PDA

View Full Version : சினிமா:மா.கண்ணோட்டம்-அழகிபடவிமர்சனம்1



பூமகள்
14-11-2007, 04:21 PM
"சினிமா: திரை விலகும் போது"


நூலிலிருந்து தோழர் மருதையன் கொடுத்த "அழகி" பட விமர்சனத்தை இங்கு பதிக்கிறேன்.

ஏற்கனவே பதித்த சினிமா விமர்சனம்-மாறுபட்ட கண்ணோட்டம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?goto=newpost&t=13270) திரியின் மூலம் எழுந்த பலரது கேள்விகளுக்கு இந்த பதிவில் பதில் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் பதிக்கிறேன்.



***************************************************************


"அழகி"- ஒரு அற்ப மனிதனின் அவலம்!


"கண்ணீர் வடிப்பதென்பது சிந்திப்பதாகும்" என்றார் ஒரு கலை விமர்சகர். "ஒரு கலைப்படைப்பில் துன்பியல் நாயகனின் அனுபவத்தில் பங்கு பெற்று அவனுக்காக அனுதாபப் படுகையில் தான் படும் சொந்தத் துன்பத்தின் மூலமாக ரசிகன் தூய்மைப்படுத்தப் படுகிறான். அவனுடைய வாழ்வு ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறது." என்பது இதன் பொருள்.

தமிழ் மக்கள் தம் அன்றாட வாழ்வில் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரைக் காட்டிலும், சொந்த வீட்டு எழவுக்கு அழுத கண்ணீரைக் காட்டிலும் அவர்கள் சினிமாக் கொட்டகையில் சிந்திய கண்ணீர் அதிகம். "கண்ணீர் வடிப்பது என்பது சிந்திக்க மறுப்பதாகும்" என்பதுதான் நாம் அனுபவத்தில் கண்டிருக்கும் உண்மை.

'அழகி' படத்தைப் பற்றிக் கேட்டால், 'நல்ல படம்', 'அழகான சித்தரிப்பு', 'சொல்ல வந்த கதையை அழகாய்ச் சொல்லியிருக்கிறார்' என்று ராஜ தந்திரிகளின் மொழியில் பலர் கருத்து கூறுகின்றனர். "அழகான ரோஜா மலரொன்றைக் கண்டேன்" என்று சொல்பவரிடம் "ரோஜா மலர் என்ன கருத்தைச் சொல்ல முயல்கிறது?" என்று நாம் கேட்கப் போவதில்லை. அது அழகை நுகர்கின்ற அனுபவம். அவ்வளவே.

ஆனால் அழகி எனும் திரைப்படம் வெறும் அழகு நுகர்ச்சி அனுபவம் அல்ல. ஒருவேளை கருத்துக் கூற முடியாத அளவுக்கு அந்த அழகியல் அனுபவத்தில் ரசிகன் கிறங்கி விட்டான் என்றால், அத்திரைப்படம் கூறும் கருத்தும் வெளிப்படுத்தும் உணர்ச்சியும் அவனுக்குள் நெருடல் ஏதுமின்றி இறங்கிவிட்டதென்றே பொருள். எனவே, விமர்சனம் அவசியமாகிறது.


**********************************************************************


படத்தின் பெயர் 'அழகி'யானாலும், கதாநாயகன் சண்முகத்தின் (பார்த்திபன்) துயரம் தோய்ந்த முகம்தான் படத்தின் மையப்பாத்திரம். ஆரம்பப் பள்ளியில் சிநேகிதமாகத் தொடங்கி உயர்நிலைப் பள்ளியில் காதலாக வளர்ந்த தனலட்சுமி - சண்முகத்தின் உறவு திடீரென அறுபடுகிறது.

டாக்டர் படிப்புக்கு சண்முகம் சென்னை போக, இரண்டாம் தாரமாகத் தன் அக்காள் புருசனுக்கே வாழ்க்கைப் படுகிறாள் தனம்(நந்திதா தாஸ்); இதனைக் கேள்விப்பட்டு மனம் ஒடிந்து போகிறான் சண்முகம்.

உதவி கேட்டு வரும் தனத்தின் கணவனுக்கு சண்முகம் வேலை வாங்கித் தருகிறான். தன் வீட்டில் பார்த்த பெண் வளர்மதியை (தேவயானி) வரதட்சணை வாங்கித் திருமணமும் செய்து கொள்கிறான். தனத்தை மறந்து அவனுடைய வாழ்க்கை அதன் போக்கில் நகர்கிறது. திடீரென ஒருநாள் சென்னையின் சாலையோரத்தில் நடைபாதை வாசியாக, கட்டிடத் தொழிலாளியாகத்தனத்தைச் சந்திக்கிறான். கணவனை இழந்து தன்னந்தனியாய்த் தன் மகனுடன் தவிக்கும் தனத்திற்கு உதவத் துடிக்கிறது சண்முகத்தின் மனது.

காரணம் - முன்னாள் காதலி என்ற பாசமா, இன்னும் அவனது நெஞ்சில் எஞ்சியிருக்கும் காதலா, வாழ்ந்து கெட்ட அவளது ஏழ்மை தோற்றுவித்த இரக்கமா.... எல்லாமுமா?

சண்முகம் அவளை நேரே தன் வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கலாம். ஏனோ தனது பணக்கார நண்பரின் வீட்டில் வேலைக்காரியாகச் சேர்த்துவிடுகிறான். "எசமான் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்னால் வேலைக்காரி மகனுக்குப் பிரியாணி கேட்கிறதா" என்று தனத்தை ஏசுகிறாள் மூத்த வேலைக்காரி.

பணக்கார நண்பரின் மகனோ தனத்தின் பையனுடைய கையிலிருந்து புத்தகத்தைப் பிடுங்கி "உனக்கெல்லாம் எதுக்குடா புத்தகம்" என்ற விரட்டுகிறான். "நாம் இந்த வீட்டை விட்டுப் போய்விடலாம்" என்கிறான் தனத்தின் மகன். "சண்முகம் சார் மனசு கஷ்டப்படும். அப்படியெல்லாம் பேசக் கூடாது" என்று மகனைச் சமாதானம் செய்கிறாள் தனம். இதை மவுனசாட்சியாகப் பார்த்திருந்து கண் கலங்குகிறான் சண்முகம்.

"நண்பர் வீட்டில் தனத்தைக் கவுரவமாக நடத்தவில்லை. எனவே அவளை நம் வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம்" என்று இப்போதாவது மனைவியிடம் சண்முகம் தன் விருப்பத்தை நேரடியாகத் தெரிவித்திருக்கலாம். ஆனால் கைக்குழந்தையைக் கவனிக்க முடியாத நிலைமை பற்றி மனைவி பேசுகின்ற சந்தர்ப்பம் பார்த்து "தனத்தை வீட்டோடு வைத்துக் கொண்டால் நமக்கும் உபயோகமாக இருக்கும்; அவளுக்கும் உதவியாக இருக்கும்" என்று கூறி மனைவியின் ஒப்புதலைப் பெறுகிறான். ஆனால் சண்முகத்தின் வீட்டிற்கு வருவதற்குத் தயங்குகிறாள் தனம். "எனக்காக இந்த உதவியைக் கூடச் செய்ய விருப்பமில்லைன்னா விடு" என்று சின்னதாக ஒரு பிளாக்மெயில் செய்து அவளைச் சம்மதிக்க வைக்கிறான்.

சண்முகத்தின் வீட்டில் அவனது படுக்கையறையைச் சுத்தம் செய்து நுழைந்து, கனவுக் காட்சியில் அவனுடன் ஒரு டூயட் பாடி முடிவில் சண்முகம் - வளர்மதி திருமணப் புகைப்படத்தை கை தவறிப் போட்டுடைக்கிறாள் தனம். வேலைக்காரி தனத்தை சண்முகத்தின் மாமியார் மிக மோசமாக ஏசுகிறாள். சண்முகம் மறைவில் நின்று கண்கலங்குகிறான். சண்முகத்தின் பெயரை உச்சரித்ததற்காக இன்னொரு முறை எல்லோர் முன்னாலும் வசவுகளைச் சுமக்கிறாள் தனம். இதையும் சகித்துக் கொள்கிறான் சண்முகம். "என்னால் தானே உனக்கு இந்தத் துன்பமெல்லாம்" என்று மறைமுகமாக அவளுக்கு ஆறுதல் கூறுகிறான். அவளோ சண்முகத்துக்காக எல்லா அவமானங்களையும் சுமக்கத் தயாராக இருக்கிறாள்.

இறுதியாக, சண்முகத்தின் இளம் பருவத்தோழன் கட்டையன் மூலம் "சண்முகம் - தனம் காதல் விவகாரம்" தற்செயலாகத் தெரிய வந்தவுடன் மனைவி வளர்மதி நிம்மதி இழக்கிறாள். அடுத்து நண்பர் வீட்டில் நடக்கும் விருந்தில் தனத்தை அவமானப்படுத்துகிறாள் வளர்மதி; சண்முகத்தின் வைப்பாட்டி என்று தனத்தை கந்துவட்டிக்காரன் ஏளனம் செய்ய, அதைத் தொடர்ந்து நடக்கும் சண்டையில் சண்முகம்
அடிவாங்குவதை வெறுப்புடன் வேடிக்கை பார்க்கிறாள் வளர்மதி.

இத்தனைக்குப் பிறகும், சண்முகம் தன் மனைவியைக் கண்டிக்கவில்லை. 'தனம் தன்னுடைய இளம்பருவக் காதலி' என்பதை அவளிடம் கூறவுமில்லை. பொறுக்க முடியாமல் மனைவி வளர்மதி கேட்கும்போது தான் அதை ஒப்புக் கொள்கிறான். "எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது" என வருந்துகிறான். "யார்தான் இளம்பருவத்தில் காதலிக்கவில்லை?" என்று கேட்டுவிட்டு நான் உனக்குத் ஹ்டுரோகம் நினைத்ததில்லை என்று கூறி மனைவியிடம் கண் கலங்குகிறான். "எனக்கு உங்கள் மீதும் சந்தேகமில்லை;தனத்தின் மீதும் சந்தேகமில்லை. ஆனால் பயமாக இருக்கிறது அவளைப் போகச் சொல்லி விடுகிறேன்" என்கிறாள் வளர்மதி. அதற்கு முன் தனமே போய் விடுகிறாள். "வளர்மதி இடத்தில் நானிருந்தால் இதைத்தான் செய்திருப்பேன்" என்று கடிதமும் எழுதி வைத்துவிட்டுப் போகிறாள் தனம்.


************************************************************************


"அழகி படத்தில் குணசேகரன் நடித்திருக்கிறாராமே. என்ன கதாப்பாத்திரம்?" என்று படம் பார்க்கும் முன்பாக ஒரு நண்பரிடம் கேட்டபோது "படத்தில் வில்லங்கமே அவராலதான்" என்று பதில் சொன்னார் அந்த நண்பர்.

அப்பாவியான கட்டையன் மட்டுமல்ல அடிமைச் சிந்தனையில் ஊறிப்போன வேலைக்காரியும், ஆதிக்கச் சிந்தனையில் ஊறிய மாமியாரும் ரசிகனின் பார்வையில் வெறுக்கத்தக்க வில்லிகளாகி விடுகிறார்கள்; ஆனால் உண்மையான வில்லனான சண்முகமோ ரசிகனின் பார்வையில் பரிதாபத்துக்குரிய துன்பியல் நாயகனாகி விடுகிறான்.


---------------------


ரசிக சண்முகங்கள்!!

சண்முகம் கண்கலங்கிய காட்சிகளிலெல்லாம் அவனுடன் சேர்ந்து கண்கலங்கிய ரசிகர்கள் சண்முகத்தை வில்லன் என்று சொன்னால் தங்களையே வில்லன் என்று கூறுவதாகக் கருதி வெறுப்படையக் கூடும். அதற்கெல்லாம் பயந்து நாம் அடக்கி வாசிக்க முடியாது. இது எம்.ஜி.ஆர். கதையோ, ரஜினி கதையோ அல்ல. இயக்குநரே சொல்வது போல ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்திருக்கக் கூடிய கதை. இத்தகையதொரு சூழலில் சண்முகம் செய்ததைத்தான் நீங்களும் செய்திருப்பீர்களென்றால் சண்முகத்தை நோக்கி வைக்கப்படும் கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அற்பத்தனம் என்பது யாதெனில்.........

நடைபாதையோரத்தில் சண்முகம் தனத்தைச் சந்திக்கின்ற அந்தத் தருணம் வரை, "உன் குற்றமா, என் குற்றமா, யாரை நானும் குற்றம் சொல்ல" என்று பாடல் ஒலிக்கிறதே அந்தத் தருணம் வரை, சண்முகம் குற்றாமற்றவன் என்றே ஒப்புக் கொள்வோம். ஒரு கூலிக்காரியாக, நடைபாதை வாசியாக, கணவனை இழந்த கைம்பெண்ணாக, தாயாக, அநாதையாக தனத்தைச் சந்தித்த சண்முகம் அவளை நண்பர் வீட்டில் வேலைக்காரியாக ஏன் சேர்த்து விட வேண்டும்?

நேரே தன் மனைவியிடம் வந்து அவளைப் பற்றிக் கூறி, பள்ளிப் பருவத்தில் தங்களுக்குள் இருந்த பருவம் வராக் காதலைப் பற்றியும் கூறி, தனத்தை வீட்டிற்கு அழைத்து வர மனைவியிடம் ஒப்புதல் கேட்டிருக்கலாமே. வளர்மதி அதற்கு ஒப்புக் கொண்டிருந்தால், ஒரு வேலைக்காரியாக இல்லாமல், சமமான தோழியாக தனம் அவர்களுடம் வாழ்ந்திருக்க முடியுமே! வளர்மதி மறுத்திருக்கக் கூடும். அப்படியானால் அவளுடம் போராடியிருக்கலாம். இனிமையான அமைதியான
மணவாழ்க்கையில் ஒரு சிறிய சலனம் ஏற்பட்டிருக்கும்; ஒருவேளை, அத்தகைய போராட்டம் வளர்மதி என்ற அன்பு மனைவியின் அதுவரை தெரியாத அற்பத்தனங்களையும் சண்முகத்திற்கு அடையாளம் காட்டியிருக்கும்.

சண்முகத்தைப் போன்ற மனிதர்கள் தமது சொந்தத் தவறுகளும் அற்பத்தனங்களும் மற்றவர்களுக்கு வெளிப்பட்டு விடுமே என்று மட்டும் அஞ்சுவதில்லை. மனைவி முதலான தமது சொந்தங்களின் அற்பத்தனங்கள் அவர்கள் வாயாலேயே அதிகாரப்பூர்வமாகத் தங்கள் முகத்தின் மீது உமிழப்படுவதை எண்ணியும் நடுங்குகிறார்கள். உறவுகள் உண்மைத் தீயில் புடம் போடப்படுவதைக் காட்டிலும், பொய்யின் நிச்சயமற்ற கதகதப்பில் பேணப்படுவதையே பாதுகாப்பானதாகக் கருதுகிறது அற்பத்தனம்.

பயங்கள் பலவிதம்!

இறுதிக் காட்சியில் மனைவி குறுக்கு விசாரணை செய்யும் போது உண்மையை ஒப்புக் கொள்ளும் 'நல்லவனான' சண்முகம் முதலிலேயே அவளிடம் இதைச் சொல்லாததற்குக் காரணம் - பயம். தனத்திற்கு அடைக்கலம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தைக் காட்டிலும், தன்னுடைய நடத்தையின்மீது மனைவிக்குச் சந்தேகம் வந்து விடுமோ என்ற பயம்!

மனைவிக்கு வேறுவிதமான பயம். "உங்கள் மீதும் தனத்தின் மீதும் எனக்குச் சந்தேகமில்லை. இருந்தாலும் பயமாயிருக்கிறது" என்கிறார் வளர்மதி. "இதுவரை நீங்கள் வரம்பு மீறவில்லையென்பதை வேண்டுமானால் நம்புகிறேன். ஆனால் இனியும் மீற மாட்டீர்கள் என்று நம்ப முடியவில்லை" என்பது தான் வளர்மதி கூறும் பயத்தின் பொருள்.

பழசையெல்லாம் மறந்து விடுமாறு சண்முகத்திற்குப் புத்திமதி சொல்லும் தனமும், அறிவுரை சொல்லி முடித்தபின், "எனக்குப் பயமாயிருக்கிறது" என்கிறாள். "இதுவரை நாம் வரம்பு மீறவில்லை என்பது உண்மை. ஆனால் மீறமாட்டோம் என்பதற்கு உத்தரவாதமில்லை" என்பது தான் தனம் வெளிப்படுத்தும் பயம்.

இரண்டு பெண் பாத்திரங்களும் உண்மையைப் பேசி விடுகின்றனர். ஆனால் சண்முகம் நடிக்கிறான். தனத்தின் நினைவாக அவளது செருப்பை ஒளித்து வைத்திருக்கும் சண்முகம், தனம் யாரென்பதைக் கவனமாகத் தன் மனைவியிடம் மறைத்த சண்முகம் தனது தடுமாற்றத்தை யாரிடமும் மனம் திறந்து கூறுவதில்லை. ஆனால் சண்முகமும் பயப்படுகிறான்; தனது பலவீனம் வெளிப்பட்டு விடக்கூடாதே என்பது தான் அவனது பயம்.

ஆணாதிக்கத்தின் பரந்த உள்ளம்!

இறுதிக் காட்சியில், "எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது" என்று தன் மனைவியிடம் சொல்கிறான் சண்முகம். தன் நடத்தை மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்று கருதும் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைத் தவிர்த்து, உண்மையிலேயே வெளிப்படையாக நடந்து கொண்டிருக்க வேண்டும்.

ஒரு மனிதன் என்ன செய்ய விரும்புகிறான் என்பதிலிருந்து உலகம் அவனை மதிப்பிடுவதில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதிலிருந்துதான் அவனை மதிப்பிடுகிறது; அவனது விருப்பத்தையும் ஊகிக்கிறது. தனத்திற்கு உதவி செய்வதில் மனிதாபிமானம் தவிர 'வேறு' எந்த நோக்கமும் சண்முகத்திற்குக் கிடையாது என்பதை நம்புவதாக இருந்தால், "துவக்கத்திலேயே வளர்மதியிடம் அவன் ஏன் உண்மையைச் சொல்லவில்லை?" என்ற கேள்வி எழுகிறது.

ஆண் வர்க்கத்தின் சார்பாக இதற்கு அளிக்கப்படும் விடை இது தான்! "குறுகிய சிந்தனை கொண்ட பெண்கள் ஆண்களின் பரந்த உள்ளத்தைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்வதில்லை. எனவே இந்த மாதிரி விசயங்களையெல்லாம் அவர்களிடம் உடைத்துச் சொல்லிவிட முடியாது."

ஒருவேளை வளர்மதிக்கு ஒரு முன்னாள் காதலன் இருந்து, அவனை அழைத்துவந்து இன்னாரென்று சொல்லாமல் வீட்டிலே தங்க வைத்தால்? "இயற்கையிலேயே ஆணாதிக்கச் சுபாவம் கொண்ட ஆண்கள் பெண்களின் இரக்க மனத்தைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்வதில்லை. அதனால் ட் ஹான் 'இவன் என் முன்னாள் காதலன்' என்ற உண்மையை நான் கணவனிடம் சொல்லவில்லை" என்று வளர்மதி அதற்கு விளக்கம் சொன்னால்...??

வளர்மதியின் முன்னாள் காதலன் 'அழகன்' என்று ஏற்றுக் கொள்ளப்படுவானா? படம் நூறு நாள் ஓடுமா? சண்முகத்துக்காகக் கண்கலங்கிய ரசிக சண்முகங்கள் பதில் சொல்ல வேண்டும்.

அபாயகரமான அவலம்!

பல படங்களில் நாம் காண்பதைப் போல இறுதிக் காட்சியைக் கீழ்கண்டவாறு அமைத்திருந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

"தனம் இந்த வீட்டில்தான் இருப்பாள். உனக்குச்சம்மதமில்லையென்றால் நீ வெளியே போடீ" என்று சண்முகம் பொங்கி எழுகிறான் என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்? படம் முழுவதும் ரசிகர்களின் கண்களிலிருந்து தோண்டித் தோண்டியெடுக்கப்பட்ட கண்ணீர் அந்தக் கணமே வறண்டு போகும். சண்முகத்தின் பணிவும் கையறு நிலையும், தவிப்பும்தான் அவனை ஒரு துன்பியல் நாயகனாக்குகிறது. வளர்மதியோ, கணவனின் வெள்ளை உள்ளத்தைப் புரிந்து கொள்ளத்
தவறிய வறட்டுப் பிடிவாதக்காரியாக, புத்தி கெட்டுப் போய்க் காரியத்தைக் கெடுத்த ஆத்திரக்காரியாகக் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறாள்.

எப்போதுமே ஆதிக்க வர்க்கம் அகம்பாவத்தோடு நடந்து கொள்ளும் நேரத்தில் அது வெறுக்கத்தக்கதாக இருக்கிறது. ஆனால் அது தன்னை அவல நிலையில் இருத்திக் கொள்ளும்போது மிகவும் அபாயகரமானதாகி விடுகிறது. ஆதிக்க வர்க்கத்தின் அவலத்திற்கு அடக்கப்பட்ட வர்க்கமே கண்ணீர் வடிக்கும் கேலிக்கூத்து இங்கேதான் தொடங்குகிறது.

"ஐயோ.... யாருமே இல்லையா" என்ற அவலக்குரலுடன் திரைக்குள் வருகிறாள் தனம். ஆனால் அந்தக் கணத்தோடு அவளது அவலம் முடிந்து விடுகிறது; சண்முகத்தின் அவலம் தொடங்கிவிடுகிறது. "என்னல்லாம் மறந்துட்டீல்ல", "எனக்காக இந்த உதவியக்கூட செய்ய முடியலன்னா விடு", "உன்னுடைய செருப்பை வச்சிக்கக்கூட எனக்கு உரிமை இல்லையா?" - என்று சரம் சரமாக செண்டிமெண்ட் அம்புகளை வீசுகிறான் சண்முகம். இரக்க உணர்ச்சியால் உந்தப்பட்டு, சண்முகத்திற்காக எதையும் இழக்கச் சித்தமாகிறாள் தனம். அடிமைத்தனம் பரவச நிலையை எய்துகிறது.

(தொடரும்)

நன்றிகள்:

நூல்: "சினிமா: திரைவிலகும் போது" (புதிய கலாச்சார நாளிதழில் வந்த விமர்சனங்களின் தொகுப்புப் புத்தகம்)
கட்டுரையாளர்: தோழர். மருதையன்
கட்டுரை எழுதிய ஆண்டு: ஜூன் 2002

ஆதவா
14-11-2007, 05:51 PM
அழகி'ய விமர்சனம்.

அறிஞர்
14-11-2007, 05:55 PM
பூ அருமை...

வெளிப்படையான விமர்சனம்...

இவ்வளத்தையும் நீங்கள் தட்டச்சு செய்தீர்களா...

பூமகள்
14-11-2007, 05:58 PM
அழகி'ய விமர்சனம்.
நன்றிகள் ஆதவா. இன்னும் வரும்.
பின்பு இறுதியில் சொல்லுங்கள்.

பூ அருமை...
வெளிப்படையான விமர்சனம்...
இவ்வளத்தையும் நீங்கள் தட்டச்சு செய்தீர்களா...
ஆமாம் அறிஞர் அண்ணா. இன்னமும் இருக்கிறது.
தட்டச்சு செய்துட்டு இருக்கேன்.
விரைவில் தரவிழைகிறேன்.

உடன் ஊக்கத்துக்கு நன்றிகள் அண்ணா.

அறிஞர்
14-11-2007, 07:00 PM
கொடுப்பதற்கு நன்றி..
தங்களின் கருத்துக்களையும் கொடுங்கள்...

ரொம்ப டைப் பண்ணி... கைவலிக்க போகிறது........

சொந்தப்படைப்புக்களுக்கு... நேரம் செலவிடுவதில் தவறில்லை...

தங்களை கவர்ந்த மற்றப்பதிவுகளை இங்கு கொடுங்கள்.. தவறில்லை...

raj6272
16-11-2007, 04:11 AM
பூ மகள், தோழர் மருதையனின் விமர்சன கருத்தை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அழகி படத்தில் காட்டப்பட்டது சண்முகம் என்ற ஒரு கதாபாத்திரம் அவ்வளவுதான், அது ஒன்றும் இந்த உலகத்தில் உள்ள எல்லாரின் பிரதிபலிப்பு இல்லை. அந்த கதாபாத்திரம் அந்த கதையில் அவ்வாறு நடந்து கொண்டது, அவ்வாறு மன தடுமாற்றத்துடன் தவறு செய்கிற மாதிரி தங்கர்பச்சான் காட்டி இருக்கிறார். அது அவருடைய படைப்பு சுதந்திரம், அதே மாதிரி தான் தோழர் மருதையன் கருத்தும், அவருக்கு இருக்கும் சுதந்திரத்தில் அவர் அந்த படைப்பை அவர் சிந்தனைப்படி விமர்சித்திருக்கிறார். இரண்டு பேர் கருத்துமே அவரவர் தனிப்பட்ட சிந்தனையே தவிர, இதுவே சாஸ்வதம் கிடையாது.

ஒரு கலைஞனுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது, அவர் ஒரு கதாபாத்திரத்தை எவ்வாறு வடிவமைக்கிறார் அதை எந்த கண்ணோட்டத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறார் என்று.


ஆனால் தங்கர் பச்சான் அந்த படத்தை ஏதோ தமிழர் எல்லோர் வாழ்விலும் இவ்வாறு ஒரு காதல் சரித்திரம் இருப்பது போலவும் அதை அவர் படமாக எடுத்து விட்டது போலவும் அவர் பெருமை அடித்துக்கொள்வதும், அந்த படைப்பு வெளியான பிறகு அதில் இவ்வாறு குறை கண்டு பிடிப்பது போல இவர்கள் தங்கள் கருத்தை மக்கள் மீது திணிக்க முயல்வதும் தான் தொடர்ந்து நடந்து வருகிறது.


ஒரு படம் வந்தால் அதில் குறை கண்டு பிடிப்பதற்கு முன்பு, படம் சுவாரசியமாக இருக்கிறாதா விரசமில்லாமல் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்.

"சிவாஜி" மாதிரி குப்பைகளை விட "அழகி" எவ்வளவோ மேல்