PDA

View Full Version : வானவில் காலம்..(அத்தியாயம் 2) தொடர்கதை..rambal
24-06-2003, 05:10 PM
வானவில் காலம்..(அத்தியாயம் 2) தொடர்கதை..


தூக்கம் அற்ற
கனவுகளில் நிலா வந்து குடியேற
துண்டில் போட்டு
நட்சத்திரம் பிடிக்க வைப்பது
வானவில் காலம்...


"கௌரி. கௌரி.."
அவள் பள்ளிக்கூடப் பை தாறுமாறாக சிதறியிருந்தது. கௌரி அதிர்சியில் மயக்கமாக விழுந்து கிடந்தாள். ஆங்காங்கு சிராய்த்து
ரத்தத்துளிகள் பூத்திருந்தது. அவளை கொத்தாக அனந்து தூக்க அதற்குள் பைக் ஓட்டிவந்தவன் ஒரு ஆட்டோவை மடக்கி
நிறுத்தியிருந்தான். ஆட்டோவில் அனந்து கௌரியை தூக்கிக் கொண்டு ஏறினான்.
ஆட்டோ ஜவஹர் ஹாஸ்பிட்டலுக்குள் சென்றது. பின்னாலேயே வந்த பைக் ஓட்டிவந்தவன் ஆட்டோவிற்கு செட்டில் செய்துவிட
அனந்து கௌரியை அட்மிட் செய்தான். பின்பு வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடம் சொல்லி..
அடுத்த அரைமணி நேரத்திற்குள் பத்மநாபன் ஒரு புறம் இருந்த வர மீரு வர அவர்களிடத்தில் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.
இதற்கிடையில் பைக் ஓட்டி வந்தவன் காணாமல் போயிருந்தான்.
ஒரு மணி நேரத்தில் டாக்டர் வந்து ஒன்றும் இல்லை சின்ன அதிர்சி அதனால் ஏற்பட்ட மயக்கம் இரண்டு மணி நேரத்துல முழிச்சுக்குவா என்று சொன்ன பிறகுதான் அவர்களிடம் இருந்த பதட்டம் மறைந்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
எதற்கும் இன்று ஒரு நாள் அவள் அங்கிருந்து ரெஸ்ட் எடுக்கட்டும் என்று டாக்டர் சொல்ல அனந்துவும் மீருவும் அங்கிருந்து
பார்த்துக் கொள்வதாக சொன்னவுடன் பத்மநாபன் அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.
அவர் கிளம்பிய அரை மணி நேரத்திற்கெல்லாம் ஒரு அம்பாசிடர் வந்து நின்றது. அதில் இருந்து நான்கு பெண்கள் மற்றும்
சில குழந்தைகளுடன் ஒரு பட்டாளமே இறங்கியது. அது கௌரியை பைக்கால் இடித்தவனின் குடும்பம்.
மீருவிற்கு ஒன்றும் புரியவில்லை. அந்த பைக் காரனை பார்த்ததும் அனந்து
"இவன்தாம்மா நம்ம கௌரி மேல வண்டியை ஏத்தினவன்" என்று ஏறக்குறைய கத்தினான்.
"தப்பு எங்க குட்டி மேலதான். மன்னிச்சுக்குங்க" அந்த நால்வர் அணியில் இருந்து ஒரு பெண்மணி பேச மீரு, அனந்துவை அடக்கினாள்.
"பாப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னார்?" இது இன்னொரு பெண்மணி.
"பயப்படற மாதிரி ஒன்னும் இல்லை. இன்னிக்கு ஒரு நாள் வச்சு பார்த்துட்டு சாயங்காலமா வீட்டுக்கு அழைச்சுட்டு போகச்சொன்னார்."
"எண்ட குருவாயூரப்பா.. இப்பதான் நிம்மதி எனக்கு.." என மூன்றாவதாக ஒருவள் வேண்ட..
இப்போது மீரு அவர்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.

பைக் ஓட்டி நம்ம கௌரி மேல இடிச்சானே அவன் பெயர் கேசவன். படிப்பது பி.காம். பர்ஸ்ட் இயர். அமெரிக்கன் காலேஜ். அவனுடன் வந்த நால்வரும் அவனுடைய அக்காக்கள். இவர்கள் அனைவருக்கும் முன்பாக ஒரு அண்ணன் உண்டு. அவர் பெயர் சுந்தரேசன் நாயர். எல்லா அக்காள்களுக்கும் திருமணம் முடிந்து அடுத்த அடுத்த ஏரியாவிலும் சிலர் அதே வீட்டிலும் வாழும் ஒரு கூட்டுக் குடும்பம் அவனுடையது. அவன்தான் கடைக்குட்டி என்பதால் அவனுடைய செல்லப் பெயர் குட்டி. அவனுடைய அம்மாவும் அப்பாவும் என்றோ தவறிப் போயிருந்தார்கள். அதாவது குட்டிக்கு ஒரு பத்து வயது இருக்கும் போது. அவனுடைய பெரிய அண்ணனுடைய தற்போதைய வயது 45. குட்டியின் வீட்டில் ஒரு வயது குழந்தை முதல் 50 வயது வரை வரிசை கிரகமாக மனிதர்களை பார்க்கலாம். அந்த வீட்டிற்குள் நுழைந்தால் ஏதோ ஒரு ஊருக்குள் நுழைந்தது போல் இருக்கும். இவர்கள் பூர்வீகம் கேரளாவில் இருக்கும் பாலக்காட்டிற்கு அருகில் வடகரை.
ஆனால், இவர்கள் மதுரைக்கு வந்து செட்டிலாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பீ.பீ. குளத்தில் இவர்களுக்கு என்று ஒரு சைவ ஹோட்டல் இருக்கிறது. இன்னும் அவர்கள் சொந்தக்கதை எல்லாவற்றயும் சொல்லிக் கொண்டே போனார்கள்.

இவ்வளவு கதையையும் சொல்லி முடிப்பதற்குள் மணி ஒன்றாகி இருந்தது. குட்டியின் ஹோட்டலில் இருந்து ஒரு மிகப்பெரிய ஆள் உயர டிபன் கேரியரில் மதிய உணவு வந்து இறங்கியது. அவர்கள் பழகிய விதம் கௌரி மேல் காட்டிய கரிசனம் எல்லாம் சேர்ந்து மீரு
அவளறியாமலேயே அவர்களுடன் ஒன்றிப் போயிருந்தாள். இந்த சமயத்தில்தான் கௌரி கண்முழித்து விட்டதாக அனந்து அறிவிக்க அவளை காண அந்தக் கூட்டம் கிளம்பிப் போனது. இத்தனை பேரையும் ஒரு சேர கண்டவள் ஒரு நொடி திகைத்துவிட்டாள்.

மீருதான் ஆரம்பித்தாள்.
"உன்னை இடிச்சானே இந்தப் பையன். இவனோடு குடும்பண்டா கண்ணா.."
"இப்ப எப்படிம்மா இருக்கு?" இது குட்டியின் மூத்த அக்கா..
"பரவாயில்லை." என்று ஒருவாறாக திக்கித்திணறி கூறினாள்.
ஒரு பத்து நிமிடம் சம்பிரதாய் விசாரணைகளுக்குப் பிறகு
"அப்ப பாப்பா ரெஸ்ட் எடுக்கட்டும். நாங்க வற்றோம்.. அப்புறமா ஒரு நாள் வீட்டுக்கு வாங்க"
கௌரியின் வீட்டு டெலிபோன் நம்பரை வாங்கிக் கொண்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அன்று மாலை பத்மநாபன் வந்து பில் செட்டில் பண்ணப் போகும் போதுதான் அவர்களுக்கே தெரிந்தது குட்டியின் குடும்பத்தினர்
அவளுக்கான பில் அத்தனையையும் செட்டில் செய்து விட்டுப் போனது பற்றி.
அதன்பின் கௌரியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கொண்டு போகும் வழியில் மீரு குட்டிவீட்டு புராணம் பாடினாள்.
இனி சைக்கிள் பயணம் வேண்டாம் என்று பத்மநாபன் தடை விதித்தார். அதன் பின் அனந்துவும் கௌரியும் 11D பஸ்ஸில் பிரயாணம் செய்தார்கள். மாலையும் அதே வண்டிதான். ஓரிரு நாட்களில் எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பியது.
அந்த வார வெள்ளிக்கிழமை குட்டி வீட்டில் இருந்து போன் வந்தது. மாரியம்மன் கோவிலில் கௌரிக்கு மாவிளக்கு எடுப்பதாக
நேந்து கொண்டதாக சொல்லப்பட்டதற்கு இணங்கி பதம்நாபன் அண்ட் கோ டி.ஆர்.ஓ மாரியம்மன் கோவிலுக்கு போனது.
அங்கு சுந்தரேசன் மற்றும் அவரது மொத்த படையும் வந்து இறங்கி ஆயத்தவேலைகளை கவனித்துக் கொண்டிருந்தது.
பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின்னர் மாவிளக்கு முடிந்து சுந்தரேசன் தான் ஆரம்பித்தார்.

"இந்தப் பய கடைசிங்கிறதால ரொம்ப செல்லம். அதுவும் ஒன்னுக்கு நாலு அக்கா. அதான் அப்படி. நம்ம பாப்பா மேல வண்டியை
ஏத்தினதுக்கப்புறம் வண்டியத் தொடக்கூடாதுன்னுட்டேன்."
"வயசுப் பசங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க.. இதுக்கெல்லாமா வண்டியை ஓட்டக்கூடாதுன்னு சொல்றது?"

இவர்கள் பேசிக் கொண்டிருக்க ஒரு ஜோடி கண்கள் மட்டும் கௌரியை ஆக்ரமித்திருந்தது. ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பி அவரவர் வீட்டிற்கு கிளம்பினர். அந்த சமயத்தில் கேசவனின் கடைசி அக்கா கௌரி கையில் ஒரு கிரீட்டிங் கார்டை
யாருக்கும் தெரியாமல் கொடுத்தாள். வீடு வந்து சேர்ந்ததும் சிறிது நேரத்தில் அனந்து கௌரி ரூமிற்குள் நுழைந்தான்.

"ஏய் கௌரி கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்க.."
"என்னடா.. என்னென்னவோ சொல்ற?"
"அனேகமா ஒருத்தன் உன்னைய சைட் அடிக்கிறான்..."
"யாரு?"
"வேற யாரு.. அந்த கேசவன்தான்..."
"அவனா?"
"ஆமா. அந்த கேசவன் உன்னைய பார்த்த பார்வை இருக்கே.. மவனே என் கையில் ஒரு நாள் சிக்காமலா போயிடுவான்...
நீ எதுக்கும் அவன்கிட்ட இருந்து எதுனா இன்வைட் வந்ததுனா ரெஸ்பாண்ட் பண்ணாத.. மித்ததை நான் பாத்துக்கிறேன்."

அவன் அங்கிருந்து அவன் அறைக்கு போனான்.. அப்போதுதான் கௌரிக்கு கேசவனின் அக்கா கொடுத்த கிரீட்டிங்கார்ட்
நியாபகத்திற்கு வந்தது. அதை பிரித்தாள்.
அதில் ஒரு சிறுமி அமர்ந்திருக்க அவள் அருகில் குரங்கு ஒன்று தோப்புக்கரணம்
போட்டுக் கொண்டே S. O. R. R. Y. என்று எழுதியிருந்தது.. அதைக்கண்டதும் சிரித்துவிட்டாள்.

அனந்துவின் எச்சரிக்கை காதில் ஒலிக்க அவன் கொடுத்த கிரீட்டிங்கார்டை ரசித்தவண்ணம் அவளறியாமலேயே
கேசவனை பற்றி நினைக்க ஆரம்பித்தாள்.

அன்று இரவு.
கௌரி அவள் ரூமில் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். கண்ணை மூடினால் அவன் முகம்தான் அவளுக்கு தெரிந்தது.
ஏதோ ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் பறந்தன. மினிமினிப் பூச்சிகள் கண்ணடித்தன. தொட்டியில் இருந்த மீன் தரையில்
விழுந்தது மாதிரியான ஒரு துடிப்பு. இவைகள் எல்லாம் ஒரு பக்கம் சந்தோசம் என்றாலும் மறு பக்கம் அப்பா அம்மாவுக்கு
தெரிஞ்சா தப்பாயிடுமோங்கிற பயம். இப்படி ஒரு கலவையான மனநிலையில் எப்போது தூங்கினாள் எனத் தெரியாமல் தூங்கிப் போனாள்.

இப்படியாக கௌரி வாழ்வில் ஒரு புயல் மையம் கொள்ள ஆரம்பித்துவிட்டது.

(தொடரும்)

பாரதி
24-06-2003, 06:03 PM
நன்றாக போகிறது கதை. தொடரட்டும். வளரட்டும்.

இளசு
24-06-2003, 07:34 PM
தெளிவா நீரோடை போல கதை சொல்ற திறமை...
எல்லாருக்கும் வாய்ச்சுடாது...
ராமுக்கு இருக்கு, வாழ்த்துகிறேன் ராம்..

சுகமான கனவுகள்....
வளரட்டும்....
யதார்த்த இடிகள் விழும்வரைக்கும்...

karikaalan
25-06-2003, 02:41 PM
ராம்பால்ஜி!

நன்றாகவே கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

சுஜாதா
26-06-2003, 02:30 PM
முதல் பாகம் படித்தபொழுது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை..
நம்ம ஏரியா பெயர் வந்தாலும் ஒரே குழப்பமா இருந்தது..
இரண்டாவது பாகம் படித்த பிறகுதான்..
இது நம்ம ஏரியாவுல ரொம்ப பிரபலமான கதை..
ஆனால், சொல்லியிருக்கும் விதம் அருமை..
ராம்பால் என்று ஒரு கதைசொல்லி..
வேண்டாமே.. (சுஜாதாவை இந்த தலைப்புலதான் கடந்த இரண்டு வாரங்களாக திண்ணையில்
வாறு வாறுன்னு வாறிகிட்டு இருக்காங்க..)
எப்படி பாராட்டுவது என்று தெரியாமல்...

(பின்குறிப்பு: இது லூலூவோட கதைதான.. என்னோட ஒன்சைடு லவ்வெல்லாம் இந்தக் கதையில் வருமா?)

pulikesi
12-05-2008, 09:01 AM
சவ்வு மிட்டாய் போல் கதை இழுவையா இருக்கு.