PDA

View Full Version : இரட்டை வேடம் போடும் இந்திய (காங்கிரஸ்) அரசxavier_raja
30-10-2007, 11:25 AM
இலங்கைக்கு ராணுவ உதவி செய்யமாட்டோம்.

மேகம் சூழாது மின்னல் வெட்டாது இப்படி டெல்லியிலிருந்து இடி முழக்கம் கேட்டது. வியந்து போனோம். குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சிங்கள அரசின் அதிபர் ராஜபட்சே மந்திராலோசனை நடத்த டெல்லிக்கு வந்திருக்கிறார். அன்றைக்குத்தான் நமது பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு ராணுவ உதவி செய்யமாட்டோம் என்று இடி முழக்கம் செய்தார்.

ஆனால், அடுத்த சில தினங்களில் இரும்புத் திரையை உடைத்துக் கொண்டு உண்மை உலாவரத் தொடங்கியது. டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு (அக்டோபர் 15, 2007) ஈழப் பிரச்னையில் இந்திய அரசு அணிந்திருக்கும் முகமூடியைக் கிழித்தெறிந்தது.

விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய ஏவுகணைகளை, இலங்கைக்கு இந்திய அரசு அளித்திருக்கிறது. இவை, விமானங்களைக் கண்டாலே தாமே இயங்கும் 40விவி லி 70 ரக ஏவுகணைகள். இத்துடன் 40 ஆயிரம் டாலர் மதிப்புள்ள ஈ_70 ரக நவீன துப்பாக்கிகளையும் அளித்திருக்கிறது. இவை போதாதென்றும் இன்னும் நவீனரக ஆயுதங்கள் வேண்டும் என்றும் இலங்கை கேட்கிறது. சீனம், பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் வாங்காதீர்கள். நாங்களே தருகிறோம் என்று, இந்திய அரசு உறுதி அளித்திருக்கிறது என டைம்ஸ் ஆப் இந்தியா அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது. ஆகவே, இந்த ஆயுத உதவி வெளியே தெரியக்கூடாது என்பதில், மத்திய அரசு எச்சரிக்கையாக இருக்கிறது என்பதனையும் அந்த ஆங்கில ஏடு சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஈழத் தமிழர் பிரச்னையில் ராஜிவ் காந்திக்குத் தவறான வழிகாட்டியவர்கள்தான் இன்றைக்கு மன்மோகன் சிங்கைச் சூழ்ந்து இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர், ஈழப் போராளிகளின் விமானம் கொழும்பு அருகே குண்டு போட்டது. அதனை அவசர அவசரமாகக் கண்டித்ததோடு இந்திய _ இலங்கை ராணுவக் கூட்டு ரோந்துத் திட்டத்தைப் பரிசீலிப்போம் என்று, நமது வெளியுறவுச் செயலாளர் சிவசங்கரமேனன் அறிவித்தார். ஆனால், தினம் தினம் ஈழத்து அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவ விமானங்கள் குண்டுகள் வீசுவதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். குழந்தைகள் காப்பகம், பள்ளிகள், மகளிர் விடுதிகளில் இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தாலும் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

இந்திய _ இலங்கை கப்பற்படையின் கூட்டுரோந்துத் திட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆகவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும், அப்படி ஒரு திட்டமே இல்லை என்றும் அறிவித்தார்கள். ஆனால், அடுத்து இன்னொரு செய்தி வந்தது.

இந்திய _ இலங்கைக் கடற்படைகளின் தொலைத் தொடர்பு சாதன ஒருங்கிணைப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவது என்று இருநாடுகளும் முடிவு செய்திருக்கின்றன. கூட்டு ரோந்துத் திட்டம் என்ற பழைய கருப்பனுக்குத்தான் இவர்கள் இப்படி புதிய முகமூடி போடுகிறார்கள். இதன் நோக்கம் என்ன? இலங்கைக் கடற்படையின் செயல்பாடுகளுக்குப் பக்கபலமாகப் பின்னணியில் இந்தியக் கடற்படை நிற்கும் என்பதுதான்.

ஈழப் போராளிகளின் கடல் நடமாட்டத்தைக் கண்காணித்து, இலங்கை கடற்படைக்குச் சேதி சொல்லும் வேலைதான் இந்தத் திட்டமாகும். இப்போதே இந்தத் திருப்பணி நடைபெறுவதாக ஐயப்பாடு உண்டு.

ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் _ எங்கெல்லாம் விடுதலைக்காக மக்கள் குரல் கொடுத்தார்களோ, அங்கெல்லாம் அவர்களோடு இணைந்து நின்று, இந்த தேசத்தின் வலிமைமிக்க கடற்படை இலங்கை குட்டிக் கடற்படைக்கு சேவகம் செய்ய வேண்டுமா?

எத்தனையோ ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடத்திச் செல்கிறது. எல்லை தாண்டி வந்தனர் என்று அவர்களுடைய படகுகளையும் வலைகளையும் அழிக்கிறது. அந்த மீனவர்களைக் காக்க இதுவரை இந்தியக் கடற்படை செய்த சாதனை என்ன?

ஏற்கெனவே இலங்கை ராணுவத்திற்கு ராடார் சாதனங்களை இந்தியா அளித்தது. அந்த ரகசியம் அம்பலமானது. நாங்கள் தாக்குவதற்கான சாதனங்களைத் தரவில்லை. தற்காப்புக்கான சாதனங்களைத்தான் தந்தோம் என்று பின்னர் காரணம் கூறியது.

கருங்கல் நெஞ்சங்களே கலங்குகின்ற அளவிற்கு இன்றைக்கு சிங்கள இனவாத அரசு ஈழத்தில் மனிதவேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. மணிக்கு ஒரு தமிழன் மரணத்தைத் தழுவுகிறான். இலங்கை ராணுவத்தால் கடத்திச் செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை. எல்லாவற்றையும் இழந்து அன்னையர்கள் அநாதைகளாக நிற்கிறார்கள். அந்த வெங்கொடுமையை உலக மனித உரிமை அமைப்புகள் கண்டிக்கின்றன. ஏன்? எல்லா உலக அரங்குகளிலும் சிங்கள இனவாத அரசு தலைகுனிந்து நிற்கிறது. ஆனால், இந்த நிமிடம் வரை, இலங்கை ராணுவத்தின் இந்த வெறியாட்டத்தை இந்தியா கண்டிக்கவில்லை.

அண்மையில் ஈழத்திற்கு எதிரான பொய்மூட்டைகளைச் சுமந்து கொண்டு இலங்கை அதிபர் ராஜபட்சே ஐ.நா. மன்றம் சென்றார். அவருடைய வாதங்களுக்குக் காது கொடுக்க அந்த மன்றம் மறுத்துவிட்டது. அவர் பேசும்போது மன்றம் காலியாக இருந்தது. அவருடைய பயணம் சீந்துவாரின்றிப் படுதோல்வி அடைந்து விட்டது என்று, இலங்கை சன்டே டைம்ஸ் விரிவாக எழுதியிருக்கிறது.

அசடு வழிய அங்கிருந்து திரும்பிய ராஜபட்சே டெல்லி வந்தார். ஈழத் தமிழர்களை வேட்டையாடும் படுகொலைப் படலத்தை இந்திய ராணுவத்தின் _ கடற்படையின் தலையில் கட்டுவதற்கு முயற்சி செய்தார்.

ஈழப் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண வேண்டும் என்று ஒரு பக்கம் இந்திய அரசு அறிவிக்கிறது. இன்னொரு பக்கம் ஈழத் தமிழ் இனத்தை அழிக்க எதற்காக சீனத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஆயுதங்களை வாங்குகிறீர்கள். அதனைவிட நவீன கொலைக் கருவிகளை நாங்களே கொடுக்கிறோம் என்று ரகசியம் பேசுகிறது. இப்போது இந்த இரட்டை வேடம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. இந்திய அரசின் இந்த நிலைப்பாடு உலகத் தமிழர்களின் உள்ளத்தை ரணமாக்கி இருக்கிறது.

சீனத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஆயுதம் வாங்காதே என்ற கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டதா? இல்லை. இப்போது சீனத்துக் கப்பல்கள் ஆயுதக் குவியல்களோடு இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானிலிருந்து வந்த பல்குழல் எரிகணை செலுத்திகள் ஈழத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. இதன் நோக்கம் என்ன? ஈழத்தின்மீது இறுதிப் போர் தொடுக்க இலங்கை அரசு தயாராகி வருகிறது. இந்தியாவும் அதற்குத் துணைபோகிறது.

இன்னொரு பக்கம், எந்த நாட்டில் என்ன ஆயுதம் வாங்குவது என்று இந்தியா தீர்மானிக்க முடியாது என்று இலங்கை ராணுவ தலைமைப் பீடத்தில் சலசலப்புகள் கேட்கின்றன.

ஈழப் பிரச்னையில் இதுதான் எங்கள் கொள்கை என்று மன்மோகன்சிங் பகிரங்கமாக அறிவிக்கட்டும். வரவேற்கிறோம். அதனை விடுத்து, பிரச்னையைப் பேசித் தீர்த்திடுக என்று வெளியே அறிவித்துவிட்டு, ஈழத்தை அழிக்க எதற்காகக் கொல்லைப்புற வழியாகக் கொலைகார ஆயுதங்களை அளிக்க வேண்டும்.

மரபுப்படி எப்படி இருக்கிறீர்கள்? என்று ஈழத்தமிழ் அன்பரைக் கேட்டோம். சாவிற்குப் பக்கத்தில் சவுக்கியமாக இருக்கிறோம் என்று அவர் சொன்னார். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்ச்சிக்கு ஆளானோம். இரண்டே சொற்களில் அவர் ஈழத்தின் இன்றைய நிலையைப் படம் பிடித்துக் காட்டிவிட்டார்.

1998_ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தார். அவருடைய கூட்டணி அரசில் தி.மு.க.வும் பா.ம.க.வும் அங்கம் பெற்றிருந்தன. ஈழப் பிரச்னையில் என்ன நிலை எடுப்பது என்று அவர் சர்வ கட்சிக் கூட்டம் கூட்டினார். எந்த நிலையிலும் இலங்கை அரசிற்கு இந்தியா ராணுவ உதவி செய்யக்கூடாது. விலைக்குக் கூட ஆயுதங்களை விற்கக்கூடாது என்று முடிவு கண்டனர். அதுதான் மத்திய அரசின் முடிவாக இருந்தது. அந்தக் கோட்பாட்டை மன்மோகன் சிங் அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது. அதற்குக் கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதலைப் பெற்றதா? தி.மு.க.வின் நிலை என்ன என்று கேட்டதா? இங்கே ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகார ஆட்சியா நடைபெறுகிறது?

நாட்டிற்கும் நாடாளுமன்றத்திற்கும் தெரியாமல் அமெரிக்காவோடு ராணுவ ஒப்பந்தம் _ அணுசக்தி ஒப்பந்தம், ஈழத்தை அழிக்க இலங்கை அரசோடு ஆயுத உதவி ஒப்பந்தம் என்று மன்மோகன் சிங் இந்தியாவை எங்கோ இழுத்துச் செல்கிறார். பண்டிட் ஜவஹர்லால் நேரு வகுத்துத் தந்த நடுநிலைக் கொள்கையிலிருந்து நழுவி, வழி தவறிப் போகிறார்.

அன்னை இந்திராகாந்தி காலத்தில், இலங்கை திரிகோணமலையில் ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா முயன்றது. எங்கள் தலைவாயிலில் ராணுவ தளம் என்பது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்று இந்திரா எச்சரித்தார். அன்றைய இலங்கை அரசு பெட்டிப்பாம்பாய் சுருண்டு கொண்டது.

ஆனால், இன்றைக்கு இலங்கையில் இரண்டு ராணுவத் தளங்களை அமெரிக்கா அமைக்கிறது. அதற்கான உடன்பாட்டில் இலங்கை அரசு கையெழுத்திட்டுவிட்டது. மன்மோகன் சிங் ரொம்ப மவுனமாக இருக்கிறார். அந்த ராணுவத் தளங்கள் இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய அபாயம் என்பது அவருக்குத் தெரியாதா? நாடு எங்கோ போகிறது!

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர் (எழுத்தாளர் சோலை எழுதிய கட்டுரை)

ஜோய்ஸ்
30-10-2007, 12:34 PM
இதுக்கு காங்கிரஸ் மட்டும் விதிவிலக்கில்லை.எல்லாருமே இப்படித்தான்.சுயநலவாதிகள்.

விகடன்
30-10-2007, 12:49 PM
திருகோணமலையில் தளாமமைக்க பலநாடுகள் போட்டி போடுகின்றன. அது புலிகள் கட்டுப்பாட்டிலும் இருப்பதால் இலங்கை இராணுவத்தால் தன்னிச்சையாக செயற்படாத நிலையே காணப்படுகிறது. ஏதாவது ஒருவகையில் புலிகளின் கட்டுப்பாட்டை தகர்க்க வேண்டும். அதற்கான திட்டமே அமெரிக்காவை அனுமதித்தது என்று நினைக்கிறேன்.

பூனைக்கு பயந்து சிறுத்தையிடம் அடைக்கலம் தேடிய கதையாகத்தான் போகப்போகிறது.