PDA

View Full Version : திரை மறை வலி மழை..அமரன்
17-11-2007, 07:19 AM
திரை மறை வலி மழை. .


மென்றிரைக்கு இப்பால் துவண்டபடி நான்.
வெண்துவாலையால் தலைதுவட்டியபடி வான்.


பெய்த மழையின் மிச்சமாய் விழிகளில் பள்ளம்.
ஓய்ந்த மழையின் எச்சமாய் தேங்கிய வெள்ளம்.


தேக்கத்தில் காகித ஓடம் மிதக்கவிட்டு
ஏக்கத்துடன் காத்திருக்குமோருயிர் புன்னகை பூண்டு


புன்னகையுண்டு தவிப்பேன்....புண்ணகையுண்டே... தவிர்ப்பேன்
அடங்கி இருந்த ஊர் அடர்த்தியாய் நடமாடும்.


இரும்புப் பாதங்கள் துள்ளிக்குதித்து எக்காளமிடும்
வெறும் பூப்பாதங்களை சிரங்கெனக்காட்டி கட்டிப்போடும்.


தெப்பம் கண்ணை விட்டு மறையும்
தெப்பமான திரை கண்ணறையாய் மாறும்.


பச்சாத்தாபம் கொண்டு பகலவன் கடைக்கண் காட்டுவான்.
பரிதாபப்பட்டு நிலமகள் வெப்பம் உமிழ்வாள்..


விட்டெறிந்த கற்கள் சேறு அள்ளி பூசும்
விர் பார ஊர்திகள் சகதி வாரி பீச்சும்.


திரை கறையாகும்..
கறையானாக்கும்..கறையானாகும்..
உள்ளுக்குள் மனசு வலியால் துடிக்கும்...
வலி குறைக்காது துடித்து வலிக்கும்.


வலிக்க வலிக்க வலிக்கும்..
வலிக்க வலிக்க வலிக்கும்
நொய்ந்த திரை அறுந்து வீழும்.


வெட்டவெளியாய் வெள்ளமிருந்த இடம்
வெட்டும் வெளிச்சமாய் காயங்களின் தடம்.


புரட்டிப்போட்ட சேற்றில் சிக்கியபடி ஓடம்
பிடிமானமாய் ஜொலிக்கும் ஓடத்தின் ஓரம்..
=அமரன்=

சிவா.ஜி
17-11-2007, 09:05 AM
அடித்து ஓய்ந்த மழைக்குப் பிறகான நிகழ்வுகளை இலக்கியச் சுவையோடு வரிகளாக்கியிருக்கிறீர்கள்.சில இடங்களைப் புரிந்துகொள்ளுமளவு எனக்குப் பக்குவம் போதாததால்..முழுமையாக உணர்ந்து உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை தற்சமயம்.தமிழ் பெரியோர் யாரேனும் இடும் விளக்கமான பின்னூட்டம் பார்த்து மீதியையும் புரிந்து மகிழ்கிறேன்.
சில விவரிப்புகள் பிரமிப்பூட்டுகின்றன...என்னவொரு சிந்தனையென்று.வாழ்த்துகள் அமரன்.

வசீகரன்
17-11-2007, 01:28 PM
தமிழின் பிடியில் தழைத்தோங்கிய வரிகளில் அமரரின் ஆசாத்திய
இலக்கன நடையில் உவமைச்செறிவில் அமைந்த இக்கவி மழை களவாடிய
காலங்களை கண் முன்னே விரிக்கிறது....

தங்கள் எழுத்துக்கு கருததிடும் பாங்கு எனக்கு
இல்லை அமரரே என் மனதில் விரிவது.... அற்புதம் என்பதே....!

நன்றி
என்றும் நான்
வசீகரன்

பூமகள்
18-11-2007, 06:10 AM
அசத்தல்...அருமை.... அற்புதம்... அபாரம்..!
இன்னும் என்னென்ன வார்த்தைகள் தமிழில் உள்ளது என்று தேடிக் கொண்டிருக்கிறேன் உங்களின் கவியின் கருவை தேடிவது போலவே..!

சிவா அண்ணா சொன்னது போல் அமரனின் கவிக்கு அவரின் தமிழ் ஆசான் தான் பின்னூட்டமிட்டு விவரிக்க முடியும்.

பாராட்டுகள் அமரன் அண்ணா.

அமரன்
18-11-2007, 07:24 PM
என்னவொரு சிந்தனையென்று.வாழ்த்துகள் அமரன்.

மழைதூவும் வானமும், தூவானமும் தரும் மகிழ்வை
மழைக்குப்பின்னான நிகழ்வுகளும் தரவல்லவை.
நிகழ்வுகள் சிலவற்றின் போதும், பின்னரும்
மழைக்கால காட்சிகள் அப்பட்டமாகப் பொருந்தும்.
அப்படிபொருத்துப்பார்த்தபோது பிறந்த கவி இது..
நன்றி சிவா..

அமரன்
18-11-2007, 07:36 PM
தங்கள் எழுத்துக்கு கருததிடும் பாங்கு எனக்கு
இல்லை அமரரே என் மனதில் விரிவது.... அற்புதம் என்பதே....!

நன்றி
என்றும் நான்
வசீகரன்
நன்றி வசீகரன்..
வார்த்தை வசீகரத்தை உங்கள் கவிதைகளைப் பார்த்து கற்றுவருகின்றேன். அபடி ஒரு ஈர்ப்பு உங்கள் கவிதைகள்மேல்..சொல்லாட்சிமேல்.. நீங்கள் எனது பாங்கு சிறப்பு என்கின்றீர்கள்.. பயிலல் ஆர்வ இயல்பு இருக்கும் இடத்திலெல்லாம் இது இருக்கும்போலும்..

இளசு
18-11-2007, 07:41 PM
இன்பத்தின் மறுபக்கம் துன்பம்
மகிழ்வின் மறுபக்கம் துயரம்
உயரத்தின் மறுப்பகம் பள்ளம்
மழையின் மறுபக்கம் - சகதி, சாலை வடுக்கள், நோய்ப்பரவல்,,,, இப்படி!

வெண்பணி அழகு மறைந்து சவசவ சகதியாய் மாறும் அவலம்
மழைப்பின் காட்சிக்கான மேலை ஈடு..

மறுபக்கமும் பார்க்கும் வீரிய கூரிய பார்வையும்..
மறுபடி வாசிக்க வைக்கும் வார்த்தைகள் கோர்வையும்..
அமரனின் கவிதையை தமிழ் அமுதமாக்குகின்றன..

அபாரம் அமரா!

தீபா
19-11-2007, 02:38 PM
ஓய்ந்த மழை
பின்னே
ஓயாத புலமை.
என்னே!!

வாழ்த்துகள்.

சூரியன்
19-11-2007, 02:43 PM
அழகான கவிதை.
வாழ்த்துக்கள் அமரன் அண்ணா.


பச்சாத்தாபம் கொண்டு பகலவன் கடைக்கண் காட்டுவான்.
பரிதாபப்பட்டு நிலமகள் வெப்பம் உமிழ்வாள்..

இதற்கு அர்த்தம் என்ன அண்ணா?

அமரன்
20-11-2007, 07:05 PM
சிவா அண்ணா சொன்னது போல் அமரனின் கவிக்கு அவரின் தமிழ் ஆசான் தான் பின்னூட்டமிட்டு விவரிக்க முடியும்.
பாராட்டுகள் அமரன் அண்ணா.

இந்தப்பதிவை எனது தமிழாசான்கள் பார்த்தால் சாத்துப்படி நிச்சயம் எனக்கு. இப்படியா உனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தோமென்று.

புரியாததை கேட்டால் நானே சொல்லிவிடுவேனே.. ஏன் எனக்கு அடிவாங்கித்தர முயல்கின்றீர்கள். நான் பாவமில்லையா?

அமரன்
20-11-2007, 07:11 PM
மறுபக்கமும் பார்க்கும் வீரிய கூரிய பார்வையும்..
மறுபடி வாசிக்க வைக்கும் வார்த்தைகள் கோர்வையும்..
அமரனின் கவிதையை தமிழ் அமுதமாக்குகின்றன..
அபாரம் அமரா!

எந்த ஒரு செயலுக்கும் ஆகக்குறைந்தது இரண்டு பக்கங்களாவது இருக்கும். அதில் சாதக பாதகங்கள் கலந்திருக்கும். சாதகங்களை சாதமாக்கி சாதனைக்ளை வசப்படுத்தல் எனக்கு இஷ்டமானது..

அதே போல மீட்சி இல்லாத வீழ்ச்சி என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. வீழ்ந்த பள்ளத்தில் ஏதாவது ஒரு இழையின் முனை தொங்கிக்கொண்டு இருக்கும். இல்லாதுவிட்டால் படிகளை ஏற்படுத்த வெளிப்புற உந்துதல் நிச்சயம் இருக்கும். எழுச்சிக்கு இவை போதாதா..

மிக்க நன்றி அண்ணா.

அமரன்
20-11-2007, 07:14 PM
ஓய்ந்த மழை
பின்னே
ஓயாத புலமை.
என்னே!!
வாழ்த்துகள்.
பாய்ந்தோடும் வெள்ளங்கள்
வளங்களையும் விட்டுச்செல்கின்றன.
காய்ந்திருக்கும் தரிசுநிலம்
வளங்களை எடுத்துக்கொள்கின்றது..

தென்றலுக்கு தெரியாதா
தெம்மாங்கீரம் எங்கிருந்து வருகிறதென்று..
நன்றி தென்றலே!

அமரன்
20-11-2007, 07:22 PM
அழகான கவிதை.
வாழ்த்துக்கள் அமரன் அண்ணா.
இதற்கு அர்த்தம் என்ன அண்ணா?
வாழ்த்துக்கு நன்றி சூரியன்.

வரிகளின்
வர்ணமதை அப்புறம் வெளுக்கிறேன்
வர்ணமதை இப்போது நவில்கிறேன்.

ஓடியது போக எஞ்சிய நீர் உருவாக்கிய தேக்கம்
ஓங்கி பாய்ச்சும் சூரியக்கதிர்களின் வீரியத்தாலும்
புசித்தநிலத்தின் செரிமானத்தின் கசிவினாலும்
கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவதில்லையா?

அதுவே வர்ணம்..மிக்க நன்றி சூரியன்..

ஆதவா
28-11-2007, 04:27 AM
இக்கவிதைக்கு வரிக்குவரி விளக்கம் எழுதுங்களேன் அமரன்....

சில சந்தேகங்களை நான் தீர்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்..

நன்றி

ஆதவா
30-11-2007, 09:08 AM
என்ன அமரரே! ஆளையே காணோமே!