PDA

View Full Version : வெக்கை



ஆதி
02-11-2007, 06:11 PM
வெயிலில் மழைபோல்
வழியும்
உன் கோப விழிகளின்
கண்ணீர்துளிகள்..

குமுறும் வானமாய்
உன் மௌனத்தினுள்
வார்த்தைகள்..

பேசாமலும்
பேசிவிட முடியாமலும்
தாழ்ந்துயரும் உன் பொறுமையின்
அளவுகோடுகள்..

ஆதிக்க செருக்கில்
முகம்சுழித்த சொற்களால்
என் குடும்பத்தார்
உன் இதயம் கிழித்த
தருணங்களில்...

நானும்-
அமைதியாய் தானிருந்தேன்
உன் அவமானங்களை
கண்டும் காணாத கயவனாய்...

வெயில் காற்று சுடும்
மின்சாரமற்ற
இந்த இரவில்..

அழுது அழுது
ஆழ்ந்த தூக்கத்தில் எழுந்து
'வெக்கையா ?'
'விசுறவா ?' என்கிறாய்..

பதிலற்று குற்ற உணர்வில்
நீர் தெளித்த பூவாய்
ஈரமாயின என் இமைகள்..

உன் மனதுக்குள் இருக்கும்
வெக்கைக்கு
யார் விசுறுவது ?

- அன்பன் ஆதி

ஓவியன்
02-11-2007, 06:31 PM
பார்த்து, பார்த்து பதனிடப்பட்ட தேர்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் கவிதைக்கு புது மெருகூட்டுகின்றன. முத்தாய்ப்பாய் ஒரு முரணாக முடித்த முடிவு அருமை....

உங்களிடமிருந்து அழகாக கவி வருகிறது ஆதி!

தொடர்ந்து அசத்துங்கள் நாமும் உங்கள் கவி மழையில் நனைந்து மகிழக் காத்திருக்கின்றோம். :)

அமரன்
02-11-2007, 07:17 PM
வெயிலில் மழைபோல்
வழியும்
உன் கோப விழிகளின்
கண்ணீர்துளிகள்..

மழையையும் வானையும்
ஒன்றுசேர்த்த வான் முகத்தில்
குதூகல ரேகைகள்....எப்போதாவது
வனவில்லாகத் தோன்றும்...!

பார்ப்போர் மனமும்
குதூகலத்தில் துள்ளும்...!

இந்த வெக்கையில்
முகக்கண் பொழிந்த மழையுடன்
அகக்கண் ஒளிக்கீற்றும் சேர
பிறந்தது ஒரு வானவில்...!

இந்த வானவில்லாவது
நிலையான பரவசம் பரப்பட்டும்..!

ஆதி
05-11-2007, 03:01 AM
நன்றி அமரன் :)

பென்ஸ்
08-11-2007, 11:48 AM
வாழ்த்துகள் ஆதி...
நீதி கதைகள் சொல்லுவது போல் கவிதை எழுதி கொடுத்து சிந்திக்க வைப்பது உங்களும் அழகு என்றல் எனக்கு அதில் சுகமே...
அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள தெரிந்தவன் , காயபடும் போது வாய் மூடி இருந்ததன் பொருள் புரிந்திருக்கவில்லை....
எதிரியாயிருந்தாலும் முதுகில் குத்தகூடாது
மனைவியை மனதில் குத்தும் போது இவன் குருடன் என்றால் இவனுக்கு திருமணம் எதற்க்கு...
சபையில் துயில் உரியவிட்டு, படுக்கையில் பாசமா... கேடு கெட்டவன்...
இவளும் ஒரு "ஆண்பிள்ளைக்கு" விசுறிவிட்டிருந்தால் இவள் மொளனத்தை பாராட்டி இருப்பேன்...
நல்ல கவிதையாகினும்... கதாபாத்திரங்கள் சிறக்கவில்லை.

ஆதி
08-11-2007, 05:31 PM
அன்பின் பென்ஸ்,

அமிலம் வழியும் வார்த்தைகளினால் ஒரு வாழ்த்தையும் கொஞ்சம் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி சென்று உள்ளீர்..

பலக்குடும்பங்களின் கட்டமைப்புதான் ஒரு சமூகம்.. ஆதலால் ஒவ்வொரு குடும்பம் சிறக்குமே ஆயின் ஒரு சமூகம் தொடமுடியாத புகழ் உச்சிக்கு செல்லும் என்பதின் அடிநீர் ஓட்டமே இக்கவிதையின் கரு..

வேறு எந்த பின்னோக்கமும் இல்லை, ஏனெனில் எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.. :)

நன்றி, ஆதி

அக்னி
10-11-2007, 09:26 PM
தீ மூட்டிய வார்த்தைகள்,
மனதிற்குள் எரிமலையாய்,
முட்டி வெடிக்கும்போது..,
எட்டிப் பார்க்கும் கண்ணீர்,
இன்ப பன்னீராய் தெரிந்தால்,
இரு மன மண வாழ்வு...
கானல் நீர் கூடவல்ல...
கழிவு நீர்...

அமரன் சொல்வது போல்,
வானவில் ஒளிரட்டும் பார்வைகளில்...
இனியும் இல்லை கழிவு நீர், என்று சொல்லி...

பாராட்டுக்கள் ஆதி...
மற்றும் அமரன்...

பென்ஸ் அண்ணாவின் தெறிக்கும் வரிகள், சொல்கின்றது கவிதையின் வெற்றி...
ஏனெனில் கவிஞரின் கவி கற்பனை ஆகையால்...

ஆதி
12-11-2007, 02:31 AM
நன்றி அக்னி அவர்களே!

ஆதி
15-02-2008, 06:16 AM
பார்த்து, பார்த்து பதனிடப்பட்ட தேர்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் கவிதைக்கு புது மெருகூட்டுகின்றன. முத்தாய்ப்பாய் ஒரு முரணாக முடித்த முடிவு அருமை....

உங்களிடமிருந்து அழகாக கவி வருகிறது ஆதி!

தொடர்ந்து அசத்துங்கள் நாமும் உங்கள் கவி மழையில் நனைந்து மகிழக் காத்திருக்கின்றோம். :)

பின்னூட்டத்திற்கு தாமதமான என் நன்றிகள் ஓவியன்..


அன்புடன் ஆதி

ரங்கராஜன்
24-08-2010, 11:28 AM
டேய் மச்சி படித்தவுடன் சிலிர்த்து விட்டது டா, அருமையான அழகான சோகம் கலந்த கவிதை.......... கவிதையை படித்தவுடன் சோகமாக இருந்தாலும் அதை அனுபவிக்க வேண்டும் போல தோன்றுகிறது....

அதுவும் கடைசி வரியான

உன் மனதுக்குள் இருக்கும்
வெக்கைக்கு
யார் விசுறுவது ?

அந்த வரியில் தலைவனுடைய மனப்போராட்டதைச் சொல்லுது...... நான் படித்த சில கவிதைகளில் மனதிற்கு பிடித்த கவிதை இது..........

இத்தனை நாள் நான் உன்னுடன் பழகி உள்ளேன்........... உன்னுடைய பெயர் எனக்கு தெரியாது, நீ சொன்னீயா என்பது நினைவில்லை, ஆனால் என் மனதில் இருக்கும் பெயர் ஆதி மட்டும் தான்................ஆனால் இப்போ எதோ ஆதன் என்ற பெயரை வைத்து இருக்கிறாய்.......... (அடுத்து ஆதாம், .... ஏவாள் என்று மாற்றி்க கொண்டே போவாய்:lachen001::lachen001::lachen001::lachen001:)

............ நீ ஒரு நல்ல கவிஞன்(முன்பு காலியாக உள்ள இடத்தில் உன்னுடைய உண்மையான பெயரை போட்டுக் கொள்)

தாமரை
24-08-2010, 12:14 PM
ஆதிக்க செருக்கில்
முகம்சுழித்த சொற்களால்
என் குடும்பத்தார்
உன் இதயம் கிழித்த
தருணங்களில்...

நானும்-
அமைதியாய் தானிருந்தேன்
உன் அவமானங்களை
கண்டும் காணாத கயவனாய்.

--------------------------------------------------------------------------

கூட்டுக் குடும்பத்தில் அனுபவமின்மை இவ்வரிகளில் வெளிப்பட்டு விடுகிறது..

இதற்குப் பதிலாக செய்யாத தவறுக்கு அவளை நீ கடிந்து கொண்டதாக.. எங்கோ இருக்கும் கோபத்தை இங்கே காட்டியதாக எதையாவது சொல்லி இருக்கலாம்.

செய்யாத தவறுக்கு நாமிருக்கும் போது வேற யார் நம்ம மனைவியைத் திட்ட முடியும்..? நாமதான் திட்டணும்...:eek::eek::eek:


நல்லதை யார் மட்டும் செய்யலாம்.. ஆனால் திட்டுவது பிராப்பர் சேனல் மூலமாத்தான் நடக்கும்.. :eek::eek::eek:

கலையரசி
24-08-2010, 01:31 PM
”என் குடும்பத்தார்
உன் இதயம் கிழித்த
தருணங்களில்...

நானும்-
அமைதியாய் தானிருந்தேன்
உன் அவமானங்களை
கண்டும் காணாத கயவனாய்...”

மிக யதார்த்தமான கவிதை. பல கூட்டுக் குடும்பங்களில் இப்படி நடப்பதுண்டு. அதுவும் திருமணமான புதிதில்.
பெண்டாட்டிக்குப் பரிந்து பேசினால் பெண்டாட்டி தாசன் என்று தம் குடும்பத்தார் இழித்துரைப்பார்களோ, அதுக்குள்ள பெண்டாட்டிக்குப் பரிஞ்சி பேச வந்துட்டான் என்று அம்மா கோபப்படுவார்களோ என்று பயந்து கணவன்மார் சிலர் மெளனமாய் இருந்துவிடுவதுண்டு.
தனிமையில் இருக்கும் போது மனைவியிடம் எங்கம்மா இப்படித்தான், நீதான் கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும் என்று சொல்லிவிடுவர்.

”பதிலற்று குற்ற உணர்வில்
நீர் தெளித்த பூவாய்
ஈரமாயின என் இமைகள்..”

இப்படிப்பட்ட கணவர்களின் குற்றவுணர்வை அருமையாக எடுத்தியம்புகிறது இவ்வரிகள்.
மிகவும் நல்ல கவிதை. பாராட்டுக்கள் ஆதன்.

தாமரை
25-08-2010, 03:50 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20667

இந்தப் பக்கம் கொஞ்சம் வாங்கம்மா..

கலையரசி
26-08-2010, 01:55 PM
தாயிற்கும் தாரத்திற்கும் இடையில் கணவன் மாட்டிக் கொண்டு விழிப்பதைப் பற்றியும் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது பற்றியும் அலசோ அலசென்று அலசி துவைத்துக் காயப் போட்டு விட்டீர்கள்.
பிரச்சினைக்கு 13 options கொடுத்துள்ளீர்கள். அதில் நான் தேர்ந்தெடுப்பது மூன்றைத் தான். பிரச்சினையைப் பொறுத்து யாரை சப்போர்ட் பண்ண வேண்டுமோ அவரைப் பண்ணுவது தான் சரி.
மகனே குழப்பத்திற்குக் காரணமாக இருந்து விட்டு அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் யோசனையும் அபாரம்!

தாமரை
26-08-2010, 03:23 PM
பெண்கள் நீங்க சொன்ன ஆப்ஷனைத் தான் செலக்ட் செய்வாங்க. ஆனா
ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பது ஆண்கள் கையில்தான் இருக்கு,,,

பெண்கள் செலக்ட் செய்யப்படாது.

யார் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்காங்களோ அவர்கள்தான் ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கணும்.

சண்டை போட்டுக்கறதால அந்த உரிமையை பெண்கள் இழந்திடறாங்க.

ஷீ-நிசி
27-08-2010, 06:21 PM
அடேயப்பா! அருமை! அவளின் உணர்வினை வெளிகாட்டிய 'வலி'மையான வரிகள்

வாழ்த்துக்கள் நண்பா!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
28-08-2010, 04:59 AM
படிக்கச் சலிக்காத நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள் ஆதன்.

ஆதவா
28-08-2010, 06:01 AM
இங்கேயே சுற்றி சுற்றி வருகிறேன்!!!
நல்ல கவிதை ஆதி....
வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை!