PDA

View Full Version : யாரந்த காதலி?



ஆதவா
05-11-2007, 07:28 AM
நண்பர்களே! இந்த கதை என் முதல் முயற்சி. படித்துவிட்டு கருத்து சொல்லுவதைக் காட்டிலும் குறை இருந்தால் சொல்லுங்கள்.. பாகம் பாகமாக பிரித்து பதிவிட விருப்பமில்லை எனக்கு.. ஒட்டுமொத்த கதையும் உங்கள் பார்வைக்கு.. பொறுமையாக படித்து பின்னூட்டமிடுங்களேன்..


இனிப்பை மொய்க்கும் எறும்புக் கூட்டமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களை விலக்கிவிட்டு இன்ஸ்பெக்டர் ராம் வெளியே வந்தார். அவரின் முகத்தில் சந்தேக நரம்புகள் ஓய்வெடுப்பதை நிறுத்தி ஓடிக்கொண்டிருந்தது.

மக்கள் கூட்டத்துக்கு நடுவே பிணமாகிக் கிடந்த வாலிபனைச் சுற்றிலும் சாக்பீஸினால் கோடிடப்பட்டது. அங்கங்கே உச் கொட்டிக் கொண்டிருந்த மக்களை சில ஏட்டுகள் விலக்கிக் கொண்டிருந்தார்கள். வாலிபனின் தலையிலிருந்து ஆறாக இரத்தம் ஓடியிருக்கவேண்டும். ஈரம் இன்னும் குறையாவிடினும் பாதிக்கும் மேலே காய்ந்திருந்தது. வாலிபன் ஒரு பள்ளி மாணவனைப் போல உடையணிந்திருந்தான். கட்டம் போட்ட சந்தன வர்ணத்தில் சட்டையும் ப்ரவுன் வர்ணத்தில் பேண்டும் அணிந்திருந்தான்.

இன்ஸ்பெக்டர் ராம் மருத்துவமனைக்கு போன் செய்திருந்தமையால் அதன் வருகைக்கான சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

ராமுக்கு அடுத்த மாதம் திருமணம். அதன் காரணமாக அலைச்சலாக இருந்தார். டிபார்ட்மெண்டில் திருமண விசயத்திற்காக எந்த ஒரு கேஸையும் தள்ளிப் போட முடியாது. அதிலும் ராமின் திறமைக்கு அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டார்கள்..

" கல்யாண நேரத்தில இந்த கேஸை எப்படி எடுத்து நடத்தறது? இந்த நேரத்திலதான் இப்படி ஒரு எழவு வந்து விழனுமா?" அலுத்துக் கொண்டே ஜீப்பினருகே வந்து நின்றார் ராம்.

ஆம்புலன்ஸ் பிணத்தை எடுத்துக் கொண்டு சென்றது.

" சார். பையனோட பேக், எதுவும் கிடைக்கல. அவனோட முகத்தை வெச்சுதான் யாருனு அடையாளம் கண்டுபிடிக்கணும். அதோட பையனைக் காணோம்னு யாராவது கம்ப்ளைண்ட் கொடுத்தாங்கன்னாத்தான் அவன் யாருன்னு தெரியும். கொலை நேத்திக்கி நைட் நடந்திருக்கு." ஏட்டு கிடைத்த தகவல்களை அப்படியே ஒப்பித்தார்.

மிக வெறுப்பாக " ம்" என்றார் இன்ஸ்பெக்டர் ராம்.

ராமுக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. தனது நண்பன் கதிரவனை இந்த கேஸுக்கு உதவி செய்யச் சொன்னால் என்ன? உடனே அவனைத் தொடர்பு கொண்டான்..


அதிகாலையில் இருந்த கூட்டம் இடம் தெரியாமல் போனது. கொலை நடந்த இடத்தில் ஒரு காக்கைக் குருவி கூட இல்லை. மயான அமைதியில் அந்த இடம் காட்சியளித்தது. ராமும் கதிரும் சம்பவ இடத்தை கவனித்தனர். கதிர் சன்லைட் டிடக்டிவ் ஏஜென்ஸி நடத்திவருகிறான். அது யாருக்கும் தெரியாமல். தெரிந்து ஒரு மொபைல் கடை ஒன்றை திருப்பூர் பேருந்து நிலையத்துக்கு அருகே வைத்திருக்கிறான். ராம் உடன் படித்தவன் என்பதால் ஒருசில கேஸ்களில் ஈடுபட்டு வந்த அனுபவமும் உண்டு.

" ராம், பையன் எந்த ஸ்கூல்னு தெரியுமா? ஸ்கூல்னு எப்படி கன்பார்மா சொல்ற? " விசாரணையை ஆரம்பித்தான் கதிர்.

"எந்த ஸ்கூல்னு தெரியலை ; ஆனா அவன் போட்டிருந்த ட்ரெஸ் ஸ்கூல் யூனிபார்ம் மாதிரி இருந்தது. பெரும்பாலும் காலேஜ்ல யூனிபார்ம் போட்டுட்டு யாரும் போவாங்களா? அப்பறம் கேஸை பதிவு பண்ணியிருக்கோம். பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பியிருக்கோம். துரித நடவடிக்கை எடுக்கறதா அவங்க சொல்லியிருக்காங்க, அவனோட கையிலயும் நெஞ்சிலயும் சிறு சிறு துளைகள் இருக்கு. அநேகமா காம்பஸால குத்தியிருக்கணும். அதனால கீழ விழுந்து தலையில அடிபட்டு இறந்திருக்கான். பையனோட பேரண்ட்ஸ் யாருன்னு இதுவரைக்கும் தெரியலை. அவன் போட்டிருக்கற உடைய வெச்சு எந்த ஸ்கூல்னு கண்டுபிடிக்கணும்.."

" ராம், பையனுக்கு எத்தனை வயசு இருக்கும்? "

" அவனோட உடம்பை கவனிக்கையில நிச்சயம் பதினெட்டு இருக்கும். நம்ம செல்வத்துக்கிட்ட அந்த ட்ரெஸ் எந்த ஸ்கூல்னு பார்க்கச் சொல்லியிருக்கேன். கொஞ்ச நேரத்திலயே சொல்லிடுவான். அப்பறமா அவங்க பேரண்ஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிடலாம். "

" அவனோட பேக் டிபன் பாக்ஸ் அது இதுன்னு எதுவுமே கிடைக்கலையா? "

" இல்லை. கதிர். அவன் விழுந்து கிடந்த திசையைப் பார்த்தா இந்த பக்கம் உள்ள ஸ்கூல்ல இருந்துதான் வந்திருக்கணும்." சொல்லிக் கொண்டே கையால் காண்பித்தார் இன்ஸ்பெக்டர் ராம்.

" இது என்ன வீதி ராம்?"

" முத்து நகர் முதல் வீதி. பெரிய பெரிய வீடுகள் தான் இங்க இருக்கு. நடமாட்டமே அவ்வளவாக இல்லாத ஏரியா. அதிலயும் இந்த வீதியில வீடுகளே இல்லாததால சுத்தமா எந்த ஒரு நடமாட்டமும் இல்லை. அதனாலதான் நேத்திக்கு நடந்த கொலை இன்னிக்கு காலைலதான் தான் தெரிஞ்சுருக்கு, "

பேசிக்கொண்டு இருக்கும் போதே ராமின் செல் அலறியது. எடுத்து காதில் வைத்து அலோ என்றார்.

" அப்படியா?.... சரி..... நான் ஸ்டேசனுக்கு வரேன்.. "

" என்ன விசயம் ராம்?" கதிர் ஆர்வமாய் கேட்டான்.

" இதுவரைக்கும் பையன் காணோம்னு எந்த ஒரு ஸ்டேசனுக்கும் கம்ப்ளைண்ட் வரலையாம். அதோட அந்த ட்ரெஸ் மேட்ச் ஆகுற ஸ்கூல்ஸ் மொத்தம் இரண்டு தானாம். ஒண்ணு சிவகிரி மெட்ரிக், இன்னொண்னு, இன்ஃபேண்ட் ஜீசஸ். இரண்டுலையும் அந்த பையன் படிக்கலையாம்! " ஆர்வம் தொய்ந்து போய் சொன்னார் இன்ஸ்பெக்டர் ராம்.

" ராம். கொஞ்சம் முயற்சிப்போம். நிச்சயம் கிடைக்கும். நீ எல்லா ஸ்கூலுக்கும் அவனோட போட்டாவை அனுப்பிப் பாரு. ஒருவேளை வெளியூர் பையனா இருந்தா, பேப்பர்ல ஆட் கொடு. ஆர்வத்தை இழக்காதே " தட்டிக்கொடுத்தான் கதிர்..

எல்லா பள்ளிகளுக்கும் அவனைப் பற்றி விசாரிக்கும் முன் கதிருக்கு ஒரு யோசனை முளைத்தது.... அது அந்த கொலையின் விசாரணைக்கான அஸ்திவாரம்...


" ராம், சமீபத்தில சில பள்ளிகள் தங்களோட யூனிபார்மை மாத்தினாங்க, உதாரணத்துக்கு, பிளாட்டோஸ் அகாடமி ஸ்கூல் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி மாத்தினாங்க... இந்த வருசத்திலயும் ஏதாவது ஒரு ஸ்கூல் மாத்தியிருக்கணும். அது எதுன்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம்.. இப்ப ஜூன் மாசம்கிறதால சில பசங்க பழைய யூனிபார்மையே போட்டுட்டு வர சான்ஸ் இருக்கு " பொறிதட்டியவாறு எழுந்தான் கதிர்..

" ம்ம். குட் பாய்ண்ட்./ எந்த ஸ்கூல்னு எப்படி சுலபமா கண்டுபிடிப்பே? "

" ரொம்ப சிம்பிள், ஏதாவது பஸ் ஸ்டாப்பில பசங்க வெயிட் பண்ணீட்டு இருப்பாங்க, அதை வெச்சு கண்டுபிடிக்கலாம். இல்லைன்னா நீ எதுக்கு போலீஸா இருக்கிற? இதைக்கூடவா உன்னால கண்டுபிடிக்கமுடியாது? "

" நைஸ், இப்பவே ஏற்பாடு பண்றேன்... செல்வம்!!!, குழந்தை சாமி!!! " இரு கான்ஸ்டபிள்களையும் அழைத்தார் ராம்.

" யெஸ் சார்." கோரஸாக வந்து நின்றார்கள் இருவரும்.. போலிஸ் என்பதை அவர்களின் வயிறே காட்டிக் கொடுத்தது.

" நீங்க இன்னிக்கு சாய்ந்தரமா குமரன் சிலைகிட்ட போய் மஃப்டியில நிக்கிறீங்க. அங்க இருக்கிற பசங்ககிட்ட மெதுவா விசாரிக்கிறீங்க.. நான் முதல்ல என் வீட்டுக்குப் போய் சமாதானப்படுத்தப் போறேன்.. " ராம் அவசராவசரமாக பெல்டை சரிசெய்துகொண்டு வண்டியை நோக்கி ஓடினார்..

செல்வமும் குழந்தை சாமியும் கவனமாய் கேட்டுக் கொண்டு பணிக்குத் திரும்பினர்.

கதிர் மருத்துவமனைக்குச் சென்றான்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக.


இரு கான்ஸ்டபிள்களும் குமரன் சிலைக்கு வந்தனர். கிட்டத்தட்ட மணி ஐந்தைத் தொட்டிருக்கும். சிலையை ஒட்டி செல்லும் ரோடுகளில் அரசு பள்ளிகள் இரண்டு உண்டு என்பதால் அங்கே பேருந்துக்குக் காத்திருக்கும் மாணவ மாணவிகள் அதிகம். அதனால் ஒருவரிடம் தகவல் இல்லையென்றால் இன்னொருவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மெல்ல பேச்சு கொடுத்தே தெரிந்துகொண்டனர் கொலையுண்ட மாணவனின் பள்ளி எது என்று..

கதிர் ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு ஸ்டேசனுக்கு விரைந்தார். இடையில் ராமுக்கு கூப்பிட்டு அலுவல்களை கவனிக்கச் சொல்லிவிட்டு ரிப்போர்ட்டை அலசிக்கொண்டிருந்தார்.

மாலை ஆறு மணிக்கு ராம் ஸ்டேசனுக்கு வந்துவிட்டார். உடன் கான்ஸ்டபிள்களும்.

இருவரும் அறிந்த தகவல்படி அவ்வாறு உடை மாற்றிய பள்ளி, சின்னப்பா மெட்ரிகுலேசன் ஸ்கூல். காந்திநகர், திருப்பூர். ஸ்டேசனிலிருந்து கிட்டத்தட்ட பத்து கி.மீ தொலைவில்..

ராம் சூன்யத்தைக் கலைத்து பேசினார்.

" கதிர், நாளைக்குக் காலையில அந்த ஸ்கூலுக்குப் போய் விசாரிச்சுடலாம். முதல்ல பையன் யாருனு தெரிஞ்சுட்டதுக்கப்பறம் கொலையாளி யாருனு நாம கவனிக்கணும்.."

சொல்லிவிட்டு சிகரெட் பற்ற வைத்தார் ராம்.. கதிர் மேஜை மேலிருந்த வெயிட்டை சுத்திக் கொண்டு ஏதோ யோசனையில் அமர்ந்துகொண்டிருந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஓடிவந்தார்..

" சார். முத்து நகர்ல ஒரு தென்னை மரத்துக்குப் பக்கத்தில அநாதையா ஒரு பைக் இருந்ததை நம்மாளுங்க பார்த்திருக்காங்க...

ராமுக்கும் கதிருக்கும் புன்னகை பூத்தது முகத்தில்.. அடுத்தநாள் பல தகவல்களைத் தரப்போகிறது என்பது அறியாமல் நம்பிக்கையோடு முத்துநகருக்குச் சென்றனர் இருவரும்..


பள்ளி தாளாலர் எழுந்து நின்று வரவேற்றார். மிகக்குறைந்த உயரம் கொண்டவராக இருந்தார். நெற்றியில் இட்டிருந்த குங்குமமும் அறையின் வாசனையும் அவர் ஒரு பக்திமான் என்பதை பறைசாற்றியது.. கொலையுண்ட மாணவன் அந்த பள்ளியில் படிப்பவன் என்பதால் சிறு கவலை அந்த தாளாலருக்கு எழுந்ததை இருவரும் கவனித்துக் கொண்டனர். உடனடியாக அவன் வகுப்பு ஆசிரியர் மூலம் விவரங்கள் கொண்டுவரப்பட்டது, சின்னப்பா ஸ்கூல் கோ எட்ஜுகேசன் ஸூகூல்.. இருபாலரும் படிக்கிறார்கள். பள்ளிக் கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன.. மாணவர்கள் எவரும் மாணவிகளிடம் பேசக்கூட கூடாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ராமும் கதிரும் தேநீர் அருந்தியபடி அந்த மாணவனின் விவரங்களை கவனித்துக் கொண்டிருந்தார்கள். மாணவன் பெயர் கார்த்திக்,., பன்னிரெண்டாவது படிக்கும் மாணவன். அங்கே விசாரித்தவரையிலும் மாணவன் மீது எந்த ஒரு புகாரும் இல்லை. வள்ளுவர் காலனி இருபத்தி மூன்றாம் வீதியில் அவனது வீடு இருக்கிறது. பெற்றோர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். பெரும் பணக்கார குடும்பம். தனியே வாழ்வை செலுத்தியவனாக இருந்திருக்கிறான் மாணவன் கார்த்திக்..

தேநீர் முடிந்ததும், " நாங்க வரோம் சார்.. கார்த்திகோட படிச்ச சில மாணவர்களிடம் மட்டும் விசாரணை நடத்தணும். அதுக்கு உங்க பர்மிசன் வேணும்.." ராம் முறையிட்டார்.

" தாராளமா,, ஒரு மாணவனைக் கொல்லும் அளவுக்கு அவன் என்ன செஞ்சிருப்பான்? எந்த ஒரு விசயத்திற்கும் கொலை ஒரு தீர்வாகாது. அதிலயும் வளரும் மாணவனைப் போய்..... " கண்ணீர் மல்க பேசியபோது வார்த்தைகள் வரவில்லை பள்ளியின் தாளாலருக்கு...

ராமும் கதிரும் கார்த்திக்கின் வகுப்பறை நோக்கிச் சென்றார்கள்.

" கார்த்திக் கொஞ்சம் அடாவடி பையன் தான் சார். பாதி நாளைக்கு மேல ஸ்கூலுக்கு வரமாட்டான். ஆனா படிப்பில பயங்கர கெட்டி, அந்த காரணத்தினாலயே அவன் தப்பிச்சு பனிரெண்டாம் வகுப்பு வந்தான். இல்லைன்னா அவன் எடுத்த லீவுக்கு பதினொன்னாம் வகுப்பிலையே தட்டிக்கழிச்சிருப்போம்.. என்னதான் இருந்தாலும் இப்படி கொலை ஆகிட்டான்கிறது பயங்கர ஆச்சரியம். " ஆசிரியருக்குண்டான மிரட்டலில் ஆசிரியர் பாலகிருஷ்ணன் வேதனைப் பட்டார்.

" கார்த்திக்கோட நெருங்கிப் பழகுற பசங்க பொண்ணுங்க யாராவது இருந்தா இப்ப விசாரிக்கணும்.. " ராம் மாணவர்களைப் பார்த்தவாறு பேசினார்.

" கண்டிப்பா, ஆனா நீங்க கீழ ரெஸ்ட் ரூம்ல விசாரிங்க ப்ளீஸ் " சொல்லிக் கொண்டே கார்த்திக்கின் நெருங்கிய நண்பர்கள் இருந்தால் வருமாறு அழைத்தார் ஆசிரியர் பாலகிருஷ்ணன்..

சில மாணவர்கள் மட்டும் வேதனை கலந்த பயத்தோடு ராமின் பின்னே சென்றார்கள் ரெஸ்ட் ரூமுக்கு..

குழப்பமும் வேதனையும் கலந்த சப்தம் வகுப்பறை முழுவதும் ஒலிக்க, பாலகிருஷ்ணன் மேஜையைக் குச்சியால் தட்டி அமைதி படுத்தினார்.

கார்த்திக்கின் முழு விபரங்களையும் சேகரித்தாலும் அது சாதாரண ஒரு மாணவனை விசாரிப்பது போலத்தான் இருந்தது.. ராமுக்கும் கதிருக்கும் பெருத்த ஏமாற்றம். அனைத்து மாணவர்களையும் வகுப்பறைக்குச் செல்ல அனுமதித்தார்...

" ராம், கார்த்திக் அடிக்கடி லீவு போடறான்னா அதுல ஏதோ ஒரு விசயம் இருக்கும்.. பசங்ககிட்ட கேட்டா, பயத்தில நடுங்கிட்டே ஒண்ணும் சொல்லமாட்டேங்கிறாங்க.. சம்பவம் நடந்த அன்னிக்கு ராஜுங்கிற பையன் மட்டும் அவன் கூட வெளியே போயிருக்கான். பட் வழியிலேயே வீடு இருக்கிறதால இறங்கிட்டான்.. நேத்திக்கு நாம் பார்த்த பைக் கார்த்திக்கோடதுதான். பட் ஏன் அவ்வளவு தூரம் தள்ளி இருக்குது? சம்திங் ராங். டு யூ ஹேவ் எனி அடியா? " கதிர் கேட்டான்.

" இல்லை கதிர், அவங்க அப்பா அம்மா இங்க இருந்தாவாது ஏதாவது கேட்கலாம். அவங்களுக்கு இன்பார்ம் பண்ணக்கூட நம்மகிட்ட முகவரி இல்லை. கார்த்திக் வீட்டுக்குப் போய்தான் ஏதாவது விபரம் கிடைக்குதான்னு பார்க்கணும். நம்ம சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம் இப்ப அங்கதான் இருக்கிறார். அநேகமா ஏன் வரலைன்னு தெரிஞ்சாலே அவன் சாவுக்கான முழுவிபரமும் தெரியும்... அது இருக்கட்டும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்தியே? உனக்கு ஏதாச்சும் தோணுதா? "

" ஸ்கூல் தினமும் நாலுமணிக்கு விடறாங்க. சில பசங்க ஐந்து மணிவரையிலும் இருந்துட்டு போகறாங்க. பி.எம் ரிப்போர்ட்படி கார்த்திக் இறந்தது மாலை ஏழு மணிக்கு.. இந்த ஸ்கூல்ல இருந்து அவங்க வீட்டுக்குப் போக கிட்டத்தட்ட அரைமணிநேரம் ஆகும். ராஜுவை அவன் அஞ்சு மணிக்கே அவன் வீட்ல ட்ராப் பண்ணியிருக்கான் கார்த்திக்.. அப்படீன்னா ஸ்பாட்டுக்குப் போக இருபது நிமிசம் பிடிக்கும். பட் வழி முத்துநகர் வழியில்லை.. ஜெயின் காலனி வழியாத்தான் போகணும். ஜெயின் காலணி வழியும் முத்துநகர் வீதியும் சந்திக்கிற இடத்திலதான் கார்த்திக் கொலை செய்யப்பட்டிருக்கான். ராஜூவை விட்டுட்டுப் போனபிறகு எங்கே போனான்? ஒன்றரை மணிநேரம் எங்க இருந்தான்? இப்ப இதுதான் கேள்வி.." தெரிந்தது இவ்வளவுதான் என்று நெற்றியைத் தேய்த்தான் கதிர்..

ரெஸ்ட் ரூமுக்கு வெளியே "மே ஐ கமின் சார்" என்ற குரல் கேட்க, இருவரும் திரும்பினார்கள்.

அங்கே ஒரு மாணவன் நின்றுகொண்டிருந்தான்.

" கமின், என்ன வேணும்? " கதிர் முதலில் கேட்டான்.

" சார் நான் கார்த்திக்கோட நண்பன். கார்த்திக் பத்தி உங்ககிட்ட பேசவந்தேன். " பவ்யமாய் சொன்னான் மாணவன். பதினெட்டை நெருங்கும் வயது அந்த மாணவனுக்கு. நல்ல நிறம். கண்களில் பயம் இல்லை. துடிப்பாக நின்றுகொண்டிருந்தான்..

" சொல்லுப்பா.. உனக்கு ஏதாவது தகவல் தெரியுமா? நீ அப்பவே ஏன் வரலை?" பீடிகை போட்டார் ராம்

" சார் எனக்கு அப்ப பயமா இருந்தது. அப்பறம் தகவல் தெரிஞ்சும் சொல்லாம இருந்தா பிரச்சனைன்னு சார்' சொன்னார். அதான் வந்தேன்."

" சரி சொல்லுப்பா... உனக்கு என்ன தெரியும்? கார்த்தி பத்தி உனக்குத் தெரிஞ்ச அத்தனையும் மறைக்காம சொல்லு,,

அந்த பையன் சொல்லச் சொல்ல இருவரும் விழிகளை ஆச்சரியத்திற்குக் கொண்டு சென்றார்கள்...


சார்! கார்த்திக் ஒரு ட்ரக் அடிக்ட். அவன் பாதிநாள் கஞ்சா சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்கே வரமாட்டான். இது எங்க வாத்தியாருக்கும் தெரியும். இந்த வருஷமே அவனை டிஸ்மிஸ் பண்ணப் போகிறதா பேசிட்டு இருந்தாங்க. அவனோட பேரண்ட்ஸ் இங்க இல்லாததால அவங்களோட போன் நம்பர் கேட்டிருந்தார் 'சார்... ஆனா அதுக்குள்ள அவனை யாரோ கொலை பண்ணீட்டாங்க " நண்பனை இழந்த சோகம் குரலில் தெரிய உண்மைகளை ஒப்பித்தான் அந்த மாணவன்..

ராமுக்கும் கதிருக்கும் ஆச்சரியமாக இருந்தது. கஞ்சா சாப்பிடும் வயதா அவனுக்கு? பள்ளி மாணவர்கள் எப்படியெல்லாம் கெட்டுவிட்டார்கள்...

மாணவன் தொடர்ந்தான்," முந்தாநாள் அவன் கஞ்சா வாங்கறத நான் பார்த்தேன் சார். "

" எங்கே?"

" ராகினி தியேட்டர் கிட்ட. ஒரு சேட் கடையில. நாமலாம் போனா கிடைக்காது சார். அதுக்கு ஒரு கோட்வேர்ட் வெச்சுருக்காங்க. "

" ஓ.. இப்ப அந்த வியாபாரமெல்லாம் நடக்குதா? சரி, அவன் என்னனு சொல்லி வாங்குவான்னு தெரியுமா? "

" கார்த்திக்க பார்த்தவுடனே அவங்க கொடுத்திடுவாங்க.. ஏன்னா அவன் கஸ்டமர்ங்கறதால. நாம போனா "பாக்கு கொடுங்க" அப்படீன்னு சொல்லி கேட்கணும் "

" இப்படி ஒரு கோட் வேடா? பாக்குனு சொன்னா கொடுத்திடுவாங்கலா? "

இல்லை சார். வெறும் பாக்கு கேட்டா 'நிஜாம் பாக்கு'தான் கொடுப்பாங்க. 'கருப்பட்டி வெள்ளைப் பாக்கு'னு கேட்கணும். ஒருடைம் என்னோட பிரண்ட் கூட்டிட்டுப் போனான். வெள்ளைப் பாக்குனு கேட்டதுக்கு அப்படீன்னா என்னனு சொன்னாங்க. அப்பறம் கார்த்திக் அனுப்பிச்சான்னு சொன்னதுக்கப்பறமாதான் கொடுத்தாங்க. கருப்பட்டி னு ஒரு சர்க்கரை அங்க விற்பாங்க. அதுக்குள்ளதான் கஞ்சா அடைச்சு வெச்சுருப்பாங்க. "

"இண்ட்ரஸ்டிங்.. உனக்கு பழக்கம் இருக்கா? "

" அய்யோ இல்லை சார். எங்கவீட்டுக்குத் தெரிஞ்சா அப்பறம் பின்னீடுவாங்க"

" சரி நீ க்ளாஸுக்குப் போ. வேறஏதாச்சும் சொல்றதா இருந்தா , இந்தா, இந்த நம்பருக்கு போன் பண்ணு." சொல்லிக் கொண்டே தனது விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான் கதிர்..

கேஸில் ஒரு முன்னேற்றம் தெரிந்தமையால் சந்தோச நெடி இருவருக்கும் அடித்தது..

பத்தாவது நிமிடத்தில் ராகினி தியேட்டர் அருகில் மாணவன் சொன்ன அந்த சேட் கடை இருந்தது. கடையில் பொருட்களே வித்தியாசமாக இருந்தது. போன் ரீசார்ஜ் கூப்பன்களும், மாவா, புகையிலை, பாக்கு வியாபாரமும், சின்ன பெட்டிக்கடைகுண்டான இனிப்பு வகைகளும் இருந்தன. சேட்டான் ஒருவன் அங்கே வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு வியாபாரம் செய்துகொண்டிருந்தான். கூட்டமில்லாது இருந்தது செளகரியமாக பட்டது இருவருக்கும்.

மெல்ல இருவரும் கடையை நெருங்கினார்கள்.

" சேட், பாக்கு இருக்கா? " கதிர் பூடகமாக கேட்டான்.

" என்னா பாக்கு சாப்?" தெரியாமல் நடந்துகொண்டான் சேட். பேச்சில் வட இந்திய வாடை தெரிந்தது. பேச்சில் மட்டுமல்ல, முகத்திலும் வட இந்திய வாசம் அற்புதமாய் தெரிந்தது.

" வெள்ளைப் பாக்கு பாய். கருப்பட்டி பாக்கு" என்று சொல்லிக் கொண்டே கண்ணடித்தான்.

" என்னா சொல்றீங்கோ சாப்?, அப்டி ஏதும் என்டே இல்லே " பொய்யை கண்களில் விரித்து சொன்னான்.

ராம் இடையே புகுந்து, " பாய், முந்தாநாள் வாங்கிட்டு போனானே கார்த்திக், அவனோட பிரண்ட்ஸ்தான் நாங்க..."

" ஓ. அடே, கார்த்தி பாயோட பிரண்ட்ஸா? எங்க கார்த்தி? ஆளே காணோம்?

" இப்ப ஸ்கூல்ல இருக்கான் பாய். நீ கொடு." அவசரப்படுத்தினான் ராம்..

" பொறுங்கோ " என்று உள்ளே ஒரு ரேக்கில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அந்த கருப்பட்டிகளை எடுத்தான்..

சதுரவடிவில் சாக்லேட் வர்ணத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுடன் இருந்தது. மெதுவாக அதைக் கையாண்டு ராமிடம் கொடுத்தான் சேட்... கைவிலங்குக்கு ஆதாரம் அந்த செயல் என்பதை அறியாமல் சிரித்த முகத்தோடு கொடுத்த சேட்டுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தான் ராம்..

கருப்பட்டியை உடைத்து கஞ்சா இருப்பதை உறுதி செய்துகொண்டு அந்த சேட்டை கைது செய்து ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றார்கள். தொழிலில் இத்தனை கேர்லஸாக இருந்தது நினைத்து வருந்தியபடியே ஸெல்லுக்குச் சென்றான் சேட்...

ஸ்டேசனில் சேட்டிடம் போலீஸ் அடியைக் காண்பித்தார்கள். ஆனால் கார்த்திக் அன்று வந்து போன விசயத்தைத் தவிர அவனுக்கு வேறேதும் தெரியவில்லை. கார்த்திக் சேட்டிடம் கஞ்சா வாங்கிச் சென்ற நேரம் மாலை ஐந்து முப்பது. அப்படிப் பார்த்தாலும் கொலையுண்ட நேரத்திற்கு கணக்கு உதைக்கிறது.... ஒரு கேஸைத் தேடிப் போய் இன்னொரு கேஸ் கிடைத்ததுதான் மிச்சம்... கார்த்திக்கை யார் கொலை செய்தார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பதில் இன்னும் எத்தனை நாளைக்குப் பிறகு கிடைக்குமோ?

ராம் வீட்டுக்குப் போய் நன்றாக யோசித்தான். அடுத்தமாதம் நடக்கவிருக்கும் கலியாணம் பற்றிய சிந்தனை இப்போது ஏதுமில்லை. கார்த்திக் கேஸ் சற்று சவாலாக இருப்பதாக உணர்ந்தான். மாணவர்கள் யாவரும் கொலை செய்யுமளவுக்கு அவன் நடந்துகொள்ளவுமில்லை. அதேசமயம் அவன் நெஞ்சில் காம்பஸால் குத்திய துளைகளும் இருந்திருக்கிறது. வண்டி வெகுதூரத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது,. அதுவும் தென்னை மரத்துக்கடியில் சட்டென தெரியாத வண்ணம்... கார்த்திக்கை சேட் கொலை செய்திருந்தால் இவ்வளவு கேஷுவலாக நமக்கு கஞ்சா எடுத்துக் கொடுக்க வாய்ப்பில்லையே! அதிலும் அவன் கொலை செய்யவேண்டிய நிர்பந்தமென்ன?

மண்டையை நன்றாக குழப்பிப் பார்த்தும் விடை கிடைக்கவில்லை. ராமுக்கு ஏற்கனவே முடியின் அடர்த்தி குறைவு... இப்படி யோசித்து யோசித்து இன்னும் குறைந்துவிடும் போலிருக்கிறதே??

சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் கார்த்திக்கின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கே கார்த்திக் சம்பந்தமான டைரிகளும் காகிதங்களும் கிடைத்திருக்கின்றன. ஆனால் குறிப்பிடும்படி ஏதுமில்லையே! என்ன செய்ய? ராம் நெற்றியை நெருடிக்கொண்டிருக்கும்போதே போன் அடித்தது...

எதிர்முனையில் கதிர்..

" ராம், கார்த்திக் ஏதாவது காதல்கீதல்னு வலையில விழுந்திருப்பானா?" கொக்கி போட்டான் கதிர்

" கதிர். இது வேடிக்கையான கேள்வி, அதுக்கும் கேஸுக்கும் என்ன சம்பந்தமா இருக்குமுனு நினைக்கிற? தவிர, கஞ்சா ஊதிட்டு வீட்ல படுத்திட்டு இருக்கிறவன எவ லவ் பண்ணுவா?" கேலியாக சிரித்தார் ராம்.

" அட அப்படியும் யோசிச்சுப் பாரப்பா... சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் எடுத்துட்டு வந்த காகிதங்கள்ல சில கவிதைகளும் இருந்திருக்கு... அதுவும் காதல் கவிதைகள்... ஒரு கஞ்சா அடிமை கவிதை எழுத அவசியமென்ன? "

" கதிர், இப்பல்லாம் கவிதை எழுதறது யார்வேணும்னாலும் செய்யறாங்க, இதுல கஞ்சா ஊதினா கற்பனை குதிரை ரொம்ப ஓடும். அதனால கவிதை கிவிதையெல்லாம் எழுதியிருப்பான். இதைப்போய் பெரிசா எடுத்துக்குவாங்களா? சரி எப்படியிருந்தாலும் நாளைக்கு அப்படி ஒரு ஏங்கிலும் இருக்கிறதைப் பார்ப்போம்..."

" அப்படி வா வழிக்கு.. அவன் படிச்சது ஒரு கோ எட் ஸ்கூல். அதிலயும் கார்த்திக் பெரிய இடத்துப் பையன். நிச்சயமா காதல் இருக்க வாய்ப்பு இருக்கு.. காதலிகிட்ட தப்பித் தவறியாவது ஏதாவது ஒரு உறுப்படியான தகவல் கிடைக்க வாய்ப்பிருக்கு... அந்த காதல் கவிதைகளைப் படிச்சுப் பார்ப்போம்.. க்ளூ கிடைக்குதான்னு பார்ப்போம்.. "

" நீ சொல்றது சரிதான் கதிர்.. நம்மகிட்ட கஞ்சா பத்தி சொன்ன அந்த ஸ்டூடண்ட், காதலைப் பத்தி சொல்லலையே! அங்க இடிக்குதே?"

" ஒருவேளை தெரியாம இருந்திருக்கலாம் "

" இருக்கலாம். நான் நாளைக்குப் பார்க்கிறேன். இப்போதைக்கு தூங்கப் போறேன் பா.. குட் நைட்" சொல்லிக் கொண்டே கொட்டாவி விட்டான்..

" குட்நைட் " செல்லை அணைத்தான் ராம். ஏதோ ஒரு வெற்றிக்கனி தன் மடி மீது விழுந்த சுகத்தில் மெல்ல நித்திரையில் ஆழ்ந்தான்..

காதல் கவிதைகள் கொலைக்குப் பாதை வகுக்குமா? அது நாளைக்குத்தானே தெரியும்


காலை நேரத்திலேயே இன்ஸ்பெக்டர் ராம் ஸ்டேசனுக்கு வந்திறங்கினார்.. சில ஸ்டேசன் வேலைகளை கவனித்தவாறே அவர் கண்களில் பட்டது சில காகிதங்கள்... அதனுள் கார்த்திக் எழுதிய காதல் கவிதைகள்..

அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்தார்.. ஒன்றும் விளங்காமல்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கதிர் வந்து சேர்ந்தான்.

கவிதைகளை எடுத்துப் படித்துப் பார்த்தான். அவனுக்கும் விளங்கவில்லை. வெறும் காதல் கவிதைகள் தான் என்றாலும் அவன் காதல் வயப்பட்டுதான் எழுதியிருக்கிறான் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார்கள்.. க்ளூ ஏதும் கிடைக்கவில்லை. அல்லது கிடைக்கும்படி படிக்கவில்லை.

" கதிர், எனக்கென்னவோ இது ஒர்க்அவுட் ஆகும்னு தோணலை. நாமவேணும்னா இன்னொரு முறை அவன் வீட்டுக்குப் போய் பார்க்கலாம்.. பரமசிவம், அங்க சுத்தமா அலசினீங்களா? " பரமசிவத்தைப் பார்த்துக் கேட்டார் ராம்.

" நல்லா பார்த்துட்டேன் சார். வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே ஒருவித வாடை அடிக்குது. அவ்வளவு பெரிய வீட்டுக்கு வாட்ச் மேன் கூட கிடையாது. தனி ஆளா இருக்கான். வீடு முழுக்க அவனோட போட்டோக்கள் போஸ்டர்கள்தான் இருக்கு.. வீட்டுக்கு வெளியே தண்ணி பாட்டில்கள் நிறைய கிடக்கு.. ஒரு ஆயா மட்டும் தினமும் வந்து சுத்தம் பண்ணிட்டு போறாங்க, அவங்களுக்கும் பேசவராது. அதனால சரியான விசாரணை பண்ணமுடியலை. திரும்பவும் ஒருமுறை போய்ப்பார்க்கலாம் " கடகடவென சொன்னார் பரமசிவம்.

" கதிர், கமான், அங்க போய் பார்ப்போம்.. "

இருவரும் கிளம்பினர் கார்த்திக்கின் வீட்டிற்கு,

வள்ளுவர் காலனி முதல் வீதிமுதல் 23ம் வீதி வரை அமைதியாக உறங்கும் பங்களாக்களே மிகுந்து காணப்பட்டன. சாலையில் ஜீப் செல்லும் சத்தம் மட்டுமே கேட்டது. சுற்றிலும் மரங்கள் நெடுநெடுவென நிற்க, ஒரு வனத்திற்குள் சென்ற உணர்வு ஏற்பட்டது இருவருக்கும்.

வாசலில் ஜீப்பை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றனர் இருவரும்.

வீடு பங்களாவாக காட்சியளித்தது. பணக்கார களை முகப்பில் அலங்காரங்களாகத் தொங்கியது. வீட்டிற்கு இரு கதவுகள், ஒன்று பெரியதாக, கார் நிறுத்த, இன்னொன்று நேரெதிரே வாசலுக்கு அருகே, வீட்டைச் சுற்றிலும் குட்டை குட்டையாக மரங்கள், மலர்ச் செடிகள், ஒரு ஓரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் மதுபான பாட்டில்கள் என பலவும் சுற்றிலு கிடந்தன. வீட்டினுள் ஆசாரம் முதலில், பின்னர் இரு அறைகள். நேரெதிரே இறுதியில் சமையலறை, அதற்கு அருகே இரு பெட்ரூம்கள், மேலே மாடி,

வீடு முழுக்க, பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன, பாதிக்கும் மேலே கார்த்திக்கின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. பிரேம்கள் தொங்கிக் கொண்டிருந்தன.

கார்த்திக்கின் அறையில் கணிணியும் டி.வியும் இருந்தது. அங்கேயே ஒரு பெட்டும், செல்ஃபில் சில புத்தகங்களும் அங்கங்கே சிதறிக்கிடந்தவாறு துணிகளும் இருந்தன. கஞ்சா அடிமை என்றாலும் அறையை வெகு சுத்தமாகவே வைத்திருக்கிறான் கார்த்திக்.

ராம், பரமசிவம், கதிர், ஆகிய மூவரும் புத்தகங்களையும் துணிமணிகளையும் கலைத்துக் கொண்டிருந்தார்கள். ஏதேனும் தகவல் கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கையில்.. கூடுமானவரையில் பரமசிவம் தேடியிருந்த போதிலும் தேடல்வேட்டை தொடர்ந்தது.

மதியம் ஒருமணி வரையிலும் தேடிக் களைத்திருந்தார்கள். இடையிடையே ஸ்டேசனிலிருந்து தகவல்கள், ஏகப்பட்ட பெண்டிங் வேலைகள் என கழுத்தைப் பிடித்திக்கொண்டிருந்தது வேலைகள்... சிறிது நேரத்திற்கெல்லாம் மூவரும் அயர்ந்துபோய் பெட்டில் அமர்ந்து கொண்டார்கள்.. கதிர் மட்டும் படுத்துக் கொண்டான்...

அவனுக்கு மட்டும் ஏதோ அழுந்தியது... மெத்தைக்கு அடியில் ஏதேனும் இருக்கவேண்டும்.. உடனே மற்ற இருவரையும் எழுந்திருக்கச் சொல்லிவிட்ட பெட்டை இழுத்து கீழே தள்ளினான்..

அங்கே.........

வெள்ளைப் பொட்டலங்கள் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்தது... ஒரு கடத்தலே நடைபெற்றிருக்கிறதா?

அத்தனையும் கஞ்சாக்கள். வெறும் பாலிதின் கவர்களில் அடைக்கப்பட்டிருந்தமையால் அதன் மூலம் எந்த ஒரு துப்பும் கிடைப்பதாக இல்லை. ஆனால் கஞ்சாக்கவர்கள் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்தது.

அது ஒரு பெண் எழுதிய காதல் கடிதங்கள்..

" அன்பு கார்த்தி,

கஞ்சா சாப்பிடுவதை நிறுத்திவிடு, எனது மூச்சை நீ தின்பதாக உணருகிறேன். நம் காதல் உன்னதமானது. உன் உடலுக்கு ஒவ்வொரு நிமிடமும் கஞ்சாக்கள் சேதாரம். நான் உன் உடலையும் சேர்த்துத்தானே காதலிக்கிறேன். நமது வகுப்பில் நம் காதல் அரசல் புரசலாகத் தென்பட்டுவிட்டது. தோழிகள் கிண்டல் செய்கிறார்கள். அவர்களை நான் காண்பிக்கிறேன். மிரட்டி வை.. இப்பொழுதெல்லாம் ஏன் கோவிலுக்கு வருவதில்லை.? சீக்கிரமே வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போகிறாய்? உடனடியாக கடிதம் எழுதி எனது நோட்டுக்குள் வைத்து என்னிடம் தரவும்..

இப்படிக்கு
உனது
நட்பு.

" கதிர், கையெழுத்தை வெச்சு கண்டுபிடச்சுடலாம். இந்த ரேஞ்சில நிறைய கடிதம் இருக்கு. எல்லாமே நோட் பேப்பர்ல எழுதியிருக்கா. அதோட மட்டுமில்லை கீழ அவன் கவிதையும் எழுதியிருக்கான். அதைக் கவனி. ஆனா இது உதவும்னு நினைக்கிறியா? "

" நிச்சயம் உதவும் ராம். காதலி யார்னு தெரிஞ்சா அவகிட்ட பல விசயங்கள் கிடைக்கலாம். ஒருவேளை கிடைக்காட்டி நமக்கு அதிர்ஷ்டம் இல்லைனுதான் சொல்லணும். அந்த கவிதை என்ன ராம்? "

" நிறைய இருக்கு கதிர். ஆனா அந்த நேரத்தைல எழுதின கவிதைகள் அல்லனு நினைக்கிறேன். "

"எப்படி சொல்ற? "

" கடிதம் எழுதப்பட்டது பள்ளிக்கூடத்தில. அந்த ஸ்கூல் விதிப்படி இங்க் பேனா மட்டுமே உபயோகிக்கணும். மற்றவைகள் பயனில்லை அங்கே. கவிதை எழுதப்பட்டது சாதாரண ப்ளூ பேனாவில், இங்க் பேனா அல்ல. "

" ஒருவேளை சப்ஸ்டிடியூட் பேனா கொண்டு போயிருக்கலாம் இல்லையா? "

" இருக்கலாம். ஆனா எழுத்துக்கள்ல ஒரு நடுக்கம் தெரியுது. அநேகமா கஞ்சா சாப்பிட்டுட்டு எழுதியிருக்கணும்... "

" அப்படியே இருக்கட்டும்... நீ கவிதைகளைப் படி... பார்ப்போம்.. " ராம் படிக்க கதிர் கேட்டுக் கொண்டிருந்தான்..

ஓரிடத்தில், கதிர் நிறுத்தச் சொல்ல, அந்த கவிதையை மீண்டும் வாசிக்கச் சொன்னான்..

ராம் மீண்டும் வாசித்தான்...

நழுவிடாது என் காதல்
நீ வைத்திரு
நழுவாதிருக்கும் உன் ஆடி போல

" ராம், கவனிச்சியா? 'நழுவாதிருக்கும் உன் ஆடி' அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா? "

" மே பீ ஸ்பெக்ஸ் ? "

" ரைட். அப்படீன்னா அவனோட காதலி ஒரு சோடாப்புட்டி கண்ணாடியா இருக்கணும்.. உடனே அந்த ஸ்கூலுக்குப் போய் கையெழுத்தையும் கண்ணாடி போட்ட பெண்ணையும் வெச்சு கண்டுபிடி... "

வீட்டை விட்டு கிளம்பினர் இருவரும்... சுமார் முக்கால் மணிநேரத்தில் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். ராமுக்கு இந்த வழி தேவையில்லாத வழி என்று பட்டது. ஆனால் கதிர் சற்று நம்பிக்கையோடு இருந்தான்.

வகுப்பு வாத்தியாரே அன்றும் இருந்தார். பாலகிருஷ்ணன்.. மெல்ல ஜாடையில் யாருக்கும் தெரியாமல் இரு கண்ணாடி அணிந்த பெண்கள் அழைக்கப்பட்டனர். இருவரிடமும் கடிதத்தைக் காண்பித்ததில் ஒருத்தியின் முகம் மட்டும் வாடிப்போனது.


" சொல்லு பாவனா, அன்னிக்கு நீ ஏன் விசாரணைக்கு வரலை? " ராம் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தான்.

பாவனா அழுத விழிகளோடு நின்றுகொண்டிருந்தாள். அவள் சற்றூ பதட்டத்தோடு காணப்பட்டாள். குரல் நன்றாக உடைந்தது. பயம் அவள் கண்களில் எட்டிப் பார்த்து சிரித்தது.

பதினெட்டு வயது இளங்குமரி பாவனா. பெண்மைக்குரிய அத்தனை குணங்களும் அழகுற அமைந்திருந்தது. மாநிறம். கண்கள் உருண்டையாக விழி பிதுங்கிடுமோ எனுமளவுக்கு விரிந்திருந்தது. உதடுகளில் சாயம் கொப்பளித்திருந்தது.

பயத்தை விழுங்கமுயற்ச்சித்து சொன்னாள், " பொண்ணூங்க யாரும் பசங்ககிட்ட பேசக்கூடாது. அது ரூல்ஸ், அதான் நானும் எழுந்து போனா அது பிரச்சனையாக இருக்குமுனு நெனச்சேன். "

" பாவனா, அழாதே! பயப்படாதே! உன்னோட காதலந்தான் கார்த்திக்கினு முடிவாயிடுச்சு. அவன் எப்படி இறந்தான்னு விசாரிக்கத்தான் உன்னைக் கூப்பிட்டோம். கஞ்சா சாப்பிடற ஒருத்தனைப் போய் நீ காதல் செஞ்சிருக்கியே? " கேவலப் பார்வையில் கேட்டான் கதிர்.

" சார், நாங்க இரண்டு வருசமா காதலிச்சோம். அப்பெல்லாம் அவன் அடிக்ட் கிடையாது. இடையிலெ தான் இப்படி ஆகிட்டான் எப்படியாவது திருத்திடலாம்னு நெனச்சேன். முடியலை. அவன் எங்க வீட்டுக்கு பக்கதில இருக்கிற கோவிலுக்கு அடிக்கடி வருவான். அங்க தான் சந்திப்போம்... ஸ்கூல்ல இருக்கிற யாருக்கும் எங்க லவ் தெரியாது. ஒவ்வொரு...... " பேசிக்கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்தான் ராம்..

" இப்ப எங்களுக்கு அது தேவையில்லை. கார்த்திக் பத்தி ஏதாவது தகவல் உனக்குத் தெரியுமா? அவன் கஞ்சா மட்டும்தானா? இல்லை வேற ஏதாவது செய்யறானா? உன்கிட்ட எப்படியும் சொல்லியிருப்பானே, கோவிலுக்கு அவன் எப்படி வருவான்? எப்போ போவான்? அவனுக்கு யாராவது எதிரிங்க இருக்காங்களா? அப்படி ஏதாவது உன்கிட்ட சொன்னானா? உங்க வீட்டுக்கு உன்னோட காதல் தெரியுமா? வீட்டுக்கு வரவா? "

கேள்விகளைக் கொட்டினார்... புதிய பதில் ஏதும் கிடைக்கவில்லை. பாவனா கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வரவும் வகுப்புக்குச் செல்ல அனுமதித்தார்கள்...

" ராம், இந்த பொண்ணு ரொம்ப பயப்படறா.. "

" பின்னே? வெளிய தெரிஞ்சா பிரச்சனையாகும்ல"

" அப்பறம் எதுக்கும் லவ்வினாளாம்? நீ என்ன நினைக்கிற? "

"உன்னோட இந்த கோணத்தில கேஸ் கோணலா போறதப் பத்தி நினைச்சுட்டு இருக்கேன். "

" சரி விடு ராம்.. வேறெ ஏதாச்சும் க்ளூ கிடைக்குமான்னு பார்ப்போம்..."

பள்ளியை விட்டு அகன்றார்கள். புதிய தகவல்கள் கிடைத்த சந்தோசம் காலையில் இருந்தது. அது மாலை வரை நீடிக்கவில்லை. கண்களில் நீர் திரள அழுதுகொண்டே நிற்கும் பாவனாதான் கண்முன்னே தெரிந்தாள். பாவம் அந்தப் பெண்..

இரவு நேரத்தில் கொஞ்சம் யோசனைகள் பெருகும். கொலை நடந்து ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் கொலையாளி எங்கே இருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க இயலாத நிலையில் தூக்கமின்றி தவித்தார்கள் இருவரும்...

டெலிபோன் அலறியது.. நேற்றைக்கும் இதே நேரத்தில்தான் அலறியது.... அதே கதிர்தான்

எடுத்தார் ராம்.

" ராம், நாம நாளைக்கு கொலை நடந்த இடத்துக்குப் போகலாம். "

" ஏன் கதிர்?" தூக்கத்தில் கேட்டார் ராம்

" எனக்கு ஒரு யோசனை தான்... நாளைக்கு வா சொல்றேனே.... "

இதென்ன பீடிகை...? ஏற்கனவே குழம்பிக்கொண்டிருந்த மூளையை மீண்டும் குழப்புகிறானே?



முத்து நகரின் முதல் வீதியில் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். கொலை நடந்த இடத்தில் கிடைத்த ஆவணங்கள் ஏதும் உதவாத நிலையில் கதிர் ஏன் இங்கே வரச்சொன்னான்?

" என்ன கதிர்? என்ன யோசனை?"

" ராம், காந்திநகர்ல இருக்கிற ஸ்கூல் முடிஞ்சு எந்த வழியா வந்தாலும் கார்த்திக்கோட வீட்டுக்குப் போக ஜெயின் காலனி வழியாதானே போகணும்? அதாவது கார்னரைத் தொட்டுட்டுப் போகும் அந்த வழியில்தானே? " வீதியைக் காண்பித்தான் கதிர்,

" ஆமாம்... "

" அப்படீன்னா, முத்து நகர் முதல்வீதியில இவ்வளவு தூரம் இவன் ஏன் வரணும்? ஒருவேளை முத்துநகர்வழியா வந்திருக்கலாம் இல்லையா? அவனோட வண்டியும் இதே வீதியிலதானே கண்டெடுக்கப்பட்டிருக்கு? "

" ஸூர். ஆனா ஏன் வந்தான்னு எப்படி கண்டுபிடிக்க? "

" அவனோட நண்பர்கள் வீட்டுக்கு வந்திருக்கலாம். ஸ்கூல்ல சொல்லி முத்து நகர் பகுதியில இருக்கிற மாணவர்கள்/மாணவிகள் லிஸ்ட் ஏற்பாடு பண்ணுவோம். அதுல மொத்தம் எத்தனை பேரு கார்த்திக் உடன் படிச்சவங்கன்னு பில்டர் பண்ணுவோம். அவங்க எல்லார் வீட்டுக்கும் போய்ப் பார்க்கலாம். "

"குட் ஆனா இன்னொன்னு, பில்டர் பண்ணாம எல்லார் வீட்லயும் நாம பார்க்கலாம்.. ஏன்னா நாம விசாரிச்சது அவன் படிச்ச வகுப்பு மாணவர்களோட மட்டும் தான். அதுக்கு மேலயும் இருக்கலாம்.... "

" ரைட் .

" நம்ம பரமசிவத்தை உடனே ஸ்கூல்லுக்குப் போகச் சொல்லுவோம். எனக்கு ஒரு சின்ன வேலை ஸ்டேசன்ல இருக்கு, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ,,, என்ன சரியா? " ராம் கட்டளையிட,

இருவரும் கிளம்பினார்கள்...

மதியம் மூன்று மணி,

பரமசிவத்திடம் வாங்கிய லிஸ்ட் படி முத்துநகரில் மொத்தம் படிக்கும் 48 மாணவர்களில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பதினைந்து பேரை முதலில் விசாரிப்பதாக முடிவெடுத்தார்கள்...

போலீஸ் டீம் ஐந்து பேர் தனித்தனியாக பிரிந்து கார்த்திக்கின் புகைப்படத்தை வைத்து விசாரணை துவங்கினார்கள். நேரம் மாலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.

ராமின் செல் அலறியது. திரையில் கான்ஸ்டபில் செல்வம்

" சார், பால்ராஜ்னு ஒருத்தன் வீட்ல இருக்கேன். அவன் கார்த்திக்கை தெரிஞ்சவனாம். அட்ரஸ் நம்பர் 48, முத்துநகர் மெயின்ரோடு, திருப்பூர்.. நீங்க வாங்க,"

ராம் வண்டியை உசுப்பி கிளம்பினான். அடுத்த ஐந்தாம் நிமிடத்தில் பால்ராஜின் வீட்டில்..

" சொல்லு பால்ராஜ், உன் வீட்டுக்கு கார்த்திக் வருவானா? எப்படி பழக்கம்? " முரட்டுத்தனத்தோடு கேள்விகளை ஆரம்பித்தார் ராம்

பால்ராஜ் நல்ல பருமனாக இருந்தான். முகத்தில் அம்மை வந்து தழும்பு இருந்தது. கண்கள் இருக்குமிடம் தெரியாமலும், உதடு புகைப்பழக்கத்தால் கருத்தும் இருந்தது. வீட்டில் இருந்தபடியால் லுங்கி அணிந்திருந்தான். அவனது உடலை மீறி வயறு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. பனிரெண்டாம் வகுப்பு மாணவனைப் போலவே அல்லாமல் இருந்தான். இடதுகையில் ரிஸ்டுக்கு கீழே கட்டு போட்டிருந்தான். அவனது பெற்றோர்களும் என்ன ஏதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு பால்ராஜின் பின்னே நின்றார்கள்.

" சார்,. கார்த்திக் எங்கவீட்டுக்கு எப்பவாச்சும்தான் வருவான்.. சம்பவம் நடந்த அன்னிக்கி அவன் வீட்டுக்கு வரலை சார். " பவ்யமாய் சொன்னான் பால்ராஜ்..

" ஓஹோ... " என்றவர்,

சில பார்மல் கேள்விகளைக் கேட்டுவிட்டு வெளியேறும் போது கேட்டார்

" கையில எப்படி கட்டு வந்தது? "

" பைக்ல இருந்து விழுந்துட்டேன் சார்... " சொன்னவன் காலில் ஒரு கட்டு போட்டிருந்ததையும் காட்டினான்...

புன்னகைத்தவாறே ஜீப்பை உயிர்ப்பித்தார் ராம்...

பால்ராஜ்..... ஏதாவது மறைக்கிறாயா?

" கார்த்திக் குனு ஒரு பையன் இதோ பாருங்க இந்த போட்டோ... ஒருவாரத்துக்கு முன்னாடி முத்துநகர் முதல்வீதியில செத்துக் கிடந்திருக்கான், நீங்க பார்த்திருக்கீங்களா? " கதிர் ஒருவீட்டின் முகப்பில் நின்று விசாரித்துக் கொண்டிருந்தான்.

" ஓ.. இவனா? அடிக்கடி இந்த ரோட்ல வருவானே " ஆர்வமாய் சொன்னாள் சின்னப்பா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி. பார்ப்பதற்கு சிறுவயது சினேகா போல இருந்தாள்.. உதட்டில் பொய்யை அடக்கத் தெரியாத புன்னகை நெளிந்தது.

இத்தனை நேரமாய் எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில் அலுத்துப் போயிருந்த கதிருக்கு இது புது உற்சாகத்தைக் கொடுத்தது.

" சாயங்காலமானாதான் வருவான். எங்க ஸ்கூல்லதான் படிக்கிறான். என்னோட தோழியை அவங்கவீட்டுக்கு ட்ராப் பண்ணிவிடறதுக்காகவே வருவான்... "

" உங்க ஸ்கூலுக்கு நீ எந்த வழியா போவே? " கதிர் வீட்டினுள் நுழைந்துகொண்டே கேட்டான்

" ஜெயின் காலனி வழியாதான் போவேன். " இன்னொரு வழியும் இருக்கு. முத்து நகர்ல இருந்து பஸ்ஸ்டாண்ட் வழியா அவினாசி ரோட்டைத் தாண்டி காந்திநகர்க்கு போய்ட்லாம்.ஆனா எனக்கு பஸ் ஜெயின் காலனியிலதான் இருக்கு. தினமும் அந்த வழியாதான் இவனும் வருவான். " நடுக்கமில்லாமல் பேசினாள் அவள்.

" அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா? "

" அவன் என்னோட பிரண்டு தான்.. எங்க வீட்டைத் தாண்டிதான் அவங்க வீடு... முத்து நகர் முதல் வீதி ஆரம்பத்தில இருக்கு அவளோட வீடு. "

" கார்த்திக் ஏன் அவளை தினமும் கொண்டு வந்து விட்டுட்டு போறான்? அவன் இறந்த அன்னிக்கி ரெண்டுபேரும் வந்ததைப் பார்த்தீயா? இந்த ரெண்டு பேருக்கும் ஏதாவது?...." இழுத்தான்.

" ஆமா. அன்னிக்கு சாயங்காலம் ஆறு மணி இல்லைன்னா ஆறேகாலுக்கு வந்து அவளை ட்ராப் பண்ணினான்... அவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் "

திடுக்கிட்டான்... அப்படியென்றால் அது பாவனாவா? ஆனால் பாவனா வீடு காந்திநகருக்குப் பின்னாடியல்லவா இருக்கிறது.? இதென்ன குழப்பம்?

" பேரென்ன? அவ எப்படி இருப்பா? குழப்ப ரேகைகளைத் துடைத்தெறிய கேள்வி கேட்டான்...

" அவ பேரு ஸ்ருதி. கண்ணாடி போட்டிருப்பா. பதினொன்னாவது படிக்கிறா.. நேத்திக்குக் கூட அவளைப் பார்த்தேன்.. பயமா இருக்கு, என்னை விசாரிப்பாங்களோ அப்படீன்னு சொன்னா.. ஆனா கொலை பண்ற அளவுக்கு அவகிட்ட எந்த ஒரு விபரீத விசயமும் இல்லை.. "

" அதை விசாரிக்க விதத்தில விசாரிச்ச தெரிஞ்சு போய்டும்... அவளோட அட்ரஸ் கொடுக்கமுடியுமா? "

முகவரி குறித்துக் கொண்டான்..

இத்தனைக்கும் காரணம் இந்த புதுக் காதலியா? அவளும் கண்ணாடி அணிந்திருப்பாளா? அப்படியென்றால் கவிதை பாவனாவுக்கா ஸ்ருதிக்கா? டபுள் கேம் ஆடியிருக்கிறானா இந்த கஞ்சா காதலன்?

ராம் லைனில் இருந்தார்...

" ராம் இங்க புதுக் காதலி கிடைச்சிருக்கா? " துள்ளலாக சொன்னான் கதிர்

" விவரமா சொல்லு "

சொன்னான்....

இந்த விசயம் எங்கே செல்கிறது? யார் கொலையாளி? பால்ராஜா? ஸ்ருதியா? இல்லை வேறு யாராவது ஒருவரா?


" உண்மையைச் சொன்னா ஒண்ணும் செய்யமாட்டோம்// அவனை என்ன பண்ண? " மிரட்டினார் இன்ஸ்பெக்டர் ராம். ஸ்ருதி என்ற அழகிய பதுமை கண்களில் நீர் வடிய, அதனோடு இணைந்து அவளது பெற்றோர்களும்... கைகளில் புத்தகங்களோடு மேக்கப் செய்த முகத்தோடு நின்றுகொண்டிருந்தாள் ஸ்ருதி..

" ஸ்ருதி, அவன் உன்னை இங்கே வந்து விட்டுட்டுப் போனதா உன்னோட பிரண்டு சொன்னா.. அதுவும் ஆறேகாலுக்கு அவ பார்த்திருக்கா,, அப்படி இப்படியும் பார்த்தா, ஆறு முப்பது இல்லை, ஆறே முக்காலுக்கு நீ அவனை கொன்றிருக்கே? ரைட்? உடன் இணைந்து மிரட்டினான் கதிர்...

" சார் எங்க பொண்ணூ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல சார்.. அன்னிக்கி எப்பவும் போல எங்கவீட்டுக்கு வந்திட்டா, ஏழு மணிக்கு ட்யூசன் இருக்கிறதால வந்தவுடனே கிளம்பிப் போய்டுவா... நீங்க வேணும்னா அந்த ட்யூசன் செண்டர்ல கேட்டுப் பாருங்க... வேற யாரோ கொன்னுட்டு எங்க பொண்ணுமேல பழி போடறீங்களே? என்று விசும்பிக் கொண்டே சொன்ன ஸ்ருதியின் தாயார், மகளை நோக்கி, " ஏண்டி, இந்த காதல் கீதல்லாம் வேண்டாம்னு சொன்னேனே? இப்ப பாரு, எவ்வளவு பிரச்சனை? " என்றவாறே அடிக்கச் சென்றாள்...

ராம் ட்யூசன் முகவரியில் விசாரித்தார்... அன்றைய தினம் ஆறே முக்காலுக்கு ஸ்ருதி ஆஜராயிருக்கிறாள்..... அத்தனை மாணவர்களும் ஒத்துக் கொண்டார்கள்...

கேஸ் முடிவு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் போனதை எண்ணி வருத்தமுற்றார்கள்..

நேரே பால்ராஜிடம் ஒரு விசாரணை நடத்த கிளம்பினார்கள்... இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது..

பால்ராஜ் வீடு..

பால்ராஜ் எங்கேயே வெளியே சென்றிருந்தான். அவனது பெற்றோர்கள் பயம் கலந்த மரியாதை கொடுத்தார்கள். கிட்டத்தட்ட தூங்கச் செல்ல ஆயத்தமான நிலையில் போலீஸ்காரர்கள் வந்தால், தூக்கம்தான் வருமா? பால்ராஜ் யாரோ ஒரு நண்பனின் வீட்டுக்கு சென்றிருப்பதாக அறிந்தார்கள்.

ராம் பால்ராஜின் பெற்றோரிடம் விசாரணையைத் துவக்கினான்.


" உங்க பேரு? "

" ஞானசேகருங்க சார் "

" அன்னிக்கு உங்க பையன் எங்கயாவது போனானா? "

"இல்லை சார். இங்கயேதான் இருந்தான். "

" பையனை எந்த அப்பாதான் காட்டிக் கொடுப்பார்? "சொல்லி முடிப்பதற்குள்,

" இல்லைங்க சார். உண்மையத்தாங்க சொல்றேன். கார்த்திக்கோட அவ்வளவு பழக்கமில்லை பால்ராஜுக்கு... " குறுக்கே சொன்னார் ஞானசேகர்.

" உங்க பையனுக்கு காயம் எப்படி வந்தது? "

" ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கீழே விழுந்து எந்திருச்சான். உடனே கட்டு போட்டோம்.. பெரிய கட்டா முதல்ல போட்டிருந்தான் அப்பறம் போனவாரம் தான் கட்டைப் பிரிச்சு சின்னதா சுத்தினான்.. "

" அதாவது கார்த்திக்கை கொல்லும் போது ஏற்பட்ட தகறாருல கீழ விழுந்துட்டானா? "

" இல்லைங்க சார்... கட்டு போடறதுக்காக போன ஆஸ்பத்திரி ரசீது இன்னமும் இருக்கு. அதோட தேதியைப் பாருங்க. "

சொல்லிவிட்டு ரசீதை எடுக்கச் சென்றார் ஞான சேகர்...

ரசீதை கவனித்த ராம், அது உண்மைதான் என்று புரிந்துகொண்டார்.... அப்படியென்றால் பால்ராஜின் மேல் வைத்திருக்கும் அழுத்தமான கண்ணை சற்றே குறைக்கவேண்டியதுதான்...

ஞான சேகர் தொடர்ந்தார், " சார், நேரத்துக்கெல்லாம் வந்திடுவான் எங்க பையன்.. கட்டு போட்டிருக்கிறதால அவனால வண்டி ஓட்ட முடியாது. இங்கிருந்து முத்து நகர் முதல் வீதிக்குப் நடந்து போகவே கிட்டத்தட்ட அரைமணிநேரம் ஆகும்.. வண்டியில போயிருந்தா பத்து பதினைஞ்சு நிமிசம் ஆகியிருக்கும்... பால்ராஜ் இருக்கிற கண்டிசனுக்கு ஓடிப் போய் வந்தா கூட ஒருமணிநேரம் ஆகிடும்... ஆனா அவன் எங்கயுமே போகலையே? "

சற்றே யோசித்தவாறே " சரி... " என்ற ராம், கிளம்பினார் வீட்டுக்கு....

மனதில் ஏதோ ஒன்று சிக்கியது.......... அது ஞானசேகரின் வார்த்தை..... ஆம்.. அப்படித்தான் போகவேண்டும்.... பார்ப்போம்....

கதிரிடம் எந்த ஒரு விசயத்தையும் பகிர்ந்துகொள்ளாமலேயே தூங்கினார்.... அன்றைய இரவு நல்ல தூக்கம்...



மீண்டும் முத்துநகரில் கிடைத்த லிஸ்டை கையில் எடுத்தார் ராம்.. இம்முறை கார்த்திக்கின் நண்பர்களும், அவன் காதலியும் அந்த லிஸ்டில் அடங்கினார்கள். கதிரை அழைத்துக் கொண்டு மீண்டும் ஒரு விசாரணைக்குத் தயாராகச் சென்றார்கள்...

இம்முறை விசாரணை பெற்றோர்களிடம். ஒவ்வொருவரிடமும் விசாரித்து வருகையிலும் ஏமாற்றமே மிஞ்சியது... விசாரணைக் கோணமே சற்று வித்தியாசமாக.

கார்த்திக்கின் நண்பர்கள் வீட்டில் விசாரித்தார்கள். பாவனா வீட்டிலும் விட்டு வைக்கவில்லை... இறுதியில் மாலை வருவதாகச் சொல்லிவிட்டு அகன்றார்கள்.... வெற்றிக் களிப்பில்,,,

பாவனா வீட்டிலே ராமும் கதிரும் சில மகளிர் போலீஸுகளும் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள் பாவனா... அந்த அதிர்ச்சியே அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டது.

ராம் தான் வரவேற்றான்.

" வா பாவனா.. கண்ணீரால் ஏமாற்றிய கொலைகாரி பாவனாவே!! கிட்ட வா.. உனக்காக சங்கிலி காத்துக் கொண்டிருக்கிறது... "

அதிர்ச்சியில் அழுகை பீறிட, கதிர் அவளைப் பிடித்து மகளிர் காவலர்களிடம் ஒப்படைத்தான்.

கார்த்திக்கை கொலை செய்ததிற்காக பாவனா அழைத்துச் செல்லப்பட்டாள்... வெற்றிகரமாக பின்தொடர்ந்தார்கள் ராமும் கதிரும்...


" ஏன் கொன்ன அவனை? " ஸெல்லுக்குள் உறுமினாள் பெண் போலிஸ் கனகா. உடன் அமர்ந்திருந்தார்கள் ராமும் கதிரும்..

" நான் வேணும்னே அவனைக் கொல்லலை. தெரியாமதான் நடந்திச்சி " வார்த்தைகளைக் குதப்பிப் பேசினாள் பாவனா.

" என்ன நடந்தது? அதை முதல்ல சொல்லு " மீண்டும் கனகா அதட்ட.

நடந்த்தை ஒன்றுவிடாமல் சொன்னாள் பாவனா.

" கார்த்திக்கை நான் ரெண்டு வருஷமா காதலிச்சேன். அவன் என்கிட்ட பழகிய நாட்கள் ரொம்ப இனிப்பானது. அவனுக்கு நான் நிறைய லெட்டர்ஸ் எழுதினேன். எல்லாமே ரகசியமா இருந்தது. எங்க ஸ்கூல் ரூல்ஸ்படி காதல் செய்வது ரொம்ப தவறு. அதனால நான் எந்த ஒரு தோழிங்ககிட்டயும் சொல்லலை. சமீபகாலமா என்னை விட்டு ரொம்ப ஒதுங்கினான் கார்த்திக். என்னன்னு நான் விசாரிச்சப்போ, அவன் ஸ்ருதின்னு ஒரு பொண்ணை லவ் பண்றதா தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு வாரத்துக்கு முன்னாடி ஸ்ருதியை விட்டுட்டு அவன் வீட்டுக்குப் போகிற வழியில அதாவது முத்துநகர் முதல்வீதியும் ஜெயின் காலனியும் இணைகிற முனையில நின்னுட்டு இருந்தேன். அவன் எப்படியும் முத்துநகர் வழியாதான் வருவான். எப்படியாவது பேசணும்னு இருந்தேன்.. ஸ்கூல்ல பேசமுடியாத சூழ்நிலை. முன்னமாதிரி எங்கவீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற கோவிலுக்கும் வராம போனதால நானாகவே ரிஸ்க் எடுத்து அங்க வந்துட்டேன். அப்போ மணி ஆறரை. மெதுவா வண்டியில வந்தவன், என்னைப் பார்த்ததும் ரொம்ப கேவலமான பார்வையை வீசினான். நான் அவன்கிட்ட மிரட்ட ஆரம்பிச்சேன்.

அப்பத்தான் என்னோட காம்பஸை எடுத்து ஸ்ருதிய மறந்துடுன்னு அவன் கையில குத்தினேன். அதுக்கு அவன் என்னோட முடிய ஒருகையில பிடிச்சுட்டு இன்னொரு கையில என்னோட கழுத்தைப் பிடிச்சான்.. அதனால என்னோட காம்பஸை அவன் நெஞ்சில குத்தினேன். அதுல தாங்க முடியாம கீழே தடுமாறி விழுந்தான். அந்த இடத்தில கல்லு இருந்ததால மண்டையில பட்டு இரத்தம் கொட்ட ஆரம்பிச்சது. எனக்கு பயமா போய்டுச்சு. அவன் மூக்கில கை வெச்சுப் பார்த்தேன். மூச்சே இல்லை. அவன் செத்துட்டான்னு முடிவு பண்ணினேன். அந்த நேரத்தில யாருமில்லை. மாட்டிக்குவோம்ங்கிற பயத்தில அவன் வண்டியை ரொம்ப தூரம் தள்ளீட்டு போய் ஒரு தென்னந் தோப்புல கொண்டு போய் விட்டுட்டேன். கைரேகை படக்கூடாதுங்கறதால ஸாலை வெச்சு தள்ளீட்டு போனேன்.. நேரா எங்க வீட்டுக்கு வந்து அன்னிக்கு முழுவதும் அழுதுகிட்டே இருந்தேன்...

நான் கொலையாளி இல்லங்க சார். தெரியாம நடந்திடுச்சு. என்னை விட்டுடுங்கசார். ப்ளிஸ். " கெஞ்சிக்கொண்டே தனது ஸ்டேட்மெண்டை முடித்தாள்.

ராமும் கதிரும் மேலதிக கேள்விகள் கேட்டு தனது விபரக்குறிப்பில் குறித்துக் கொண்டனர்.. ஒரு பெண் இந்த கொலையை நிகழ்த்தியிருக்கிறாள் என்பது டிபார்ட்மெண்டில் உள்ளவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது..

" ராம், இனி நம்ம அடுத்த கேஸ்? "

" சேட்டுக்கு எப்படி கஞ்சா சப்ளை ஆகுதுன்னு விசாரிக்கணும்... " கண்கள் சிமிட்ட சொன்னார் இன்ஸ்பெக்டர் ராம்..

கதிர் விடைபெற்றுக் கொள்ள, ராம் அவனைப் பாராட்டி அனுப்பிவைத்தார்... இன்னும் சில தினங்களில் கலியாணம் அல்லவா... வேலை ஏகப்பட்டது இருக்கிறது.... வீட்டை நெருங்கினார் ராம்..

சில நாட்கள் கழிந்தன...

திருமணம் இனிதே முடிந்தது.. ராமின் மனைவி தீபா, தீபமாய் மின்னினாள். கணவருக்குத் தோள்கொடுக்கப் போகிறவளாய் அவளது தோள் காதல் கடிதம் எழுதியது. தேனிலவு நாட்களில் துப்பறிதலைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தாள். கார்த்திக் விவகாரத்தைப் பற்றி உன்னிப்பாக கேட்டு வந்தாள்... அதுசரி/// பாவனாவை எப்படி பிடித்தார் இன்ஸ்பெக்டர் ராம்? அவரே சொல்லட்டுமே?

" அன்னிக்கு நைட் ஞானசேகர் சொன்ன விசயம் தான் எனக்குப் பொறிதட்டிச்சு. காம்பஸ் வெச்சு குத்தியிருக்காங்க அப்படீன்னா அது நிச்சயம் மாணவ/மாணவி யாரோவாத்தான் இருக்கணும்னு எங்க முடிவு. கார்த்திக்கைப் பத்தி தெரிஞ்சுகிட்டதில கஞ்சா வாங்கினதோட சரி. வேற எந்த வம்புக்கும் போனதா தெரியலை. அவன் விளையாடிய ஒரே கேம். காதல்.. ஞான சேகர் கடைசியா, குறிப்பிட்ட நேரத்தில தன் பையன் எங்கயும் போகலைன்னும், எப்பவும் போலவே வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டான்னும் சொன்னார்... அப்படீன்னா கொலை நடந்த ஏழுமணிக்குப் பிறகு வண்டியை ஒளிச்சு வைச்ச பிறகு, வீட்டுக்குப் போனவங்க யாரா இருக்குமுனு யோசிச்சு பல பேரோட மாணவ, மாணவிகளோட பெற்றோர்களிடம் விசாரிச்சோம். சில பேர்கிட்ட வாத்தியார் வேசம் போட்டு விசாரிச்சோம்.. அதுல முத்துநகர்ல இருக்கிற எல்லா பசங்க பொண்ணுங்களும் சரியான நேரத்தில வீட்ல இருந்திருக்காங்க. பாவனா வீட்ல மட்டும் பாவனா, அன்னிக்கு நைட் ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்திருக்கா, அதோட அவங்க வீட்டுல சோதனை போட்டதுல கார்த்திக்கோட பேக் இருந்திருக்கு... அதை யார் கண்ணுலயும் படாம வெச்சு, புத்தகங்களை எரிச்சிருக்கா, பேக் மட்டும் மிஞ்சினது.. சோ, நாங்க நினைச்சமாதிரியே பாவனா கொலையாளின்னு நிரூபணம் ஆய்டுச்சு...

சொல்லி முடித்த பின்னர் தீபாவை அணைத்தார் ராம்.... தீபாவுக்கு அந்த கதையைக் கேட்ட பிறகு, தானும் ஒரு துப்பறியும் புலியாகவேண்டுமென்ற ஆர்வம் வந்தது....

தேனிலவு முடியும் தருவாயில், அவசர அவசரமாக ஒரு அழைப்பு.

சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் அழைத்தார்...

" சார், நீங்க பிடிச்சு வெச்சிருந்த கஞ்சா சேட், செத்துட்டான்.... "

அதிர்ச்சியில் தீபாவை அணைத்திருந்த கை தளர்ந்தது.....

தீபாவுக்கு புதிய கேஸ் கிடைத்த சந்தோசம் கண்களில் தெறித்தது...


முற்றும்..

kavitha
05-11-2007, 09:24 AM
ஆதவா,

என் கருத்தைப் பதிவிட சிறிது நேரம் கோரி விடைபெறுகிறேன்.

மதி
05-11-2007, 10:37 AM
ஆதவா,
மிக மிக நீளமான சிறுகதை... துப்பறியும் கதை. பல திருப்பங்கள்.. பல யூகங்கள்.. இடங்களைப் பற்றிய வர்ணனைகள். படிக்கையிலேயே நாமும் அந்த இடத்திலிருந்து மூன்றான் மனிதனாய் நடப்பதை பார்க்கும் உணர்வு ஏற்பட்டது.

ஆயினும் கதையின் சுவாரஸ்யத்தை தலைப்பு குறைத்துவிட்டது. பல திருப்பங்கள் இருந்தாலும் தலைப்பே காதல் தான் பிரச்சனை என்று சொல்லிவிட்டது. மேலும் ஸ்ருதி பற்றி சொல்லும்போதே யார் கொலையாளி என்று யூகிக்க முடிந்தது..

முதல் முயற்சி என்று சொல்கிறீர். அற்புதம்..ஆரம்பமும் முடிவும். தேர்ந்த எழுத்தாளர்களுக்கே உரிய நடை.. மேலும் பல உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

ஆதவா
05-11-2007, 10:47 AM
ஆதவா,

என் கருத்தைப் பதிவிட சிறிது நேரம் கோரி விடைபெறுகிறேன்.

நிச்சயமாக ....... காத்திருக்கிறேன்...


ஆதவா,
மிக மிக நீளமான சிறுகதை... துப்பறியும் கதை. பல திருப்பங்கள்.. பல யூகங்கள்.. இடங்களைப் பற்றிய வர்ணனைகள். படிக்கையிலேயே நாமும் அந்த இடத்திலிருந்து மூன்றான் மனிதனாய் நடப்பதை பார்க்கும் உணர்வு ஏற்பட்டது.

ஆயினும் கதையின் சுவாரஸ்யத்தை தலைப்பு குறைத்துவிட்டது. பல திருப்பங்கள் இருந்தாலும் தலைப்பே காதல் தான் பிரச்சனை என்று சொல்லிவிட்டது. மேலும் ஸ்ருதி பற்றி சொல்லும்போதே யார் கொலையாளி என்று யூகிக்க முடிந்தது..

முதல் முயற்சி என்று சொல்கிறீர். அற்புதம்..ஆரம்பமும் முடிவும். தேர்ந்த எழுத்தாளர்களுக்கே உரிய நடை.. மேலும் பல உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

மிக்க நன்றிங்க மதி.... தலைப்பு என்ன வைப்பதென்று தெரியவில்லை... கடைசி நேரத்தில் வந்த தலைப்பு..... (அவன் அவள் அது என்று தான் முதலில் வைப்பதாக இருந்தது....)

மிகவும் நன்றி.....

யவனிகா
05-11-2007, 11:49 AM
பல வருடங்கள் கழித்து மீண்டும் விவேக், ரூபலா, கோகுல்நாத் துப்பறியும் கதையைப் படித்த உணர்வு.சாதாரண கதைகளை விட துப்பறியும் கதை எழுத அதிக திறமை தேவை...

படிப்பவரின் மூளையும் சேர்ந்து யோசிக்க வேண்டியிருப்பதால் துளி கூட சலிப்புத்தட்டாமல் கதை நகர்த்த வேண்டும், எங்கும் ஓட்டை விழாமல் பார்க்க வேண்டும்.போட்ட முடிச்சுகளைத் திறமையாக அவிழ்க்க வேண்டும்.அதை விடத் திறமையாக முடிச்சுகள் இடும் திறமை வேண்டும்.இவை அத்தனையும் கச்சிதமாக செய்திருக்கிறீர்கள்.முதல் கதையா?பொய்தானே?

எழுத்து நடையும் அருமையாக கதைக்களத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.ராமின் மனைவியை முன்னதாகவே கதைக்குள் புகுத்தி இருக்கலாம். பொதுவாகவே துப்பறியும் கதாசிரியர்கள் பின்பற்றும் யுக்தி அது.காதலர்கள் சேர்ந்து துப்பறிவது..கதையின் சுவாரசியம் கூட்டும் அவர்களது சீண்டல்கள்...கிண்டல்கள்..
.
ஒரு கதாசிரியர், யாரென்று ஞாபகம் வரவில்லை.கதையில் பெண் பாத்திரங்களைப் புகுத்தும் போது சுவாரசியமான பனியன் வாசகங்களையும் சேர்த்துத் தருவார்
.
சுஜாதாவின் கதைகளில் வஸந்தின் ஜோக்குகள் முடிவு தெரியாதவைகள்...ஆனாலும் நன்றாக இருக்கும்.

நரேன் வைஜ் துப்பறிகையில் அவர்களுக்குள்ளே நடைபெறும் சண்டைகள் சுவாரசியம் கூட்டும்.பால்ராஜ் கேரக்ட்டர் வேறு கொசுறு சுவை.

இவர்கள் அனைவரின் கதைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல உங்களின் இந்த துப்பறியும் கதை.பாராட்டுகள்.மேலும் பல கதைகளை எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து...வாழ்த்துக்கள்.

ஆதவா
05-11-2007, 12:24 PM
பல வருடங்கள் கழித்து மீண்டும் விவேக், ரூபலா, கோகுல்நாத் துப்பறியும் கதையைப் படித்த உணர்வு.சாதாரண கதைகளை விட துப்பறியும் கதை எழுத அதிக திறமை தேவை...

படிப்பவரின் மூளையும் சேர்ந்து யோசிக்க வேண்டியிருப்பதால் துளி கூட சலிப்புத்தட்டாமல் கதை நகர்த்த வேண்டும், எங்கும் ஓட்டை விழாமல் பார்க்க வேண்டும்.போட்ட முடிச்சுகளைத் திறமையாக அவிழ்க்க வேண்டும்.அதை விடத் திறமையாக முடிச்சுகள் இடும் திறமை வேண்டும்.இவை அத்தனையும் கச்சிதமாக செய்திருக்கிறீர்கள்.முதல் கதையா?பொய்தானே?

எழுத்து நடையும் அருமையாக கதைக்களத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.ராமின் மனைவியை முன்னதாகவே கதைக்குள் புகுத்தி இருக்கலாம். பொதுவாகவே துப்பறியும் கதாசிரியர்கள் பின்பற்றும் யுக்தி அது.காதலர்கள் சேர்ந்து துப்பறிவது..கதையின் சுவாரசியம் கூட்டும் அவர்களது சீண்டல்கள்...கிண்டல்கள்..
.
ஒரு கதாசிரியர், யாரென்று ஞாபகம் வரவில்லை.கதையில் பெண் பாத்திரங்களைப் புகுத்தும் போது சுவாரசியமான பனியன் வாசகங்களையும் சேர்த்துத் தருவார்
.
சுஜாதாவின் கதைகளில் வஸந்தின் ஜோக்குகள் முடிவு தெரியாதவைகள்...ஆனாலும் நன்றாக இருக்கும்.

நரேன் வைஜ் துப்பறிகையில் அவர்களுக்குள்ளே நடைபெறும் சண்டைகள் சுவாரசியம் கூட்டும்.பால்ராஜ் கேரக்ட்டர் வேறு கொசுறு சுவை.

இவர்கள் அனைவரின் கதைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல உங்களின் இந்த துப்பறியும் கதை.பாராட்டுகள்.மேலும் பல கதைகளை எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து...வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிங்க யவனிகா...

இக்கதைக்குப் பின்னே...

நான் பல நாவல்கள் படித்திருக்கிறேன். ராஜேஸ்குமார், சுபா, இந்திரா செள, பட்டுக்கோட்டை என பலருடையது....

குறிப்பாக ராஜேஸ்குமார் நாவல்கள் வெகு திரில்லிங்க்.. பல புதிய விசயங்கள் அடங்கியிருக்கும். அழகான முடிச்சுகள் அதில் இருக்கும், இறுதி அத்தியாயத்தில் முடிச்சு முழுவதுமாக அவிழ்க்கப்படும்...

அந்த பக்குவம், அத்தனை நாவல்கள் எழுதியும் அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரம் போல.... எப்படி எழுத முடிகிறது???

எனக்குள் எழுந்த கேள்வி.

எந்த விதத்திலும் அவர்களுக்கு நான் இணையில்லை எனினும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று எழுதினேன்.. ஆனால் முதன் முதலாக எழுதியது ஓவியரையும் அக்னியாரையும் மையமாக வைத்து.... (தனிமடலில் அந்த முழுக்கதையும் அனுப்பி வைக்கிறேன்... எழுதிய எனக்கு துளியும் விருப்பமில்லா கதை அது.. எப்படி முடிக்கவேண்டுமென்று திணறிய கதை அது... )

பெரும்பாலான கவிதைகள் மனம் போன போக்கில் முடிவுகள் வைத்து எழுதுவேன்... என்ன தலைப்பு என்பது எனக்கே இறுதியில்தான் தெரியும்... அதையே நாவலாக மாற்றி எழுதியதன் விளைவு.... தோல்வி..

நாவல் எழுத பல விசயங்கள் தெரிந்திருக்கவேண்டும்... எங்கெல்லாம் முடிச்சு இட்டால் சுவாரசியமோ அங்கே இடத் தெரியவேண்டும்... எல்லாவற்றுக்கும் மேலாக, ப்லானிங்க் மிக அவசியம்...

நான் இந்த கதையில் சொதப்பிய இடங்கள் பல... குறிப்பாக கவிதையை உள்ளே நுழைத்தது...

இறுப்பினும், உங்களைக் கவர்ந்ததென்றால் நிச்சயம் அடுத்த கதையும் துப்பறியும் கதையாகவே இருக்கும்...

உங்கள் ஊக்கம் எனது ஆக்கத்திற்கான விதை...

நன்றிங்க யவனிகா...

அமரன்
05-11-2007, 01:14 PM
ஒரு கதாசிரியர், யாரென்று ஞாபகம் வரவில்லை.கதையில் பெண் பாத்திரங்களைப் புகுத்தும் போது சுவாரசியமான பனியன் வாசகங்களையும் சேர்த்துத் தருவார்


பட்டுக்கோட்டை பிராபகர்...

அமரன்
05-11-2007, 03:56 PM
பாராட்டாது தப்பு இருந்தால் சொல்லச்சொல்லி இருக்காரு ஆதவா.. நானும் எறும்புபோல பார்வையால் ஊர்ந்தேன். ஸ்ருதிதான் காதலி என்னும்போது இரு பெண்கள்மேலும் சந்தேகம் விழுந்து, ஸ்ருதிய்ன் மீதான விசாரணை முடிந்த தறுவாயில் பாவனாதான் கொலையாளி என ஊகிக்கமுடிவதை தவிர வேறு எதுவும் புலப்படவில்லை... என்னில் உள்ள நம்பிக்கையில் வாழ்த்துகிறேன். கொஞ்சமாக இருக்கும் அவ நம்பிக்கையில் சாரிங்க ஆதவா...

ஆதவா
05-11-2007, 04:01 PM
பாராட்டாது தப்பு இருந்தால் சொல்லச்சொல்லி இருக்காரு ஆதவா.. நானும் எறும்புபோல பார்வையால் ஊர்ந்தேன். ஸ்ருதிதான் காதலி என்னும்போது இரு பெண்கள்மேலும் சந்தேகம் விழுந்து, ஸ்ருதிய்ன் மீதான விசாரணை முடிந்த தறுவாயில் பாவனாதான் கொலையாளி என ஊகிக்கமுடிவதை தவிர வேறு எதுவும் புலப்படவில்லை... என்னில் உள்ள நம்பிக்கையில் வாழ்த்துகிறேன். கொஞ்சமாக இருக்கும் அவ நம்பிக்கையில் சாரிங்க ஆதவா...

அடுத்தமுறை சஸ்பென்ஸை கொஞ்சம் நீட்ட முயலுகிறேன் நண்பா...

அதுசரி.. விசயம் தெரியுமா? இதேமாதிரி நான் முதன் முதலில் எழுதி தூக்கி எறிந்த கதைக்கு வில்லனே நீங்கள்தான்...

நன்றி நண்பரே கருத்துக்கு

அமரன்
05-11-2007, 04:04 PM
தனிமடல்ல முடிந்தால் அனுப்பங்க தலைவா?
நல்லவனாக நடிக்கலாம்..கெட்டவனாக நடிப்பது எவ்வளவு கடினம்.:D

ஆதவா
05-11-2007, 04:08 PM
தனிமடல்ல முடிந்தால் அனுப்பங்க தலைவா?
நல்லவனாக நடிக்கலாம்..கெட்டவனாக நடிப்பது எவ்வளவு கடினம்.:D

அதைக் கிழிச்சு குப்பையில போட்டுட்டேங்க.....:)

kavitha
19-11-2007, 06:16 AM
முதலில் கதை எழுத, அதிலும் துப்பறியும் கதை எழுதத் துணிந்த ஆதவா விற்கு சல்யூட் டுடன் வரவேற்புகள்.
நல்லதொரு முயற்சி எடுத்திருக்கிறீர்கள். 'சுபா' , ஜேம்ஸ்பாண்ட் கதைகள் போல சிறந்த பெயரெடுக்க வாழ்த்துக்கள்.

இனி கதைக்கு...

யாரந்த காதலி...? தலைப்பிலே விடை ஒளிந்துவிட்டது. அது பாவனா வா? ஸ்ருதியா? என்பது கடைசியில் வைத்த டுவிஸ்ட்.

தொடர்க்கதைக்குரிய அம்சங்களுடன் கதையும் முடிவும், முடிவில் மீண்டும் ஒரு ஆரம்ப அறிகுறியும் அருமை.

ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தொய்வு குறையாமல் இவ்வளவு நீளக் கதையை நகர்த்தியவிதம் பாராட்டிற்குரியது.

காதாபாத்திரங்களின் குணாதியசங்களிலிருந்து, உருவ அமைப்பு, இட அமைப்பு இவற்றைப்பற்றி விவரித்திருப்பது நிஜமாக கண் முன் நிகழ்ந்த நிகழ்வு போல மறக்காமல் வைத்திருக்கிறது.

பாகம் பாகமாய் வெளியிட்டிருந்தால் படிப்பவர்களுக்கு சலிப்புத்தட்டியிருக்காது.

முதல்முயற்சி அருமை! இனி மேலும் இது செதுக்கப்படும்(வரிகளிலும்) என நம்புகிறோம். வாழ்த்துக்கள் ஆதவன்.

சிவா.ஜி
19-11-2007, 07:11 AM
முதலில் பாராட்டுக்கள்(நீங்கள் வேண்டாமென்றாலும்) காரணம்,எந்த வித அமெச்சூர்தனமுமில்லாத நடைக்கு,அருமையான பாத்திரங்களின் வர்ணனைக்கு,
காட்சி விவரித்தலுக்கு மற்றும் சரளமான உரையாடல்களுக்கு.
அனைவரும் சொல்லியிருப்பதைப்போல தலைப்பே சஸ்பென்ஸை உடைத்துவிடுகிறது.அதேபோல ஸ்ருதி வந்ததுமே பாவனாதான் கொலையாளி என்று தெரிந்துவிடுகிறது.
இரண்டாவதாக ஒரு காவலதிகாரியாக இருந்துகொண்டு கார்த்திக்கின் பெற்றோர் முகவரி தெரியாததால் அவர்களைத் தொடர்பு கொள்ல முடியவில்லை என்று சொல்வது ஒத்துக்கொள்ளமுடியாது.ஏனென்றால் கார்த்திக் படிக்கும் பள்ளியில் கண்டிப்பாக அவனின் பெற்றோர் முகவரி இருக்கும்.அதுவும் பெற்றொர் வெளிநாட்டில் இருப்பதால் நிச்சயம் முகவரி வாங்கி வைத்திருப்பார்கள்.
மூன்றாவது கதிரின் துனை ராமிற்கு எதற்கு..?முதல் பத்தியிலேயே அவரின் திறமையைப் பற்றி சொல்லிவிட்டீர்கள்.அப்படி இருக்கும்போது கதிரின் துணை தேவையில்லாதது.
இறுதியாக ராமின் மனைவி இன்னொரு கேஸ் கிடைத்ததாக சந்தோஷப்படுவது ஏன்..? ஒரு விசாரணைக் கைதி லாக்கப்பில் இறந்தால் அது போலீஸுக்குத் தொல்லைதானே தவிர சந்தோஷமல்ல.
இதெல்லாம் கூட இல்லாமல் முதன்முதலாக ஒரு மிகச்சிறந்த துப்பறியும் கதை எழுத முடியாது.எனவே என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

ஆதவா
21-11-2007, 02:11 PM
முதலில் கதை எழுத, அதிலும் துப்பறியும் கதை எழுதத் துணிந்த ஆதவா விற்கு சல்யூட் டுடன் வரவேற்புகள்.
நல்லதொரு முயற்சி எடுத்திருக்கிறீர்கள். 'சுபா' , ஜேம்ஸ்பாண்ட் கதைகள் போல சிறந்த பெயரெடுக்க வாழ்த்துக்கள்.


பாகம் பாகமாய் வெளியிட்டிருந்தால் படிப்பவர்களுக்கு சலிப்புத்தட்டியிருக்காது.

முதல்முயற்சி அருமை! இனி மேலும் இது செதுக்கப்படும்(வரிகளிலும்) என நம்புகிறோம். வாழ்த்துக்கள் ஆதவன்.

ஒரு பெரும் கவிதாயினியிடமிருந்து என் கதைக்கு வாழ்த்தா? வியக்கிறது மனம்.... உங்களின் ஆழ/அழுத்தமான விமர்சனத்திற்கு மிகவும் நன்றி.....


மறுமுறை எழுத நேரிட்டால் நிச்சயம் பாகத்தோடு எழுதுகிறேன்... உங்கள் யோசனைக்கு மிகவும் நன்றி....

சுபா போல என்பது பாராட்டுக்கு வரலாம்.... கிட்ட நெருங்கமுடியா தூரத்தில் நான்...

−ஆதவா

ஆதவா
21-11-2007, 02:14 PM
முதலில் பாராட்டுக்கள்(நீங்கள் வேண்டாமென்றாலும்) காரணம்,எந்த வித அமெச்சூர்தனமுமில்லாத நடைக்கு,அருமையான பாத்திரங்களின் வர்ணனைக்கு,
இதெல்லாம் கூட இல்லாமல் முதன்முதலாக ஒரு மிகச்சிறந்த துப்பறியும் கதை எழுத முடியாது.எனவே என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

இப்படி ஒரு விமர்சனத்தைத்தான் நான் எதிர்பார்த்தேன்... கதையிலே கிடந்த ஓட்டைகளை அள்ளிக் கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....

கூடுமான வரையிலும் அடுத்த முறை இந்தப் பிழைகளைக் களையப் பார்க்கிறேன்...

மிகுந்த நன்றிகள் அண்ணா.

மலர்
25-11-2007, 08:52 AM
இவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கதையா...
எப்படி ஆதவன் டைப் பண்ணுன..
அஸிஸ்டெண்ட் யாராச்சும் வச்சிருக்கியா..

இன்னும் முழுசா படிக்கலை... படிச்சிட்டு சொல்லுறேன்