PDA

View Full Version : அந்த காலத்தில் வாழ்ந்த வித்தியாசமான மன்னxavier_raja
30-10-2007, 12:32 PM
உங்களுக்கு மாட்சிமை பொருந்திய மகாராஜா ஒஸ்மானைத் தெரியுமா? இந்தியாவில் இருந்த சமஸ்தானாதிபதிகள் அத்தனை பேரும் உல்லாசப் பறவைகளாக மட்டுமே இருந்துவிட்டுப் போன நிலையில், இவர் ஒருவர்தான் கவித்துவக் கஞ்சப் பிரகஸ்பதியாக வாழ்ந்து முத்திரை பதித்தவர். அடடா.. ஒரு புதிய மன்னரைப் பார்க்கத் தொடங்கும்போது, அவருடைய கஞ்ச குணத்தில் தொடங்க வேண்டியிருக்கிறதே என்றால் வேறு வழியில்லை. நமக்கெல்லாம் பெயருக்கு முன்னால் இனிஷியல். அவருக்கு அவருடைய இந்த ஸ்பெஷல் குணம்! சொல்லித்தான் ஆகவேண்டும்.

இன்னதுதான் என்றில்லை, எது இலவசமாகக் கிடைத்தாலும் டபக்கென்று வாங்கி வைத்துக் கொள்வார். உபயோகிக்கவெல்லாம் மாட்டார். வெறுமனே வாங்கி வைத்து அழகு பார்ப்பார். அவ்வளவே! அவர் வாழ்ந்த காலம் 1886_லிருந்து 1967 வரை. ஆனால் இன்று இருந்திருந்தால், நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு வந்து எப்பாடுபட்டாவது அரசு வழங்கும் இலவச கலர் டி.வி.யை வாங்கிக் கொண்டு போயிருப்பார். அப்படி ஒரு சம்பவத்திலிருந்தே ஒஸ்மானின் வாழ்க்கையைத் தொடங்கலாம்.

மத்தியப் பிரதேசத்தின் சமஸ்தானமான தட்டியாவை ஆண்டு வந்த மகாராஜா கோவிந்த் சிங், ஒஸ்மானுக்கு மிக நெருங்கிய நண்பர். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். ஒஸ்மான் வார்த்தைகள் அளவில் மட்டும் பகிர்ந்து கொள்வார். கோவிந்த் சிங் பொருள்கள் அளவிலும்.

ஒருமுறை கோவிந்த் சிங்கைச் சந்திக்க தட்டியா அரண்மனைக்குச் சென்றார் ஒஸ்மான். நல்ல வரவேற்பு. நாக்கை நடனமாடச் செய்யும் விருந்து. ஒவ்வொரு பதார்த்தத்திலும் நெய் வாசனை தூக்கலோ தூக்கல்.

உணவு வகைகள் எல்லாம் இவ்வளவு ருசியாக இருக்கிறதே, என்ன காரணம்? _ கோவிந்த் சிங்கிடம் கேட்டார் ஒஸ்மான்.

எல்லாம் நெய்யின் மகிமை.

ஓஹோ அப்படியா! எங்கிருந்து நெய் வாங்குகிறீர்கள்?

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள். எங்கள் சமஸ்தானத்தின் முக்கியத் தொழிலே கால்நடைகள் வளர்ப்பதுதானே. அதுவும் அரண்மனையில் உள்ள உயர் ஜாதி பசுக்கள் கொடுக்கும் பாலின் சுவை பற்றி கேட்கவா வேண்டும். பாலை சர்ர்ர் சர்ர்ர் என்று கறந்து, சுண்டச் சுண்டக் காய்ச்சி, பக்குவமாக ஆற வைத்து, சிறிது தயிரை உறையாக விட்டு, கிடைக்கும் கெட்டித் தயிரை பாற்கடலைக் கடைவது போலக் கடைந்தால் திரண்டு வருமே வெண்ணெய், அட அட... அதை வழித்து எடுத்து இதமான சூட்டில் உருக்கினால் சமஸ்தானமே மணக்கும் போங்கள்! _ கோவிந்த் சிங் சொல்லச் சொல்ல ஒஸ்மானின் நாக்கில் எச்சில் நெய் வாசத்துடன் சுரந்தது.

உங்களுக்கும் கொஞ்சம் அனுப்பி வைக்கின்றேனே...

நண்பர் கொடுக்கும் அன்புப் பரிசை வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன். தாராளமாக நிறையவே அனுப்பி வையுங்கள் _ வழிந்தார் ஒஸ்மான்.

நெய்யாக அனுப்பினால் சரியாக இருக்காது. வெண்ணெயாகவே அனுப்பி வைக்கிறேன். பதமாக உருக்கி உபயோகித்துக் கொள்ளலாம். அடுத்த வாரமே வந்துவிடும் நண்பரே!

ஒஸ்மான் கொள்ளை மகிழ்ச்சியோடு ஊர் திரும்பினார். கோவிந்த் சிங் சொன்னபடியே பன்னிரண்டு டஜன் டின்களில் வெண்ணெயைப் பதமாக பேக் செய்து அனுப்பி வைத்தார்.

அவ்வளவு வெண்ணெயை மொத்தமாகப் பார்த்ததும் ஒஸ்மானுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு டின்னைத் திறக்கச் சொன்னார். அதனுள் தன் மூக்கை மட்டும் நுழைத்து பலமாக நுகர்ந்தார். வாசனை அவரது நுரையீரல்களை நிறைத்தது.

உடனே உருக்கி நெய்யாக்குங்கள். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அரண்மனையில் எண்ணெய்க்குப் பதிலாக நெய்யை உபயோகியுங்கள். வறுக்க, பொரிக்க, தாளிக்க சர்வமும் நெய்தான். நாளை முதல் நான் இந்த ஊத்துக்குளியைத்தான் தொட்டியில் ஊத்திக் குளிக்கப் போகிறேன் என்று உத்தரவிட்டிருந்தால் பரவாயில்லை. அவருக்குத்தான் அந்த புத்தி ஒரு சிட்டிகை அளவுகூடக் கிடையாதே. கையில் வெண்ணெயை வைத்திருந்தாலும் எக்ஸ்ட்ரா வெண்ணெய் எங்காவது கிடைக்குமா என்று அலையும் கேரக்டராயிற்றே.

இந்த வெண்ணெய் டின்களை பத்திரமாகச் சேகரித்து வையுங்கள். தேவைப்பட்டால் பின்பு உபயோகித்துக் கொள்ளலாம்.

நூற்று நாற்பத்து நான்கு டின் வெண்ணெயும் வெண்ணெயாகவே குடோன்களில் சேகரித்து வைக்கப்பட்டன. அடுத்த சில நாட்களுக்கு ஒஸ்மான், இலவசமாகக் கிடைத்த வெண்ணெய் நினைப்பிலேயே இருந்தார். அதன் நினைப்பையே சுவையாக்கிக் கொண்டு சாப்பிட்டார், தூங்கினார், கனவு கண்டார். நாளடைவில் அடுத்தடுத்த விஷயங்களுக்குத் தாவி விட்டார். மகாராஜாதான் ஒன்றும் சொல்லவே இல்லையே என்று அரண்மனைப் பணியாளர்களும் வெண்ணெய் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. மறந்தே போய்விட்டனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போயிருக்கும்.

வெண்ணெய் என்ன வெண்ணெயா? தன்னை யாரும் கண்டுகொள்ளாமலிருந்தால் அது சும்மா இருக்குமா என்ன? மணத்தைப் பரப்ப ஆரம்பித்தது. தாங்கவே முடியாத அளவு மணம். காற்றில் கலந்து அந்த ஏரியாவையே கலங்கடித்தது. உவ்வே!

முதலில் யாருக்கும் எதுவும் புரியவில்லை. பின்பு கஷ்டப்பட்டு மோப்பம் பிடித்துக் கொண்டு குடோனுக்குச் சென்றபோதுதான், கெட்டுப் போன வெண்ணெய் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருப்பது புரிந்தது. வெண்ணெய்க்கு யாரப்பா விமோசனம் கொடுப்பது? ஊழியர்களுக்குக் குழப்பம். அந்த குடோனுக்கு நிர்வாகி என்று யாரும் தனியாகக் கிடையாது. இருந்தால், ஒஸ்மானுக்குத் தகவல் சொல்லலாம். வேறு யார் மூலமாக மன்னருக்குத் தகவல் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே, பிரதம அமைச்சர் யூசுப் அலிகான், குடோனுக்கு வந்தார். வந்த வேகத்திலேயே அங்கு நிற்க முடியாமல் திரும்பிப் போனார்.

யூசுப் அலிகான் தைரியம் மிக்கவர், எதையும் யாரிடமும் நேருக்கு நேராகப் பேசும் திறமை கொண்டவர். அப்படி இருந்தால்தானே, ஒஸ்மானிடம் குப்பை கொட்ட முடியும். வெண்ணெய் பிரச்னையை மூக்கில் எடுத்துக் கொண்டு ஒஸ்மானிடம் சென்றார். சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்துக்கு வந்தார்.

தட்டியா மகாராஜா கோவிந்த் சிங், இரண்டு வருடங்களுக்கு முன் டின் டின்னாக வெண்ணெய் அனுப்பி வைத்தாரே, ஞாபகம் இருக்கிறதா?

ம், அதற்கென்ன?

எல்லாம் கெட்டுப் போய்விட்டது. தாங்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. தாங்கள் உத்தரவு கொடுத்தால், அவற்றைத் தூர எறிந்துவிடலாம் _ பட்டர் போலிருந்த ஒஸ்மானின் முகம், யூசுப் அலிகானின் வார்த்தைகளைக் கேட்டதும் ஜாம் ஆகச் சிவந்தது.

கேக்குறவன் கேணையனா இருந்தா, கேழ்வரகுல நெய் வடியுது, வெறகுக் கட்டையில வெண்ணெய் வடியுதுன்னு சொல்லுவீங்களே. மொத்தம் நூத்தி நாப்பத்து நாலு டின்னு வெண்ணெய். எவனாவது இன்னொரு முறை சும்மா கொடுப்பானா என்ன? அதெல்லாம் கெட்டுப் போயிருக்காது. அப்படிக் கெட்டே போயிருந்தாலும் அதைத் தூக்கியெல்லாம் போட முடியாது. காசோட அருமை தெரியாம நீர் பாட்டுக்குப் பேசுறீரே. அதை என்ன செய்யணும்னு எங்களுக்குத் தெரியும். நீர் இங்க இருந்து நடையைக் கட்டும்.

யூசுப் அலிகானுக்கு அவமானமாகப் போய்விட்டது. பதில் எதுவும் பேசவில்லை. போடா வெண்ணெய் என்று மனத்துக்குள்ளேயே ஒஸ்மானைத் திட்டிவிட்டு வெளியேறினார். உண்மையிலேயே வெண்ணெய் வீணாகப் போய்விட்டதா என்று கேட்டறிந்து கொண்டார் ஒஸ்மான். அதில் நிறையவே வருத்தம். எப்படி அந்த நஷ்டமாகிப் போன வெண்ணெயிலிருந்து லாபம் பார்க்கலாம் என்று உருகி உருகி யோசித்தார். காவல் துறை அதிகாரி ரெட்டியை வரவழைத்தார்.

மிஸ்டர் ரெட்டி, நமது குடோனில் நூற்று நாற்பத்து நான்கு டின் வெண்ணெய் உள்ளது. என்ன, நாளாகி விட்டதால் கெட்டுப் போய் விட்டது என்று சொல்கிறார்கள். நீங்கள் அதைக் கடைகளில் வைத்து பொது மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.

ரெட்டியின் நிலைமை இரண்டு ரொட்டித் துண்டுக்குள் வைக்கப்பட்ட சீஸ் போலானது. ஒஸ்மான் சொன்ன உடனே மறுக்கமுடியாதே. மறுத்தால் வேலை போய்விடும். சரி என்று தலையாட்டிவிட்டுக் கிளம்பினார். மறுநாள் ஒஸ்மானைப் பார்க்க வந்தார்.

மன்னிக்க வேண்டுகிறேன். குடோனுக்குச் சென்று வெண்ணெய் டின்களைப் பார்த்தேன். அவை விற்பனைக்குரியதாக இல்லை. மக்கள் வாங்க மாட்டார்கள். துர்நாற்றம் காட்டிக் கொடுத்துவிடும். அப்படியே விற்பதுவும் முறையல்ல. ஏனென்றால், வெண்ணெய் கெட்டுப் போய் இப்போது விஷமாக உள்ளது.

என்னய்யா நீ, நான் உனக்கு ஒரு வேலை கொடுத்தால் அதைச் செய்ய முடியாததற்கு என்னிடமே காரணம் சொல்கிறாயா? அந்த வெண்ணெயை வேறு எந்த வழியில் உபயோகிக்கலாம் என்றெல்லாம் யோசிக்கவே மாட்டாயா? எல்லாவற்றையும் நானே சொல்ல வேண்டுமா என்ன?

ம.. மன்னிக்க வேண்டும்..

அதெல்லாம் தேவையில்லை. சமஸ்தானத்தில் எத்தனையோ இந்துக் கோயில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோயில் வாசலிலும் பல கடைகள் இருக்கின்றன. அங்கெல்லாம் இந்த வெண்ணெயை விற்பனைக்கு அனுப்புங்கள்.

ரெட்டி, மறுப்பு எதுவும் கூறாமல் அங்கிருந்து கிளம்பினார். வெண்ணெயைப் பார்க்கப் போகவில்லை, வீட்டைப் பார்த்துப் போனார். அடுத்து ஒஸ்மானிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று ஏற்கெனவே யோசித்தும் வைத்திருந்தார். மறுநாளே ஒஸ்மானைப் பார்க்கச் செல்லாமல், அதற்கு அடுத்த நாள் சென்றார்.

இந்த முறையும் தங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியாததற்கு மிகவும் வருந்துகிறேன் குரலில் பவ்யத்தையும் பயத்தையும் சரி விகிதத்தில் கலந்து வெளிப்படுத்தினார்.

என்னய்யா சொல்ற? _ ஒஸ்மான் உறுமினார்.

கோயில் வாசலில் உள்ள கடைகளில் கெட்டுப் போன வெண்ணெயை வாங்க மறுக்கிறார்கள். பக்தர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்களாம். மேலும் இது கடவுளை வழிபட பயன்படுத்தும் பொருள் என்பதால் பாவம், புண்ணியம் என்றெல்லாம் ஏதேதோ சொல்கிறார்கள். எனவே கோயில்களில் இதை விற்க முடியாது.

ஒஸ்மான் முகத்தில் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவர் ஏதாவது சொல்லி வெடிப்பதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டுமென்று நினைத்த ரெட்டி, படபடவென பேச்சைத் தொடர்ந்தார்.

தங்களுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்றுதான் நான் அந்த முயற்சியைக் கைவிட்டேன். கோயில்களில் விற்க முடியாவிட்டால், வேறு இடங்களா இல்லை. எல்லா வெண்ணெயையும் விற்றுவிட்டு ஒரு சில நாட்களில் வருகிறேன். தங்களிடம் இதைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். உத்தரவு கொடுங்கள்.

திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து வெளியே வந்தார் ரெட்டி. மாட்டு வண்டி ஒன்றைப் பிடித்துக் கொண்டு குடோனுக்குச் சென்றார். பணியாளர்களை வைத்து எல்லா வெண்ணெய் டின்களையும் வண்டியில் ஏற்றச் சொன்னார்.

ஊருக்கு வெளியே ஓடும் சாக்கடையில் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விடுங்கள். ஒரு டின்கூட இனி கண்ணில்படக் கூடாது என்று பணியாளர்களுக்கு உத்தரவு இட்டார். வாழ்க்கையில் நெய்யே ஆக முடியாத அந்த முதிர்வெண்ணெய்களின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது.

மறுநாள் ரெட்டி, மலர்ந்த முகத்தோடு ஒஸ்மான் முன் சென்று நின்றார். தங்களின் கட்டளைப்படியே அந்த வெண்ணெய் டின்களை ஒரு வியாபாரியிடம் பேரம் பேசி விற்றுவிட்டேன்.

அப்படியா, எவ்வளவுக்கு விலை போனது? _ ஒஸ்மான் ஆர்வம் மின்னக் கேட்டார்.

இருநூற்று ஒரு ரூபாய். அதனைத் தங்கள் வங்கிக் கணக்கில் போட்டுவிட்டேன்.

நல்லது மிஸ்டர் ரெட்டி. வீணாகப் போன வெண்ணெய்யை நல்ல விலைபோக வைத்துவிட்டீர். மிக்க மகிழ்ச்சி.

அதற்குப் பின் மிஸ்டர் ரெட்டிக்கு பதவி உயர்வு கிடைத்தது. வெறும் இருநூற்று ஒரு ரூபாய் மொய் எழுதி, பதவி உயர்வைப் பெற்றுக் கொண்ட ரெட்டி, தன் சாதுர்யத்தைத் தானே மெச்சிக் கொண்டார். ஓசியாகக் கிடைத்த வெண்ணெய் விஷயத்திலேயே இவ்வளவு அல்பமாக நடந்து கொண்டாரே, வேறு என்னென்ன விஷயங்களிலெல்லாம் எப்படி எப்படி நடந்திருப்பார் இந்த ஒஸ்மான்?

lolluvathiyar
01-11-2007, 09:58 AM
ஆகா ஓஸ்மான் மன்னர் கதை ( நிஜம்) மிகவும் ரசிக்கும் படி இருந்தது. கஞ்சனிலும் கஞ்சன் மகா கஞ்சன் போல இருக்கு. இவரை லொள்ளபுரி வரலாற்றில் கொண்டு வந்து விடவேண்டும் போல இருக்கு

alaguraj
01-11-2007, 11:20 AM
அதானே ...........நம்ம லொள்ளாயிருந்தா நெய்யமட்டும் கீழே ஊத்திட்டு அந்த நூற்று நாற்பத்து நான்கு டின்னையும் பழய இரும்புக்கு பேரீச்சம் பழத்துக்கு போட்டுருப்பார்...

யவனிகா
01-11-2007, 12:51 PM
பாட்டி கதை கேட்பது போலவே இருந்தது. சுவையாக கதை சொல்லி இருக்கிரீர்கள்.அதுவும் வித்தியாசமான கேட்டறியாத வரலாற்றுக் கதை.பாராட்டுக்கள்.இன்னும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பூமகள்
01-11-2007, 01:32 PM
ஓஸ்மான் மன்னர் வரலாறு அறிந்திராத ஒன்று.
அறிய வைத்தமைக்கு மிகுந்த நன்றிகள் சேவியர் ராஜா. :icon_b:

ஆனால், ஓஸ்மான் எந்த பகுதியை ஆட்சி செய்தார் என்று சொல்லவில்லையே?? :confused:

ஆகா ஓஸ்மான் மன்னர் கதை ( நிஜம்) மிகவும் ரசிக்கும் படி இருந்தது. கஞ்சனிலும் கஞ்சன் மகா கஞ்சன் போல இருக்கு. இவரை லொள்ளபுரி வரலாற்றில் கொண்டு வந்து விடவேண்டும் போல இருக்கு
வாத்தியார் அண்ணா, நம்ம லொள்ளபுரி சரித்திரத்திற்கு தகுந்த மற்றுமொரு கதாப்பாத்திரம் கிடைத்துவிட்டது. :D:D
விரைவில் இவர் நம் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று நம்புகிறேன். :icon_rollout:

அறிஞர்
01-11-2007, 02:52 PM
கஞ்ச பிரபு.. நினைத்து சிரிப்பதா.. அழுவதா.....

இவருக்கு கீழ் பணிபுரிந்த மக்கள்..... நிலைதான்.. பரிதாபம்...

மாதவர்
05-11-2007, 02:44 AM
போடா வெண்ணை!!!
இந்த டயலாக் எப்படி வந்தது என்று இப்பொழுது புரிகின்றது!!!