PDA

View Full Version : காதல் குளிர் - 7gragavan
05-11-2007, 10:14 PM
முந்தைய பகுதி இங்கெ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13084)

தொடர்ந்து படித்துப் பாராட்டும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி பல.

===============================================================
ரம்யா கேட்ட கேள்வி புரிந்ததா புரியவில்லையா என்றே ப்ரகாஷாவுக்குப் புரியவில்லை. ஆத்திரப்படும் அப்பாவை நினைக்க முடிந்தது. ஆனால் அழும் அம்மாவை. வேண்டாம் மகனே என்று சொல்லி அம்மா அழுதால்.... நினைப்பதற்கே அவனுக்கு அசிங்கமாக இருந்தது. அந்த அசிங்க நினைப்பே அவன் வாயையும் மூடி வைத்தது.

"என்னடா அமைதியாயிட்ட?" கேட்ட ரம்யாவைப் பாவமாகப் பார்த்தான் ப்ரகாஷா. முகத்தில் குழப்பமும் கவலையும் கூட்டணி அமைத்திருந்தன.

"பாத்தியாடா....அப்படி ஒரு நெலமை வந்தா என்ன முடிவை நீ எடுப்பன்னு உன்னால யோசிச்சுக்கூடப் பாக்க முடியலை. அதுனாலதான் ஒரு பதிலும் சொல்ல மாட்டேங்குற. சப்யா காதலைச் சொன்னதும் சித்ரா ஒத்துக்கிட்டா. ஏன்? சப்யாகிட்ட இருந்த உறுதி. தன்னை எப்பவும் சப்யா கலங்க விடமாட்டான்னு சித்ராவால நம்ப முடிஞ்சது. அப்படியொரு நம்பிக்கைய என் மனசுல உன்னால உண்டாக்க முடியலையேடா."

சப்யாவிற்கும் சித்ராவுக்கும் ரம்யா சொல்ல வருவது புரிந்தது. ஆனால் ப்ரகாஷா ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான்.

ரம்யா அவனது கன்னத்தில் கை வைத்து முகத்தை நிமிர்த்தினாள். அவள் தொட்டது கங்கு கன்னத்தில் பட்டது போல இருந்தது அவனுக்கு. படக்கென்று நிமிர்ந்தான். "டேய். நீ நல்லவன். அதுல எந்தச் சந்தேகமும் எனக்கு இல்ல. உன் மேல உண்மையான அன்பு எனக்கும் இருக்கு. ஆனால் காதல் வரனும்னா...உன்னுடைய அன்பும் அழகும் மட்டும் போதாதுடா...ஏதோ குறையுது. உன்ன இன்னைக்குக் காதலிக்கத் தொடங்கீட்டு....நாளைக்கு அம்மா அழுதாங்க ஆட்டுக்குட்டி உழுதாங்கன்னு சொல்லி வேற எந்த முடிவு எடுத்தாலும் கஷ்டம் எனக்குத்தான். உனக்குந்தான் கஷ்டம். ஆனா அது நீ எடுத்த முடிவு. அதுக்காக நானும் ஏன் கஷ்டப்படனும்?"

"ரம்யா...உனக்கு இப்ப பதில் இல்ல. எனக்குத் தெரியலை. ஆனா நன் ப்ரீத்தி நிஜா. அது நிஜா ஆகுத்தே. இனி இது பகே பேசலை. பேச வேண்டாம்."

தாஜ்மகால் கல்லறையாமே. அதனால்தான் அங்கு வைத்துக் காதலைச் சொன்னதும் சோகம் உண்டானதோ. ம்ம்ம்..என்னவோ...இவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே காதல் வரத்தான் போகிறதா? இல்லை...ஏற்கனவே வந்து விட்டதா? வரவே வராதா? ரம்யாவின் கேள்விகளும் சரியாகத்தான் தெரிகின்றன. அப்படி எதுவும் யோசிக்காததால் ப்ரகாஷாவின் காதல் பொய்யான காதலாகி விடுமா என்ன?

சிறிது நேரத்திற்குப் பிறகு அனைவரும் கிளம்பி வெளியே வந்தனர். ரம்யா தாஜ்மகால் பொம்மைகள் வாங்க விரும்பினாள். அழகாக பளிங்குக் கற்களில் செய்திருந்த தாஜ்மகால்கள் ஈர்த்தன. ஆனால் பேரம் பேசி வாங்க வேண்டுமே. ப்ரகாஷாதான் பேரம் பேசினான். யோசித்து யோசித்து ஒன்று..இரண்டு...மூன்று..நான்கு என்று வாங்கினாள். அட்டைப்பெட்டியில் காகிதச்சுருகளை வைத்துக் கட்டிக் குடுத்தார்கள். வாங்கிக் கொண்டு டாக்சியை நோக்கி நடந்தார்கள்.

கே.ஆர்.எஸ் சிரித்துக் கொண்டே வரவேற்றான். "ஆயியே சாப். முடிஞ்சதா? அடுத்து எங்க போகனும்?" மணி நான்குதான் ஆகியிருந்தது. வேறெங்கும் போவார்கள் என்று நினைத்துக் கேட்டான்.

அன்றைய திட்டப்படி பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்து விட்டதால் வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்தான் சப்யா. அதற்கு முன் அலைந்த களைப்பில் முதலில் டீ குடித்தார்கள்.

காரில் ஏறப் போகையில் ரம்யா உள்ளே உட்கார கதவைத் திறந்தான் ப்ரகாஷா. "நான் முன்னாடி உக்கார்ரேன் ப்ரகாஷா. வரும் போது பேசீட்டே வந்ததால ஊரெல்லாம் பாக்கலை. இப்பப் பாத்தாத்தானே உண்டு. இதுக்காகன்னு எப்ப வரப் போறோம்." சொல்லிக் கொண்டே முன்னால் ஏறினாள் ரம்யா. ஏறியவளைப் பார்த்துச் சிரித்தான் கே.ஆர்.எஸ். அவனை கண்டுகொள்ளாமல் உட்கார்ந்தாள்.

சப்யாவும் சித்ராவும் பின்னாடி ப்ரகாஷாவோடு உட்கார்ந்து கொண்டார்கள். ரம்யா ப்ரகாஷா விஷயத்தைப் பற்றி இப்பொழுது பேச வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். வேறொரு நல்ல சமயமாகப் பார்த்துப் பேசி முடிவுக்கு வர விரும்பினார்கள்.

தன்னோடு உட்காராமல் முன்னாடி சென்று ரம்யா உட்கார்ந்தது ப்ரகாஷாவுக்கு வலித்தது. என்னென்ன அவன் மனதில் ஓடின என்பதே அவனுக்குப் புரியாத அளவுக்கு வேகமான சிந்தனைகள். வீடு வர இன்னும் மூன்று மணி நேரங்கள் ஆகும். அதுவரை இப்படித்தான் சிந்தித்துக் கொண்டே இருக்கப் போகிறானா? அதற்கு அப்புறமும் சிந்திக்காமலா இருக்கப் போகிறான்?

ஆனால் ஒன்று. நடந்த நிகழ்ச்சி அவனுக்குள் எதையோ மாற்றி விட்டது. அது என்னவென்று அவனுக்கும் புரியவில்லை. பழைய ப்ரகாஷா இல்லை அவன். காதல் வந்தால் ஒருவன் மாறித்தான் ஆக வேண்டுமா என்ன? யாரய்யா கண்டுபிடித்தது இந்தக் காதலை. அவர் மட்டும் கண்ணில் பட்டால் அவரைச் சப்பாத்தி மாவு பிசைந்திருப்பான். என்ன செய்வது..கடவுள் எல்லாருக்கும் எப்பொழுதும் கண்ணில் தெரிவதில்லையே. ஏதோ அவருக்கு நல்ல நேரம்.

ரம்யாவின் மனதிற்குள் வேறு விதமான சிந்தனைகள். சற்று அதிகமாகவே பேசி விட்டோமோ என்றும் கூட யோசித்தாள். ஆனாலும் அவளது கேள்விக்கு விடை கிடைக்காதது ஏமாற்றமாகவே இருந்தது. "யார் சொன்னாலும் நீதான் வேணும்னு வந்திருவேன்" என்று அவன் சொல்லிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைத்தாள். அப்படி அவன் சொல்லியிருப்பான் என்று நினைப்பதே இனிமையாக இருந்தது. ஆனால் சொல்லவில்லை என்ற அப்பட்டமான உண்மை கசந்தது.

இப்படி ஒவ்வொரும் ஒவ்வொரு சிந்தனையில் இருக்கையில் கார் நொய்டாவை நோக்கி விரைந்தது. அப்பொழுதுதான் கத்தினாள் ரம்யா.

தொடரும்..

அன்புரசிகன்
06-11-2007, 04:28 AM
ரம்யாவின் நினைப்புக்களிலும் கேள்விகளிலும் எதிர்பார்ப்புக்களிலும் தவறில்லை... பலருக்கு காதல் பிறப்பதுடன் அதனுடன் சேர்ந்து கோழைத்தனமும் பிறந்துவிடுகிறது... வருத்தமானதே...

தொடருங்கள் அண்ணா..

lolluvathiyar
06-11-2007, 09:04 AM
ரம்யா கேட்ட கேள்விக்கு கதநாயகனால் பதில் சொல்ல முடியாமல் தினருகிறான். நல்ல மெச்சூர்ட் லவ் ஸ்டோரியாக செல்கிறது. ரம்யா வுக்கு அதிகமாக காதல் இருகிறது உன்மை. ஆனால் அது அவள் அறிவை மரைக்கவில்லை. அந்த வகையில் ரம்யா பாராட்டுகுறியவளே

மதி
06-11-2007, 09:55 AM
ராகவரே...
எப்ப தான் இப்படி சஸ்பென்ஸ்ல முடிக்கும் பழக்கத்தை விடப் போறீரோ..!
வேற ஒன்னுஞ்சொல்லத் தோணல.

பூமகள்
06-11-2007, 11:17 AM
எப்படியும் போராடி பெற்றோரின் சம்மதம் கிடைக்கப்பெற்று தான் திருமணம் என்ற நம்பிக்கை வார்த்தை பிரகாஷாவால் ஏன் சொல்லமுடியவில்லை?? இல்லையெனில் ரம்யா நினைத்தது போல் "எந்த சூழலிலும் உன்னை விட்டு சென்று விட மாட்டேன்" என்று கூட ஏன் சொல்லவில்லை??
கடைசியாய் ரம்யா ஏன் கத்தினார்...வில்லன் ஓட்டுனர் தனது வில்லத்தனத்தை ஆரம்பித்து விட்டானா??
மர்மம் வைத்து முடித்தது அருமை..!
தொடருங்கள் ராகவன் அண்ணா.

மலர்
10-11-2007, 12:39 PM
உன்ன இன்னைக்குக் காதலிக்கத் தொடங்கீட்டு....நாளைக்கு அம்மா அழுதாங்க ஆட்டுக்குட்டி உழுதாங்கன்னு சொல்லி வேற எந்த முடிவு எடுத்தாலும் கஷ்டம் எனக்குத்தான். உனக்குந்தான் கஷ்டம். ஆனா அது நீ எடுத்த முடிவு. அதுக்காக நானும் ஏன் கஷ்டப்படனும்?"

இப்போ உள்ள பொண்ணுங்க இந்த
விஷயத்துல பயங்கர கெட்டி...


யாரய்யா கண்டுபிடித்தது இந்தக் காதலை. அவர் மட்டும் கண்ணில் பட்டால் அவரைச் சப்பாத்தி மாவு பிசைந்திருப்பான். என்ன செய்வது..கடவுள் எல்லாருக்கும் எப்பொழுதும் கண்ணில் தெரிவதில்லையே. ஏதோ அவருக்கு நல்ல நேரம்.

ஹா...ஹா,,,,,
கடவுளுக்கே இந்த கெதியா...??


இப்படி ஒவ்வொரும் ஒவ்வொரு சிந்தனையில் இருக்கையில் கார் நொய்டாவை நோக்கி விரைந்தது. அப்பொழுதுதான் கத்தினாள் ரம்யா.

அதானே எப்போதான் சஸ்பென்ஸ் இல்லாமல் முடித்தீர்கள்
வாழ்த்துக்கள் ராகவன் அண்ணா....

அக்னி
13-11-2007, 12:47 AM
அப்போ அடுத்த பாகத்தில டிரைவர் ரகசியம் வெளிவரப்போகுதோ...?
எனக்கு மட்டும் சஸ்பென்ஸ் இல்லை...
ஏனென்றால், அடுத்த பாகம் ரிலீஸ் ஆகீட்டுதே...
உடனே ஒடிப்போய் பார்க்கப் போறேன்...

பாராட்டுக்கள்...

மன்மதன்
20-11-2007, 05:27 PM
ஏன் வீல் என்று கத்தினாள்..?
வீலில் (சக்கரத்தில்) ஏதாவது மாட்டிவிட்டதா?
கதை ஜெட் வேகத்தில் செல்கிறது..