PDA

View Full Version : சினிமாவிமர்சனம்-மாறுபட்டகண்ணோட்டம-பாகம&



பூமகள்
13-11-2007, 11:29 AM
"சினிமா: திரை விலகும் போது.."


என்ற நூலிருந்து ஒரு கட்டுரையை தோழர் மருதையன் அவர்கள் படைத்த வித்தியாசமான கண்ணோட்டத்தை அவர் சொல்லிய வடிவில் பதிக்க விழைகிறேன்.

ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா இல்லையா, தனக்கு பிடித்த காட்சியமைப்புகள் இருக்கிறதா என்ற மலிவான தரம் குறைந்த ரசனையை வணிகப் பத்திரிக்கைகள் விமர்சனம் என்ற பெயரில் கற்றுத் தருகின்றன. தொழில் நுட்ப நேர்த்தி பற்றி விமர்சித்து அவை தரமான விமர்சனம் என்று பெயர் சொல்லி கூவும் அவலமும் மறுபுறம் நடந்த வண்ணம் தான் உள்ளது.

இவை இரண்டிலிருந்தும் மாறுபட்ட ஒரு விமர்சனத்தை உங்களுக்காக கொடுப்பதில் நான் பெருமைப் படுகிறேன்.

ஒரு இயக்குநரின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசபக்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலம் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சி வசப்படுத்துவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத் தான் இங்கு கொடுக்கும் தோழரின் விமர்சனங்கள் கண்டுபிடிக்க விரும்புகின்றன.

இதுவரையில் கண்டிராத, ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை விமர்சனத்தை, வித்தியாசமான கோணத்தில் உங்களின் மூளையில் படத்தினை அலசும் உத்தியை இங்கு ஒரு படத்தை உதாரணமாக விமர்சிப்பதன் மூலம் கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன்.

சினிமா எனும் மிகப்பெரிய மீடியா மூலம் மக்களின் மனத்தில் எம்மாதிரியான சிந்தனை ஓட்டத்தை உருவாக்க முற்படுகிறார்கள் என்று இந்த புத்தகத்தில் படித்து அறிந்து கொண்டேன். மிக மிக உபயோகமான, பயனுள்ள தகவல் என்பதால் தங்களோடு பகிர விரும்பி இங்கு ஒரு படத்தினை அவர் விமர்சித்த அந்த கட்டுரையைப் பதிக்க விரும்புகிறேன்.

********************************************************************************************************************


அன்பே சிவம் - சி. பி. எம் -இன் திரை அவதாரம்


'அன்பே சிவம்' திரைப்படத்தில் பிரளயனின் ' வீதி நாடக்குழு' இருக்கிறது; தொழிலாளிகளின் சம்பள உயர்வுக் கோரிக்கை இருக்கிறது; செங்கொடி இருக்கிறது; சி.ஐ.டி.யு.வின் அறிவிப்புப் பலகையே இருக்கிறது; பன்னாட்டு நிறுவனங்களைத் தாக்கும் வசனங்கள் இருக்கின்றன; மொத்தத்தில் மார்க்சிஸ்டு கட்சியினர் மனக் கிளர்ச்சியடைந்து தியேட்டர் வாசலில் தோரணம் கட்டுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் படத்தில் இருக்கின்றன.

இருந்த போதிலும் வெள்ளித்திரையில் சிவப்பு நிறம் தெரிவதாகக் கேள்விப்பட்டு விரைந்து, சினிமாக் கொட்டகையில் 40,50 அபராதம் கட்டிய ரசிகர்களுக்கு "கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார்" என்ற குழப்பமும் இருக்கிறது.

மார்க்சிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி இந்தப் படத்தைப் பாராட்டியிருப்பதிலோ, தீக்கதிர் உச்சிகோந்திருப்பதிலோ நமக்கு வியப்பில்லை. பா.ஜ.க. தலைவர் இல.கணேசனும் இதைப் பாராட்டியிருக்கிறார் என்பதுதான் இதில் சுவையான செய்தி. செங்கொடியும், சி.ஐ.டி.யூ. பலகையும்
தெளிவாகக் காண்பிக்கப்பட்ட பிறகும் இல.கணேசன் பாராட்டுகிறாரென்றால், ஏமாந்தது யார் என்று நமக்குத் தெரிந்தாக வேண்டும்.

நல்லசிவம்(கமல்) எனும் விகாரமான தோற்றம் கொண்ட மார்க்சியவாதி, அன்பரசு(மாதவன்) எனும் அழகான, அமெரிக்காவில் படித்த, செல்போன் பிடித்த, ஜீன்ஸ் போட்ட இளைஞனை புவனேசுவர் விமான நிலையத்தில் சந்திக்கிறான். தன்னுடைய தமிழ்ப் பெயரையே இழிவாகக் கருதி ஏ.அர்ஸ். என்று சுருக்கிக் கூறிக் கொள்ளும் அளவு தீவிரமான அமெரிக்க மோகியான அன்பரசு, நல்லசிவத்தைத் தீவிரவாதியென்று சந்தேகித்து போலீசிடம் போட்டுக் கொடுத்து, இல்லையென்று நிரூபணமானதால் அவமானப்படுகிறான்; கொஞ்சம் 'குற்றவுணர்வும்' அடைகிறான்.

புவனேசுவரிலிருந்து சென்னை நோக்கிய நான்கு நாள் பயணத்தில் இந்தச் சின்ன குற்றவுணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக நோண்டிப் பெரிதாக்குகிறான் நல்லசிவம். கிரெடிட் கார்டும், வெளிநாட்டு ஷீவும், நுனிநாக்கு ஆங்கிலமும் செல்லுபடியாகாத உண்மையான இந்தியாவை அந்த அமெரிக்கக் குஞ்சுக்கு அறிமுகம் செய்கிறான். அந்த இளைஞனின்
இதயத்திலும் பெயரிலும் 'இயற்கையாகவே' குடி கொண்டிருக்கும் 'அன்பை', அதாவது கடவுளை, சாமர்த்தியமாகத் துழாவி வெளியே எடுத்து அவனுக்கே அறிமுகப்படுத்தியும்விடுகிறான்.

புவனேசுவரிலிருந்து சென்னைக்கு முன்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தினூடாக, நல்லசிவம் தன் நினைவுகளில் பின்னோக்கிச் செல்லும் பயணமும் வருகிறது. வீதி நாடகக் கலைஞனும், மார்க்சியவாதியும், ஓவியனும், கணினி விற்பன்னனுமான நல்லசிவத்தைக் கண்டு - அதாவது அவனிடம் பொதிந்திந்துள்ள சராசரித் தொழிலாளியின் சக்திக்கு அப்பாற்பட்ட 'திறமை'யைக் கண்டு மயங்கி அவனைக் காதலிக்கிறாள் முதலாளியின் மகள். எதிர்பாராத விபத்து அவர்களைப் பிரிக்கிறது.

சிவத்தின்(நல்லசிவத்தின்) காதலி அன்புக்கு (அன்பரசுக்கு) மனைவியாகிறாள். தொழிலாளர்கள் தமது சொந்தத் தியாகத்தால் வாங்க முடியாத கூலிஉயர்வை, தனது காதலைத் தியாகம் செய்து அவர்களுக்கு வாங்கி வழங்கிவிட்டு, ஒரு சித்தரைப் போலத் தெருநாயுடன் நடந்து மறைகிறான் நல்லசிவம்.

கதையின் தர்க்கரீதியான தொடர்ச்சியில் விழும் ஓட்டைகளை ஒதுக்கிவிட்டு மையக் கருத்துக்குச் செல்வோம்.

*****************************************************************************************************************************

படம் உலகமயமாக்கத்துக்கெதிராகப் பேசுகிறதா? ஆம், என்கிறார் கமலஹாசன். வீதி நாடகத்திலும், மாதவனிடம் கமல் பேசும் வசனங்களிலும் ஆங்காங்கே தூவபட்டிருக்கும் வசனங்களை வைத்து அத்தகைய பிரமை சிலருக்குத் தோன்றக்கூடும்.

சரி, உலகமயமாக்கலை எதிர்த்து இந்தப் படம் யாரிடம் பேசுகிறது? என்ன பேசுகிறது? இந்தக் கொள்கைகளினால் ஆதாயமடைகின்ற வர்க்கத்தின் பிரதிநிதியிடம் பேசுகிறது. கணினி வல்லுனர்களாகவும், பொறியாளர்களாகவும், சேவைத்துறையினராகவும் வேலை செய்கின்ற நுனி நாக்கு ஆங்கிலப் பேர்வழிகளிடம், அமெரிக்காவுக்கு ஓடுவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் பெப்சி மாதவன்களிடம் பேசுகிறது.

"சோற்றுக்குப் போராடும் இந்தத் தேசத்தைப் பாருங்கள். மக்களைப் பாருங்கள். மனமிரங்குங்கள். அற உணர்வு கொள்ளுங்கள்" என்று அவர்களிடம் மன்றாடுகிறது. அவ்வப்போது நல்லசிவத்தின் சாமர்த்தியமான வசனங்களால் அவர்களை மடக்குகிறது. லேசாக இடித்துரைக்கிறது.

பிறப்பால் இந்தியனாகவும் சிந்தனையால் அமெரிக்க அடிவருடியாகவும் வளர்ந்துள்ள "யுப்பி" என்றாழைக்கப்படும் நவீன கேட்டுக் குடி வர்க்கத்தின் பிரதிநிதியாகத் திரையில் தோன்றுகிறார் மாதவன். இந்த வர்க்கம் அறவுணர்வற்றுப்(Amoral) போனதற்குக் காரணமென்ன என்பது நமது முதல் கேள்வி.

உலகப் புகழ் பெற்றா பங்குச் சந்தைச் சூதாடியான ஜார்ஜ் சோரோஸ் எனும் கிழவனிடம் அவனுடைய ஒழுக்கம், அறவுணர்வு பற்றிய கேள்விகளை எழுப்பியபோது, "சந்தைக்கு அறவுணர்வு இல்லை; எனவே எனக்கும் இல்லை" என்று பதிலளித்தானாம். அந்தக் கிழட்டுப் போக்கிரியின் வாயிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை.

பன்னாட்டு நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்ற எத்தகைய 'நெறிகளைக்' கடைப்பிடிக்கின்றனவோ அவற்றின் பிரதிபலிப்பைத்தான் நாம் இந்த யுப்பி வர்க்கத்திடம் காணமுடியும். ஏனென்றால் இவர்கள் அதன் ஊழியர்கள், தரகர்கள், துதிபாடிகள் அல்லது நல்லசிவத்தின் மொழியில் சொன்னால் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் கூலிகள்.

அவ்வாறிருக்க, நிஜத்தின் தலையைச் சீவுவதைத் தந்திரமாகத் தவிர்த்துவிட்டு, நிழலுக்கு முடிவெட்டி அழகுபடுத்த முனைகிறார் நல்லசிவம்.

அன்பரசுவின்(மாதவனின்) வர்க்கத்தைப் பொறுத்தவரை முதலாளித்துவ உலகச் சந்தைதான் அவர்களது கடவுள். சந்தையின் விதிகள்தான் இறைவனின் பத்துக்கட்டளைகள். இந்த ஆட்டத்தில் வெல்லும்போது அதைத் தனது திறமைக்கும், புத்திக் கூர்மைக்கும் கிடைத்த வெற்றியாக அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். இதில் தோற்று மடிபவர்களைக் குறித்து
அவர்கள் வருத்தம் கொள்வதில்லை.

சூறாவளியில் பிடுங்கியெறியப்பட்ட தென்னை மரத்துக்காக இவர்கள் எப்படிக் கண்ணீர் விடமாட்டார்களோ, அவ்வாறே உலகமயமாக்கத்தால் பிடிங்கி எறியப்பட்டுச் செத்து மடிகின்ற விவசாயிகளுக்காகவும் இவர்கள் கண்ணீர் விடுவதில்லை.

"சோமாலியா முதல் தஞ்சை வரையிலான பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் நம்மால் முன்னறிந்து சொல்ல முடியாத சந்தையின் விதிகள் தான்" என்று கூறும் உலக முதலாளித்துவத்திடம் இந்தச் சாவுகளுக்கக தார்மீகப் பொறுப்புணர்ச்சியை எப்படி எதிர்பார்க்க முடியாதோ, அவ்வாறே இந்த யுப்பி வர்க்கத்திடமும் அதை எதிர்பார்க்க முடியாது. "பட்டினிச் சாவா அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்று அவர்கள் தோளைக் குலுக்குவார்கள். அவ்வளவுதான்.

ஆனால் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஓர் அன்பு ஊற்று இருப்பதாகவும் ஏதோ சில காரணங்களால் அது அடைப்பட்டிருந்தாலும் அதைத் தோண்டியோ, நோண்டியோ வெளியே கொண்டு வந்து விடமுடியுமென்றும் நம்மை நம்பச் சொல்கிறார் கமலஹாசன். இந்த பார்முலாவின்படி மாதவனுக்குள் இருக்கும் 'கடவுளை' நாலே நாளில் தோண்டி எடுத்து விடுகிறார்.

எல்லோருக்குள்ளும் ஒரு நடுநிலையான மனச்சாட்சி(கடவுள்) இருப்பதாகவும், அந்த மனச்சாட்சிக்கு விரோதமாகச் சிலர் நடந்து கொள்கின்ற காரணத்தினால்தான் சமூகத்தில் இத்தனை அநீதிகள் நிகழ்கின்றனவென்றும், எல்லோரும் மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளத் தொடங்கி விட்டால் உலகமே அன்புமயமாகிவிடும் என்றும் கருதுகின்ற பிரபலமான மூடநம்பிக்கையை வேறு வார்த்தைகளில் விற்பனை செய்கிறார் கமலஹாசன்.

மனச்சாட்சி என்பது என்ன?

****************************************************************************************************************************

இது பற்றி அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.

(தொடரும்)
பாகம் 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13274)
பாகம் 3(இறுதி) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13275)நன்றி:
புத்தகம்: "சினிமா: திரை விலகும் போது"
கட்டுரையாளர்: தோழர். மருதையன்.

xavier_raja
13-11-2007, 12:03 PM
நல்ல பயனுள்ள தகவல், என்னுடைய ஒரு தாழ்மையான கருத்து என்னவென்றால்.. கமல்ஹாசன் தான் சொல்லவந்ததை சில சமயம் ஒருமாதிரியாக குழப்பிவிடுகிறார் (உ.தா:ஹேராம் படம்). அதனால் பல நல்ல கருத்துகள் மக்களை போய் சேரமுடியாமல் போகிறது.

அமரன்
13-11-2007, 12:04 PM
பூமகள் இது அவரது எழுத்தின் அச்சுப்பிசகாத மறுபதிப்பா..
அல்லது உங்கள் கருத்துகள் புகுத்தப்பட்ட மறுபதிப்பா..
முன்னதாயின் இருக்கவேண்டிய இடம் இலக்கியங்கள் பகுதி..

பூமகள்
13-11-2007, 12:30 PM
அமரன் அண்ணா.. தாங்கள் சொல்லியது சரியே...
இது அவரின் அச்சுப்பிசகாத மறுபதிப்புத் தான்.
என் கருத்துக்கள் கட்டுரையின் முன்னும், இறுதியிலும் தருகிறேன்.
தகுந்த இடத்திற்கு இத்திரியை மாற்றி உதவுங்கள் அமரன் அண்ணா.
பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றிகள்.

அமரன்
13-11-2007, 12:32 PM
நகர்த்தியுள்ளேன்...!
பூமகள் பதிவை முழுமையாக இன்னும் உளவாங்கவில்லை.. அதனால் உள்ளடக்கம் பற்றிய கருத்து பின்னூட்டத்தில் அடக்கவில்லை... விரைவில் முயல்கின்றேன்.

பூமகள்
13-11-2007, 12:45 PM
நன்றிகள் அமரன் அண்ணா.
தங்களின் ஆழமான விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளேன். இன்னமும் மன்ற மாணிக்கங்களின் பின்னூட்டத்தையும் எதிர்நோக்கியுள்ளேன்.

ஒரு சிறு சந்தேகம்.
இதன் தொடர்ச்சியை இங்கு பதிக்கவா அல்லது புதிய திரி துவங்கி பதிக்கவா அமரன் அண்ணா??

யவனிகா
13-11-2007, 01:22 PM
மசாலாப் படங்களுக்கு காட்டமான, எதிரான திரை விமர்சனம் என்றால் கூட ஒத்துக் கொள்ளலாம். "அன்பே சிவத்"தை இப்படி விமர்சிப்பது வருத்தமளிக்கிறது.

மனிதனில் இருக்கும் கடவுளை நாலு நாளில் தோண்டி எடுக்க முடியாதா? மனிதனின் மனத்தில் கடவுள் இருப்பாரேனில் நான்கு நொடிகளில் கூட தோண்டி எடுக்க முடியும்.இல்லா மனங்களை என்ன செய்ய?
இரண்டு சண்டை, நான்கு டூயட்,மூன்று சென்டிமென்ட் காட்சிகள் கொடுத்தால் போதும், மக்கள் திருப்தி அடைவார்கள் என்று இல்லாமல் கொஞ்சம் மேலே ஏறி தரமான ஒரு படத்தை அழகான விசயங்களுடன்
அளித்தால் அதற்கும் எதிர்ப்பா?
ஒரு வேளை..,எல்லாரும் நல்ல படம் என்று கூறும் போது எதிர் மறையாக விமர்சித்தால் புகழடையலாம் என்ற எண்ணமோ?

சிவா.ஜி
13-11-2007, 01:41 PM
ஒரு வேளை..,எல்லாரும் நல்ல படம் என்று கூறும் போது எதிர் மறையாக விமர்சித்தால் புகழடையலாம் என்ற எண்ணமோ?

நூற்றுக்கு நூறு சரிதான் யவனிகா.குறைகண்டுபிடிப்பது ஒன்றையே குணமாகக் கொண்டவர்கள் மட்டும்தான் இப்படி எழுத முடியும்.இதில் தாங்கள்தான் அறிவுஜீவிகள் என்று வேறு பினாத்திக்கொள்வார்கள்.

அன்புரசிகன்
13-11-2007, 04:41 PM
ஒருவர் வித்தியாசமான முறையில் படத்தை அணுகிப்பார்த்திருக்கிறார் என்று புலனாகிறது...

பெரியவனாக பெரியவர்களுடன் மோதவேண்டும் என்ற தத்துவம் சினிமாவிற்கு தான் சரி.. நியத்திலும் ஆகலாம். ஆனால் அது மட்டும் தான் வழி என்றல்ல....

ஆதவா
13-11-2007, 06:17 PM
பூமகள், இது நீங்கள் எங்காவது வெட்டி ஒட்டினீர்களா? அல்லது கைவலிக்க டைப் அடித்தீர்களா?

டைப் அடித்தேன் என்றால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் அந்த நிமிடங்களை வீணாக்கி விட்டீர்கள் என்றே சொல்வேன். இங்கே உங்கள் கருத்து என்னவோ அதற்கு மட்டுமே நான் பாராட்டவோ குறை சொல்லவோ முடியும்.. தோழர் மருதையன் எழுதியதை இங்கே ஆராந்து சொன்னால் உங்களுக்கு எள்ளளவிலும் பிரயோசனம் இருக்காது... போகட்டும்

அன்பே சிவம்... இந்த படம் கேள்விப்பட்டதோடு சரி. கண்டதில்லை. ஏனோ இந்த மாதிரி படங்களுக்கு நண்பர்கள் திரளுவதில்லை. தனியே சென்று பார்க்க எனக்கு விருப்பமுமில்லை. படம் பார்த்திருந்தால் இங்கே விமர்சிக்க எனக்கு ஆயுதம் கிடைக்கும்..

கமல் ஒரு நாத்திகவாதி (மூடநம்பிக்கைகளை எதிர்ப்பது) என்பதாலும், அவ்வகைக் கொள்கைகள் அடங்கிய மார்க்ஸிஸ்டை உள்ளே இழுத்திருப்பது (அப்படி நடந்திருக்கிறதா?) ஆச்சரியமாக எனக்குத் தென்படவில்லை.

கதை சொல்லும் விதத்தில் குழறுபடி செய்யும் கமலுக்கு இந்தக் கதையும் அத்தகைய குழறுபடி கொடுத்திருக்கலாம்.. ஆனால் காய்ந்த மரம் கல்லடி படும் என்பது போல, நல்ல படங்களுக்கு என்றுமே விமர்சனத் தீ உண்டு. அவ்வகையில் இந்தக் கட்டுரை பாராட்டத் தக்கதே ஆயினும், குறை என்று சொல்லக் கூடிய அளவுக்கு அன்பே சிவம் மோசமல்லவே! இன்னும் சினிமாத் துறையில் குறிப்பிட்ட உயரத்தை நாம் அடையவில்லை என்பதை அந்த எழுத்தாளர் மறந்திருக்கலாம்.

உலக மயமாக்கலின் பக்கவிளைவுகள் யதார்த்தம், அதை மனிதப்பாங்காய் நடத்துவது மனிதாபிமானம். அதை ஊடக வழியே உட்புகுத்த ஆசைப்படுவதில் தவறேது? எனக்குத் தெரிந்தால் நான் கவிதை எழுதுவேன். நடிகர் கமலுக்கு அதை சினிமாவில் எழுதத் தெரிந்திருக்கிறது.

தொழிலாளிகளுக்காக வரிந்து நிற்கும், பரிந்து நிற்கும் முதலாளிகள் ஏறக்குறைய கடலில் கலந்து நீர்த்துளிகளாக மாறிவிட்ட நிலையில், யதார்த்த உலகில் அவர்கள் எவரும் சட்டை செய்ய மாட்டார்கள். அவர்களின் தேவை தொழிலாளர்கள் அல்ல. அவர்களின் தொழில், திறமை.



எல்லோருக்குள்ளும் ஒரு நடுநிலையான மனச்சாட்சி(கடவுள்) இருப்பதாகவும், அந்த மனச்சாட்சிக்கு விரோதமாகச் சிலர் நடந்து கொள்கின்ற காரணத்தினால்தான் சமூகத்தில் இத்தனை அநீதிகள் நிகழ்கின்றனவென்றும், எல்லோரும் மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளத் தொடங்கி விட்டால் உலகமே அன்புமயமாகிவிடும் என்றும் கருதுகின்ற பிரபலமான மூடநம்பிக்கையை வேறு வார்த்தைகளில் விற்பனை செய்கிறார் கமலஹாசன்.

மூடநம்பிக்கைக்கான வரையறுத்தலை நன்றாக வரைய மறந்திருப்பார் எழுத்தாளர்.

மனசாட்சிக்கு விரோதமாக நடக்கிறார்கள் அதனால் அநீதி நடக்கிறது... இதை மறுக்கிறாரா எழுத்தாளர்?
அப்படி நடக்காவிடில், அன்பு மலரும் -- இதை மூட நம்பிக்கை என்று புதைக்கிறாரா எழுத்தாளர்?

சரி, அப்படியென்றால் மனசாட்சிக்கு விரோதமின்றி நடக்கும் உலகம் எத்தகைய நிலையை சந்திக்க நேரிடுமாம்/.//???

அடக்கமான வார்த்தைகளைக் கொண்டு கட்டுரை எழுதி அது பிரசுரமாகிவிட்டாலே அது சரி என்று ஆகிவிடாது. வல்லான் வகுத்தது வழியென்றாக இது ஒன்வே இல்லை...

யவனிகா
13-11-2007, 06:47 PM
அன்பே சிவம்... இந்த படம் கேள்விப்பட்டதோடு சரி. கண்டதில்லை. ஏனோ இந்த மாதிரி படங்களுக்கு நண்பர்கள் திரளுவதில்லை. தனியே சென்று பார்க்க எனக்கு விருப்பமுமில்லை. படம் பார்த்திருந்தால் இங்கே விமர்சிக்க எனக்கு ஆயுதம் கிடைக்கும்..
...

நல்லதொரு படத்தைத் தவற விட்டிருக்கிறீர்கள் தோழரே! ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அற்புதமான செதுக்கப்பட்ட காட்சி அமைப்பு...மாதவன், கமல் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள்...படம் கவிதை தான்...நெக்குருக வைக்கும் படம்...கமலின் தொப்பியில் மற்றும் ஒரு சிறகு...அதிலும் கிறித்துவ சிஸ்டராக ஒரு பேரிளம் பெண்ணைப் போட்டு ஒரு சில சீன்கள்...சத்தியமான வார்த்தைகள்...கிரண் கூட அழகாகத் தெரிவார்...அற்புதமான கருத்தை...அதைவிட அற்புதமான கலைஞர்கள் மூலம்...ஆத்திகத்தையும் எதிர்க்காமல்...இதை விட எப்படிச் சொல்ல முடியும் என்று எனக்குத் தெரிய வில்லை.இதைக்கூட ஒருவர் இப்படிக் குறைபட* விமர்சிக்கிறார் என்றால் அவரை எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை.

ஆதவா
13-11-2007, 07:05 PM
நல்லதொரு படத்தைத் தவற விட்டிருக்கிறீர்கள் தோழரே! ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அற்புதமான செதுக்கப்பட்ட காட்சி அமைப்பு...மாதவன், கமல் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள்...படம் கவிதை தான்...நெக்குருக வைக்கும் படம்...கமலின் தொப்பியில் மற்றும் ஒரு சிறகு...அதிலும் கிறித்துவ சிஸ்டராக ஒரு பேரிளம் பெண்ணைப் போட்டு ஒரு சில சீன்கள்...சத்தியமான வார்த்தைகள்...கிரண் கூட அழகாகத் தெரிவார்...அற்புதமான கருத்தை...அதைவிட அற்புதமான கலைஞர்கள் மூலம்...ஆத்திகத்தையும் எதிர்க்காமல்...இதை விட எப்படிச் சொல்ல முடியும் என்று எனக்குத் தெரிய வில்லை.இதைக்கூட ஒருவர் இப்படிக் குறைபட* விமர்சிக்கிறார் என்றால் அவரை எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை.

எனக்கு டிவிடியும் கிடைக்கவில்லை.. டிவியிலும் பார்க்கமுடியவில்லை.. மிகவும் எதிர்பார்த்த படமும் கூட..

கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன்...

பூமகள்
14-11-2007, 09:38 AM
புரிதல் இல்லாத பதில்கள்..!
புரிய விரும்பாத மனங்கள்..!

இவர்களுக்கு புரிய வைக்கவே இந்த பதிவு..!

இதுவும் புரியவில்லையெனில்..
விளங்க வைக்க அடுத்த விமர்சனத்தைத் தான் தர வேண்டும்..!

முயற்சிப்பது என் பணி..!
நல்லவற்றை சொல்லிப் போகிறேன்..!

புரியும் மனநிலை உங்களுக்கு வந்ததாயின்
படித்து பின்னூட்டமிடுங்கள்..!

நுனிப்புல் மேய்ந்து படைக்குமளவு கட்டுரைப் படைப்பாளி சாதாரணமானவர் அல்ல.
முரணான விமர்சனத்துக்காக புகழ் பெற விழையும் வியாபார பத்திரிக்கையாளருமல்ல.

புரிந்து கொள்ள முயற்சிக்காமல் பதிலளிப்பவருக்கு பதிலளிக்க என்னிடமும் பதிலில்லை.

மாறாக அடுத்த விமர்சனத்தோடு வருகிறேன். அதிலேனும் புரிவீர்கள் என்று நம்புகிறேன்.

நேசம்
14-11-2007, 10:01 AM
புரிதல் இல்லாத
இதுவும் புரியவில்லையெனில்..
விளங்க வைக்க அடுத்த விமர்சனத்தைத் தான் தர வேண்டும்..!

முயற்சிப்பது என் பணி..!
நல்லவற்றை சொல்லிப் போகிறேன்..!

.

தங்கையின் அனைத்து படைப்புகளுக்கு கருத்து சொல்லும் நான் இந்த பதிவில் எனக்கு புரிந்து கொள்ள அறிவு இடம் கொடுக்க வில்லை.அதனால் பின்னூட்டம் இடவில்லை.தொடரட்டும் உங்கள் முயற்சி.அடுத்த விமர்சணத்தில் ஆவது என்க்கு எட்டுதா என்று.ஆனாலும் இந்த முயற்சிக்கு தங்கைக்கு வாழ்த்துக்கள்

நுரையீரல்
14-11-2007, 12:49 PM
அன்பே சிவம் என்ற சொல்லை அழகாக புரிய வைப்பதற்காக எடுக்கப் பட்டதே இந்தப் படம். எவனெல்லாம் அடுத்த மனிதன் மீது அன்பு செலுத்துகிறானோ அவனெல்லாம் சிவன் (கடவுள்) என்று எளிமையாகச் சொல்லித்தந்த படம். அதை விமர்சனம் என்ற பெயரில் தோழர் மருதையன் சொல்லியிருக்கிறார். தமிழ் படமே இவருக்குப் புரியவில்லையே, உணர்வுகளால் கருத்துச் சொல்லும் ஈரானிய மற்றும் பிரெஞ்சுப் படங்களை பார்த்தால் என்ன சொல்வார்.

கமலின் படங்களைப் புரிந்து கொள்வது (எல்லா மக்களாலும்) சற்று கடினம் தான். புரிந்தால் அது தான் சிறந்த படம் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு ஆளவந்தான்... அதில் வரும் சில சீன்களைப் புரிய வேண்டுமெனில், பார்ப்பவர் வாழ்க்கையில் ஒரு முறையாவது கஞ்சா அடித்திருக்க வேண்டும்.

மொட்டைக் கமல் வரும் சீன்கள் பெரும்பாலானவை.... கஞ்சா அடித்தவன் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய சீன்கள். அதற்காக எல்லாரும் கஞ்சா அடிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. நான் இந்த இடத்தில் சொல்ல நினைத்ததை புரிய வேண்டுமெனிலும் கஞ்சா அடித்திருந்தால் மட்டுமே புரிய முடியும்.. கஞ்சா அடித்துத்தான் புரிய வேண்டும் என்ற அவசியமில்லாதவர்கள் இதைப் படிப்பதை தவிர்க்கலாம்.

அன்புரசிகன்
14-11-2007, 01:42 PM
அன்பே சிவம் என்ற சொல்லை அழகாக புரிய வைப்பதற்காக எடுக்கப் பட்டதே இந்தப் படம். எவனெல்லாம் அடுத்த மனிதன் மீது அன்பு செலுத்துகிறானோ அவனெல்லாம் சிவன் (கடவுள்) என்று எளிமையாகச் சொல்லித்தந்த படம். அதை விமர்சனம் என்ற பெயரில் எவனோ(ரோ) ஒருத்தன்(ர்) சொல்லியிருக்கிறான்(ர்). தமிழ் படமே இவனு(ரு)க்குப் புரியவில்லையே, உணர்வுகளால் கருத்துச் சொல்லும் ஈரானிய மற்றும் பிரெஞ்சுப் படங்களை பார்த்தால் என்ன சொல்வான்(ர்).

கமலின் படங்களைப் புரிந்து கொள்வது (எல்லா மக்களாலும்) சற்று கடினம் தான். புரிந்தால் அது தான் சிறந்த படம் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு ஆளவந்தான்... அதில் வரும் சில சீன்களைப் புரிய வேண்டுமெனில், பார்ப்பவர் வாழ்க்கையில் ஒரு முறையாவது கஞ்சா அடித்திருக்க வேண்டும்.

மொட்டைக் கமல் வரும் சீன்கள் பெரும்பாலானவை.... கஞ்சா அடித்தவன் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய சீன்கள். அதற்காக எல்லாரும் கஞ்சா அடிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. நான் இந்த இடத்தில் சொல்ல நினைத்ததை புரிய வேண்டுமெனிலும் கஞ்சா அடித்திருந்தால் மட்டுமே புரிய முடியும்.. கஞ்சா அடித்துத்தான் புரிய வேண்டும் என்ற அவசியமில்லாதவர்கள் இதைப் படிப்பதை தவிர்க்கலாம்.

புரிகிறது உங்கள் வாசிப்பின் ஆழமும் ஆர்வமும் ஆற்றலும்.....