PDA

View Full Version : வானவில் காலம்..(அத்தியாயம் 1) தொடர்கதை..rambal
22-06-2003, 07:23 PM
வானவில் காலம்..(அத்தியாயம் 1) தொடர்கதை..


கலர் கலர் கனவுகள்
கண்களில் குடியேறி
நெஞ்சிற்குள்
குறுகுறுப்பை ஏற்படுத்தி
விட்டுப் போவது
வானவில் காலம்...


மதுரை எங்கிருக்கிறது என்று நான் விளக்கம் கொடுத்தால் என்னை ஒரு விஷ ஜந்தாக பார்ப்பீர்கள்.
அதனால், மதுரையைப்பற்றிய விளக்கம் இங்கு தேவையில்லை. லட்சுமி இல்லம் என்பது அந்த வீட்டின் பெயர்.
இந்த வீடு எங்கிருக்கிறது என்றால் சென்னையில் இருந்து மேலூர் வழியாக மதுரைக்குள் நுழைந்தவுடன் கே.கே நகர் நுழைவாயில் பக்கம்
செல்லாமல் அந்த ரவுண்டாணாவில் வலது புறம் ஒடித்தால் சத்யஜோதி டி.வி.எஸ் ஷோ ரூம். அதைத் தாண்டினால் கோர்ட்.
அப்புறம் பெரியார் சிலை. அந்த ஏரியாவிற்கு அவுட் போஸ்ட் என்று பெயர். அங்கிருந்து இடது பக்கம் திரும்பினா கோரிப்பாளையம். அந்தப் பக்கம் திரும்பத் தேவையில்லை. வலது பக்கம் திரும்பினா கையைத் தூக்கிகிட்டு அம்பேத்கார் சிலை. அங்கு மீண்டும் ஓர் இடது. பின் வரும் ரவுண்டணாவில் வலது. இல்லையென்றால் பீபீ குளம் போய்விடுவீர்கள். பாண்டியன் ஹோட்டல், ரேஸ் கோர்ஸ் காலணி, டி.ஆர்.ஓ. காலணி. இங்கிருந்து இடது பக்கம் பார்த்தால் மாரியம்மன் கோவில். அந்த ஏரியாவுக்கு சக்தி அதுதான். அப்படியே நேராக போனால் மகாராணித் தியேட்டர். இந்தப் பகுதி முழுதுமே ஆயுதப்படை குடியிருப்புகள். நத்தம் 35 கி.மீ கல் தென்படும். அதற்குப் பிறகு வலது பக்கம் திரும்பினால்ஆத்திகுளம். அதில் திரும்பாமல் அதற்கடுத்த வலதில் திரும்பினா செம்மண் ரோடு. அதில் மீண்டும் இடது. அந்த ஏரியாவோட பெயர் குறிஞ்சி நகர். அந்த தெருக்களோட பேர் எல்லாம் திருவள்ளுவர், நக்கீரர் என்று தமிழ் பாடும். தமிழ் வளர்க்கிறாங்க. அதில் கம்பர் தெரு. அதில் இடது பக்கம் 6 வது வீடு லட்சுமி இல்லம்.

மணி ஒரு ஆறே முக்கால் இருக்கும். அந்த லட்சுமி இல்லத்தில யாரு இருக்கான்னு பார்ப்பமா? தெக்க பாத்த வீடு. பக்கத்துல ரெண்டு தென்னை மரம். வாசல்ல அசோக மரம். அட்னஹ் ஏரியா முழுக்க மரங்கள் உள்ள வீடுகள்தான். கார் செட். அங்க ஒரு மாருதி எஸ்டீம். பக்கத்தில ஒரு ஹீரோ ஹோண்டா ஸ்பெலண்டர். அதுக்கு அப்புறமா ஒரு லேடி பேர்ட் சைக்கிளும் ஹீரோ ரேஞ்சரும். அந்த ஹீரோ ஹோண்டாவை துடைச்சிகிட்டு இருக்கிறாரே... இவர்தான் பத்மநாபன். வயது 42. எண்களோடு குடித்தனம்.அதற்காக அசோகமித்திரனின் எண்கள் சிறுகதையை நினைச்சுக்காதீங்க. இது வேற. அதாகப்பட்டது நம்ம பத்மநாபன் மதுரையில ஒரு பெரிய ஆடிட்டர். டி.வீ.எஸ் கணக்கெல்லாம் இவர்தான் ஆடிட் பண்றார். எப்பவாவது பார்ட்டி என்றால் ஒரு ஸ்மால் மட்டும் சாப்பிடுவார். மற்றபடி நியாயமானவர். சுமரா ஒரு பதினெட்டு வருசத்துக்கு முந்தி பஹ்ரைன்ல இருந்தார். ஒரு அஞ்சு வருசம். அதுக்கு அப்புறம் வேண்டானுட்டு வந்துட்டார். அன்னைதேசத்து பிள்ளைகள் எண்ணை வயல்களில் காய்கிறோம் இப்படி ஒரு கவிதை எழுதின அது யாரு. கொடுக்காயூர் சீதக் கவியா. அந்த வாயில் நுழையாத பேரோட இருக்கும் அந்தக் கவிஞர் அந்தக் கவிதையை எழுதுறதுக்கு முன்னாடியே இவர் வந்துட்டார். அதுக்கு காரணம் இருக்கு. அது லவ். அந்த காலத்திலேயே புரட்சிகரமா அக்ரஹாரத்தை எதிர்த்து மீராபாய்னு ஒரு மராட்டியை டாவடிச்சு கட்டிகிட்டார். அதாவது இன்றைய திருமதி. பத்மநாபன். அதுக்கு அப்புறம் இங்கேயே செட்டிலாயிட்டார். அந்தக் கதை இப்ப எதுக்கு. அப்படியானால் லட்சுமி என்ற பெயருக்கும் இந்த வீட்டிற்கு என்ன சம்பந்தம். அந்த லட்சுமி என்பவர் நம்ம பத்மநாபனோட அம்மா. அதனால்தான் அந்தப் பெயர்.

"மீரு காபி கொண்டா"
அவர் மீரு என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்த மீராபாய் ஒரு இரண்டு நிமிடம் லேட்டாக வந்தார். அழகாய் சேலை. முகத்தில் வடக்கத்தி கலை. இருந்த போதும் மதுரைக்காரியாக மாறி இருந்தார்.
"இன்னும் முடியலையா?"
"இதோ முடிஞ்சிடுச்சு"
எழுந்தார்.
"கௌரியும் உன் புத்ரனும் எழுந்தாச்சா?"
"எப்பவோ"
நிற்க.
அப்படியே வராண்டாவிற்குப் போனால் சந்துரு என்று அழைக்கப்படும் சந்திர சேகரன். அது அந்த வீட்டில் இருக்கும் செல்லப் பிராணி. பொமரேனியன் சாதி. இந்தப் பெயரை வைத்தது கௌரிதான். பப்பி, ஜிம்மி என ஏகத்துக்கு இருக்க அது என்னவோ சந்திரசேகரன் என்று பெயர் வைத்துவிட்டாள். இதைப்பற்றி அவளிடம்தான் கேட்கவேண்டும். அந்த வராண்டாவில் இருக்கும் சந்துருவை தாஜா செய்து கடந்தால் வருவது ஹால். சோனி டிவியும் சார்ப் 600 வாட் ஸ்டீரியோவும் ஒரு புத்தக அலமாரி. முழுக்க புத்தகங்கள். என்னென்னவோ வாய்க்குள் நுழையாத இலக்கியம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், திருவாசகம், திருவருட்பா பத்து பாகங்களும், ஓசோ, ஜி.கே, அர்த்தமுள்ள இந்துமதம்,
இது மாதிரி ஒன்னுக்கொன்னு சம்பந்தமேயில்லாத புத்தகங்கள். அத்தனையும் பத்மநாபனோட கலெக்சன். சுவத்தில் சிரிச்சுகிட்டு இருக்காளே. இவதான் நம்ம கதாநாயகி கௌரி. பக்கத்துல அவன் தம்பி அனந்த கிருஷ்ணன்.

உள்ளே ஹாலில் இருந்து திரும்பினால் ஒரு பெட் ரூம் வித் அட்டாச்டு பாத்ரூம். இங்குதான் பத்மநாபனும் மீருவும் இருப்பார்கள். நேராக போனால் ஒரு டைனிங். அதில் இடது திரும்பினால் சின்ன பெட் ரூம். இதுதான் கௌரியோட ரூம். வலது புறம் திரும்பினா அங்கேயும் ஒரு சின்ன பெட் ரூம். அது அனந்தோடது. இதுக்கு இடையில் ஒரு பூஜா ரூம். நேராக போனால் கிச்சன். இங்கு இடது கொல்லை. கைடு கணக்கா பேசிட்டெ வற்றேனா?

அக்கா தம்பி. ஆமா அனந்தை விட கௌரி மூத்தவ. அதாவது ஒரு வருடம் இரண்டு மாசம். இவங்க ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு பாசப் பிணைப்பு. எப்படின்னா, நம்ம அனந்து கொஞ்சம் கம்மியா மார்க் வாங்கி வீட்டில காமிக்காம அவனே அவங்க அப்பா கையெழுத்தை போட்டுடுவான். அதை காட்டி கொடுக்கிறது நம்ம கௌரியோட வேலை. அதே மாதிரி நம்ம கௌரி பிரெண்ட்ஸ்ங்களோட ஊர் சுத்தறதை போட்டுக் கொடுக்கிறது நம்ம அனந்தோட வேலை. அடிக்கடி தகராறு. இவன் அவளுக்கு வைத்த பெயர் சில்வண்டு. சுருக்கமா சில்லு.
அவள் கத்துவது அப்படியே சில் வண்டு கத்துவதை உரித்து வைத்த மாதிரி இருக்கும். அவள் இவனுக்கு வைத்த பெயர் மூக்கா. மூக்கு கொஞ்சம் நீளம். நம்ம கௌரி இருக்காளே. அப்பா செல்லம். அப்படின்னா வழக்கம் போல அனந்து அம்மா செல்லம்.
கௌரிக்கு வயசு பதினாறு, அனந்துக்கு 14ம் 10 மாதமும்.

சரி முதலில் அனந்து பற்றி...
பேஸ்கட் பால் விளையாடுவான். ஸ்கூல்ல அவன் தான் ஸ்டார் பிளேயர். பூவெட் பொஸிசன். நல்ல உயரம். ஒரு ஐந்து அடியும் ஏழு அங்குலமும். இது போக ஐ.பி.எஸ் படிக்கணும்னு கனவு. இவனுடைய ஹீரோ வால்டர் தேவாரம். ஹீரோயின் கிரன் பேடி. அதுக்காகத்தான் 110 மீட்டர் ஹடுல்ஸ் ஓடுறான். மேலும் ஜாவ்லின் துரோ. அந்த ஸோன்ல எப்பவும் அவன் தான் பர்ஸ்ட். ஆக மொத்தத்தில அந்த ஸ்கூல்ல அவன் ஒரு ஆதர்சம். அவன் தோத்ததா சரித்திரம் இல்லை. படிக்கிறது செயிண்ட் மேரீஸ். தமிழ் மீடியம்தான். என்ன பண்றது பத்மநாபனுக்கு தமிழ் மேல ஒரு பற்று. படிப்பில கொஞ்சம் கௌரி அளவுக்கு இல்லைன்னாலும் மக்கு பிளாஸ்திரி இல்லை. என்பது பெர்சண்டேஜ் வாங்கிடுவான். அதுக்கே அந்த திட்டு. அதனாலதான் அவங்க அப்பா கையெழுத்தெல்லாம் போட்டு பழகி.. அது தனி கதை. அதே மாதிரி அம்மாவிற்கு இவன் வைத்திருக்கும் பெயர் டகால்ட்டி. இதற்கான காரணத்தை இவனிடம்தான் கேட்கவேண்டும். ஆரம்பத்தில் இதற்காக பத்மநாபன் கோபப்பட்டாலும் இவனைத் திருத்த முடியாது போக விட்டு விட்டார். அனந்து அம்மா செல்லம்னாலும் அப்பா மேல ஒரு பாசம். வெளிக்காட்டாத பாசம்.

கௌரி. நம்ம கதையோட நாயகி. படிக்கிறது செயிண்ட் மேரீஸ்க்கு பக்கத்தில இருக்கிற செயிண்ட் ஜோசப். இங்க நம்ம கௌரி
மெட்ரீகுலேசன். பதினொன்னு படிக்கிறா. அவள் வயதுக்கேற்ற அளவு பருவம் இருப்பவள். இப்போதான் பிரா சைஸ் 30க்கு வந்திருக்கா.
குண்டும் இல்லை. ஒல்லியும் இல்லை. கொஞ்சம் பூசின மாதிரி இருப்பா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு. சுரிதார் தான் எப்பவும்.
சேலை கட்டிக்கணுங்கிறதுக்கு பயந்தே ஏஜ் அட்டெண்ட் பண்ணதுக்கு நடத்துற சம்பிரதாயங்களைக் கூட நடக்க விடாம அடம் பண்ணி
தடுத்துட்டா. இவளோட ஹீரோக்கள் மாதவன், பாரதியார் அப்புறம் ஹீரோயின் மதர் தெரசா. இவளுக்கு கொஞ்சம் நிறைய கனவுகள். தினம் ஒரு சிந்தனை. தினம் ஒரு ஆசை. தினம் ஒரு கனவு. ஒரு நாள் ஐ.ஏ.எஸ். அடுத்த நாளே மதர் தெரஸா மாதிரி ஆகணும்னு கனவு. அதுக்கு அடுத்த நாள் அப்துல் கலாம் மாதிரி விஞ்ஞானி ஆவது. இவள் கனவுகளுக்கு எல்லையே இல்லை. இப்படியாக தொடரும் இவள் கனவுகளுக்கு இவள் காரணமல்ல. இவள் வயது. அதாங்க பதினாறு. அந்த வயது படுத்தும் பாட்டில் சிக்கி தவிக்கிறாள். எவனும் இன்னும் இவளிடம் கௌரி ஐ லவ் யூன்னு சொல்லலை. அதுக்கு அவ காரணம் இல்லை. அதுக்குண்டான சந்தர்ப்பங்கல் அவளுக்கு இன்னும் அமையலை. அதே மாதிரி செக்ஸ்ன்னா என்னங்கிறதுக்கு ஆணா, பெண்ணா என்றுதான் கேள்வி கேட்பாள். மாத்ரூபூதத்தோட நிகழ்ச்சிய இன்னும் பார்க்கவில்லை. அதுக்காக அவள் ஞானசூன்யம் கிடையாது. நம்ம தமிழ் படத்தில முதலிரவு காட்சியில ஹீரோ உக்காந்திருப்பார். ஹீரோயின் வருவா. லைட் அணையும். அதுக்கு அப்புறம் ரெண்டு கிளி கிஸ் பண்றத காமிச்சா அவளும் பாவம் என்னதான் பண்ணுவாள். இப்படித்தான் ஒருவாட்டி சாப்ட் போர்னோ ஒன்றை அவள் பிரெண்ட் நித்யா அவளோட அண்ணன் ரூமிலருந்து சுட்டு வைச்சு ஒரு சுப முகூர்த்த வேளையில் யாருமில்லா நேரத்தில அவ கூட உக்காந்து பார்த்து ரெண்டு நாள் காய்ச்சலாகி. அவளுக்கு அது மேல ஈடுபாடு இல்லைன்னாலும் வெறுப்பு இல்லை. இதுக்கும் காரணமும் அவள் அல்ல. அவள் வயது. அப்பா செல்லம் என்றாலும் அம்மா மீது தனி பாசம்.

இப்படி ஒருத்தர் மேல ஒருத்தர் வெளிப்படையாக காண்பிக்கும் பாசமும் காட்டாத பாசமுமாக இருந்தாலும் இதுவரை பெரியதாய்
புயல் ஏது வீசவில்லை. பௌர்ணமி என்றால் அவர்கள் வீட்டில் சித்ராவண்ணம்தான். அதாவது புளியோதரை, தேங்காய் சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் இப்படியாக சமைத்து எடுத்துக் கொண்டு சந்துரு சகிதமாக மொட்டை மாடிக்குப் போய் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.
இதுதான் இந்தக் குடும்பத்தோட பிண்ணனி.

சரி இப்ப என்ன பண்றாங்கன்னு சொல்லவே இல்லையே..
"டகால்ட்டீ.. டிபன் ரெடியா.."
"டேய் கத்தாதடா.. அதான் கொண்டு வற்றோம்ல.." இது கௌரி..
அதற்குள் பத்மநாபன் டைனிங்குக்கு வர ஒரு சிறிய நிசப்தம்.
"அப்பா.. இன்னுக்கு லேட்டாத்தான் வருவேன். இவனை வெயிட் பண்ணச்சொல்லுங்க.."
"முடியாது.. எப்ப பார்த்தாலும் மகாராணி லேட்டா வருவாங்க. நான் தேவுடு காக்கணுமா?"
"அனந்து"
பத்மநாபனின் இந்த ஒரு சொல்லில் அவன் சப்தநாடியும் அடங்கிடும். அப்போதெல்லாம் அம்மா பக்கம் திரும்பிடுவான்.
காலை உணவு முடித்து இருவரும் ஆளுக்கு அவரவர் சைக்கிளில் ஏறிக்கொள்ள அங்கிருந்து கிளம்பினர்.
சரியாக பாண்டியன் ஹோட்டல் ரவுண்டானாவில் இருந்து நேராக போகும் போது பீபீ குளத்தில் இருந்து
வந்த ஒரு பைக் அனந்திற்குப் பின்னால் வந்த கௌரி மீது மோதியது. அதில் அவள் நிலை தடுமாறி
"அனந்தூஊஊ..." என்று கத்தியவாறே கீழே விழுந்தாள்.
அனந்து சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னால் பார்க்க அவளை ஏற்றிய இளைஞன் பதட்டத்தோடு இருந்தான்.
அவனை முறைத்து விட்டு வேகவேகமாக கௌரியை தூக்க ஓடினான்.

(தொடரும்)

இளசு
23-06-2003, 07:39 AM
மன்றத்துக்கு மற்றொரு பரிமாணம்...
முதல் தொடர்கதை...
பாராட்டுகள் ராம்...
பெரிய முயற்சி இது...
வெற்றிகரமாய்த் தொடர்ந்து முழுமை பெற
நெஞ்சார வாழ்த்துகிறேன்...

பாரதி
23-06-2003, 09:54 AM
அன்பு ராம்பால்.. மிக விளக்கமாக எல்லாவற்றையும் எழுதி இருக்கிறீர்கள். சிறப்பான ஆரம்பம். அருமையான தொடரை அட்டகாசமாக தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வாழ்த்துக்கள்.

karikaalan
23-06-2003, 01:53 PM
ராம்பால்ஜி!

தெளிவான நீரோடை போலப் போய்க்கொண்டிருக்கும் பத்மனாபன் குடும்பவாழ்க்கையில் இப்போ ஒரு திருப்பமோ? நல்ல தொடக்கம் -- சற்றே விரிவாக இருந்தாலும். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

பி.கு.: இத்தளத்தில் உருவாகும் படைப்புக்களுக்கு copyright உண்டா?

aren
23-06-2003, 02:59 PM
அருமையான ஆரம்பம் ராம். தொடர்கதை என்ற புதிய அத்தியாயத்தையும் ஆரம்பித்தாகி விட்டது. பாராட்டுக்கள்.

தமிழ் மன்றம் ஒரு முழுமையான ஒரு தளம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. வாழ்த்துக்கள்.

rambal
23-06-2003, 04:57 PM
ஊக்கமளிக்கும் அண்ணனுக்கும் பாரதிக்கும் கரிகாலன் அண்ணன் அவர்களுக்கும் மற்றும் அண்ணாச்சிக்கும் என் நன்றிகள்...

rambal
23-06-2003, 05:10 PM
பி.கு.: இத்தளத்தில் உருவாகும் படைப்புக்களுக்கு copyright உண்டா?

copyright பற்றி தலைவர்தான் சொல்ல வேண்டும்.

இக்பால்
07-09-2003, 03:24 PM
ஆட்டோக்காரர் கூட போனது போல் மதுரையைச் சுற்றிக்காட்டி,
வீட்டு புரோக்கர் கூட போனது போல் வீட்டைச் சுற்றிக்காட்டி,
திருமணப் புரோக்கர் கூட போனது போல் வீட்டில் உள்ளவர்கள்
ஜாதகம் சொல்லி...ஒரு வழியாக முதல் அத்தியாயம் பூர்த்தியாகி
விட்டது....ம்ம்ம்ம்......-அன்புடன் அண்ணா.

சேரன்கயல்
07-09-2003, 04:34 PM
முடிவிலி ஒரு பக்கம்...
வானவில் காலம் மறுபக்கம்... அசத்துங்கள் ராம்...
எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...

puppy
23-09-2003, 06:34 PM
ராம்
சிறுகதை என நினைத்து வந்தேன்..நீங்கள் என்னவென்றால் கொஞ்சம் விரிவாகவே எழூதி விட்டீர்கள் போல..தொடரட்டும் .....

இளசு
24-09-2003, 08:45 PM
ராம்
சிறுகதை என நினைத்து வந்தேன்..நீங்கள் என்னவென்றால் கொஞ்சம் விரிவாகவே எழூதி விட்டீர்கள் போல..தொடரட்டும் .....
அத்தியாயம் 1 ன்னா அது சிறுகதையா ராம்..
:)

puppy
24-09-2003, 09:01 PM
இளசு கிண்டல் பண்றார் பாருங்க...மன்னித்து விடுங்கள் ராம்..தொடர்கதை
என்பதை மறந்துவிட்டேன்.....செல்ல குட்டுஸ் சிறுகதை படித்து விட்டு
அதே ஞாபகம் எனக்கு......