PDA

View Full Version : சென்னையில் திடீர் கடல் கொந்தளிப்பு : 10 அடி உ



mgandhi
15-11-2007, 05:31 PM
சென்னையில் திடீர் கடல் கொந்தளிப்பு : 10 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியதால் மக்கள் ஓட்டம் : பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் திடீரென்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து எண்ணூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னையில் புகழ்பெற்ற மெரினா கடற்கரை மற்றும் எண்ணூர், ராயபுரம் பகுதியில் உள்ள கடல் பகுதிகளில் இன்று காலை முதலே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. நேரம் ஆக ஆக அலைகளின் சீற்றம் அதிகரித்தது. திருவொற்றியூர் அப்பர் மேடு கடல் அரிப்பு ஏற்பட்டது. இதில் பத்துக்கும் அதிகமான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின.

காசிமேடு பகுதியில் கடல் கொந்தளிப்பால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 10 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடி படகுகள், வலைகள், கட்டுமரங்களை கடற்கரையில் இருந்து எடுத்து வந்து சாலைகளில் போட்டனர். மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

எண்ணூர் பகுதியில் ஆர்பரித்து வரும் அலைகளால் பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கடல் அரிப்பும் ஏற்பட்டது. இதனால் கடற்கரை சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் எண்ணூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்ததால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் கடற்கரை ஓரத்தில் போலீசார் குதிரைகளில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே ஒரு சில காதல் ஜோடிகள் மட்டுமே தென்பட்டனர்.

சுனாமி பீதி : கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு சென்னை நகரில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். இன்று பிரமாண்ட அலைகள் ஏற்பட்டதால் சுனாமி வருமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போனார்கள். இதனால் கடற்கரை சாலை மற்றும் வடசென்னை பகுதியில் பரபரப்பு நிலவியது.
நன்றி தினமலர்