PDA

View Full Version : எனக்குள்...!



அமரன்
03-11-2007, 03:43 PM
ஒருதள உணர்வை
உணர்ந்ததாக உணர்த்த
பாரங்களை இறக்கும்போது
ஈரமான காகிதப்பூக்கள்
எனது கவிப்பக்கங்களில்
காவிப்பாக்களாக....

பாலமாக்கும் முனைப்பில்
என்னுடன் அவையும்
பலமான நினைப்பில்
அவையுடன் நானுமென
தொடரும் தருணங்கள்
கண்ணாமூச்சி ஆட்டமாட...

வாழ்வைத் துவக்கும்
அழுத்தமான முடிவு தேடும்
தோரணையில்,
எனக்குள் உயிர்த்த எண்ணங்கள்
ஊர்ந்து மோகம் உசுப்ப...

முகத்தில்
அகத்தின் முகம் காண
அழுத்தும் காவிகளுடன்..

எதுதான் காதல் என்று
புரியாதபடி
விழிவரையும் பாதைகளில்
தொடர்கின்றேன்
துடிக்கும் அகக்கண்ணுடன்....!

பூமகள்
03-11-2007, 04:25 PM
"மூச்சு முட்டும்
நினைவுகளோடு
முக்தி சித்தி
வேண்டி ஆன்மா
தேடும் தேடல்கள்..!!

தீரா கனவுகளோடு
தினம்தினம் போராட்டம்..!

காவியின் வழி தேடி
கலங்கி குழப்பும்
அகத்தோடு போராடி
அன்பு விஞ்சிற்றோ??

காதலது புரியாமல்
விழியோர வழியிலேயே
வாழ்வு செல்ல
அகக்கண் வழிநடத்துதோ??"
படிக்க படிக்க இன்னொரு தடவ படிக்கச் சொல்கிறது என்னுள்..!!
பாராட்டுகள் அமரன் அண்ணா.

ஆதவா
06-11-2007, 05:24 AM
முடிவில் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பதை அடியேனுக்குச் சுட்டுங்களேன்....

அமரன்
06-11-2007, 06:42 AM
முடிவில் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பதை அடியேனுக்குச் சுட்டுங்களேன்....
ஆனாலும் இது அதிகப்படி ஆதவா...எது காதல் என்று தெரியாதபடி காதலைத் தேடும் ஒருத்தனைப் பார்த்து இப்படிக்கேட்கின்றீர்களே..!

யவனிகா
06-11-2007, 07:45 AM
தேடுங்கள்...கிடைக்கும்...வாழ்த்துக்கள்...தேடியது கிடைக்க!

மகிழ்ச்சி..தேடியது இன்னும் கிடைக்காததால்...எங்களுக்கு கவிதை கிடைத்ததே?

பாராட்டுக்கள் அமரன், பூமகள்.

இளசு
07-11-2007, 08:11 PM
பென்ஸீன் மூலக வடிவம் யாதென அலைந்த
வேதியியல் அறிஞனின் வேதனையையும் விஞ்சும்
காதல் எது ? எங்கு? என அலையும்
காளை/காரிகை மன உளைச்சல்..

கனவில் வந்ததாம் அறிஞனுக்கு விடை..
காகிதத்தில், அலைபேசியில், கணினிணையத்திலா?
கண்ணிமை மினுக்கலிலா, கன்னக்கதுப்புச் சிவப்பினிலா?

எப்படி வரும்? எப்போது வரும்? எங்கிருந்து வரும்?

வரும் வழிதான் காதலின் உச்சச்சுவையே..
காத்திருக்கும் பசிதான் முக்கிய ருசியே!

---------------------------

அமரனுக்கு வாழ்த்துகள்..
பாமகளுக்குப் பாராட்டுகள்..

அக்னி
10-11-2007, 09:14 PM
காவியுடுத்தினாலும் வீழ்த்தும் கண்ணி...
என்றும் விலத்தமுடியா ஒட்டுண்ணி...
இன்ப.., துன்ப.., கண்ணீர்...
காதல்...

பாராட்டுக்கள் அமரன்...
பின்னூட்ட வித்தகர்கள் அனைவர் பதிவுகளும், அழகுக் கவர்ச்சி...
அனைவருக்கும் பாராட்டுக்கள்...

சாம்பவி
10-11-2007, 10:47 PM
காவியுடுத்தினாலும் வீழ்த்தும் கண்ணி...
என்றும் விலத்தமுடியா ஒட்டுண்ணி...
இன்ப.., துன்ப.., கண்ணீர்...
காதல்...
.

இலக்கின் மீது மட்டுமே
இருக்க வேண்டிய கவனம்.,
இடம் மாறிய காரணத்தால் ..,
காவியின் சாயம் ......
வெளுத்துத் தான் போனதுவோ....... !
பாவம் ஓரிடம் இருக்க
பழி கன்னியின் மீதோ....!

சூரியன்
11-11-2007, 04:43 AM
உங்களின் தேடல் ஒருநாள் முடியும்.
அப்போது எல்லாம் உங்களுக்கு தானாக புரியும்.
நல்ல கவி பாராட்டுக்கள் அமரன்.

அக்னி
11-11-2007, 04:48 AM
இலக்கின் மீது மட்டுமே
இருக்க வேண்டிய கவனம்.,
இடம் மாறிய காரணத்தால் ..,
காவியின் சாயம் ......
வெளுத்துத் தான் போனதுவோ....... !
பாவம் ஓரிடம் இருக்க
பழி கன்னியின் மீதோ....!

கன்னி என்று கூறவில்லை...
கண்ணி என்று கூறினேன்...
பொறியாய் நான் கூறியது,
பெண்ணாய் மாறியதேனோ?

அமரன்
11-11-2007, 11:40 AM
கன்னி என்று கூறவில்லை...
கண்ணி என்று கூறினேன்...
பொறியாய் நான் கூறியது,
பெண்ணாய் மாறியதேனோ?
கவிப்பால் தயாரித்தது ஆண்பால்
ஆதலால்
கண்ணியின் தயாரிப்பகம்
ஆனது பெண்பால்....

ஒட்டு மொத்தத்தில்
எப்பாலும் அப்பால்
மீது கொண்ட பற்றால்
படிக்குது தமிழ் பா பால்...!

கிடைக்குது
தேன் கலந்த சுவைப்பால்...!