PDA

View Full Version : தவம்



ஆதி
12-11-2007, 05:43 AM
தவம்


இந்த நம் வீட்டின்
ஒவ்வொரு பொருட்களும்
உதட்டை பிதுக்கி என்னை
உதாசீனம் செய்கின்றன
நீ இல்லாததால்....


வெற்றிக்கு மட்டுமல்ல
மரியாதைக்கு பின்புலத்திலும்
நீதான் இருக்கிறாய்


பாதி நாள் கூட
ஆற்ற இயலாத
உன் பிரிவை
எப்படி பொறுத்திருக்க போகிறேன்
இரண்டு மூன்று மாதங்களுக்கு ?


எதிர்பதங்கள் எல்லாம் உருக்கி
ஒர் அர்த்தமாய்
உருவாக்கினாய் நம் வாழ்வை..


என் தேவைகளை முன்னுணர்ந்து
பூர்த்தி செய்த
உன்னை
உற வைத்தேன் கரு..


மக பெறுதல் மாதத்திலும்
நீ நிறைவேற்றிய
என் தேவைகளை எண்ணி
உன் குழல் உதிர்ந்த மலர்களில்
கன்னம் வைத்து
கதறுகிறேன்


நம் பிள்ளையையாவது
கண்டித்து வளர்
எனக்கு மாதிரி
செல்லம் கொடுத்து விடாதே...


உனைப்போன்று
தாய்மனம் கொண்ட மனைவி
அமைவது அரிது!


உன் இன்மையில் திறக்கிற
வெறுமையின் விழிகள்
இமைக்கிற உன் நினைவுகள்
வற்புறுத்துகின்றன காலத்தை....


மறுபிறப்பில் உனக்கு
மனைவியாகவோ தாயாகவோ
வாய்த்து
பணிவிடைகள் ஆற்ற...


-ஆதி

பென்ஸ்
12-11-2007, 07:42 AM
ஆதி...
"கவிதை ஒன்றின்
ஓரமாய் குறிப்பெழுதி வைத்தேன்!
குறிப்பை ஆளாளுக்கு
அலசிப் போனார்கள்!
யாருமே கண்டுகொள்ளாமல்
அனாதையாய் கிடந்தது
கவிதை!
- ப்ரியன்."

இதேபோல, உங்களிடம் மீண்டும் ஒரு கேள்வி "உண்மையிலையே உங்களுக்கு திருமணம் ஆகலையா????
இந்த அழகிய கவிதையின் வார்த்தைகள் அனைத்தும் உணர்ந்து எழுதபட்டவையாகவே உணர்கிறேன்...
உங்களுக்கு முன் ஜென்ம நினைவுகள் வருவதில்லையே...???
பாராட்டுகள்...

ஆதி
12-11-2007, 08:01 AM
அன்பின் பென்ஸ், உண்மையில் எனக்கு திருமணமாகவில்லை..

தாயைவிட ஒரு ஆணை அதிக சோம்பேரியாய் மனைவியே ஆக்கிவிடுகிறாள் என்பது என் எண்ணம்.. இதை நான் என் நண்பர்கள் பலரை பார்த்து உணர்ந்து கொண்டேன்.. அதன் சாரமாக புனையப்பட்ட கவிதைதான் இது..

நேசம்
12-11-2007, 09:22 AM
ஆதி உங்கள் நன்பர்களுக்கு அமைந்த மனைவிமார்கள் வேண்டுமென்றால் அப்படி இருந்து இருக்கலாம். பலரின் மனைவிமார்கள் தங்களுடைய கணவர்களின் பல பழக்கத்தை மாற்றி இருக்கிறார்கள் தங்களுடைய அன்பினால், அ...
மற்றப்படி உங்கள் கவிதை அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்

பிச்சி
12-11-2007, 09:51 AM
கவிதை மிக அழகாக இருக்கிறது

அன்புடன்
பிச்சி

ஆதி
12-11-2007, 09:54 AM
நன்றி சகோதரி..

ஓவியன்
13-11-2007, 06:26 AM
அன்பு என்ற அடித்தளதில் பின்னப்பட்ட உறவுகளிடை பரிமாறப்படும் செயற்பாடுகள், உதவிகள் ஒரு போதும் பணிவிடைகளாகாது...

என் மனைவிக்கோ கணவனுக்கோ நான் தானே செய்ய வேண்டும் என்ற எண்ண அடிப்படையில் அவை அமையுமெனின் அது திருமண வாழ்வின் வரம்....

அந்த வரம் கிடைக்க தவம் செய்தே ஆகவேண்டும்....

இங்கே ஆதி இயற்றும் தவம் அழகு+அருமை

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஆதி..!!

அமரன்
13-11-2007, 07:10 AM
ஆணோ பெண்ணோ, பிறப்பு முழுமை அடைவது
வளமான எச்சம் ஒன்றின் மூலமாக அமையும்போது.
அதை ஆற்றும் ஊடகமாக இனிய இல்லறம்.

அவ்வளப்பரிய பணிக்கான விடைகளே
மனைவி கணவனுக்கும் கணவன்
மனைவிக்கும் செய்யும் பணிவிடைகள்..

எப்பால் மறந்தாலும் கடைநிலையில்
காலத்தின் கடைக்கண் தகிக்கும்.
இப்படித்தான் மனது ஏங்கித்தவிக்கும்..

பாராட்டுக்கள் ஆதி.

ஆதி
21-05-2009, 01:27 PM
தவம் யூத்ஃபுல் விகடனில்


http://youthful.vikatan.com/youth/aathipoem21052009.asp

ரங்கராஜன்
21-05-2009, 01:45 PM
வாழ்த்துக்கள் ஆதி

கவிதை நன்றாக இருக்கிறது, படிக்கும் பொழுதே அதில் இருக்கும் மென்மை நம்மை வருடுகிறது, ஆண்களுக்கே படிக்கும் பொழுது சிலிர்க்கிறது. உங்கள் வருங்காலத்தில் மனைவியாக வரப்போகிறவரிடம் இதை காட்டுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிப்பீர்கள் என்று அவருக்கு இந்த ஒற்றை கவிதை புரியவைத்து விடும்.

மன்ற கூட்டத்தில் நீங்க சொன்னீங்க, நான் எப்பொழுது நிறைய கணவன் மனைவி பற்றிய கவிதைகள் தான் எழுதுவேன் என்று, சரி இது வாலிப வயதில் எல்லாருக்கும் வரும் உணர்வு தான் என்று விட்டு விட்டேன். ஆனால் பென்ஸ் அவர்கள் சொன்ன மாதிரி இந்த அளவுக்கு தத்ரூபமாக எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. உங்களின் கவிதைகளை படிப்பது இதுதான் முதல் முறை, உங்களின் சிறந்த கவிதைகளின் லிங்கை இங்கு கொடுங்கள், படிக்கவேண்டும் போல இருக்கிறது, அல்லது தனிமடலாவது அனுப்புங்கள். நன்றி

விகடனில் கவிதை வந்தமைக்கு வாழ்த்துக்கள்.