PDA

View Full Version : சுவடு(சிறுகதை)-பார்த்திபன்மதி
26-11-2007, 02:53 AM
ஆ..பத்தில் என் நண்பனின் கதை பற்றி சொல்லியிருந்தேன். இது அவனது முதல் கதை. அவனிடம் அனுமதி வாங்கி மன்றத்தில் பதிக்கிறேன். உங்கள் கருத்துக்களை அவனிடம் சொல்கிறேன்.. :) இனி கதைக்கு போலாம்.
--------------------------------------------------------

அன்று அப்படி நடக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் நடந்தது. வேலை இருக்குமென்று என் நண்பனின் பைக்கை எடுத்துக்கொண்டு அலுவலகம் போனேன். வேலை ஒன்னும் இல்லை. ப்ராஜக்ட் எதுவும் இல்லாமல் தற்சமயம் பெஞ்ச் வாசம். கல்லூரியில பெஞ்சில உட்காருவது தான் கொடுமை, ஆனால் பணியில், கொஞ்ச காலத்துக்கு சுகமாயிருக்கும். நான் இன்னும் அந்த சுக காலத்தில்.

கொஞ்ச நேரம் அலுவலகத்தில் மொக்கைய போட்டுவிட்டு மதியம் 2:30 மணிக்கு கிளம்பிவிட்டேன். என் அலுவலகம் ஏர்போர்ட் ரோட்டில். போனதோ பஸ்வேஸ்வர நகருக்கு. நான் புதிதாய் வாங்கியிருக்கும் ப்ளாட்டை பார்ப்பதற்கு.

பெங்களூரு ட்ராபிக்கை பற்றி சொல்லவும் வேண்டுமா? அந்த புகைமண்டலத்தையும் பஸ்களையும் ஆட்டோக்களையும் பைக்குகளையும் பார்த்து பேசி உரசி செல்வதற்குள் மணி 3:30 ஆகிவிட்டது.

வீடு கட்டிக்கொண்டிருந்த இடத்தை அடைந்ததும் என் பைக்கின் கனைப்பை நிறுத்திவிட்டு இறங்கும் போது போன ஜென்மத்து பாவமூட்டையெல்லாம் சேர்த்து தோளில் தூக்குன மாதிரி வலி. எப்போதும் கங்காருகுட்டி போல் என்னுடன் தொத்திக்கொண்டிருக்கும் மண்ணாங்கட்டியால செஞ்ச லேப்டாப் தான்.

வீடு கட்டுமானத்தை பார்வையிட்டு முடிக்க வேண்டிய வேலையைப் பத்தி பேசிவிட்டு மறுபடி அந்த யாத்திரையைத் தொடங்கினேன். இம்முறை பஸ்வேஸ்வரா நகரிலிருந்து மடிவாலாக்கு. அங்க தான் எங்க மாளிகை இருக்கு. தமிழ்நாட்டிலிருந்து வந்த கணிப்பொறி வல்லுநர்களின் பெரிய அகதிகள் முகாம் மடிவாலா தான். நானும் விதிவிலக்கல்ல.

ஒருவழியா வந்து சேர்ந்தப்புறம் முதுகு மரத்துப் போனது போன்றதொரு பிரமை. வீட்டுக்கு வந்த போது அதைவிட பெரிய சோதனை. வீடு பூட்டிக்கிடக்கு. மனதுக்குள்,

கொய்யால..இந்த கணேஷ் பய. எங்க போய் தொலைஞ்சான்
(கொய்யால, பாடிசோடா, டக்ளஸ், எம்.எம் இப்படி பல புனைப்பெயர்கள் எங்க வீட்டுல உண்டு. அதெல்லாம் கண்டுக்காதீங்க)

இந்த கணேஷ் என் ரூம்மேட்டின் சித்தி பையன். 2007 பாஸ் அவுட். காலேஜ் முடிஞ்சதும் நம்மை போல சாப்ஃட்வேர் என்ற அண்டர்வேரை அணிய வந்து, அந்த குட்டையில் விழப்போகும் அடுத்த மட்டை அவன். சரி..கண்ட பயலைப் பத்தி நமக்கெதுக்கு.

எங்களைப் போன்ற பேச்சுலர்க்கு (சந்தடி சாக்குல கல்யாணம் ஆகலேன்னு வேற சொல்லிட்டேன்.) இப்படி பூட்டிய வீட்டின் முன் நிற்கும் அனுபவம் நிறைய கிடைத்திருக்கும். அதுலேயும் கஷ்டப்பட்டு என்னை மாதிரி வியர்வை சிந்தி உழைத்து வரும் உழைப்பாளர்களுக்கு மிகவும் எரிச்சலாய் இருக்கும். என்ன செய்ய..சில சமயம் விதின்னு எடுத்துக்கலாம். இல்லை டூப்ளிக்கேட் சாவியை போடுவதற்கு சோம்பல்பட்ட சோம்பேறின்னும் எடுத்துகலாம். ஐ டோண்ட் கேர். ஆனா முக்கியமான விஷயமே அவசரமாய் வந்த சுச்சா தான் (இதெல்லாமா விளக்கமா சொல்லுவாங்க).

கிடுகிடுவென தரையிறங்கி தேடினேன். பொது கழிப்பறையே இல்லை. இப்போ தான் புதிதாய் வீடு மாறி வந்திருந்தோம். எது எங்க இருக்குன்னும் புரியல. புரிஞ்சிக்குற நேரமும் இல்லை. எங்க போய் தொலைஞ்சான் இந்த கொய்யால? சுத்தமா முடியல. கொய்யாலக்கு போன் போட்டா நாட் ரீச்சப்பள். இந்த மொபைல் போன் கம்பெனிகளே இப்படி தான். நேரம் காலம் தெரியாம கழுத்தறுப்பாங்க. ஒருவழியா அவனை புடிச்சு அவசரமா வீட்டுக்கு வர சொன்னேன். ரோட்டோரமா போலாம்னா இந்த டீசன்சி வேற நம்மள தடுக்குது. கணேஷ் வர்றதுக்கு எப்படியும் பத்து நிமிஷத்துக்கு மேலாயிடும். அதுவரைக்கும் தாங்குவோமா?
என் மூளையைவிட சிறுநீரகம் வேகமாக வேலை செய்தது.

கிடைச்சுது அட்டகாசமான யோசனை. ஏதாவது ஓட்டலுக்கு போய், சாப்பிட ஆர்டர் குடுத்துட்டு அங்கிருக்கற டாய்லெட்டை யூஸ் பண்ணிக்க வேண்டியது தான். எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் சபாஷ்.

மடிவால மெயின் ரோடு எப்பவுமே புழுதித் தோல போர்த்திய தெருவாகத் தானிருக்கும். எங்கேயும் புழுதி. எப்பவுமே புழுதி. எந்தக் கடையில சாப்பிடலாம்னு பார்த்தா நம்ம நேரம் ஒரு கடையிலேயும் ஒன்னுமில்லை. டாய்லெட்டையும் சேர்த்து தான் சொல்றேன். ஹ்ம்ம்..எல்லாம் நேரம். அடக்க வேண்டியது தான்.

போட்ட ப்ளான் எல்லாம் பணால் ஆயிடுச்சேன்னு ஒரு பானி பூரி கடைப்பக்கமா ஒதுங்கினேன். அந்த ஒதுங்கல் இல்லை. அது ஒரு பேக்கரி முன்னாடி வைக்கப்பட்ட கடை. கடைக்காரரை பார்த்து,

ஏக் ப்ளேட் பானி பூரி தே தோ! (ஒரு ப்ளேட் பானி பூரி கொடுங்க)

ஏதோ எனக்குத் தெரிஞ்ச தத்துபித்து ஹிந்தி. அவரோ என்னை பார்த்து சிரிப்புடன் (மாட்டிக்கிட்டேனோ?),
ஆவோ, கைஸே ஹை ஆப் (வாங்க, எப்படி இருக்கீங்க)

எனக்கு இன்னிக்கு ஆப்பு தான் என்று நினைத்தவாறே

டீக் ஹை (நல்லா இருக்கேன், நெஜமாலுமே இப்போ தான் பொய் சொன்னேன், நம்ம கஷ்டத்தையெல்லாம் வெளியவா சொல்லிகிட்டிருக்க முடியும்)
பானிபூரியை சாப்பிடத் தொடங்கினேன்.

மூன்று பானிபூரியை உள்ளே தள்ளிய நிலையில் ஒரு வடநாட்டுப் பெண் என்னருகில் வந்து நின்றாள். ( ஒரு நிமிஷம், இவ்ளோ நேரம் ட்ரையா இருந்துச்சுன்னு இருந்த நீங்க இப்போ சுறுசுறுப்பாகற மாதிரி தெரியுதே?..இட்ஸ் ஓக்கே)

அந்த பெண் நல்ல பொன் நிறம், ச்சும்மா உலுலுவாய்க்கு. நல்ல கலர். ஐந்தரை அடி இருப்பாள். கனிவான முகம். சாமியாரான நானே சைட் அடிச்சேன்னா பார்த்துக்கங்களேன். வந்ததும் அந்த கடைக்காரரை நலம் விசாரித்தாள். பின் அங்கிருந்த பையனைப் பற்றி விசாரித்தாள்.

ஓ. தினமும் இங்க தான் சாப்பிடுறாளா? எல்லோரையும் தெரிஞ்சு வச்சிருக்கா..டேய்..நோட் திஸ் மேட்டர்

கடைக்காரர் பேசிக்கொண்டே பானிபூரியை எடுத்தார். மூன்று சாப்பிட்டிருந்த நிலையில் நான் என் தட்டை முன்னே கொண்டு போனேன். அதை கவனிக்காத மாதிரி அவர் அந்தப் பெண் தட்டில் வைத்தார். செம பல்பூ. பூரியை சாப்பிட்ட அவள் என்னைப் பார்த்தாள். ச்சே. கண்ணு கூசுதே. மின்சாரக்கனவுல பிரபுதேவா கஜோல் கண்ணைப் பார்த்த மாதிரி ஜிவ்வுனு ஒரு உணர்ச்சி. புன்னகையைப் பரிமாறிக் கொண்டோம். பார்த்தி உனக்கு மச்சம்டா

அவளும் மூன்று சாப்பிட்டதும் எனக்கும் அவளுக்கும் மாறி மாறி பூரியை வைக்க ஆரம்பித்தான் அந்த சோன்பப்டித் தலையன். ( பொண்ணப் பாத்ததும் பொழப்பை மறந்தவனுக்கு என்ன மரியாதை). சாப்பிடுறதுல மும்முரமா இருந்ததால அவளை நான் கவனிக்கவில்லை. சாப்பிட்டதும் அங்கிருந்த சிவப்புத்துணியில் என் கையை அழுக்காக்கினேன். அவளும் தான்.

என் பர்ஸைத் திறந்து அதிலிருந்த ஒரே ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்தேன். நிமிர்ந்து பார்த்தால் அந்தப் பெண்ணும் ஒரு 50 ரூபாய் நோட்டை நீட்டினாள். அந்த பானிபூரி கடைக்காரன்,

சேஞ்ச் நஹி..மேடம்

அவள் அவன் பணம் வைத்திருந்த பாத்திரத்தைப் பார்த்தாள். மூன்று 10 ரூபாய் மற்றும் ஒரு 20 ரூபாய் இருந்தது. சிரித்துக் கொண்டே மீதியை எடுத்துக் கொடுத்தான். ஒரு ஃபிகரைப் பார்த்ததும் எப்படி மாறிடறாங்க. ச்சே..

அவர்கள் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போது என் 100 ரூபாய் நோட்டை நீட்டினேன். பார்க்கக்கூடாததைப் பார்த்த மாதிரி அவன்,

சேஞ்ச் நஹி..சாப் (தெரியும்டா..ஃபிகருங்களுக்கு குடுப்பதுக்கே சேஞ்ச் வச்சிருப்பியே. ஆணா பொறந்தது என் பாவம்.நேரமே சரியில்ல)

பார்த்துக் கொண்டிருந்த அவள்,

ஐ திங்க் தட் பேக்கரி கை வில் ஹேவ் த சேஞ்ச் (அந்த பேக்கரி கடைக்காரன்கிட்ட சில்லரை இருக்கும்னு நினைக்கிறேன்)

போய் கேட்டா இல்லைன்னு சப்புன்னு சொல்லிட்டான். நான் ஒரு அப்பாவியான முகத்துடன் (உண்மையிலேயே நான் அப்பாவி தாங்க) நிற்க, அவள் மாறாத புன்னகையுடன்,

இட்ஸ் ஓக்கே ஐ வில் கிவ் (பரவாயில்லை நான் குடுக்கறேன், பார்த்திபா உண்மையிலேயே உனக்கு மச்சம்டா)

டீசண்ட்டாய் புன்னகைத்து பணத்தைக் கொடுத்தாள். உடனே நான்,

நோ..நோ..ஐ கேன் கெட் த சேஞ்ச் (இல்லை..நான் சில்லைரை வாங்கிக்குறேன்)

இட்ஸ் ஓக்கே

சொல்லியவாறே போக்குவரத்தில் மறைந்து விட்டாள் அவள். மரத்துப் போயிருந்தேன் நான். இதற்கிடையில் அந்த சோன்பப்டித் தலையன் ஏதோ சொன்னது கூட கேட்காமல் திரும்பி மவுனமாய் நடந்தேன்.

ஏகப்பட்ட சிந்தனைகள்..எதுக்கு பணம் கொடுத்தாள்.. நாம தான் யாருன்னே தெரியாதே. எவ்ளோ உன்னதமான பெண் (நீங்க ஏதும் தப்பா நினைச்சுக்காதீங்க).
ரொம்பவே பிலாஸபிக்கலா யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் அப்படி செய்திருப்பேனா என்று. மனசாட்சி வந்து பயமுறுத்தியது எச்சைக் கையில கூட காக்கா ஓட்ட மாட்டேடா நீ

யோசித்துக் கொண்டே சற்றுத் தள்ளி இருந்த பழச்சாறு கடையில் நுழைந்தேன். ஆஹா.. இது நிஜம் இல்லை படம். அதே பெண் அங்கிருந்தாள். ஏதோ ஆர்டர் செய்து கொண்டிருந்தாள். திரும்பிப் பார்த்த அவள் கண்களில் ஒரு ஆச்சர்யம்..உடனே ஒரு ஸ்மைல். கஷ்டமாய் ஒரு சிரிப்பை சிந்தினேன். அவள்,

டோண்ட் வொரி அபௌட் மணி (பணத்தைப் பத்தி கவலைப்படாதீங்க)

நோ..நோ..ஐ கேம் ஜஸ்ட் லைக் தட் (இல்லை..சும்மா தான் வந்தேன்)

ஓ..

ஐ வில் பே த பில் ஃபார் யூ (உங்களுக்கும் சேர்த்து நானே பில் கட்டிடறேன்)

ஓக்கே..யுவர் விஷ் (உங்க விருப்பம்)

இப்படித் தான் எல்லாமே ஆரம்பிக்குமோ?

அதற்கப்புறம் பேசவேயில்லை. சாத்துக்குடை ஜூஸ் குடித்தாள் அவள். எனக்கு இரண்டு நிமிஷம் கழித்தே கிடைத்தது. எங்கேயும் லேடீஸ் ஃபர்ஸ்ட். குடித்து முடித்தவுடன் அவள்,
ஓக்கே..சீ யூ தென்..தாங்க்ஸ் (அப்புறம் பார்க்கலாம்)

போய்விட்டாள்.

சுரீர்னு உறைச்சுது. அடப்பாவி, இவ்ளோ நேரம் நான் அந்த பொண்ணுக்கு ஒரு தாங்க்ஸ் கூட சொல்லலியே.

எனக்கு அவள் பேர் தெரியாது, ஊர் தெரியாது. அவளுக்கும் என் பேர் ஊர் தெரியாது. ஆனால் எந்த நம்பிக்கையில் எனக்காக பணம் கொடுத்தாள். ஆயிரத்தில் ஒருவருக்குத் தான் இந்த குணம் இருக்குமோ? இருக்கலாம். சத்தியமா எனக்கில்லை.

யோசித்துக் கொண்டே கடைக்காரருக்கு பணம் கொடுக்க அவரும் சில்லரை இல்லேன்னார். என்னடா இது சோதனை?

சரி..பரவாயில்ல. ராத்திரி வந்து கொடுங்க

அட..இன்னிக்கு எந்த முகத்துல முழிச்சோம். நல்ல விஷயமா நடக்குது

யோசித்துப் பார்த்ததில் அந்த பெண்ணின் முகமும் சிரிப்பும் எல்லாத்தையும் விட அவள் குணமும் சீக்கிரம் என்னால் மறக்க முடியுமென்று தோன்றவில்லை. சில நிமிஷ நேரத்திலேயே அவளின் சுவடை என் மனதில் பதித்துவிட்டாள். வீட்டிற்கு வந்தால் கணேஷ் வந்திருந்தான். ஞாபகம் வந்ததும் வீட்டிற்குள் ஓடினேன். இதுவரை நானும் நீங்களும் மறந்திருந்த

சுச்சா..!

சிவா.ஜி
26-11-2007, 03:52 AM
பகுத் அச்சா....!அட அட அட..என்னவொரு வேகம் கதையில்.அவசரமாய் வர அடம் பிடித்த சுச்சாவைப் போலவே அவசரமாய் ஒரு சந்திப்பு...பேச்சுலர்களின் சங்கடங்கள்,அருமையான வார்த்தையாடல்கள்(காலேஜ் முடிஞ்சதும் நம்மை போல சாப்ஃட்வேர் என்ற அண்டர்வேரை அணிய வந்து, அந்த குட்டையில் விழப்போகும் அடுத்த மட்டை அவன்.)பிரமாதம் மதி.பார்த்திபனின் சுவடு அழுத்தமாகவே பதிந்துவிட்டது.வாழ்த்துகள்.

அன்புரசிகன்
26-11-2007, 05:26 AM
கதை சூப்பர். அதிலயும் ஒரு காதல் பரிதவிப்பு தெரிந்தது...

ஆனாலும் ஓவர் குசும்பு உங்களுக்கு அல்லது உங்கள் நண்பருக்கு..... அந்த அவசரத்திலயும் உங்களுக்கு லவுசு - ரொமான்ஸ் வரூதா???? :D :D :D

பானிபூரி சாத்துக்குடி... எத்தனை மணிநேரம் ஆகியிருக்கும்???