PDA

View Full Version : இன்று ஒரு நாள் மட்டும்...



ஷீ-நிசி
21-11-2007, 04:14 PM
இன்று ஒரு நாள் மட்டும் இந்த உலகம் என் வசப்பட்டால்!
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/LoversSunPoem.jpg

இன்று ஒரு நாள் மட்டும்
இந்த உலகம்
என் வசப்பட்டால்!!!

நீலவானத்தின் மேலேறி சென்று,
மின்னலில் கிளையொன்றை வெட்டி,
நட்சத்திரங்களை அதில் கோர்த்து,
நிலவினையும் கூட சேர்த்து

நீ அணிந்திட, உனக்காக
நட்சத்திரமாலை செய்திடுவேன்!!

மழையின் தூறலை
தறியினில் வைத்து,
வானவில்லின் சாயங்கள்
ஏழையும் குழைத்து,

நீ உடுத்திட, உனக்காக
மழையாடை நெய்திடுவேன்!!

ஆகாய விரிப்பினை
ஒரு பாதி கிழத்து,
தவழ்கின்ற மேகங்களை
அதில் முழுதும் சேமித்து,

நீ உறங்கிட, உனக்காக
வான்மெத்தை செய்திடுவேன்!!

கடலின் அடியில் சென்று,
எரிமலையின் தலையை வெட்டி,
அதில் வழியும் நெருப்பினை மூட்டி,
களைப்பு தீர........

நீ குளித்திட, உனக்காக
கடல்நீரை வெந்நீராக்கிடுவேன்!!

காலை சூரியனின்
மஞ்சள் வெயிலெடுத்து,
உன் கன்னங்களுக்கு
சந்தனம் பூசிடுவேன்!!

மாலை சூரியனின்
சிவந்த வண்ணமெடுத்து,
உன் உதடுகளுக்கு
வர்ணம் பூசிடுவேன்!!

புல்லின் மீதமர்ந்திருக்கும்
பனித்துளிகளுக்குப் பதிலாய்,
உன் வியர்வைத்துளிகளை,
அமரவைத்து அழகுப் பார்ப்பேன்!!

கூவுகின்ற குயில்களைப் பிடித்து,
அவைகளிடம் வேண்டுகோள் விடுத்து,
இன்று முழுவதுமுனக்கு
பிறந்த நாள் பாடல்களை
பாடிட செய்திடுவேன்!

இன்று ஒரு நாள் மட்டும்
இந்த உலகம்,
என் வசப்பட்டால்.....

அறிஞர்
21-11-2007, 04:50 PM
முதலில் வானம் வசப்பட்டு....
நட்சத்திர மாலை உருவாகி....
வான் மெத்தை ரெடியாகிறது.

பின் பூமி வசப்பட்டு....
காதலியை வெந்நீரில் குளிப்பாட்டி
வர்ணங்கள் பூசி..
புல் மெத்தையில் வைத்து அழகை ரசிக்கிறீர்கள்...

கடைசியாக கானக்குயில்களின்... பிறந்த நாள் வாழ்த்து....

உலகம் வசப்படட்டும்.....
உம் இன்பம் பெருகட்டும்..

வாழ்த்துக்கள் ஷீ-நிசி..

ஷீ-நிசி
21-11-2007, 04:55 PM
அறிஞரே! இவ்வளவு அழகா கவிதையா சின்னதா அடக்கிட்டீங்களே!

நன்றி அறிஞரே!

நேசம்
21-11-2007, 05:25 PM
காதலிக்கு இத்தனை அன்பான பரிசா ! உங்கள் காதலி கொடுத்து வைத்தவர் ஷீ-நிசி.வாழ்த்துக்கள்

இளசு
21-11-2007, 07:13 PM
உலகம் வசப்பட்டால் எனக்கேட்டு
பரவச உணர்ச்சிவசப்பட்டு
அண்டம் முழுதும் ஆண்டு
அன்பானவளை ஆராதிக்க

ஆசைப்படும் காதலன்..
அவள் கொடுத்துவைத்தவள்..


வாழ்த்துகள் ஷீ...!

பாரதி
21-11-2007, 10:15 PM
அட..! உமக்குத்தான் வார்த்தைகள் வசப்படுகின்றனவே ஷீ. வாழ்த்துக்கள்.
(ஒரு மாதத்திற்கு முன், கிட்டத்தட்ட இதே வார்த்தைகளைக் கொண்டு நான் பாதி கிறுக்கி வைத்திருக்கிறேன் − பணியிடக் கணினியில்!!)

யவனிகா
22-11-2007, 02:04 AM
ஒரு நாள் உங்கள் வசப்பட்டு காதலிக்கு மாலை கோர்க்கப் போகிறீர்களோ இல்லையோ...வார்த்தைகளை வசப்படுத்தி கவிதை கோர்த்து விட்டீர்கள்...வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
22-11-2007, 03:19 AM
வசப்பட்டுவிட்ட வார்த்தைகளால்,கவிதையை வாசப்படுத்திவிட்டீர்கள்.எரிமலைக் குழம்பால் வெந்நீரான கடலாடி,மழையாடையணிந்து,நட்சத்திரமும்,நிலவும் கோர்த்த மாலை சூடி, சூரியச் சிவப்பை அதரம் பூசி,மேக மெத்தையில் காதலி படுத்துறங்க கருங்குயில் கீதமிசைக்கிறது. அடடா அபாராமான கற்பனை.வசீகரமான வார்த்தையாடல்.அழகு கவிதை.மீண்டும் ஒருமுறை தான் காதல் கவிகளின் நாயகன் என ஷீ நிரூபித்துவிட்டார்.வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
22-11-2007, 05:14 AM
காதலிக்கு இத்தனை அன்பான பரிசா ! உங்கள் காதலி கொடுத்து வைத்தவர் ஷீ-நிசி.வாழ்த்துக்கள்

நன்றி நேசம்

ஷீ-நிசி
22-11-2007, 05:16 AM
உலகம் வசப்பட்டால் எனக்கேட்டு
பரவச உணர்ச்சிவசப்பட்டு
அண்டம் முழுதும் ஆண்டு
அன்பானவளை ஆராதிக்க

ஆசைப்படும் காதலன்..
அவள் கொடுத்துவைத்தவள்..


வாழ்த்துகள் ஷீ...!

அண்டம் முழுதும் ஆண்டு
அன்பானவளை ஆராதிக்க

அழகிய வரிகள்

நன்றி இளசு அவர்களே!

ஷீ-நிசி
22-11-2007, 05:17 AM
அட..! உமக்குத்தான் வார்த்தைகள் வசப்படுகின்றனவே ஷீ. வாழ்த்துக்கள்.
(ஒரு மாதத்திற்கு முன், கிட்டத்தட்ட இதே வார்த்தைகளைக் கொண்டு நான் பாதி கிறுக்கி வைத்திருக்கிறேன் − பணியிடக் கணினியில்!!)

எப்ப டெலிவரி ?!

நன்றி பாரதியாரே! சீக்கிரம் போடுங்க உங்க கவிக்குழந்தைய

ஷீ-நிசி
22-11-2007, 05:17 AM
ஒரு நாள் உங்கள் வசப்பட்டு காதலிக்கு மாலை கோர்க்கப் போகிறீர்களோ இல்லையோ...வார்த்தைகளை வசப்படுத்தி கவிதை கோர்த்து விட்டீர்கள்...வாழ்த்துக்கள்.

நன்றி யவனிகா!:)

ஷீ-நிசி
22-11-2007, 05:19 AM
வசப்பட்டுவிட்ட வார்த்தைகளால்,கவிதையை வாசப்படுத்திவிட்டீர்கள்.எரிமலைக் குழம்பால் வெந்நீரான கடலாடி,மழையாடையணிந்து,நட்சத்திரமும்,நிலவும் கோர்த்த மாலை சூடி, சூரியச் சிவப்பை அதரம் பூசி,மேக மெத்தையில் காதலி படுத்துறங்க கருங்குயில் கீதமிசைக்கிறது. அடடா அபாராமான கற்பனை.வசீகரமான வார்த்தையாடல்.அழகு கவிதை.மீண்டும் ஒருமுறை தான் காதல் கவிகளின் நாயகன் என ஷீ நிரூபித்துவிட்டார்.வாழ்த்துக்கள்.

நன்றி சிவா...

மிக அழகாக கவிதையின் வரிகளை சொல்லியிருக்கிறீர்கள்!

பூமகள்
22-11-2007, 05:55 AM
நீலவானத்தின் மேலேறி சென்று,
மின்னலில் கிளையொன்றை வெட்டி,
நட்சத்திரங்களை அதில் கோர்த்து,
நிலவினையும் கூட சேர்த்து

நீ அணிந்திட, உனக்காக
நட்சத்திரமாலை செய்திடுவேன்!!
மின்னல் கிளையினை
வெள்ளிக் கம்பியாக்கி..
வைரமாக விண்மீன்கள்
கோர்த்து, நிலவினை
நடுபதக்கமாக்கி
மாலை செய்து சூட்டுவேன்..!


மழையின் தூறலை
தரியினில் வைத்து,
வானவில்லின் சாயங்கள்
ஏழையும் குழைத்து,

நீ உடுத்திட, உனக்காக
மழையாடை நெய்திடுவேன்!!நீர்துகள்களை ஒன்றாக்கி..
நூல் சேலை நெய்து
வர்ணங்களை கொஞ்சம்
வானவில்லிடம் பிய்த்து
வண்ணமழை உடுப்பாக்கிக்
கொடுப்பேன்..!!

ஆகாய விரிப்பினை
ஒரு பாதி கிழத்து,
தவழ்கின்ற மேகங்களை
அதில் முழுதும் சேமித்து,

நீ உறங்கிட, உனக்காக
வான்மெத்தை செய்திடுவேன்!!நீலவான கட்டிலில்
மேக மெத்தை விரித்து
மெல்லிய உறக்கம் வர
தென்றல் வீசச் செய்வேன்..!

கடலின் அடியில் சென்று,
எரிமலையின் தலையை வெட்டி,
அதில் வழியும் நெருப்பினை மூட்டி,
களைப்பு தீர........

நீ குளித்திட, உனக்காக
கடல்நீரை வெந்நீராக்கிடுவேன்!!கண்ணே நீ நீராட,
கடல் நீர் சூடாக்க
சூரியன் போதவில்லை..!
தனல் கூட்ட எரிதனல்
வரப்பிட்டு கடலருகில்
கொண்டுவருவேன்..!

காலை சூரியனின்
மஞ்சள் வெயிலெடுத்து,
உன் கன்னங்களுக்கு
சந்தனம் பூசிடுவேன்!!

மாலை சூரியனின்
சிவந்த வண்ணமெடுத்து,
உன் உதடுகளுக்கு
வர்ணம் பூசிடுவேன்!!சூரிய மஞ்சளினை
வான பரளில் உறைத்து
விளைந்த மஞ்சளை
முகத்தில் பூசி உன்
மங்கள முகம்
பொலியச் செய்வேன்..!

குங்கும பூவின் சிவப்பினை
வானல் வெட்கி நாணும் சமயம்..
தொட்டெடுத்து உன்
அதரங்களை அலங்கரிப்பேன்..!!

புல்லின் மீதமர்ந்திருக்கும்
பனித்துளிகளுக்குப் பதிலாய்,
உன் வியர்வைத்துளிகளை,
அமரவைத்து அழகுப் பார்ப்பேன்!!புல் புசித்த நீர் அகற்றி
பனிப்பூ நீ எனை முதன்முதலில்
வியந்து அதிர்ந்து நோக்குகையில்
வழிந்த வியர்வைத்துளிகளை புல்லின்
முடி சூடி அழகுபார்ப்பேன்..!!

கூவுகின்ற குயில்களைப் பிடித்து,
அவைகளிடம் வேண்டுகோள் விடுத்து,
இன்று முழுவதுமுனக்கு
பிறந்த நாள் பாடல்களை
பாடிட செய்திடுவேன்!அன்பே நீ பூவுலகில்
பிரவேசித்த நாளை
ஊர் முழுக்க பறந்து
பிராத்திக்கச் சொல்லி
குயில்ப் பாடல் கொண்டு
முரசு கொட்டுவேன்..!


இன்று ஒரு நாள் மட்டும்
இந்த உலகம்,
என் வசப்பட்டால்.....இன்று மட்டும் இவ்வுலகம்
என் கையில் இசைந்தால்..!!

அபாரம்.. அசத்தல்.. .அருமை.... வர்ணனைகள்..வார்த்தை லயங்கள் கலக்கல் ஷீ..!!
ஷீ-யின் மற்றுமொரு முத்திரைக் கவிதை..!! :icon_b:
பாராட்ட வார்த்தைகள் இல்லை. :icon_ush:
கவிதையில் லயித்து வரிக்கு வரி பின்னூட்டம் கொடுக்க நினைத்ததால் தான் தாமதமான பின்னூட்டம்..!!
வாழ்த்துகள் ஷீ..! :icon_rollout:

ஆதி
22-11-2007, 07:34 AM
நிறைக்குடம் நீர்தழும்புதல் இல் - வள்ளுவன்

நிறைந்த பின்பும் வழியவிடுங்கள் - வைரமுத்து - பெய்யென பெய்யும் மழை

குடம் தழும்பி வழிகிறது ஷீ
உங்கள் கற்பனைக்
குடம் தழும்பி வழிகிறது



ஆகாய விரிப்பினை
ஒரு பாதி கிழத்து,
தவழ்கின்ற மேகங்களை
அதில் முழுதும் சேமித்து,


நீ உறங்கிட, உனக்காக
வான்மெத்தை செய்திடுவேன்!!


மேகத்தைப் பிடித்து
மெத்தைகள் அமைத்து
மெல்லியப் பூ
உன்னைத் தூங்க வைப்பேன்..

- வைரமுத்து - ஜீன்ஸ்

இந்த வரிகளை ஞாபகமூட்டியது..




கடலின் அடியில் சென்று,
எரிமலையின் தலையை வெட்டி,
அதில் வழியும் நெருப்பினை மூட்டி,
களைப்பு தீர........

நீ குளித்திட, உனக்காக
கடல்நீரை வெந்நீராக்கிடுவேன்!!


இங்கு கற்பனை வழிந்திருக்கிறது, ஆனால் வழிந்து இழுக்கப் பட்டன கற்பனைப் போல் நெருடுகிறது..

காரணம் கடல்நீரில் குளிக்க முடியாது.. இதை நான் எண்ணிய தருணத்தில்
எனக்குள் நெளிந்தது இந்த வாரலாற்றுச் சம்பவம்.

நிலவை தன் கணவனின்
முகத்திற்கு உவமையாக்கி
கவிதை வடித்தாரம்
எய்ன்ஸ்டிங் மனைவி

அதைப் படித்த
எய்ன்ஸ்டிங்கு
கோவம் பொங்கியதாம்
காரணம்
நிலாப் போன்று வனப்பென
தன் முகத்தை வர்ணித்தது
அவருக்கு பிடிக்கவில்லை

காரணி
ஆராய்ச்சி நோக்கில்
அவர் அறிந்த நிலா ஈரமில்லாதது
அவலட்சனமானது..

அதன் பின்
அவர் மனைவிதான்
எழுதிய கவிதைகளை
வாழ்நாள் முழுதும்
அவரிடம் காட்ட கூடாது என
முடிவு செய்தாராம்..

அப்படி பட்ட நோக்கில் நான் சொல்லவில்லை..

கடலைத் தவிர்த்து நயகராப் போன்ற நதிகளை
வெப்ப மூட்டி குளிப்பாட்டி
பார்த்திருக்களாம்..



மாலை சூரியனின்
சிவந்த வண்ணமெடுத்து,
உன் உதடுகளுக்கு
வர்ணம் பூசிடுவேன்!!


அந்திவானம் கடல்
காப்பி கோப்பையில்
உன் உதடு - வைரமுத்து - கொடிமரத்தின் வேர்கள்..

அழகிய உவமை ஷி-நிசி



புல்லின் மீதமர்ந்திருக்கும்
பனித்துளிகளுக்குப் பதிலாய்,
உன் வியர்வைத்துளிகளை,
அமரவைத்து அழகுப் பார்ப்பேன்!!


பனித்துளியை விட
மென்மையானது
உன் வியர்வை
புல்லின் நுனிகளே
அதன் சிம்மாசனம்..

அருமை நிசி..

எல்லா வரிகளையும்
படித்துவிட்டு எண்ணிப் பார்த்தேன்
எதுவும் மீதிவைக்காமல்
எல்லாம் சொல்லிவிட்டார்கள்
என்ன சொல்ல நான்
யாவரும் சொன்னதை திரும்ப சொல்கிறேன்

"கவிதை நல்லா இருக்கு ஷீ-நிசி..."

பாராட்டுக்கள்..

-ஆதி

அமரன்
22-11-2007, 07:46 AM
சுந்தரத்தமிழில் பாப்புனைவதற்கு நம்மிடையுள்ள வெகுசிலரில் கோடிட்டுகாட்டக்கூடிய பெயர் ஷீ. இவர் எழுதவேண்டும் என நினைத்ததும் வார்த்தைகள் அழையாவிருந்தாளிகளாக வரிசையில் வந்து குவிகின்றன போலும். இயற்கையை மையாக்கி, அவளை மையமாக்கி எம்மை மையல் கொள்ளவைக்கும் கவிதை லேசாக தட்டினாலே கொட்டுணும் தங்கச்சுவர்களாக மிளிர்கின்றது. அள்ளி எடுத்து பரவசப்பட வைக்கின்றது..

உலகம் வசப்படால் என்ன என்ன செய்வேன் என்று இவர் சொன்னாலும் அவை அவள் வசமான கவிஞர் அவளை வசப்படுத்தவே எல்லாம் சொல்கின்றார். கவிஞரின் சாம்ராஜ்ஜியத்தை கையகப்படுத்த, ஆளுகைக்கு உடபடுத்த அவர் எடுத்த ஆயுதம் அன்பு. அன்பு ஆயுததால் நாம் வாழும் உலகத்தை ஆக்கிரமித்து, சொத்துகளை களவாடி தன்னிராஜ்ஜியத்தை குளிர்விக்கப்போகின்றாராம்.. என்னே ஒரு சிந்தனை. இதைவிட காதலின்/அன்பின் ஆழத்தை யாராகிலும் சொல்ல முடியுமா என்பது எனக்குத்தெரியவில்லை.

வானை அடைவது, நட்சத்திரங்களை அடைவது என்பவை கடினமானாலும் சாத்தியப்படக்கூடியவை. மின்னலைப்பிடித்து இழையாக்குவது என்பது மூக்கால் தண்ணி குடிக்கும் செயல். அதைக்கூட செய்ய முடியும் என்கின்றார் கவிஞர். நவமணிமுத்துமாலையை விஞ்சிய சொக்கவைக்கும் மாலையாக நட்சத்திர மாலை உருவெடுக்கும் என்பது பௌர்ணமி நிலவு வட்டமாக இருக்கும் என்று சொல்வதுக்கு ஒப்பானது. எதிர்காலத்தில் பௌர்ணமி நிலவு எப்படி இருக்கும் என்பதை எப்படி பார்ப்பது. அதையும் கவர்ந்து மாலையின் பதக்கமாக்கப்போகின்றாராமே!

வானை அடைவது, நட்சத்திரங்களை அடைவது என்பவை கடினமானாலும் சாத்தியப்படக்கூடியவை. மின்னலைப்பிடித்து இழையாக்குவது என்பது மூக்கால் தண்ணி குடிக்கும் செயல். அதைக்கூட செய்ய முடியும் என்கின்றார் கவிஞர். நவமணிமுத்துமாலையை விஞ்சிய சொக்கவைக்கும் மாலையாக நட்சத்திர மாலை உருவெடுக்கும் என்பது பௌர்ணமி நிலவு வட்டமாக இருக்கும் என்று சொல்வதுக்கு ஒப்பானது. எதிர்காலத்தில் பௌனமி நிலவு எப்படி இருக்கும் என்பதை எப்படி பார்ப்பது. அதையும் கவர்ந்து மாலையின் பதக்கமாக்கப்போகின்றாராமே! அவை எல்லாம் இல்லாத இடத்தில் மேகவிரிப்புக்கு என்ன வேலை. காதலர்களை விட்டுபிரிந்து அவள் வாடக்கூடாது என்பதற்காக, கவிஞர் தன் காதலிக்கு படுக்கை ஆக்குகின்றார். நம்ம மனசுக்காரர் கவிஞர். தன்காதல் போல மற்றவர்கள் காதலையும் நினைந்து உருகுகின்றார்.

மிஞ்சி மிஞ்சிப்போனால் கடலோரம் ஒதுங்கும் சிப்பி, சங்கு வகையறாக்களை பரிசாகக்கொடுத்து காதல்லீலை புரியும் மாதவர்கள், முக்குளித்து உனக்கு மாலைகள் செய்திடுவேன்.... உன்னைத்தொட துடுக்குது அலை என்னைப்போலவே... உள்ளிருக்கும் மீன்கள் துள்ளிப் பார்க்கின்றன தண்ணி இல்லாமல் எப்படி இரு மீன்கள்.. இப்படிப்பாடி குஷிப்படுத்துவோரைத்தான் பார்த்திருகின்றேன். கவிஞரோ எரிமலை தலை கொய்து, கொப்புளிக்கும் அக்னிக்குழம்புகளை கடலில் கலந்து வெத வெதப்பாக்குவாராம் தன்னவள் குளிக்க. உச்சகட்ட காதலை வெளிப்படுத்தும் பாங்கு மயக்குது இங்கே.

மழை நீருக்கு ஏதுங்க வர்ணம். அதிலும் தூரலில் மெல்லிய உடலை இழையாக்கி ஆடை நெய்து (அதுவே அழகாகத்தான் இருக்கும்) அதற்கு வானவில்லின் ஏழுவர்ணங்களை எடுத்து சாயம்போட்டு மெருகூட்டுவாராம். (அப்போ இளசு அண்ணா கையெழுத்து வாக்கியங்களை மாற்றவேண்டியதுதான்). வண்ணமில்லா மழையே அழகெனும்போது வண்ணமாலை வண்ணங்கொண்ட மழை எப்படி இருக்கும். கற்பனைக்குதிரையால் எட்டிப்பிடிக்கவே முடியவில்லை. இந்தச்சாயம் வெளுக்கும் என் நினைகின்றீர்களா.. நான் நினைக்கவில்லை.. காதலைப்போல அதுவும் அமரத்துவம் மெற்று துலங்கும்.

காலைவேளையின் ரம்மியத்துக்கு ரம்மியம்சேர்க்கும் புல்நுனிப் பனித்துளிக்கும் பதிலாக வியர்வைத்துளிகளை துங்க விடுவாராம். ஒவ்வொரு வியர்வைத்துளிகளையும் சேகரித்து புல்நுனிகளுக்கு மூக்குத்தி சூட்டி அழகுபார்க்கும் போர்வையில் குறுப்புத்தனம் தெரிகிறமாதிரி இருக்கு. குறும்புகளில்லாத காதலா?

அந்த துளிகள் அப்படியே இருக்க முடியுமா? தன்னை விஞ்சியோர் இருக்கக்கூடாது என எண்ணும் சூரியர் விட்டு விடுவாரா. அவரைக் கவிஞர் எப்படி விட முடியும். காதலியின் முகத்திற்கு செயற்கையாக அழகூட்ட இயற்கை அழகுசாதனப் பொருளாக்க்குகின்றார். அப்புறம் எப்படி வியர்வை பெருக்கெடுப்பது? கவிஞர் குறும்புபண்ணுகின்றார்தானே..

குயிலு தன்சோடியை அழைக்க சிக்னல் கொடுக்குது. பருவராகம் சுகிக்க ஆனந்தராகம் இசைக்குது. அதைக்கூட விடலை கவிஞர். பிடிச்சுக்கொண்டு வந்து தன்னஞ்சுகத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடச்சொல்கின்றார். நிச்சயமாக குயில்கள் "குயிலைப்பிடிச்சு கூண்டிலடைச்சு கூவச்சொல்கிற உலகம்" என்று பாடாது. ஏன்னா கவிஞர் அவற்றுக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது இதேமாதிரி கவித்துவமாகத்தானே கொடுத்திருப்பார்.

கவிதையின் முதல் வரி "இன்று ஒரு நாள் மட்டும்" என்பதையும் இறுதி வரி "என் வசப்பட்டால்....." என்பதையும் சேர்க்கும் போது, நீ வசப்பட்டால் உலகத்தை வசப்படுத்துவேன் என்றும் சாடை மாடையாக சொல்கின்றாரோ எனத்தோன்றுகின்றது. "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்ற பாவேந்தர் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றது..
பாராட்டுக்கள் ஷீ. தொடர்ந்து எம்மைப் பரவசப்படுத்துங்கள்.

பிச்சி
22-11-2007, 08:07 AM
கவிதைகளும் விமர்சனங்களும் மிக அருமை. சூப்பரோசூப்பர்உலகம் என்றென்றும் வசப்படும் அண்ணா உங்களுக்குஅன்புடன் பிச்சி

அமரன்
22-11-2007, 08:25 AM
கலக்கல் பின்னூட்டம் ஆதி. பரந்துபட்ட உங்கள் நுகர்வுஆக்கிரமிப்பையும், ஞாபத்திறனையும், தக்கசமயத்தில் பயன்படுத்தும் சமயோசித ஆற்றலையும் பறை சாற்றுகின்றது. தொடர்ந்து செதுக்குங்கள் எல்லாரையும்.

ஷீ-நிசி
22-11-2007, 08:32 AM
பூமகளின் வரிக்கு வரி விளக்கம் அருமை.. நன்றி பூமகள்

-----------------------

ஆதி! மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ஒரே வார்த்தையில் பதில் சொன்னால்..
"கவிதைக்குப் பொய் அழகு"

அதனால் கடல் நீரில் குளிக்க முடியுமா என்று கேள்வி கேட்டால், எல்லாவற்றுக்கும் கேள்வி எழுப்ப வேண்டும்...

இந்த உலகமே என வசப்படும்போது கடல்நீரை குளிக்கும் நீராய் மாற்றாமல் விடுவேனோ?!

நன்றி ஆதி!

------------------------------

அமரன்..

சும்மா கலக்கிட்ட.. மிக நீண்ட விமர்சனம்.. நன்றி அமரன்..

--------------------

நன்றி பிச்சி!

ஆதி
22-11-2007, 09:13 AM
ஆதி! மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ஒரே வார்த்தையில் பதில் சொன்னால்..
"கவிதைக்குப் பொய் அழகு"

அதனால் கடல் நீரில் குளிக்க முடியுமா என்று கேள்வி கேட்டால், எல்லாவற்றுக்கும் கேள்வி எழுப்ப வேண்டும்...

இந்த உலகமே என வசப்படும்போது கடல்நீரை குளிக்கும் நீராய் மாற்றாமல் விடுவேனோ?!

நன்றி ஆதி!

------------------------------



கவிதைக்கு பொய் அழகு - நிதர்சனம்..

கடல்நீரை -
குடிநீராக்குது விஞ்ஞானம்
குளிநீராக்குது உம் கவிஞானம்

நீங்கள் சொல்வது சரிதான்
பெண்கள் அலங்காரத்துக்கு மட்டுமல்ல
குளிக்கவும் நேரம் நீட்டுவோர்தான் :lachen001:

-ஆதி

ஆதவா
23-11-2007, 08:07 AM
காட்சிக் கவிஞரே! தூள்.

வானம் ஒரு மரம், கிளையாக மின்னல். வித்தியாசமான உருவகம், மரம் என்ற சொல் இதில் மறைந்திருந்து பொருள் தருவது நிச்சயம் கவிஞரின் திறமை. கிளைமின்னல்கள் ஒடித்து, சரமாக்கி, நட்சத்திரங்களைக் கோர்த்து, அடடா! என்னே ஒரு புலமை ! இத்தனை நாளும் மின்னலைக் கிளையாக்கத் தெரியவில்லை எமக்கு.

நிலவு ஒரு பதக்கமாய் (ஆங்கிலத்தில் டாலர் என்று சொல்வார்களே) மார்பில் மின்னும்படி ஒரு மாலை, அதை அவளுக்குக் கொடுக்க வசப்படவேண்டுமோ உலகம். வானயியலை மாற்றியமைத்து எழுதிய சாஸ்திரம் உங்களின் முதல் பாரா கவிதை வரிகள்.

மழையாடை - எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இம்மாதிரி வார்த்தைகள். வானவில்லை சாயப்படுத்தியதென்னவோ பழமைதான், ஆனால் மழையாடைக்கு டையிங் வானவில் எனும்போது ஏனோ பழைய சாயல் தெரியாமலே போகிறது. காதலிக்காக மிகவும் கஷ்டப்படுவீர்கள் போலிருக்கிறதே! செய்யும் நெய்யும் எதுகைகளை அழகாக கையாண்டிருப்பது அழகிய திறமை.

ஆகாயத்தை விரிப்பாக்கி, கிழித்து மேகங்களைச் சிறைபடுத்தி தைத்த தலையணை. நினைக்கவும் வெட்குகிறது எனக்கு, நல்ல கற்பனை உமக்கு. ஒரு ஹைகிளாஸ் குடும்பம் நடத்த ஆயத்தமாகிவிட்டீரோ கவிதை மூலம்.?

அடுத்து குளியல்... எரிமலையை செயற்கையாக குமுறவைத்து (ஜ்ப்பான் காரர்களுக்கு இந்த கவிதை கிடைத்துவிடப்போகிறது!) கடல்நீரை வெந்நீராக்கி, நல்ல கற்பனை. வழியும் நெருப்பை என்று கொள்ளும்போது முட்டுதலில் ஆக்ரோஷமும் ஆக்ரோஷத்தின் காதலும் நிரம்பி இருக்கிறது என்பது புலனாகிறது. எனக்கு இன்னுமொரு சின்ன திருத்தம் ஏற்பட்டிருக்கலாமோ என்ற எண்ணம்.. "எரிமலையை முட்டி" என்று சொல்லியிருக்கலாமோ!!

சூரியக் கதிர்களை மண்ணில் விளையும் மஞ்சலாக்கி, சந்தன மரமாக்கி, பூசிவிடுவது, இது குளியலுக்கு அடுத்து நடப்பது. மேக்கப். கொஞ்சம் காஸ்ட்லியான மேக்கப் தாங்க. உதட்டுச் சாயங்களுக்கு சாயங்காலம் வரைக்கும் காத்திருக்கவேண்டும் போலிருக்கிறதே :D அழகுக் கலைப் பொருட்களை அழகு இயற்கையிடமிருந்து பிடிங்கி வர்ணிப்பது இதமான ஒன்று.

புல்லின் நுனிகளில் அமர்ந்திருக்கும் பனித்துளிகள் பற்றி ஒரு கட்டுரையே போடலாம். எல்லாவற்றிலும் மிகைப் படுத்தியே உவமித்த உங்கள் வரிகள் இங்கே ஏன் புல்நுனிகளில் அமரவைக்கிறது? காற்றை சிறைபடுத்தி, ஆற்றை அதிலிட்டு ஒரு ஏர் கண்டிஷனர் செய்து கொடுத்திருக்கலாமே உங்கள் காதலிக்கு.

குயில்களின் கூவல், பிறந்தநாள் பாடல்.. கவிதைக்குள் கவிதை தாய்க்குருவியின் வாய்பிளந்து குஞ்சு உணவு உண்ணுவதைப் போல.

கவிதை வசப்பட்ட உங்களுக்கு உலகம் வசப்படும் நாள் வெகுதூரமில்லை. உங்கள் கவிதைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரை வழியும் எதுகைகள் இங்கே அவ்வளவாக இல்லை. எனினும் ஒரே பாணி இல்லாமல் மிகச் சாதாரணமாக வீசிய கவிதை என்பதால் வித்தியாசப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது இங்கே.

மாலையிட்டு, ஆடையிட்டு, தூங்கவைத்து, எழுப்ப வைத்து, அலங்காரம் பூசி, பிறந்தநாள் பாடும் ஒருநாள் சம்பவம், மறைமுகமாகவோ நேர்முகமாகவோ விளங்கவைத்து அசரவைக்கிறது.


ஆதி!! குடம் வழிந்து நீர் வெளியேறுவதில்லை ஷீ-நிசிக்கு, ஷீ ஒரு நிரம்பியும் வழியா பெருங்குடம். தள்ளாடுவதுமில்லை, மிகைப்பட்டு வெளியேறுவதுமில்லை.

ஷீயின் கவிதைச் சாயல்கள் பூமகளின் அழகு விமர்சனத்தில்
உதாரணக் குவியல்கள் ஆதியின் விமர்சனத்தில்
விளக்கக் கட்டுரை அமரனின் விமர்சனத்தில்

வாழ்த்துகள் அனைவருக்கும்

அக்னி
23-11-2007, 10:22 AM
இயற்கை விரிப்புக்களில்,
பாவை வைத்து இழைக்கப்பட்டால்,
பார்வைகளும் பாக்களாய்ப் பூக்கும்...

உலகம் ஒரு நாள் ஷீ-நிசி வசப்பட்டால்,
உலகம் அழகால் ஆராதிக்கப்படும்...

ஜடங்களுக்கும் உயிர்தரும் கவிவரிகள்...
பாராட்டுக்கள் பல...


மழையின் தூறலை
தரியினில் வைத்து,
வானவில்லின் சாயங்கள்
ஏழையும் குழைத்து,

தரி - அணிதல்,
தறி - நெசவியந்திரம்

இது மாறி விட்டது. அத்துடன் படமும் புலப்படவில்லை.
கவனிக்க...

பின்னூட்டங்கள் செறிவும் செழுமையும் நிறைவாக...
பாராட்டுக்கள்...

அமரன்
23-11-2007, 11:25 AM
மாலையிட்டு, ஆடையிட்டு, தூங்கவைத்து, எழுப்ப வைத்து, அலங்காரம் பூசி, பிறந்தநாள் பாடும் ஒருநாள் சம்பவம், மறைமுகமாகவோ நேர்முகமாகவோ விளங்கவைத்து அசரவைக்கிறது

ஆகாதவா..! "குறும்பு"தானே....
மூன்றுமுகம் திரைப்படப்பாடல் நினைவுக்கு வருகின்றது.

பென்ஸ்
23-11-2007, 11:35 AM
இப்படி பேசியே கவுத்துவிடுறிங்க....
காதலன் கையில் உலகம் ஒரு நாள் வசப்பட்டால் இப்படிதான், தேவையில்லாமல் மண்ணை பிசைந்து மடியில் வைத்து... "அட்ரா ராமா அட்ரா " என்று குரங்கு கூத்து எல்லாம் அடித்து ... எல்லாம் அவளது ஒரு கடைக்கண் பார்வைக்காக...
மனறத்தில் ஆரோக்கியமான விமர்சணக்கள் அதிகமாகி வருவது சந்தோசமாக இருக்கிறது.... (அதுலையும் ஷீ கவிதைனா, ஆதவா எங்கிருந்துதான் வருவானோ??)

அக்னி
23-11-2007, 11:48 AM
(அதுலையும் ஷீ கவிதைனா, ஆதவா எங்கிருந்துதான் வருவானோ??)
அதானே... கேளுங்க அண்ணா... நல்லா கேளுங்க...

ஷீ-நிசி
26-11-2007, 03:39 AM
கவிதைக்கு பொய் அழகு - நிதர்சனம்..

கடல்நீரை -
குடிநீராக்குது விஞ்ஞானம்
குளிநீராக்குது உம் கவிஞானம்

நீங்கள் சொல்வது சரிதான்
பெண்கள் அலங்காரத்துக்கு மட்டுமல்ல
குளிக்கவும் நேரம் நீட்டுவோர்தான் :lachen001:

-ஆதி

புலப்படுகிறது உம் கவிஞானம் நண்பரே! அருமை....

கடல்நீரை -
குடிநீராக்குது விஞ்ஞானம்
குளிநீராக்குது உம் கவிஞானம்

ஷீ-நிசி
26-11-2007, 03:40 AM
மிக அழகிய விமர்சனம்... நன்றி ஆதவா...


கவிதை வசப்பட்ட உங்களுக்கு உலகம் வசப்படும் நாள் வெகுதூரமில்லை. உங்கள் கவிதைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரை வழியும் எதுகைகள் இங்கே அவ்வளவாக இல்லை. எனினும் ஒரே பாணி இல்லாமல் மிகச் சாதாரணமாக வீசிய கவிதை என்பதால் வித்தியாசப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது இங்கே.

எதுகைக்கு முக்கியம் கொடுக்காமல். காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டது ஆதவா... அதை தெளிவாக கூறியிருக்கிறாய்:icon_b:

ஷீ-நிசி
26-11-2007, 03:46 AM
தரி - அணிதல்,
தறி - நெசவியந்திரம்

இது மாறி விட்டது. அத்துடன் படமும் புலப்படவில்லை.
கவனிக்க...

பின்னூட்டங்கள் செறிவும் செழுமையும் நிறைவாக...
பாராட்டுக்கள்...


நன்றி அக்னி! தறி என்பதே சரி...
என் அறிவுக்கு புலப்படாமல் போனது இந்த தறி!!

மாற்றிவிடுகிறேன்... நன்றி அக்னி!

ஷீ-நிசி
26-11-2007, 03:47 AM
(அதுலையும் ஷீ கவிதைனா, ஆதவா எங்கிருந்துதான் வருவானோ??)

நன்றி பென்ஸ்....

அப்படியாவது வரட்டுமேங்க ஆதவா....:lachen001: