PDA

View Full Version : பிச்சியின் சிறப்பு ரயில்வண்டி - புனல்பிச்சி
04-11-2007, 09:22 AM
எங்கள் கல்லூரியில் மாணவிகளுக்குள் கவிதைப் போட்டி நடக்கும். தன்னைப் பற்றி சிறப்பாக சொல்லவேண்டும். அதுவும் கவிதையில். அந்த கவிதை அப்படியே வளர்ந்துகொண்டே போகும். இதற்கு சில விதிகள் இருக்கு.

முதல் விதி. கொடுக்கப்படும் தலைப்புக்கு ஏற்ப கவிதை எழுதவேண்டும். நான் கீழே எழுதியிருப்பது அக்னி என்ற தலைப்பில் சொல்வதெல்லாம் அக்னி தெறிக்கும் வார்த்தைகளால்தான் இருக்கவேண்டும். அதேமாதிரி நீர் என்ரு தலைப்பு கொடுத்தால் கவிதை சாந்தமாக இருக்கவேண்டும். இப்போது நான் அக்னி என்ற தலைப்பில் எழுதுகிறேன்.

அடுத்தவிதி, தன்னைப் பற்றி மட்டுமே மற்றதனோடு ஒப்பிட்டு சொல்லணும்.

அப்பறம் விதி : சொன்ன சிறப்புகளே திரும்ப திரும்ப வரக்கூடாது.

நான் ஆரம்பிக்கிறேன். நீங்களும் வாங்க ப்ளீஸ்.

நான் பிச்சி.
பிச்சியென்றால்
பித்திகப் பூ

என் வாசனையால்
பூமி அதிரும்

சூரியன் பிளக்கும்

என்னருகே நெருங்க
சத்தியம் வேண்டும்

பிச்சியினருகே நெருங்க
சாத்வீகம் வேண்டும்

நான் பிச்சி

பிறப்பால் சிறந்தவள்
தீ என் தாய்
நீர் என் தந்தை

நான் தாயைப் போன்றவள்

உருளும் கண்களுக்கு மத்தியில்
நெருப்பை கட்டியலைபவள்

அக்க்னித் தேவனை
கூந்தல் முடிப்பில் முடித்திருப்பவள்

நான் பிச்சி.

என் மஞ்சம் வானம்
என் கூரை நிலவு
என் நித்திரை
பூமிக்கு இரவு.

எனக்கு உணவிட
விண்மீன்கள் வேண்டும்

பிச்சிக்கு நீர் தர
அருவிகள் வேண்டும்..

நான் பிச்சி....

எங்கே? நீங்க ஆரம்பிங்க பார்ப்போம்.....

யவனிகா
04-11-2007, 09:38 AM
நான் யவனிகா...
இளமையின்
இளைய மகள்...

இன்று புதிதாய்
உதித்த சூரியன்...

என்றுமே மணக்கும்
காட்டுப் பூ!

மலராய் மணக்கவும்
முள்ளாய் குத்தவும்
தெரியும் எனக்கு!

அணைகளுக்குள்
அடங்காத பெருவெள்ளம்!

தளைகளுக்கு கட்டுப்படாத
காட்டாறு...

சிறைப்பிடிக்க நினைப்பவர்
சின்னாபின்னமாதல்
நிச்சயம்...

நான் யவனி...
வரமருளும் தேவதை..
சமயங்களில் சபிக்கவும் செய்வேன்...

ஒருகையில் பூவும்
மறு கையில் வாளுமாய்
அவதரித்தேன்...

வேண்டியவர்கள்
வேண்டியது
பெறலாம்.

நான் யவனி...

பிச்சி
04-11-2007, 09:48 AM
வாவ் வாவ்.. யவனி அக்கா... மிக மிக அருமை.. ஒவ்வொரு வரிகளும் புதுமை...

அன்புடன்
பிச்சி

யவனிகா
04-11-2007, 11:02 AM
நன்றி பிச்சி...அழகான திரி...ஆரம்பித்தமைக்கு வாழ்த்துக்கள்.

ஓவியன்
04-11-2007, 02:19 PM
நல்லதோர் முயற்சி பாராட்டுக்கள் பிச்சி.....!!

தீயும் நீரும் தொட்டலர்ந்த சத்தியமும் சாத்வீகமும் மட்டும் நெருங்க அனுமதிக்கும் "பிச்சி" கவிதை அக்னியாய் தகிக்க, பதிலாய் வந்து ஒரு கையில் பூவுடனும் மறுகையில் வாளுடனும் வந்து குதித்த "யவனி" கவிதை சூரியனாய் சுடுகிறது....!!

பாராட்டுக்கள் இருவருக்கும், இந்த திரியில் ஓவியக் கவிதையும் வந்து கலக்கும்.....!! :icon_b:

மனோஜ்
04-11-2007, 03:57 PM
அருமை பிச்சி நல்ல தொடக்கம் வாழ்த்துக்கள்
யாவனி(ய)க்கா தங்கள் வீர கவிதை அருமை நன்றி

பிச்சி
07-11-2007, 10:23 AM
நல்லதோர் முயற்சி பாராட்டுக்கள் பிச்சி.....!!

தீயும் நீரும் தொட்டலர்ந்த சத்தியமும் சாத்வீகமும் மட்டும் நெருங்க அனுமதிக்கும் "பிச்சி" கவிதை அக்னியாய் தகிக்க, பதிலாய் வந்து ஒரு கையில் பூவுடனும் மறுகையில் வாளுடனும் வந்து குதித்த "யவனி" கவிதை சூரியனாய் சுடுகிறது....!!

பாராட்டுக்கள் இருவருக்கும், இந்த திரியில் ஓவியக் கவிதையும் வந்து கலக்கும்.....!! :icon_b:

எங்கேன்ணா உங்க ஓவியாக்னி?

அன்புடன்
பிச்சி

நேசம்
07-11-2007, 10:29 AM
அசத்தலான திரி ஆரம்பித்த பிச்சி க்கு வாழ்த்துக்கள்.கவிதைகள் அருமையாக இருந்தது.

பூமகள்
07-11-2007, 10:30 AM
பிச்சி..... கலக்கல் திரி..!!
தொடர்ந்து என் அக்னிப்பூவும் பிரவேசிக்கும் விரைவில்..!!
வாழ்த்துகள் பிச்சி..!!
யவனி அக்காவின் கவிதையும் அருமை..!! எப்படியோ இதன் மூலம் அன்புச் சகோதரிகளின் அக்னி முகம் தெரிந்தது..!!

பிச்சி
07-11-2007, 10:45 AM
நன்றி நேசம் அண்ணா, பூமகள் அக்கா

அன்புடன்
பிச்சி

பூமகள்
07-11-2007, 10:45 AM
நான் பூமகள்...!

புதிதாய் பிறந்த
அக்னிப் பிழம்பை
இதழாக்கி வந்தவள்..!!

நேசத்தில் மெந்தீபம்..!
நெருடினால் தீப்பந்தம்..!

உண்மைக்கு உற்றவள்..!
பொய்மைக்கு ஊசியிவள்..!

பூவைப் பெற்றெடித்த
பூந்தாய் அன்பின் எரிமலை..!

பூந்தந்தை அறிவின் எரிமலை..!

பூந்தமையன் பேசா வன்மலை..! -ஆயினும்
பவித்திர சுடர்மகன்..!

நான் பூமகள்...!!

பூ இங்கு நெருப்புக் கொத்தாய்..!
பூ விரும்புவது கவிநெருப்பு சத்தாய்..!

பூ படிக்க விழைவது தாவர நுண்ணியல்...!
படித்தது கண்ணில் தீப்பொறி பறக்கும் கணினி பொறியியல்..!

நான் பூமகள்..!!

நேசம்
07-11-2007, 10:53 AM
யாரும் அசர மாதிரியில்லை.கலக்கல் கவிதைகள் தொடர்வது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் பூமகள்

ஷீ-நிசி
07-11-2007, 10:55 AM
சிறப்பான ஒரு அறிமுக கவிதை! வாழ்த்துக்கள்!

பிச்சி
07-11-2007, 10:59 AM
வாவ்.

சீக்கிரமே அழகான கவிதை சமைத்த பூமகள் அக்காவுக்கு பிச்சியின் வாழ்த்துகள்.

அன்புடன்
பிச்சி

அமரன்
07-11-2007, 10:59 AM
என்னை நான் இன்னும் அறியவில்லை
பின்னர் இந்தப்பக்கம் வருகின்றேன்...

பிச்சி
07-11-2007, 11:01 AM
பூ அக்கா..

கவிதை படைத்த எல்லோருமே பெண்கள்..

ரொம்ப மகிழ்ச்சியாக இருகிறது

அன்புடன்
பிச்சி

பூமகள்
07-11-2007, 11:03 AM
பூ அக்கா..
கவிதை படைத்த எல்லோருமே பெண்கள்..
ரொம்ப மகிழ்ச்சியாக இருகிறது
அன்புடன்
பிச்சி
அதானே... உண்மை தான் பிச்சி..!! பெண்களின் கவியாறு இங்கு காட்டாறாய் ஓடத்துவங்கிவிட்டது..!! :icon_b::icon_b:

எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது பிச்சி..!!

பிச்சி, யவனி, பூமகள்...!! அடுத்தது யாருபா..???!!! :rolleyes::rolleyes:

பிச்சி
07-11-2007, 11:15 AM
அதானே... உண்மை தான் பிச்சி..!! பெண்களின் கவியாறு இங்கு காட்டாறாய் ஓடத்துவங்கிவிட்டது..!! :icon_b::icon_b:

எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது பிச்சி..!!

பிச்சி, யவனி, பூமகள்...!! அடுத்தது யாருபா..???!!! :rolleyes::rolleyes:

ஆமா.. அடுத்தது யாரு?

கஜினி
07-11-2007, 11:25 AM
அதானே... உண்மை தான் பிச்சி..!! பெண்களின் கவியாறு இங்கு காட்டாறாய் ஓடத்துவங்கிவிட்டது..!! :icon_b::icon_b:

எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது பிச்சி..!!

பிச்சி, யவனி, பூமகள்...!! அடுத்தது யாருபா..???!!! :rolleyes::rolleyes:

ஒருவேளை பெண்கள் மட்டும்தான் தற்பெருமை பேசிக்கொள்வார்கள் என்பதாலோ. ஹிஹி. சும்மா கலாய்ச்சேன், கோவிச்சுக்காதீங்க சகோதரிகளே.

பிச்சி
07-11-2007, 11:39 AM
ஒருவேளை பெண்கள் மட்டும்தான் தற்பெருமை பேசிக்கொள்வார்கள் என்பதாலோ. ஹிஹி. சும்மா கலாய்ச்சேன், கோவிச்சுக்காதீங்க சகோதரிகளே.

அப்படியெல்லாம் இல்லை. எங்களை நாங்கள் பறைசாற்றுகிறோம்.

அன்புடன்
பிச்சி

பூமகள்
07-11-2007, 12:34 PM
யாரும் அசர மாதிரியில்லை.கலக்கல் கவிதைகள் தொடர்வது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் பூமகள்
நன்றிகள் நேசம் அண்ணா. :)

மன்மதன்
07-11-2007, 01:17 PM
அருமை.. அருமை..அருமை,.

பூமகள்
07-11-2007, 01:29 PM
அருமை.. அருமை..அருமை,.
மூன்று கவிதைக்கும் அருமை சொன்னதால் மூன்றாவது அருமை எனதாக்கிக் கொண்டு நன்றி நவிழ்கிறேன்..!!

நன்றிகள் மன்மதன் அண்ணா. :)

அறிஞர்
07-11-2007, 02:06 PM
முதலில்... பிச்சி..
தொடர்ச்சி யவனிகா
பிறகு பூமகள்...

முத்தான மூன்று கவி வரிகள்...

அருமையோ அருமை...

பூமகள்
07-11-2007, 02:11 PM
நன்றிகள் அறிஞர் அண்ணா..!!
உங்க வாழ்த்து கிட்டியதில் அளவில்லா அகமகிழ்வு..!!

மனோஜ்
07-11-2007, 03:00 PM
பூ படிக்க விழைவது தாவர நுண்ணியல்...!
படித்தது கண்ணில் தீப்பொறி பறக்கும் கணினி பொறியியல்..!
அருமை கவிதை பூ.....மா என் தங்கையும் தாவர நுண்ணியல் தான்

பூமகள்
14-11-2007, 06:26 PM
நான் பூமகள்..!

அக்னி சிறகுகளை
உருவாக்க
வறுமைவலி பொறுத்தவள்..!

தேளாய்க் கொட்டும்
தீயோரை நெருப்பாய்
சுட நினைப்பவள்..!

நான் பூமகள்..!

அறிவின் அக்னியை
எங்கேனும் கண்டால்
ஜூவாலையில்
ஐக்கியமாகிவிடுபவள்..!


எப்போது வெடிப்பேனென்று
தெரியாத அமைதியான
சுனாமி..!


தீங்கு கண்டு
பொங்குபவள்..!
தன்னைத் தாக்கினாலும்
தகர்ப்பவள்..!

நான் பூமகள்..!

அக்னி
15-11-2007, 01:54 AM
எரிமலைகளை அழைத்து வந்து, கோர்த்து விட்டது யார்..?
பிச்சி, யவனிகா, பூமகள்...
அக்னிக் கவிதைகள்...
எரிக்கும் சூரியன் இரவில் ஒளிக்கும் காரணம் புரிகிறது...

பாராட்டுக்கள் பல...

இரவு வானை எரிந்து கிழிக்கும் எரிநட்சத்திரம்...
நான்... அக்னி..!
வீழ்பவனல்ல...
புதிதாய் தினமும் பிறப்பவன்...
புதுமை தேடிப் பறப்பவன்...

தமிழ் என் சுவாசம்...
தாயகம் என் பாசம்...

அன்பில் பிரகாசம்...
பகையைக் கருக்கும் வாசம்...

நான் என்றும் என் வசம்...

நன்றி...

கஜினி
15-11-2007, 04:16 AM
நான் கஜினி

நான் இஸ்லாமியன் அல்ல
இந்துவும் அல்ல
நான் இந்தியன்

நான் கஜினி

என்னிடம் வேகம் உண்டு
ஆர்வமும் உண்டு
நான் கற்றிடும் மாணவன்

நான் கஜினி

என்னுள் போராட்டம் உண்டு
முயற்சிகள் உண்டு
நான் ஒரு போராளி

நான் கஜினி

என்னுள் புலமை உண்டு
இலக்கியம் உண்டு
இலக்கணமும் உண்டு

நான் கஜினி

என்னுள் குற்றமும் உண்டு
நல்லதும் உண்டு
தவறென்றால் மன்றாடும் மனமும் உண்டு

நான் கஜினி..!

யவனிகா
15-11-2007, 06:16 AM
அழகான தொடர்ச்சிக் கவிதைகள் பூ..கஜினி..பாராட்டுகள்.
ரயில் வண்டி வேகம் பிடிக்கத் துவங்கி விட்டது போலும்.

பூமகள்
15-11-2007, 06:32 AM
பிச்சி... யவனி.. பூ.......... அக்னி... கஜினி................ தொடர்வண்டியின் அடுத்த பெட்டி யாரு பா???

சீக்கிரமா வந்து போடுங்க...!!:D:D

அக்னி அண்ணாவின் கவிதையைப் பாராட்டவே தேவையில்லை. வழக்கம் போல் அழகான சொல்வளம்... அக்னி வார்த்தைகள் இதற்கு மேலும் வாழ்த்தினால் சுட்டாலும் சுடும்...! பாராட்டுகள் அக்னி அண்ணா.

கஜினி படையெடுப்பு அருமை..!
தொடர்வண்டியின் ஒரு பாகமாய் அமைய விரும்பிய உங்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்..!

சிவா.ஜி
15-11-2007, 06:56 AM
நான் சிவா
எனக்குப் பிடித்த வாக்கியங்கள்..
மனிதனை வாசி
நல்லதை யோசி
அயலாரை நேசி

நான் சிவா
நெற்றிக்கண் எனக்குமுண்டு
குற்றமென்று பட்டால்
திறப்பதற்கு
தவறென்று பட்டால்
எனதேயாயினும் எரிப்பதற்கு!

நான் சிவா
அன்பே சிவமென்பேன்
ஆணவக்காரரை சவமென்பேன்!
அச்சமில்லா உள்ளமெனது
அன்பு வாழும் இல்லமெனது!

நான் சிவா
நேர்மை எனது திரிசூலம்
உண்மை எனது கழுத்தரவம்
நானும் பித்தனே
நற்றமிழ் பித்தனே..!

நான் சிவா
அகந்தை எரித்து
அதன் சாம்பல்
மெய் பூசினேன்
அவ்வப்போது நானும்
பொய் பேசினேன்!

நான் சிவா
மாந்தரை மதிக்கும்
குணமெனது
மனைவிக்குப் பாதி
உடலெனது!

அக்னி
15-11-2007, 07:31 AM
அக்னிப் பந்தங்களாய்த் தொடரும்
கஜினி, சிவா.ஜி
கவிகள்.., பற்றி எரியும் தீ...

பாராட்டுக்கள்...

ஆதி
15-11-2007, 07:33 AM
பிச்சி யவனிகா பூமகள் மூன்று தேவியராய் முதல் புள்ளி வைத்து துவங்கிய சுயம் பேசும் கவிகோலம்.. எரிநட்சத்திரமாய் விழுந்த அக்னியின் நெருப்புக்கோட்டை தாண்டி இந்தியனாய் உள்வந்த கஜினியை தொடர்ந்து சிவா நெற்றிகண்ணுடன் நற்றமிழ் பித்தனாய் நுழைந்திருக்கிறார் இந்த இழையுள்.. தன்னைப்பாடி தன்தண்மைப்பாடி தன்மெய்பாடி பறக்கும் ஒவ்வொரு வானம்பாடிக்கும் வாழ்த்துக்கள்..
இந்த ரயில் வண்டியைப் பார்த்து கையசைக்கும் சிறுவனாய்தான் நான்.. தானுணர்ந்து தன்மெயுணரும் தகுதி இன்னும் வரவில்லை.. வந்தப்பின் பாடுகிறேன் பாடாதப் பாட்டெல்லாம்..

பூமகள்
15-11-2007, 07:39 AM
ரயில்வண்டியின் அடுத்த பெட்டியாய் சிவா அண்ணாவின் சிம்மாசனம்..!

அசத்தல் கவிதை...!

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் சிவா அண்ணா.

இந்த ரயில் வண்டியைப் பார்த்து கையசைக்கும் சிறுவனாய்தான் நான்.. தானுணர்ந்து தண்மையுணரும் தகுதி இன்னும் வரவில்லை.. வந்தப்பின் பாடுகிறேன் பாடாதப் பாட்டெல்லாம்..
ஆதி முன் வந்து வாழ்த்து பாடி அசத்திவிட்டீர்..!
வாழ்த்தும் கவித்துவத்தோடே...!

தன்னை முழுதும் உணர்ந்தோர் யாருமில்லை இவ்வுலகில்... உணர்ந்த சில துகள்களை கவித் தேராக்கி மகிழ்கிறோம்..!

இந்த பயணத்தில் புதியவர் பெரியவர் பேதமில்லை..!
ஒன்றாய் பயணிக்கனும்.... தொடர் சங்கிலி கூடிப் பயணிக்கனும்...!

விரைந்து வாங்க.... ஆதியின் ஆதி முதல் அந்தம் அறிய ஆவலுடன் மன்றம்....!!

கஜினி
15-11-2007, 08:07 AM
ஆஹா அருமை ஆதி. அனைவருக்கும் நன்றிகள். தொடர்வண்டி நிற்காமல் பயணம் செய்யவே நானும் விரும்புகிறேன்.

சிவா.ஜி
15-11-2007, 09:06 AM
ஆம் ஆதி.தங்கை பூமகளும்,கஜினியும் சொல்வதைப்போல இந்த வண்டி தொடர்ந்து பயணிக்க வேண்டும்.தன்னை முற்றுமறிந்தவர் யாருமில்லை.ஆனால்...இப்படி ஒரு கவிதை எழுத விழையும் பொழுது ஒரு சிறு மணித்துளியாவது நாம் யார் என்பதை அறிய முற்படுவோம்.அதுவும் இம்மன்றத்தில் மிகப்பெரும்பாலும் யாரும் பொய்யுரைப்பதில்லை.அதனால் கூடியவரை நம்மை அகழ்ந்தாராயத்தான் முயற்சிப்போம்.அதன் வெளிப்பாடாக உதிக்கும் ஒவ்வொரு வரியும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.நீங்களும் எழுதுங்கள்.வாழ்த்துகள்.

ஆதி
16-11-2007, 04:29 AM
ஆ! தீ!யென
தமிழ் பார்த்து ஓடியவந்தான்
இந்த ஆதி!
காரணம்
துவக்கப் படிப்பு இந்தீ!

தீ குறிலில் துவங்கும்
என் இயர் பெயர்
தினேஷ்..

தினேஷ் எனின்
சூரியன்..
ஆனால்
சுடுவது என் குணமல்ல...

நீர்மம் போன்றவன் நான்
சேர்ந்த இடம் தகுந்து
வடிவம் கொள்வேன்..

வெளிப்புறமும் சரி
உட்புறமும் சரி
நான் மென்மையானவன்..
பலாப்போன்று இனிப்பானவன்..

வட்டத்திற்குள் வாழ்பவனன்று
நடு புள்ளிக்குள் வாழ்பவன்..
பேரண்டத்தை வட்டமாக கொண்டு..

வியர்க்குது என
மின்விசிறியும் போடுவேன்
போர்வையும் போர்த்தும்
குணமெனது குணம்..

எதிர்பதங்களால் ஆனவன் நான்
எதிரிகளற்றவன் நான்
எனக்கு மத நம்பிக்கைகளில்லை
கடவுள் நம்பிக்கையுண்டு - நாம்
கடவுளென்ற நம்பிக்கையுண்டு

தோற்ற இடதிலெல்லாம்
ஜெய்திருகிறேன் நான்
காதலைத் தவிர..

என் அடிநீரோட்டதில்
அழியாத தீவாயிருக்கிறது இன்னும்
அந்த முகம்..

ஆங்கிலத்தில் மகிழ்ச்சியெனும்
அர்த்தம் கொண்ட பெயருள்ளவள்
அந்த மகிழ்ச்சியை
எனக்கு தர மறுதவள்..

தோல்விக்கு
அர்த்தமாய் நான்
அழகாயில்லையென
ஆணிதனமாய் சொன்னவள்..

எல்லாம்
ஆறாத ரணங்களாய்
மாறாத வடுக்களாய் மனதில்..

இருந்தாலும்
நான் மகிழ்ச்சியானவன்
அவள் மணமாகி மகிழ்ச்சியாயுள்ளாள்
அறிந்து மகிழ்ச்சியானவன்..

நான் ஆதி..
இவ்வளவுதான்
எனைப் பற்றிய சேதி

சிவா.ஜி
16-11-2007, 04:37 AM
தன் சுயம் நோக்கி, அதை நயம் குன்றாமல் வார்த்தைகளில் வடித்திருக்கும் ஆதியின் பாடைப்பு அருமை.வெறும் புற அழகைப் பார்த்து வருவதல்ல காதல்.எனவே காதலி விலகியதற்காக வருத்தம் வேண்டாம்.அக அழகை அறியும் ஒருவள் உங்கள் வாழ்கையில் வருவாள்.வசந்தம் வசப்படும்.வேதனை விடுங்கள்.சாதனைகள் உங்கள் பாதம் விழக் காத்திருக்கின்றன.வாழ்த்துகள் ஆதி.

கஜினி
16-11-2007, 04:56 AM
அருமை ஆதி.

ஜெயாஸ்தா
16-11-2007, 05:10 AM
பிச்சியின் இயல்பும், யவனிகாவின் இயல்பும் ஒரே பாதையில் பயணிப்பது கவிதையின் மூலம் தெரிகிறது. இவர்கள் அன்பால் கொல்லவும் செய்வார்கள்.... கொள்ளவும் செய்வார்கள். நீதிக்கு ஒரு முகமும் அநீதிக்கு மறுமுகமும் காட்டுபவர்கள். வெம்மையும் குளுமையும் ஒன்றாய் கொண்டவர்கள். அதற்கு யவனிகாவின் ஒருகையில் பூவும் மறுகையில் வாளுமே சாட்சி. மொத்தத்தில் அன்பு செய்வோருக்கு அகல்விளக்காய் ஒளி தரும் இவர்கள், வம்பு செய்வோரை வன்தீயாய் எரித்துவிடுவார்கள்.

பூமகள் பெயருக்கேற்ப சாந்தமானவர். இவரின் வார்த்தைகளில் உள்ள வன்தன்மை இவரின் மனதினில் கிடையாது. இவர் ஒரு குழந்தை மனம் கொண்டவர். அன்பு செய்தோரை நேசித்து, வம்பு செய்தோரை விலக்கியிருப்பார். முகத்தில் கடுமை காட்டும் போது கூட, மனதில் அன்பை விதைத்திருப்பார்.

அக்னி..... இவர் புரட்சியாளர்.... புதுமைகளின் தோழர்..... வார்த்தைகளின் விளைநிலம்.... (என்னுடைய கணிப்பின்படி பார்த்தால் தலையில் முடி இவருக்கு குறைவாகவே இருக்கவேண்டும். ஏனென்றால் மிக அதிகமாக சிந்திக்கிறாரே....! )

கஜினி..... தன்னை பற்றி மிகைப்படுத்தாமல் இயல்பாய் தன்னையே புரிந்திருக்கிறார். இந்த புரிதல்தான் நிச்சயம் அவருக்கு வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளைக் கொடுக்கும். (ஆளவந்தான் பாணியில் மனிதன் பாதி.... மிருகம் பாதி...... ஆனால் இவரிடம் மனிதம்தான் அதிகமாய் ஜெயிக்கும்)

அன்பு நண்பர் சிவா...... கண்ணெதிரே அநீதி நடந்தால் உடலால் தடுக்க வேண்டும். முடியாவிடில் வார்த்தையால் தடுக்க வேண்டும். அதுவும் முடியாவிடில் எண்ணத்தாலாவது தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நன்மதியாளர். பெண்ணுரிமையை எழுதித்தில் மட்டும் பேணுபவர்கள் மத்தியில், வாழ்க்கையில் 'அர்த்தநாரீஸ்வரராய்' பிறருக்கு எடுத்துக்காட்டாய் வாழ்பவர் என்பது அவரின் வரிகளில் தெரிகிறது. (ஆனால் நம் சிவா அண்ணன் இந்த 'அமீகோ' மேட்டர், சோமபானம் அருந்தும் மேட்டரையெல்லாம் அண்ணியிடம் சொல்லியிருக்க மாட்டார் என்பது என் அனுமானம்.)

பொறுமையாய் தன்னையுணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார் நம் புதிய நண்பர் ஆதி. இவரைக்காணும் போது, என்னை காண்பது போல் உள்ளது.

என்னைப் பற்றி விரைவில்........தருகிறேன்.

அருமையான திரியை ஆரம்பித்த பிச்சிக்கு வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
16-11-2007, 05:18 AM
வாழ்க்கையில் \'அர்த்தநாரீஸ்வரராய்\' பிறருக்கு எடுத்துக்காட்டாய் வாழ்பவர் என்பது அவரின் வரிகளில் தெரிகிறது. (ஆனால் நம் சிவா அண்ணன் இந்த \'அமீகோ\' மேட்டர், சோமபானம் அருந்தும் மேட்டரையெல்லாம் அண்ணியிடம் சொல்லியிருக்க மாட்டார் என்பது என் அனுமானம்.)


அப்படியும் சொல்லிவிட்டு இப்படியும் அனுமானிக்கலாமா நன்பரே.என் மனைவியிடம் எதுவும் மறைத்ததில்லை.உண்மையில் சொல்லப்போனால் என் மனைவி எனக்கு ஒரு நல்ல தோழி.தப்பு செய்தாலும் சொல்லிவிட்டு வாங்கிக்கட்டிக்கொள்வது வேறு கதை....ஆனால் சொல்லாமல் இருப்பதில்லை.

கஜினி
16-11-2007, 05:23 AM
அருமையான விமர்சனம் ஜெயஸ்தா அவர்களே. நன்றி.

ஆதி
16-11-2007, 07:00 AM
எனவே காதலி விலகியதற்காக வருத்தம் வேண்டாம்.

ரணமும் ரம்மியமும் இல்லாவிட்டால் கலையும் கவிதையும் இல்லாமற்போகும்.. மறந்துதான் விட்டேன் என் மனதையும் மறந்துதான் விட்டேன் தவற..

என் ஆற்றாமையை ஆற்ற நீண்ட அத்தனை விரலுக்கும் என் நன்றிகள்

அமரன்
16-11-2007, 08:20 AM
எந்நாமம் அமரன்..எந்நாவோ சாமரம்.
எந்நாளும் மாணவன்..எந்தாளோ என்வசம்.

மனவாட்டத்தை விரட்ட போராடுபவன்
தன்னைப்போல் மற்றவனை நினைப்பவன்
சீரியசொற்களை கேடயமாகக் கொண்டவன்..
நேரியபாதை கொள்கையில் நிலைப்பவன்.

வாழ்வை அழிப்போருக்கு போர்த்துவேன் சால்வை
இயற்கையை சீரழிப்போர்க்கு சாத்துவேன் மாலை
சால்வையும் மாலையும் எனது விழிப்பார்வை
பார்வையோ.. கர்ணனை சுற்றிய குந்தியின் சேலை.

மழலை அழுங்குரல் கேட்டு சீற்றம் கொள்வேன்
அழலை அகற்றாதோர் கண்டால் சாந்தம் கொல்வேன்.
அவர்களை அப்படியே கட்டி அணைப்பேன்
அப்போது நான் கட்டிப்பிடி வைத்தியன்.

நிழலை மறுப்போர் என்மனதில் உயர்ந்தோர்
நிழலை மிதிபோர் எண்ணமதில் தாழ்ந்தோர்..
எழிலை ரசிப்போர் என்வரியில் சுவைஞர்
எழிலை புசிப்போர் என்வரையில் கயவர்..

தாழ்தோருக்கும் கயவர்க்கும் தாழாது எந்தனம்
உயர்ந்தோர்க்கும் சுவைஞர்க்குமே என்வந்தனம்.
எந்நாமம் அமரன்..எந்நாவோ சாமரம்.
எந்நாளும் மாணவன்..எந்தாளோ என்வசம்..!

ஆதி
16-11-2007, 08:27 AM
அடிக்கோடிட்டு சொல்லும்படி அத்தனைவரிகளும் அருமை அருமை..
வாழ்த்துக்கள் அமரன்..

யவனிகா
16-11-2007, 09:12 AM
ரயில் வண்டி வேகம் பிடிக்கத் துவங்கி விட்டது....

அக்கியின் கவிதையால் பகைமைக் கருகி கருகல் நெடி இங்கே அடிக்கிறது. சூடோ சூடு. தொட்டவர் விண்டிலர்.

சிவா அண்ணன் சிவனையே கருவாக வைத்து அனல் பறக்கக் கவிதை தந்துவிட்டார். கவிதையின் கனல் தாங்க மாட்டாமல் நாங்கள் கங்கையை தலையில் சூடுவதாக உள்ளோம். அனுப்பி வையுங்கள் அண்ணா!

தொடர்ந்த ஆதியின் கவிதை நீறு பூத்த நெருப்பைப் போல மேலே சுவடு ஏதுமின்றி...ஆனால் உள்ளே தகிக்கும் சூடாய் உள்ளத்துக் காதல் சொல்கிறது.

அடுத்து அமரன்...சொல்லவே வேண்டாம்...அவரது பாணியில் அசத்தி விட்டார்.
அடுத்தடுத்த பெட்டிகள் யார் நிரப்பப் போகிறார்கள்.

ஆவலுடன்....

பூமகள்
16-11-2007, 11:13 AM
பூமகள் பெயருக்கேற்ப சாந்தமானவர். இவரின் வார்த்தைகளில் உள்ள வன்தன்மை இவரின் மனதினில் கிடையாது. இவர் ஒரு குழந்தை மனம் கொண்டவர். அன்பு செய்தோரை நேசித்து, வம்பு செய்தோரை விலக்கியிருப்பார். முகத்தில் கடுமை காட்டும் போது கூட, மனதில் அன்பை விதைத்திருப்பார்.
எப்படி இப்படி எல்லாம் நண்பரே..??!!!! :eek: :sprachlos020:
மிக மிக சரியான கணிப்பு...! :icon_b:

பூவை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறது தமிழ் மன்றம்.

என்னைத் தோண்டி சுரங்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
பயணத்தின் இடையே விரைவில் இன்னும் புரியவைக்க வருவேன்.


ஜெயாஸ்தா அவர்களே, தங்களின் அடையாளம் பதிக்க விரைந்து வாருங்கள்.......!


அன்பர் தினேஷ்(ஆதி),

உங்களின் மனத்தின் ஆழம் உணர முடிந்தது. அதில் இருந்த மர்ம முனகல்களையும் கேட்க முடிந்தது. விரைவில் மனம் கவர் இல்லாள் வருவாள்..!

அகம் பார்க்கும் அங்கவைகள் ஏராளம் இன்னும் உளர் தோழரே.!

கவலை வேண்டாம்..! வாழ்த்துகள்..அமரன் அண்ணா...

ஒன்னும் சொல்லுவதற்கில்லை...! இந்த சின்னப் பெண்ணால் என்ன சொல்லி பாராட்டு முடியும்??

மடு எப்படி மலையை பாராட்டுவது?? புரியாமல் தவிக்கிறேன்.

உங்களின் கவிகள் எங்களுக்கு சிறந்த புத்தகம்.

இன்னும் இன்னும் புத்தகம் தரவேண்டும் என்று மட்டும் எப்போதும் அனைவரின் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்.

ஆதி
16-11-2007, 12:03 PM
[COLOR=DarkGreen]


அன்பர் தினேஷ்(ஆதி),

உங்களின் மனத்தின் ஆழம் உணர முடிந்தது. அதில் இருந்த மர்ம முனகல்களையும் கேட்க முடிந்தது. விரைவில் மனம் கவர் இல்லாள் வருவாள்..!

அகம் பார்க்கும் அங்கவைகள் ஏராளம் இன்னும் உளர் தோழரே.!

கவலை வேண்டாம்..! வாழ்த்துகள்..

உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி ..

அக்னி
16-11-2007, 09:56 PM
தோற்ற இடதிலெல்லாம்
ஜெய்திருகிறேன் நான்
காதலைத் தவிர..

காதலை ஜெயிக்கவில்லை என்றால்,
காதலிடம் தோற்றதாய் அர்த்தமில்லை...
காதலுக்காய் வாழ்வைத் தடம் மாற்றாதவரை,
காதல்.., தோல்வியில்லை...

முதுமை வரும்போது அருமை புரியும்,
அழகா... அன்பா...
எது மேன்மை என்று காலம் சொல்லும்...

நீங்கள் வாழ்வைத் தொலைக்கவில்லை...
காதல் வாழ்வில் மகிழும் நீங்கள்,
உங்கள் வாழ்வைப் பாதுகாத்ததற்கு,
நன்றி கூறி விடுங்கள் உங்கள் காதலுக்கு...

அக்னிக் கவிக்குப் பாராட்டுக்கள்...

அக்னி
16-11-2007, 10:05 PM
அக்னி..... இவர் புரட்சியாளர்.... புதுமைகளின் தோழர்..... வார்த்தைகளின் விளைநிலம்.... (என்னுடைய கணிப்பின்படி பார்த்தால் தலையில் முடி இவருக்கு குறைவாகவே இருக்கவேண்டும். ஏனென்றால் மிக அதிகமாக சிந்திக்கிறாரே....! )

அட... அடைப்பு மாறி வந்திருக்க வேண்டும்...
உண்மையை அடைப்புக்குள் போட்டு மறைக்கலாமா..?

அமர கவி... தீப் பிளம்பு...
பாராட்டுக்கள்...

சிவா.ஜி
17-11-2007, 03:30 AM
அமரனின் கவியில் அவரை அறிந்தோம்.அச்சாய் ஒரு ஆதர்ஷ புருஷனைக் கண்டு அக மகிழ்ந்தோம்.
தனக்குள் இருக்கும் வெவ்வேறு குனாதிசியங்களை அழகுக் கவியில் அருமையாய் வெளிப்படுத்தியுள்ள பாங்கு பிரமாதம்.
யவனிகா சொன்னதைப் போல ரயில் வண்டி வேகம் பிடிக்கத்துவங்கியுள்ளது.இன்னும் எத்தனை ஓட்டுநர்கள் இந்த வண்டியை முன் நகர்த்த முன் வருகிறார்களென்று அறிந்து கொள்ள ஆவல் அதிகரிக்கிறது.

பூமகள்
29-01-2008, 10:53 AM
அக்னி சிறகுகளில் சிறகடித்தது போதுமெனில்.. யாரேனும் வந்து அடுத்த தலைப்பை நல்கி தொடர்வண்டியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லலாமே..!!

பொறுப்பாளர்கள் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்.

ஆவலுடன்,

அக்னி
29-01-2008, 11:38 AM
அக்னி சிறகுகளில் சிறகடித்தது போதுமெனில்.. யாரேனும் வந்து அடுத்த தலைப்பை நல்கி தொடர்வண்டியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லலாமே..!!

பொறுப்பாளர்கள் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்.

ஆவலுடன்,

தாங்களே ஒரு தலைப்பைக் கொடுத்து, புகைவண்டி தொடர்ந்து செல்ல பச்சைக் கொடி காட்டலாமே...
பிச்சியின் எண்ணப்படி, ஒவ்வொருவரின் இயல்புகளையும் வெளிப்படுத்தக்கூடிய வண்ணம் தகுந்த தலைப்பைக் கொடுங்களேன்.
பிச்சி தனது புகையிரதம் தொடர்ந்தும் பயணிப்பதை விரும்புவார் என்றே நம்புகின்றேன்.

அமரன்
29-01-2008, 11:46 AM
தாங்களே ஒரு தலைப்பைக் கொடுத்து, புகைவண்டி தொடர்ந்து செல்ல பச்சைக் கொடி காட்டலாமே...
பிச்சியின் எண்ணப்படி, ஒவ்வொருவரின் இயல்புகளையும் வெளிப்படுத்தக்கூடிய வண்ணம் தகுந்த தலைப்பைக் கொடுங்களேன்.
பிச்சி தனது புகையிரதம் தொடர்ந்தும் பயணிப்பதை விரும்புவார் என்றே நம்புகின்றேன்.

நிச்சயமா நானும் நம்புகிறேன் அக்னி..

பச்சை வருணங்கள் மட்டும்
பொறுப்புகளை எடுக்க வேண்டியதில்லை.
மற்றவர்கள் எடுக்க
பச்சைக்கொடி காட்டுவதுடன்
இடராத் தொடர் பயணத்திற்கு
உறுதுணையாகவும் இருப்பார்கள்
என்பதை உணர்த்திய அக்னிக்கு
நெஞ்சு நிமிர்த்தி ஒருசல்யூட்.

பூமகள்
29-01-2008, 11:54 AM
பிச்சியின் தொடர்வண்டி அடுத்த கட்ட பயணத்தை"புனல்"என்ற தலைப்பு கொண்டு தொடர வேண்டுமென்று விரும்புகிறேன்..

என் இனிய கவி மக்களே.. :)
கவிப்புனல் அருவியாய் சங்கமிக்க வாரீர்...!! :icon_rollout:

மடைதிறந்து வாரீர்...!! :icon_b::icon_b:

அக்னி
29-01-2008, 12:03 PM
பிச்சியின் தொடர்வண்டி அடுத்த கட்ட பயணத்தை"புனல்"என்ற தலைப்பு கொண்டு தொடர வேண்டுமென்று விரும்புகிறேன்..
பிச்சியின் தொடர்வண்டிப் பயணத்தை முன் நகர்த்தும் பூமகளிற்குப் பாராட்டுக்கள்.
தலைப்பு புனல் என்று மாற்றப்படுகின்றது...