PDA

View Full Version : வித்தியாசமான மன்னர்கள்...xavier_raja
07-11-2007, 08:26 AM
ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் ஒஸ்மான் அலிகான், தன்னிடமிருக்கும் தங்கக் கட்டிகளை தானே எண்ணிக் கொள்வார். தினமும் எண்ணுவார். பழைய கணக்குகளோடு சரிபார்த்துக் கொள்ளுவார். அவரைபோல் இரு கஞ்சனை உலகத்தில் யாரும் பார்த்துஇருக்கமுடியாது.

இவர் பதவிக்கு வந்ததும் செய்த முக்கியமான காரியம் இதற்கு மும்பு ஆறாவது நிஜாமாக இருந்த (அவரது தந்தைதான்) மெஹ்பூப் அலிகான் இறந்த பிறகு, அவரது துணைவிகளை விற்றுவிட்டார். (வெறும் 30 ரூபாய்குதான்) எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்? என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட சிக்கன நடவடிக்கை அது. சில துணைவிகளை விற்று, பணத்துக்குப் பதிலாக மாங்காய்களாகப் பெற்றுக் கொண்டார் என்றுகூட குறிப்புகள் இருக்கின்றன.

அநாவசியச் செலவுகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்ற சிந்தனையே ஒஸ்மானின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மாறுபட்ட பரிமாணங்களே பல விஷயங்களில் கஞ்சத்தனமாக வெளிப்பட்டன.

நிஜாம், உங்கள் சால்வை மிகவும் பழசாகிவிட்டது. புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே? என்றார் அமைச்சர் ஒருவர். அதற்கு ஒஸ்மான் அளித்த பதில், எடுக்கலாம். ஆனால், நான் அதுக்கு பதினெட்டு ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறேன். புதிய சால்வை இருபது ரூபாய் ஆகிறதே.

ஒருமுறை வைஸ்ராய் லின்லித்கோ, ஒஸ்மானைச் சந்தித்தபோது, அவரது வாக்கிங் ஸ்டிக்கைக் கவனித்தார். இரண்டாக உடைந்த அது, ஒட்டப்பட்டு நூலால் சுற்றப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டே எந்தவித கூச்சமும் இன்றி வெளியிடங்களுக்குச் சென்று கொண்டிருந்தார் ஒஸ்மான். தன்னுடன் பேச வரும் ஒரு சமஸ்தானத்தின் நிஜாம், இப்படி ஒடிந்த ஸ்டிக்குடன் வருகிறாரே என்று வைஸ்ராய்க்குத்தான் கூச்சமாகப் போய்விட்டது. அடுத்தமுறை ஒஸ்மானைச் சந்தித்தபோது, ஒரு புதிய உயர்தரமான வாக்கிங் ஸ்டிக்கைப் பரிசளித்தார். வாய் நிறையப் புன்னகை வழிய, அதனை வாங்கி வைத்துக் கொண்டார் ஒஸ்மான்.

அப்போதைய இந்திய அரசின் ஆலோசகராக வி.பி. மேனன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை ஒஸ்மானைச் சந்திக்கச் சென்றார். பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். ஒஸ்மான் தன் சார்மினார் சிகரெட் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடம் நீட்டினார். அதுதான் அப்போதைய மலிவான சிகரெட். பாக்கெட் பன்னிரண்டு பைசாதான். பத்து சிகரெட் இருக்கும்.

மேனனுடைய பிராண்ட் வேறு. போயும் போயும் சார்மினாரைப் புகைத்து வாய் நாற்றத்துடனா அலைய முடியும் என்று யோசித்த அவர், வேண்டாம் என்று மறுத்தார். ஒஸ்மான் வற்புறுத்தவெல்லாம் இல்லை. தம் வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார். மேனனுக்கும் வாய் நமநமத்தது. தன் சட்டைப் பையில் இருந்து விலையுயர்ந்த சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்து உடைத்தார்.

நாகரிகமாக ஒஸ்மானிடம் நீட்டினார். வாயில்தான் புகைந்துகொண்டிருக்கிறதே என்று மறுத்திருக்கலாம். ஆனால் ஒஸ்மான் அதிலிருந்து நான்கைந்தை எடுத்துத் தன் சார்மினார் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். அறையிலிருந்து புகை கலைந்து முடிந்த சில நொடிகளில் அவர்களது சந்திப்பும் முடிந்தது.

சில நாட்களிலேயே இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். பேச்சின் இடையே, ஒஸ்மான் தன் சார்மினார் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடமிருந்து எடுத்த புதிய பிராண்ட் சிகரெட்டுகள் எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருந்தன.

அதிகாரிகளோ, விருந்தினர்களோ ஒஸ்மானை சந்திக்கச் சென்றால், அவர் உபசரிக்கும் விதமே தனியானது. வருபவர்களை உட்காரச் சொல்லுவார். அவர்கள் தனக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பார். எது கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்வார். பேசத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள் கழித்து அரண்மனைப் பணியாள் கையில் ஒரு தட்டுடன் வருவார். அதில் முக்கால்வாசி நிரம்பிய நிலையில் இரண்டு கோப்பைகளில் டீ, இரண்டு பிஸ்கெட்டுகள் மட்டுமே இருக்கும். ஆளுக்கு ஒரு கோப்பை டீ, ஒரே ஒரு பிஸ்கட். அவ்வளவுதான். பெட்டி பெட்டியாக தங்க பிஸ்கெட் வைத்திருந்தால் என்ன, சாப்பிடக்கூடிய பிஸ்கெட்டை வீணாக்கக்கூடாது என்பது ஒஸ்மானின் உயரிய எண்ணம்.

இப்படி பல விஷயங்களில் கஞ்சத்தனமாக இருந்தார் என்றாலும், உல்லாசமாக இருக்க வேண்டிய நேரங்களில் அளவோடு உல்லாசமாக இருந்தார் ஒஸ்மான். அவர் தங்கியிருந்த கிங் கோதி அரண்மனையில் அவரது ஒவ்வொரு மாலைப் பொழுதும் ஓல்ட் மாங்க் உடன்தான் ஆரம்பிக்கும். அவ்வப்போது ஷாம்பெயின். இருக்கிறதே என்று இஷ்டத்துக்கு ஊத்திக் குடிக்கவெல்லாம் மாட்டார். அளவோடு ஊற்றி, ஆனந்தமாக உறிஞ்சுவார். கிளாஸில் ஒரு சொட்டுக்கூட மிஞ்சிவிடாமல் பார்த்துக் கொள்வார்.

யார் யாரோ தங்கள் இல்லத் திருமண விழாக்களுக்கு பத்திரிகை அனுப்புவார்கள், நேரில் வந்தும் அழைப்பார்கள். எல்லாத் திருமணங்களுக்கும் போக முடியுமா என்ன? சிலவற்றைத் தவிர்த்துவிட நேரிடும். சிலவற்றுக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். ஆனால் ஒஸ்மான், இந்த விஷயத்தில் மிகவும் நேர்மையானவர்.

யாராவது திருமணம் என்றோ, நிக்காஹ் என்றோ அழைப்பு விடுத்தால் போதும். மனம் நிறைய மகிழ்ச்சியுடன் அவர்களது அழைப்பை ஏற்றுக் கொள்வார். எப்போது, எங்கே, எத்தனை மணிக்கு என்றெல்லாம் தெளிவாகக் கேட்டறிந்து கொள்வார். ஒப்புக்கு அல்ல, கண்டிப்பாகக் கலந்து கொள்கிறேன் என்று நிஜமாகவே வாக்களிப்பார்.

திருமண வீட்டுக்காரர்களுக்கும் ஏக குஷியாக இருக்கும். பார்த்தியா, நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு நிஜாம் வரப்போறாராம். நாம கொடுத்து வைச்சவங்க. ஏற்பாடு தடபுடலா இருக்கணும். அசத்தோ அசத்துன்னு அசத்திடணும் என்று சுறுசுறுப்பாகக் களமிறங்குவார்கள்.

அந்தத் திருமண நாளும் வரும். ஒஸ்மான் தயாராவார். ஒரு கல்யாண வீட்டுக்குச் செல்லப்போகிறோமே, புதிதாக உடை அணியலாமா, ஜிகுஜிகுவென பட்டு உடை அணியலாமா என்றெல்லாம் அவருக்குத் தோன்றவே தோன்றாது. முந்தைய நாள் என்ன உடை அணிந்திருந்தாரோ, அதனுடனேயே கிளம்பிவிடுவார். ஒரு செட் உடையை (பெரும்பாலும் பைஜாமா) அதிகபட்சம் ஒரு வாரத்துக்காவது அணிந்துகொள்வதென்பது ஒஸ்மானின் உன்னதப் பழக்கம்.

திருமணம் நடக்கும் இடத்தில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் நிஜாமின் வருகைக்காக பளபளா உடையில் பல்லிளித்துக் காத்திருப்பார்கள். ஒஸ்மான் தன் காரில் வந்து இறங்குவார். பேண்டு, வாத்தியங்கள் ஸ்பெஷல் உற்சாகத்துடன் முழங்கும். நேராக மணமக்களை நோக்கிச் செல்வார். அவர்கள் நிஜாமின் பொற்பாதங்களை நோக்கி வளைவார்கள்.

சொன்ன மாதிரியே நிஜாம் வந்துட்டாரே, கல்யாணப் பரிசா அள்ளிக் கொடுக்கப் போறாரு. ஆனா அவரு கையில ஒண்ணும் கொண்டு வரலையே. ஒருவேளை தான் போட்டிருக்குற நகை எதையாவது கழற்றிக் கொடுத்துடுவாரோ? அவ்வளவு நகைகூட போட்டுட்டு வரலையே. வேற என்னதான் கொடுப்பாரு? என்று கூடியிருப்போர் நெஞ்சம் குறுகுறுக்கும்.

என்னப்பா எவ்வளவு வரதட்சணை?_நிஜாம் மெதுவாக மணமகள் வீட்டாரிடமோ அல்லது மணமகன் வீட்டாரிடமோ கேட்பார். என்னங்க நீங்க? ஏழை வீட்டுக் கல்யாணம். எங்களால முப்பது சவரன்தான் போட முடிஞ்சுது. நிஜாம் வாயால இதையெல்லாம் கேட்கலாமா? என்று கூனிக்குறுகி பதில் சொல்லுவார்கள்.

எங்க இருக்கு அந்த நகைகள் எல்லாம்? _ ஒஸ்மான் விடாமல் கேட்பார்.

எல்லாம் கல்யாணப் பொண்ணு போட்டிருக்கே. அந்த நகைகள்தான்.

மணப்பெண் அணிந்திருக்கும் நகைகளைத் தம் கண்களால் எடை போடுவார் ஒஸ்மான்.

எங்க, அந்தக் கழுத்து நெக்லெஸ் நல்லாயிருக்கே. கொடு பார்க்கலாம்.

நிஜாமுக்கே இந்த நகை பிடித்திருக்கிறதாமே என்று மணப்பெண் வேகவேகமாக அந்த நெக்லெஸைக் கழற்றிக் கொடுப்பாள். எட்டு சவரனுங்க என்பார் மணப்பெண்ணின் தந்தை, ஆர்வமுடன்.

நெக்லெஸைக் கையில் வாங்கிப் பார்க்கும் நிஜாம், அதை அப்படியே தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்வார். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! _ மணமக்களை மனதார வாழ்த்துவார். மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுவார். திருமணத்துக்கு அழைத்தவர்கள் தலைசுற்றலோடு நிற்பார்கள்.

நிஜாம் எதற்கு அந்த நெக்லெஸை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஒரு மெகா சமஸ்தானத்தின் நிஜாம், உலகப் பணக்காரர், கௌரவம், கருமாந்திரம் எல்லாம் பார்க்காமல், கூப்பிட்ட மரியாதைக்குத் தேடி வந்து மணமக்களை வாழ்த்தியிருக்கிறார். அதற்குப் பதில் மரியாதையாக ஒரு நகையைக் கூட எடுத்துக் கொள்ளக்கூடாதா? என்ன, இருப்பதிலேயே விலையுயர்ந்த நகையை எடுத்துக் கொள்வார். அப்படி ஒரு பழக்கம் அவருக்கு. இது தப்பா?

இந்த வகையில் ஒஸ்மான் கணக்கில் சேர்ந்த நகைகள் ஏராளம். பாவம், அவரும் என்னதான் செய்வார்? எல்லா விஷயத்திலும் கஞ்சத்தனமாக இருந்த அவரால், பெண்கள் விஷயத்தில் மட்டும் அப்படி இருக்க முடியவில்லை. எண்ணிக்கை ஒன்றில்தான் ஆரம்பித்தது. சச்சின் டெண்டுல்கர் ரன் அடிப்பது போல, மளமளவென நூறையும் தாண்டிச் சென்றுவிட்டது. கிட்டத்தட்ட இருநூறு துணைவிகள் என்றொரு தகவல் உண்டு. எல்லாத் துணைவிகளையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டியது ஒரு நிஜாமின் தார்மீகக் கடமையல்லவா?

கழுத்தை நன்றாக இழுத்துப் போர்த்தும் அளவுள்ள நெக்லெஸ், டஜன் கணக்கில் வளையல்கள், ஏராளமான தோடுகள், கூந்தலில் சூடும் நகைகள், இடுப்பில், கைகளில், கால்களில் அணியத் தேவையான நகைகள் தங்கம், வைரம், முத்து, பவளம், மரகதம் போன்றவற்றால் ஆனவை _ இது எல்லாம் சேர்ந்தது ஒரு செட். தன்னுடைய எல்லாத் துணைவிகளுக்கும் தனித்தனியாக ஒரு செட் நகைகளை வழங்கியிருந்தார் ஒஸ்மான். இவைபோக குழந்தைகளுக்கான நகைகள் தனி.

இது இது இன்னாருக்குரிய நகைகள் என்று சொல்லியிருந்தாரே தவிர, அவர்கள் ஒஸ்மானை மீறி அந்த நகைகளை அணிந்து அனுபவிக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கான நகைகளையும் தனித்தனியாகப் பிரித்து, தனித்தனிப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாத்தார். அவரை மீறி எந்தப் பெட்டியிலிருந்தும் எந்த நகையும் காணாமல் போக முடியாது. பெட்டி மாறிப் போகவும் முடியாது.

மாம்பழ டிசைன் பச்சைக் கல் நெக்லெஸ், அது என் முப்பத்தேழாவது துணைவிக்கானது. அதில் இரண்டு பச்சைக் கற்கள் விழுந்திருக்கும். அதன் எடை இத்தனை கிராம்... அப்புறம் அந்த நெக்லெஸ் இருக்குற பெட்டியிலெயே ஒரு ஜோடி சிவப்புக்கல் தோடு இருக்கு. அதுல ஒரு தோடுக்கான திருகாணி கொஞ்சம் லூஸா இருக்கும். _ இப்படி ஒவ்வொரு நகை பற்றிய பயோடேட்டா ஒஸ்மானுக்கு அத்துப்படி. என்னென்ன விதத்தில் எத்தனை எத்தனை நகைகள் இருக்கின்றன, எவையெல்லாம் புதிதாக வந்தவை, எவையெல்லாம் பரம்பரை நகைகள், முகலாயர் காலத்து நகைகள் என்னென்ன என்பதெல்லாம் அடங்கிய ஒட்டுமொத்த லிஸ்ட் அவரது சட்டைப் பையில் எப்போதுமே இருக்கும். புதிதாக எதுவும் நகை சேர்ந்தால் உடனுக்குடனே லிஸ்டை அப்டேட் செய்து கொள்வார். நகை விஷயத்தில் அவ்வளவு நேர்த்தி.

நிஜாமின் பிரத்யேக நகைகள் என்று பல இருந்தன. வைரம் பதித்த சட்டை பட்டனிலிருந்து தங்கத்தால் இழைத்த காலணி வரை அதன் லிஸ்ட் தனி. அவற்றுள் முக்கியமானது தலைப்பாகையோடு பொருத்துவதற்கேற்ற மரகதப் பதக்கம். இன்னொன்று வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தாலான இடுப்பு பெல்ட். அதன் எடை ஒன்றரைக் கிலோ.

நகைப்பெட்டிகள் இருக்கும் கஜானா அறைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. கஜானாவின் பாதுகாப்பு அதிகாரிகூட ஒஸ்மானின் அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது. அத்தனை சாவிகளும் ஒஸ்மானிடம்தான் இருக்கும். ஏதாவது ஒரு நகைப்பெட்டி லேசாக நகர்ந்திருந்தால்கூட கண்டுபிடித்துவிடுவார். சந்தேகம் சாமியாட, பாதுகாப்பு அதிகாரியைப் போட்டு பாடாய்ப் படுத்திவிடுவார்

மதி
07-11-2007, 08:38 AM
ஆஆ....படிக்கப் படிக்க தலை சுத்துதே...
இது கதையா..இல்லை நிஜமா?

xavier_raja
07-11-2007, 09:13 AM
ஆஆ....படிக்கப் படிக்க தலை சுத்துதே...
இது கதையா..இல்லை நிஜமா?


இது வரலாற்று சுவடுகளில் இருந்து எடுத்த குறிப்புகளை கொண்டு எழுத்தபட்டது, கதையல்ல..

Narathar
07-11-2007, 10:20 AM
எனக்கென்னவோ நம்ம லொள்ளூவாத்தியாரின் சரித்திரம் போல உள்ளது

நேசம்
07-11-2007, 10:32 AM
இது வரலாற்று சுவடுகளில் இருந்து எடுத்த குறிப்புகளை கொண்டு எழுத்தபட்டது, கதையல்ல..

இது நல்ல கதையாக இருக்கு..!!

xavier_raja
09-11-2007, 05:09 AM
நண்பர்களே,

இதைவிட ஒரு வேடிக்கையான விஷயம் ஒன்று கேளுங்கள்..

எனவே, உலகின் ஏழாவது பெரிய வைரமான ஜேக்கப் வைரத்தினை, ஒஸ்மான் டேபிள் வெயிட்டாக பயன்படுத்தி வந்தார், காரணம் அதை அவர் கண்டெடுத்தது அவர் தந்தை பயன்படுத்திய செருப்பினுல் ஒளித்துவைத்து இருந்தார். அதனால் அவர் அதை வைரம் என்று கருதவில்லை..

அந்த ஜேக்கப் வைரத்தின் இன்றைய மதிப்பு நானூறு கோடி ரூபாய்..

lolluvathiyar
10-11-2007, 04:50 AM
அருமையான வரலாற்று கதை. நீங்கள் குறிப்பிட்டது போல இந்த நிஜாம் கஞ்சன் இல்லை. இவர் ஏகபோக ஊதாறி வாழ்கை தான் வாழ்ந்திருகிறார். கஞ்சனாக இருந்தால் இத்தனை மனைவிகள் கட்ட முடியாது. மக்கள் பணத்தை பிடுங்கி மக்களுக்கு எதுவும் செய்யாமல் வாழ்ந்தவர். சுருக்கமாக சொன்னால் கொள்ளையர் என்று சொல்வது பொருந்தும்.
உன்மையில் அரசன் கஞ்சனாக இருந்தால் தான் மக்களுக்கு நன்மையே, எதுக்கு அரசு ஊதாரி செலவு செய்ய வேண்டும். அது தவறு.

sarcharan
10-11-2007, 08:27 AM
ஆஆ....படிக்கப் படிக்க தலை சுத்துதே...
இது கதையா..இல்லை நிஜமா?

ஷங்கர் இவரை மாடலாய் வைத்து, மதி, கஞ்சத்திலகம் 57வது கருமாண்டின்னு படம் எடுத்தாலும் எடுக்கலாம்

அக்னி
11-11-2007, 10:32 PM
இப்படியான கஞ்சப்பிரபு நாட்டுமக்களுக்கு எப்படி சேவையாற்றி இருப்பார்...
மக்கள் அடித்தே துரத்தியிருப்பார்களே... அப்படியேதும் நடக்கவில்லையா?

பகிர்தலுக்கு நன்றி...