PDA

View Full Version : சினிமாவிமர்சனம்-மாறுபட்டகண்ணோட்டம்-2பூமகள்
13-11-2007, 01:42 PM
முந்தைய பாகம் - 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=296436#post296436)


சினிமா விமர்சனம் - மாறுபட்ட கண்ணோட்டம் - 2


"அன்பே சிவம்" - திரைப்பட விமர்சனத்தொடர்ச்சி

***********************************************************************************************
மனச்சாட்சி என்பது என்ன??

அது சமூக விதிமுறைகள் குறித்தும், தனிப்பட்ட ஒழுக்கம் குறித்தும் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும்(அல்லது உருவாக்கியவண்ணமிருக்கும்) ஒரு கையேடு. எந்த முதலாளியும் தன் மனச்சாட்சிக்கு விரோதமாகத் தொழிலாளியைச் சுரண்டுவதில்லை; மனச்சாட்சிப்படித்தான் சுரண்டுகிறான். இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஐ.ஐ.டி.யில் படித்துத் தேறிய யுப்பி வர்க்கம் "இந்த நாட்டில் என் திறமைக்கு மரியாதை இல்லை" என்று திட்டிவிட்டு விமானமேறும்போது அது தன் மனச்சாட்சிப்படிதான் நடந்து கொள்கிறது.

சாதி இந்துக்களின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதாகவும், குற்றவுணர்வை உசுப்புவதாகவும் கூறிவந்த காந்தியின் பசப்பல்களை இதனால் தான் அம்பேத்கர் ஏற்கவில்லை. அரியானா முதல் மேல் மேலவளவு வரை 'சாதி இந்து மனச்சாட்சி' அன்றாடம் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

தீண்டாமை அல்லது மறுகாலனியாக்கம் போன்ற சமூக, அரசியல் அநீதிகள்(சமூக) அறிவியலின் துணை கொண்டு ஆராயப்பட வேண்டியவை. இவற்றை அறம் சார்ந்த பிரச்சனையாகச் சுருக்குவதும், திசை திருப்புவதும் முதலாளித்துவக் கலைஞர்கள் வழக்கமாக நடத்திவரும் கழைக்கூத்து. பெப்சி மாதவன் வர்க்கத்திடம் "அறம் செய விரும்பு" எனப்ப் போதிக்கிறார் நல்லசிவம்.

மாதவனின் வர்க்கத்தைப் "பன்னாட்டு நிறுவனத்தின் கூலி" என்று நல்லசிவம் சாடுகிறார். ஒன்னாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதிய ஜனதாவின் தலைவர் இல. கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.

விசாரித்துப் பாருங்கள்! உலகமயமாக்கம் குறித்து தனது கவலையை அவரும் வெளியிடுவார். "நமது கலாச்சாரம், தர்மங்கள், குடும்ப உறவுகள் ஆகியவற்றைப் பலி கொடுத்து விடக்கூடாது" என்பதே உலகமயம் குறித்த அவரது கவலை. அறம் சார்ந்த கவலை!

மார்க்சிஸ்டு கட்சியின் தூண்களான வங்கி, காப்பீடு, பொதுத்துறை ஊழியர் சங்க முன்னோடிகளிடம் பேசிப் பாருங்கள். பையனுக்கு விசா கிடைக்காத கவலையை நெஞ்சில் தேக்கியபடியே மேற்படி அறம் சார்ந்த கவலையையும் வெளியிடுவார்கள். இதே வகைப்பட்ட அறம் சார்ந்த கவலைதான் சிலிகான் வேலி பையனுக்குச் சீரங்கத்தில் பெண் தேடுகிறது.

இவர்களது ஆன்மாவின் குரல் ஓவியர் மதனின் வசனமாகத் திரையில் சிந்துகிறது. கலப்புப் பொருளாதாரத்தின் ஆதாயங்களை அனுபவித்த மனிதனின் வர்க்கம், புதிய பொருளாதாரத்தால் தத்தெடுக்கப்பட்ட தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்துச் செல்லமாகக் கடிந்து கொள்கிறது. தங்கள் புத்திரர்களான யுப்பி வர்க்கம் கையில் தீவட்டியுடன் திரிந்தாலும் "அவர்கள் அடிப்படையில் நல்லவர்கள்தான்" என்று நம்மை நம்பச் சொல்கிறது.

"ரத்ததானம் கொடு, ஏழைகளுக்குச் சின்ன உதவி செய், இரண்டு சொட்டுக் கண்ணீர் விடு - முடிந்தது கதை. நீ தான் கடவுள்" என்று மாதவனைத் தயார்ப்படுத்துகிறார் கமலஹாசன். மஞ்சள், வேப்பங்கொட்டை, பாசுமதி, எம்.என்.சி., எலும்புத்துண்டு.... என்று தன் அறிவின் மேன்மையை மாதவன் மீது நிலைநாட்டுகிறார். பட்டினத்துக் கதாநாயகியைப் பட்டிக்காட்டு கதாநாயகன் சீண்டுவது போலக் கொஞ்சம்
சீண்டுகிறார். இப்படியாக யுப்பி வர்க்கத்தின் பிரதிநிதியிடம் குற்றவுணர்வு தோற்றுவிக்கப்பட்டு விட்டது.

தமிழ் சினிமாவில் குற்றவுணர்வுக்கு ஆளாகின்ற பாத்திரம் அதை செண்டிமெண்டு மூலம் நிரூபிக்க வேண்டும் என்பது விதி; மாதவன் நிரூபிக்கிறார்; தோழர் நல்லசிவம் அண்ணன் நல்லசிவமாகிறார். யுப்பி வர்க்கத்தின் பிரதிநிதிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் 'பிரதிநிதி'க்குமிடையிலான உறவு அண்ணன் - தம்பி உறவுதானென்று திரைக்கதையின்படியே நிரூபணமாகிறது.

நல்லசிவத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான உறவு என்ன? "நல்லசிவம் நாடகம் போட்டால் தொழிலாளிகள் வேடிக்கை பார்ப்பார்கள்; நல்லசிவத்தை முதலாளி ஆள் வைத்து அடித்தால் அதையும் வேடிக்கை பார்ப்பார்கள்; மற்றப்படி சம்பளம் 910 ஐ, 920 ஆக்க வேண்டுமென்றால் அவர்களுக்குப் புரியும். 'முதலாளி நாசர் தான் எதிரி ' என்று தாடிவைத்து டான்ஸ் ஆடிக் காட்டினால் புரியும்.

தொழிலாளர் தலைவர் முதலாளி மகளை ஏன் காதலிக்கிறார் என்று கேட்கக்கூடத் தெரியாது. மற்றப்படி உலகமயமாக்கம், அமெரிக்கா, ஜப்பான் இதெல்லாம் புரியாது. சொல்ல வேண்டியது நம் கடமை என்பதால் நாலு வார்த்தை சொல்லி வைப்போம்" - இது தான் தொழிலாளி வர்க்கத்தின்பால் நல்லசிவத்தின் அணுகுமுறை.

"ஏனென்றால் கதையில் அவர்கள் இல்லை" என்ற வழக்கமான கோடம்பாக்கம் பதில் நம் காதில் விழுகிறது. "எடுத்த கதையைப் பற்றிப் பேசு; எடுக்காத கதையைப் பற்றி பேசாதே" என்ற எச்சரிக்கைக் குரலும் கேட்கிறது.

இருந்தாலும் "உலகமயமாக்கத்துக்கு எதிரானது" என்று கூறிக் கொள்ளப்படும் திரைப்படத்தில், அதனால் பாதிக்கப்பட்ட வர்க்கம், அதை எதிர்த்துப் போராட வேண்டிய வர்க்கம் ஏன் செவிடாகவும் ஊமையாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது என்று கேட்காமலிருக்க முடியாது.

உலகமயமாக்கலின் விளைவாகப் பட்டினிச் சாவுக்கும், நோய்க்கும், வேலையின்மைக்கும், தற்கொலைக்கும் தள்ளப்பட்டிருக்கின்ற நாட்டின் 90 சதவீத மக்கள், தங்களுடைய தலைவிதி எங்கே, யாரால், எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று அறியாமல் இருக்கிறார்களே, அது தான் இன்றைய அவலம். குடிநீருக்குத் தவமிருக்கும் பெண்கள் பெப்சி கடைகளை நொறுக்கத் தொடங்கினால், பட்டினியில் வாடும் விவசாயி மெக்டொனால்ட்ஸ் கடையை இனம் கண்டு சூறையாடினால், தற்கொலை
செய்து கொள்ளும் பருத்தி விவசாயி அமெரிக்க ஜீன்ஸ் கடைகளுக்குத் தீ வைத்தால்....... அப்போது யுப்பி வர்க்கம் 'எனக்கென்ன' என்று தோளைக் குலுக்காது. ஒவ்வொரு மாதவனாகத் தேடிப் பிடித்து அவர்களுடைய அறவுணர்வை உசுப்பிவிடும் சிரமமும் நல்லசிவத்துக்கு இருக்காது. இதயத்தில் 'கடவுள்' உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று அந்த வர்க்கம்தானே இரண்டாகப் பிளந்து விடும்.

அல்லாமல் அந்த வர்க்கத்தின் அறவுணர்வை வேண்டி மன்றாடி நின்றால், கஞ்சித் தொட்டி, உண்டைக்கட்டி அல்லது பிச்சையிடுதல் மூலம் தான் அது தன் அறவுணர்வை வெளிப்படுத்தும். ஒரு வர்க்கம் என்ற முறையில் அதன் மனநிலையும் சிந்தனை முறையும் இது தான். அந்த வர்க்கத்திலிருந்து நீங்கிய சிலர் இருக்கலாம். ஆனால் மாதவன் அவ்வாறு நீங்கியவர்களின் பிரதிநிதி அல்ல; அந்த வர்க்கத்தின் பிரதிநிதி.

உலகமயமாக்கத்தைச் சாடுவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு திரைப்படம், அதை உண்மையிலேயே எதிர்த்துப் போராடக் கூடிய உழைக்கும் வர்க்கத்தையோ அதன் பிரதிநிதியையோ மையப் பார்த்திரமாகத் தெரிவு செய்யவில்லை. மாறாக உலகமயத்தால் ஆதாயமடைகிற, அதை ஆதரிக்கிற ஒரு விளம்பர சினிமாத் தயாரிப்பாளனை, அதாவது யுப்பி வர்க்கப் பிரதிநிதியை வம்படியாக இழுத்து வைத்துக் கொண்டு அவனிடம் மூச்சைக் கொடுக்கிறது; அவன் மீது தன் மேதாவிலாசத்தைப் பொழிகிறது.

தொழிலாளி வர்க்கத்தின்பால் மார்க்சிஸ்டு கட்சியின் அணுகுமுறையும் இது தான். "போனஸ், கூலி உயர்வு, சூரியன், இரட்டை இலை தவிர வேறெதுவும் மக்களுக்குப் புரியாது, புரியத் தேவையில்லை" என்பது அவர்கள் கருத்து.

சமீபத்தில் மாணவர் போராட்டத்தின் போது "உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைப்படிதான் கல்லூரிகள் தனியார்மயமாக்கப்படுகின்றன" என்ற விசயத்தை மாணவர்களுக்கு விளக்கத் தேவையில்லை என்பதே அவர்களுடைய கருத்தாக இருந்தது. ஏனெனில் அதெல்லாம் மாணவனுக்குப் புரியாதாம். "கட்டணம் உயரும் என்ற ஒரு விசயம்தான் மாணவர்களின் அறிவுக்கு எட்டும்" என்பது அவர்களது முடிவு.

எனில், அரசியல், பொருளாதாரம், தத்துவம் எல்லாம் யாருக்கு??

*************************************************************************************************************************************

(அடுத்த பாகத்தில் முடியும்.)


இறுதிப் பாகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13275)


நன்றி:
புத்தகம்: "சினிமா: திரை விலகும் போது"
கட்டுரையாளர்: தோழர். மருதையன்.

ஆதவா
13-11-2007, 06:33 PM
முதலாளிகள் மனசாட்சிக்கு விரோதமாக சுரண்டுவதில்லை... இது எழுத்தாளரின் கருத்து... அவர் இன்னும் அனுபவத்தில் உணரவில்லை என்று நினைக்கிறேன்... இன்னும் மென்பொருள் கம்பனி முதலாளிகளை விட்டு ஆலைக்கு அடிமை வேலை வாங்கும் முதலாளிகளைக் கண்டதில்லை போலும். மனசாட்சிக்கு விரோதம் என்பது தனக்குள்ளே வகுத்துக் கொண்டு அதன்படி நடப்பது மட்டுமல்ல. தான் அறியாமல் சுரண்டு ஒவ்வொரு மி.கிராம் தங்கமும் மனசாட்சிக்கு விரோதமே

சரி.... சினிமாவை சினிமாவாக எடுத்துக் கொள்வது எவ்வகையில் நியாயமாகப் படுகிறது/? அமெரிக்க மோக மாதவனை "அன்பேசிவம்" என்று நான்கு நாட்களில் கமல் மாற்றிவிடுவதை கேலியாகப் பேசும் இதே எழுத்தாளர், (உதாரணத்துக்குச் சொல்றேன்) வேறு படமான மருதமலையில், பதினெட்டு வருடமாக தேர்தல் நடத்த விடாமல் ஒருவன் தடுக்கிறானாம் தலைமைத் தேர்தல் அதிகாரியை தாக்குகிறானாம் ,,,, அதை ஆதரிக்கிறாரோ? அய்யா,,, இது சினிமா அய்யா சினிமா.... நீங்க எதிர்பார்த்து நிற்க, இது அரசியல் இல்லை.... உலகமயமாக்கலை எவ்வகையிலும் காட்டத் தகுந்தது சினிமா.... அது ஒரு பொழுது போக்கு,... அதையும் இப்படி ஒரு கட்டுரை எழுதி சம்பாதித்திருப்பது அந்த படத்தின் வெற்றி... ஏனெனில் ஒரு வெற்றிக்குப் பின் உண்மை அடங்கியிருக்கிறதல்லவா? எழுத்தாளரே! நீங்க பேசாமல் சிவகாசி படத்துக்கு விமர்சனம் பண்ணுங்க.

ஒரு மனிதனை தன்வசப்படுத்த நான்கு நாட்கள் தேவையில்லை, நான்கு நிமிடங்கள் போதும். அது அனுபவம்,

இங்கே வெளிநாட்டு வேலை சம்பந்தமாக சற்றே எழுப்பப் பட்ட கேள்வியும் கவனித்தேன். ஏன் கூடாது? வெளிநாட்டு வேலை என்பது அவ்வளவு இழுக்கா? எழுத்தாளருக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைத்தால் நாசூக்காக சென்றுவிடுவார் என்பது வேறு விசயம்..:)

அட போங்கப்பா.அ.... இப்படி எல்லாம் எழுதி சம்பாதிக்கலாம் என்றால், என்னிடம் நிறைய ஸ்டாக் உள்ளது...

வணக்கம்...

(சாரி பூமகள். இறுதி பாகம் படிக்க விருப்பமில்லை...)