PDA

View Full Version : காதல் குளிர் - 8gragavan
12-11-2007, 10:01 PM
ஏன் கத்தினாள் ரம்யா? அப்படியென்ன நடந்தது? இதுதானே உங்கள் கேள்வி. இதோ சொல்கிறேன்.

காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தாலும் கே.ஆர்.எஸ்சின் கவனம் ரம்யா மேல் இருந்தது. வடக்கத்திய ஆலூ சாட்டுகளையும் வெளிநாட்டு பர்கர்களையுமே பார்த்திருந்த அவனுக்குத் தென்னாட்டுத் தேங்காய்ச்சாதம் புதுமையாகத் தெரிந்தது. அந்தப் பார்வையில் காரோட்டுவதில் இருந்த கவனம் சிதறியது.

அவனுடைய கெட்ட நேரம்...சட்டென்று ஒரு மொபெட் குறுக்கே..........அந்த மொபெட்டின் பின்னால் பெரிய கேனில் பெட்ரோல் வேறு. அந்த மொபெட் குறுக்கே வருவதைப் பார்த்துதான் கத்தினாள் ரம்யா. கே.ஆர்.எஸ் சுதாரித்து பிரேக்கை அழுத்தினான். அந்தப் பெரிய சாலையில் அந்த வேகத்தில் கீஈஈஈஈஈச்சென்று கருப்புக்கோடுகளைத் தேய்த்தது கார். சத்தத்திலும் பரபரப்பிலும் அரைத்தூக்கத்தில் இருந்த சப்யா, சித்ரா, ப்ரகாஷாவும் எழுந்து விட்டார்கள்.

ஆனாலும் நடந்ததைத் தடுக்க முடியவில்லை. கார் மொபெட்டில் பின்னால் இடிப்பதைப் பார்த்தாள் ரம்யா. அடுத்த நொடியில் மொபெட் சாய்ந்தது. ஓட்டிக்கொண்டிருந்த முகம் தெரியாதவர் மேலே தூக்கி வீசப் பட்டார். கீழே விழுந்த மொபெட் காருக்கடியில் சிக்கிக்கொண்டு காரின் வேகத்தைத் தடுத்தது. அதற்குள் தூக்கி வீசப்பட்ட நபர் காருக்குப் பின்னால் சென்று சொத்தென்று விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. சாலையைப் பெட்ரோல் கழுவியது.

கே.ஆர்.எஸ் காரை வேகமாக ஓட்டித் தப்பிக்க நினைத்தான். ஆனால் காரில் சிக்கிக்கொண்ட மொபெட் காரை நகரவிடவில்லை. அதற்குள் பெருங்கூட்டம் கூடி காரை மறித்தார்கள். வேறு வழியேயில்லாமல் கார் மண்ணில் ஒதுங்கியது.

போத்தீஸ் ஆடித்தள்ளுபடிக் கூட்டம் போல காரைச் சுற்றிக் கூட்டம். ஒருவன் படக்கென்று கதவைத் திறந்து ரம்யாவை வெளியே இழுத்தான். ஆனால் காரை அவள் ஓட்டவில்லை என்று தெரிந்ததும் இரண்டு மூன்று பேர் கே.ஆர்.எஸ்சை வெளியே பிடித்து இழுத்தார்கள். குனிய வைத்து தரும அடிகளை அள்ளி வழங்கினார்கள் அந்தக் கலியுக வள்ளல்கள்.

ரம்யா இழுபடுவதைப் பார்த்ததும் ப்ரகாஷா படக்கென்று இறங்கி வந்தான். ரம்யா ஓடிப் போய் அவனிடம் ஒட்டிக்கொண்டாள். அவள் தன்னிலையிலேயே இல்லை என்று சொல்லலாம். அவள் கண் முன்னால் மொபெட்டில் இருந்தவர் தூக்கி வீசப்பட்டு விழுந்த காட்சியே திரும்பத் திரும்ப வந்தது. பயம். உடம்பு வெடவெடவென நடுங்கியது.

அதற்குள் சப்யாவும் சித்ராவும் ஃபெராவைத் தூக்கிக்கொண்டு இறங்கினார்கள். அவர்கள் பைகள் அனைத்தையும் இறங்கினார்கள்.

ஆனால் இவர்களை யாரும் கவனித்தது போலத் தெரியவில்லை. செமையாக கவனிப்பதற்குக் கே.ஆர்.எஸ் இருக்கும் பொழுது இவர்களைக் கவனித்து என்ன செய்ய! அதற்குள் ஒருவர் கார்ச்சாவியை கே.ஆர்.எஸ்சிடமிருந்து பிடுங்கி காரில் ஏறினார். கே.ஆர்.எஸ்சையும் உள்ளே ஏற்றினார்கள். கீழே விழுந்திருந்தவரையும் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு ஓட்டினார்கள்.

ரோட்டில் இருந்த ரத்தத்தைப் பார்த்ததும் ரம்யாவிற்குக் கண்ணைக் கட்டியது. ப்ரகாஷாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். அவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மறுகையில் இருவருடைய பைகள் வேறு.

"ஒங்க காரா இது? எங்கயிருந்து வர்ரீங்க?" இந்தியில் கேட்டார் ஒருவர். ப்ரகாஷாதான் இந்தியில் பேசினான். "அது வாடகைக்காரு. நொய்டால இருந்து வர்ரோம். இப்ப கார எங்க கொண்டு போயிருக்காங்க?"

"ஆஸ்பித்திரிக்கு. ஒங்க கார் இல்லையா அது? வாடகையா? அப்ப நீங்க கெளம்பீருங்க. டிரைவரத்தான் பிடிச்சாச்சுல்ல."

அதற்குள் அதே ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர்...பெட்ரோல் வழுக்கி விழுந்தார். "அடடா...இது சபிக்கப்பட்ட ரோடு போல இருக்கே. ஏய்...எல்லாரும் மண்ண அள்ளிப் போடுங்கடா" என்று ஒருவர் குரல் குடுக்க..அனைவரும் மண்ணை அள்ளிப் போட்டனர்.

இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய ப்ரகாஷா, சப்யாவையும் சித்ராவையும் அழைத்தான். கூட வரச்சொன்னான். ரம்யாவையும் கூட்டிக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் நடந்தார்கள்.

எந்த ஊரென்று தெரியவில்லை. பேரும் தெரியவில்லை. ஏதோ பட்டிக்காடு என்று மட்டும் புரிந்தது. ஆக்ராவிலிருந்து வருகின்ற பேருந்துகள் எல்லாம் அப்படித்தானே வர வேண்டும். வந்தன. ஆனால் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் குளிரத் தொடங்கிவிடும். பெரா வேறு நசநசக்கத் தொடங்கியிருந்தான்.

அங்கிருந்த ஒருவரிடம் ப்ரகாஷா டெல்லி செல்ல பஸ் கிடைக்குமா என்று கேட்டான். அவர் சிரித்து விட்டு, "இங்க எங்க பஸ்சு? அதோ ஆட்டோ இருக்கு பாருங்க. ஷேர் ஆட்டோ. அதான எங்களுக்கு பஸ்சு. அதுல போனா பக்கத்தூரு போகும். அங்க பஸ்சுக நிக்கும்."

அவரிடம் நன்றி சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினான். அது ஷேர் ஆட்டோ. உள்ளே கொஞ்ச பேர் உட்காரலம். வெளியே பின்னாடி பார்த்துக் கொண்டும் கொஞ்ச பேர்...டிரைவருக்குப் பக்கத்திலும் கொஞ்ச பேர் உட்காரலாம். ஒருவழியாக எல்லாரும் உட்கார்ந்து கொண்டார்கள். தடதடவென ஆடிக்கொண்டே ஆட்டோ பக்கத்தூருக்குக் கிளம்பியது. ப்ரகாஷாவை இறுகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் ரம்யா. கொஞ்சம் பேதலித்த நிலை. வெறும் பயம்தான்.

வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இருள் வரத் தொடங்கியிருந்தது. பேர் தெரியாத ஊரிலிருந்து பேர் தெரியாத ஊருக்கு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார்கள். நொய்டா போனார்களா?

பின்குறிப்பு

ப்ரகாஷாவின் டையில் இருந்து திருடப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட காதல் கவிதை...அதாவது ப்ரேம கவிதே...எதுவும் புரிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.

வானில் நிலவு
நிலவில் காதல்
கைகளில் நீளமில்லை

தொடரும்...

இளசு
12-11-2007, 10:11 PM
நலமா ராகவன்.?

உங்களின் இத்தொடரை முதலில் இருந்து படிக்கவேண்டும்..
பிறகுதான் இந்த அத்தியாயத்துக்கு என் பின்னூட்டம் இருக்கும்..

இது சும்மா ஒரு முன்னோட்டம் மட்டுமே!

( இப்படி நீண்ட தொடர் எழுதும் உங்களைப்போன்றவர்கள் மேல்
பெருமை கலந்த பொறாமையும் கூட...)

அக்னி
13-11-2007, 01:06 AM
அப்போ டிரைவர் என்ன ஆனார்..?
டிரைவரால் ஏதாவது வில்லங்கம் வரும் என்று 7 பாகங்களாக நினைத்துக் கொண்டிருந்தோம்.
ஆனால், தற்செயலான விபத்துதான் அந்த வில்லங்கமா..?
அல்லது, இனித்தான் வரப்போகுதா..?
தொடர்வில் பார்ப்போம்...


அதற்குள் அதே ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர்...பெட்ரோல் வழுக்கி விழுந்தார்.
பெட்ரோலுக்கு வழுக்கும் தன்மை இருக்கிறதா..?
பெட்ரோல் விரைவில் உலரும் தன்மை கொண்டதல்லவா...
ஆயில் (oil) என்றால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.


வானில் நிலவு
நிலவில் காதல்
கைகளில் நீளமில்லை
உண்மை காதல், எட்டாத நிலையில்...

பாராட்டுக்கள் ராகவன் அவர்களே...
அடுத்த ரிலீஸ் எப்போ...?

மதி
13-11-2007, 01:42 AM
ஹ்ம்ம்....அடுத்து...?
அந்த ஆக்ஸிடெண்ட் கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்களுக்கு நடந்த மாதிரியே இருந்துச்சு.. ஆனா தெய்வாதீனமா யாருக்கும் ஒரு சிராய்ப்பு கூட இல்லை..

அன்புரசிகன்
13-11-2007, 04:04 AM
இந்த நெருக்கம் காதலால் வந்தது மாதிரியில்லை. ஆனாலும் இருவர் மனதிலும் காதல் வந்துவிட்டது என்பது புரிகிறது. ப்ரகாஷாவின் காதலில் உறுதியின்மையே காணும் இடைவெளிக்கு காரணம் என்பது கடந்த பாகத்திலிருந்து கண்டது. பயத்தில் வந்த நெருக்கம் சற்று நேரத்தில் தணிந்திருக்கும். இனிவரும் நெருக்கத்தில் தான் காதல் குளிரின் ஆழம் தெரியும்.

காத்திருக்கிறேன். அந்த காதலின் ஆழம் காண....

வானில் நிலவு
நிலவில் காதல்
கைகளில் நீளமில்லை....

எனக்கு தெரிந்த வரையில் அக்னி கூறியதுக்கு சமனாகலாம். கைப்பிடிக்குள் அவள்.... இருந்தும் காதல் கைப்பிடியில் அல்லவே... ஆனாலும் ப்ரகாஷாவுக்கு இந்த கவிதை வந்தது ஏனோ.... அவளின் கேள்விக்கு அவனால் பதிலளிக்க முடியலயே....

மலர்
13-11-2007, 07:15 AM
கார் மொபெட்டில் பின்னால் இடிப்பதைப் பார்த்தாள் ரம்யா. அடுத்த நொடியில் மொபெட் சாய்ந்தது. ஓட்டிக்கொண்டிருந்த முகம் தெரியாதவர் மேலே தூக்கி வீசப் பட்டார். கீழே விழுந்த மொபெட் காருக்கடியில் சிக்கிக்கொண்டு காரின் வேகத்தைத் தடுத்தது. அதற்குள் தூக்கி வீசப்பட்ட நபர் காருக்குப் பின்னால் சென்று சொத்தென்று விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. சாலையைப் பெட்ரோல் கழுவியது.

உண்மையான ஒரு விபத்தை பார்த்த தவிப்பு....
ராகவன் அண்ணா உங்கள் எழுத்துக்கள் படிக்கிற ஆவலை இன்னும் அதிகமாக்கியிருது..
எத்தனை முறை பாராட்டினாலும் தகும்....

வழக்கம் போல் அடுத்த பாகத்தை எதிர்பார்த்து ஆவலோடு...

lolluvathiyar
13-11-2007, 09:16 AM
ஆகா கதை ஒரு பெரிய திருப்பமாக திரும்பிவிட்டது. கடைசிவரை அந்த டிரைவர் யார் என்ன செய்ய போகிறான் என்று சஸ்பன்ஸ் வைத்து வைத்து கடைசியில் ஒர் ஆள் மீது இடிக்க வைத்து விட்டீர்களே.
ராகவரே, உங்களுக்கு ஒரு கோரிக்கை, ரம்யா பிகாஸா காதலை சேர்த்து வைகிறீர்களோ இல்லையோ, அடிபட்ட ஆளை எப்படியாவது வாழ வையுங்கள்.

மன்மதன்
20-11-2007, 05:33 PM
கதையில் நல்ல திருப்பம்....

இன்னும் சற்று நேரத்தில் குளிரத்தொடங்கிவிடும்னு சொல்லிட்டியே..
பஸ் கிடைக்காம அந்த கிராமத்திலேயே தங்கிடுவாங்களோ..
இண்டர்வியூ போன மாதிரிதான்..(எல்லோரும் அந்த இண்டர்வியூ மேட்டரை அனேகமாக மறந்திருப்பார்கள்.:D)

போத்தீஸ் ஆடித்தள்ளுபடிக் கூட்டம் போல காரைச் சுற்றிக் கூட்டம். ஒருவன் படக்கென்று கதவைத் திறந்து ரம்யாவை வெளியே இழுத்தான். (இங்கே ஒரு பாகத்தை முடித்து , தொடரும் போட்டிருந்தால்.. நல்ல சஸ்பென்ஸாக இருந்திருக்கும்)

பூமகள்
20-11-2007, 05:44 PM
காதல் குளிரின் எல்லா அத்தியாயத்தையும் படித்தாகிவிட்டது..! அருமையோ அருமை..!

இந்த பாகம் பெரும் அதிர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்று விறுவிறுப்பாக சீட்டு நுனியில் அமர வைத்து படிக்க வைத்தது.

கவிதை நச்..! விளக்கம் கொடுத்த அக்னியாருக்கு நன்றிகள்.

கதை நடை எளிமை..! அருமை..! எதார்த்தம்..!
கதை வாசிக்கிறோம் என்ற பிரஞை இல்லாமல் கதைக் களத்தில் உள்ளது போல் எண்ணத் தோன்றியது.

பாராட்டுகள் ராகவன் அண்ணா.