PDA

View Full Version : தாய்ப்பாசம்!ஷீ-நிசி
29-10-2007, 03:35 PM
நெல்வயலில் களையெடுக்கும் தாய். அவளது குழந்தை வயல் ஓரமாக அமைந்த மரத்தின் கிளையில் தூளியிட்டு படுத்துக் கிடக்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் பசிவந்து அக்குழந்தை பசியில் அழுகிறது! மகவுக்கு பால் கொடுக்கச் சென்றால் வரப்பில் நிற்கும் பண்ணையார் ஏசுவார். பால் கொடுக்காமல் இருந்தாலோ குழந்தை அழுது அழுது தொண்டை வறண்டு போகும். இப்படி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அந்த தாய் இருதலைக் கொள்ளி எறும்பாய் துன்பப்படுகிறாள்! அவள் மனதில் நினைத்திருக்கும் வரிகள் இங்கே கவிதையாக!

மரத்தில தூளி கட்டி,
மவராசன தூங்க வச்சி,

நல்ல வெயிலு பின்னியெடுக்க!
நான் இறங்கினேன்...
நெல்லு வயல்ல களையெடுக்க!

கண்ணு என்னமோ நெல்லு மேல!
கவனம் எல்லாமே பிள்ள மேல!

செத்த நேரந்தான் ஆகிருக்கும்!
பெத்த புள்ள அழுதிட்டிருக்கு!

பரபரன்னு ஏறினேன்..
வயற்பரப்பு மேல...

பசியால அழுது துடிக்குது
பச்ச புள்ள குரலு! -அதுக்கும்
மசியாம என்ன வெரட்டுது
பண்ணையாரு குரலு!

அழாதேடா கன்னு!
ஆத்தா அடிவயிறு வலிக்குது!

என்ன செய்யறதுன்னு
புரியாம என் மனசு தவிக்குது!

பண்ணையார எதித்து,
பால்கொடுக்க நான் வந்தா,
இந்த வேளைக்கு பசியாறும்...

அடுத்த வேளைக்கு....
நான் எங்க போவேன்?
அடுத்த வேலைக்கு
நான் எங்க போவேன்?

வேலய முடிச்சி
வெரசா வாரேன்!
என் மக ராசா!

அது வரைக்கும்..
காத்தனுப்பி தூங்க வையி!
என் மர ராசா!

ஷீ-நிசி
30-10-2007, 02:14 PM
யாருமே பார்க்கலயா! நெஜமாலுமே! :(

நேசம்
30-10-2007, 02:38 PM
ஒரு ஏழை தாயின் பரிதவிப்ப்பை அருமையாக சொல்லியுர்கள் ஷீ-நிசி அவர்களே.வாழ்த்துக்கள்

அமரன்
30-10-2007, 04:37 PM
இக்காலகட்டத்திலும் காணக்கூடிய ஒரு இக்கட்டான சூழ்நிலை. காட்சிக்கவிஞர் ஷீயின் விரல்நுனிவண்ணக்கலவை காட்சிகளால் மனத்திரை நிரம்புகிறது. மனம் பாரமாகிறது.மரத்தில தூளி கட்டி,
மவராசன தூங்க வச்சி,
நல்ல வெயிலு பின்னியெடுக்க!
நான் இறங்கினேன்...
நெல்லு வயல்ல களையெடுக்க!
மகவுக்கு நிழல் கொடுக்க மரத்தில் கட்டிய தூளியில் படுக்கவைத்து விட்டு கெண்டைக்கால் தெரிய சேலையை தூக்கி இடுப்பில் சொருகிவிட்டு, உடல் பாரத்தின் உதவியுடன் சேற்றில் காலைப்புதைத்து, களைகளின் கண்பதித்து கலைநயத்துடன் பிடுங்கிக்கொண்டு, வரப்பில் மேய்க்கும் மெத்தனத்துடன் விரைப்பாக நிற்கும் பண்ணையாருக்குப் பயந்து நடுங்கியவாறு நினைவுகளால் குஞ்சை வட்டமிடும் அந்தக் காட்சியை இரு சில வரிகளுக்குள் அடக்கிய கைவினைத்திறன் அருமை.


செத்த நேரந்தான் ஆகிருக்கும்!

பெத்த புள்ள அழுதிட்டிருக்கு!

பரபரன்னு ஏறினேன்..
வயற்பரப்பு மேல...

பசியால அழுது துடிக்குது
பச்ச புள்ள குரலு! -அதுக்கும்
மசியாம என்ன வெரட்டுது
பண்ணையாரு குரலு!

அழாதேடா கன்னு!
ஆத்தா அடிவயிறு வலிக்குது! மழலையின் அழுகுரல் கால்களை எடுத்து வரப்பில் வைக்கும் விசையை உருவாக்க நியூட்டனின் மூன்றாவது விதிக்கமைய எதிர்விசையை ஏற்படுத்தி பழைய நிலைக்கு கொண்டுவருவார் பண்ணையார். நிலையாக காலை சேற்றில் ஊன்றி, நிலையில் இல்லா நெஞ்சத்துடன் வேலை செய்வதாக பாவ்லா காட்டி, பாலுக்கு அழும் குழந்தையில் ஓருகண்ணும் ,பண்ணையாரின்மேல் மறுகண்ணும் வைத்து மாறுகண் எபெக்டில் அவள் இருக்க இருகண்ணையும் அவள் மேல் வைத்த பண்ணை இடியாக அதட்டும். அவள் "மடி" கனக்கும். செத்த நேரம் நீவர பிந்தினாலும் அது நான் செத்த நேரமாகிவிடும் என்று குருத்து வீரிடுவது எட்டாத பண்ணையின் வக்கணையான மேல்தட்டு குணத்தை எதுகை மோனையுடன் எடுத்துச்சொன்ன பாங்கு கோடைகாலத்தில் கிடைத்த நுங்கு.பண்ணையார எதித்து,
பால்கொடுக்க நான் வந்தா,
இந்த வேளைக்கு பசியாறும்...

அடுத்த வேளைக்கு....
நான் எங்க போவேன்?
அடுத்த வேலைக்கு
நான் எங்க போவேன்?

வேலய முடிச்சி
வெரசா வாரேன்!
என் மக ராசா!

அது வரைக்கும்..
காத்தனுப்பி தூங்க வையி!
என் மர ராசா!
முதலுக்கே மோசம் என்னும் நினைப்பில் பண்ணையாரின் ஏச்சை அசட்டை செய்துவிடலாம் என்றால், அழும் சிசுவின் அடுத்தவேளைக்குத் தேவையானதை ஈட்ட வேலை தேடவேண்டி இருக்கும் என்னும் உண்மை சுடுகிறது கவிநாயகிக்கும் வாசிக்கும் எனக்கும். சுடும் மனிதனை நேசிக்கும் எவனுக்கும்.

பெருமூச்சுடனும் உயிர் மூச்சுப்பிரியும் வேதனையுடனும், மூச்சடக்கி கதறும் பாலகனின் மூச்சு அடங்காதிருக்க காற்றை துணைக்கு அழைகின்றாள். உயிர்வாயு கலப்புள்ள காற்றே, இப்போது நீ என்மகவுக்கு தாயாகு என்று கோரிக்கை வைக்கிறாள் தாய். அசையாதிருப்பது வளி. அசைவது காற்று. சின்னவயசுப் பள்ளிப்பாடம் நினைவில் வருகிறது. வளியை அசைய வைத்து என் பிரச்சினை தீர வழி சமை என மரத்திடம் கேட்பது உச்சக்காட்சி.

இந்நிலைக்கான காரணங்களை அலசல் முடிவு எட்டவைக்க முடியாத தொடர்கதை என்பதால் அதை தவிர்கின்றேன். அன்னையின் பரிதவிப்பையும், சில பண்ணைகளின் பரிகாசத்தையும் நினைத்து தவிக்கின்றேன். எல்லா இடத்திலும் தன்னால் இருக்க முடியாது என்பதற்காக அம்மாக்களை அனுப்புகின்றானாம் இறைவன். அவன் அனுப்பிய அன்னையாலும் முடியாமல் போக மரத்தை/காற்றை வேடதாங்க(ல்)ச் சொல்கின்றாள். தாய்ப்பாச மகத்துவத்தை இதைவிட சிறப்பாக சொல்லமுடியுமா என்பது கேள்விக்குறியே..! அனைத்து அன்னை உள்ளங்கள் சார்பாகவும் ஷீக்கு நன்றி.

நேசம்
30-10-2007, 07:49 PM
அமரன் ஜி ! நிங்கள் ஒவ்வொருத்தரின் கவிதைக்கு கொடுக்கும் பின்னூட்டத்தை படித்த பிறகு, அந்த கவிதை மீண்டும் படிப்பதில் சுகமாய் தான் இருக்கிறது

அக்னி
31-10-2007, 02:46 AM
மகவின் அழுகை... பசிக்காக...
தாயின் தவிப்பு... பசிக்காக...

இணைந்தால் தீரும்
இருவர் பசியும்...
ஆனால்,
தொடருமா இன்றைய வேலை..?
தீருமா நாளைய பசி..?

காற்றுக்குடிக்க நாளை நீ தயாரென்றால்,
உடன் வருகின்றேன் இன்று பசி தீர்க்க...

மகவே..!
உன் அழுகையில்
வற்றுகின்றது என் தாய்ப்பால்,
நீ பருகாமலே...
இந்த வேளை பருக்கினால்,
நாளை சுரக்காது என் தாய்ப்பால்..,
வேலை இல்லாமையால்,
வேளைக்கு எனக்கும் உணவு இல்லாமையால்...

பாராட்டுக்கள் ஷீ-நிசி...
அருமையாக உணர்வுகளை வடித்துள்ளீர்கள்...

ஷீ-நிசி
31-10-2007, 04:08 AM
நன்றி நேசம்!

அமரன் ஒரு கவிதையை எந்த அளவிற்கு உள்வாங்கி படித்து, அதை தன் பாணியில் விமர்சனம் செய்யும் அழகு! உண்மையிலேயே அழகு!

இளசு, ஆதவாவிற்கு அடுத்தபடியாய் அமரனின் விமர்சனம் மின்னுகிறது.

நன்றி அக்னி!

(இப்போதெல்லாம் என் கவிதைகள் ஆதவாவின் விமர்சனத்தினை இழந்து நிற்கின்றன...

வாப்பா ஆதவா!)

சிவா.ஜி
31-10-2007, 06:14 AM
வரையறைக்குள் நிறுத்தப்பட்ட தாய்ப்பாசம். மகவின் அப்போதைய பசியையை தீர்க்க முடியாத அடுத்த வேளை(லை)க்கான சிந்தனை. அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது ஷீ. காட்சிக்கவிஞர் என்பதை கண்முன்னே நிறுத்தும் காட்சிகளால் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் ஷீ.

ஷீ-நிசி
31-10-2007, 06:20 AM
நன்றி சிவா....ஜி

கஜினி
31-10-2007, 06:27 AM
தாயின் பாசம் மின்னுகிறது.

கடைசியாக சொன்ன வரிகள், மகராசா, மரராசா, இந்த வரிகள் என்னைக் கவர்ந்தன் ஷீ-நிசி அவர்களே. நல்ல கவிதை.

ஷீ-நிசி
31-10-2007, 06:46 AM
நன்றி கஜினி!

ஆதவா
06-11-2007, 01:41 PM
நல்ல கவிதை ஷீ... இறுதியில் வென்றதென்னவோ பண்ணையார்தானே :D

அருமையான களம். எழுத மட்டுமல்ல, அங்கே உலாவ.. பண்ணை வேலைப் பெண்களின் முகத்தில் மானம் குடியிருக்கும்.. அது அவளைக் காக்கும் மானமல்ல. தான் ஒரு தாய் என விட்டுக் கொடுக்கா மானம்.

அறிவு குறைந்த உயிரினங்களே தன் குட்டிகளின் மேல் வைத்திருக்கும் பாசம் பார்க்கும் போது, மனித உயிரினங்களின் தாய்ப்பாசம் அளப்பரியது./
அன்பு, பசி, இவையிரண்டுக்கும் நடுவே உழலும் ஒருத்தி, வயிறு சொன்னது போகாதே என்று, மனம் சொன்னது போய்க் கவனி என்று. மனிதன் மனதை விட வலிமையானது வயிறின் மனது.

கிராம சூழ்நிலையைக் காணாததாலோ என்னவோ எனக்கு இந்த கவிதையினுள்ளே செல்ல முடியவில்லை.. அது என் தவறே.

கவிதை சொல்லவந்ததை சுருக்கிச் சொன்னவிதம், மிக அருமை. வயல் பேசும் மொழியில்..

மேலும் எழுதுங்கள்...

ஷீ-நிசி
07-11-2007, 09:24 AM
நன்றி ஆதவா....

விரிவான விமர்சனம்
இல்லையென்றாலும்,
சரியான விமர்சனம் தான்!

ஆதவா
07-11-2007, 09:34 AM
நன்றி ஆதவா....

விரிவான விமர்சனம்
இல்லையென்றாலும்,
சரியான விமர்சனம் தான்!


அமரன் விமர்சனத்தைத் தாண்டி எழுத என்னில் ஏதுமில்லை ஷீ!

பூமகள்
07-11-2007, 09:51 AM
அது வரைக்கும்..
காத்தனுப்பி தூங்க வையி!
என் மர ராசா!
அழகான கிராமிய மணம் கமழும் அம்மா தாலாட்டு..!
தென்றலாய் வயல் வரப்போடு மரத்தூளியில் துயிலும் குழந்தையாய் ஒரு கணம் மனம் துள்ளுது..!!

வாழ்த்துகள் ஷீ..!!
கிளப்பிட்டீங்க...!! :icon_b:

ஷீ-நிசி
07-11-2007, 10:08 AM
அமரன் விமர்சனத்தைத் தாண்டி எழுத என்னில் ஏதுமில்லை ஷீ!


:) :) :) :)

ஷீ-நிசி
07-11-2007, 10:11 AM
அழகான கிராமிய மணம் கமழும் அம்மா தாலாட்டு..!
தென்றலாய் வயல் வரப்போடு மரத்தூளியில் துயிலும் குழந்தையாய் ஒரு கணம் மனம் துள்ளுது..!!

வாழ்த்துகள் ஷீ..!!
கிளப்பிட்டீங்க...!! :icon_b:

நன்றி பூமகள்!