PDA

View Full Version : தேடல்



ஆதி
22-11-2007, 11:46 AM
தேடல்

யாரென உணர
தனிமை திறந்து
பேரமைதிக்குள் நுழைந்தேன்

என் மௌனத்தின் சப்தம்
மலைகளிலும்
பாறைகளிலும் மோதி
நொறுங்க நுணுகின..

விழிமத்தியில் விளக்கேற்றி
வெளிச்சமாய் விரிந்தேன்
பேரண்டத்தின்
பேரெல்லை வரை..

ஒவ்வொன்றாய் வெளிநடந்தன
உணர்வுகள் என்னுள் இருந்து..

வெறிநாயின் முகமும்
குருதி வடிகிற வாயுமாய்
ஒருத்தன் வெளியேறினான்..

யாரனெ வினவினேன்

பதில்:
நான் குரோதம்

அடுத்தொருவன்
கைப்பையுள்
பொதிந்த முகமூடிகளுமாய்
வாசல் கடந்தான்..

யாரென வினவினேன்

என் பெயர் துரோகம்
எனச் சொன்னான்

பருத்த உடலும்
திருப்தி இல்லா முகமுமாய்
இன்னொருத்தன்

நீ யாரப்பா ?

பதில்:
ஆசை

பெருமை பொதிந்த தோற்றமும்
பெரும்பாலும் பேசாத இதழுமாய்
இன்னொருத்தன்

உன் பெயர் ?

பதில்:
ஏளனச்சிரிப்புடன்
என்னைப் பார்த்துச் சொன்னான்
நான் அகந்தை..

ரோகத்தில் சுருங்கிய முகமும்
புண்ணுடைந்து சீல்வழிகிற
புலன்களுமாய்
மற்றொருவன்

நீ ?

பதில்:
காமம்

மழைத்துளி போன்ற விழிகளும்
பூவெளி போன்ற புன்னகையுமாய்
ஒருவன்

யாரென வினவினேன்

பதில்:
இதயத்தின் இமைதிறந்து
எனைப் பார்த்து
முறுவலுடன் கூறினான்
நான் அன்பு

முற்றிய வயதும்
நரைத்த தாடியும்
அழுக்கு சட்டையுமாய்
ஒரு கிழவன் வெளிவந்தான்

நீங்கள் யார் ?

பதில்:
உனக்குள் உள்ள என்னை
உலகில் தேடுகிறாய்
நான் அமைதி
நான் நிம்மதி
நான்தான் ஞானம்

நீ யாரென
அனைவரின் சுட்டுவிரலும்
எனை நோக்கி நீள..

உரைத்தேன்:
நான் மனிதன்

ஐம்புலன் அதிர
ஐம்பொறிகள் சிரித்தன
அந்த பெரும்சப்தத்தில்
என் பேரமைதி கிழிய
தெறித்தேன் ஒரு துளியாய்
வெளியே...

நான் யாரென்ற வினாவுடன்..


-ஆதி

அமரன்
22-11-2007, 11:56 AM
ஆதி!
கவிவிருந்தை ஆழ்மனத்தால் சுவைக்க நேரம் கைகொடுக்கவில்லை. விழியால் சுவைத்தபோது உங்கள் தற்போதைய அவதார் (புத்தர் பெருமான்) கவிதைக்கு மிகப்பொருத்தமனது. கவிதை என்னுள் "ஏர்"(ற்)படுத்திய தாக்கத்தை பின்னர் சொல்கின்றேன்.

க.கமலக்கண்ணன்
22-11-2007, 12:02 PM
நல்ல கவிதை கருத்தை முழுமையாய் உணர்ந்து படித்த பின் பின்னூட்டம் இடுகிறேனே ஆதி...

ஆதி
22-11-2007, 01:56 PM
ஆதி!
கவிவிருந்தை ஆழ்மனத்தால் சுவைக்க நேரம் கைகொடுக்கவில்லை. விழியால் சுவைத்தபோது உங்கள் தற்போதைய அவதார் (புத்தர் பெருமான்) கவிதைக்கு மிகப்பொருத்தமனது. கவிதை என்னுள் ஏர்படுத்திய தாக்கத்தை பின்னர் சொல்கின்றேன்.

நிச்சயமாய் அமரன்..

ஒரு ஆராய்ச்சி நோக்கி பின்னூட்டம் தந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்னை சரிபார்க்க..

-ஆதி

பூமகள்
22-11-2007, 02:22 PM
அன்பு ஆதி....!!!

வாவ்..............! சான்சே இல்லை.....!! உங்களின் மூளையில் எத்தனை பேர் யோசிக்கிறார்கள்???!!!:)

அற்புதம்.. அற்புதம்... அபாரமான சிந்தனை..!!

உள்நோக்கி யோசிக்க வைத்த வரிகள்..!!!:)
கலக்கிட்டீங்க..!! :icon_b:


உங்களின் வரிகளுக்கு விமர்சிக்கும் தகுதி எனக்கில்லையென்று என் விரல்கள் வெட்கி எழுத மறுக்கின்றன. மன்றத்தின் தமிழ்ச்சான்றோர் வந்து விமர்சிப்பது தான் தகும்..!!! :icon_ush:

ஒரு அழகிய ஓற்றுமையை சொல்லியாக வேண்டும்..!!

எமது கவியும் தேடல்...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=275561#post275561) என்ற தலைப்பில் ஏற்கனவே மன்றத்தில் உள்ளது.

உமது கவிக்கு முன்
என் கவி எனக்கு
மணல் துகள் போல்தான்
காட்சியளிக்கிறது..!!

புலன்கள் தேடியது என் தேடல்..!
புலன் கடந்து தேடியது உம் தேடல்..!

பாராட்டுகள் ஆதி..!! :icon_b:

1000 இ-பண பரிசும்..!! தொடர்ந்து அசத்துங்க ..!!

அமரன்
22-11-2007, 04:57 PM
நிசப்தமான தனிமைகளின் மௌனம்
"சப்த" துடிப்புகளால் கலைக்கப்படும்போது
நமது அடைப்பின் சாவி கிடைக்கிறது..
நம் சுயமறியும் செயற்சாவி கிடைக்கின்றது..

இதை சப்தடிகளின் சொன்னவிதம் இதம்.

ஈரடியை நீட்டுவதும் கவிதை கலைதான்.
போரடிக்காது இருக்கும் வரை..அதை
தூரமாக்குகின்றது உங்கள் சொற்கையாளுகை.

பிரபஞ்சமும் வாழ்க்கையும் எல்லை அற்றவை.
உள்மனதின் பயண வீச்சுக்கும் எல்லையில்லை.
மனம் தீபமாக சுடர்விட்டு பொலியும்போது
எமக்குள் இருக்கும் பலர்முகம் தெரியும்..

அடுத்த ஆறடுக்குகளில் எடுத்துரைத்தது அருமை.

குரோதத்தின் விரோதம் கொடூரமாக இருக்கும்
அவனது சொல், செயல், பேச்சு, பார்வைவீச்சு
அனைத்திலும் கோரப்பறக்ள முளைத்திருக்கும்..

அவனைக் காணவைத்தன சில வரிகள்

நீர்மம் சேர்ந்த இடத்துக்கமைய வடிவம் கொள்ளும்
நீர்மம் போன்று நாமிருந்தால் வாழ்வில் மேன்மை.
திராவகம் கலந்திருந்த நீர்மம் தரும் பரிசு 'எரிவு'.

திராவ கலப்பட நீராக நாமாதல் வாழ்வின் சிறுமை..
திராவகத்தின் செறிவு மாறினாலும் மாறாதது தன்மை.
துரோக குத்தைகைக்காரனின் மூலதனம் பல்ரக முகமூடி..

வார்த்தைகள் சிலவற்றில் வார்க்கப்பட்டுள்ளது இத்தன்மை .

"ஊசிபோல உடம்பிருந்தால் தேவையில்லை பார்மசி"
பருமனான உடலமைப்பு வைத்தியசாலையின் சினேகிதனா?
அளவான உடல் ஆரோக்கியத்தின் வாசல். ஆசையும் அவ்வகையே..

அகத்தின் முகம்காணும் தன்மையை சுவராக்கி
அதிக ஆசையின் இருப்பிடங்களாக சில இடங்கள்

பெருமையான தோற்றம் சேறு நிறைந்த வயல்.
தற்பெருமையான தோற்றம் சேறு பூசிய பாதை.

தற்பெருமை என்றாலே சறுக்கல் நிச்சயமோ..

காமம் எமக்குள் அடங்கினால் பதப்படுத்தப்பட்ட உடல்
காமத்துக்குள் நாமடங்கினால்....

காமமும் தடுமாற்றமும் இரட்டைப்பிறவிகளோ.

மழையை விஞ்சிய சுத்தமான தண்ணீர் ஏதுமில்லை.
மலர்வெளி உலாவு தென்றல் தரும் சுகந்தத்துக்கு ஈடில்லை.
சுவாச அளவுக்கும், இதயதிறப்பு எண்ணிக்கைக்கும்
இணையான உபாசகனை ஞாலத்தில் காண்பதரிது..

அரசமர இலைகள் சிலவற்றில் ரேகைகளாக இவை..

கலீல்ஜிப்ரானின் பாணியை
ஏலவே படித்து
ஏலக்காய் வாசம் நுகர்ததால்
பிடித்தமான அமைப்பு...

பிடித்து விட்டால்
குறைகள் நிறையாக தெரிவது
நியதியுடனான மனித இயல்பு..

இனிப்பு, புளிப்பு, கசப்பு கனிகளை குழைத்து
சரியான அளவில் தேன் கலந்து எடுத்து
சுவைக்கும் பழக்கலவையின் ருசிபோன்றது...
சுயமறிந்த கலவை மனிதனின் இயல்பு..

அப்படியே
அமைந்திருக்கலாமோ தேடலின் முடிவு.

ஆதி
22-11-2007, 06:02 PM
கலீல்ஜிப்ரானின் பாணியை
ஏலவே படித்து
ஏலக்காய் வாசம் நுகர்ததால்
பிடித்தமான அமைப்பு...

இந்த வரிகளை நான் எதிர்ப்பார்த்தேன் அமரன், அதனால் ஆராய்சி நோக்கில் பின்னூட்டம் தேவை என கோரினேன்

தான் என்பதை இழந்து தன்னைக் கடந்து இந்த உலகத்தை தானாக தனக்குள் இந்த உலகத்தை பார்பவன் ஞானி..

இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டும் எனில் -

காதல் ஞானத்தின் முதல் நிலை, காதல் சுயனலம் இல்லாதது.. ஆனால் மற்றவரிடம் அன்பை எதிர்பார்ப்பது..

விழிப்புணர்வு என்பதே ஞானம்..

விழிப்புடன் இருங்கள் - விவிலியம்

உன்னை நீ நேசிப்பதுப் போல் பிறரையும் நேசி - விவிலியம்

தன்னுல் இருந்து பிறரை எதிர் பாராமல் மற்றவர்க்கு அன்பை தருவது..
எல்லாரும் நான்.. நாந்தான் நீ, நீதான் நான் என்று எல்லா உயிர்களையும் பார்ப்பது.

இதைதான் எல்லா மதங்களும் போதிக்க வந்தன.. இப்பொழுது நாம் மதங்களுக்கு மதங்களை போதிக்கிறோம்..

இதுவே ஒரு கவிஞனின் அடுத்தநிலை..
மாககவி பாரதி சொல்வார் நான் இந்த பிரபஞ்சம் என்கிற பெருமேடையில் அமர்ந்து இந்த உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

இதையும் கடந்து சொல்லவேண்டுமாயின்

காக்கை குருவிகள் எங்கள் ஜாதி என்பதே சரியான் எடுகோளாக இருக்கும் என நினைக்கிறேன்..

இந்த கவிதை என் வெகுனால் கனவு.. ஜிப்ரான் போல எழுதிவிட கூடாது என்பது என் திண்ணமான எண்ணம்.. அவரைக் கடந்து எழுதுவது என்பது கொஞ்சம் சிரமம்தான்..

மாககவிகளின் மாககவி ஜிப்ரான் அவன் சாரம் என்னில் இருத்தல் வியப்பில்லை..




பிடித்து விட்டால்
குறைகள் நிறையாக தெரிவது
நியதியுடனான மனித இயல்பு..

இனிப்பு, புளிப்பு, கசப்பு கனிகளை குழைத்து
சரியான அளவில் தேன் கலந்து எடுத்து
சுவைக்கும் பழக்கலவையின் ருசிபோன்றது...
சுயமறிந்த கலவை மனிதனின் இயல்பு..

ரமண மகரிஷி சொல்வார் உங்களுக்குதான் பல சுவைகள் அந்த பரம்பொருளையே சுவைத்த எனக்கு ஒரே சுவைதான்..

அதை அவர் செயலிலும் புரிந்தார், எப்படி எனில் தன்னைப் பார்க்க வரும் பக்தர்கள் கொணரும் உணவுப் பொருட்களை ஒன்றேன கலந்து அவர்களுக்கு பிரசாதமாய் தந்துவிடுவார்..

ராமகிருஸ்னர் ஒரு படி மேல் பொய் எல்லா தெய்வங்களையும் ஒன்றென சுவைத்தார், அவர் அல்லாவை அடைய ஆசைப்பட்ட பொழுது ஒரு ஸ்லாமியன் போல வாழ்ந்தார் நடை உடை பாவனையாலும் என்பது வரலாறு..

அதனால் தான் எல்லா குணங்களையும் சொல்லிவிட்டு மனிதன் நான் என்ற பதிலையும் நானே சொல்வதாய் சொன்னேன்..

அப்படியே
அமைந்திருக்கலாமோ தேடலின் முடிவு.


தன்னை உணர்ந்தவன் மனிதன், தன்னைக் கடந்தவன் தான் ஞானி..

அதனால்தான் நான் யாரென்ற வினாவுடன் என முடித்தேன்.

பொருமையுடன் படித்து என் வேண்டுகோளுக்கு இணங்கி அகழ்ந்தாராய்ந்து பின்னூட்டம் தந்தமைக்கு கோடானகோடி நன்றிகள்..

-ஆதி

ஆதி
22-11-2007, 06:37 PM
அன்பு ஆதி....!!!

வாவ்..............! சான்சே இல்லை.....!! உங்களின் மூளையில் எத்தனை பேர் யோசிக்கிறார்கள்???!!!:)

அற்புதம்.. அற்புதம்... அபாரமான சிந்தனை..!!

உள்நோக்கி யோசிக்க வைத்த வரிகள்..!!!:)
கலக்கிட்டீங்க..!! :icon_b:


உங்களின் வரிகளுக்கு விமர்சிக்கும் தகுதி எனக்கில்லையென்று என் விரல்கள் வெட்கி எழுத மறுக்கின்றன. மன்றத்தின் தமிழ்ச்சான்றோர் வந்து விமர்சிப்பது தான் தகும்..!!! :icon_ush:

ஒரு அழகிய ஓற்றுமையை சொல்லியாக வேண்டும்..!!

எமது கவியும் தேடல்...!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=275561#post275561) என்ற தலைப்பில் ஏற்கனவே மன்றத்தில் உள்ளது.

உமது கவிக்கு முன்
என் கவி எனக்கு
மணல் துகள் போல்தான்
காட்சியளிக்கிறது..!!

புலன்கள் தேடியது என் தேடல்..!
புலன் கடந்து தேடியது உம் தேடல்..!

பாராட்டுகள் ஆதி..!! :icon_b:

1000 இ-பண பரிசும்..!! தொடர்ந்து அசத்துங்க ..!!



எதிர்பார்தது கிடைத்தால் மகிழ்ச்சி..
எதிர்பார்காதது கிடைத்தால் அதிர்ச்சி..

நான் இன்னும் அதிர்ச்சி குழியில்..

நான் இன்னும்
பாலையில் அலறும் ஆந்தைதான் :sprachlos020:
சோலை குயிலில்லை..

நானிடறி வீழுந்த இடம்
நாலா யிரம் அதிலும்
நான்போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகனென
நான்கூறி விற்றபொருள்
நல்லபொருள் இல்லை அதிகம்

- கண்ணதாசன் - கண்ணதாசன் கவிதைகள் - ஐந்தாம் தொகுதி


இந்த வரிப்போல் தான் நானும் என் வாழ்வும்..

உங்கள் கவிதைகள் என் கவிதையைவிட மேன்மையானவை.. அருமையானவை.. என்னைவிட நீங்கள் தான் நன்றாக கவி எழுதுகிறீர்கள்..

நீங்கள் என்னைப் புகழ்ந்ததால் நான் உங்களைப் பதில் புகழ் பாடுகிறேன் என எண்ண வேண்டாம்..

நீங்கள் கடலில் விழுந்ததுளி
உங்கள் ஆழம் உங்களுக்கு தெரியாது..
நான் குட்டையில் விழுந்ததுளி
எனக்கு ஆழம் கிடையாது..

அதீத பாராட்டுக்கு நன்றி ஆதி

பூமகள்
22-11-2007, 06:55 PM
நீங்கள் கடலில் விழுந்ததுளி
உங்கள் ஆழம் உங்களுக்கு தெரியாது..
நான் குட்டையில் விழுந்ததுளி
எனக்கு ஆழம் கிடையாது..

அதீத பாராட்டுக்கு நன்றி ஆதி
எல்லாவற்றிற்கும் கவிதையின் ஜாம்பவான்களின் ஒரு எடுகோள் அதுவும் மிகப் பொருத்தமான இடம் கண்டு தக்க சமயத்தில் பதிக்கும் பாங்கு கண்டு பல முறை வியந்திருக்கிறேன்.
இன்றும் அவ்வாறே..!

புகழ் ஒரு போதை என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அதற்காக, ஒரு சிறந்த படைப்புக்கு பாராட்டு தெரிவிக்காமல் இருந்தால் என்னை விட பாவம் செய்தவள் யாருமில்லை.

உங்களின் வரிகளில் உங்களின் அறிவாற்றல் வெளிப்படுகிறது. இடைவிடாத பணிகளுக்கு இடையிலும் கவி வடிக்கும் திறன் பாராட்டத்தக்கது.

எடுகோளாய் ஞாபக சுவடி எடுத்து கவிதை தொடுக்கையில் வியக்க வைக்கிறீர்கள்.

இவ்வாறு சில பதிவுகளிலேயே உங்களின் ஆற்றலும் புலமையும் பண்பும் அழகாய் புரிகிறது, உணர முடிகிறது.

என்னை இவ்விதம் சொல்வது தங்களின் தன்னடக்கத்தைத் தான் காட்டுகிறது.

நிறைகுடம் தழும்பாது. நான் நிச்சயம் நிறைகுடம் இல்லை. குறைகுடமாய் தழும்பிக் கொண்டே தான் இருக்கிறேன்.
மன்றத்தில் உங்களைப் போன்றோரின் பதிவுகள் படித்து, கற்றறிந்து நிறைகுடமாகும் முயற்சியில் இருக்கிறேன்.

கடைசியாய் ஒன்று....!

ஆதீதப் பாராட்டுக்கு வரையறை என்ன என்பதற்கு எனக்கு தோன்றிய கருத்து,
"அர்த்தமின்றி மிகையாய் பாராட்டுவது."

அவ்வகையில், பூமகள் அதீத பாராட்டு யாருக்கும் கொடுத்ததில்லை என்பது எனது நிலைப்பாடு.
மனத்தில் தோன்றிய உணர்வை வெளிப்படையாக விமர்சிக்கும் பண்பு என்னுடையது. அது சில சமயம், அதீத பாராட்டு போல் மற்றவர் கண்களுக்கு புலப்படலாம். ஆனால், அது வெறும் கானல் நீர் தான்.

உண்மையில் என் பாராட்டின் ஒவ்வொரு எழுத்துக்கும் தகுதியுடையது உங்களது கவிதை.

புரிதலுக்கு நன்றிகள் ஆதி.:)

அமரன் அண்ணா,
உங்களின் பின்னூட்ட விளக்கம் அருமை. பாராட்டுகள்.
முழுதும் படித்துச் சுவைக்க காலம் அனுமதிக்கவில்லை. மீண்டு நாளை வந்து படித்து கற்கிறேன்.

ஆதி
22-11-2007, 07:14 PM
[COLOR=DarkOrchid]
கடைசியாய் ஒன்று....!

ஆதீதப் பாராட்டுக்கு வரையறை என்ன என்பதற்கு எனக்கு தோன்றிய கருத்து,
"அர்த்தமின்றி மிகையாய் பாராட்டுவது."

அவ்வகையில், பூமகள் அதீத பாராட்டு யாருக்கும் கொடுத்ததில்லை என்பது எனது நிலைப்பாடு.
மனத்தில் தோன்றிய உணர்வை வெளிப்படையாக விமர்சிக்கும் பண்பு என்னுடையது. அது சில சமயம், அதீத பாராட்டு போல் மற்றவர் கண்களுக்கு புலப்படலாம். ஆனால், அது வெறும் கானல் நீர் தான்.

உண்மையில் என் பாராட்டின் ஒவ்வொரு எழுத்துக்கும் தகுதியுடையது உங்களது கவிதை.





அடடே இப்படி ஒரு அர்த்தம் இருக்குமோ ?

அர்த்தமற்ற பாராட்டு என்று சொல்லவில்லை..

உங்களுக்கு பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாணியில் சொல்வதாயின்..

என் கவிதை
ஒரு நகமளவு
உங்கள் பாராட்டு
ஒரு கையளவு..

அவ்வளவுதான்.. வேறு எவ்வண்ணமும் எண்ணி சொல்லவில்லை..

நான் அதிகமாய் உணர்ச்சிவய பட கூடியவன்.. உங்கள் பாராட்டு என் இதழ்களில் ஒரு பெருமித முறுவலையும்.. கண்ணகளில் காரணமற்ற கண்ணீரையும் தேக்கியது..

ஆனால் உங்கள் விரல்கள் வெட்கியாதாக சொன்ன வரிகளை படித்த போது..

நடிகர் வடிவேலு போல "அப்படி ஒன்னும் நாம செய்யலையே.." என ஒருவன் உள்ளுக்குள் உச்சரித்தான்..

அதனால்தான் அதீத என்ற வார்த்தையே விரலில் வழிந்தது..

ஒரு கண்ணாடி போல்தான் நானும்..

சிரித்தால் சிரிப்பேன்
அழுதால் அழுவேன்..

என் வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியதாயின்.. என்னை மன்னிப்பீர்..

நன்றி.. மன்னிப்பீர் என்கிற நம்பிக்கையுடன் ஆதி

பூமகள்
22-11-2007, 07:24 PM
அர்த்தமற்ற பாராட்டு என்று சொல்லவில்லை..

உங்களுக்கு பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாணியில் சொல்வதாயின்..

என் கவிதை
ஒரு நகமளவு
உங்கள் பாராட்டு
ஒரு கையளவு..

அவ்வளவுதான்.. வேறு எவ்வண்ணமும் எண்ணி சொல்லவில்லை..
அடடா... இதற்கும் என் அபிமான கவிஞர் பாணியில் பதில்..!:icon_b:
புரிதலுக்கு மிக்க நன்றிகள் ஆதி. :)

என் வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியதாயின்.. என்னை மன்னிப்பீர்..
நன்றி.. மன்னிப்பீர் என்கிற நம்பிக்கையுடன் ஆதிமன்னிப்புக்கு இங்கு இடமில்லை.. காரணம், மன்னிப்பு கேட்கும் சம்பவமே இங்கு நடக்கவில்லை.
நம்மில் புரிதல்
புரியாமல் விழித்ததால்
வந்தது வார்த்தை மயக்கம்..!
புரிந்து விட்டதால்
இங்கு எதற்கு
மன்னிப்பு, தயக்கம்??

எல்லாம் இருக்கட்டும். என் கவிதை தேடலைப் பார்த்தீங்களா? பின்னூட்டத்தைக் காணோமே!! :frown:

புரிதலை மட்டுமே நாடி, புரிந்ததற்கு நன்றிகள் கூறி,
அன்புடன்,

ஆதி
22-11-2007, 07:39 PM
எல்லாம் இருக்கட்டும். என் கவிதை தேடலைப் பார்த்தீங்களா? பின்னூட்டத்தைக் காணோமே!! :frown:

புரிதலை மட்டுமே நாடி, புரிந்ததற்கு நன்றிகள் கூறி,
அன்புடன்,

என் ஞாபக மறதியை என்ன சொல்லி வைய்ய..

கவிதையை நுனிப்புலாய் தான் மேய்ந்தேன்.. ஆனால் படித்தேன்..

இதயம், கண்கள், கைகள் இரண்டு இரண்டு என இரண்டர கலந்து எழுதியது அருமை என் முழுபின்னூட்டத்தையும் அதில் நிச்சயம் பதிப்பேன்..

நன்றி

-ஆதி

அமரன்
22-11-2007, 07:54 PM
நான் என்று இருக்கலாம்..நாந்தான் என்று இருக்கக்கூடாது என்று எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள். இந்த நான் என்பது கந்தை. நாந்தான் என்பது அகந்தை. ஒருமனிதனின் மனதில் கந்தை இருந்தால் கசக்கி வெளுத்து தூய்மையாக்கலாம். ஆனால் அகந்தை குடி இருக்கும் ஒருவனை கந்தையே கசக்கி பிழிந்து நொய்த நிலைக்குள் தள்ளும்.

நீங்கள் சொன்ன ஞானத்தின் முதல்நிலையான காதலுக்கு கூட இது பொருந்து. நான் என்ற கந்தை வெளுத்து நாம் என்னும் தூய்மை அடையும்போது காதலின் முக்திநிலையை அடைகின்றார்கள். நாந்தான் என்னும்போது அவர்கள் காதலில் தோற்கவில்லை. காதல் அவர்களிடம் தோற்கின்றது. காதல் எப்படி அவர்களிடம் தோற்கின்றது என நீங்கள் கேட்கலாம். காதல் என்பதே ஒன்றிணைப்பு என்பது எனது நிலை. ஒன்றிணைப்பு என்பது ஒரு துணையையோ, இணையையோ, வாழ்க்கையுடனோ....இப்படி நீண்டுகொண்டே போகும்..

நான், என்மதம் என்பவர்களை நல்வழிப்படுத்த அம்மத புனித நூல்கள் போதும். நாந்தான், என்மதந்தான் என்போர்த்தான் மத நெறிநூல்களை மீறி செயல்படுகின்றார்கள்.. ஆக இந்த தான் என்னும் அகந்தையே இதர உயிர்கொல்லிகளின், மனிதம்கொல்லிகளின் வேர்.

வேரை அறுத்துவிட்டால் மரம் எங்ஙனம் வாழும். தான் என்பது அகன்றுவிட்டால் நேசிப்பு எம்மை ஆட்கொள்ளும். ஆட்கொள்ளப்பட்ட ஒருவனுக்கு பிறப்பில் ஏதுபேதம். அவனுக்கு எல்லாமே ஆன்மா என்னும் உன்னதமே..இந்நிலை மனிதன், ஞானி இருவருக்கும் பொருந்தும்.

இங்கே..
நிச்சயம் அவன் தன்னை உணர்ந்திருப்பான். அவ்வகையில் பாட்டின் நாயகன் மனிதன் என்பதாலேயே அப்படிச்சொன்னேன்.

ஏன் ஞானி இல்லை என்பதற்கு நான் கற்பிக்கும் காரணம்.. காமம் பற்றிய பார்வை. மனதை ஒருநிலைப்படுத்துபவன் ஞானி. அந்த ஒருநிலைப்படுத்தல் காமத்திலும் சாத்தியம். அதை உணர்ந்த மாதிரி நான் உணரவில்லை.

எனது மூளையின் ஆளுகைக்கு உட்பட்டு சொன்ன கருத்துகளே இவை. அந்த ஆளுகை போதுமானதாக நான் என்றுமே நினைப்பதில்லை. அதனால் மற்றவர்களின் வீச்செல்லையையும் விரும்பிப்படிப்பேன். அதைமையமாகக்கொண்டு நகர்வுகளை மேற்கொண்டு எனது ஆளுகைஎல்லை விஸ்தீரணம் செய்வேன். அந்த வகையில் உங்கள் கருத்துகள் எதையும் தப்பு என்று சொல்ல என்னால் முடியவில்லை ஆதி.

இளசு
22-11-2007, 09:03 PM
இங்கே மிக இலக்கியத்தரமான பரிமாறல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது..

வாழ்த்துகள் ஆதிக்கும் அமரனுக்கும் பூமகளுக்கும்..

எறும்புத்தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா - நான்
இதயத்தோலை உரித்துப்பார்க்க ஞானம் வந்ததடா..

இதைச் சொன்ன கவியரசர்தாம்..

உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில்
ஒன்றும் இருக்காது - என்றும் சொன்னார்..

பல அடுக்கு உணர்ச்சிபிம்பமாகிய நம்மையும்
உருக்கி உரித்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார் ஆதி..

மெய்நிகர் முப்பரிமாண வெங்காயம் வெட்கும்!

அக்னி
23-11-2007, 03:54 AM
உணர்வறியும் நிலை,
உணர்வுகள் ஒடுங்கிய அடக்கநிலையிலேயே சாத்தியம்...
உயிரடங்கும் நிலையே,
மனிதரின் முழுமையான அடக்கநிலை...
உயிருடன் அடங்குநிலை அடைதல்,
மனிதன் தன்னை எடைபோடும் படிநிலையின் முழுமையான வெற்றி...

பல்வேறுபட்ட இயல்புகளின் கலவை மனிதன்.
சூழ்நிலைகள், இந்த இயல்புகளின் பன்முக வெளிப்பாட்டை, அவதரிக்க வைக்கும்.

அதனை அழகாக வரிப்படுத்தும் கவிதை...



ஐம்புலன் அதிர
ஐம்பொறிகள் சிரித்தன
அந்த பெரும்சப்தத்தில்
என் பேரமைதி கிழிய
தெறித்தேன் ஒரு துளியாய்
வெளியே...

நான் யாரென்ற வினாவுடன்..

புலன்கள் எனக்கு அடங்கி இருக்கும்வரை,
நான் ஞானி...
புலன்களுக்கு நான் அடங்கி இருக்கும்வரை,
நான் அஞ்ஞானி...

பிறப்பு முதல் இறப்பு வரை,
தனக்குள் தேடும், தன்னை ஆராயும்,
விஞ்ஞானி... மனிதன்...

அழகிய கவிதைக்குப் பாராட்டுக்கள் ஆதி...

ஆதி
23-11-2007, 06:01 AM
நான் என்று இருக்கலாம்..நாந்தான் என்று இருக்கக்கூடாது என்று எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள். இந்த நான் என்பது கந்தை. நாந்தான் என்பது அகந்தை. ஒருமனிதனின் மனதில் கந்தை இருந்தால் கசக்கி வெளுத்து தூய்மையாக்கலாம். ஆனால் அகந்தை குடி இருக்கும் ஒருவனை கந்தையே கசக்கி பிழிந்து நொய்த நிலைக்குள் தள்ளும்.

நீங்கள் சொன்ன ஞானத்தின் முதல்நிலையான காதலுக்கு கூட இது பொருந்து. நான் என்ற கந்தை வெளுத்து நாம் என்னும் தூய்மை அடையும்போது காதலின் முக்திநிலையை அடைகின்றார்கள். நாந்தான் என்னும்போது அவர்கள் காதலில் தோற்கவில்லை. காதல் அவர்களிடம் தோற்கின்றது. காதல் எப்படி அவர்களிடம் தோற்கின்றது என நீங்கள் கேட்கலாம். காதல் என்பதே ஒன்றிணைப்பு என்பது எனது நிலை. ஒன்றிணைப்பு என்பது ஒரு துணையையோ, இணையையோ, வாழ்க்கையுடனோ....இப்படி நீண்டுகொண்டே போகும்..

நான், என்மதம் என்பவர்களை நல்வழிப்படுத்த அம்மத புனித நூல்கள் போதும். நாந்தான், என்மதந்தான் என்போர்த்தான் மத நெறிநூல்களை மீறி செயல்படுகின்றார்கள்.. ஆக இந்த தான் என்னும் அகந்தையே இதர உயிர்கொல்லிகளின், மனிதம்கொல்லிகளின் வேர்.

வேரை அறுத்துவிட்டால் மரம் எங்ஙனம் வாழும். தான் என்பது அகன்றுவிட்டால் நேசிப்பு எம்மை ஆட்கொள்ளும். ஆட்கொள்ளப்பட்ட ஒருவனுக்கு பிறப்பில் ஏதுபேதம். அவனுக்கு எல்லாமே ஆன்மா என்னும் உன்னதமே..இந்நிலை மனிதன், ஞானி இருவருக்கும் பொருந்தும்.

இங்கே..
நிச்சயம் அவன் தன்னை உணர்ந்திருப்பான். அவ்வகையில் பாட்டின் நாயகன் மனிதன் என்பதாலேயே அப்படிச்சொன்னேன்.

ஏன் ஞானி இல்லை என்பதற்கு நான் கற்பிக்கும் காரணம்.. காமம் பற்றிய பார்வை. மனதை ஒருநிலைப்படுத்துபவன் ஞானி. அந்த ஒருநிலைப்படுத்தல் காமத்திலும் சாத்தியம். அதை உணர்ந்த மாதிரி நான் உணரவில்லை.

எனது மூளையின் ஆளுகைக்கு உட்பட்டு சொன்ன கருத்துகளே இவை. அந்த ஆளுகை போதுமானதாக நான் என்றுமே நினைப்பதில்லை. அதனால் மற்றவர்களின் வீச்செல்லையையும் விரும்பிப்படிப்பேன். அதைமையமாகக்கொண்டு நகர்வுகளை மேற்கொண்டு எனது ஆளுகைஎல்லை விஸ்தீரணம் செய்வேன். அந்த வகையில் உங்கள் கருத்துகள் எதையும் தப்பு என்று சொல்ல என்னால் முடியவில்லை ஆதி.

பின்னூட்டத்திற்கு பின்னூட்டம், சும்மா அதுருதில்ல உங்கள் பின்னூட்டம்..

அசதல் அமரன்..

நன்றி..

-ஆதி

ஆதி
23-11-2007, 06:57 AM
எறும்புத்தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா - நான்
இதயத்தோலை உரித்துப்பார்க்க ஞானம் வந்ததடா..

இதைச் சொன்ன கவியரசர்தாம்..

கவியரசர் வார்த்தகள் இந்த இழையில் இடம் பெற்றது என் கவிதையின் பாக்கியம்


உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில்
ஒன்றும் இருக்காது - என்றும் சொன்னார்..

பல அடுக்கு உணர்ச்சிபிம்பமாகிய நம்மையும்
உருக்கி உரித்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார் ஆதி..

மெய்நிகர் முப்பரிமாண வெங்காயம் வெட்கும்!


அழகிய பின்னூட்டம், அதிநுட்பமான வரிகள்..

என் நன்றிகள் இளசு அவர்கட்கு..

-ஆதி

பென்ஸ்
23-11-2007, 09:15 AM
தேடல்...

உங்களையும் என்னையும் குகையில் இருந்து கோபுரங்களுக்கு கொண்டு வர செய்தது...

தட்டையான உலகை உருட்டி போட்டது

நிலவையும் கூப்பிடும் தூரத்தில் இழுத்து போட்டது

தேடல் இல்லையென்றால் நாமும் இன்று மிருகமாய் "உலலாலேலேலோ" என்று இன்னும் இருந்திருப்போம்...

நான் யார்... என்னும் தேடல் ...
இதே கேள்வியைதான் புத்தனும் சித்தனும் கேட்டு கேட்டு தேளிந்தார்கள்...
தேளிந்த போது எல்லாம் மாறியிருந்தது....

மன்றத்தில் பலமுறை இதே தேடல் குறித்து பல கவிதைகள் வந்துள்ளன....
அப்போது எல்லாம் என்னிடம் இருந்து வரும் ஒரே பதில் மாஸ்லோ சொல்லும் "சேல்ப் ஆக்சுவலைசேசன்"...
தேவைகள் பிரமிடின் உச்சி...
http://www.frankwatching.com/wordpress/wp-content/uploads/2007/07/maslow.jpg
இதில் காமம், பசி, காதல், நட்பு, பதவி, இதனால் வரும் உணர்வுகள் எல்லாம் கடந்தால் மட்டுமே ஒருவனால் இந்த நிலையை அடைய முடியும்... இந்த நிலையை அடையும் போது "நான் யார்" என்ற கேள்விக்கான பதிலும் கிடைக்கும்...

தொடரட்டும் உங்கள் தேடல்...

ஆதி
23-11-2007, 09:28 AM
தேடல்...

உங்களையும் என்னையும் குகையில் இருந்து கோபுரங்களுக்கு கொண்டு வர செய்தது...

தட்டையான உலகை உருட்டி போட்டது

நிலவையும் கூப்பிடும் தூரத்தில் இழுத்து போட்டது

தேடல் இல்லையென்றால் நாமும் இன்று மிருகமாய் "உலலாலேலேலோ" என்று இன்னும் இருந்திருப்போம்...

நான் யார்... என்னும் தேடல் ...
இதே கேள்வியைதான் புத்தனும் சித்தனும் கேட்டு கேட்டு தேளிந்தார்கள்...
தேளிந்த போது எல்லாம் மாறியிருந்தது....

தொடரட்டும் உங்கள் தேடல்...


இதைதான் நம் எல்லா மதங்களும் சொல்ல முயற்சிக்கிறது..

ஆனால் முடிவு என்ன யாரும் சொல்லவில்லை..

கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை

- சித்தர் பாடல்கள்

கவிதையைப் பற்றி நீங்கள் ஒரு வரியும் பேச வில்லை..
அது ஏனென எனக்கு புரியவில்லை.. கவிதையின் கட்டமைப்பைப் பற்றி கேட்டேன்..

உங்கள் பின்னூட்டதிற்கும், குறிப்புகளுக்கும் என் நன்றிகள் பல..

-ஆதி

பென்ஸ்
23-11-2007, 09:53 AM
நன்றாக இருப்பதனால்தானே கருவைபற்றி மட்டும் பேசுகிறோம்...

கட்டமைப்பு 36- 24 - 36

ஆதவா
23-11-2007, 09:54 AM
நன்றாக இருப்பதனால்தானே கருவைபற்றி மட்டும் பேசுகிறோம்...

கட்டமைப்பு 36- 24 - 36

:aetsch013: நாட்டி பாய்,...

ஆதி
23-11-2007, 10:04 AM
நன்றாக இருப்பதனால்தானே கருவைபற்றி மட்டும் பேசுகிறோம்...

கட்டமைப்பு 36- 24 - 36

:p:aetsch013:

ஐ யாம் வெரி ஹாப்பி. ஸ்டார்ட் மியூசிக். :lachen001:

அமரன்
23-11-2007, 11:18 AM
நன்றாக இருப்பதனால்தானே கருவைபற்றி மட்டும் பேசுகிறோம்...

கட்டமைப்பு 36- 24 - 36


:aetsch013: நாட்டி பாய்,...
கூட்டினால் 96 வருகுதே:) அப்புறம் ஏன நாட்டி பாய்?:confused:

ஆதி
23-11-2007, 12:25 PM
கூட்டினால் 96 வருகுதே:) அப்புறம் ஏன நாட்டி பாய்?:confused:

ஆமாம் அமர், அவர் நாடிபாய் இல்லை, சுட்டி பாய்.. சுமார்ட் பாய்.. :cool:

-ஆதி

ஆதவா
23-11-2007, 12:34 PM
தேடலைத் தேடிப் பிடித்து எழுதுவதற்குள் நான் எழுதியதை தேடிப்பிடிக்கவேண்டியிருந்தது.. ஒரே மின்சாரக் கோளாறுகள் ஆதி.

முதலில் நான் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். அக்னி, அமரன், பூமகள், ஓவியன் ஆகியோர் பின்னூட்டங்கள் பின்னியெடுக்கின்றன. இந்த தருணத்தைத்தான் நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த பகிர்தல்தான் நேரமின்மையாக இருப்பினும் நல்ல பின்னூட்டம் கொடுக்கத் தூண்டுகிறது....

ஹாட்ஸாஃப் விமர்சனப்படைகளே!!

கவிதை தன்னைத்தானே தேடிக்கொள்கிறது. ஒவ்வொரு வகையிலும் நான் ஒன்றைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். தாமரை சொல்வார். " மனிதன் படைக்கப் பட்டதே இறைவனைத் தேடுவதற்காகத்தான் " என்று.. நமது கண்ணுக்குத் தெரியாத லட்சியங்கள் அதுதான்.

ஆயிரம் வருடங்களாகவே அமெரிக்காவில் சிகப்பிந்தியர்கள் வசிக்கிறார்கள்... ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அவர்கள் எப்படி இருந்தார்களோ அதில் மாற்றம் இன்றளவுமில்லை. ஏன்,? அவர்கள் நம்மைப் போலத் தேடாதது. பிறக்கும் போதே யாவரும் அறிவுத்திறனோடு விளங்குவதில்லை. சூழ்நிலையும் தேடும் குணமும்தான் ஒருவரை அறிவுள்ளவனாக ஆக்குகிறது... ஒரு நாடு எவ்வளவு தூரம் தேடியிருக்கிறது என்பது அந்த நாட்டின் வளர்ச்சியில் கண்டுகொள்ளலாம்.

தியானம் செய்வது தேடலுக்குச் சமானம் என்பார்கள். நம்மை நாம் மறந்துவிட்டால் தேடலுலகத்திற்கு வந்து சேர்ந்துவிடுகிறோம். அதைத்தான்

தனிமை திறந்து
பேரமைதிக்குள் நுழைந்தேன்

என்ற வரிகள் உணர்த்துகின்றன. மேலும்

என் மௌனத்தின் சப்தம்
மலைகளிலும்
பாறைகளிலும் மோதி
நொறுங்க நுணுகின..

மெளனத்தின் சப்தம் என்ற பதமே இலக்கிய நயமானது. மலைகள் பாறைகளை எண்ண உருவகங்களாகப் பதித்துக் கொள்ளலாம். மெளனத்தை விட அதிக டெசிபல் கொண்ட சப்தம் உலகிலேது? எண்ண அலைகளின் ஆளும் திறனை அடக்கியாள மவுனம் ஒரு ஆயுதம்.

விழிமத்தியில் விளக்கேற்றி
வெளிச்சமாய் விரிந்தேன்

தவத்தில் ஒருபகுதி (சாந்தியோகம் என்று நினைக்கிறேன்) விழிமத்தியில்தான் நமது எண்ணங்களின் உலகம் வாழ்வதென்று சொல்லி, நம் எண்ணத்தை அங்கே ஒருங்கிணைக்கச் சொல்லுவார்கள். இந்த வரிகள் குறிப்பிடுவதும் அதையே! நம் புறவிழிகள் நூற்றியென்பது டிகிரி காட்சிகளைக் காணக்கூடியது. ஆனால் அக விழிகளோ மூந்நூற்றியருபதும் காணூம். அதன் அடக்கம் மத்தியில் என்பதை பண்டைய காலம் தொட்டே கண்டுபிடித்துவைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு "நானும் வெளியேறும் போதும் நம்மை படிப்படியாக உணருவோம். உணர்வுகளுக்கு உடலிட்ட வரிகள் அனைத்து அருமை ஆதி. ஆனால் இவைகளையெல்லாம் விட்டுவிட்டு ஞானம் தேட முடியுமா?

குரோதம், ஆசை, துரோகம், அகந்தை, அன்பு, காமம்,என அத்தனையும் வெளியேற மீதி இருப்பதாகச் சொன்ன ஞானம் மனிதனைத் தெளிவுபடுத்துகிறது என்பதை மனம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது. சாப்பாட்டுக்கு ஊறுகாய் அவசியம்,. ஊறுகாயே சாப்பாடாக அல்ல. அதுபோலத்தான். யதார்த்தத்திற்கு இவற்றுள் சில நமக்குத் தேவைப்படுகின்றன. உனக்குள் ஞானம் மட்டுமே தேடுவது தேடல் என்றால் அது பயன் தரும் தேடலாகாது. குரோதத்தின் குமுறலைத் தேடவும், ஆசையின் ஆதியைத் தேடவும், அகந்தையின் மடமையைத் தேடவும், அன்பின் பொழிப்பைத் தேடவும், காமத்தின் அடக்கத்தைத் தேடவும் கற்றுக் கொள்ளவேண்டும். ஞானம் இதிலிருந்துதான் வெளியே வருகிறது.

என்னடா இவன் குரோதம் முதல் எல்லாமே வேண்டுமென்கிறானே என்று பார்க்கிறீர்களா?

ஒரு மனிதனுக்கு பொய் பேசத் தெரியாதாம், விவேகானந்தர் சொன்னார், " நீ பொய் பேசத் தெரியாமல் மரக்கட்டையாக இருப்பதைக் காட்டிலும் பொய் பேசுவதில் தவறில்லை. ஒரு கெட்ட செயலைக்கூட செய்ய இயலாத அளவுக்கு மந்தபுத்தியாய் உள்ளாய் " என்றாராம்;
அதற்கு என்ன அர்த்தமாம்? குரோதத்தையோ அகந்தையையோ அல்லது எந்த ஒரு குணத்தையோ வெளியேற்றிவிட்டால், அதன் வாசம் துளியுமில்லாத கட்டையாகவே நாமாவோம். எதிர்மனிதனின் செயல்பாடுகளைக் கண்டுணராத ஞானம் நமக்குத் தேவையில்லாதது என்கிறார்.

கவிதைக்குள் கேள்வி வைத்தெழுதுவதில் திறம் வேண்டும். அது நன்றாக வாய்த்திருக்கிறது. கவிதை நீளத்தை கருவின் ஆழம் அடக்கிவிடுகிறது. சலிப்பில்லாமல் நடை செல்கிறது. "பதில்" என்று ஒவ்வொரு முறையும் இட்டு நீளம் வளர்க்கத் தேவையில்லை. அத்துணை கடினமான நடையிலுமில்லை கவிதையின் நடை.

நம் மன்றத்தில் தென்றல் என்ற பெண்மணி உலாவுவார். அவரின் கையெழுத்தைக் கவனியுங்கள்

எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய்??
நான் உன்னருகில் இருக்க...

என்று போட்டிருப்பார்..... அப்படித்தான் நாமெல்லாருமே. அருகிலே இருப்பதைக் கூடத் தெரியாமல் தேடிக் கொண்டிருப்போம்.

வாழ்த்துகள் ஆதி. நல்ல கவிதையை சமைத்ததற்கு.

ஆதி
23-11-2007, 12:39 PM
புலன்கள் எனக்கு அடங்கி இருக்கும்வரை,
நான் ஞானி...
புலன்களுக்கு நான் அடங்கி இருக்கும்வரை,
நான் அஞ்ஞானி...

நிதர்சனம், ஜெம்ஸ் ஆலன் சொல்லுவார் எவன் தன்னை அடக்க கற்றிருக்கிறானோ, அவன் எந்த வித துயரங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள வல்லவன்.



பிறப்பு முதல் இறப்பு வரை,
தனக்குள் தேடும், தன்னை ஆராயும்,
விஞ்ஞானி... மனிதன்...

ஓஷோ சொல்லுவார், உன்னைத் தேடி என்னிடம் வாராதே, என்னால் உனக்கு நீ யார் என உணர வைக்க முடியாது, ஆனால் இதுவரை தான் என நீ எதை நினைத்திருந்தாயோ அதை என்னால் அழிக்க முடியும், பின் புதியவனாய் நீ உன்னைத் தேடு..


அழகான பின்னூட்டம் அக்னி அவர்களே..

உங்கள் வரிகள் அழியாத வார்த்தைகளாய் என் அடிநெஞ்சில்..

நன்றி..

-ஆதி

தாமரை
23-11-2007, 12:56 PM
தேடல்

யாரென உணர
தனிமை திறந்து
பேரமைதிக்குள் நுழைந்தேன்
....................
....................
...............
ஐம்புலன் அதிர
ஐம்பொறிகள் சிரித்தன
அந்த பெரும்சப்தத்தில்
என் பேரமைதி கிழிய
தெறித்தேன் ஒரு துளியாய்
வெளியே...

நான் யாரென்ற வினாவுடன்..


-ஆதி

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி..

என்னுள் இருப்பவர் எத்தனை பேர்..
தேடல் தொடங்குகிறது தேடாமலேயே!

மௌனம் கலைந்த போது விக்கிரமாதித்தன் வேதாளமாய்
மீண்டும் முருங்கை மரம்..

மனிதன் என்ற உணர்வு கூட வெளிப்பட
யார் யாரெல்லாம் என்னென்ன கேள்வியெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது..
உணர்வுகளுக்கும் உருவு கொண்டுப் பார்த்தால் நம்முணர்வு நமக்கே சகிக்கவில்லை. அவற்றினால் நாம் சுகிக்கவில்லை..

இத்தனையும் உணர்ந்த பின்னும் நான் மனிதன் என்ற போது பொறிகளும் புலன்களுமே சிரித்தன..

நல்ல சிந்தனை.. நல்ல கரு... நன்றி ஆதி.

ஆதி
23-11-2007, 01:19 PM
என்னடா இவன் குரோதம் முதல் எல்லாமே வேண்டுமென்கிறானே என்று பார்க்கிறீர்களா?

ஒரு மனிதனுக்கு பொய் பேசத் தெரியாதாம், விவேகானந்தர் சொன்னார், " நீ பொய் பேசத் தெரியாமல் மரக்கட்டையாக இருப்பதைக் காட்டிலும் பொய் பேசுவதில் தவறில்லை. ஒரு கெட்ட செயலைக்கூட செய்ய இயலாத அளவுக்கு மந்தபுத்தியாய் உள்ளாய் " என்றாராம்;
அதற்கு என்ன அர்த்தமாம்? குரோதத்தையோ அகந்தையையோ அல்லது எந்த ஒரு குணத்தையோ வெளியேற்றிவிட்டால், அதன் வாசம் துளியுமில்லாத கட்டையாகவே நாமாவோம். எதிர்மனிதனின் செயல்பாடுகளைக் கண்டுணராத ஞானம் நமக்குத் தேவையில்லாதது என்கிறார். .

விவேகானந்தரின் தேடல்கள் வித்யாசமானவை.. பரமஹம்ச நித்யானந்தர் சொல்லுவார், உணக்குள் நடக்கும் நிகழ்வுகளை நீ வேரொருவனாய் இருந்து கவனி.. எ.டு உனக்கு கோவம் வருகிறது அந்த சினம் ஒரு சக்தி அதை பயன்படுத்தும் விதத்தில் பயன் படுத்தினால் அதன் ஆற்றல் மேன்மைப்படும், அதனால் உனக்கு கோவம் வரும் போது நீ அதற்கு சாதகமாகவும் செயல் படகூடாது, எதிராகவும் செயல்படக்கூடாது, அதை வேரொருவனாய் இருந்து பார் அது உனக்குள் என்ன மாற்றம் நிகழ்த்துகிறது என்று ஊற்று கவனி, நீதான் ஞானி என்பார்


கவிதைக்குள் கேள்வி வைத்தெழுதுவதில் திறம் வேண்டும். அது நன்றாக வாய்த்திருக்கிறது. கவிதை நீளத்தை கருவின் ஆழம் அடக்கிவிடுகிறது. சலிப்பில்லாமல் நடை செல்கிறது. "பதில்" என்று ஒவ்வொரு முறையும் இட்டு நீளம் வளர்க்கத் தேவையில்லை. அத்துணை கடினமான நடையிலுமில்லை கவிதையின் நடை..

பதில் என்பதை அழித்துவிடுகிறேன்


நம் மன்றத்தில் தென்றல் என்ற பெண்மணி உலாவுவார். அவரின் கையெழுத்தைக் கவனியுங்கள்

எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய்??
நான் உன்னருகில் இருக்க...

என்று போட்டிருப்பார்..... அப்படித்தான் நாமெல்லாருமே. அருகிலே இருப்பதைக் கூடத் தெரியாமல் தேடிக் கொண்டிருப்போம்..

நிதர்சனம்


வாழ்த்துகள் ஆதி. நல்ல கவிதையை சமைத்ததற்கு.

அருமையான பொருமையான அதிநுட்பமான அழ்ந்த பின்னூட்டம் ஆதவா அவர்களே..

மிக்க நன்றி மின்சார துண்டிப்பினூடும் தந்த பின்னூட்டதிற்கு..

அன்பன் ஆதி

ஆதவா
23-11-2007, 01:22 PM
ஆதி, மேற்கோளினுள்ளேயே உங்கள் கருத்தைப் பொதிந்தால், அது காணாமல் போகும்... வாசகர்களுக்கு.. வெளியே பதியுங்களேன்..

அன்பன்
ஆதவன்

ஆதி
23-11-2007, 01:24 PM
ஆதி, மேற்கோளினுள்ளேயே உங்கள் கருத்தைப் பொதிந்தால், அது காணாமல் போகும்... வாசகர்களுக்கு.. வெளியே பதியுங்களேன்..

அன்பன்
ஆதவன்

அப்படியே செய்து விடுகிறேன் ஆதவா அவர்களே..

அன்பன் ஆதி

ஆதி
24-11-2007, 02:59 AM
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி..

என்னுள் இருப்பவர் எத்தனை பேர்..
தேடல் தொடங்குகிறது தேடாமலேயே!


எல்லா மனிதர்களும் இன்றியமையாத தெய்வித் தன்மையுடையவராக இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் தெய்வீக இயல்பை அவர்கள் அறிவதில்லை
- ஜேம்ஸ் ஆலன்




மனிதன் என்ற உணர்வு கூட வெளிப்பட
யார் யாரெல்லாம் என்னென்ன கேள்வியெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது..
உணர்வுகளுக்கும் உருவு கொண்டுப் பார்த்தால் நம்முணர்வு நமக்கே சகிக்கவில்லை. அவற்றினால் நாம் சுகிக்கவில்லை..


ஒருவரால் தமது கீழ்தரமான இயல்புகளை, அச்சமில்லாமல் எதிர்நோக்க முடியவில்லை என்றால், அவரால், ஞானத்தின் கடுமையான உயரங்களில் ஏறமுடியாது
- ஜேம்ஸ் ஆலன்


நீங்கள் சொன்னவை எல்லாம் நிதர்சனம்.. நம் உள்முகத்தை ஊற்று பார்க்க முயன்றால் உண்மையில் அது சகிக்கவில்லை..

அதனைப் பாராமல் விட்டால் விழிக்க வழி இல்லை ஞானத்தில்.

உள் முகநோக்கில் உருக்கொண்ட உங்கள் பின்னூட்டதிற்கு என் நன்றிகள் பல..

-ஆதி

அமரன்
24-11-2007, 06:30 AM
ஆமாம் அமர், அவர் நாடிபாய் இல்லை, சுட்டி பாய்.. சுமார்ட் பாய்.. :cool:

-ஆதி
அதான் நல்லா மார்க் போடுகின்றாரோ

Keelai Naadaan
17-05-2008, 06:20 PM
கவிஞருக்கு வணக்கம்.
இங்கு வந்துள்ள பாராட்டுகள் அதீதமானவை அல்ல.
சரியானவையே. நானும் தேடல் என்ற பெயரில் ஒரு சிறுகதையை இங்கே பதித்திருப்பதால் அந்த தேடலின் அனுபவத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

நாகரா
23-05-2008, 04:35 PM
வெட்டவெளி
தான் உடுத்திய
அருளொளி ஆடையை
பாரபட்சமின்றி
எல்லாவற்றுக்கும் அளித்தது
"உலகத்துக்கு
நீ
வெளிச்சமாய் இருக்கிறாய்"
என்று
தன்னைத் தான் விளங்கிய
உண்மையையும்
பகிர்ந்தது

பெற்றதை உடுத்து
பகிர்ந்ததை உண்டு
வெட்டவெளியில் வாழ்ந்தால்
தேட வேண்டாம்
எதையும்
ஆதியாம் நீ
ஆதி யாரென்று
கேட்கவும் வேண்டாம்

தேவையற்றதுகள் யாவையுங் களைந்து
உடுத்த வேண்டிய ஒன்றை
உவந்தே உடுத்து
நலங்கெடுக்கும் யாவையுங் கழிந்து
உண்ண வேண்டிய ஒன்றை
ருசித்து உண்
சுவர்களைக் கடந்த
சுதந்திர வீட்டில்
சுயமாய் வாழ்
ஆதியுன் மெய்ப்பொருள் விளங்கி
அந்தமின்றி இனிதே வளர்வாய்
ஆதி நீயே!

தேடல் அருமை
தேடியது கிடைத்த பின்
வேறெது வேண்டும்

என்ன தேடுகிறாய்
கிடைக்குமா அது
தேடும் நீயே புதையல்

என்ன கேட்கிறாய்
கிடைக்குமா பதில்
கேட்கும் நீயே பதில்

அணைத்து விடு விளக்கை
அஞ்சாதே இருளுக்கு
நீ தான் ஒளி

என்ன வேண்டும்
இன்னும்
நீ தான் பூரணம்

வேறெதற்குக் கோயில்
வேறெதற்குச் சடங்கு
நீ தான் கடவுள்

சும்மா இரு சொல்லற
மௌனம் பேசும் மெய்யின்
தெற்றென விளங்கும் பொருளே நீ தான்

நான் என்ற தன்மையாம்
தன் மெய்யாம் தன் ஐ தன்னை
நன்றே உணர்ந்தால்
உண்டே உனக்கு ஏகார உறுதி

ஆதியந்தமில்லா ஆதியை
ஆதிக்கு உணர்த்தும் மந்திரம்
"நானே ஆதி"

அந்தமின்றி என்றும் எங்கும் வளரும் ஆதியின் பாதியை
ஆதிக்கு உணர்த்தும் மந்திரம்
"பகவன் நான்"