PDA

View Full Version : சொற்சிலம்ப சொற்பதங்கள்! ..



ஓவியன்
15-11-2007, 04:58 AM
மன்றப் பூங்காவில் அமோக நடைபயிலும் சொற் சிலம்ப "திரி"யில் அழகான, அருமையான பல தமிழ் சொற்பதங்கள் பிரயோகிக்கப் படுவது நாம் அறிந்ததே...
அந்த சொற்பதங்களின் அர்த்தங்களை பலரும் அறியும் பொருட்டு இந்த திரி "பென்ஸ்" அண்ணா மற்றும் "தாமரை" அண்ணாக்களின் விருப்பத்தின் பெயரில் ஆரம்பிக்கப்படுகிறது....

சொற் சிலம்பத்தில் பிரயோகிக்கப்படும் வார்த்தையாடல்களுக்கான விளக்கங்களை இங்கே பெறுவோம் நண்பர்களே..!! :)

..

ஓவியன்
15-11-2007, 05:02 AM
படுத்தே படுத்தினவன் பரந்தாமன்...
கோதையை கோதண்டன்
படுத்தின பாடு,
கோதும்பி அறியும்
மார்கழி குளிரில்,
கீசரில்லாது
குளித்துப் பாரும் புரியும்.... !

இதில் வரும் "கோதும்பி" என்றால் என்னவென விளக்க முடியுமா சாம்பவி..?

நேசம்
15-11-2007, 05:06 AM
சொற் சிலம்ப திரியில் வரும் தமிழ் சொற்களை மட்டும் தான் கேட்கணுமா? நான் முதல்ல, நி கடைசிலெ திரியில் சகோதரி சாம்பவி மற்றும் ஆதி ஆகியோர் அழகான தமிழ் சொற்களை கொடுக்கிறார்கள்.ஆனால் இவற்றில் சிலதுக்கு அர்த்தம் தெரியவில்லை.அவற்றையும் கேட்கலாமா ?

ஓவியன்
15-11-2007, 05:40 AM
சொற் சிலம்ப திரியில் வரும் தமிழ் சொற்களை மட்டும் தான் கேட்கணுமா? நான் முதல்ல, நி கடைசிலெ திரியில் சகோதரி சாம்பவி மற்றும் ஆதி ஆகியோர் அழகான தமிழ் சொற்களை கொடுக்கிறார்கள்.ஆனால் இவற்றில் சிலதுக்கு அர்த்தம் தெரியவில்லை.அவற்றையும் கேட்கலாமா ?

நல்ல விடயம்தான் ஆனால் எல்லா இடத்திலுள்ள சொல் விளக்கங்களை இங்கே கேட்டால் இந்த திரி கொஞ்சம் குளப்பமாகிவிடுமே...!! :frown:

அத்துடன் "நான் முதல்ல, நீ கடைசி" திரியில் வரும் சந்தேகங்களை அதே திரியில் திரியின் தொடர்ச்சி பாதிக்காதவாறு கேட்டுத் தெளியலாமே...???

அவ்வாறான அருஞ்சொற்களை உபயோகிப்போர் அடைப்புக் குறிக்குள் அந்த சொற்களின் விளக்கத்தையும் தந்தால் இன்னும் நன்றாக, பயனுள்ளதாக இருக்கும்...!!

அமரன்
15-11-2007, 07:41 AM
கோதும்பி என்பது வண்டினம் என நினைக்கின்றேன்..சரியா? தவறா?

சாம்பவி
15-11-2007, 10:29 AM
கோதும்பி...... !!!!!!!!

கோவும் தும்பியும் ........ !!!
எண்ணும்மை.... !
தொக்கி நிற்கிறது.... !

கோ ... கோமாதா..... !
தும்பி ... தும்பி தான்........ !

இன்னொன்றும் உண்டு....

"பூவேறு கோனும் புரந்தரனும்.................... சென்றூதாய் கோத்தும்பி"

தும்பி விடு தூது... !
திருவாசகம்..... !
இசைஞானியின் பிறவி இலக்கு,..... !
பவதாரிணி ., பவ்யமாய் திவ்யமாய் பாடி இருப்பார்.... !
கண்ணை மூடிக் கேட்க..... அம்பலத்தான் கண் முன்னே.... !

இதிலேயும் கோ ....தும்பி தான்.... !
ஆனா இங்கே.... கோ ., கோமான்.... தலைவன்.... ராஜன்....
கோ தும்பி... ராஜ தும்பி... !




படுத்தே படுத்தினவன் பரந்தாமன்...
கோதையை கோதண்டன்
படுத்தின பாடு,
கோதும்பி அறியும்
மார்கழி குளிரில்,
கீசரில்லாது
குளித்துப் பாரும் புரியும்.... !

இதில் வரும் "கோதும்பி" என்றால் என்னவென விளக்க முடியுமா சாம்பவி..?

இங்கே....
கோகுலத்துக் கோமானின் கோமாதா அறியாதோ கோதை உள்ளம்... !
சரி.... கோ அறியும்...... ஒத்துக்கலாம்..... தும்பி எப்படி அறியும்.... ?

சூடிக் கொடுக்க., குடலையெடுத்து வனம் புகுந்தவள் .,
மாலைக்காய் மலரெல்லாம் பறித்து விட .,
தும்பிக்கு துறவறம் அனுதினமும்... !
துணை பிரிந்த தும்பி அறியாதோ அவள் மனம்..... !

பி.கு. :
கோதண்டன் கோதையை மட்டுமா படுத்தினான்....
என்னையும் தான்.... !
கோதண்டன்..... கோ தண்டன்....!!!!!
இந்த கோ.... co...... உடன்பிறந்தோன்.... !
ஐதர் காலத்து கணிணி..... ! ஆயினும் மாற்றான்.... !
தொங்கலும் தொடங்கலுமாய் ..... ! ( hang ., restart )
தட்டச்சு வேறு அச்சுறுத்துகிறது.... !
பிழையாயின் மன்னிக்க.... !


இதென்ன ஹரிகதை எழுத வைத்து விட்டீர்.... !

ஓவியன்
15-11-2007, 02:36 PM
தெளிந்தேன்
உங்கள்
விளக்கங்கள் யாவும்
தெள்ளிய தேன்...!!

மிக்க நன்றிகள், இவ்வாறு இன்னும் பல பாடங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்...!! :icon_b:

இளசு
17-11-2007, 06:13 AM
சாம்பவியா...இல்லை சங்கத்தமிழ்க்கவியா?

வியந்து சமைந்தேன்!

ஓவியன்
18-11-2007, 01:38 PM
உமது
பாட்டனாய் ஆனதும் தெரியாதோ ?
(கிருஷ்ணனின் பேரன் பெயர் அனிருத்)
(அனிருத் தின் அப்பன் ப்ரத்யும்னன் மன்மதனின் அவதாரம்)

அனிருத்தோட தயவால் அய்யா மன்மதனாக்கும்

ஆண்டாளை
ஆண்டான்
சொக்கனும் தான்

மதுரையை ஆண்ட மீனாட்சியை ஆண்டதால், ஆண்டாளை ஆண்டான்

அப்பனுமாகி அம்மையுமாகி
அத்தனை உறவுமாகி
கூலியுமாகி கேலியுமாகி
கல்யாணம் செய்வித்தும்
கல்யாணம் தடுத்தும்

உலக உயிர்களுக்கு அப்பன் சிவன்
அவன் தாயுமானவனாக அமர்ந்தது திருச்சியிலே
பிட்டுக்கு மண்சுமந்து கூலியானவன்
தட்சனால் அவிர்பாகம் மறுக்கப்பட்டு கேலிகளுக்கு ஆளானவன்
திருஞான் சம்பந்தருக்கு கல்யாணம் செய்வித்த அவன்
சுந்தரரின் கல்யாணத்தைத் தடுத்தான்

ஆடாத ஆட்டம் ஆடி
ஆட்டுவிப்பான்

ஊர்த்துவ தாண்டவம், ஆனந்தத் தாண்டவம், ஊழித் தாண்டவம் என பலவித நடனங்களை ஆடும் அவன், திருவிளையாடல்களையும் ஆடி மக்களைச் சோதிப்பவன்.

அருளால்
மாமன் மாமனுக்கே மகனுமானான்

முருகன் - தாமரை செல்வன்
முருகனின் மாமன் - விஷ்ணு
மாமன் மகன் - பிரம்மா - தாமரை செல்வன்

ஊர் மாறினாலும்
உருமாறினாலும்
உள்ளமொன்று தானே
எல்லாமே சாம்பவியின்
அம்சம் தானே.... !

ஊர்மாறிப் பேர்மாறி
உருமாறிக் கருமாறி
யாராட்சி வந்தாலும்
மீன்(கொடி)ஆட்சியில் தானே
தமிழ்ச் சங்கம்.

தாமரை அண்ணா!!

மேற்கண்ட கவிச் செறிவில் நனைய வைத்தமைக்கு மிக்க நன்றிகள் முதற்கண்...!!

மீண்டும் எனக்கு ஒரு சின்ன சொற்பத விளக்கமின்மை, அது என்ன அண்ணா "அவிர்பாகம்" ..?

யவனிகா
18-11-2007, 01:45 PM
"அவிர் பாகம்" னா யாகத்தின் போது மரியாதை நிமித்தம் அளிக்கப்படும் பங்கோ?

சிவா.ஜி
18-11-2007, 01:47 PM
\"அவிர் பாகம்\" னா யாகத்தின் போது மரியாதை நிமித்தம் அளிக்கப்படும் பங்கோ?

நான் கூட அப்படித்தான் நினைத்தேன்.தட்சனின் மருமகன் சிவன்.மரியாதையான அழைப்புக்கு அப்படி ஒரு பாகம் கொடுத்து அழைப்பதோ...தாமரைதான் விளக்க வேண்டும்.

தாமரை
18-11-2007, 02:08 PM
அவிர் பாகம் என்பது யாகத்தின் போது யாக குண்டத்தில் போடப்படும் அர்ப்பணங்கள்.. இவற்றை அக்னி பெற்று அனைத்து தேவர்களுக்கும் அவர்களுக்கு(அவிர்) உரிய பங்கை (பாகம்) சேர்ப்பிக்கிறான்.

தட்சன் யாகத்தின் போது சிவனை மருமகன் என்ற முறையில் யாகத்திற்கு அழைக்கவில்லை. அதே சமயம் ஒரு கடவுள் என்ற முறையில் அவருக்கு யாகத்தில் முறையாய் அவருக்கு படைக்க வேண்டிய அவிர்பாகத்தையும் படைக்கவில்லை.

உறவுக்கு குரல் கொடுத்தாள் சதி. உரிமைக்கு தலையெடுத்தான் அரன்.
ஆட்டாத தலையை ஆட்டுத் தலையாக்கினான்.

ஓவியன்
18-11-2007, 02:21 PM
உறவுக்கு குரல் கொடுத்தால் சதி. உரிமைக்கு தலையெடுத்தான் அரன்.
ஆட்டாத தலையை ஆட்டுத் தலையாக்கினான்.

அடடா..!!
உறவுக்குள் இருந்த பகையை
உரிமைக் குரலால் ஆட்டுத் தலையாக்க
காரணமா இந்த "அவிர்பாகம்"..!!

தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள் பல செல்வண்ணா..!! :)

ஓவியன்
24-11-2007, 01:59 AM
அஞ்சுதலையில் எது
ஆறுதலை
அஞ்சுகையை நீ ஆக்க
அவனோ
ஆறவனை
அக்னியிடம் கொடுத்து
சக்களத்திக்கு
சன்மானமாய் அனுப்பிவிட்டானே
குடுமியாண்டவன்
முக்கண்ணனை
காயவைத்தாட்டி
எடுப்பீரே
எண்ணெய்

இதில் வரும் ஆறவன் என்பது யார் செல்வன் அண்ணா?

அத்துடன் இக்கவிதையின் பொழிப்பையும் தருவீர்களெனின் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்...

தாமரை
24-11-2007, 02:25 AM
இதில் வரும் ஆறவன் என்பது யார் செல்வன் அண்ணா?

அத்துடன் இக்கவிதையின் பொழிப்பையும் தருவீர்களெனின் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்...

அஞ்சுதலையில் எது
ஆறுதலை
அஞ்சுகையை நீ ஆக்க
அவனோ
ஆறவனை
அக்னியிடம் கொடுத்து
சக்களத்திக்கு
சன்மானமாய் அனுப்பிவிட்டானே
குடுமியாண்டவன்
முக்கண்ணனை
காயவைத்தாட்டி
எடுப்பீரே
எண்ணெய்

பரமனுக்கு ஐந்துதலைகள் உண்டு.. அந்த ஐந்து தலைகளுக்கும் மேலே கண்ணுக்குத் தெரியாத ஆறாவது முகம் அதோமுகம். அதோ கதி என்றால் யாருக்கும் தெரியாத கதி அல்லவா..

ஆறாவது தலை.. அதே சமயம் கங்கை ஆறு எந்த தலையில் அமர்ந்தது என்ற கேள்வியும் உண்டு.. சங்கரன் தலையில் எத்தலையில் அமர்ந்தது கங்கை என்ற கேள்வி..

ஐந்து கை கொண்ட விநாயகனை பார்வதி உடல் அழுக்கிலிருந்து திரட்டிப் படைக்கிறாள். ஆனால் திரிபுரமெரித்தவனோ ஆறாய் (ஆறு மக்களாய்) முருகனை நெற்றிக்கண்ணில் இருந்து பிறப்பித்து அக்னியிடம் கொடுத்து கங்கையில் விடச் சொல்கிறான். கங்கையில் இருந்து பிறந்ததால் காங்கேயன் என்ற பெயர் இருவருக்கு உண்டு. ஒன்று முருகன்.. இன்னொன்று பீஷ்மன்.,

கங்கையின் கணவன் சங்கரன் என்கிறோம். கங்கை சங்கரனின் மகள் என்கிறது வட இந்தியப் புராணங்கள் சில. சந்தனு கங்கையை மணந்து அஷ்ட திக் வசுக்களை பிள்ளையாய் பெற்றான்.. அவற்றில் பீஷ்மனைத் தவிர மற்றோர் பிறந்த உடனேயே கங்கையால் கொள்ளப்பட்டனர் என்பது மகாபாரதக்கதை. எனில் கங்கையை எப்படி ஈசனுக்கு மனைவியாக்குவது.. ஒரு ஆண் தன் தலையில் வைத்தாடுவது இருவரைத்தான்.. மனைவி, மகள்..

அதே போல் முருகன் தம்பியல்ல அண்ணன். புராணத்தை சற்றே உற்று நோக்கினால் புரியும். பரமன் பார்வதியை மணக்கும் முன்னரே காம தகனம் நடந்த உடனே நெற்றிக்கண் திறந்து முருகனைப் படைத்து விடுகிறான். ஆனால் பார்வதியோ மணத்திற்குப் பின்னால் கைலாயத்தில் வாழும் காலத்தில் ஆனைமுகனை படைக்கிறாள்.. அப்படியானால் யார் அண்ணன், இது வடவிந்தியாவில் உண்டு. தென்னிந்தியாவில் விநாயகன் அண்ணனாகச் சொல்லப்படுகிறான்.

காய வைப்பது என்றால் நீரில்லாமல் ஆக்குவது.. கங்கையை நீக்குவது தானே பரமனை நீரில்லாமல் ஆக்க வழி.. சடைமுடிகளுடன் கூடிய தேங்காய் எப்பொழுதுமே சிவனுடன் ஒப்பிடப்படுகிறது..

அவனிற்கும் கொண்டை.. அதற்கும் கொண்டை.. அவனுக்கும் வெள்ளைமணம் அதிலும் வெள்ளைப் பருப்பு. அவனிலும் கங்கை எனும் நீர்.. அதிலும் தெங்கிளநீர், அவனுக்கும் முக்கண், தேங்காய்க்கும் முக்கண்.. தென்னையும் உயரமாய் வளரும் அவனும் அடிமுடி காணாமல் வளருவான். அவன் தலையில் தாழை.. தென்னைமரம் தலையில் ஓலை..

எண்ணதான் காயவைத்தாலும் தேங்காயில் ஈரப்பசை போவதில்லை.. எண்ணெயாய் அதற்குள் இரண்டறக் கலந்தது அது. அது போல என்னதான் நிந்தித்தாலும் பரமனின் மனதில் கருணை ஒட்டிக் கொண்டே இருக்கும்.. அவன் உள்ளமே வரண்டு போயிருந்தால் விடா முயற்சியுடன் அடிமுடி தெரியா அவனை பிடித்தாட்டிக் கருணை பெறு என்பது தான் கரு.

ஓவியன்
24-11-2007, 03:10 AM
அருமையான விளக்கம் அண்ணா!

சில வரிகளுக்கு இத்தனை விளக்கமா...
வியந்து தான் நிற்கின்றேன்
மிக்க நன்றி அண்ணலே..!!

ஆனால் மீண்டும் ஒரு சின்ன சந்தேகம்...

முருகன் பிறந்தது கங்கையிலா இல்லை சரவணப் பொய்கையிலா...??
இரண்டும் ஒன்றா இல்லை இரண்டுக்கும் ஏதேனும் தொடர்புண்டா....?

தாமரை
24-11-2007, 03:13 AM
அருமையான விளக்கம் அண்ணா!

ஆனால் மீண்டும் ஒரு சின்ன சந்தேகம்...
சில வரிகளுக்கு இத்தனை விளக்கமா...
வியந்து தான் நிற்கின்றேன்
மிக்க நன்றி அண்ணலே..!!

முருகன் பிறந்தது கங்கையிலா இல்லை சரவணப் பொய்கையிலா...??
இரண்டும் ஒன்றா இல்லை இரண்டுக்கும் ஏதேனும் தொடர்புண்டா....?

சரவணப் பொயகையில் கங்கையால் விடப்படுகிறான்
அச்சரவணபொய்கை கங்கைக் கரையோரமிருந்த ஒருகுளம்.

ஓவியன்
24-11-2007, 03:26 AM
மன்னிக்க அண்ணா!!

மீண்டும் சந்தேகம்..! :)

சரவணப் பொய்கை "பழனி" க்கு அருகில் உள்ளது என்கிறார்களே...

ஆனால் பழனி இந்தியாவின் தெற்குப் பகுதியிலல்லவா உள்ளது...
கங்கை இந்தியாவின் வட பகுதி நதியல்லவா...

இரண்டுக்கும் எப்படி தொடர்பு....

(என் சந்தேகத்தில் ஏதும் குற்றமிருப்பின் என்னைப் பொறுத்தருள்க..!! :icon_03: )

தாமரை
24-11-2007, 03:34 AM
மன்னிக்க அண்ணா!!

மீண்டும் சந்தேகம்..! :)

சரவணப் பொய்கை "பழனி" க்கு அருகில் உள்ளது எங்கிறார்களே...

ஆனால் பழனி இந்தியாவின் தெற்குப் பகுதியிலல்லவா உள்ளது...
கங்கை இந்தியாவின் வட பகுது நதியல்லவா...

இரண்டுக்கும் எப்படி தொடர்பு....

(என் சந்தேகத்தில் ஏதும் குற்றமிருப்பின் என்னைப் பொறுத்தருள்க..!! :icon_03: )

சரவணப் பொய்கை என்பது பழனியில் உள்ள சரவணப் பொய்கை அல்ல.
அது உருவகப் படுத்தப்பட்ட சரவணப் பொய்கை.

நம் நாட்டுக் கோவில்களில் இதுபோல் உருவகம் அமைக்கப்பட்ட பல நிகழ்தானங்களைக் காணலாம்.

ஓவியன்
24-11-2007, 04:12 AM
உண்மைதான் நான் அதனையும் இதனையும் ஒன்றாக்கி குளப்பி விட்டேன்..

விளக்கத்திற்கு நன்றி அண்ணா..!!

தாமரை
24-11-2007, 04:54 AM
பழனியின் சரவணப் பொய்கை முருகன் அவதரித்த இடம் என்ற வலுவான கருத்து கூட இல்லை. இருந்திருந்தால்.. இதோ முருகன் பிறந்த இடம், இதோ முருகன் விளையடிய இடம் இதோ பார்வதி மகனை பார்த்த இடம் என காசு பார்த்திருக்க மாட்டோமா என்ன?

ஓவியன்
24-11-2007, 05:24 AM
உண்மைதான் பொதுவாக முருகன் கோவில்களிலுள்ள குளங்களை சரவணப் பொய்கை என்று அழைப்பது வழமை...

அந்த வழமை பழனியில் கொஞ்சம் அதிகமாகி சரவணப் பொய்கையாகவே நிலைத்திருக்கலாம்...

ஆனால்
முருகனின் ஒவ்வொரு படை வீடுகளிலும் முருகனின் ஒவ்வொரு கால வாழ்கையுடன் சம்மந்த பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் பழனி எந்த வகையானது என்று அறிய வேண்டும்...

அது முருகனின் பிறப்புடன் சம்மந்தப் பட்டதாகக் கருதப்பட்டால் ப்ழனியிலுள்ள பொய்கை சரவணப் பொய்கையாக இருக்கலாம்....

எதற்கும் தெளிவான ஆதாரங்களில்லை, பூரண ஆராய்ட்சி செய்தாலே எல்லா உண்மைகளும் வெளிவரும்...

அமரன்
24-11-2007, 06:46 AM
அண்ணா ஒரு சின்ன சந்தேகம்..
முடியுள்ள தேங்காய் பரமன் என்பதலா வீட்டு விசேசங்களிலும் கோவில்களிலும் முடியற்ற தேங்காய் உடைக்கின்றார்கள். எங்க ஊர் தேரின்போது சின்னவயசில் தேங்காய் உடைத்தபோது முடியுடன் உடைத்ததுக்கு நங்கென்று குட்டினார்களே தவிர காரணம் சொல்லவில்லை..

தாமரை
24-11-2007, 08:49 AM
அண்ணா ஒரு சின்ன சந்தேகம்..
முடியுள்ள தேங்காய் பரமன் என்பதலா வீட்டு விசேசங்களிலும் கோவில்களிலும் முடியற்ற தேங்காய் உடைக்கின்றார்கள். எங்க ஊர் தேரின்போது சின்னவயசில் தேங்காய் உடைத்தபோது முடியுடன் உடைத்ததுக்கு நங்கென்று குட்டினார்களே தவிர காரணம் சொல்லவில்லை..

தேர்க்காலில் தேங்காய் உடக்கும் போது நாரோடு உடைத்தால் முழுதாய் உடையாது இது தேரையே நிலை சாய்க்கக் கூடியது..அதுதான் காரணம்.

ஓவியன்
25-11-2007, 05:04 AM
பொன்னாங்கண்ணி
பசலை

முசுமுசுக்கை
தூதுவளை

வல்லாரை
சிறுகீரை
முருங்கை
அறுகீரை

கரிசலாங்கண்ணி
குப்பைமேனி
ஆரை
அகத்திக்கீரை

வெந்தயக்கீரை
மணத்தக்காளி
இறுதியில்
கறிவேப்பிலை

புளிச்சங்கீரை

செல்வண்ணா!!

இராமயணத்தை சுருக்கு கீரைகளாக தந்துள்ளீர்களென நினைக்கின்றேன், ஆனால் எல்லாக் கீரைகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதாக நினைக்கிறேன் ஆனால் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

விளக்கிக் கூற முடியுமா....???

தாமரை
25-11-2007, 04:16 PM
செல்வண்ணா!!

இராமயணத்தை சுருக்கு கீரைகளாக தந்துள்ளீர்களென நினைக்கின்றேன், ஆனால் எல்லாக் கீரைகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதாக நினைக்கிறேன் ஆனால் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

விளக்கிக் கூற முடியுமா....???

பொன்னிறம் கொண்டவளுக் அழகிய கண்கொண்ட சீதை - பொன்னாங்கண்ணி
பசலை - கணவனைப் பிரிந்ததினால் பிரிவுத்துயரில் பசலை படர்ந்தவளாய் இருந்தாள். குரங்காகிய (முசு) கைகளின் மூலமாய் தூதாக வளை(வளையம் - ரிங் - மோதிரம்) வந்தது.

வல்லாரை - அசுரர்களை; சிறுகீரை - எளியவர்களான வானரங்கள் மற்றும் ராம லட்சுமணர்கள் முருங்கை அறுகீரை - தம்முடைய அழகிய கைகளினால் அழித்தார்கள்..

கரிசலாங்கண்ணி - கரிய நிறமும் அழகிய கண்ணும் கொண்ட ராமன், குப்பைமேனி - மக்கள் மனதில் எழக்கூடிய சந்தேகங்கள் என்னும் குப்பைகளை எண்ணி, ஆரை அகத்திக்கீரை - ஆரணங்கை உளச்சுத்தி காட்ட தீக்கிரையாகச் சொன்னான்.

வெந்தயக்கீரை - வெந்த தங்கம் - புடம் போட்ட தங்கம் போட்ட வெளிப்பட்ட அவள் , மணத்தக்காளி - புகழாகிய நறுமணத்தை தக்க வைத்துக் கொண்டவளானாள்.

இறுதியில் அவள் கறிவேப்பிலையாய் வெறும் மணப் பொருளாய் மட்டுமே மாறிப்போனாள்.. ஓருரிமையும் இல்லாமல் போயிற்றவளுக்கு.,

புளிச்சங் கீரை - இது சொல்லிச் சொல்லிப் புளித்துப் போன கதையல்லவா??

அமரன்
25-11-2007, 04:59 PM
நன்றி அண்ணா... கீரைக்குள் இராமயணத்தை அடக்கி விட்டீர்களே..

தாமரை
25-11-2007, 05:19 PM
நன்றி அண்ணா... கீரைக்குள் இராமயணத்தை அடக்கி விட்டீர்களே..

கீதைக்குள் பாரதமே அடங்கும் பொழுது கீரைக்குள் இராமாயணம் அடங்குவது பெரிய விஷயமா என்ன?

ஓவியன்
25-11-2007, 05:40 PM
கீரைகளைப் பிரித்து மேய இத்தனை பொருள் தருகிறதே...

அதனை லாவகமாக கையாண்ட விதம் அருமையிலும் அருமை..
"முசு" என்றால் குரங்கா - புதுச் சொல் கற்றேன்....

எல்லாவற்றுக்கும் நன்றி அண்ணலே..!!

தாமரை
25-11-2007, 05:46 PM
கீரைகளைப் பிரித்து மேய இத்தனை பொருள் தருகிறதே...

அதனை லாவகமாக கையாண்ட விதம் அருமையிலும் அருமை..
"முசு" என்றால் குரங்கா - புதுச் சொல் கற்றேன்....

எல்லாவற்றுக்கும் நன்றி அண்ணலே..!!

முசுகுந்தச் சக்கரவர்த்தி - குரங்கு முகம் கொண்ட சோழ மன்னன்.
முசுமுசுக்கை என்னும் கீரை - இருகுரங்கின் கை எனச் செல்லமாய் அழைக்கப்படுகிறது.

அமரன்
25-11-2007, 06:07 PM
பணயத் தொகை என்பது
பணம் தந்து விடுதலை பெற..
சிறைபட அல்ல.

எட்டி நின்றவளே
ஏழடி என்றால்
ஆறடி இங்கே
அஞ்சு வார்?
நாலும் பார்த்து,
மூன்றும் உணர்ந்து
இரண்டும்
ஒன்றாய் பின் என்ன
ஒன்றுமில்லை நம்மிடையில்
செல்வனண்ணா..! (தற்கால) திருமணவாழ்க்கையை சொல்லி இருப்பதாகப்படுகிறது.. கொஞ்சம் விளக்கமுடியுமா

தாமரை
25-11-2007, 06:23 PM
செல்வனண்ணா..! (தற்கால) திருமணவாழ்க்கையை சொல்லி இருப்பதாகப்படுகிறது.. கொஞ்சம் விளக்கமுடியுமா

அடிதடி மிதியடி
இன்னுமென்ன மீதியடி?

இன்னும் ஏழடி இருக்குதடா....
இணையாக எடுத்து வைக்க.... !
பணயமாக பணம் கேட்டால்
இணைய வேண்டாம் போடா போ....

சாம்பவி அவர்கள் முதலில் அடி உதை என்று சொல்லி விட்டு இன்னும் எத்தனை அடி பாக்கி இருக்கிறது என்று கேட்ட பொழுது.. ஏழடி என்று சொல்லி இருப்பார். அது திருமணத்தின் போது மணமகன் பின்னே மணமகள் செல்லும் ஏழடியைக் குறிக்கும். வரதட்சணைக் கேட்டால் இணைய வேண்டாம் என்றும் சொல்லி இருப்பார்.

அதற்கு பதிலாக எட்டு ஏழு ஆறு என இறங்கு வரிசையில் எண்களை அமைத்து சொன்ன் கருத்து..

எட்டித் தூரமாய் நின்றவளே ஏழடி நடக்க தயாரென்றால் இதற்கு மேலும் யாரும் அஞ்ச மாட்டார்கள். பொருத்தங்கள், முகூர்த்தங்கள், சகுனங்கள், நிறைகுறைகள் என நாலாவித அம்சங்களையும் பார்த்து, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் இவை மூன்றையும் உணர்ந்து, இருவரும் ஒன்றாகும் திருமண உறவிற்குப் பின் இவற்றில் ஒன்று கூட நம்மிடையில் வராது

அமரன்
25-11-2007, 06:25 PM
அவற்றை தொடர்புபடுத்தி பார்த்தபோது புரிந்தது.. ஆறடி(யாரடி), அஞ்சுவார் இரண்டும்தான் கொஞ்சம் தெளிவின்மையாக இருந்தது..

இளசு
25-11-2007, 09:14 PM
பொன்னிறம் கொண்டவளுக் அழகிய கண்கொண்ட சீதை - பொன்னாங்கண்ணி
............

புளிச்சங் கீரை - இது சொல்லிச் சொல்லிப் புளித்துப் போன கதையல்லவா??

அத்திக்காய் பாடலுக்குபிறகு
இப்படி ஒரு மொழி அதிசயம்
இப்போதுதான் படிக்கிறேன்..

சொல்லின் செல்வனின் மொழிவன்மை கண்டு
வியக்கிறேன்.. ஆச்சர்யம் முளைக்கிறேன்..

ஓவியன்
26-11-2007, 07:37 AM
உயிர்
மெய்
உயிர்மெய்
ஆய்தம்
ஆகாரக்குறுக்கம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரகுறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
உயிரெளபெடை
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஒற்றெளபடை

இந்த சொல்லடுக்கை விவரிப்போருக்கு 5000 பொற்காசுகள். :icon_clap:

சொல்வேந்தரின் சவாலிது...!!

மன்ற மக்களே ஓடி வாருங்கள்...
இந்த சொல்லடுக்கை விபரித்து 5000 பொற்காசுகளைக் கவர்வோம்...!!

:icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap:

நானும் என்பங்கிற்கு முயற்சி செய்கிறேன்...!! :)

அமரன்
26-11-2007, 10:42 AM
உயிரும் மெய்யும்.. இருபால்களாக நினைக்கின்றேன்..
உயிர்மெய் சேர்ந்து ஆக்கும் வாழ்க்கைக்கு இயக்கம் கொடுக்கும் சக்தி பிறக்கிறது..
இருபுள்ளிகள் முப்புள்ளியாக்கும் (ஆய்தம்) மழலைச்செல்வம், வெளிக்கண்களின் காரத்தை (ஐகாரம்) குறைக்கவல்லது.. அதாவது அவர்கள் கண்டபடிபேச ஆகாரக்குறைப்பு செய்கின்றது. ஔவை(தாய்) மீதான ஈர்ர்பு (காரம்=இராசயனம்=ஈர்ப்பு) முழுமைஇன்மை நிலையை (ஆய்தகுறுக்கம்) ஏற்படுத்தும்.. அதவாது வாழ்விலும், இல்லறத்திலும் நிறைவின்மையை ஏற்படுத்தும்..எனவே வேண்டுமென்றே மழலை செல்வத்தை வேண்டாம் என்று சொல்லாதீர்.. மக அரக்கு குறுக்கம் (மகவு+அழுத்தம் குறைப்பது) இல்லறத்தின் உயிரான மகிழ்வை அதிகரிப்பது. சத்து மாத்திரை போன்றது.. சத்தை குறைக்காதீர்..(குற்றியலுகரம்)..
குறுமை+இயல்+இ+கரம் (குறைந்த மையுடைய இயல்பை இல்லாது செய்ட்யும் கை இது..)இதுவே ஆணித்தரமான உண்மை..

இப்படியும் இருக்கலாமோ என்று தோன்றுகின்றது. இருந்தாலும் மூளைக்கசக்கல் தொடர்கின்றது..

தாமரை
26-11-2007, 11:04 AM
உயிரும் மெய்யும்.. இருபால்களாக நினைக்கின்றேன்..
உயிர்மெய் சேர்ந்து ஆக்கும் வாழ்க்கைக்கு இயக்கம் கொடுக்கும் சக்தி பிறக்கிறது..
இருபுள்ளிகள் முப்புள்ளியாக்கும் (ஆய்தம்) மழலைச்செல்வம், வெளிக்கண்களின் காரத்தை (ஐகாரம்) குறைக்கவல்லது.. அதாவது அவர்கள் கண்டபடிபேச ஆகாரக்குறைப்பு செய்கின்றது. ஔவை(தாய்) மீதான ஈர்ர்பு (காரம்=இராசயனம்=ஈர்ப்பு) முழுமைஇன்மை நிலையை (ஆய்தகுறுக்கம்) ஏற்படுத்தும்.. அதவாது வாழ்விலும், இல்லறத்திலும் நிறைவின்மையை ஏற்படுத்தும்..எனவே வேண்டுமென்றே மழலை செல்வத்தை வேண்டாம் என்று சொல்லாதீர்.. மக அரக்கு குறுக்கம் (மகவு+அழுத்தம் குறைப்பது) இல்லறத்தின் உயிரான மகிழ்வை அதிகரிப்பது. சத்து மாத்திரை போன்றது.. சத்தை குறைக்காதீர்..(குற்றியலுகரம்)..
குறுமை+இயல்+இ+கரம் (குறைந்த மையுடைய இயல்பை இல்லாது செய்ட்யும் கை இது..)இதுவே ஆணித்தரமான உண்மை..

இப்படியும் இருக்கலாமோ என்று தோன்றுகின்றது. இருந்தாலும் மூளைக்கசக்கல் தொடர்கின்றது..


அளபெடைகள் இன்னும் அளவெடுக்கப்படவில்லை. நான் மனதில் வைத்திருப்பது முற்றிலும் வேறு. உங்கள் பார்வையும் நன்றாய்த்தான் இருக்கும் போலிருக்கிறது.. தகவல்களை வரிசை அமைத்து வரி பிரித்தெழுதல் அழகு.

அமரன்
26-11-2007, 11:07 AM
முயல்கின்றேன் அண்ணா. உங்கள் கருத்தை மனதில்கொண்டு உங்கள் மனதை கொள்ளையிட..

அமரன்
29-11-2007, 05:04 PM
திரு(லஷ்மி)வோடு இருந்தவர் படுத்துக் கிடக்க
திருவோடு ஏந்தி அலைந்தார் இன்னொருவர்
திருவும் திருத்திருமோ
திருத்திருவும் திரிந்திடுமோ
திருவும் ஓட
திருவோடு தானும் ஓட
அன்னம் பூரணமாக்கி
அம்மையானாள் அப்பனுக்கு!
திரு(லஷ்மி)வோடு இருந்தவர் படுத்துக் கிடக்க---திருமால்
திருவோடு ஏந்தி அலைந்தார் இன்னொருவர்---சிவன்
திருத்திருவும் திரிந்திடுமோ--திருமால்???????

இதுக்கப்புறம் திருதிருன்னு விழிக்கத்தான் முடியுது.
திருவின் உருகண்டு திரு'வின் எட்ட முடியவில்லை..
திரு ஆளரே திறக்க முடியுமா

தாமரை
29-11-2007, 05:23 PM
திரு(லஷ்மி)வோடு இருந்தவர் படுத்துக் கிடக்க
திருவோடு ஏந்தி அலைந்தார் இன்னொருவர்
திருவும் திருத்திருமோ
திருத்திருவும் திரிந்திடுமோ
திருவும் ஓட
திருவோடு தானும் ஓட
அன்னம் பூரணமாக்கி
அம்மையானாள் அப்பனுக்கு!



இலக்குமியின் கணவர் விஷ்ணு. அவர் எப்பொழுதுமே படுத்துக் கிடப்பவர். சிவன் பிரம்மஹத்தி தோஷத்தின் (பிரம்மாவின் ஐந்தாம் தலையைக் கொய்த தோஷம்) காரணமாய் அந்த மண்டையோட்டையே திருவோடாய் ஏந்தி பிஷாடனராய் அலைகிறார்.

இலக்குமியிடம் பிச்சை கேட்க இலக்குமி கர்வத்துடன் அத்திருவோட்டை நிறைக்க எண்ணி, திருவோடு ஏந்திய அண்ணலின் கோலத்தை திருத்திட எண்ணி, தன்னிடம் உள்ள அத்தனை செல்வத்தையும் இட்டு அந்த திருவோட்டை நிரப்ப எண்ணுகிறாள். ஆனால் எவ்வளவு பணம் கொட்டியும் திருவோடு நிறையவில்லை. திருவின் திருவாகிய விஷ்ணுவும் கூட திருவோடு ஏந்தி திரிந்து சம்பாதித்து வந்து போட்டால்தான் உண்டு என்ற நிலைமைக்கு ஆளகிவிடுகிறார் இலக்குமி. தோற்றுச் சோர்ந்து போகிறார். அதுனால் திருவும் ஓடுகிறார் விட்டு.

அன்னை உமையவள் அண்ணபூரனியாகி திருவோட்டில் உணவிட்டு நிறைக்கிறாள். அந்த திருவோடு உணவால் நிறைய திருவோடு ஈசன் கையை விட்டு ஓடி விடுகிறது

உலகிற்கே படியளக்கும் ஈசனை அப்பன் என்கிறோம். அவனுக்கே படியளந்த அன்னபூரணி அவனுக்கும் அம்மையல்லவா?

உலகில் போதும் என்ற சொல்லை உணவிற்கே சொல்கிறோம். உணவு மட்டுமே மன்நிறைவைத் தரக்கூடியது.

அமரன்
29-11-2007, 05:30 PM
அருமை... அருமை... கஷ்டங்களுக்கு அடுத்து போதும் என்று சொல்வது உணவை மட்டும்தான்.

தாமரை
29-11-2007, 05:40 PM
அருமை... அருமை... கஷ்டங்களுக்கு அடுத்து போதும் என்று சொல்வது உணவை மட்டும்தான்.

கஷ்டங்கள் வேண்டாம் என்று சொல்பவர்கள் உண்டு. உணவு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். போதும் என்று மட்டுமே சொல்வார்கள்.

அமரன்
30-11-2007, 05:42 PM
கஷ்டங்கள் வேண்டாம் என்று சொல்பவர்கள் உண்டு. உணவு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். போதும் என்று மட்டுமே சொல்வார்கள்.

ஆமண்ணா...! நிதர்சனம்...!

படிக்க படிக்க சுவையூறும் சொற்சிலம்பத்தில் இன்னொரு சந்தேகம்.. தெளிய வைக்க முடியுமா அண்ணா?


நல்ல வேளை புதுசா வந்த குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தைப் பத்தி தெரியலை.. பிழைத்தேன்.

பா திரும்பாதா எனப்
பார் திரும்பிப் பார்த்திருக்க
பாதி இரும்பா பாதிக் கரும்பா என
இறுக்கமும் இனிமையும் பிணைந்துவர
பாவும் பாவியும் பாவையும் பாவின்
ஊடே ஊடையாய் ஊடலும்
நெய்யும் அணி

கண்மணி
30-11-2007, 06:51 PM
ஆமண்ணா...! நிதர்சனம்...!

படிக்க படிக்க சுவையூறும் சொற்சிலம்பத்தில் இன்னொரு சந்தேகம்.. தெளிய வைக்க முடியுமா அண்ணா?

பா திரும்பாதா எனப்
பார் திரும்பிப் பார்த்திருக்க
பாதி இரும்பா பாதிக் கரும்பா என
இறுக்கமும் இனிமையும் பிணைந்துவர
பாவும் பாவியும் பாவையும் பாவின்
ஊடே ஊடையாய் ஊடலும்
நெய்யும் அணி



நான் முயன்று பார்க்கட்டுமா அமரன் அண்ணா!

பாட்டு திரும்பாதா என பார்(உலகம்) இந்த சொற்சிலம்பப் பதிவுகளை ரெஃப்ரெஸ் செய்து ரெஃப்ரெஸ் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அங்கே வருகிற பாட்டுகள் எப்படி இருக்கிறது தெரியுமா பாதி இரும்பு,.. மற்றவர்களால் வளைக்க முடியாத வார்த்தைகள் கொண்டது. பாதிக் கரும்பு, கடித்து ருசிக்க இனிய சாறு தரும் சுவை நிறைந்த வார்த்தைகள்.. இவற்றினால் இறுக்கமும் இனிமையும் மாறி மாறி வரும் சொற்சிலம்பத்திலே!!!!

இதுக்கு மேலே இருப்பதை விளக்கமா சொல்லாட்டி சத்தியமா விளங்காது சாம்பவி மற்றும் தாமரை அண்ணா இருவரைத் தவிர வேற யாருக்கும்.

பாவும் - ஊடையும் - ஆடை நெய்யப் பயன்படும் இருவகை நூல்கள், பாவு என்பது நீள வாக்கில் ஓடும் இழைகள், ஊடை என்பது அகலவாக்கில் ஓடும் இழைகள்
பாவியும் - பாவையும் - பாவி- தாமரை அண்ணா, பாவை - சாம்பவி அக்கா

அதாவது பாவின் ஊடே ஊடை நூல் புகுந்து வர நெய்வது ஆடை.அதேபோல பாவையும், பாவியும் ஊடலால் ஒருவருக்கு ஊடே ஒருவர் பா நூலால் நெய்யும் கவிதை அழகு.

இதை தாமரை அண்ணா சொன்ன அழகும், விளக்கமே இல்லாமல் சாம்பவி அக்கா புரிந்து கொண்டதும் தான் மிக மிக அழகு.

ஓ எனக்கு எப்படிப் புரிந்ததுன்னு கேட்கறீங்களா! :icon_rollout::aetsch013:

அதைச் சொல்லமாட்டேனே!

கண்மணி
30-11-2007, 07:00 PM
அப்புறம் ஏன்

பாவும் பாவியும் பாவையும் பாவின்
ஊடே ஊடையாய் ஊடலும்

என் மாத்தி மாத்தி போட்டிருக்காரு தெரியுமா, துணி நெய்யும் போது அடுத்தடுத்த பா இழைகள் மேலும் கீழும் மாறி மாறி போக ஊடை நூல் குறுக்கே போகும்.. அதே போல் பா, பாவி, பாவை என அனைத்து பாவுகளும் மாறி மாறி வர ஊட, ஊடல் ஆகியவே குறுக்கே (ஊடே) வருகின்றன.

அமரன்
30-11-2007, 07:02 PM
பிரமிக்க வைக்குது...சிலம்பம் என்றாலே ஓரிடத்தில் நிற்காது சுற்றி சுற்றி ஆடுவதுதான் என்று தாமரை அண்ணா சொல்வார். அது இங்கே பொருந்தி உள்ளது..

பாவிளையும் சொற்சிலம்பவிழையில் ஈரிழையாம் பாவிழையையும், ஊடையிழையையும் ஆடையிழைக்கப் பயன்படுத்துவார்கள் என்பதை அவ்வேந்திழை அறிந்திருந்தாள். இவ்விளை அறிந்திருக்கவில்லை. வில்லையளவு மூளையின் ஆக்கிரமிப்பும் தமிழின் ஆளுமையும்.. மிக்க நன்றிக்கா..

இருந்தாலும் சில இடங்களில் ஒழுங்கீனம் உள்ளதே..

கண்மணியே. கண் மணிக்கு தேடிபிடிக்க கற்றுக்குடுக்கவேண்டுமா..

கண்மணி
30-11-2007, 07:04 PM
பாவிழையிலும் பாவிளையும் ஏன் தெரியுமா
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.

அமரன்
30-11-2007, 07:08 PM
இருந்தாலும் சில இடங்களில் ஒழுங்கீனம் உள்ளதே..
.
அட இதுக்குப் பதில் மேலே இருக்கா... மிக்க நன்றி கண்மணிக்கா

தாமரை
30-11-2007, 08:13 PM
அருமையான விளக்கம் கண்மணி. என் மனதில் இருந்ததை அப்படியே எழுதி இருக்கிறாய்! பிடி சன்மானம் 1000 பொற்காசுகள்:icon_b:

கண்மணி
02-12-2007, 01:52 AM
படி அளத்தல் எமக்கெளிது
அதனிலும் எளிது
வெறுமனே அளத்தல் (அதனாலேயே படிக்கு பிராக்கெட் போட்டேன்)

படியாதிருந்தால் அனலாய் பறக்கும்
படியாதிருந்தால் அனலா பறக்கும்
படித்தோன் படியோன் ஆயின்
படும்படி படுமடி படிப்படி ஆக்கும் பொடிப்பொடி

அகப்படி அடியினில் இல்லை தினப்படி
டிவியடி அவளின் நுகத்தடி
-----------------------------------
புரிந்த மாதிரியும் இருக்கிறது! புரியாத மாதிரியும் இருக்கிறது..

படியாதிருந்தால் அனலாய் பறக்கும் - அடங்காமல் இருந்தால் விவாதம் அனலாய் பறக்கும்
படியாதிருந்தால் அனலா பறக்கும் - இக்கவிதையை படிக்காமல் இருந்தால் விவாத அனல் எப்படிப் பறக்கும்?

படித்தோன் படியோன் ஆயின் -- கற்றவன் பணிவில்லாதவனாய் இருந்தால்

படும்படி படுமடி -- கஷ்டங்களை அன்பவிக்க அடுத்தடுத்து வாழ்க்கையில் அடி விழும்

படிப்படி ஆக்கும் பொடிப்படி -- இங்கதான் சந்தேகம்.. விளக்குங்கள்..

டிவியடி அவள் நுகத்தடி -- இது தெரிந்த விஷயம்தானே!

ஆதவா
03-12-2007, 07:46 AM
அருமையான விளக்கம் கண்மணி. என் மனதில் இருந்ததை அப்படியே எழுதி இருக்கிறாய்! பிடி சன்மானம் 1000 பொற்காசுகள்:icon_b:

சொல்லிக்கொடுத்த எனக்கு ????

ஆதவா
07-12-2007, 02:36 PM
தும்பிச்சி தும்பிச்சி
செம்பிச்சி செப்பிச்சி
பிச்சாவுன் பிச்சி..
பிச்சினும் பிச்சி... !


பிச்சி பிச்சி என்று இங்குள்ள ஒரு சகோதரியைக் குறிப்பிடுகிறீர்களோ?:D

விளக்குங்கள், விளங்கிக் கொள்கிறோம்...

தாமரை
12-12-2007, 09:09 AM
திக் விஜயம் சென்று
திக் திக் கென பலரின்
நெஞ்சடைத்தவள்
நெஞ்சடைந்து
நெஞ்சொடுங்கி
நாணினாள்

சொக்கனின்
சொக்கட்டான்
சொக்கி
சொக்கத்தான்

மீனாட்சி, அமரலோகம், சத்திய லோகம் என அனைத்து உலகமும் சென்ற்று வெற்றி பெற்று கைலாயம் செல்கிறாள்.. கைலாய நாதனைக் கண்டதும், அவளுடலில் இருந்து மூன்றாம் மார்பு மறைய, இவனே என் நாதன் என அறிந்து முதல் முதலாக நாணத்தை அடைகிறாள்..
அவளை இப்படி சொக்க வைக்கத்தான் போருக்கு அவளைப் புறப்பட வைக்க அந்த சொக்காட்டான் (காய் நகர்த்தி விளையாடுவது) திருவிளையாடலை ஆரம்பித்த வைத்த ஈசன்

சுந்தரேசனைக் கண்ட மீனாட்சி போல முதன் முறையாய் சாம்பவி வெட்கப்படுகிறார் என்றேன்..

தாமரை
12-12-2007, 09:11 AM
நாணியவள்
நாடாள*
முங்கியவன்
மூத்தவனோ.... !!!!!!!

அழகர் ஆற்றில் இறங்கிய சம்பவத்தைக் குற்றிப்பிடுகிறார் சாம்பவி..

நாணிய அந்த மீனாட்சி மதுரையை ஆள்பவள்.. அவள் அண்ணன் கள்ளழகனோ வைகையாற்றில் மூழ்குபவன் என்கிறார்.

தாமரை
12-12-2007, 09:14 AM
முங்கியவன்
மயங்கினாலும்
ஓங்கியவன்
தாங்குவானே

அப்படி மூழ்கிய கள்ளழகன் ஏன் மீனாட்சியின் திருமணத்திற்கு சமயத்தில் வரவில்லை தெரியுமா? அங்குள்ள கள்ளர்களின் தூய அன்பில் மயங்கி அவர்களது உபசரிப்பில் மயங்கித்தான்.

அண்ணன் வரவில்லை என்பதால் தங்கை மீனாட்சி வாடுகிறாள்.. விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டா ஜோதிப் பிழம்பாய் ஓங்கி வளர்ந்த அண்ணாமலையாகிய அந்தச் சிவபெருமான், விஷ்ணு பிம்பமாய் மாறி வர திருமணம் இனிதே நடந்தது.. விஷ்ணுவின் வேடம் தாங்கியதால் தாங்கியவன்

தாமரை
12-12-2007, 09:16 AM
க்க்ஹும்..... நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்குமாம்.... !!!!!

ஓங்கியவனே.........
மயங்கியவன் தானே...
இவனெங்கே தாங்க..... !!!

அப்படி ஓங்கிய சிவபெருமானே, பாற்கடலை கடைந்த போது வந்த விஷத்தை உண்டு மயங்கியவன் தானே.. அவன் எப்படி மற்றவரைத் தாங்க முடியும் என சாம்பவி கேட்கிறார்.

தாமரை
12-12-2007, 09:19 AM
மயங்கியவன் தானே
மயக்கியவனும்
தலையில் தாங்கி
இடையில் தாங்கி
கண்ணில் தாங்கி
கையில் தாங்கி
தாங்கித்தாங்கி
ததிங்கணதோம்

அச்சச்சோ சொற்சிலம்பம் பக்திக்கு ஷிஃப்ட் பண்ணிறப்போறாங்க!:lachen001:

அப்படி உமை மடியில் மயங்கியவன் தான்
அவளை மயக்கியவனும்
தலையில் கங்கையைத் தாங்கியவன்
இடையில் உமையத் தாங்கியவன், (புலித்தோல் தாங்கியவன் என்றும் கொள்ளலாம்)
சூரியன், சந்திரன், அக்னி ஆக்யோரைக் கண்ணாய்க் கொண்டவன்
கையில் சூலம், டமருகம், மழு, மான் ஆகியவற்றைத் தாங்கி
ஆனந்த தாண்டவம் ஆடுபவன் அந்தச் சிவபெருமான்

தாமரை
12-12-2007, 10:31 AM
ஐயா சுமை தாங்கி ..... !!!!
மண்தாங்கி
மலைதாங்கி
முந்தாங்கி
குடிதாங்கி
இடிதாங்கி
நாதாங்கி
காதங்கி
பின்தாங்கி
தாங்கியவன்
தாங்க*
வருடம் 16.....!!!!!!!
தாங்கலடா சாமி..... !!!!!!!!!!!!! ;)
ஈசன் சுமை தாங்கிதான்
பிட்டுக்கு மண்சுமந்தான்
மலைமகளையும் சுமந்தான்
ஆதிக்குடியாம் தமிழ்க் குடிதாங்கினான்
பலப் பல பழிச்சொல் கூடிய இடியும் தாங்கினான்
பார்வதியின் சிவம் பெரிதா சக்தி பெரிதா என்ற நாக்கையும் (வாதத்தையும்)) தாங்கினான். அந்த நடனப் போட்டியில் காலை உயர்த்தி காதில் இருந்த குண்டலம் கழற்றி அம்மையத் தோற்கடித்தான், அப்படிப்பட்ட அவனைத் தாங்கிய (மனதில் நிறுத்திய) மார்க்கண்டேயனைத் தாங்க, மார்க்கண்டேயன் என்றும் 16 என இளமையுடன் சிரஞ்சீவியானான்.

தாமரை
12-12-2007, 10:34 AM
கண்டம்
தாங்கியவன்
கண்டம்
தாங்கியவள்
கண்ட ஊர்த்துவம்
தில்லைக் காளி
செய்தான்
தில்லைக் காலி


மூவுலகுக்கும் வந்த பெருங் கண்டமான ஆலகால விஷத்தை உண்ட ஈசனின் கழுத்தைப் பிடித்து தாங்கி அங்கேயே அதை நிறுத்தி அவனை நீலகண்டனாக்கினாள் அன்னை. அவள் கண்டது அவனது ஊர்த்துவத் தாண்டவம். தில்லைக் காளியான அவளுடைய திமிரை (தில்) காலிசெய்தான் ஈசன்.

தாமரை
12-12-2007, 10:37 AM
குழை தூக்கி
வான்நோக்கி
கால் தூக்கி
ஆடினயோ
அம்மானே அது
அழுகுணி ஆட்டம்.... !

காதில் இருந்த குழையைத் (குண்டலத்தை) தன் காலை மேல் நோக்கித் தூக்கி காலால் கழற்றி ஆடியது ஊர்த்துவ தாண்டவம். அம்மை பெண் என்பதால் காலைத் தூக்கி ஆட நாணித் தோற்றாள்.. ஒரு பெண் ஆடக்கூடாத முத்திரை பிடித்ததால் இது அழுகுணி ஆட்டம்

தாமரை
12-12-2007, 10:41 AM
எல்லையில்லாதவளுக்கு
வான்
எந்தத் திசை
காதலில் குழைந்தவள்
காதில் குழையகற்ற
காணவில்லையோ?
அழுகுணி ஆடியவன்
அழுக்கு பூசியவன்
அவனில் பாதி
அவனுடன் மோதி
அவனைக் காப்பி அடிக்காமல்
வெல்லத் தோணலியா?


எல்லையே இல்லா ஆதிபராசக்திக்கு எது மேல் எது கீழ்? அவன் மேல் கொண்ட காதலால் மயங்கியவள் காதுக் குண்டலம் கழற்றிப் பார்த்ததில்லையா? அழுகுணி ஆட்டம் ஆடியதாக சொல்லுகிறாயே அந்தச் சுடுகாட்டுச் சாம்பல் பூசியவனின் சரிபாதி பாகமான உமை, அவனுடன் மோதும்போது, புதுப் புது நடன முத்திரைகளைக் காட்டி இருக்கலாமே. சிவன் என்ன முத்திரைக் காட்டுகிறானொ அதையேதான் தானும் காட்ட வேண்டும் என்று எண்ணியதால் தானே இந்தத் தோல்வி..

தாமரை
12-12-2007, 10:44 AM
போட்டியே
ஏட்டிக்குப் போட்டி...!
இதில்.......
காப்பியடிக்காது
சிங்கியடிக்கவோ.... !

இதற்ற்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்

தாமரை
12-12-2007, 10:46 AM
சிங்கியடித்தால்
மனம் கிழியும்
சிங்கனடித்தால்
குடல் கிழியும்

சிங்கி - குறத்தி (அப்பப்போ என்னை சிவனாக்கி மாமனாரே என்று அன்புடன் அழைக்கும் சாம்பவி) அடித்தால் மனதில் வலிக்கும்

சிங்கன் - நரசிம்மம் அடித்தால் இரண்யணின் குடல் கிழிந்தது.

ஓவியன்
13-12-2007, 01:45 PM
கதி மாற்றம்
பதிக்கு மட்டுமோ.... !
பதியில்
பதித்திருந்தால்
விதியும்
வசப்படுமோ.... !

கண்டால் வென்றிடலாம்
கண்டவள் வெல்வாளோ
காணாதான் காணாமல் போக
விதி வீதி வாதி
ஆனது பாதி
இல்லை மீதி

இந்தக் கவிதைகளைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்ததோ செல்வன் அண்ணாவின் இன்னுமொரு கவிதை. அது நீண்ட நாட்களின் முன்னர் கவிச்சமரில் எழுதப்பட்டது... :)

கதியானேன்
துரித கதியானேன்
விதி துரத்த
நிதி துரத்த
தப்பித்துச் செல் என
மதி துரத்த

....... (கல்யாண பத்திரிக்கை குடுக்கப் போகணும். 3 மணி னேரம் கழித்து வருகிறேன்)

தாமரை
13-12-2007, 01:57 PM
இந்தக் கவிதைகளைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்ததோ செல்வன் அண்ணாவின் இன்னுமொரு கவிதை. அது நீண்ட நாட்களின் முன்னர் கவிச்சமரில் எழுதப்பட்டது... :)


(கல்யாண பத்திரிக்கை குடுக்கப் போகணும். 3 மணி னேரம் கழித்து வருகிறேன்)

சரி சரி கல்யாணப் பத்திரிக்கை குடுத்திட்டு வாங்க..


கதியானேன்
துரித கதியானேன்
விதி துரத்த
நிதி துரத்த
தப்பித்துச் செல் என
மதி துரத்த

ஆமாம் மதி ஏன் துரத்துகிறார்..

கண்டால் வென்றிடலாம்
கண்டவள் வெல்வாளோ
காணாதான் காணாமல் போக
விதி வீதி வாதி
ஆனது பாதி
இல்லை மீதி

எமனைக் கண்டுவிடுகிறாள் சாவித்திரி
அப்படிக் கண்டதனால் அவனை வென்றும் விடுகிறாள் (சத்தியவானைக் காப்பாற்றி விடுகிறாள்)
கண்டவள், அறிந்தவள்ள், இக்கதையை அறிந்தவளாஇய கண்னகி, அந்த எமனை வெல்ல முடியுமா?
அவளைக் கண்டுகொள்ளாமல் மாதவியிடம் சென்ற கோவலன், திரும்பி வந்ததும் காணாமல் போனான்.. விதி, வீதியில் அவனைச் சிலம்பு விற்க வைத்து, திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டாய் வெட்டப்பட்டான். மதுரை ம்மிச்சம் மீதியின்றி எரிக்கப்பட்டது,

தாமரை
06-11-2008, 11:59 AM
உச்சியில் முக்கோடு
உள்ளே இருகோடு
உண்மை ஒருகோடு
இக்கோடு நோக்கோடு

நோம்போடு சாடினும்
போகா வாங்கு
பாங்கோடு அன்புச் சூடு

நோவோடு ஓடி
நோயோடுத் தேடி
நோக்காடு வருமோ
நோன்போடு தருமோ

நோவற
நோக்கற
நோயற
நோம்பற
அறமுற
அரஹர

உச்சி - நெற்றியில் - முக்கோடு - விபூதிப் பட்டை
உள்ளே - மனதின் உள்ளே இருகோடு - நன்மை தீமை, பாவம் புண்ணியம் நல்லது கெட்டது என இரு எல்லைகள்
உண்மை ஒரு கோடு - அப்படி இரு வேறு பிரிவுபட்டவ்வைகளாகத் தோன்றினாலும் உண்மையில் அவை எல்லாம் ஒன்றுதான்..

நோம்போடுச் சாடினும் - பதமாகப், பண்பாக இடித்துரைத்தாலும்
போகா - இது மனதை விட்டுப் போகாது
வாங்கு - வாங்கிக் கொள்
பாங்கோடு அன்புச் சூடு - அன்பு வார்த்தைகளில் நான் இடும் சூட்டை..

இன்னொரு பொருள்..

போகாவாங்கு பாங்கோடு அன்புச் சூடு - அன்பெனும் இதமான வெம்மை எப்படிச் சாடினாலும் மனதை விட்டு நீங்காது.

நோவோடு ஓடி - மன வலியுடன் ஓடி
நோயோடுத் தேடி - மன இருள் என்னும் நோயுடன் தேடினால்
நோக்காடு வருமோ - வலிகள் வருமோ துன்பங்கள் வருமோ
நோன்போடு தருமோ - அது கட்டுப்பாடுகளோடு விதிகளோடு வாழும் வகைகளைத் தருமோ?

சொல்லப்போனால் அறியாமையினால் வாயைக்கட்ட இயலாமல் மனதைக் கட்டாமல், கண்டதையும் தின்று நோய்பெற்று ஆண்டவனைத் தேடினால் அது வலியைத் தரும், உணவுக்கட்டுப்பாடுகளத் தரும் என்பது இதன் பின்பொருள்..

நோவற - வலிகள் நீங்க
நோக்கற - ஆசைகள் நீங்க

நோயற - வியாதிகள் நீங்க
நோம்பற - மரியாதைகள் புகழ்கள் அறுத்து

அறமுற - அறத்தை அடைய
அரஹர - சிவமடையலாம்.

போதுமா பென்ஸூ அடுத்து அம்மையாரை அழையுங்கள்..

தாமரை
06-11-2008, 12:04 PM
வெற்றிலை இங்கிலை .....!!!


வெற்றிலையில் உளதைப்
பற்றிளை... !!!!

உற்றவை - அனுபவித்தவையே
கற்றவை - படித்தவை ஆகும்
கற்றவை - படித்தவற்றை
விற்றவை - விற்று, கற்றுக் கொடுத்து, மற்றவர்களுக்குக் கொடுக்கிறோம்
விற்றவை - நாம் அப்படிக் கொடுத்தவை எல்லாம்
மற்றவை - மற்றவர்களுக்குச் சொந்தமாகிறது
மற்றவை - மற்றவர்கள்
அற்றவை - அவற்றை அறியும் திறமில்லாதவர்களாக இருக்கின்றனர்
அற்றவை - அப்படிப்பட்ட அறியாமை நிலவும் அவை (திறம் அற்ற அவை)
வெற்றவை - (வெற்று அவை) காலியாகி விடுகிறது.. இங்கு யாரும் வந்து படிக்க மாட்டார்கள்.

சாம்பவி
06-11-2008, 12:10 PM
நோவற
நோக்கற
நோயற
நோம்பற
அறமுற
அரஹர


இப்படிப் போட்டு அற அறனு., அறுத்ததால்........

அற்றவை பற்றவை
மற்றவை ஆற்றுவை
கொற்றவை பற்றுவை..... !!!!!

அற்றவை ..... அறமற்றவை... அறமெனப்படாதவை...
பற்றவை ..... பற்ற வை.... தீயிட்டுக் கொளுத்து.... !.. போகிக்காக வெயிட் பண்ணாதே... !@!!!!

மற்றவை.... அதாவது அறமெனப்படுபவை... அறத்துப்பால் படிச்சிட்டு.. அறமென*
எதெல்லாம் சொல்லப்பட்டிருக்கோ.. அவை..
ஆற்றுவை .... ஆற்றுவாயாக .. ஆற்றுதல்... செய்தல்.......அவையனைத்தையும் செய்... !!!





அறமுற - அறத்தை அடைய
அரஹர - சிவமடையலாம்.


சிவம் தான் அடையனும்னு அவசியமில்லை...

கொற்றவை பற்றுவை ... !!!
கொற்றவை... துர்கா... ஷக்தி... அவள் மேலே பற்றுவை.... அவளை பக்தி செய்... அவளையேப் பற்று... ஸ்ட்ரெயிட்டா பரலோகம் தான்...... !!!!!!

ஆதி
06-11-2008, 12:26 PM
தாமரையண்ணா பாட்டு சுத்தமா புரியாம இருந்துச்சு.. பென்ஸண்ணா புன்னியத்தல புரிஞ்சிருச்சு..

சாம்பவி பாட்டில் "கொற்றவை பற்றுவை" னு ஏன் சொன்னாங்க னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. தாமரையண்ணா கொடுத்த விளக்கதில் புரிஞ்சுக்கிட்டேன்.. சாம்பவி விளக்கத்தில் தெளிவாய்ட்டேன்..

வேண்டிய பென்ஸண்ணனுக்கும்.. விளக்கிய தாமரையண்ணன் சாம்பவிக்கும் நன்றிகள்..

சாம்பவி
06-11-2008, 12:37 PM
அற்றவை - அப்படிப்பட்ட அறியாமை நிலவும் அவை (திறம் அற்ற அவை)
வெற்றவை - (வெற்று அவை) காலியாகி விடுகிறது.. இங்கு யாரும் வந்து படிக்க மாட்டார்கள்.

வெற்றிலை இங்கிலை .....!!!

டோன்ட் வொர்ரி மாமனாரே.., வெற்று வேட்டு அப்படிங்கறதே இங்கே இல்லை... எல்லாமே ஸ்டஃப் உள்ளவை தான்.. ... !!!


வெற்றிலையில் உளதைப்
பற்றிளை... !!!!


அப்படி தாம்பூலத்தோடு பரிபாறப்பட்ட*
இங்கிருக்கும் அனைத்தையும்...

பற்றிளை... !!!., பற்றி இளை... ..கடைப்பற்றி... இளைப்பாறுங்கள் மக்களே..... !!!!
இதுவும் கபால மோட்சம் தான்... !!!!

சாம்பவி
06-11-2008, 01:08 PM
சுமப்பது ஒன்றானால்
சுமையும் வரமே....
சுமப்பது இரண்டானால்..
சுமையும் சுகமே...
சுமப்பது மூன்றானால்...
சுமையும் பாரமே..
உனைச்
சுமப்பது நான்கானால்..
இமயமும் சாயுமே.... !!!

மகனே/மகளே..
சுமப்பது ஒன்றானால்... உன்னைச் சுமப்பது நானானால்.,
அது எனக்கு வரமாகும்....
உன்னிரு கால்களால் நீ நடக்குங்கால்.. சுமையும் சுகமே...
நீ மூப்பெய்தி கோலூன்றும் போது
சுமையும் பாரமே..... நானும் உனக்கு பாரமாவேனே...
ஐயா... உனை நால்வர் சுமக்கையில்... இறுதிப் பயணத்தின் போது.,..............................

சாம்பவி
06-11-2008, 01:18 PM
உரையில் உறைய*
இரையும் இரையுமே
இரையாதிருக்க
இரையாமோ தாமரை....... !!!!


இரையும் .... இரைப்பை
இரையுமே ... சப்தமிடுமே...


இரையாமோ. ... இரையாகுமோ...இந்த இரை... உணவு..... பலியுணவு...... ...
தாமரை.... தா மரை.... துள்ளித் திரியும் மான் போலும் இவள்!!


மது உண்ட மயக்கத்தில் குடும்பத் தலைவன் இருந்தால்...
குடும்பத்தினர் வயிறு பசியால் சப்தமிடுமே..
அப்படி இரையாதிருக்க... பசியில் குடும்பத்தினர் வாடாதிருக்க*
தாவும் மானைப் போன்ற இவள் இரையாவாளோ.... பலியாவாளோ!!!!

சாம்பவி
06-11-2008, 01:44 PM
முழுமை
கொட்டிய பின்னரும்
பாக்கி இருந்தது
சிறுமை ;)

அழகான சிலேடை....'

ஒரு கவிஞனாக.,
உள்ளத்தில் உள்ளதையெல்லாம்..
காகிததில் கவிதையாய் வரைந்த பின்பும்...
அவன் கவிதை முழுமை பெறவில்லை...
இன்னும் சொல்லாமல் விட்டவை உண்டு
அப்படின்னும் பொருள் கொள்ளலாம்...

முதுமை வந்து தழுவிக் கொண்டாலும்.,
சிறு புத்தி இன்னும் விடவில்லையே என*
அங்கலாய்ப்பது போலவும் பொருள் கொள்ளலாம்...

நான் பொருள் கொண்டதென்னவோ...
கிழவனாய் வந்து பாடாய் படுத்திய*
முருகனைப் பார்த்து வள்ளி சொல்வதைப் போல...


அதன் தொடர்ச்சியாய்...



மையிட்ட இளமையோ...
இளமையில் இளமயில்...
கிழமையில் கிடக்கையில்
தாமரை தேடுதோ...
தாமரையோ...
தமையனும் அரையோ......
பழமாவுண் பழமே.... !!!!

டை அடித்தீரோ.... அதனால் வந்த இளமையோ...
இளமையில் இள*மயில்..... மயில் போலும் அழகுடைய இவ்வள்ளி இளமையானவள்...

கிழமையில் கிடக்கையில் .... கிழப்பருவம் எய்திய போதிலும்...
தா மரை தேடுதோ ..... தாவும் மானைப் போன்ற... பெண்ணைத் தேடுகின்றீரோ... புள்ளி மேவாத மானைத் தேடியவராயிற்றே....

தாமரையோ... இத்தாமரை... தாம் அரையோ... அதாவது.. தாங்கள் அரையோ... அரைக் கிறுக்கோ...
தமையனும் அரையோ.... தங்களின் தமையன்.. அண்ணனாகிய கணபதியும்.. அரையோ.... பாதி தந்தமுடையவனாம் கணேசன்....

பழ மா உண்.. பழமும் தினை மாவும் உண்பாயாக.. ஒழுங்கா பழத்தைச் சாப்பிட்டு விட்டு இடத்தை காலி பண்ணு....

பழமே.... ஞானப்பழமே.... !!!!!


...

சாம்பவி
06-11-2008, 01:51 PM
பழுக்கும் வரைக்கும்
இழுக்கும் இழுக்கும்.... !
இருக்கும் வரைக்கும்
பழுப்போடிருக்கும்
வரம் வேண்டும் வேழமே.......!!!

முதுமைப் பருவம் எய்தும் வரை....
பெண்களுக்கு இழுக்கு என்பது எப்படியும் வந்திழுக்கும்.....
அதனாலே... ஐயா... வேழ முகத்தோனோ...
பிள்ளையாரப்பா....
இருக்கிறவரைக்கும்...
முதுமையே கொடு....
அப்படின்னு ஔவை இளமையில் முதுமை வேண்டியதைப் பாடும் பாடல்.... !!!!

தாமரை
06-11-2008, 03:20 PM
முழுமை
கொட்டிய பின்னரும்
பாக்கி இருந்தது
சிறுமை

ஒரு குப்பியில் உள்ள அனைத்து மையையும் கொட்டிவிட்டாலும் கறையாக சிறிதளவு மை எஞ்சி நிற்கும்.

முழுமை உள்ளவர்கள், பெரியவர்கள், அறிவில் சிறந்தவர்கள் வார்த்தைகளை சிந்தியாமல் கொட்டி விட்டால் அவர்களுக்கு எஞ்சி நிற்பது சிறுமைதான்.

பெரியவர்கள் எவ்வளவுதான் இடித்துரைத்தாலும் சிறுமதி பட்டறிவு வரும் வரை முழுதுமாக மாறுவதில்லை, கொஞ்சமாவது எஞ்சி நிற்கும்.

இப்படி இன்னும் சில வித பொருள் தரும்

மூலப் பொருள்

ஒரு கவிஞனாக.,
உள்ளத்தில் உள்ளதையெல்லாம்..
காகிததில் கவிதையாய் வரைந்த பின்பும்...
அவன் கவிதை முழுமை பெறவில்லை...
இன்னும் சொல்லாமல் விட்டவை உண்டு

எவ்வளவு எழுதியும் மனநிறைவு இல்லை ...

பென்ஸ்
06-11-2008, 03:45 PM
நீண்ட நாட்க்களுக்கு பிறகு...

மனமகிழ
உதடு மலர
கண்கள் வழிய
வாசித்தேன்....

என் தமிழ் ஆசான்களே...
தயவு செய்து உங்கள் தமிழ் அறிவெனும் நிறை குடம் தழும்பட்டும்.
தெறிக்கும் துளிகளில் சில கண்டிப்பாக என் தாகம் தணிக்கும்.

தாமரை
06-11-2008, 04:09 PM
இளையாரோ இளைத்தாரோ
இளைக்கு மாறிவறிவாரோ
இளைப்பாற!

இளையாரோ - இளைத்து விடுவார்களோ - இளையவர்களோ
இளைத்தாரோ - இளைத்து விட்டார்களோ - மற்றவர்களுக்கு இளைத்தவர்களோ
இளைக்கும் ஆறு இவர் அறிவாரோ - உடல் இளைக்கச் செய்யும் வழிமுறைகளை இவர்கள் அறிவார்களோ -

இளைக்கு மாறு இவர் அறிவாரோ - இளைப்பாய் தோன்றுவதற்கு மாற்று என்ன வென்று இவர்கள் அறிவார்களோ

இளைப்பாற - ஓய்வாய் அமர!

அதாவது

இளைத்து விடுவார்களோ
இளைத்து விட்டார்களோ
அல்லது
உடல் இளைக்கச் செய்யும் வழிமுறைகளை இவர்கள் அறிவார்களோ
இளைப்பாற

அல்லது


இளையவர்களோ
மற்றவர்களுக்கு இளைத்தவர்களோ
இளைப்பாய் தோன்றுவதற்கு மாற்று என்ன வென்று இவர்கள் அறிவார்களோ
இளைப்பாற

இளை - என்றால் ஒல்லியாகு, இளையது என்று பொருள் வரும். இளைப்பாறுதல் என்றால் மட்டுமே ஓய்வெடுத்தல் என்று பொரூள் வரும்.

அதாவது கடின உழைப்பைச் செய்யும் பொழுது சுவாச வேகம் அதிகரிக்கும். அதை இளைத்தல் (மூச்சு இளைக்கிறது என்பார்கள்) என்பார்கள். அந்த இளைப்பு ஆறுவதற்கு ஓய்வெடுப்பதே இளைப்பாறுதல். இளை என்றால் எப்படி இளைப்பாறுதல் ஆகும் என
சொல்லாமல்

இளைப்பாறுதலுக்கும் இளைக்கும் உள்ள வித்தியாசத்தை நைச்சியமாய் சொல்வது!

சாம்பவி
06-11-2008, 04:40 PM
என் தமிழ் ஆசான்களே... .

இதெல்லாம் ரொம்ப ஓவருங்கோ.... !!!!!

மன்றத்துக்கு தமிழ் ஆசான் ஒருவரே....
மாமனார் மட்டுமே.... !!!!

எனை எழுதத் தூண்டும்
எழுத்துக்கள் இலையேல்..
என் விரல்கள் ஊமையே.... !!!!!!!!

தூண்டுதலுக்கும்., துணைக்கும் நன்றி ஆசானே.. !!

தாமரை
07-11-2008, 06:33 AM
இளைமுன்
இளைமின்...
இலைமுன்
இலைமின்,,,,
இலையுமுண்...
இளையுமுன்....

இளைக்குமுன்....
இலக்குமுன்.....!!!!!

இளையோர் முன்னால், எளியவர் முன்னால்,
இளைஞனாக எளியவனாக இருத்தல் வேண்டும்.

இல்லை என்னும் முன்னர்
இல்லாமல் போய்விடுகிறது

இலையும் உண் இல்லை என்பதையும் பொறுத்துக் கொள்.. இளையுமுன் சோர்வடையும் முன்னால்அதையும் உண்டு ஜீரணி

இளைக்குமுன் - சோர்வடையும் முன்பு
இலக்குமுன் - குறிக்கோளை நோக்கிச் சிறிது முன்னேறு..



முன்னுமில்லை பின்னுமில்லை
எண்ணுமில்லை மண்ணுமில்லை
பொன்னுமில்லை தொன்னுமில்லை
பண்ணுமில்லை ஒண்ணுமில்லை
சும்-மா!

பொருள் ஒன்று

இதற்கு முன் இப்படி ஒன்று இருந்ததில்லை..
இதற்குப் பின்னும் இப்படி ஒன்று இருக்கப் போவதில்லை.
இதில் எண்ணிக்கைகள் பொருளற்றவை..
இவை மக்கி அழியப் போவதுமில்லை..
இவற்றில் பெரிய செலவமுமில்லை..
இவை மிகப் பழைமையான ஒன்றுமில்லை.
இவற்றில் இசைப்பாடல்கள் இல்லை...
அப்படி விஷேஷமாக ஒன்றுமில்லை.
வெறும் வார்த்தை விளையாட்டுதான்


பொருள் 2

கொற்றவை ஆகிய அவள் சிவனுக்கு

முன்னுமில்லை பின்னுமில்லை - அவனோடே இருப்பவள்
எண்ணுமில்லை மண்ணுமில்லை - இவர்களை ஒப்பிட எண்ணிக்கைகள் இல்லை. குறைத்துப் பேச ஒன்றுமில்லை
பொன்னுமில்லை தொன்னுமில்லை - மதிப்பிட உரைத்துப் பார்க்க அவர்கள் பொன்னுமில்லை.. அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று பேசும் பழம் பெருமைகளும் இல்லை
பண்ணுமில்லை ஒண்ணுமில்லை - இவர்கள் இல்லாமல் பாடல்கள், செய்யுள்கள் இல்லை.. அதுமட்டுமில்லாமல் வேறு ஒன்றுமே இல்லை

அப்படி இருக்க

சும்-மா (சுயம் அம்மா)அவனே அன்னை --
சும்மா - பிரித்துப் பார்ப்பது தேவையற்றது..

தாமரை
09-11-2008, 12:38 AM
உண்டுண்டு
உருண்டுருண்டு
ஒன்றோடொன்று
ஒன்றிரண்டன்றன்று
இத்தோடு நிற்க
பத்தோடு ஏன் படுக்க?


உண்டு உண்டு
உருண்டு உருண்டு
ஒன்றோடு ஒன்று
ஒன்றிரண்டு அன்று அன்று

உட்கொண்டு அதாவது உள்ளிழுத்து

பிரளயத்தில் அண்டங்கள் பரந்தாமனில் வயிற்றில் ஒடுங்கும் என்பது புராணம், அப்படி ஒடுங்கும் பொழுது ஒவ்வொரு உலகத்தையும் அவன் உண்ண உண்ண

ஒவ்வொரு உலகமும் உருண்டுருண்டு அவனுள் ஒன்றாக ஒன்ற

இப்படி அவனுள் இணைந்தவை ஒன்றிரண்டு அல்ல,

இத்தோடு நிற்க.. இத்துடன் நிறுத்தி விடலாமே.. இறைவனுடன் இரண்டறக் கலப்பதைத்தானே மோட்சம் என்கிறார்கள். அனைத்தும் இன்று இறைவனுடன் ஒன்றி மோட்ச மடைந்து விட்டனவே. இனிமேலும் ஏன் நாடகம்

பத்துடன் ஏன் படுக்க...

பத்து அவதாரங்களை முடித்துக் கொண்ட மாயன், பரந்தாமன் விஷ்ணு மறுபடி ஏன் மறுபடி படுக்கிறான்? ஏன் மீண்டும் படைப்பை உருவாக்கும் பிரம்மன் அவனிலிருந்து தோன்றுகிறான்.. வேண்டாமே!

ஒவ்வொரு சதுர் யுகத்திற்கும் ஒரு முறை பிரளயம் ஏற்பட்டு பேரண்டம் ஒடுங்கி மீண்டும் புதியதாய் பிறக்க, மறுபடியும் அதே போல் சதுர்யுகம் ஆரம்பம். அதே போல் தசாவதாரம்.. இப்படிச் செய்வதையே திரும்பத் திரும்பச் செய்ய போரடிக்கிறது பரந்தாமா!

தாமரை
09-11-2008, 02:57 PM
உண்டுண்டு
உருண்டுருண்டு
ஒன்றோடொன்று
ஒன்றிரண்டன்றன்று
இத்தோடு நிற்க
பத்தோடு ஏன் படுக்க?

இப்படியும் இன்னொரு பொருள் உண்டு.

உண்டு உண்டு - சாப்பிட்டுச் சாப்பிட்டு
உருண்டு உருண்டு - குண்டாக மாறி
ஒன்றோடு ஒன்று - ஒன்றிருக்க இன்னொன்று என
ஒன்றிரண்டு அன்று அன்று - வந்து சேரும் வியாதிகள், தொந்தரவுகள் ஒன்றிரண்டு அல்ல..

இத்தோடு நிற்க - உணவில் கட்டுப்பாடு காட்டுங்கள்

பத்தோடு ஏன் படுக்க - நோயோடு, கடனோடு ஏன் படுக்க வேண்டும்?

இன்னும் ஒரு பொருள் உண்டு. கண்டு பிடித்து பதிவோர்க்கு 5000 மின் காசுகள்..

தாமரை
21-08-2009, 09:12 AM
யாருமே சொல்லலை இருந்தாலும் நானே சொல்றேன்...

உண்டுண்டு - பெரிய பொருட்கள் சிறியவற்றை ஈர்த்து... விண்வெளியில் நெபுலா வெடிப்பிற்குப் பிறகு உண்டான துகள்கள் ஒன்றை ஒன்றை ஈர்த்துச் சேர்ந்து

உருண்டுருண்டு தன்னைத் தானே சுற்றியும், கோள்கள், துணைக்கோள்கள் என அமைந்து

ஒன்றோடொன்று - சூரியன் எனும் ஒரு நட்சத்திரத்தைச் சார்ந்து சூரியமண்டலமானது.

இப்படி உண்டான சூரியமண்டலங்கள் கோடிகோடி,. ஒன்றிரண்டன்று...

அவற்றையும் அறிந்து அவற்றோடு இருப்போமாக

நமக்குத் தெரிந்த விண்கோள்கள் பத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டாம்..

;D


இன்னொரு பொருள்..

கலியுக இறுதியில் .. ஒவ்வொருவரும் மற்றவரை விழுங்கப்பார்க்க, பாவச்சுழலில் சிக்கி உழன்று.... இறுதியில் ஒன்றே ஆகிய பரம்பொருளுடன் ஒன்றும்...

இதோடு நிறுத்திக் கொள்ளலாமே!.. பத்து அவதாரங்களை முடித்த பெருமாள் மீண்டும் ஏன் ஆலிழை மேல் படுத்து படைப்பினை ஏன் மீண்டும் ஆரம்பிக்க வைக்கிறான் என்று கேள்வி..

கலி முடிவில் அனைவரும் இறைவனோடு ஒன்றிய பின் ஏன் புதுயுகம் மீண்டும் படைப்புகள் இன்னல்கள் எனக் கேள்வி.

குணமதி
27-12-2009, 04:10 AM
ஓர் ஐயம்.

சொல் என்றாலும் பதம் என்றாலும் ஒன்றுதானே.

சொற்பதம் என்பதேன்?

சொல்லின் நேர்த்தி என்ற பொருளில் கூறுகிறீர்களா, என்ன.

தாமரை
13-09-2010, 12:05 PM
சொல் என்பதற்கும் பதம் என்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. பதம் என்றால் பக்குவம், விளக்கம் என்றும் வேறு பொருள்களுண்டு.

இங்கே சொல்லின் அர்த்தங்களையும், அவை பயன்படுத்தப்பட்டு இருக்கும் பக்குவத்தையும் விளக்குவதால் ஓவியன் சொற்பதங்கள் என பெயரிட்டு இருக்கார்.