகளைப் பார்த்து விட்டுச் சென்றால் திருப்தியாயிருக்கும். நினைவுகளோடேயே மணித்துளிகளும் பேய் வேகத்தில் பயணித்தன.

அடடா...தருண் வரும் சமயமாயிற்றே....பால்கனியிலிருந்து பார்த்தால், ஸ்கூல் பஸ் வருவது தெரியும். பால்கனி கதவைத் திறந்தாள், காவ்யா. உலர்ந்து விட்டிருந்த துணிகளை கைகள் சேகரிக்க, கண்கள் தெருவையே
நோக்கிக் கொண்டிருந்தன. அப்பாடா...பஸ் வந்தாகி விட்டது.

முழுவதுமாக ஏஸி செய்யப்பட்ட பஸ்ஸின் ஜன்னல் வழியே தருண் தென்பட்டான்.வெற்றி என்பது போல கட்டை விரலை உயர்த்திக் காட்டியபடி இறங்க ஆயத்தமானான். தோழர்களிடம் கதை பேசி முடியவில்லை போலும்.ஊருக்குப் போகும் கதை பெரிய கதை அல்லவா?

பஸ்ஸை விட்டு குதிக்காத குறையாக இறங்கினான். பஸ்சின் தானியங்கிக் கதவு தன்னாலே மூடிக் கொண்டது. முத்தாய்ப்பாய் தோழர்களைப் பார்த்து கடைசியாக கையசைத்தான். பஸ்சும் புறப்பட்டது.பஸ்சின் தானியங்கிக் கதவிலே சிக்கிக் கொண்ட ட்ராலி பேகின் கைப்பிடி பஸ்ஸுடனேயே பயணப் பட்டது, தருணையும் இழுத்துக் கொண்டு.

நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த காவ்யா, விபரீதம் உணர்ந்து, "பஸ்ஸை நிறுத்துங்க...அய்யோ எம் புள்ளை..."என்று கதறிக் கொண்டு இறங்குவதற்குள் காரியம் கை மீறி இருந்தது.

கருப்புத் தார் ரோட்டில் சிவப்புக் கோடாக தருண் சில மீட்டர் தூரங்கள் இழுபட்டிருந்தான்.தலையில் பலத்த அடி.

அம்மாவின் மடியில்,உயிர் பிரியும் தருவாயில்.... தருண் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்...

"அம்மா, பாட்டி நமக்காக ஏர்போர்ட்டில் வெயிட் பண்ணுவாங்க இல்லைமா?".

அன்புரசிகன்
30-11-2007, 11:48 AM
என்னங்க.. ரொம்ப மோசம்... உயிர் பிரிகிறதா?....

ரொம்ப கனமான கதை... கதையாகவே இருக்கவேண்டும்...

யவனிகா
30-11-2007, 03:53 PM
என்னங்க.. ரொம்ப மோசம்... உயிர் பிரிகிறதா?....

ரொம்ப கனமான கதை... கதையாகவே இருக்கவேண்டும்...

இது உண்மையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துப் பின்னப் பட்ட கதைதான். ஒரு வட இந்தியத் தம்பதியினரின் குழந்தை...பஸ்சில் ட்ராலி பேக் மாட்டி இழுபட்டு இறந்து போனான், வெகேசன் புறப்படும் தினத்தன்று...இது நடந்தது சவூதியில் தமாம் இன்டெர்னேசல் இண்டியன் பள்ளி பஸ்ஸால். அதன் பின் எங்கள் பிள்ளைகளுக்கு ட்ராலி பேக் தடை செய்யப்பட்டது.
இதில் ஒரு சோகம் என்னவென்றால் அந்தத் தம்பதியினரின் மூத்த பிள்ளை சற்றே மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை. இரண்டாவதைப் பார்த்துத் தான் சற்றேனும் ஆறுதல் அடைந்து கொண்டிருந்தனர். என்ன செய்வது....அதுவும் பரிபோயிற்று.

அன்புரசிகன்
30-11-2007, 04:03 PM
இதில் ஒரு சோகம் என்னவென்றால் அந்தத் தம்பதியினரின் மூத்த பிள்ளை சற்றே மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை. இரண்டாவதைப் பார்த்துத் தான் சற்றேனும் ஆறுதல் அடைந்து கொண்டிருந்தனர். என்ன செய்வது....அதுவும் பரிபோயிற்று.

அவர்கள் வாழ்நாள் முழுவதும் வரப்போகும் சோகம் அது. நிவர்த்திசெய்யமுடியாதது... உண்மையில் இந்தக்கதைக்கு பாராட்டும் மனம் என்னிடம் இல்லை. உண்மையில் வாசித்த நேரம் தொடக்கம் நெஞ்சில் ஒரு விதமான உணர்வு குடிகொண்டிருக்கிறது.... :(

பூமகள்
30-11-2007, 04:12 PM
மனத்தில் சோகத்தை ஏற்படுத்திய கதை..! :mad:
மனம் கனத்து கீழே பார்த்தால், கதையல்ல நிஜமென்று அடுத்த பின்னூட்டப் பதிவு. ரொம்பவே கஸ்டமா இருக்கு அக்கா. சில சமயம், வாழ்க்கை கற்பனைகளையும் தாண்டி விளையாடிடுது. வருத்தமா இருக்கு..!

நல்லா தானக்கா இருந்தீங்க...!! ஏன் இப்படியெல்லாம் அழ வச்சி பார்க்க ஆசைப்படுறீங்க...?? :frown:
போங்க.. யவனி அக்கா.....
இனி உங்க கூட கா..!
இப்படி பூவை அழ வச்சிட்டீங்களே....?!! :traurig001::traurig001:

செல்வா
30-11-2007, 04:54 PM
அய்யோ..... ......................... :(

மதி
30-11-2007, 06:35 PM
சட்டென மனம் கனத்துப் போனது....
ஏன் யவனிகா ஏன்?
பல கேள்விகள் கேட்டு ஆசையாயிருந்த இளம்பிஞ்சின் முடிவு உருக்கிவிட்டது...

நேசம்
30-11-2007, 08:00 PM
கதையா படிக்கும் போதே மனசுக்கு கஷ்டமா இருந்தது.ஆனால் அதுவும் உண்மை சம்பவம் அதிலும் முதல் மகன் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை என்று யவனிக்கா பின்னூட்டத்தில் தெரிய வந்த போது,கடவுள் ஏன் இப்படி எல்லாம் மனிதர்களை சோதிக்கிறான் என்று கவலை தான் ஏற்படுகிறது

ஓவியா
30-11-2007, 08:48 PM
நான் எப்பவும் கடைசி பத்திய படிச்சிட்டுதான் கதையை படிக்க ஆரம்பிப்பேன். இன்றும் அதே!!!! :frown::frown::frown::traurig001:

'ஜிஞ்சரி'ன் முடிவில் நான் வரைம் போல் சிறு கல்லைதான் மக்களின் மனதில் பதித்தேன், நீங்களோ இந்த கதையில் பாறையளவில் கல்லை நெஞ்சில் வைத்து விட்டீர்கள். சோகம் சொட்டுகிறது.

அருமையான சிறுகதை, வசனங்களை வைத்தே நீங்கள் சிறந்த கதையாசிரியாக வருவதற்க்கான எதிர்காலம் சிறப்பாக இருக்கின்றது என்று சொல்லலாம். மனதார பாராட்டுகிறேன்.

நன்றி.

சிவா.ஜி
01-12-2007, 03:36 AM
மனதை உலுக்கிவிட்டது.அய்யோ என்ன கொடுமை இது என்று மனதுக்குள் ஒரு அலறல் கேட்கிறது.இருப்பதிலே பெரிய கொடுமை தான் பெற்ற பிள்ளை தன் முன்னே மரணத்தை தொடுவதைப் பார்ப்பதுதான்.ஒரு கதாசிரியராக நீங்கள் முதல் வகுப்பில் தேறிவிட்டீர்கள்.உங்கள் எதார்த்தமான எழுத்து நெஞ்சைப் பிசைந்துவிட்டது.இனி இந்த வேதனை எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது ஆண்டவனே.....

lolluvathiyar
01-12-2007, 06:42 AM
சோகமான முடிவு கொன்ட கதை, பின்னூட்டம் இட முடியவில்லை

இளசு
01-12-2007, 10:44 AM
கதை சொல்லும் திறமைக்குச் சிறப்பு பாராட்டுகள் யவனிகா அவர்களே..

பின்னூட்டம் இட இயலா அளவுக்கு படிப்பவர் மனதை உலுக்கியதில்
முழுவெற்றி கதாசிரியருக்கு..

படித்து, விலகி, ஆற்றி, தேற்றி - பின்வந்து நானிடும் பின்னூட்டம் இது..

ஜென் கதைகளில் ஒன்று -

அவன் : ஆசி கூறுங்கள் குருவே!

குரு : ஆசிர்வதிக்கிறேன் - உன் அப்பா சாவார், பின் நீ சாவாய்.. பி உன் மகன் சாவான் - என!

அவன் : ஆசி சாவவா?

குரு : முட்டாள்... சாவு நிச்சயம்.. அதன் வரிசை முக்கியம்.. மாற்றி யோசித்துப் பார்... ஆசியின் மகிமை புரியும்!


காதலி பிரிந்தால் கவிதை, தாடி... உச்சம் - பித்து நிலை மஜ்னு போல்!
வாரிசு பிரிந்தால் - மரணம் - தசரதன் போல்!

எண்பது வயதில் ம.பொ.சி தம் அறுபது வயது மகனைப் பறிகொடுத்தார்.

என்னை இந்த வயதில் இதைக்காண வைத்தாயே என அந்த வெண்மீசை தளர்ந்த குழந்தை அழுத காட்சி - கொடுமை!

எந்த வயதிலும் பிள்ளையை இழக்கும் பெற்றவர் மனம் படும் வேதனை -
இவ்வுலகின் தலையாய வேதனை!

மரபுச் சங்கிலி விதியின் உச்சகட்ட மாற்றம்/தண்டனை அது!

புத்திர சோகம் - உலகின் உச்ச சோகம்..

நடப்பதைத் தடுக்க இயலாது..
நடைபெற்றவர்களுக்காக கண்ணீர் மட்டுமே !

நுரையீரல்
02-12-2007, 03:10 AM
கதையா படிக்கும் போதே மனசுக்கு கஷ்டமா இருந்தது.ஆனால் அதுவும் உண்மை சம்பவம் அதிலும் முதல் மகன் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை என்று யவனிக்கா பின்னூட்டத்தில் தெரிய வந்த போது,கடவுள் ஏன் இப்படி எல்லாம் மனிதர்களை சோதிக்கிறான் என்று கவலை தான் ஏற்படுகிறது
லூஸ் மூக்கா... எது எதுக்கு எல்லாம் கடவுளை இழுக்கறதுனு வெவஸ்தையே இல்லையா.....

தருணின் துர்மரணத்திற்கு காரணம், வண்டியின் ஓட்டுனர், தருண் பயன்படுத்திய Trolly Bag மற்றும் இந்த வண்டியில் இல்லாத ஆயா...

எல்லாத்துக்கும் கடவுளை இழுத்து, இழுத்துத் தான் சிலருக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று....

இந்த துர்மரணத்திற்கு காரணம் கவனக்குறைவு மட்டுமே.....

யவனிகா
04-12-2007, 07:05 PM
என் மனதில் பாரமாய் அழுந்திக் கொண்டிருந்த விசயத்தை கதையாய் உங்கள் மனதிலும் இறக்கி வைத்து விட்டேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி உறவுகளே.

மலர்
04-12-2007, 10:37 PM
எத்தனை ஆசையோடு இருந்துச்சி அந்த பையன்........??
கதையை படித்து மனமெ பாரமா போயிடுச்சி போக்கா....

Ram-Sunda
06-12-2007, 04:53 AM
அட அந்த பிஞ்சு மனம் என்ன என்ன ஆசை, ச்ச்ச் எல்லம் அந்த டிராலிபேக்கால் வந்தது....
உங்கள் கதையை படித்து மனம் வளித்தது

சுகந்தப்ரீதன்
06-12-2007, 05:15 AM
கலகலப்பாய் கதையை சொல்லி கடைசியில் கண்களை கலங்க வைப்பதை கலையாக வைத்துக் கொண்டுள்ளீர்கள் போலும்.. கண்முன்னே பெற்ற குழந்தை இறந்து போவதும்.. இறக்க போவது தெரியாமல் குழந்தைதனமாய் பாட்டியை விசாரிப்பதும்... நினைக்க நினைக்க நெஞ்சு கனக்கிறது.. வாழ்த்துக்கள் அக்கா வாழ்க்கை பதிவுகளை தருவதற்க்கு..!

இதயம்
06-12-2007, 05:29 AM
யவனிகாவின் மனதை பிசையும் படைப்புகளுக்கு எப்போதும் நான் பாராட்டுக்களை பதிலாக அளிப்பேன். ஆனால், இந்த பதிவிற்கு ஒரு உயிரின் விலை, தாய்மையின் உணர்வு அறிந்தவன் என்கிற முறையில் என் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன். நான் பத்தி, பத்தியாக சொல்லி புலம்புவதை இந்த கண்ணீர் கச்சிதமாக உங்களுக்கு சொல்லும்..!!

இன்று கடைசி நாள் என்ற இந்த பதிவு ஏற்படுத்திய கண்ணீரும் இன்று கடைசியாக இருக்கட்டும். அந்த தாய்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..!!

அமரன்
06-12-2007, 09:09 AM
கன்னக்கள் சுடுகின்றன. காட்சியைக் காட்டிய யவனிகாவின் எழுத்தாலும், வலியை விரிவாக்கிய இளசு அண்ணாவின் எழுத்தாலும்.

எங்கள் நாட்டு வண்டிகளில் நடத்துனர் என்று ஒருவர் இருப்பார். சிலவேளை அவரே இப்படியா நிகழ்வுகளுக்கு காரணமாகிடுவார். நான் பார்த்த ஐரோப்பிய நாடுகளில் ஓட்டுநர் மட்டும்தான். நிகழ்வுகளைக் கேட்டது/கண்டது குறைவு. காரணம்... பணிலயிப்பு? உயிரின் மதிப்புணர்வு?.......... இன்னும்பல?

மனோஜ்
06-12-2007, 02:53 PM
கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது யவனி(ய)க்கா
அந்த குடும்பத்தின் நிலைமிகவும் வருந்தகுடியது
இறைவன் மனதை தேற்றற்றும்

பாரதி
07-12-2007, 12:50 PM
உங்களின் மனபாரம் இப்போது எங்களிடம். யாருக்கோ என்றாலும் இத்தனை வலி தெரிகிறதே..? எத்தனைக் கொடுமை..! எத்தனைக் கொடுமை..!! காரியங்கள் நடந்த பின்னரே காரணங்கள் ஆராயப்படுகின்றன.

சிறப்பாக தந்ததற்கு பாராட்டுக்கள். இது போன்ற நிகழ்வுகள் இனியாவது நடக்காமலிருக்கட்டும்.

kavitha
06-06-2008, 05:50 AM
என்ன கொடுமை இது! யவனிகா.. கதையில் பிஞ்சுக்குழந்தையைக்கொன்றுவிட்டீர்களே என்று உங்களைக்கடிந்துகொண்டேன். உண்மை என்றதும் கண்ணீர் வந்துவிட்டது.
தானியங்கிக்கதவுகளுள்ள பேருந்துகள் நகரங்களில் உலவுகின்றன. குழந்தைகளிடம் அவற்றைப்பிடிக்கக்கூடாது, நாமாக திறக்க முயலக்கூடாது, துப்பட்டா அணிந்திருக்கும்போதோ, பைகள் எடுத்துச்செல்லும்போது கதவிடுக்கில் மாட்டாமல் கவனமாக எடுத்துசெல்லவேண்டும் என்பதை புரியவைக்கவேண்டும்.
படியில் நின்று பயணம் செய்வது இவ்வகை பேருந்துகளில் தவிர்க்கப்படுவது இதன் பலம் என்றால் இவ்வகையான இழப்புகள் இதன் பலவீனம். பேருந்து நடத்துனர்கள் பயணிகள் இறங்கியதை உறுதி செய்த பின்னர் கதவை மூடச்செய்யும்படி செய்தால் நலம்.

சூறாவளி
11-10-2010, 07:20 PM
நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு, நம் கண்கள் முன் நடமாடுபவர்களுக்கு இறப்பு என்று வரும் போது தான் பிரிவின் சோகத்தை மனதுக்குள் ஏற்று அதை வெளிகாட்டுகிறோம், அதில் ஒரு வழி இதுபோல் வரிகளில் கொட்டுகிறோம்.. அதே போல் தான் இம்மன்றத்தின் சகதோழி எழுதிய கதை என்பதால் படித்த அனைவரும் அவரவர் பரிதாபத்தை வரிகளில் காட்டி விட்டோம், ஏனெனில் இக்கதை படிக்க ஆரம்பிக்கும் போதே கதாசிரியருடனான நெருக்கம் நம் மனதில் வந்துவிடுகிறது, அதனால் இச்சோக சம்பவத்தில் உடனடி துக்கம் நம்மை ஆட்கொண்டு அதற்க்கு ஆதங்கமும் எழுதி விடுகிறோம்..

ஆனால் இதே போல் எண்ணற்ற உயிர்கள் மடியும் செய்தி கண்டு அடுத்தகனம் சகஜநிலைக்கு மாறி விடுகிறோம்..

இதுதான் மனித மனம்...

யவனிகா அவர்களின் நட்பின் ஆழம் இசெய்தியின் பின்னுட்டம் மூலம் அறிந்தேன்..

சிறிய கருவை வைத்து சிதறாமல் கோர்வையாக்கி விட்டிர்கள்...

xavier_raja
19-10-2010, 01:35 PM
அவனின் அம்மா மட்டும் ஒழுங்காக சின்ன பை எடுத்து வைத்திருந்தால் இந்த துயரம் நடந்திருக்காது.. மிகவும் மோசமான சம்பவம்.... வருந்துகிறேன்....

கீதம்
19-10-2010, 09:24 PM
அவனின் அம்மா மட்டும் ஒழுங்காக சின்ன பை எடுத்து வைத்திருந்தால் இந்த துயரம் நடந்திருக்காது.. மிகவும் மோசமான சம்பவம்.... வருந்துகிறேன்....

இதுபோன்ற நிகழ்வுகளில் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. இதுபோல் நிகழும் என்று தெரிந்திருந்தால் அம்மா முன்னெச்சரிக்கையாய் இருந்திருக்க மாட்டாரா?

இதேபோல் ஒரு நிகழ்வு நான் சென்னையில் இருந்தபோது நடந்தது. பள்ளி வேனை விட்டு கீழிறங்கிய பிள்ளை, வேனை முன்பக்கமாக கடந்து வந்திருக்கிறான். அந்த சமயம் அவனது பென்சில் டப்பா தவறி கீழே விழ, அதைக் குனிந்து எடுக்கும் தருவாயில் வேன் டிரைவர் அவன் கடந்துவிட்டதாக நினைத்து வண்டியைக் கிளப்பிவிட்டார். இந்தக் கோரம் நடந்தது அவனுடைய தந்தையின் கண் முன்னேதான்.

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்திருந்த அவர், தன் வீட்டு மாடியிலிருந்து குழந்தையின் வரவை ஆவலோடு எதிர்நோக்கிக்கொண்டிருந்த வேளையில் நிகழ்ந்தது இது. இதில் கூடுதல் துயரம் என்னவெனில் அன்று அக்குழந்தைக்குப் பிறந்தநாள் என்பதும் அதைக்கொண்டாடவே அவர் வந்திருந்தார் என்பதும்.

சிவா.ஜி
25-10-2010, 09:56 PM
இந்தக் கோரம் நடந்தது அவனுடைய தந்தையின் கண் முன்னேதான்.

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்திருந்த அவர், தன் வீட்டு மாடியிலிருந்து குழந்தையின் வரவை ஆவலோடு எதிர்நோக்கிக்கொண்டிருந்த வேளையில் நிகழ்ந்தது இது. இதில் கூடுதல் துயரம் என்னவெனில் அன்று அக்குழந்தைக்குப் பிறந்தநாள் என்பதும் அதைக்கொண்டாடவே அவர் வந்திருந்தார் என்பதும்.

அடக் கடவுளே...இது மிகப்பெரியக் கொடுமை. மனதை ரொம்ப பாதிச்சிடுச்சும்மா. யவனிகா அப்படி ஒரு கதையைக் கொடுத்தா நீங்க இப்படி ஒரு செய்தியைக் கொடுக்கறீங்க.....ஒரு தந்தையால இதைத் தாங்க முடியல.

கீதம்
25-10-2010, 10:00 PM
அடக் கடவுளே...இது மிகப்பெரியக் கொடுமை. மனதை ரொம்ப பாதிச்சிடுச்சும்மா. யவனிகா அப்படி ஒரு கதையைக் கொடுத்தா நீங்க இப்படி ஒரு செய்தியைக் கொடுக்கறீங்க.....ஒரு தந்தையால இதைத் தாங்க முடியல.

உண்மைதான் அண்ணா.

இது நடந்தது வேளச்சேரியில். அது ஆஷ்ரம் பள்ளி வேன்.

அன்று அச்சிறுவனுக்கு ஏழாவது பிறந்தநாளாம்.

அந்நிகழ்வுக்குப் பிறகு என் குழந்தைகளுக்கு ஆயிரம் புத்திமதிகள் சொல்லி வேனில் ஏற்றுவது வழக்கமாகிவிட்டது.

பூமகள்
26-10-2010, 08:29 AM
கீதமக்கா.. நிஜம் என்றுமே எண்ணிப் பார்க்க இயலாத இடத்தில் இருந்து வலிக்க வைக்கிறது..

எவ்வகையில் எப்படி அந்த வலியைத் தாங்குவது என்பது நம்மில் இருக்கும் பெரிய கேள்விக் குறி.. ஆனாலும், ஒரு வலியை விட ஒரு வலி பெரிதாகத் தோன்றி நம்மைக் கல்லாக்கிப் பார்க்கிறது காலம்.. சின்ன கோடு பக்கத்தில் பெரிய கோடு போடுவது போல..

கொடுமையிலும் கொடுமை.. தான் இறப்பதை விடவும் கொடுமை, தன் குழந்தை இறப்பதை தம் கண் முன்னால் பார்ப்பது தான்.. ஒரு தந்தையாலும், தாயாலும் இதை தாங்கவே முடியாது. அவ்வகையில் அந்த தந்தையின் கவலை போல் துயருறும் சிவா அண்ணா பதறலும் என்னாலும் புரிய முடிகிறது. ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.:frown::frown::frown: