PDA

View Full Version : கண்ணீர்



ஆதி
14-11-2007, 11:24 AM
சில
கல்லறையில் விழுகின்ற
கடைசிப் பூக்கள்!!

ஓவியன்
14-11-2007, 11:48 AM
கரைக்க இயலா
பாவங்களையும்
கரைத்து போனது
கல்லறை விழுந்த
ஒற்றைக்
கண்ணீர்த் துளி..!!

ஆதி
15-11-2007, 11:50 AM
நன்றி ஓவியன்

பூமகள்
15-11-2007, 02:21 PM
சில
கல்லறையில் விழுகின்ற
கடைசிப் பூக்கள்!!
கை ஏந்திய பூக்கள்
கண் கொண்ட நீர்ப்பூக்கள்..!
இரண்டில் வலியது.. வலியெது?
இரண்டாவது..!

3 வரிகள்.. 5 வார்த்தைகள்... அசத்தல் சிந்தனை... எப்படிச் சாத்தியம் ஆதி??

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!

300 இ-பண அன்பளிப்பு..!

ஆதி
16-11-2007, 08:39 AM
நெகிழவைக்கும் உங்கள் பாராட்டுக்கும் இ-பணத்திற்கும் நன்றிகள் பூமகள்..

என் 'கண்ணீர்'க்கு கிடைத்தப் பாராட்டில் கண்ணீர் உண்டன கன்னகள்..

meera
16-11-2007, 09:26 AM
காயங்கள் பலவற்றிற்கு
இயற்கை தந்த
மருந்து

அழகான,அடக்கமான கண்ணீர் ஆதி.
தொடர வாழ்த்துகள் கண்ணீர் அல்ல.கவிதை.....

அமரன்
16-11-2007, 09:40 AM
சில
கல்லறையில் விழுகின்ற
கடைசிப் பூக்கள்!!

சிலர்
கல்லறையில் மட்டும்
உதிர்க்கும்பூ கண்ணீர்..
==================
கன்னமுண்ண மனந்நிறையும்
முரணாக பாரம்குறையும்
கண்ணீர்...!

gans5001
17-11-2007, 06:25 AM
அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

நாகரா
14-04-2008, 11:08 AM
குறுங்கவி அருமை ஆதி, பன்னிரண்டு வருடங்களுக்கு முன் "கண்ணீர்" பற்றி நான் எழுதிய குறுங்கவிகளை உம்மோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

கண் விசும்பின்
ஒரு துளியின்றி
மனித இருதயம்
முளைக்குமா?

மூளையையும்
இருதயத்தையும்
இணைக்கும்
தண்ணீர்ப் பாலம்

காயங்களுக்குக்
களிம்பாக நீளும்
கண்களின் விரல்கள்

புன்னகைகளின்
வேர்கள்.

மானுடம் பேசும்
விழியின் நாவுகள்.

மனித வேர்கள்
அன்பில் தான்
என்று அன்பின் திசை காட்டும்
காந்த முள்.

விழிகள்
தங்களை அலங்கரித்துக் கொள்ள
தாங்களே தயாரிக்கும்
முத்துக்கள்.

மனித அவதாரத்தை
உலகுக்கு அறிவிக்கும்
தீர்க்கதரிசிகள்.

உடம்பு தேசத்தின்
எல்லாப் பிரதேசங்களுக்கும்
பொதுவான ஆறு.

காண்பது
முகங்களா
அல்லது
முகமூடிகளா
என்பதை அடையாளங்காட்டும்
முகவரிகள்.

விழிப்பிரதேசம்
வரண்ட பின் தான்
மனிதக் கரங்களில்
ஆயுதக் கள்ளிகள்
முளைத்தன.

இத்தாய்மொழியை
மறந்த பின் தான்
மனிதன்
ஆயுதங்களென்ற
வேற்று மொழிகளைப்
பேச ஆரம்பித்தான்.

அன்புடைமை போதிக்கும்
அறக் குறள்கள்.

ஒரே எழுத்தை கொண்ட
உலக மொழி.

விழிச் சூரியனின்
ஈரக் கதிர்கள்.

காதல் கவிதைகளின்
குருதி.

அன்பு
அருள்
கண்ணோட்டம்
என்ற உயிர்க் குறள்களின்
மெய்யுடம்பு.

விழிச் சிப்பியுள்
தூசு விழும் போதும்
மனச் சிப்பியுள்
துக்கம் விழும் போதும்
இந்த முத்துக்கள்
உதிர்கின்றன.

இரண்டு இருதயங்களுக்கு
இடையே உள்ள தூரம்.

இன்பங்களின் உச்சியும்
துன்பங்களின் உச்சியும்
வேறல்ல என்னும்
அத்துவிதத் தத்துவம்.

மனிதனைச் செதுக்கும்
ஈர உளி.

அன்பைத் தோண்டக் கிட்டும்
வைரங்கள்.

அகத்தை
முகத்தில் எழுதும் மை.

விழிகள்
ஓதும் வேதங்கள்.

அன்பின்
வரி வடிவம்.

விழிகளின்
பெருமூச்சு.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.