PDA

View Full Version : கடன் கொடுத்தார் நெஞ்சம் போல!யவனிகா
04-11-2007, 06:15 PM
இன்று தேதி ஒன்று. சம்பள நன்னாள்.மாதம் முழுவதும் வேலை செய்த பணத்தைக் கையில் வாங்கும் மகிழ்ச்சியை விட...நான் கடன் குடுத்தவர்களிடம் கடனைத் திரும்பக் கேட்பது எப்படி என்ற சங்கோஜத்துடனேயே பணிக்குப் புறப்பட்டேன். இதைப் படித்தவுடன் யவனிகா கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து கறாராக வசூல் செய்பவள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுகிறதல்லவா? அதை சுத்தமாக அழிரப்பர் போட்டு அழித்து விட்டு மேலே படியுங்கள். நீ சரியான ஏமாளி..பொழைக்கத்தெரியாத பெண்...படித்த முட்டாள்...இதெல்லாம் என் கணவர் என்னைப் பார்த்து அடிக்கடி கூறும் வார்த்தைகள்.ஏன் தெரியுமா?

மாதக்கடைசியில் என்னுடன் பணிபுரிவர்களுக்கு கடன் கொடுப்பதும்...அதை திரும்பக் கேட்க முடியாமல் மென்று முழுங்கி காந்தி கடனில் விட்டு விடுவதும் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் வெள்ளெழுத்தில் எழுதப்பட வேண்டிய சம்பவங்கள்.

ஆனால் இன்று வீறு கொண்ட வேங்கையாய்ப் புறப்பட்டாள் யவனிகா. இன்னும் எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த பூமியில்? ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவாரும் இருப்பார்கள் போன்ற அரிய கருத்துகளை அசைபோட்டபடி....வெட்கப் படாமல் குடுத்த கடனை கடைசி வரை போராடித் திரும்பப் பெற்றே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை மனதிலே உருவேற்றிக் கொண்டேன்.

இன்றைய என்னுடைய எய்ம். கமல். உலக நாயகன் பேரை வைத்திருக்கும், பங்களாதேசி..பேருதான் கமல். அய்யா ஸ்டைல் எல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி இருக்கும். "தல" மாதிரி கையை நீட்டி நீட்டி பேசுவார். தளபதி மாதிரி பறந்து பறந்து துடைப்பத்துடன் சண்டை போட்டு தரை துடைப்பார். பங்களா தேசத்திலிருந்து வந்து சவூதி மருத்தவமனையில், டயட்டரி கிச்சனில் வேலை செய்யும் கடைநிலை ஊழியன். இரண்டு மாதங்களுக்கு முன் 500 ரியால் கடன் வாங்கி இன்றுவரை தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறான். ஐந்து, பத்து என்று அவ்வப்போது வாங்கியவைகளும் நேருமாமா கடன் தான்.

டயட்டரி கிச்சனுக்குள் நுழைந்து, நான் அவனைப் பார்த்த போது "அரபு நாடே அசந்து போகும் அழகி நீ..."என்று யாரோ சொல்லிக் கொடுத்த தமிழ்ப் பாட்டை தப்புத்தப்பாய் பாடியபடி தரை துடைத்துக் கொண்டிருந்தான்.

தயக்கத்துடன் முகமன் கூறி ஆரம்பித்தேன். "என்ன கமல் சம்பளம் வாங்கியாச்சா?முகமெல்லாம் சிரிப்பாயிருக்கு?"

"என்ன சிஸ்டர் உங்கள மாதிரி ஆயிரக் கணக்கிலா வருது? தம்மாத்துண்டு 700 ரியால். எல்லாம் வாங்கியாச்சு. பாருங்க சிஸ்டர்...இந்த கடன் குடுத்தவங்க தொல்லை தாங்க முடியறதில்லை. ஒண்ணாம் தேதியான டாண்ணு வற்றாங்க! எல்லாரும் உங்கள மாதிரியா...போனாப் போகுது கஷ்டவாளின்னு விடறதில்லை." என்றான் என் முதல் பந்தையே சிக்சராக்கி!

நான் விடுவனா? நேற்று வரை நான் ஏமாளி. இன்று முதல் அறிவாளியாக்கும்.

"இல்லை கமல்...எனக்கு கொஞ்சம் அவசரமா பணம் தேவைப்படுது...500 ரியால் வாங்கினியில்ல...இப்ப குடேன்..உதவியா இருக்கும்."

"உங்களுக்கென்ன சிஸ்டர் அவசரச்செலவு?..வீட்டுக்காரரும் சம்பாதிக்கறார். கம்பெனி வீடு தந்திருக்கு. மெடிகல் செலவு ஃப்ரீ. பசங்களும் சின்னவங்க தானே! அப்படியென்ன செலவு? ஏதாவது நகை வாங்கப் போறீங்களா?

நான் நகை வாங்கினா இவனுக்கென்ன? நட்டு வாங்கினா இவனுக்கென்ன? இத்தனை விசயம் என்னப் பத்தி, இவனுக்கெப்படித்த் தெரியும்? மனதுக்குள் திட்டியபடி,

"அதில்ல கமல். ஊருக்குப் பணம் அனுப்பனும்.அதான் கேக்கறேன் தப்பா நெனைச்சுக்காதே" என்றேன்.

என்ன சிஸ்டர் நீங்க நெசமாலுமே எனக்கு தங்கச்சி மாதிரி தான் ...உங்களைப் போயி தப்பா நினைப்பனே? அது சரி, ரெண்டு பேரும் சம்பாதிக்கறீங்களே இந்த 500 ரியால வாங்கித்தானா ஊருக்கு அனுப்பனும்? அதுமில்லாம டாலர் ரேட்டு கம்மியாச்சே இப்ப...இந்தியா ரூபா எங்கியோ ஏறிட்டே போகுது போல!இப்ப பணமெல்லாம் அனுப்பாதீங்க. ரெண்டு மாசத்தில டாலர் ஏறும்னு நெனைக்கிறேன்...அப்ப அனுப்பிக்கலாம். நான் சொன்னேன்னு சொல்லுங்க சார்கிட்ட"

இதை வேறு என் கணவரிடம் சொல்லி அவர் காதில் புகை வருவதை நான் பார்ப்பதாகச் செய்த கற்பனையில் எனக்குச் சிரிப்பு வந்தது.

"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்...நீ கவலை படாதே! உன்னால பணம் குடுக்க முடியுமா? முடியாதா? அதை மட்டும் சொல்லு.."

"என்ன சிஸ்டர் இவ்வளவு ஸ்ரிக்டா கேட்டா எப்பிடி? ஹாஸ்பிடல்ல வர்ர காசு ஒருவாரம் கூட காணறதில்லை...கார் தொடைச்சு வர்ற பணம் தான் மாச செலவுக்கு,
என்ன செய்யறது சிஸ்டர்?"

"நீ ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட் குடிக்கற...அதும் காஸ்ட்லியான சிகரெட் தானாம? மத்த பங்களா தேசிங்க சொல்றாங்க. சிகரெட் குடிக்கறதை குறைக்கலாமல்ல!பணமும் மிச்சம்..உடம்புக்கும் நல்லது!" இது நான்.

"நல்ல வேளை சிஸ்டர்...சிகரட்டுன்னு சொன்னதும் தான் ஞாபகம் வந்தது. முந்தா நாள் சாரு உங்களை பிக் அப் பண்றதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்த சமயத்தில அவருகிட்ட இருந்து ஒரு சிகரெட் கடன் வாங்கினேன். என்ன பிராண்ட் அது? தம்மாத்துண்டு பில்டர் வெச்சிட்டு...இதெல்லாம் குடிச்சா கேன்சர் தான் வரும்...சாரை பிராண்டை மாத்தச் சொல்லுங்க சிஸ்டர்!"

"எனக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது...இங்க பாரு அவரு சிகரெட் குடிச்சா உனக்கென்ன? பீடி குடிச்சா உனக்கென்ன? நல்ல புத்தி சொன்னா சரின்னு கேக்க வேண்டியது தானே! சரி சிகரெட்ட விடு...உன் கேர்ள் ப்ரண்டுக்கு பெர்ஃயூம் வாங்கணும்னு வேற கடன் வாங்கினியாமா சாராகிட்ட? இதெல்லாம் ஓவராயில்ல...200 ரியாலுக்கு கடன் வாங்கி பெர்ஃயூம் வாங்குவாங்களா யாராவது?

" ஆமா சிஸ்டர்..அது பிலிப்பினி செட் அப்....எதாவது வாங்கிக் குடுத்திட்டே இருந்தாத்தான் ரூட்டிலே இருக்கும். இல்லன்னா டேக் ஆஃப் ஆயிடும். இன்டியன் பொண்ணுங்க மாறியெல்லாம் கிடையாது..ரெண்டு வருச காண்ட்ராக்ட் போடலாம்ன்னு பேசறதுக்குள்ளயே 2000ரியாலுக்கு செலவு வெக்குது! என்ன செய்யறதுன்னு தெரியல"

"இங்க பாரு கமல். எனக்கு உங்கிட்ட பேசறதுக்கு இப்ப நேரமில்ல...பணம் இருக்கா? இல்லையா?" கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டான்.

அப்போது பார்த்து அவனது மொபைல் அடித்தது. காரே பூரே... பாலு ஆஸி என்று பெங்காலியில் பேசி முடிக்கும் வரை பொறுத்திருந்தேன்.

பேசி முடித்து என்னை நிமிர்ந்து பார்த்தவனின் கண்ணில் கண்ணீர்.

"சிஸ்டர், போனில் என்னுடைய தம்பி...அம்மாக்கு உடம்புக்கு முடியலை...பணம் வேணும்னு சொன்றான்...இருக்கற 500 ரியால உங்களுக்கு குடுக்கலாம்னு இருந்தேன்...இப்ப 1000ரியால் அனுப்ப வேண்டியிருக்கு, பணத்துக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை...ஒரு அரை நாள் லீவ் குடுங்க எப்பிடியாவது பணம் புரட்டணும்"என்றான்.

கண்ணீருடன் அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. சரி கவலைப் படாதே. எனக்கு அடுத்த மாசம் குடு போதும்...அம்மாவைப் பாரு முதல்லே என்று அவனை அனுப்பி வைத்து விட்டு இருக்கைக்கு வந்தேன்.

ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். ஃபரூக் வந்தான்...மதிய வேலைக்காரன். அவன் தான் கமலின் ரூம் மேட். "ஃபரூக்... கமலின் அம்மாக்கு உடம்புக்கு என்ன? பணம் அனுப்பனும்னு சொன்னானே?"என்றேன்.

"கமலோட அம்மா ஐந்து வருடத்திற்கு முன்பே இறந்து போய் விட்டாங்களே சிஸ்டர். ஆன்னா ஊன்னா எல்லாரையும் படுத்த படுக்கையாக்கி, கடன் கேக்கிறதே இவன் வேலையாப் போச்சி" என்றான் ஃபரூக்.

பேக்கு, ஏமாளி, லூசு என்று திட்டும் என் கணவரிம் முகம் என் மனக்கண்ணில் நிழலாடியது. இந்த மாசம் போனா என்ன? நவம்பர் போனா டிசம்பர் வரும் தானே...குடுத்த கடனை திருப்பி வாங்கி, ஏமாளிப் பட்டத்தை நூலிலிருந்து அறுத்து சுதந்திரமாகப் பறக்க விடத்தான் போகிறேன், அடுத்த மாதம்.

மனோஜ்
04-11-2007, 07:12 PM
இப்ப எல்லா கடன் வாங்கினவதான் ராஜா
யவனி(ய)க்கா என் நிலையும் இதுதான் வாங்கு போது இந்தா குடுத்துடுவேன் என்றார்கள் இப்ப பின்னாடியே அலைசுகிட்டு இருக்கேன்

நல்ல கதை சாரி உண்மை எழுதுனிங்க நன்றி:icon_b:

நேசம்
04-11-2007, 07:14 PM
எனக்கு இந்த மாதிரி ஆளுங்க பழக்கம் எல்லாம் கிடைக்க மாட்டேங்குது.அதுக்கு ஒரு கொடுப்பினை வேணும் போலிருக்கு..!!

மாதவர்
05-11-2007, 01:38 AM
பாத்திரம் அறிந்து பிச்சை போடு
பிச்சைக்கே அப்படியென்றால்
கடனுக்கு என்ன சொல்லலாம்?

யவனிகா
05-11-2007, 04:49 AM
பின்னூட்டம் அளித்த மாதவ்ருக்கும், மனோஜிக்கும் நன்றிகள். நேசத்திற்கு கூடிய சீக்கிரம் அந்த குடுப்பினை கிடைக்க வாந்த்துக்கள்.

பூமகள்
05-11-2007, 05:22 AM
யவனி அக்கா..!!
அந்த பங்களாதேசியை ஒரு கையு பார்க்காமலா விட்டீங்க??
நான் வேணா எங்க பங்காளி ஆட்டோவை அனுப்பி கவனிக்க சொல்லவா??
கடன் கொடுத்தாலும் கேட்கும் முன் திருப்பித்தரும் உள்ளம் பார்த்து தானே அக்கா கொடுக்கனும்?? இப்படி ஏமாளியா இருந்தா எல்லாரும் மிளகா அரைச்சிட்டே தான் இருப்பாங்க..!
சரி... டிசம்பர் 1 ஆம் தேதி சம்பளம் வந்ததும் நீங்க ஒரு கதை ரெடிபண்ணி டைரக்ட் பண்ணுங்க அந்த பங்களாதேசி முன்னாடி..!
அப்போ தான் கடனைத் திருப்பி வாங்களாம்..!!
நல்லாவே எழுதுறீங்க யவனி அக்கா..!! வாழ்த்துகள்..!!

alaguraj
05-11-2007, 05:49 AM
அதானே...கடன் திரும்பவரும் என்ற நம்பிக்கையில்தானே பணம் கொடுக்கிறோம், அந்த நம்பிக்கையே தொலையும் போது..செண்டிமெண்டெல்லாம் பாக்கக்கூடாது அக்கா....கட் அண்ட் ரைட்டா சம்பளத்திலேயே புடிக்கிற வழியப்பாருங்க....

lolluvathiyar
05-11-2007, 06:07 AM
ம் இந்த அனுபவம் இல்லாத ஆளுகளே கிடையாது போல, நானும் நிரைய கொடுத்து வாங்க முடியாம காந்தி கனக்குல எழுதி வச்சது தான் பாக்கி.
இதுல ஒரு வேடிகை என்னன்ன, கடன் கேக்கர விதமே சூப்பரா இருக்கும் கூட வேலை செய்யரவன் என்னிடம் அப்பப்ப வாங்கி 10000 பாக்கி வச்சிருகிறான். எல்லாம் 100 200 இப்படி வாங்கினதுதான். ரொம்ப நாள் கொடுக்காம இழுத்தடிச்சதால நான் மறந்துட்டேன். அவனுக்கு கான் கொடுக்கரத நிறுத்தீட்டேன். போன மாசம் அவனாக வந்து ஒரு 1000 கொடுத்தான். சந்தோசமாச்சு. அதனால் ஏமாந்து அப்பப்ப மறுபடியும் 100 கேக்கரப்ப கொடுத்து இப்ப என்னடானா 11000 ஆயிருச்சு. நமக்கு அறிவு என்னிக்காச்சு தான் வரும் ஆனா மீதி நேரம் எல்லாம் முட்டாள்தனம் தான் வருது.
சில பேரு சிரிச்சே சமாளிப்பாங்க.
"என்னடா அவரசம், கொஞ்ச நாள் வெயிட் பன்னு மொத்த பாக்கியும் தந்துரேன்" என்பார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேல போய்
" நமக்குள்ள ஒரு ப ந்தம் இருக்கட்டும்னு தான் இன்னும் கொடுக்காம வச்சிருக்கேன்" என்று சொல்லி பயங்கர சிரிப்பு சிரிப்பாங்க.
யாருக்கு கொடுக்கரதில்லை ஒரு பாலியோட இருந்தாலும் அடிகடி கிறுக்கனாகிடறேன்.


அது சரி என் புலம்பல் இருக்கட்டும், எனக்கு கொஞ்ச கடன் வேனும் யவனிகா ஒரு 1000 ரியால் தாங்க. நீங்க தான் ஆபீஸிலேயே இரக்க மனசுல்லவங்களாம்

இதயம்
05-11-2007, 06:15 AM
இன்று தேதி ஒன்று. சம்பள நன்னாள்.மாதம் முழுவதும் வேலை செய்த பணத்தைக் கையில் வாங்கும் மகிழ்ச்சியை விட...நான் கடன் குடுத்தவர்களிடம் கடனைத் திரும்பக் கேட்பது எப்படி என்ற சங்கோஜத்துடனேயே பணிக்குப் புறப்பட்டேன்.

நான் இருக்கும் சவுதியின் தொடர்புடைய நிகழ்வு, அழகு தமிழில் தெளிவாய் சொல்லும் பாங்கு, யாரையும் அடித்துப்போடும் நகைச்சுவை உணர்வு, முடியும் தருவாயில் மனதில் "பச்செக்"கென ஒட்டிக்கொள்ளும் திருப்பத்துடன் கூடிய முடிவு ஆகியவை யவனிகாவின் கதை அல்லது கதையை ஒத்த சம்பவங்களில் இருப்பதால் அதை என்னால் ஆர்வத்துடன் ஒன்றிப்படிக்க முடிகிறது. அவருடைய சொந்த அனுபவங்களாக இருப்பதாலோ என்னவோ "கற்பனையோ..?" என்று சந்தேகிக்க கூடிய "லாஜிக்" இடறல்கள் எதுவும் இல்லாமல் சம்பவங்கள் தெளிந்த நீரோட்டமாய் செல்கிறது. ஆனால், "இவரின் அனுபவங்களில் மட்டும் எப்படி மனதை தொடும் முடிவுடன் சம்பவங்கள் முடிகின்றன..?" என்பது நெடுநாள் ஆச்சரியம். இங்கு சவுதியில் நான் பார்த்த பல தேசத்தவரிடையே அதிக முரண்பாடு, விநோதங்களை கண்டது பங்களாதேஷிகளிடம் தான். பங்களாதேஷிகளிடம் இருக்கும் வறுமை அவர்களின் விநோத நடவடிக்கைகளுக்கு காரணமாக இருந்தாலும், அதனோடு முற்றிலும் மாறுபட்டு தனக்கு தகுதியில்லாத விஷயங்களில் அவர்கள் ஈடுபடுவது முரணிலும் முரணாக தெரிகிறது. உதா. காசு செலவு பண்ணி செய்யும் காதல்(!!). சவுதியில் மருத்துவமனை சூழ்நிலை என்பது மற்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை நான் அங்கு பணிபுரியும் என் நண்பர்கள் மூலமாகவும், பிற நபர்கள் மூலமும் அறிந்திருக்கிறேன். அது ஒரு சின்னஞ்சிறிய தனி உலகம் போன்றது. சவுதியை பொறுத்தவரை மற்ற இடங்களை காட்டிலும் பெண்கள் அதிகம் பணிபுரிவது மருத்துவமனை தான் என நினைக்கிறேன். சவுதியின் ஆண், பெண் பாலினத்தவருக்கிடையேயான கட்டுப்பாடுகள் அதிக பட்சம் தளர்த்தப்படுவதும் மருத்துவமனையில் தான். அந்த வகையில் அங்கே சகோதர உறவுகள், காதல் உறவுகள், நட்புறவுகள் முகிழ்ப்பது மிகவும் இயல்பான விஷயம் (சில நேரங்களில் முறைகேடான உறவுகளும் கூட!!).

வெளி நபர்களிடம் அவசியமில்லாது ஒரு வார்த்தையை கூட பேச விரும்பாத மருத்துவமனைப்பெண்கள் அங்கு பணிபுரிபவர்களிடம் மட்டும் தன் தகுதியை விட்டு கீழிறங்கி வந்து நட்பு கொள்வது மிகவும் அற்புதமானது. அப்படி ஒரு அனுதாபம் கலந்த நட்பு தான் கமலிடம் யவனிகாவிற்கு ஏற்பட்டிருக்க கூடும். இந்த சம்பவத்தை படித்துவிட்டு யவனிகாவை நினைத்து அனுதாபப்படுவதா, கமலை நினைத்து கோபப்படுவதா, இந்த சம்பவம் படித்து ஏற்பட்ட நகைச்சுவை உணர்வில் சிரிப்பதா என்று தெரியவில்லை. கடன் என்பது எனக்கு பிடிக்காது. காரணம், அது கொடுப்பவரின் உறவை குலைக்கும், வாங்குபவரின் தன்மானத்தை பலவீனப்படுத்தும் செயலாக நினைக்கிறேன். என்றாலும் அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அடையும் பயனை நினைத்து அது சில நேரங்களில் அவசியம் என உணர்வேன். ஆனால் யவனிகாவை போலவே நானும் கடன் நிறைய கொடுத்து நிறைய இழந்ததால் இப்போதெல்லாம் நல்லவர்களுக்கு கூட கடன் தர மனம் தயங்குகிறது. காரணம், நல்லவர்களை அடையாளம் காணும் வித்தையை நான் அறியாததாலும், ஏன் விஷப்பரீட்ஷைக்குள்ளாக வேண்டும் என்ற எண்ணத்தாலும் தாம். கூடிய வரை நான் என் நண்பர்களுக்கு கடன் சம்பந்தமாக அறிவுறுத்தும் ஒரு வாக்கியம் "கூடுமானவரை கடன் கொடுக்காதே.. கடன் வாங்காதே..!!" என்பது தான்.

இத்தனை வறுமை நிலையில், குறைந்த சம்பளத்தில் இருந்தும் கமல் கேர்ள்ஃப்ரண்ட் வைத்திருப்பதும், அப்பெண்ணுக்கு காஸ்ட்லி ஃபெர்ஃப்யூம் வாங்கி கொடுப்பதற்கும் அர்த்தம் என்ன..? அவன் சிற்றின்ப போதைக்கு அடிமையாகி விட்டான் என புரிகிறது. அதை தீர்த்துக்கொள்ள தன் குறைந்த சம்பளம், வறுமை போன்ற அடையாளங்களை கொண்டு அனுதாபம் பெற்று, யவனிகா போன்றவர்களை ஏமாற்றி கடன் பெற்று தன் சிற்றின்ப ஆசையை தீர்த்து வருகிறான். கடன் கொடுத்தது ஒரு வகையில் யவனிகாவுக்கு இழப்பு என்றாலும் இன்னொரு புறம் அவன் மற்றவர்களை ஏமாற்றி கெட்ட வழியில் போக தான் கொடுத்த கடன் மூலம் யவனிகா மறைமுக ஆதரவு கொடுக்கிறார் என்பதை உணர வேண்டும். இன்று கடனை கொடுக்காமல் தப்பிக்க இறந்து போன அம்மாவை சாகடித்தவன், நாளை தன் தந்தையை சாகடித்து புது கடன் கேட்கமாட்டான் என என்ன நிச்சயம்.? இதில் பெரும் வேதனை என்னவென்றால் இனி உண்மையிலேயே தன் குடும்பத்தில் மோசமான மரணம் நிகழ்ந்தால் கூட வழக்கம் போல் பொய் தான் சொல்கிறான் என நினைத்து இவன் குணம் தெரிந்தவர்கள் உதவ முன் வரமாட்டார்கள். எதாவது ஒரு கெட்ட விஷயத்திற்கு அடிமையாகும் போது அடுத்தவர்களிடம் உண்மையாக இருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அவனிடம் அனுதாபம் காட்டுபவதோ, அவனை நம்புவதோ பலனில்லை. யவனிகா அவனை திருத்த முடியாவிட்டாலும் இனியும் அவன் கெட தான் காரணமாக இருக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் இனி கடன் கொடுப்பதோ, கொடுத்த கடனை கேட்டு வாங்காமல் இருப்பதோ கூடாது.

யவனிகாவின் 500 ரியால் செலவில்(!) படித்து மிகவும் இரசித்து, சிரித்த அனுபவம் இது. ஆனால், இதையெல்லாம் கடந்து மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் தன் தாயை கொன்று, காதலி(!)யை வாழ்விக்கும் அவன் இழிவுச்செயல் முள்ளாய் உறுத்துகிறது..!!

நுரையீரல்
05-11-2007, 07:24 AM
இந்தக் கதையைப் படித்ததிலிருந்து, நம் தளத்தில் நிறைய ஃபைனான்ஸியர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

என்னைப் பொறுத்த வரையில் கடன் கொடுக்கலாம் தவறில்லை. எனக்கு ஒரு சமயத்தில் ஒரு நாள் தேவைக்காக சுமார் 15,00,000 இந்திய ரூபாய் தேவைப்பட்டது. அந்த ரூபாயை என் பெயரில் வங்கியில் போட்டு அதற்கான ரசீதை வாங்கி ஒரு நிறுவனத்தில் காண்பிக்க வேண்டும். அந்த அளவு பணத்தை வைத்திருந்த சொந்த அண்ணன் உதவவில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் கூட உதவவில்லை. "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா" என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்பதை நிரூபித்தனர் (தமிழன் இன்னொரு தமிழனின் தலையில் கல்லைத் தூக்கிப் போடாமல் இருந்தால் சரி தான்).

ஆனால், எனக்காக என்னுடன் பணி புரியும் ஒரு சவுதி தந்தான். அடுத்த நாள் அந்தப் பணத்தை நான் திருப்பியும் கொடுத்தேன். அந்த ஒரு நாள் கடனும், பெரிய தொகையும் மிகவும் உதவிகரமாக இருந்தது. கடன் கட்டாயமாக பலரது வாழ்வியலை அழகாக அமைப்பதற்குப் பயன்படுகிறது. பெரும் பெரும் தொகைகளை எந்த வித ஜாமீனும் இல்லாமல் வெறும் நட்பின் பெயரிலேயே கொடுத்து வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.

இம்மாதிரி கதைகளும், சிலரது பின்னூட்டங்களும் கடன் கொடுக்கும் சில நல் உள்ளங்களை கடன் கொடுக்காமல் செய்து விடுமோ என்ற பயம் தான் எனக்கு எழுகிறது. சரிதானே யவனியக்கா........

என்னுடைய கருத்து கண்டிப்பாக கடன் கொடுங்கள், அதைத் திருப்பி வாங்கும் தெம்பு இருந்தால்.

யவனிகா
05-11-2007, 10:01 AM
சரி... டிசம்பர் 1 ஆம் தேதி சம்பளம் வந்ததும் நீங்க ஒரு கதை ரெடிபண்ணி டைரக்ட் பண்ணுங்க அந்த பங்களாதேசி முன்னாடி..!


என்ன கதைன்னு சொன்னேன்னா உதவியா இருக்கும் பூமகள்.பின்னூட்டத்திற்கு நன்றி.

யவனிகா
05-11-2007, 10:03 AM
செண்டிமெண்டெல்லாம் பாக்கக்கூடாது அக்கா....கட் அண்ட் ரைட்டா சம்பளத்திலேயே புடிக்கிற வழியப்பாருங்க....

ஆமா என்ன செய்வது...சென்டிமென்ட்டிலேயே பொறந்து அதிலேயே வளந்தாச்சு...முயற்சிக்கறேன்..நன்றி சகோதரா!

அன்புரசிகன்
05-11-2007, 10:11 AM
கடன்... ரொம்ப பெரியவார்த்தைதான்...

என்னுடைய கருத்து கண்டிப்பாக கடன் கொடுங்கள், அதைத் திருப்பி வாங்கும் தெம்பு இருந்தால்.

ராஜாவின் இந்த வாக்கில் 100% உண்மை உண்டு. நாம் சொந்தஊரை விட்டு மத்திய கிழக்கிற்கு சேவை செய்ய வரவில்லையே... அனைவரும் உழைப்பிற்காகத்தான்....

50 சதம் தன்னும் விட்டுவைக்காதீர்கள். உங்கள் பணத்தில் நீங்கள் உரிமை கொள்வதில் தவறில்லை...

யவனிகா .. உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்....

யவனிகா
05-11-2007, 10:14 AM
நமக்கு அறிவு என்னிக்காச்சு தான் வரும் ஆனா மீதி நேரம் எல்லாம் முட்டாள்தனம் தான் வருது.
எனக்கு கொஞ்ச கடன் வேனும் யவனிகா ஒரு 1000 ரியால் தாங்க. நீங்க தான் ஆபீஸிலேயே இரக்க மனசுல்லவங்களாம்

என்ன வாத்தியாரண்ணா நீங்களே இப்படிச் சொன்னா எப்படி?நீங்க சாக்ரடீஸ் அளவுக்கு அறிவாளின்னு நெனைச்சிருந்தேன். பத்தாததுக்கு கமல்கிட்ட வேற எனக்கு ஒரு மீசக்கார அண்ணன் இருக்கிறார்.கடனைத் திருப்பிக் குடுக்கலேன்னா அவருகிட்ட புடிச்சி குடுத்திருவேன் சொல்லிருக்கேன் ஜபர்தஸ்தா!அவனும் ஒத்தைக்கு ஒத்தை பாக்கிறேன் உங்க அண்ணணைனு சொன்னான், தயாரா இருங்க...பந்தயப் பணம் ஆயிரம் ரியால். கமலை நீங்க ஜெயிச்சா அதை நீங்களே எடுத்துக்குங்க!

நேசம்
05-11-2007, 10:18 AM
ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து இருக்கும் உலகத்தில் கடன் கொடுங்கள்.அவர் என்னை மாதிரி(?) நாணயமானவர்களாக இருந்தால்.நாம் கொடுக்கும் கடன் அவரது தவிர்க்க முடியாத தேவையை பூர்த்தி செய்ய கூடியதாக இருக்க வேண்டும்.

யவனிகா
05-11-2007, 10:44 AM
இதயம் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. நன்றி என்ற வார்த்தை மிகவும் சிறியதாகவே உணர்கிறேன் உங்களின் நெடிய பின்னூட்டத்துடன் ஒப்பிடுகையில்.

எஸ்.ராஜா,அன்பு ரசிகனின் அறிவுரைக்கு நன்றி.

நேசம் இப்பத்தான் தெரியுது நீங்க நாணயத்திலும் நாணயம் தங்க நாணயம் என்று.

பூமகள்
05-11-2007, 10:47 AM
என்ன கதைன்னு சொன்னேன்னா உதவியா இருக்கும் பூமகள்.பின்னூட்டத்திற்கு நன்றி.
அக்கா... கதைகளில் பிச்சு உதறும் தாங்கள் என்னிடம் போயி கேட்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் அக்கா??
எல்லாம் செண்ட்டிமெண்ட் கதை ஒன்றை தயாரித்து கொஞ்சம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் லாலால்லா.................. வையும் பிண்ணனி இசையாக்கி.. கொஞ்சம் அழ வைக்க உங்க கண்களுக்கு வெங்காயம் காட்டி அந்த பங்காளிதேசியின் முன் அரங்கேற்றுங்கள்..!
கதையின் முடிவில் பணம் உங்கள் கரங்களில் இருக்கும்படி செய்யுங்கள்..!
"பதிலுக்கு பதில்..!"
அவர் பாணியில் சென்று அவரிடன் பணம் கறக்கும் வித்தை தான் அக்கா சரிப்பட்டு வரும்.

நேசம்
05-11-2007, 01:42 PM
கொஞ்சம் அழ வைக்க உங்க கண்களுக்கு வெங்காயம் காட்டி அந்த பங்காளிதேசியின் முன் அரங்கேற்றுங்கள்..!
கதையின் முடிவில் பணம் உங்கள் கரங்களில் இருக்கும்படி செய்யுங்கள்..!
[COLOR=Red]"பதிலுக்கு பதில்..!"


மிண்டும் காமெடியாக ஆகாமல் இருந்தால் சரி...? கொடுத்த கடனை பெற்று மச்சான் கிட்டே சபாஷ் பெற வாழ்த்துக்கள்

அமரன்
05-11-2007, 02:28 PM
இதேபோன்ற பிரச்சினைகளில் சிக்கியபோது என் நலன்விரும்பி ஒருவர் சொன்ன அட்வைஸ் "இல்லை என்று சொல்லபழகிக்கொண்டால் பழகியவர்கள் பிரிந்துசெல்லமாட்டார்கள்; பிரிந்துசென்றாலூம் ஒட்டும் சாத்தியம் அதிகம்". அவரை நம்பி நானும் ஒருவருக்கு இல்லை என்றேன்.. அது என்னைத் தீராத வேதனையில் ஆழ்த்தி, அதிகம் செலவு வைத்தது. ராஜா சொன்னது போல திருப்பி வாங்கும் தெம்பிருந்தால் கொடுங்கள் என்பதை விட திருப்பித்தரும் தெம்பு இருப்பவனுக்கு கொடுங்கள் என்பது பொருத்தமாக இருக்கும்.

ஷீ-நிசி
05-11-2007, 03:20 PM
யவனிகா உங்க பணம் வருமா இல்லையான்னு தெரியல...

ஆனால் நகைச்சுவை கலந்து நீங்க எழுதுற இந்த ஸ்டைல் படிக்க மிகவும் சுவாரஸ்யமா இருக்கு... கலக்கறீங்க போங்க!

யவனிகா
05-11-2007, 06:10 PM
மிண்டும் காமெடியாக ஆகாமல் இருந்தால் சரி...? கொடுத்த கடனை பெற்று மச்சான் கிட்டே சபாஷ் பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி நேசம். ஆனா பாஸ் வாங்கிறதே கஷ்டம்..இதில சபாஷ் வேறயா? முயற்சிக்கிறேன்.

நேசம்
05-11-2007, 06:17 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி நேசம். ஆனா பாஸ் வாங்கிறதே கஷ்டம்..இதில சபாஷ் வேறயா? முயற்சிக்கிறேன்.

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.அது சரி நான் அனுப்ப சொன்ன 200 ரியால் என்னாச்சு..!!

யவனிகா
05-11-2007, 06:39 PM
அமரன் அவர்களின் அறிவுரைக்கும் ஷீநிசி அவர்களின் பாராட்டுக்கும் நன்றி, இப்படி ஒரு சம்பவத்தை எழுதி அதன் பின்னூட்டங்களையும் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

உலகில் நான் மட்டும் தான் ஏமாளி என்ற நினைப்பு இப்ப போயே போச்சு!என் கூட எத்தனை பேரு துணைக்கு இருக்கீங்கப்பா! கடன் குடுத்து கவலைப் படுவோர் சங்கம் ஆரம்பிக்கவேண்டியது தான்.