PDA

View Full Version : கலில் ஜிப்ரான்



ஆதி
20-11-2007, 04:35 PM
6-01-1883ல் லெபனானில் பிறந்தவர் கலில் ஜிப்ரான். இவரால் லெபனான் நாடே பெருமைக் கொண்டது. இவர் இலக்கியத்தின் எல்லா சிகரங்களையும் தொட்டவர். வள்ளுவனின் வார்த்தைப் போல "தனக்கு உவமை இல்லாதவர் ஜிப்ரான்". இந்த நூற்றாண்டுவரை இவர் பாதிப்புக்கு உள்ளாகாத கவிஞர்களே இல்லை என்பதே நிதர்சனம்.

கவிஞராய், கதையாசிரியராய், கட்டுரையாசிரியராய், சிற்பியாய், ஓவியராய், நாவலாசிரியராய், நாடகாசிரியராய்ப் பன்முக பரிணாமம் கொண்டவர் ஜிப்ரான்.மாகஞானி ஓஷொவை மிகவும் கவர்ந்தவர் ஜிப்ரான்..

இவருடைய படைப்புகள் யாவும் பெருப்புகழ் பெற்றவை..

நீங்களும் இவரைப் பற்றி தாங்கள் அறிந்தவையை இங்கே இடுங்கள்..

இவரின் ஆற்ற ஒண்ணா துயிர் நிறைந்த முறிந்த சிறகுகள் காதல் ஓவியமாகும்..

தீர்க்கதரிசி, மணலும் நுரையும், சிரிப்பும் கண்ணீரும், ஞானிகளின் தோட்டம், மூன்னோடி, ஏசு மனித மகன் இன்னும் இன்னும் பல நூல்கள் உலக புகழ் பெற்றவை..

ஜிப்ரானின் படைப்புகளை, அவர் பற்றிய குறிப்புகளை அவரைப்பற்றிய எதையும் இங்கே இடுங்கள். நானும் அவரின் படைப்பை, நான் படித்ததை, மொழிப்பெயர்த்ததை இத்திரியில் நிரப்புகிறேன்.

நன்றி, நீங்களும் பங்களிப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் ஆதி

மாதவர்
20-11-2007, 04:53 PM
நல்ல முயற்சி

அமரன்
20-11-2007, 05:04 PM
நல்ல முயற்சி ஆதி. மன்றத்தில் உங்கள் ஈடுபாடு மகிழ்வூட்டுகின்றது. தமிழ்மீதான பற்று, தமிழ் வளம், கவிதைகள்மீதான காதல் என்பன மெய்சிலிர்க்க வைக்கின்றன. இங்கே அணிலாக எனது பங்களிப்பு.

என் பழைய மொழி-

நான் பிறந்து
மூன்று நாட்கள் ஆகியிருந்தன..
நான் தொட்டிலில் இருந்தபடி
என் புதிய உலகத்தை
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் அம்மா,
செவிலித் தாயிடம் கேட்டாள்..
"எப்படி இருக்கிறான் என் மகன்..??"

அவள் சொன்னாள்..
"ரொம்ப நன்றாக இருக்கிறான்..
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்..
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான்
இதுவரை கண்டதேயில்லை.."

எனக்குக் கோபம் வந்தது..
நான் கத்தினேன்..
"அம்மா.. அது உண்மையில்லை..
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது..
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது..
அவள் மார்பகங்களின் வாசம் கூட
எனக்குப் பிடிக்கவேயில்லை..
நான் மகிழ்ச்சியாய் இல்லை..
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!!"

ஆனால் என் அம்மாவுக்கோ,
என் செவிலித்தாய்க்கோ
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை..
ஏனென்றால் நான் பேசிய மொழி,
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது..
இந்தப் புதிய உலகத்தில்
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை..

இருபத்தியோரு நாட்கள் கடந்ததும்
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது..
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி
என் தாயிடம்,
"நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே..
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.."
என்றார்..
நான் ஆச்சர்யத்துடன் அவரிடம்,
"அப்படியென்றால்
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய்
துக்கப்பட வேண்டுமே..
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!" என்றேன்..
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை..

ஏழு மாதங்கள் ஆன பிறகு,
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து
என்னைப் பார்த்து என் தாயிடம்,
"உங்கள் மகன்
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்..
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன.." என்றான்..
நான் கோபத்துடன்,
"தலைவனெல்லாம் க முடியாது..
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்..
வேறு எதுவும் ஆக மாட்டேன்.." என்று கூக்குரலிட்டேன்..
ஆனால், அந்த வயதிலும்
என் மொழி யாருக்கும் புரியவில்லை..

இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள்
கழிந்த பிறகு
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி
எல்லோரும் இறந்து போய் விட்டனர்..
ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்..
ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்..
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது
அவன் சொன்னான்..
"நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று
எனக்கு அப்போதே தெரியும்..
நீ குழந்தையாய் இருந்த போதே
நான் கணித்துச் சொன்னேன்.."
என்றான்..

நான் அவன் சொன்னதை நம்பினேன்..
ஏனென்றால்,
இப்போது
என் பழைய மொழியை
நானே மறந்து போயிருந்தேன்..!!

மொழிபெயர்ப்பு மீனாட்சி சங்கர்

ஆதி
20-11-2007, 05:15 PM
அமரன் அழகிய பதிவு.. ஜிப்ரனின் வார்த்தைகள் இறக்காதவை என்பதற்கு இந்த கவிதையே ஒரு சான்று..

நீங்கள் மற்றும் பிற மன்ற உறவுகள் இருக்கிற துணிவிலேயே இந்த முயற்சிகளில் இறங்குகிறேன்..

எல்லீருக்கும் முதலாய் எப்பொழுதும் வரும் உங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் நன்றிகள்..

-ஆதி

தங்கவேல்
20-11-2007, 10:59 PM
கவிதை என்றால் இது கவிதை..... கலில் ஜிப்ரான் மனதை மயக்கும் வார்த்தகளை கொண்டு,வாழ்வியலை பிசைந்து தரும் உன்னதமான வார்த்தைகளின் சிற்பி.

இதயம்
21-11-2007, 04:17 AM
பொன்மணிப் புதையல் - கலீல் ஜிப்ரான்

வலிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென பிரிகிறேன்; பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன். அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்; என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் காதலின் விதிகளை ஓதுகிறேன். அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி பல முறை நான் நடனமாடியிருக்கிறேன். அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன். அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன். அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் காதலியாயிற்றே? காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

இதயம்
21-11-2007, 04:18 AM
என் ஆழ்மனத்திலிருந்து - கலீல் ஜிப்ரான்

என் ஆழ்மனத்திலிருந்து
ஒரு பறவை எழுந்து
வானோக்கிப் பறந்தது.

உயர உயரப் பறக்கப் பறக்க
அது மேலும் மேலும் வளர்ந்த்து
முதலில் அது
ஒரு குருவியாக.. பின்
ஒரு வானம்பாடியாக..பின்
ஒரு ககழுகாக..பின்
ஒரு பெரும் பனி மேகமாக...
மாறி மாறி பின்
விண்மீன்கள் மின்னும்
சொர்க்கத்தை நிரப்பியது.

என் மனத்திருந்து
ஒரு பறவை
வானோக்கிப் பறந்தது
அது பறக்க.. பறக்க..
வலிமையிலும் உருவத்திலும்
மேலும் வளர்ந்தது
இன்னும் என் மனதை விட்டு
விலகவில்லை.

என் நம்பிக்கையே!
என் பழக்கப்படுத்தா அறிவே!
உன் உயரத்திற்கு நான்
எவ்வாறு பறப்பேன்?

வானில் தீட்டப்பட்டுள்ள
மனிதனின் பெரும் சுயத்தை
உன்னுடன் எவ்வாறு பார்ப்பேன்?
என்னுள் இந்தக் கடலை
ஒரு பனியாக
எவ்வாறு மாற்றுவேன்.?

அளக்க முடியா வண்ணம்
ஆகாய வெளியில் உன்னுடன்
எவ்வாறு நகர்வேன்?

ஆலயத்தினுள்ளேயே
இருக்கும் ஒரு சிறைக்கைதி
அதன் தங்க முகடுகளை
எவ்வாறு உற்று நோக்க முடியும்?

ஒரு கனியின்
இதயத்தை நீட்டி
அந்தக் கனியினையே மூட
எவ்வாறு முடியும்?

என் நம்பிக்கையே!
வெள்ளிக்கம்பிகள்
வலுவான மரத்தடுப்புகள் பின்
சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டிருக்கும் நான்
உன்னுடன் பறக்க முடியாது.

ஆனாலும் என்
இதயத்திலிருந்து நீ
வானோக்கிப் பறக்கிறாய்.
என் இதயம் உன்னைப்
பிடித்து வைத்திருக்கிறது.
நான் மனநிறைவுடன் இருப்பேன்!!

இதயம்
21-11-2007, 04:22 AM
பொன்மொழிகள் - கலீல் ஜிப்ரான்

*நேசம்*
இதயத்தின் அன்பு \"சிடார்\" மரக்கிளைகள் போல் பலவாகப் பிரிந்து பரவுகிறது.
அந்த மரத்தின் ஒரு பெரிய கிளை முறிந்து வீழுமாயின் அதன் பலம் குறையும்;
வருந்தும்;ஆனால் இறந்துவிடுவதில்லை.அதனுடைய உயிர்ச்சத்து அனைத்தையும் மீதமுள்ள
கிளைகளுக்குக் கொடுக்கும்; ஏனெனில் அந்த கிளைகள் வளர்ந்து வெற்றிடங்களை
நிரப்பும்.
(முறிந்த சிறகுகள்)


*மலர்கள்...*
சூரியனின் ஆசையும் இயற்கையின் காதலும் பெற்ற குழந்தைகள்தான் பூந்தோட்டப்
பூக்கள்; மக்களின் குழந்தைகள் யார் தெரியுமா? அன்பு,காதல்,தயை,இரக்கம் இவற்றின்
குழந்தைகள்தான்.
(முறிந்த சிறகுகள்)


*கலை...*
கலை என்பது தெரிந்ததைக் கொண்டு தெரியாததை அறிய, எடுத்து வைக்கும் முதல் அடி.
(ஆத்ம தரிசனம்)


*ஏழை-எளியோர்...*
எல்லா ஏழைகளும் இகழப்படுவோரோ, வெறுக்கப்படுவோர்களோ இல்லை. உலகின் செல்வம்
எல்லாம், ஒரு ரொட்டியிலும் மேலாடையிலுமே இருக்கின்றது.
(ஆத்மாவின் கண்ணாடி)


*தனிமை...*
தனிமைக்கு மென்மையான வளவளப்பான கைகள் இருக்கும்; ஆனால் அதன் வலிமைமிக்க
விரல்களால்
இருதயத்தை கெட்டியாய் அழுத்திப் பிடித்து துக்கத்தால் வருந்தி அழும்வரை அமுக்கி
விடும். தனிமை,
துயரத்தின் துணைவன்; ஆத்மாவின் உயர்விற்கு உற்ற நண்பன்.
(முறிந்த சிறகுகள்)

இதயம்
21-11-2007, 04:25 AM
கலீல் ஜிப்ரான் தனது இளம்வயதில் மலையில் இருந்து கீழே விழுந்து விட்டதால் அவருடைய இடது கை முறிந்துவிட்டது. லெபலான் தேசத்தில் பிறந்த ஜிப்ரான் (1883), தனது 12 வயதில் குடும்ப கஷ்டம் காரணமாக நியூயார்க்கிற்கு புலம் பெயர்ந்தார். இவர் கவிஞர் மற்றும் சிறந்த ஓவியராகத் திகழ்ந்தார். இவருடைய பெரும்பாலான ஓவியங்களில், நிர்வாணமான பெண்கள் நடனமாடிக் கொண்டிருப்பார்கள். இவர் தனது உள்மனதை அகழ்வாராய்ச்சி செய்து எழுதும் கவிதைகள் ஜென்
சிந்தனைகள் வெளிப்படும்

ஜிப்ரான் எழுதிய மணலும் நுரையும் (Sand and Foam ) என்ற தொகுப்பிலிருந்து
சில கவிதைகளை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன் ..

0

Only once have I been made mute. It was when a man asked me, \\\"Who are you?\\\"
ஒரே ஒரு முறை நான் ஊமையாக நின்றேன் \\\" நீ யார் ? என்று ஒருவன் என்னைக்
கேட்ட போது ..

0

Remembrance is a form of meeting.
நினைவுகூர்தலும் ஒருவகையில் சந்திப்பது போலத் தான் ..

0

The most pitiful among men is he who turns his dreams into silver and gold.
தன் கனவுகளைப் பொன்னாகவும் வெள்ளியாகவும் மாற்றிப் பார்ப்பவன் மிகவும்
பரிதாபத்துக்குரியவன்

0

A woman may veil her face with a smile.
பெண் , புன்னகை என்னும் முகமூடியால் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள்

0

Trees are poems that the earth writes upon the sky. We fell them down
and turn them into paper that we may record our emptiness.
பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள் , ஆனால் அவற்றை
நாம் வெட்டிச் சாய்த்து காகிதமாக்கி , நம் வெறுமையை அதில் எழுதித் தீர்க்கிறோம்

0

Poetry is not an opinion expressed. It is a song that rises from a
bleeding wound or a smiling mouth.
கவிதை என்பது கருத்தல்ல, அது குருதி வழியும் காயத்திலிருந்தோ புன்னகை
புரியும் உதடுகளிலிருந்தோ உதயமாகிறது .

இதயம்
21-11-2007, 04:26 AM
0

A thousand years ago my neighbor said to me, \"I hate life, for it is
naught but a thing of pain.\" And yesterday I passed by a cemetery and
saw life dancing upon his grave.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என் அண்டைவீட்டுக்காரன் என்னிடம் சொன்னான் ..
\" நான் இந்த வாழ்க்கையை வெறுக்கிறேன்....இது வலி மிகுந்தது \"
நேற்று மயானம் வழியே சென்ற பொழுது கவனித்தேன்..
அந்த அண்டைவீட்டுக்காரனின் சமாதி மீது வாழ்க்கை நடனமாடிக்கொண்டிருந்தது.

0

If your heart is a volcano how shall you expect flowers to bloom in your hands?
உன் உள்ளம் எரிமலையாகப் பொங்கினால் உன் உள்ளங்கையில்
எப்படி மலர்கள் பூக்கும் ?

0

A root is a flower that disdains fame.
வேர் என்பது புகழை அலட்சியம் செய்யும் ஒரு மலர் ஆகும்

0

Many a woman borrows a man\'s heart; very few could possess it.
அநேக பெண்கள் ஆணின் இதயத்தை இரவலாகப் பெறுகிறார்கள்
ஆனால் ஒரு சிலரே அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்

0

Only the dumb envy the talkative.
வாயாடியைப் பார்த்து ஊமை மட்டுமே பொறாமைப்படுவான்

0

Lovers embrace that which is between them rather than each other.
காதலர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் பொழுது
தங்களுக்கு இடைப்பட்ட காதலைத் தான் தழுவிக்கொள்கிறார்கள்..
தங்களை அல்ல.....

0

When a man\'s hand touches the hand of a woman they both touch the
heart of eternity.
ஒர் ஆண் , ஒரு பெண்ணின் கையை ஸ்பரிசிக்கும் பொழுது அவர்கள் இருவரும்
அழியாமையின் இதயத்தைத் தொடுகிறார்கள்.

இதயம்
21-11-2007, 04:28 AM
0
ஒரு எண்ணுடன்
வட்ட வடிவமான பூஜ்யத்தைச் சேர்த்தால்
அதன் மதிப்பு பத்து மடங்கு கூடுகிறது

அடிப்பெண்ணே ..
வட்டவடிவமான பொட்டை
உன் நெற்றியில் இடும் பொழுது
நீ எத்தனை மடங்கு அழகாகிறாய் என்பதை
என்னால் கணிக்கமுடியவில்லையே !
0


If it were not for your guests all houses would be graves.
விருந்தினர் வராத வீடு சுடுகாடு

0

We often sing lullabies to our children that we ourselves may sleep.
நாம் பெரும்பாலும் குழந்தைகளுக்காகத் தாலாட்டுப்பாடுவது
நாம் தூங்குவதற்காகத்தான்

0

Even the hands that make crowns of thorns are better than idle hands.
சோம்பியிருக்கும் கரங்களை விட முட்கிரீடங்கள் செய்யும் கரங்கள் எவ்வளவோ மேல்
0

இதயம்
21-11-2007, 04:30 AM
தூங்கிக் கொண்டிருக்கும் அடிமையை ஒருபோதும் எழுப்பாதீர்கள். ஏன் என்றால் அவர்கள் சுதந்திரத்தை பற்றிய கனவு கண்டு கொண்டிருக்க கூடும்.


அவளுடைய அழகிய மென்மையான கைவிரல்களால் கோதப்படும் என் தலைமுடிக்கு,
சூட்டப்படும் வேறெந்த மகுடத்தையும் நான் ஏற்கத் தயாராயில்லை\"

இதயம்
21-11-2007, 04:33 AM
பால் வெள்ளைக் காகிதம் - குட்டிக்கதை (கலீல் ஜிப்ரான்)

காலைப் பனிப்போல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் \'நான் ரொம்ப சுத்தமானவனாக்கும்\' என்று அலட்டிக்கொண்டது.

\'நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன். காலம் முழுவதும், நான் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாக்கினாலும் பரவாயில்லை, பொறுத்துக் கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கமாட்டேன், தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது\'.

இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக் கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும், கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்.

- கலீல் ஜிப்ரான் - மிட்டாய் கதைகளிலிருந்து

ஆதி
21-11-2007, 04:35 AM
ஜிப்ரானின் பன்மணி கலஞ்சியத்தையே அள்ளி கொணர்ந்து கொட்டி விட்டீர்கள் இங்கே..
கொட்டி கிடக்கிற
எல்லா மலருமே
எழிலானதுதான்..

பல கோடி நன்றிகள்.. இதயமவர்கட்கு..

-ஆதி

இதயம்
21-11-2007, 04:49 AM
இறைத்தூதர் - (கலீல் ஜிப்ரான்)

தானொரு விடிவெள்ளியாய் அவதரித்த
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அல்முஸ்தபா
ஆர்பயிஸ் நகரில் பன்னிரண்டாண்டு
காலம் காத்திருந்தார். தான் பிறந்த
தீவிற்கு அழைத்துச் செல்ல வரும் தனது
கலத்திற்காக

பன்னிரண்டாம் ஆண்டின்
அறுவடை மாதமான இதூல் மாதத்தின்
ஏழாவது நாள் நகர மதில்களால்
சூழப்படாத குன்றின் மீது ஏறி கடற்புறம்
உற்றுநோக்கி பனிப்படலத்துக்கப்பால்
தனது கலம் வருவதை
கண்ணுற்றார்.

பின்னர் அவரது இதயத்தின் கதவுகள் பரக்க திறந்து
அவரது மகிழ்ச்சி கடல் மீது நெடுந்தூரம் வெள்ளமெனப் பாய்ந்தது
அவர் தனது கண்களை மூடி தனது
ஆத்மாவின் மொனத்தில் வழிபாடு செய்தார்

ஆனால் அவர் குன்றிலிருந்து இறங்கியதும் ஒரு
சோகம் அவர் மீது கவிந்தது
அவர் தன் நெஞ்சுக்குள் நினைத்தார் :
நான் துயரமின்றி எப்படி அமைதிக்குள் செல்ல முடியும்
ஆன்மாவின் ஒரு காயமும் இன்றி இந்த நகரத்தை
விட்டு அகல முடியுமா ?
இந்த சுவர்களுக்கிடையே நான் வேதனையில்
கழித்த நாட்கள் நெடியவை
தனிமையில் கழித்த இரவுகள் நெடியவை
அன்றியும் எவனொருவன்
தனது வேதனையிலிருந்தும் தனிமையிலிருந்தும்
வருத்தமற்று பிரிந்து செல்ல முடியும் ?

இந்த தெருக்களில் என் ஆவியின்
எத்தனை துகள்களை இறைத்திருக்கிறேன்
மேலும்
இக்குன்றுகளில் அம்மணமாக நடக்கின்ற பிரியமான
குழந்தைகள் எண்ணற்றவை
என்னால் ஒரு சுமையும் ஒரு வலியும் இன்றி
அவர்களைப் பிரிந்து செல்ல இயலாது.

இன்று நான் கழற்றி எறியும் ஒரு ஆடை அல்ல அது
ஆனால் என் கையாலேயே நான் உரித்து எடுக்கும்
எனது தோல் அது.

என் பின்னால் விட்டுச் செல்லும் ஒரு எண்ணமும்
அல்ல அது
ஆனால் பசியாலும் தாகத்தாலும் இனிப்பூட்டப்பட்ட
ஒரு இதயம்

இருந்தபோதிலும் என்னால்
இனியும் தாமதிக்க முடியாது

எல்லாவற்றையும் தனக்குள் அழைக்கும் கடல்
என்னை அழைக்கிறது.
நான் கப்பலேற வேண்டும்.

இரவுகளில் காலம் எறிந்தபோதிலும்
தங்குவதென்பது உறைந்துபோவதாகும்
உறைந்து ஒரு அச்சுக்குள் படிகமாதல் ஆகும்.

இங்கிருக்கும் அனைத்தையும் நான்
மகிழ்ச்சியோடு எடுத்துச் செல்வேன்
ஆனால் எப்படி முடியும் ?
தனக்கு சிறகுகள் கொடுத்த நாக்கையும் உதடுகளையும்
ஒரு குரலால் சுமந்து செல்ல முடியாது
தன்னந்தனியாக அது
தன் வான்வெளியைக் கண்டாக வேண்டும்.

தன்னந்தனியாகவும்
தனது கூடு இல்லாமலும்
சூரியனுக்கு குறுக்காக
பறந்து செல்லும் கழுகு
இப்போது
குன்றின் அடிவாரத்தை அவர் அடைந்தபோது
கடற்புறம் திரும்பி மீண்டும் நோக்கினார்.
தனது கலம் துறையை நோக்கி
வருவதைக் கண்ணுற்றார்.

கலத்தின் முகத்தில் கடலோடிகள்
தனது சொந்த நிலத்தின் மனிதர்கள்.

அவரது ஆன்மா அவர்களை நோக்கி அழுதது
அவர் சொன்னார் :
எனது பழம்பெரும் தாயின் மக்களே
அலைகளின் மீது மிதந்து செல்பவர்களே
எத்தனை முறை எனது கனாக்களில்
நீங்கள் கலம் செலுத்தி இருக்கிறீர்கள்
இப்பொழுதோ
எனது கனவின் அடி ஆழமான
விழிப்பு நிலையில் நீங்கள் வருகிறீர்கள்.

எனது ஆர்வம் பாய்கள் உயர்த்தி
காற்றுக்காக காத்திருக்கிறது
நான் புறப்படத் தயாராக இருக்கின்றேன்.
இந்த அசையாத காற்றை ஒரே ஒரு முறை
பின்நோக்கி அன்புடன் பார்ப்பேன்.

பின்னர்
மாலுமிகளுடன் மாலுமிகளாக
உங்களோடு நிற்பேன்.
பரந்த கடலே
உறங்கும் அன்னையே.
ஆறுகளுக்கும் ஓடைகளுக்கும்
அமைதியும் சுதந்திரமும் ஆனவளே
இந்த ஓடை இன்னும் ஒரே ஒரு திருப்பம் எடுக்கும்
இந்த வெட்டவெளியில் இன்னும் ஒரே ஒரு சலசலப்பு கேட்கும்
பின்னர் நான் உன்னிடம் வருவேன்
எல்லையற்ற பெருங்கடலின்
எல்லையற்ற துளியாக.

அவர் மேலும் நடந்தபோது
ஆண்களும் பெண்களும் தங்களது
வயல்வெளிகளிலிருந்தும்
திராட்சை தோட்டங்களிலிருந்தும்
நகர வாயிலை நோக்கி
தூரத்தில் விரைவதைக் கண்டார்.

தனது பெயர் சொல்லி
அவர்கள் அழைப்பதையும்
கப்பல்களின் வருகையை அவர்கள்
ஒருவருக்கு ஒருவர்
வயல்தாண்டி வயல்தாண்டி
உரக்கச் சொல்வதையும் கேட்டார்
அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார்:
பிரியும் நாள்
கூடும் நாளாக இருக்குமா ?
எனது விடியலின் போது
அதன் முந்தைய மாலை
உண்மையானதென்று சொல்லப்படுமா ?

தனது கலப்பையை
உழவுகாலின் இடையில்
விட்டு வந்தவனுக்கும் அல்லது
திராட்சை பிழியும் எந்திரத்தின் சக்கரங்களை
இடையில் விட்டு வந்தவனுக்கும்
நான் என்ன தரப்போகிறேன் ?

என் இதயம்
பழுத்துக்குலுங்கும் மரமாகி
அவற்றைப் பறித்து அவர்களுக்கு தருவேனா ?

எனது ஆசைகள்
ஊற்றாய் பெறுக்கெடுத்து அவர்களது
கோப்பைகளை நிரப்புவேனா ?
வல்லவன் கரங்கள் மீட்டும்
யாழா நான் ? அல்லது
அவன் தன் மூச்சு என்னுள்ளே இழையும்
குழலா நான் ?

அமைதிகளைத் தேடுபவன் நான்
அமைதிகளில் எந்தக் கருவூலத்தை கண்டு
நம்பிக்கையோடு நான் வழங்கப்போகிறேன்.

நான்
விதைத்த வயல்களின்
அறுவடை நாளா இது ?
அப்படியானால்
எந்த மறந்துபோன பருவங்களில் ?
இது உண்மையிலேயே நான்
எனது விளக்கை
தூக்கி பிடிக்கும் காலமெனில்
அதற்குள்ளே எரியும் சுடர்
என்னுடையதன்று.
எனது விளக்கை
வெறுமையாகவும் இருண்மையாகவும்
நான் தூக்கிப்பிடிக்க
இரவின் காவலன் அதில்
எண்ணெய் நிரப்பி
பற்றவும் வைப்பான்.

இவற்றை அவர் வாய்விட்டுச் சொன்னார்
ஆனால் சொல்லாதவை ஏராளமாக
இருந்தன இதயத்திற்குள். ஏனெனில்
தனது ஆழ்ந்த இரகசியங்களை
அவராலேயே பேசமுடியவில்லை.

பின்னர் நகருக்குள் நுழைந்த போது எல்லா
மக்களும் அவரை சந்திக்க வந்தனர்.

ஒரே குரலில் பேசுவது போல் அவரிடம் கதறினர்
நகரில் மூத்த குடிமக்கள் எழுந்து நின்று சொன்னார்கள்:
அதற்குள் எங்களிடமிருந்து பிரிந்து செல்லாதீர்கள்
எங்களது அந்தி இருட்டில்
உச்சிப்பொழுதின் அலையாக
இருந்தீர்கள் நீங்கள்
உங்களது இளமை
கனவுகான எங்களுக்கு
கனவுகளை வழங்கியது.

எங்களிடையே நீங்கள்
அன்னியராக இல்லை
விருந்தினராகவும் இல்லை ஆனால்
எங்களது மகனாய்
நேசத்திற்கும்
அன்பிற்கும் உரியவனாய்
உங்களது முகத்தை இன்னும் காண
எங்களது கண்களைத்
தவிக்க விடாதீர்கள்.
குருமார்களும் குருபத்தினிகளும்
அவரிடம் சொன்னார்கள்
கடல் அலைகள் நம்மைப்
பிரிக்காதிருக்கட்டும் - நீங்கள்
எங்களோடு செலவிட்ட ஆண்டுகள்
இனிய நினைவாகட்டும்.

ஒரு ஆவியாக எங்களிடையே
நடந்திருந்தீர்கள் - உங்கள்
நிழல் எம்முகத்தின் மீது
ஒளியாய்ப் படரட்டும்
நாங்கள் உங்களை
நிரம்ப நேசித்திருக்கிறோம். ஆனால்
பேச்சற்று இருந்தது என் அன்பு
திரைகளாய் திரையிடப்பட்டு
இருந்தது எம் அன்பு.

இருந்தபோதிலும் இப்போது அது
வாய்விட்டுக் கதறுகிறது உம்மிடம்
நிதர்சனமாய் வந்து நிற்குமது
உம் முன்னால் .... எனினும்
அன்பிற்குதே தெரியாது அதன் ஆழம்
பிரிவிற்கான காலம் எதிர்வரும் வரை.

-தமிழாக்கம் புதுவை ஞானம்

ஆதி
21-11-2007, 05:07 AM
இறைதூதன் - இது The Prophet, என்கிற ஜிப்ரானின் உலகப்புகழ் பெற்ற நூலின் தமிழாக்கம். ஜிப்ரானின் படைப்புகளில் இது காலக்காலத்தை கடந்து வாழ்கிற படைப்பு வாழப்போகிற படைப்பு..

அல்முஸ்தபா என்கிற கதாநாயகர் - பாகாய் இனத்தவரான அப்துல் பாஹாவை சாரமாக வைத்து படைக்கப்பட்ட காதப்பாத்திரம்..

அப்துல் பாஹாவை மூன்று பெருமக்கள் சந்தித்தனர்

அதில் ஜிப்ரானும் ஒருவர், பாஹாவை சந்தித்த பின்னரே ஜிப்ரானின் படைப்புகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.. தனக்குள் நோக்கி பயணிக்க துவங்கினார், மனிதம் பற்றி அதிகம் பாட ஆரம்பித்தார்.

மற்ற இரு பெருமக்களும், அறிவியலில் ஆய்வு மேற்கொண்டு கண்டுபிடுப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள்

அதில் ஒருவரால் உலகம் வெளிச்சமானது, அவர் எடிசன்

இன்னொருவரால் உலகம் ஒரு தொடர்பு எல்லைக்குள் சுருங்கியது - அவர் கிரகாம்பெல்

முத்துச்சரங்களைத் தொடுத்தமைக்கு நன்றி இதயமவர்கட்கு..

இன்னும் பல பங்களிப்புகளை எதிர்பார்த்து ஆவலுடன் ஆதி.

அமரன்
21-11-2007, 06:38 AM
ஆகா.இதயம் தூள்மா.. அருவி போல இருக்கின்றது உங்கள் பதிவும் பதிவின் சுவையும். நன்றி. தொடருங்கள்..

ஆதி
21-11-2007, 03:23 PM
மலரின் பாடல் - ஜிப்ரான் கவிதைகள்


இயற்கை அன்புடன்
திரும்பத் திரும்பச் சொல்லும்
பாசமுள்ள வார்த்தை நான்.

நீலவானக் கூடாரத்திலிருந்து
பச்சைக் கம்பள விரிப்பில்
விழுந்த விண்மீன் நான்.

குளிர்காலம் கர்ப்பம் தரித்த
பஞ்ச பூதங்களின் புதல்வி நான்.

இளவேனிலுக்காகப் பெற்றுத் தந்த
குழந்தை நான்.
கோடை காலத்தின் மடியில் தவழ்ந்தேன்;
இலையுதிர் காலத்தின் படுக்கையில் உறங்கினேன்.

வைகறைப் பொழுதில்,
ஒளியின் வருகையை அறிவிக்க
நான் தென்றலுடன் இணைந்தேன்.

மாலைப் பெழுதில்,
பறவைகளுடன் சேர்ந்து கொண்டேன்
வெளிச்சத்திற்கு விடைகொடுத்தனுப்ப.

சமவெளிக ளெல்லாம்
என் அழகிய வண்ணங்களால்
அணி செய்யப்பட்டன.
காற்றுக்கு நான் மணமூட்டினேன்.

நான் உறக்கத்தைத் தழுவும் போது
இரவின் கண்கள்
எனக்கு காவலிருக்கும்.

நான் கண் விழித்தபோது
கதிரவனைக் கண்டு வெறித்தேன்;
அப்போதைய நாளின் ஒரேகண் அவந்தான்.

நான் பனித்துளி மதுவைக் குடித்தேன்.
பறவைகளின் குரல்களைக் கேட்டேன்.
புல்லின் அசைவிற்கேற்ப நாட்டிய மாடினேன்.

நான் காதலரின் பரிசு,
நான் திருமண மாலை
நான் மகிழ்ச்சியின் ஒரு நொடி.
நான், வாழ்வோர்,
இறந்தவர்க்குக் கொடுக்கும் பரிசு.
நான் மகிழ்ச்சியின் பகுதி,
துக்கத்தின் பாகம்.
நான் தலை தூக்கிப் பார்ப்பது
ஒளியை மட்டுமே.
நான் எப்போதும் தலை குனிந்து
என் நிழலைப் பார்ப்பதே இல்லை,
இந்த ஞானத்தைத்தான்
மனிதன் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
- தமிழில் கவிஞர் புவியரசு


-ஆதி

மாலைப் பொ

அமரன்
21-11-2007, 04:18 PM
இறைவன்

முன்னொரு காலத்தில்
பேச்சின் முதல் தீண்டலை
என் உதடுகள் தரிசித்த போது
நான்
புனித மலையின் மேலேறி நின்று
இறைவனிடம் சொன்னேன்..
"எசமானனே.. நான் உன் அடிமை..
உன் மறைந்த நினைப்பே எனக்கு ஆணை..
உன்னை நான் எப்போதும் பணிந்திருப்பேன்..!!"
இறைவன் மறுமொழி ஏதும் கூறாமல்
ஒரு பெரும் புயலைப் போல்
என்னைக் கடந்து சென்றார்..

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர்
நான்
மீண்டும் புனித மலையில் ஏறி
மீண்டும் இறைவனிடம் சொன்னேன்..
"படைத்தவனே.. நான் உன் படைப்பு..
களிமண் கொண்டு நீ என்னை உருவாக்கினாய்..
நான் உனக்கே உரிமையானவன்..!!"
இறைவன் மறுமொழி கூறாமல்
ஆயிரம் சிறகுகள் போல்
கடந்து மறைந்தார்..

இன்னொரு ஆயிரம் ண்டுகள் கடந்ததும்
புனித மலையில் ஏறி
நான் மீண்டும்
இறைவனிடம் சொன்னேன்..
"தந்தையே.. நான் உங்கள் மகன்..
கருணையினாலும் அன்பினாலும்
நீங்கள் எனக்குப் பிறப்பளித்தீர்கள்..
பக்தியினாலும் வழிபாட்டினாலும்
நான் உங்களை அடைவேன்..!!"
இறைவன் மறுமொழி கூறாமல்
மலைச்சாரல் பனிமூட்டம் போல்
விலகி மறைந்தார்..

மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும்
மீண்டும் புனித மலையில் ஏறி
நான் இறைவனிடம் சொன்னேன்..
"இறைவா..
நீயே என் நோக்கம்..
நீயே என் நிறைவு..
நான் உன்னுடைய நேற்று..
நீ என்னுடைய நாளை..
நான் பூவுலகில் உன்னுடைய வேர்..
நீ வானுலகில் என்னுடைய மலர்..
சூரியனின் முகத்தின் முன்னால்
நாம் இருவரும் இணைந்து வளர்வோம்..!!"

இறைவன் என்னை நோக்கிக் குனிந்து
என் காதுகளில் இனிய சொற்களைக் கூறி
தன்னை நோக்கி வரும் நதியை
கடல் ஆரத் தழுவிக் கொள்வது போல்
என்னை அரவணைத்து எடுத்துக் கொண்டார்..

மலையிலிருந்து
நான் கீழே இறங்கி வந்த போது
இறைவன் எங்கும் நீக்கமற
நிறைந்திருந்தார்..!!

அமரன்
21-11-2007, 04:19 PM
வெள்ளைக் காகிதம்

வெள்ளைக் காகிதம் ஒன்று
பனிக்கட்டி போலப்
பிரகாசமாய், பரிசுத்தமாய் இருந்தது..

அது சொன்னது,
"நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..
சுத்தமில்லாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!"

கறுப்பு மைபுட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது..
ஆனாலும் காகிதத்தை நெருங்க
அதற்குத் தைரியம் வரவில்லை..!

பல வண்ண வண்ண பென்சில்களும் கூட
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
ஆனால் அவையும்
அதை நெருங்கத் துணியவில்லை..!

இன்று வரை
வெள்ளைக் காகிதம்
தான் விரும்பியபடி
பரிசுத்தமானதாகவே இருக்கிறது..
ஆனால்,
வெறுமையாக இருக்கிறது..!!

அமரன்
21-11-2007, 04:20 PM
கண்

கண் ஒரு நாள் சொன்னது..
"பாலைவனத்திற்கு அப்பால்
ஒரு பனி மூடிய மலை
தெரிகிறது பாருங்கள்..
எவ்வளவு அழகாக இருக்கிறது..?"

காது கொஞ்ச நேரம்
உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப்
பிறகு சொன்னது..
"மலையா?? எந்த மலை??
எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!"

கையும் பேசியது..
"என்னால்
எவ்வளவு முயன்றும்
அந்த மலையைத் தொட முடியவில்லையே..
மலை நிச்சயம் இருக்கிறதா..??"

மூக்கு உறுதியாகச் சொன்னது..
"மலை எதுவும் கிடையாது..
எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை..!!"

கண் வேறு பக்கமாய்த்
திரும்பிக் கொண்டது..

மற்ற உறுப்புக்களெல்லாம்
தங்களுக்குள் பேசிக் கொண்டன..
இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தன..
"கண்ணில் ஏதோ
கோளாறு ஏற்பட்டு விட்டது..!!"

அமரன்
21-11-2007, 04:21 PM
நரியின் பசி

நரி ஒன்று
காலை வேளையில்
தன் நிழலைக் கண்டது..
"இன்று நான்
ஒரு ஒட்டகத்தைத் தின்பேன்.."
என்று எண்ணிக் கொண்டது..

பகல் முழுவதும்
ஒட்டகத்தைத் தேடி அலைந்தது..

நண்பகலில்
தன் நிழலை மீண்டும் கண்டது..
"ஒரு எலி போதும் எனக்கு.."
என்ற முடிவுக்கு வந்தது..!!

அமரன்
21-11-2007, 04:22 PM
துறவி


மலைகளுக்கு அப்பால் இருந்த
துறவியின் குடிலில்
நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்..
அப்போது ஒரு திருடன்
நொண்டியபடி தலை கவிழ்ந்து சோகத்துடன்
அவரை நாடி வந்தான்..

"முனிவரே..!!
எனக்கு நிம்மதி தாருங்கள்..
உங்களால் மட்டுமே முடியும்..
என் பாவங்கள் என்னை அழுத்துகின்றன.."

"வருந்தாதே..!!
என் பாவங்களும் என்னை அழுத்துகின்றன.."

"ஆனால்
நான் ஒரு திருடன்.. கொள்ளைக்காரன்..!!"

"நானும் திருடன் தான்.. கொள்ளைக்காரன் தான்..!!"

"நான் ஒரு கொலைகாரன்..
என் கையில் பலரின் ரத்தம் தோய்ந்திருக்கிறது..!!"

"நானும் கொலைகாரன் தான்..
என் கையிலும் பலரின் ரத்தக் கறை..!!"

"நான் எண்ணிலடங்கா
குற்றங்களைப் புரிந்துள்ளேன்..!!"

"நானும் செய்துள்ளேன்..!!"

திருடன் எழுந்து நின்றான்..
புரிந்து கொள்ள முடியாத
ஒரு பார்வை அவனிடம்..
திரும்பி நடந்தான்,
நிமிர்ந்த ஒரு துள்ளலுடன்..

நான் துறவியிடம் கேட்டேன்..
"நீங்கள் செய்யாத குற்றங்களையெல்லாம்
செய்ததாய் ஏன் சொன்னீர்கள்..??
அவன் உங்கள் மேல்
நம்பிக்கையிழந்து போகிறான் பாருங்கள்..!!"

துறவி சிரித்துக் கொண்டே கூறினார்..
"அவன் நம்பிக்கையிழந்து போவது உண்மை தான்..
ஆனால், நிம்மதி அடைந்து போகிறான்..!!"

நான் அப்போது தான் கவனித்தேன்..
திருடனின் உற்சாகமான பாடல் ஒலி
பள்ளத்தாக்கில் வழிந்து நிறைந்து கொண்டிருந்தது..!!

அமரன்
21-11-2007, 04:24 PM
மன்னனின் மறுப்பு


ஒருநாள்
நகரத்தின் பெரியோர்கள்
அத்தனை பேரும்
மன்னனைச் சந்திக்கச் சென்றனர்..

மன்னனைப் பணிந்து
மனுச் செய்தனர்..
"நகர மாந்தர் அனைவரும்
மதுவும்
மற்ற வகை மயக்கப் பொருட்களும்
அருந்திச் சோர்ந்து கிடப்பதை மாற்றிட
அவற்றைத் தடை செய்திட வேண்டும்" என்று..

மன்னனோ
அவர்களின் வேண்டுகோளைக் கேட்டதும்
"மூளையற்ற கோரிக்கை இது" எனக் கூறி
நகைத்து விட்டு வெளியேறினான்..

நகரத்தின் பெரியோர்கள்
வேதனை மிகுந்து
திரும்பும் வழியில்
மூத்த மந்திரி ஒருவரைக் கண்டனர்..
மந்திரி அவர்களின் குறையினை அறிந்தார்..
பாவமாக அவர்களைப் பார்த்துச் சொன்னார்..
"அடடா..!!
பிழை செய்துவிட்டீர்களே..
மதுவின் மயக்கத்தில்
மன்னன் கிடக்கையில்
மனுவினை அளித்திருந்தால்
கேட்டது கிடைத்திருக்கும்..
காரியம் நடந்திருக்கும்..!!"

அமரன்
21-11-2007, 04:25 PM
போரும் சிறிய நாடுகளும்

விளைநிலம் ஒன்றில்
ஒற்றை ஆடும் அதன் குட்டியும்
மேய்ந்தபடி இருந்தன..

கழுகு ஒன்று
குட்டி ஆட்டினைப்
பசி பொங்கும் விழிகளால் பார்த்தபடி
வட்டமடித்து வந்தது..
கீழிறங்கி
இரையினைக் கவ்வும் நேரத்தில்
இன்னொரு கழுகும்
பசியோடு வந்து சேர்ந்தது..

எதிரிகளின்
ஆவேசப் போராட்டத்தின்
கூக்குரல்
வானமெங்கும் நிரம்பி வழிந்தது..

ஆடு மேலே நிமிர்ந்து பார்த்து
ஆச்சர்யப்பட்டுப் போனது..
குட்டியிடம் சொன்னது,
"பார்த்தாயா குழந்தாய்..
எத்தனை விநோதம் இது??
இவ்விரு பெரிய பறவைகளுக்கும்
விரிந்து பரந்த இந்த காயம்
போதவில்லையோ??
இப்படி ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொள்கிறார்களே..!!
சிறகு முளைத்த அந்த
உன்னிரு சகோதரர்களுக்கிடையில்
சமாதானம் ஏற்படட்டும் என்று
இதயபூர்வமாய் நீ
இறைவனை வேண்டிக் கொள்..!!"

குட்டியும் அவ்வாறே
வேண்டிக் கொண்டது..!!

அமரன்
21-11-2007, 04:33 PM
விமர்சகர்கள்


ஓர் இரவு நேரத்தில்
கடல் நோக்கிக்
குதிரை ஒன்றில்
பிரயாணம் மேற்கொண்ட
வழிப்போக்கன் ஒருவன்
விடுதி ஒன்றில்
இளைப்பாற இறங்கினான்.

கடல் நோக்கிப் போகும்
யாவரைப் போலவே
இரவின் மீதும்
ஏனைய மனிதர் மீதும்
மிகுந்த நம்பிக்கை கொண்டு
குதிரையைக் கதவருகில்
கட்டிப் போட்டு
உள்ளே சென்றான்.

நள்ளிரவில்
உறக்கத்தின் போர்வையில்
அனைவரும் ஆழ்ந்திருக்க
திருடன் ஒருவன்
வருகை புரிந்தான்,
குதிரை கவர்ந்து
மறைந்து போனான்.

காலையில் எழுந்து நடந்ததை அறிந்த
வழிப்போக்கன்
குதிரை களவு போனதற்குக் கொஞ்சமும்
குதிரை களவாட ஒருவன் துணிந்தானே
என்பதற்கு மிகுதியும்
வருத்தம் கொண்டான்.

விடுதியில் இருந்த மற்ற பயணிகள்
சுழ்ந்து நின்று கூட்டம் சேர்த்தனர்,
களவு குறித்து கருத்து உதிர்த்தனர்.

முதலாமவன் சொன்னான்,
"லாயம் ஒன்று உள்ளே இருக்க
குதிரையை வெளியில் கட்டி நிறுத்திய
உம் மூடத்தனம் என்னே..!"

இரண்டாமவன் சொன்னான்,
"கட்டிப்போட்டால் மட்டும் போதுமா?
கால்கள் நகராமல் இருக்க
வழி வகை செய்திட மறந்தீரோ?
உமக்கெல்லாம் எதற்கு
குதிரையும் பயணமும்?"

மூன்றாமவன் சொன்னான்,
"கடலை நோக்கிக்
குதிரையில் போவது
வடிகட்டிய முட்டாள்தனமன்றி வேறில்லை."

நான்காமவன் சொன்னான்,
"சோம்பேறிகளும் கால் விளங்காதவர்களும்
மட்டும் தான்
குதிரைகள் வைத்திருப்பார்கள்."

வழிப்போக்கன் மிகுந்த வியப்புடன்
அவர்களிடம் சொன்னான்,
"நண்பர்களே,
என் குதிரை களவு போனதினால்
என் குறைகளை
யாரும் கேட்காமலேயே
அறைகூவி அறிவிக்க
நீங்கள் இத்தனை வேகம் காட்டுகிறீர்கள்.
னால் குதிரையைத் திருடியவன் பற்றி
ஒரு சின்ன முணுமுணுப்பு கூட
இன்னும் செய்யவில்லையே,
அது ஏனோ?"

அமரன்
21-11-2007, 04:34 PM
கடவுளும் சாத்தானும்

கடவுளும் சாத்தானும்
ஒரு நாள்
மலையுச்சியில் சந்தித்தனர்.

கடவுள் சொன்னார்,
"சகோதரா,
உனது நாள்
நன்றானதாக அமையட்டும்..!"

சாத்தான்
மறுமொழி ஏதும் கூறவில்லை.

கடவுள் தொடர்ந்தார்,
"ஏதேது,
நீ இன்று
மிகவும் கோபமாக இருக்கிறாய்
போலிருக்கிறதே..!"

சாத்தான் சொன்னது,
"எல்லாம்
இந்த முட்டாள் மனிதர்களால் தான்.
இப்போதெல்லாம் சில காலமாக
அவர்கள் என்னை நீயென்று
நினைத்துக் கொள்கிறார்கள்.
உன் பேர் சொல்லி என்னை அழைப்பது,
உன்னைப் போல் என்னை நடத்துவது,
சீச்சீ,
எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை..!"

கடவுள் புன்னகைத்துச் சொன்னார்,
"அதனாலென்ன சகோதரா,
சில நேரங்களில்
இந்த மனிதர்கள்
என்னைக் கூடத்தான்
நீயென்று நினைத்துக் கொள்கிறார்கள்,
உன் பேர் சொல்லி என்னை அழைத்து
சபிக்கிறார்கள்,
அதனாலெல்லாம் நான் வருந்துவதில்லை..!"

சாத்தான் சமாதானமடையாமல்
மனிதர்களின் முட்டாள்தனத்தை
நொந்து கொண்டபடி நடந்து சென்றது.

அமரன்
21-11-2007, 04:35 PM
மதிப்புகள்

ஏழை ஒருவன்
தன் நிலத்திலே
புதைந்து கிடந்த
பளிங்குச் சிலை
ஒன்றைக் கண்டெடுத்தான்.

கலைப் பொருட்களை
வாங்கிச் சேகரிக்கும்
கலை ஆர்வலர் ஒருவரிடம்
காண்பித்தான்.

சிலையின் அழகும்
கலைநயம் மிக்க உருவாக்கமும்
ஆர்வலரைக் கவர்ந்தன.
பெரும்பணம் தந்து வாங்கிக் கொண்டார்.

பணத்துடன் திரும்பிய
ஏழைக்கு ஆச்சர்யம்,
"இத்தனை பணம் கொண்டு
எது வேண்டுமானாலும் செய்யலாமே?
எப்படிப்பட்ட வாழ்க்கையையும் அமைக்கலாமே?
செதுக்கப்பட்டு,
பலநூறு ஆண்டுகள்
உலகின் கவனம் படாமல்
புதைந்து கிடந்த
ஒரு சாதாரணமான கல்லுக்காக
இத்தனை பணம் தருபவர்களும்
இருக்கிறார்களே இவ்வுலகில்..!!"

சிலையை ரசித்துக் கொண்டிருந்த
ஆர்வலருக்கும் ஆச்சர்யம்,
"என்ன அழகு! எத்தனை உயிர்ப்பு!
எத்தகைய ஆன்மாவின் அற்புதக் கனவு..!!
பலநூறு ஆண்டுகள்
அழியாத புதுக்கோலம்!
உயிர்ப்பும் உணர்வும்
எதுவுமற்ற பணத்திற்காக
விலைமதிப்பற்ற பொக்கிஷத்தைத் தருபவர்களும்
இருக்கிறார்களே இவ்வுலகில்..!!"

அமரன்
21-11-2007, 04:36 PM
மாதுளை

நானொரு மாதுளைப் பழத்தின்
இதயத்தில் வசித்து வந்தேன்.

ஒரு விதை சொன்னது,
"ஒரு நாள் நானொரு பெரிய மரமாவேன்.
காற்று என் கிளைகளுக்கிடையில்
ராகம் பாடும்,
கதிரவன் என் இலைகளின் மேல்
நடனம் புரியும்,
எல்லாக் காலங்களிலும் நான்
அழகும் வலிவும் மாறாமல் கொண்டிருப்பேன்."

இன்னொரு விதை சொன்னது,
"நானும் உன்னைப் போல்
இளம்பிராயத்தினனாய் இருந்த போது
இது போல் நினைத்ததுண்டு.
இன்றோ
உண்மை நிலவரம் புரிந்து வைத்துள்ளேன்,
இத்தகு நம்பிக்கைகள் வீணென்று
கண்டுணர்ந்துள்ளேன்."

மூன்றாவது விதையும் பேசியது,
"வளமானதொரு எதிர்காலத்திற்கான
நம்பிக்கைகள் எதையும்
நமது தற்கால வாழ்வில்
நான் காணவில்லை."

நான்காவது விதை சொன்னது,
"சீச்சீ..!!
அப்படி ஒரு நல்ல எதிர்காலம்
இல்லாமல் போகுமானால்
எத்தனை ஏமாற்றம்?
இதற்குத்தானா பிறப்பெடுத்தோம்?"

ஐந்தாவது விதை சொன்னது,
"நாம் என்னவாக இருக்கிறோம்
என்பதே சரியாகப் புரியாத போது
நாம் என்ன ஆவோம்
என்பதைப் பற்றி
ஏன் இத்தனை சர்ச்சை?"

ஆறாவது விதை பதில் சொன்னது,
"நாம் என்னவாக இப்போது இருக்கிறோமோ
அதுவாகவே
எப்போதும் இருப்போம்."

ஏழாவது விதை சொன்னது,
"நாம் எப்படி இருப்போம்
என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது,
ஆனால் அதை
வார்த்தைகளில் விவரிக்கத் தெரியவில்லை."

இப்படியே மேலும்
எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது,
இன்னும் பலப்பல விதைகள் பேசின,
கடைசியில் எல்லா விதைகளும்
சேர்ந்து போட்ட கூச்சலில்
எனக்கு எதுவுமே சரியாகக் கேட்கவில்லை.

அன்றே நான்
ஒரு ஆப்பிள் பழத்தின் இதயத்திற்கு
இடம் மாறி விட்டேன்.
அங்கு விதைகளும் குறைவு,
அவைகள் அதிகம் பேசுவதுமில்லை.

அமரன்
21-11-2007, 04:36 PM
அவரவர் நம்பிக்கை


ஒரு நாள்
மெத்த அறிவு படைத்த நாய் ஒன்றின்
பாதையின் வழியே
ஒரு பூனைக் கூட்டம் கடந்து சென்றது.
தன்னைக் கவனிக்காமல்
அப் பூனைக் கூட்டம்
மிகுந்த முனைப்புடன்
முன்னோக்கிச் செலவதைக் கண்ட நாய்
நின்று கவனித்தது.

பூனைகள் வட்டமாக அமர்ந்தன.
மூத்த பூனை ஒன்று,
உறுதியும் எச்சரிக்கையும்
தொனிக்கும் குரலில் சொன்னது,
"சகோதரர்களே..!
வழிபடுங்கள், வழிபடுங்கள்,
நம்பிக்கையோடும், கீழ்ப்படிதலோடும்
மீண்டும் மீண்டும் நாம்
வழிபட்டால்
வானத்திலிருந்து
கணக்கற்ற எலிகள் மழையாகப் பொழியும்.."

இதைக் கேட்ட நாய்
பரிகசித்துச் சிரித்தபடி
தனக்குள் சொல்லிக் கொண்டது,
"இந்த முட்டாள் பூனைகளின்
குருட்டு நம்பிக்கைகளுக்கு
அளவில்லாமல் போயிற்றே..
நமது ஆதி நூல்களில் எழுதப்பட்டு
நானும் எனக்கு முன்னால் என் முன்னோரும்
அறிந்த உண்மைகளின் படி
நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் மிக்க
வழிபாட்டின் பலனாக
மழையாகப் பொழியப் போவது
எலிகளல்ல, எலும்புத் துண்டுகளன்றோ..!"

அமரன்
21-11-2007, 04:37 PM
நீதி

அரச மாளிகையில்
அன்று விருந்து..
திடீரென்று மனிதன் ஒருவன் நுழைந்து
அரசனைப் பணிந்தான்..
விருந்தாளிகள்
அவனை நோக்கினர்..
அவன் கண்களில் ஒன்று
குத்திக் கிழிக்கப்பட்டு
ரத்தம் வடிந்த நிலையில்
குழியாய் இருப்பதைக் கவனித்தனர்..

அரசன் கேட்டான்..
"நீ யார்..?
உனக்கு நேர்ந்தது என்ன..?"

அவன் பணிந்து வணங்கி சொன்னான்..
"அரசே..!!
நான் தொழிலால் ஒரு திருடன்..
இன்று நிலவில்லா அமாவாசை இரவானதால்
அடகுக் கடையில் திருடக் கிளம்பினேன்..
என் போறாத காலம்,
தவறிப் போய்
நெசவாளன் கடையில் நுழைந்து விட்டேன்..
அவன் தறியின் கம்பி
என் கண்ணைக் குத்திக் கிழித்து விட்டது..
அரசே..!!
எனக்கு நீதி வழங்க வேண்டுகிறேன்.."

நெசவாளனை அழைத்து வர
அரசன் பணித்தான்..
அவன் வந்ததும்
அரசவை, வழக்கினை ஆராய்ந்து
அவனது ஒரு கண்
குத்திக் கிழிக்கப் பட வேண்டுமென்று
தீர்ப்பு வழங்கியது..

நெசவாளன் பணிந்து வணங்கிச் சொன்னான்..
"அரசே.!!
ஒரு கண்ணுக்கு மறுகண் என்பது
மிகச் சரியான தீர்ப்பு..
இருந்தாலும்,
என் தொழிலில்
நான் நெய்யும் ஆடையின்
இரண்டு பக்கங்களை ஆராய்ந்திட
எனக்கு இரண்டு கண்கள் அவசியம் தேவை..
எனக்குப் பக்கத்துக் கடையில்
செருப்புத் தைப்பவன் ஒருவன் உண்டு..
அவன் தொழிலில்
இரண்டு கண்களுக்கு அவசியம் இல்லை..
ஒரு கண்ணே போதுமானது.."

அரசன் சிறிது நேரம் சிந்தித்தான்..
அவன் ஆணைப்படி செருப்புத் தைப்பவன்
அழைத்து வரப்பட்டான்..
அவன் இரு கண்களில் ஒரு கண்
குத்திக் கிழிக்கப்பட்டது..

நீதி அங்கு
நிலை நிறுத்தப்பட்டது..!!

அமரன்
21-11-2007, 04:42 PM
நான்கு கவிஞர்கள்

கவிஞர் நால்வர்
மேசையொன்றினைச் சுற்றி
அமர்ந்திருந்தனர்.
மேசை மேலிருந்த
மதுக்கிண்ணம் ஒன்றின் மீது
கவனத்தைக் குவித்திருந்தனர்.

முதல் கவிஞன் சொன்னான்:
"என் ஞானக் கண் கொண்டு
பார்த்திடும் போது
இம்மதுவின் நறுமணம்
அடர்பெருங்காட்டின் மேல் குவியும்
பறவைக்கூட்டம் போல்
கோப்பையின் மேல்
சூழ்ந்து படர்ந்து சிறகடிக்கிறது."

இரண்டாம் கவிஞன் மொழிந்தான்:
"என் ஞானக் காதுக்கு
அப்பறவைகளின் கந்தர்வ தேவ கானம்
அளப்பரிய சுகமளிக்கிறது.
வண்டானது, அழகிய மலரின்
இதழ்களின் இடையே
சிறைப்படுவது போல்
என் இதயமும் பறிபோகிறது."

மூன்றாம் கவிஞன்
கண்களை மூடிக்
கைகளை உயர்த்தி உரைத்தான்:
"நான் அப்பறவைகளைத் தீண்டி மகிழ்கிறேன்.
தூங்குமொரு தேவதையின்
மூச்சுக் காற்றினைப் போல்
அவைகளின் சிறகுகள்
என் கைகளை உரசுகின்றன."

நான்காம் கவிஞன் எழுந்து
மதுக்கிண்ணத்தைக் கைகளில் எடுத்துக் கூறினான்:
"அந்தோ, நண்பர்காள்.
உம்போல் எனக்கு
பார்த்தலும் கேட்டலும் தொடுதலுமான
உணர்வுகள் எதுவும்
உயர்வாக இல்லை.

நானந்த நறுமணப் பறவையைப்
பார்த்திட இயலவில்லை,
அதன் கானங்களைக்
கேட்டிட இயலவில்லை,
அதன் சிறகுகளைத்
தொட்டுணர இயலவில்லை.
எனது ஊனக் கண்களுக்கு
முன்னிருக்கும் மது மட்டுமே தெரிகிறது.
அதனைக் குடித்து மட்டுமே
என்னால்
உம்போன்று அதன் ரசிப்பில்
அமிழ்ந்து திளைக்க இயலும்."

சொல்லியபடி
மதுவின் இறுதித் துளி வரைக்
குடித்து விட்டான்.

மற்ற கவிஞர் மூவரும்
வாய்பிளந்து நோக்கினர்.
அவர்களின்
பார்வைகளில் தாகம்,
விழிகளில் வெறுப்பு.

அமரன்
21-11-2007, 04:43 PM
இலையிடம் புல் சொன்னது

இலையுதிர் காலத்து
இலை ஒன்றிடம்
புல் சொன்னது:
"நீ நிலம் நோக்கி
விழும் போது
எத்தனை ஓசை செய்கிறாய்.
நாராசம்!
என் குளிர் காலக் கனவுகள்
அனைத்தையும்
கலைத்து விடுகிறாய்.
ஒழிந்து போ எங்காவது.!!"

இலை
எரிச்சலுடன்
மறுமொழி இறுத்தது:
"சீச்சீ! அற்பப் பிறவியே!
கீழே பிறந்து கீழே வாழ்ந்து
கீழே மடியும் கீழான பிறவியே!
மேலே இருக்கும் காற்றின்
இசை, இன்பம், இனிமை
இது குறித்தெல்லாம்
ஏதும் அறிவாயா நீ?
எனது இசையைப் பற்றி
ஏதும் பேசாதே!!
வாயை மூடு..!!"

இலையுதிர் காலத்தின்
இயல்புக்கேற்ப
இலை கீழே விழுந்தது.
மண்மீதில் உறங்கியது.

வசந்தத்தின் வருகையால்
அதுவும் ஒரு புல்லாய்
மறுபடி முளைத்தது.

இலையுதிர்காலம் மீண்ட போது
குளிர்கால உறக்கத்தின்
பிடிக்குள்ளிருந்த படி
அது தனக்குள் முனகியது:
"சீ! இந்த இலையுதிர்காலத்து இலைகள்.!
எத்தனை ஓசை! எத்தனை கூச்சல்!
என் குளிர்காலக் கனவுகளை
துரத்திவிடுகின்றன.!!"

அமரன்
21-11-2007, 04:44 PM
வருந்தும் பாவிகள்

நிலவற்ற
அமாவாசை இரவொன்றில்
பக்கத்து வீட்டுத் தொட்டத்தில்
புகுந்து
இருப்பதிலேயே
பெரிய பூசணியொன்றைத்
திருடினான் ஒருவன்.

திருட்டுப் பூசணியுடன்
வீடு வந்து சேர்ந்து
அறுத்துப் பார்த்தபோது
அதிர்ந்தான்.

இன்னும் பழுக்காத காய்!!

அப்போது தான்
அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அவன் மனசாட்சி
விழித்துக் கொண்டது.
அவனைக் கண்டித்தது.
செய்த பாவத்துக்கு
வருந்தினான் அவன்.

ஆதி
22-11-2007, 08:03 AM
ஆகா! அமரன் அணி அணியாய் ஜிப்ரான் கவிதைகள்..

மிக்க நன்றி அமரன்..

-ஆதி

ஓவியன்
23-11-2007, 02:48 PM
ஆகா என்ன இது ஒரு முத்துக் கடலாக விரிகிறதே இந்த திரி...

அற்புத திரியின் சொந்தக் காரர் ஆதிக்கும் அவருடன் கைகோர்த்து முத்துக்களை தேடிக் கொண்டு வந்து இங்கே சேர்க்கும் இதயம் மற்றும் அமரனுக்கு நன்றிகள் பல..!! :)

அமரன்
23-11-2007, 02:56 PM
ஓவியன்..எனக்குள் பலநாட்களாக இருந்த குழப்பத்தை வேரறுத்தவர் கலில்ஜிப்ரான்..

கவிதைகளில் கரு விளங்கப்படுதல் கடினமானதாக இருக்கவேண்டுமா? எளிதானதாக இருக்கவேண்டுமா? என்ற குழப்பம் எனக்குள் இருந்தது. இதிலிருந்து வெளியேற என்ன செய்யலாம் என்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது இக்கவிதைகளை எனக்குதந்தார். படித்தபோது புரிந்துகொண்டேன். எளிதான கருவும் எளிதான வார்த்தைகளும் அல்லது கடினமான கருத்துகளும் எளிதான வார்த்தைகளும் இருந்தல் நலமென அறிந்துகொண்டேன். வழக்கமான வார்த்தைகளை வழக்கமான முறையினின்று விலகி பாவித்தால் வசீகரம் கூடும் என்பதை நன்குணர்த்திய படைப்புகள் இவை.. நண்பர் ஆதி திரித்துக்கொடுத்த இழையில் நானும் சிலவற்றை கோர்த்தேன் எனபதில் பெருமிதம் கொள்கின்றேன்.

ஓவியன்
23-11-2007, 03:13 PM
என் பங்கிற்கு நானும் ஜிப்ரானுடைய முத்துக் கடலில் மூழ்கியதில் ஜிப்ரான் அவர்கள் வரைந்த அரும் ஓவியங்கள் சிலவற்றின் பிரதிகள் கிடைத்தன...

உங்களுக்காக இதோ அவை....!!

01 - ஜிப்ரானுடைய சுய ஓவியம்..!!

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/gibran_art_g308.jpg

02 - தன் தாயரை வைத்து ஜிப்ரான் வரைந்த ஓவியம்..!!

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/gibran_art_g502.jpg

03 - தன் சகோதரியை வைத்து ஜிப்ரான் வரைந்த ஓவியம்..!!

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/gibran_art_g503.jpg

ஓவியன்
23-11-2007, 03:21 PM
ஜிப்ரான் வரைந்த இன்னும் சில ஓவியங்கள்...!!


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/gibran_art_g306.jpg

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/gibran_art_g108.jpg

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/gibran_art_g101.jpg

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/gibran_art_g104.jpg

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/gibran_art_g202.jpg

ஓவியன்
23-11-2007, 03:27 PM
பொதுவாக ஒவ்வொரு ஓவியருக்கு ஒவ்வொரு பாணி இருக்கும் அவரது ஓவியத் தன்மையை வைத்து எதாவது ஒரு ஓவியம் அந்த ஓவியரது ஓவியமா இல்லையா என்று கூறிவிடலாம்...

ஆனால் "கலில் ஜிப்ரான்" அவர்களது ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பாணியிலுள்ளது. இதுதான் இவரது பாணியென வரையறுக்க முடியாதுள்ளது. என்னைப் பொறுத்தவரை ஓவியத்தில் கலில் ஜிப்ரானுடைய விசேடத் தன்மையே எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல் இருப்பதே என்று நினைக்கின்றேன்..

ஆதி
26-11-2007, 06:40 AM
ஓவியன் பெயருக்கு ஏற்ற மாதிரி ஓவியத்தை நீரப்பிவிட்டீர்கள்..

ஜிப்ரானின் தன்மூக ஓவியம் பார்த்த பொழுது பொறியில் தெறித்தது இந்த சம்பவம்..

ஒருமுறை ராமகிரிஷ்ன பரமஹம்சரிடம்.. ஒரு ஓவியர் ராமகிரிஷ்னருடைய ஓவியத்தை வரைந்து எடுத்துச்சென்றாராம்..

அதைப் பார்த்த ராமகிரிஷ்னர் அழுதுவிட்டாரம்.. விவேகானந்தரும் பிற சிடர்களும் இதைக் கண்டு அதிர்ந்தும் வறுத்தம் உற்றனராம் ராமகிரிஷ்னர் மேல்..

காரணம் அவர் இடம் பொருள் பாராமல் உணர்ச்சிவய பட கூடியவர்.. தயங்கி தயங்கி அவருடைய பிரிய சிடன் விவெகானந்தர் முன் வந்து ஏன் அழுதீர் என வினவினாரம்.. அதற்கு ராமகிரிஷ்னர் நான் சாமதி நிலை அடைந்ததுண்டு அதில் ஆனந்தப் பட்டதுண்டு.. ஆனால் எவருக்குமே கிட்டாத ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்ன எனின் என் சாமதி நிலையை நானே பார்த்தது.. அதனால்தான் அழுதுவிட்டேன் என்றாராம்.. அதைக் கேட்ட உடன் அத்தனை சிடரும் அழுதவிட்டனராம்..

அதுப்போலதான் ஜிப்ரானுக்கும் இது ஒரு பெரும் வரம் தன் உருவத்தை தானே வரையகிடைத்த வரம்...

-ஆதி


விவேக

ஓவியன்
26-11-2007, 06:27 PM
இராமகிருஷ்ணரின் அனுபவத்தைப் பரிமாறிய உங்களுக்கு நன்றி ஆதி...
-------------------------------------------------------------------------------------------------------------
ஓவியம் மீது அடியேனுக்கு கொஞ்சம் ஆர்வமுண்டு ஆதலினாலேயே என் பெயரை ஓவியனாக்கினேன்..!! :)

ஆதி
27-11-2007, 07:18 AM
ஓவியம் மீது அடியேனுக்கு கொஞ்சம் ஆர்வமுண்டு ஆதலினாலேயே என் பெயரை ஓவியனாக்கினேன்..!! [/FONT][/COLOR]:)

நான் உங்களை பலமுறை ஓவியரே என்று அழைக்க எண்ணி இருக்கிறேன்.. இனி அப்படியே அழைப்பேன் ஓவியரே.. :icon_b:

எனக்கும் ஓவியங்கள் மீது பிரியமுண்டு ஆனால் வரைகிற அளவு ஆற்றல் என்னிடமில்லை.. என் கையெழுத்தே கோழி வரைகிற ஓவியம் போன்றுதான் இருக்கும்.. :icon_rollout:

நன்றி..

-அன்பன் ஆதி

இளசு
27-11-2007, 06:47 PM
ஆதி, அமரன், இதயம், ஓவியன் -
அழகாய் வளர்க்கும் இத்திரியை
மனதாரப் பாராட்டுகிறேன்..

ஆர அமர பதிலளிக்கக் காலமாகலாம்..
அதற்குள் கவனம் சிதறிவிட்டால்?

எனவே என் அச்சாரமாய் முன்னர்
மன்றத்தில் நண்பர் செழியனின் பதிவை இங்கே ஒருங்குறியில் தந்து
என் கணக்கைத் துவங்குகிறேன்..


பெற்றோர் - பிள்ளை உறவு பற்றி
கலீல் ஜிப்ரன் கவிதையின்
மொழிபெயர்ப்பு. ( செழியன்)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5205

இவர்கள்
உன் வாரிசுகளா...... ?
இல்லை.

வாழ்வுச்சங்கிலி
இடைவிடாது தொடர
வார்த்துக்கொண்ட கண்ணிகள்.

உன் மூலம் வந்திருக்கலாம்...
உன்னிடம் இருந்து அல்ல....
உன் தனிச்சொத்தும் அல்ல...

இன்று உன்னோடு இருக்கலாம்..
ஆனால் உன்னுடையது அல்ல....

உன் "வாரிசுக்கு"
அன்பை அள்ளிக்கொடு.....
உன் சொந்தக்
கருத்துக்களைத் திணிக்காதே...

கருத்து என்பது
அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டியது......

உன் இன்றைய வீட்டுச் சுவருக்குள்
உலவது அவர்கள் உடல் மட்டுமே....
அவர்கள் உள்ளம் உலவுவது...
"நாளை" என்ற புது வீட்டில்.
நீ நினைத்தாலும்
ஏன் உன் கனவிலும்
நுழைய முடியாத
நாளை என்ற புது வீட்டில்.

உன் வாரிசு போல் நீ ஆக ஆசையா?
ம்..... முயற்சி செய்..!
ஆனால்
உன்னைப்போல் உன் வாரிசு ஆக
நிர்ப்பந்திக்காதே...
நீ வில்... அவர்கள் அம்பு....
முன்னோக்கிச் செல்லட்டும்.

வாழ்க்கை பின்னோக்கிப் பாயும் நதியல்ல......

இதே கவிதையை வந்தியத்தேவன் தம் பார்வையில் தந்தார்.
கிடைத்ததும் தருகிறேன்..

வாழ்க்கைக் கிண்ணம் நிரம்பியிருக்க
நாளைக்கவலை ஏன்? இன்று மகிழ்ந்திருக்க!!!!

எனச் சொன்ன மகாகவி கலீல் ஜிப்ரனுக்கான முழு மதிப்பையும்
இங்கே மன்றத்தவர் செலுத்தட்டும்! நன்றி..

IDEALEYE
28-11-2007, 06:02 AM
மகாகாவி கலீல் ஜிப்ரான் கவிதைகள் முத்துமாலையாக கோர்த்துத்தந்த அண்ணன் அமரனுக்கு நன்றிகள் வாழ்த்துகள்: கருத்து சொல்லப்படும் விதம் கருத்தின் உயிர்வாழ்தலுடன் நெருங்கிய உறவுவைத்துக்கொண்டுள்ளது......
கலீல் ஜிப்ரான் ஒரு கவிமறுமலர்ச்சிக்காரர்.
ஐஐ

ஆதி
28-11-2007, 08:20 AM
மழையின் பாடல்

கடவுள்கள், சுவர்க்கத்திலிருந்து தொங்கவிட்ட
வெள்ளிச் சரடு நான்.
தனது தோட்டங்களையும், பள்ளத்தாக்குகளையும்
அழகு படுத்துவதற்காக
இயற்கை என்னை ஏற்றுக் கொண்டது.

இஸ்தாரின் மணிமுடியிலிருந்து
விடியலின் புதல்வி,
தோட்டங்களை அழகு படுத்துவதற்காகப்
பறித்து வீசிய அழகு முத்துக்கள் நான்.

நான் சிரிக்கும் போது மலைகள் அழும்
நான் அடங்கியிருக்கும் போது மலர்கள் மகிழும்
நான் தலை வணங்கும்போது, எல்லாமே உயரும்.

நிலமும் மேகமும் காதலர்கள்.
அவர்களுக்கிடையில் நான் கருணைத் தூதுவன்
அவர்களில் ஒருவரின் தாகத்தைத் தீர்க்கிறேன்
மற்றவரின் வேத்னையைப் போக்குகிறேன்.

இடியில் குரல் என் வரவுக்குக் கட்டியம் கூறுகிறது;
நான் புற்ப்பட்டு விட்டதை
வானவில் முன்கூட்டிச் சொல்லிவிடுகிறது

பைத்தியக்காரப் பஞ்ச பூதங்களின்
காலடியில் பிறந்து
மரணத்தின் விடித்த சிறகுகளின் கீழ் மடியும்
பூமி வாழ்வு போன்றது என் வாழ்வு

நான் கட்லின் இதயத்திலிருந்து தோன்றி,
தென்றலுடன் மேலெழுந்து பறந்தேன்.

தாகித்து நிற்கும் நிலம் கண்டால்
நான் இறங்கி வருவேன்.
மலர்களைத் தழுவிக் கொள்வேன்.
மரங்களை இலட்சக் கணக்கான
விதங்களில் அரவணைத்துக் கொள்வேன்.

சாளரங்களை என் மெத்தென்ற
விரல்களால் மெல்லத் தொடுவேன்.
என் அறிவிப்பே ஒரு வரவேற்புப் பாடல்தான்.
எல்லாரும் என் பாடலைக் கேட்க முடியும்
ஆனால் உணர்வு மிக்கவர்களால் மட்டுமே
அதை உணர்ந்து கொள்ள முடியும்.

காற்றின் வெப்பம்தான் என்னைப் பெற்றது.
ஆனால், நான் அதைக் கொன்று விட்டேன்.
ஒரு பெண், ஆடவனிடத்திலிருந்தே
வலிமை பெற்று, அவனையே வெல்வது போல.

நான் கடலின் பெருமூச்சு.
நிலத்தின் சிரிப்பு.
வானத்தின் கண்ணீர்.

இதே போலத்தான், நான் அன்பிலும்-
ஆழமான பாசக்கடலின் பெருமூச்சு;
உயிரின் வண்ண வயலின் சிரிப்பு;
எல்லையற்ற ஞாபக வானத்தின் கண்ணீர்.


தமிழில் புவியரசு..

ஆதி
28-11-2007, 08:31 AM
இங்கு இன்னொரு முத்தைக் கொணர்ந்து சேர்த்த இளசு அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

-ஆதி

தங்கவேல்
28-02-2008, 01:36 AM
இந்தக் கரைகளில் நான்
எப்போதும்
நடந்து கொண்டிருக்கிறேன்,
மணலுக்கும் நுரைக்கும்
இடைப்பட்ட வெளியில்.
பேரலை வந்தால் என் தடம் அழிந்து போகும்
காற்று வந்தால் இந் நுரை கலைந்து போகும்.
கடலும் கரையும் மட்டும்
என்றென்றும் நிலைத்திருக்கும்.

-o0o-

அவர்கள் விழித்திருக்கும் போது
என்னிடம் சொல்வார்கள்,
"நீயும் நீ வாழும் உலகமும்
எல்லையற்ற கடலின் எல்லையற்ற கரையில்
ஒரு சிறு மணற்துகள்."

என் கனவில்
அவர்களிடம் சொல்வேன்,
"நானே எல்லையற்ற கடல்!
எல்லா உலகங்களும்
எனது கரையில்
சிறு மணற்துகள்கள்."

-o0o-

ஒரே ஒரு முறை தான்
நான் சொல்லிழந்து
விடையளிக்க இயலாமல்
ஊமையாக்கப்பட்டேன்.

"நீ யார்?"
என்று அவன்
என்னைக் கேட்ட போது.

-o0o-

ஒரு மணற்துகளைச் சுற்றி
எழுப்பப்பட்ட ஆலயமே
முத்து என்றால்,
எந்த வேட்கை எழுப்பியது நம் உடல்களை?
எந்த மணற்துகளைச் சுற்றி?

-o0o-

கடவுள்,
சிறுகல்லாக என்னை
இந்தக் குளத்தில் எறிந்தார்.
நான் மேல்புறத்தில்
வளையம் வளையமாய்ச்
சலனம் செய்தேன்,
ஆழத்தை அடைந்ததும்
அமைதியும் அடைந்தேன்.

நன்றி மீனாட்சி சங்கர்

ஓவியன்
28-02-2008, 02:13 AM
தங்கம் அண்ணா..!!

கலில் ஜிப்ரானுக்கு மன்றத்திலே தனித் திரி ஒன்று இருப்பதனால் உங்கள் பதிவினை இங்கே நகர்தியுள்ளேன்..

தங்கவேல்
29-02-2008, 01:55 AM
நன்றி ஓவியன். நான் இந்த பதிவை தேடிப்பார்த்து விட்டு கவிதை பக்கம் பதித்தேன்.

மலர்
06-04-2008, 07:10 AM
குழந்தைகள் இப்பிடி எல்லாம் யோசித்தால்
எப்பிடி இருக்கும்...??
குழந்தைகளின் மொழி நமக்கு புரிந்தால்......
நினைகவே வித்தியாசமா இருக்கு...
-----------
பூவு... ஹீ..ஹீ.....
உனக்கு ப்ரித்வி நினைவுக்கு வருவாரே...
வாராரா.,...... :D :D

யவனிகா
07-04-2008, 09:28 AM
நன்றி அமரன்...
இந்தத் திரியையே இப்போது தான் பார்த்தேன்.
இணையத்தில் தேடி ஒன்றொன்றாய்ப் படித்தவை அனைத்தும் ஒருங்கே இங்கே கிடைத்தது அளவில்லா மகிழ்ச்சி.

"பொத்தனூர்"பிரபு
28-06-2008, 11:36 PM
பத்தாது இன்னும் இன்னும் வேண்டும்
தொடருங்கள்

தங்கவேல்
07-07-2008, 02:44 PM
படிக்க படிக்க இனித்துக் கொண்டிருக்கும் கவிதைகள் கலில் ஜிப்ரான் படைப்புகள்...

shibly591
06-08-2008, 06:35 PM
ஜிப்ரானின் தீவிர ரசிகன் எனக்கு அத்திரி கொண்டாட்டமாக இருக்கிறது..

நன்றிகள்

"பொத்தனூர்"பிரபு
01-09-2010, 04:09 AM
அவரின் புத்தகங்களின் (தமிழில் ) பட்டியல் கிடைக்குமா?