PDA

View Full Version : அன்புமகள் எனக்காக..



மலர்
15-11-2007, 11:28 AM
அன்றொருநாள் என் அம்மாவுக்காய் நான் எழுதிய முதல் கவி இது...

பல நாட்கள் என் கணிணியில் உறங்க
இன்று என் மன்ற சகோதரர்களின் விருப்பத்துக்கு இணங்க
என்னுடைய இரண்டாயிரமாவது பதிவாய் உங்கள் முன்....


நினைத்து பார்க்கையில்

நெஞ்சம் இனிக்கிறது-கூடவே

கொஞ்சம் கனக்கிறது..!

பத்துமாதம் எனைசுமந்து

பத்தியங்கள் பலவிருந்து

பக்குவமாய் எனையீன்று

பாலூட்டி சோறூட்டி

நீராட்டி சீராட்டி

கைப்பிடித்து நடைபழக்கி

தமிழெடுத்து சொல்பழக்கி

எனக்காக விரதமிருந்து

இரவெல்லாம் விழித்திருந்து

பொத்திபொத்தி எனைவைத்து

மொட்டாக எனைக் காத்து

மலராக நான் மலர

வேலியிட்டு விருந்து வைத்து

எட்டிநின்று எனை பார்த்து

உள்ளுக்குள் அகமகிழ்ந்து

வேராக நீயிருந்து

விழுதாக எனை வளர்த்து

உனக்கென்று வாழாமல்

எனக்கென்று தினம் வாழும்

என் அன்னை தெய்வமே..!

என்னதவம் செய்துவிட்டேன்

உன்னைநான் பெறுவதற்க்கு..!



உன்னில் உதித்ததாலா

உன்போல் உதித்ததாலா

என்மேல் உனக்கு

இத்தனை பிரியம்?

என்னை பெற்றெடுத்து நீ

என்னை பெற்றவளாக

உன்னை பெற்றுகொண்டு நான்

உன்னை பெற்றவளானேன்..!

எனக்கு ஒன்றெனில்

நீ துடிப்பதும் ஏனோ?

என்நெஞ்சில் துடிப்பதும்

உன்னுயிர் தானோ?!

தாயே....!

ஈருடல் ஓருயிராய்

இப்பிறவி மட்டுமின்றி

ஏழேழு பிறவிக்கும்

தாயாக நீயிருக்க

சேயாக நான் பிறக்க

அருள்வாயா ஒருவரம்

அன்புமகள் எனக்காக?!

அக்னி
15-11-2007, 11:29 AM
வாழ்த்துக்கள் மலர்...
முதற்கவிதை, உங்கள் முதன்மையான தாய்க்காக... அமைந்தது பெரும் சிறப்பு...
கன்னிக் கவிதைக்கு முதல் வாழ்த்துக்கள்...
கவிமலராக திகழ, வளர, புகழ்பெற என்றும் வாழ்த்துக்கள்...
விரிவான பின்னூட்டம் கொண்டு மீண்டும் வருவேன்...

கன்னிக்கவிதைக்காக 986.5 iCash. அவ்வளவுதான் இருக்கு.

அன்புரசிகன்
15-11-2007, 11:34 AM
ஏழேழு பிறவிக்கும்

தாயாக நீயிருக்க

சேயாக நான் பிறக்க

அருள்வாயா ஒருவரம்

அன்புமகள் எனக்காக?!

வேறென்ன வேண்டும்... உங்கள் தாயுக்கு.... உங்கள் வால் தனத்தை காட்ட இன்னொரு பிறவி கேட்க்கிறீர்கள்...

அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள் மலர்....

யாரங்கே... ஆதவாவை அழைத்து வாருங்கள். 10000 பறித்து மலருக்கு கொடுங்கள்....

சாம்பவி
15-11-2007, 11:36 AM
வாவ்..... !!!!!!!!!!!!!!!!
நன்று தாயே..... !
அன்னைக்கும் அன்னை நீயே.... !

சிவா.ஜி
15-11-2007, 11:52 AM
[COLOR=\"Magenta\"][B]
என்னை பெற்றெடுத்து நீ

என்னை பெற்றவளாக

உன்னை பெற்றுகொண்டு நான்

உன்னை பெற்றவளானேன்..!



மலரெழுதிய கவிதை மணக்காமலிருக்குமா...?உலகத்திலேயே உயர்ந்த உன்னத உறவு அன்னையெனும் உறவு. அவளுக்காய் நீ எழுதிய கவிதை அழகு,அருமை.
அதிலும் மேற்குறிப்பிட்ட அந்த வரிகள்...அடடா...என்னவென்று சொல்வது. பிரமாதம்.இதோ என் பரிசு 1000 பொற்காசுகள் என் தங்கைக்கு.வாழ்த்துகள் மலர்.தொடரட்டும் உன்னுடைய கவிதை சாம்ராஜ்யம்.

நேசம்
15-11-2007, 12:12 PM
அன்பு அன்னைக்கு தன் படைத்த பாச கவிதைஅதிலும் முதல் படைப்பை,முத்தாயிப்பாக இரண்டாயிரம் பதிப்பா தந்தற்கு வாழ்த்துக்கள்.
மேலும் பல்லாயிரங்களை தொட வாழ்த்துக்கள்.

தாமரை
15-11-2007, 01:32 PM
தொடர்ந்து கவியெழுதலாமே மலர்.

தாயருமை முற்றிலும் உணர்வது
தாயாகும் பொழுது
வயிற்றில் சுமந்த தாயை
நெஞ்சில் சுமந்து

அறிஞர்
15-11-2007, 01:38 PM
பெற்றெடுத்த அன்னைக்கு
ஒரு அன்பு கீதம்....

அருமை மலர்...

இன்னும் நிறைய எழுதுங்கள்...

ஓவியன்
15-11-2007, 02:03 PM
அன்புத் தங்கைக்கு..!!

இவ்வளவு திறமைகளுடனா இவ்வளவு நாட்கள் கவிதை எழுதாமல் இருந்தீர்கள் மலர்...!!

எப்போதும் நம் முதல் அடி...!
சரியான இடத்தில்
சரியான நேரத்தில்
சரியான வகையில்
அமைந்தால் தொடரும்
நம் அடிகளும்
சரியாக, வழமாக
வெற்றிப் பாதை நோக்கி
நகர்வதை யாராலும் தடுக்க முடியாது...!!

இங்கே உங்கள் முதலடி
சரியாக அமைந்துள்ளது...
தொடரப் போகும் வெற்றிகளுக்கு
என் முன் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...!! :)

பூமகள்
15-11-2007, 02:09 PM
அன்பு சகோதரி மலர்..
உன் கவியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை..!

கை வசம் இத்தனை திறமையா?
உன்னைப் பெற்ற அன்னை பேறு பெற்றுவிட்டார்..!
இக்கவி படித்தால்,
உச்சி முகர்ந்து உன் நெற்றியில் முத்தமழை பொழிவார்..! :rolleyes:
அப்போது இந்த அக்காவையும் நினைத்துக் கொள்..! :icon_rollout:

பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் மலர்..! :icon_b:

மன்றத்து சிட்டுக் குயில் மலரின் முதல் கவிக்காய்..! 2000இ-பணம் பரிசு..!

பாரதி
15-11-2007, 03:13 PM
அருமை... அருமை மலர்.
அன்றொரு நாள் உண்டான கவிதையை
இன்று தமிழ்மன்றத்தில் ஈன்றதாலும் கூட பெற்றவளானாய்.
கவிதைப்பகுதியிலும் மலரின் நறுமணம் என்றும் வீசட்டும்.
இரண்டாயிரங்களை தொட்டதற்கும் சேர்த்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அமரன்
15-11-2007, 03:47 PM
மலரின் முதல்க்கவி
மலரின் முதலானகவிக்கு
மலர்தூவும் கவியானதில்
மலர்ச்சி என்னுள்...

உன்னைப்பிரசவித்தவளுக்கு
உன்னால் பிரசவிக்கபட்ட கவி..
உவகையுடன் பாராட்டுகின்றேன்.
உச்சமடைய வாழ்த்துகின்றேன்..

சுமந்து நீ பிரசவித்ததை
பிரசவித்தவள் பார்த்தால்
பெற்றிடுவாள்....ஈன்ற
பொழுதில் பெற்றவின்பம்..



பத்தியங்கள் பலவிருந்து
உள்ளிருந்த பத்துமாதம்
பத்தியம் மட்டுமல்ல
பத்தியும் கொள்வாளவள்..
பதிமேலும் மிதிமேலும்...!

பத்தியம் பலகூட
பலவிருந்து அவளுக்கு..!

நீயாக எழுதினாயோ
தானாக அமைந்ததோ..
இங்கேயும் உனக்கு
அன்னையின் ஆசி...!

தங்குதடையின்றித் தொடரும்
இனியுனது கவிதையாட்சி..!


கைப்பிடித்து நடைபழக்கி

நடை பழக்கிய சாதனம்-புழக்
கடை தூசுக்களில் தோய்ந்து
தட்டினால் உடையும் தறுவாயில்
தட்டுகளில் ஏறவும் மூலதனமாகும்..



தமிழெடுத்து சொல்பழக்கி

தமிழுக்கும் அவளே ஆதாரம்...
வெண்டாமரையிலிருந்து
அள்ளிதரும் வள்ளலல்லவாவள்..!
உந்தமிழில் இல்லை சேதாரம்..!



என்னை பெற்றெடுத்து நீ

என்னை பெற்றவளாக

உன்னை பெற்றுகொண்டு நான்
உன்னை பெற்றவளானேன்..!

அருமை அருமை..
என்னவொரு சுற்றல்
நீ வாயாடி மட்டுமல்ல
நல்ல வார்த்தையாடியும்....
தொடர்க.. வளர்க...மகிழ்விக்க

மதி
16-11-2007, 01:19 AM
முத்தாய்ப்பாய் முதல் கவிதை..அன்னை பற்றி..
உங்கள் தாய் மிக்க பெருமிதம் கொள்வார் உம்மை பெற்றமைக்கு...
வாழ்த்துக்கள்...
இனி நிறைய கவிதைகள் தாருங்கள்..

ஷீ-நிசி
16-11-2007, 03:03 AM
மலர்... நெஜமாகவே சொல்கிறேன்... உங்களிடம் கவித்திறமை நிறையவே இருக்கு... நீங்கள் தொடர்ந்து எழுதினால் எங்களில் பலரை மிஞ்சி விடுவீர்கள்... கவிதையில் வார்த்தை அடுக்குகள் பிரமாதம்...

என் அன்பு பரிசு 5,000 இ.பணம்!

வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

சூரியன்
17-11-2007, 10:44 AM
மலர் அக்கா கவிதை கலக்கலா இருக்கு.

யவனிகா
17-11-2007, 05:55 PM
மலரின் கவிதை...முதல் இதழ்...எதிர்பார்க்கா நேரத்தில்...எதிர்பார்க்கா வனப்புடன்... மலர்ந்து மன்றத்தில் மணம் வீசுகிறது.

"அ" என்ற முதலெழுத்தில் தமிழை ஆரம்பிப்பது போல,
அம்மாவை முதலாகக் கொண்டு ஆரம்பித்த கவிதைக்களம்...தாய்மையைப் போலவே அளப்பரிய சக்கியாய் விசுவரூபமெடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அமரனின் பின்னூட்டக் கவிதையும் அழகு. பேசாமல் "பின்னூட்டக் கவியரசு" அப்படின்னு பட்டம் குடுத்தரலாமா?

உதயா
17-11-2007, 05:58 PM
தாயிக்கு கவிதை எழுதிய தாய்..

இளசு
17-11-2007, 08:51 PM
பெற்றவளுக்காகப் - பெற்றவள்!

முதல் தாய்க்கு எழுதியதைப் பகிர்ந்ததில்
இரண்டாம் தாய் மன்றம் மகிழ்வாள் மிகவும்..

முதல் தெய்வம் அன்னைக்கு முதல் கவிதை அர்ச்சனையாய்..

மலர் வீசிய மலரில் - பாசம், வாசம்!

வாழ்த்துகள் மலர்!

இரண்டாயிரமாம் பதிவுக்கு 2000 இபணம் பரிசு!

அன்புரசிகன்
18-11-2007, 09:29 AM
எங்கப்பா ஆதவா??? ஆளு இந்தப்பக்கம் வரவேயில்லையா???

ஆதவா
18-11-2007, 10:20 AM
அன்பு மலர்,

உங்களை கவிதை எழுதச் சொல்லி, எத்தனை பேர் கேட்டார்களோ தெரியாது, நான் மிக அதிகமாக கேட்டேன், குறிப்பாக, ப்ளாக் மெயில் கூட செய்தேன், ஐகாசு மோகத்தை கணக்காகக் கொண்டு,

முதல் கவிதை முதன்முதலில் அன்னைக்குப் படைத்து கவிதைக்கான தரத்தையும், தன்னடக்கத்தையும் உயர்த்திக் கொண்டீர்கள். வாழ்த்துகள்.

முதலில் நிறைகள்... முதல் கவிதை என்பதால்...

மிக அதிகமான முன்னேற்றம் கவிதையில் தெரிகிறது. கவிதை படிக்க இன்பமே!!! அம்மாவை கணக்காகக் கொண்டு எழுதியிருப்பது மேலும் ஒரு ப்ளஸ் பாயின்ட்.
எழுத்துப் பிழை இல்லாமல் எழுதியிருப்பதும் ஆச்சரியமே! அழகான கருவை எழுத்துப் பிழையால் கொலை செய்யாமல் எழுதியிருப்பது மனதிற்கு இதம், முதல் கவிதை என்ற போர்வை போர்த்திக் கொண்டு படிக்க எவருக்கும் இயலாது. அந்த அளவுக்கு கவிதையின் நடை சலிப்பில்லாமல் செல்லுகிறது.

சரி குறைகள் : முதல் கவிதையாக இருந்தாலும்.

ஒரு வரி விட்டு விட்டு எழுதாமல் எப்போதும் போலவே எழுதுங்கள்... அதுவே காண்பதற்கு நன்றாக இருக்கும். மேலும் வேறெந்த குறையும் சொல்லுவதற்கில்லை.

நேரமின்மையால் கவிதைக்கான விரிவான விமர்சனம் பிறிதொரு நாள் தருகிறேன். அதுவரை பொறுத்தருள்க...

கிழிமுடிப்பு குறையாக இருப்பதால் தருவதை ஏற்றுக் கொள்ளவும், மீதி சில தினங்களில்,,, அனுசரிப்பை எதிர்நோக்குகிறேன்,.

ஆதவன்.

அமரன்
18-11-2007, 10:26 AM
கிழிமுடிப்பு குறையாக இருப்பதால் தருவதை ஏற்றுக் கொள்ளவும், மீதி சில தினங்களில்,,, அனுசரிப்பை எதிர்நோக்குகிறேன்,.

ஆதவன்.
ஆதவாவின் "கிழி"முடிப்பு குறைவாக இருப்பதால், ஏதோ என்னால் முடிஞ்ச "கிளி"முடிப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள்

அக்னி
19-11-2007, 10:18 PM
மீண்டும் பாராட்டுக்களுடன்...
கவிதையை ஆதவா சொன்னதுபோல, நெருக்கிவைத்துப் பார்த்தேன். மிக அழகாக ஒளிர்கின்றது...


நினைத்து பார்க்கையில்
நெஞ்சம் இனிக்கிறது-கூடவே
கொஞ்சம் கனக்கிறது..!

பத்துமாதம் எனைசுமந்து
பத்தியங்கள் பலவிருந்து
பக்குவமாய் எனையீன்று
பாலூட்டி சோறூட்டி
நீராட்டி சீராட்டி
கைப்பிடித்து நடைபழக்கி
தமிழெடுத்து சொல்பழக்கி
எனக்காக விரதமிருந்து
இரவெல்லாம் விழித்திருந்து
பொத்திபொத்தி எனைவைத்து
மொட்டாக எனைக் காத்து
மலராக நான் மலர
வேலியிட்டு விருந்து வைத்து
எட்டிநின்று எனை பார்த்து
உள்ளுக்குள் அகமகிழ்ந்து
வேராக நீயிருந்து
விழுதாக எனை வளர்த்து
உனக்கென்று வாழாமல்
எனக்கென்று தினம் வாழும்
என் அன்னை தெய்வமே..!

என்னதவம் செய்துவிட்டேன்
உன்னைநான் பெறுவதற்க்கு..!

உன்னில் உதித்ததாலா
உன்போல் உதித்ததாலா
என்மேல் உனக்கு
இத்தனை பிரியம்?

என்னை பெற்றெடுத்து நீ
என்னை பெற்றவளாக
உன்னை பெற்றுகொண்டு நான்
உன்னை பெற்றவளானேன்..!

எனக்கு ஒன்றெனில்
நீ துடிப்பதும் ஏனோ?
என்நெஞ்சில் துடிப்பதும்
உன்னுயிர் தானோ?!

தாயே....!

ஈருடல் ஓருயிராய்
இப்பிறவி மட்டுமின்றி
ஏழேழு பிறவிக்கும்
தாயாக நீயிருக்க
சேயாக நான் பிறக்க
அருள்வாயா ஒருவரம்

அன்புமகள் எனக்காக?!
மடிக்கனமாய் தாங்கிய தாய்க்கு,
கனம் செய்யும் கனதிக் கவி...

முதல் அடி பார்த்து மகிழ்ந்த தாய்(மை),
முதலடி பார்த்து மெய்யுருகிச் சிலிர்க்கும்...

தலைப்பிலிருந்து முடிவு வரை பொருதாது பொருந்தும் வரிகள்...
அழகிய கவிச் செதுக்கல்...
தலைப்பே முடிவாக.., மாறாச்சுழற்சி...
சொல்கின்றது, இந்த பந்தத்தின் தொடர்ச்சி...

அடுத்து, முற்றுப்புள்ளியில்லா அழகிய கோலத்தொடர் வரியாக..,
தாய்மையின் புகழ்பாடும் இணைந்த வார்த்தைகள், வாச மலர்ச்சரம்... தமிழ்த்தாயின் இனிய வரம்...
பந்தம் இணைக்கப்பட்ட சுவைப் பாந்தம்... கவரும் காந்தம்...

பெற்றெடுத்து, பெற்றுக்கொண்டு பெற்றவர்கள்... தாயும் சேயும்...
அதனால் பெற்றோம் யாமும் கவியின்பம்...

பிறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் போதே, மீண்டும் சேயாகப் பிறக்க வரம் அருள்வாய் என்று கேட்கும், இறுதி வரிகள் சொல்கின்றன, தாய் மேல் கொண்ட பாசத்தின் ஆழம்...
தாயுடன் வாழ நினைக்கும் காலத்தின் நீளம், மீண்டும் ஆரம்பத்திலிருந்தே, வாழும் இப்பிறப்பிலும் மீள வேண்டும் என்று, கேட்கும் வரிகளன்றோ அவை...
வியக்கின்றேன்... வரிகளின் வீரியத்தை...

கவனிக்கவேண்டும்...
நிறுத்தற்குறிகள் பிரயோகம்.., கவிக்கான வடிவம்...

மன்றத் தங்கை, தங்க மங்கை மலர்...
மலர்ந்தாள், அன்னை மடியில்...

என்றும் பாராட்டுக்கள்...

முதல் முயற்சி... உயர்வு நவிற்சி...
தொடரட்டும் கவிதையில் வளர்ச்சி...

என்றும் வாழ்த்துக்கள்...

ஆதவா
21-11-2007, 01:54 PM
ஆதவாவின் "கிழி"முடிப்பு குறைவாக இருப்பதால், ஏதோ என்னால் முடிஞ்ச "கிளி"முடிப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள்

வந்து சேரவில்லை..... கிளி' இறந்துவிட்டதோ? ஹி ஹி

அக்னியின் பின்னூட்டம் பிரமாதம்.... எப்படித்தான் யோசிக்கிறீங்களோ?

வாழ்த்துகள்