PDA

View Full Version : ஏன் என்னை நேசித்தாய்?sadagopan
27-10-2007, 05:51 AM
என் ப்ரிய மல்லி,

என் நான்கு வயதில், நீ கைக்குழந்தையாய் உன் அண்ணன் கோபாலு மடியில் தவழ்ந்த போதே உன் அழகில் சொக்கிப் போனேனடி! குண்டுக் கன்னமும் பெரிய கண்களும் மொக்கு வாயுமாய் நீ புன்னகைக்கையில் உலகத்தையே மறந்து பச்சென்று முத்தமிட்ட என்னை வெடுக்கென்று கோபாலு தள்ளிவ்ட்டது பசுமையாய் நினைவிருக்கிறது.

நான் எட்டிப் போய் விழுந்ததில் பதறி நீ வீறிட்டதில் மனசு நெகிழ்ந்தது இப்போதுதான் போலிருக்கிறது. ஏன் எனக்குள் நேசத்தை விதைத்தாய் மல்லி?

உன் மழலை கேட்கவென்றே கோபாலுவோடு நான் நெருங்கி இருக்க, உன் ஒன்றரை வயதில் என்னை நீ 'அப்பு' என்று விளித்தது நினைவுக்கு வருகிறது. அந்த சந்தோஷத்தை வாழ்நாளில் திரும்பவும் அனுபவிக்கவில்லையடி.

நீ விதைத்த விதை அப்போதுதான் என்னுள் துளிர்த்திருக்கவேண்டும். உன் ஐந்தாவது வயதிலிருந்து, பள்ளிக்கு நடக்கையில் கோபாலுவை விட்டு என் கைபற்றி நடந்ததில் கோபாலுவுக்குக் கடுப்புதான். பள்ளிக்குப் போகும்போதும், வரும்போதும் விடாது பேசிக்கொண்டு வரும் நீயும் உன் கொலுசும் எனக்குள் எவ்வளவு இனிமையைப் பரப்பியிருக்கிறீர்கள்?

ஒரு நாள் உன்னைப் பார்க்காவிட்டாலும் நான் எதையோ பறிகொடுத்த தினுசில் சோர்ந்திருந்த நாட்கள் உனக்குத் தெரியுமா? உன் ஏழாவது வயதில், அத்தை ஊர் திருவிழாவுக்குச் செல்கையில், தெருமுனை வரை நீ திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றது இன்னும் கண்ணில் நிற்கிறது.

திரும்பி வந்த போது திருவிழாவில் பொம்மை மிட்டாய்க் காரரிடம் எனக்காய் வாங்கிய மிட்டாய்க் கடிகாரத்தை பிசுபிசுப்பாய் என் கையில் கட்டியது இன்னும் நெஞ்சுக்குள் இனிக்கிறது. ஏன் என் நேசத்துக்கு நீரூற்றி வளர்த்தாய் மல்லி?

உன் பத்தாவது வயதில் நானும் கோபாலுவும் எதிரெதிர் அணியில் கபடி ஆடி, நான் ஜெயிக்கையில் நீ உற்சாகமாய்க் கைதட்டி என்னைப் பாராட்டிய்து எனக்கு நோபல் பரிசு கூடத் தரமுடியாத பெருமையைக் கொடுத்தது தெரியுமா?

அன்று கோபாலு உன்னைத் தரதரவென்று இழுத்துப் போனதிலிருந்து நீ என்னிடம் அதிகம் நெருங்காதது எனக்கு எவ்வளவு தனிமையைக் கொடுத்ததென்று சொல்லில் விளங்க வைக்கமுடியாது. அப்போதுதான் உன்னை எப்போதும் என்னுடனேயே வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் பிறந்தது. அப்போதுதான் நம் நேசத்தை நான் அடையாளம் கண்டு கொண்டேன் மல்லி.

நீ அரைப் பாவாடையிலிருந்து முழுப்பாவடைக்கு மாறியது நினைவில்லை என்றாலும், தாவணிக்கு மாறிய நாளை என்னால் மறக்கத்தான் முடியாது. எங்கிருந்தோ வந்த பெண்மை உன்னை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டாற்போல, காலைப் பனித்துளி படிந்த புது புஷ்பம் போல எத்தனை அழகு!

சட்டென்று எங்கிருந்து வந்தது அந்த நளினம் என்று பல நாட்கள் வியந்திருக்கிறேன். என்னவோ உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்கிற எண்ணம் அப்போதுதான் எனக்குள் தீவிரமாயிற்று. நமக்குள் இடைவெளி அதிகமிருந்தாலும் எப்போதும் என்னை உன் விழி வளையத்துக்குள் வைத்திருந்ததை நானறிவேன், மல்லி. உன் பார்வையைச் சந்திக்க முடிகிற அந்தப் பரவச விநாடிகளுக்காய் எத்தனை நூற்றாண்டுகள் வேண்டுமானாலும் தவமிருக்க நான் தயார்... ஆனால் நீ...?

நான் முதன்முதலாய் கல்லூரி விடுதிக்குக் குடிபெயர்ந்த நாளில், நீர்த்திரையிட்ட உன் விழிமட்டும் உன் வீட்டு ஜன்னலில் தெரிந்ததே... நினைக்கும் போதெல்லாம் என் நெஞ்சைக் கீறிப்போடுகிற காட்சி அது..

உன்னைப் பார்க்கவென்றே மாதம் ஒரு நாள் 12மணி நேரம் பயணம் செய்து ஊருக்கு வந்து ஒரே ஒரு நாள் தங்கிவிட்டுப் போவேனே...அந்த ஒரே நாளில் உன்னைப் பார்க்கமுடியாமல் திரும்பும் போதெல்லாம் துடித்துத் துவண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு முறை கல்லூரி திரும்பும்போதும் மறக்காமல் மதுரை பஸ் ஸ்டாண்டில் உன் நினைவாய் கை நிறைய மல்லிகை வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் உறைய உறங்கிய நாட்களில்தான் காதலின் வலி தெரிந்து கொண்டேன்.

கல்லூரி விடுமுறை நாட்களில் உன் அருகாமைக்காய் எத்தனை மெனக்கெட்டிருக்கிறேன்! ஒரே ஒரு முறையாவது உன் கை பிடித்து அருகே இழுத்தமர்த்தி கண்ணோடு கண் பார்த்து இரண்டு வார்த்தைகளாவது பேசி விட வேண்டுமென்று எவ்வளவு அலைந்திருக்கிறேன்! ஆனால் உனைச்சுற்றி எப்போதும் பாதுகாப்பு வளையம். அத்தனை காவலையும் மீறி உன் பக்கத்து வீட்டுக் குட்டிப்பாப்பா மூலம் சாமர்த்தியமாய் உன் கையால் கட்டிய குட்டி மாலை அனுப்பி வைப்பாயே... மல்லி, ஏனப்படி என்னை நேசத்தால் வதைத்தாய்?

உனக்குத் தெரியுமா 'உன் வாழ்க்கையின் இலட்சியம் என்ன?' என்று கேட்கப்பட்ட போதெல்லாம் 'மல்லியைக் கைப்பிடிப்பது' என்றே சொல்லத் தோன்றியிருக்கிறது. என் உத்வேகமெல்லாம் இந்த இலட்சியத்தை நோக்கியே இருந்திருக்கிறது. உன் மேலிருந்த காதல்தான் என்னைத் தங்க மெடல் வாங்க வைத்தது; எனக்கு இந்த வேலை வாங்கித் தந்தது. வேலை கிடைத்த கையோடு நேராய் உன் அப்பாவிடம் நான் பெண் கேட்ட குருட்டு தைரியத்தை இப்போது நினைத்தால்கூட சற்று வியப்பாய்த்தான் இருக்கிறது மல்லி.

21 வயதில் தனியாய் வந்து பெண் கேட்ட என்னை வியப்பாய்ப் பார்த்து, ஜாதி வித்தியாசத்தைக் கோடிட்டுக் காட்டி 'இனி இந்த வீட்டுப் பக்கம் வந்து விடாதே' என்கிற தொனியில் அறிவுரை சொல்லி என்னை அனுப்பி வைத்த உன் அப்பாவுக்கு நம் நேசத்தை எப்படிப் புரியவைப்பது என்பது தெரியாமல் நான் குழம்பித் திரிந்த நாட்களில், நீ சாமர்த்தியமாய் என்னைத் தேற்றவில்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

உன்னைப் பெண் கேட்ட இரண்டாவது நாள் நான் வெறும் பார்வையுடன் திண்ணையில் சாய்ந்திருக்க, உன் பக்கத்து வீட்டுக் குட்டிப்பெண் சீனிப்பாப்பா என் முன் வந்து நின்று வெறுமையான உள்ளங்கையை விரித்துக் காட்டவும் சற்றே குழம்பித்தான் போய்விட்டேன். உற்றுப் பார்த்து அவளின் பிஞ்சு விரல் நுனிகளில் மிக மெலிசாய் நீ எழுதியிருந்த ஒற்றை எழுத்துக்களைக் கூட்டி 'படித்துறை' என்று படித்ததும் அடிவயிற்றில் பறந்த பட்டாம்பூச்சிகளை மனசுக்குள் பத்திரமாய்ப் பூட்டிவைத்திருக்கிறேன்.

அந்த முதலும் கடைசியுமான சந்திப்புதான் என் அத்தனை ஜென்மங்களிலும் இனிப்பான சம்பவம் என்றால் நம்புவாயா? படித்துறை செல்கிற வழியில் சாயபு வாழைத் தோப்புக்குள்ளிருந்து நீ என்னை வெடுக்கென்று இழுத்த நேரம் என் இதயத்துடிப்பு எப்படி எகிறிப்போயிற்றென்று எனக்கு மட்டும்தான் தெரியும்.

உன் அருகாமை, உன் முதல் ஸ்பரிசம் - எனக்கு ஏதோ கனவு காண்பது போலத்தானிருந்தது. உன்னோடு தனியாய்க் கழித்த அந்த இரண்டே நிமிஷம் திரும்பவும் கிடைக்க என்ன தவம் செய்யவும் நான் தயார்.

"பணம் இருந்தால் ஜாதியெல்லாம் அடிபட்டுப் போகும், அப்பு. ஒரே ஒரு வருஷம் பாரின் போயிட்டு வந்து பெண் கேளேன்" என்று நீ சொன்ன வார்த்தைகளில் - என்னைப் பிரிந்திருக்கப் போகும் ஏக்கமும், ஒன்று சேர ஒரு வழி தெரிந்த நிம்மதியும், எல்லாவற்றுக்கும் மேலாய் என் அருகாமை தந்த மையலும் கலந்திருந்ததே. எத்தனையோ முறை அந்தக் காட்சியை எனக்குள் ஓடவிட்டு சுகித்திருக்கிறேன்.

மாதம் ஒருமுறை உன்னை அரைகுறையாய்ப் பார்க்கக் கிடைக்கிற அந்த அரை நொடியையும் இழக்க விரும்பாமல் வாசல் தட்டிய அமெரிக்க வாய்ப்புக்களை வழியனுப்பிக் கொண்டிருந்த நான், அதன் பின்தானே அமெரிக்கா போனேன். உனக்காகத் தானே..உனக்காக மட்டும்தானே?

ஆனால் நீ உன் வார்த்தையைக் காப்பாற்றாமல் என்னை ஏமாற்றி விட்டாயே, மல்லி? அந்த ஒரு வருடத்தில் உன் சுவாசம் சுற்றும் காற்றைச் சுவாசிக்காமல் மூச்சுத் திணறி, மனசு முடங்கி, கதறித் தவித்த பொழுதுகளை உன் காதோரம் சொல்லிச் சொல்லி சிலிர்க்க வைக்கப் போகிற கனவுகளோடு நான் கிராமத்தில் காலடி வைத்தேன்.

ஆனால் என்னைப் பார்த்த அத்தனை பேர் பார்வையிலும் ஒரு அனுதாபம் தொனித்ததன் ரகசியம் புரிந்த போது...? நேரே என் வீட்டுக்குக் கூடப் போகாமல் உன் வீட்டுக்குச் சென்று நேராய் உன் அப்பாவிடம், "மல்லியை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுங்க. நாங்க இந்த ஊர்ப்பக்கம் கூட வரமாட்டோம். அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிர்றோம்" என்று தலை நிமிர்ந்து கேட்டபோது, அவர் தலை குனிந்து கண்ணீர் சிந்தியதற்கு எனக்குக் காரணம் தெரியாமலேயே போயிருக்கலாம்.

ஒன்றுமே சொல்லாமல் கோபாலு என் தோள்மீது கைபோட்டு வெளியில் நடத்திய போதே ஏதோ விபரீதமென்று வயிறு பிசையத்தான் செய்தது. இதோ இந்த சாயபு கிணற்றருகில் என்னை நிறுத்திவிட்டு கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே 'மல்லி' என்று கிணற்றினுள் கோபாலு கை காட்டிய போது துகள் துகளாகச் சிதறி என் சுயம் இழந்து போனேனடி.

அன்று சிதறியவன் இன்று வரை உயிர் பெற முடியாமல்தான் தவிக்கிறேன். பிணங்களுக்கு வலிக்காதென்பார்களே? ஆனால் எனக்கு இந்த வலி நிரந்தரமாய்ப் போயிற்றே? எப்படியாவது என்னை எப்போதும் சுழற்றியடிக்கும், என்னைப் பிய்த்தெடுக்கும், என்னை நொறுக்கிப் போடும் இந்தச் சித்திரவதையை யாருக்கேனும் உணர்த்திவிட வேண்டுமென்று முயல்கிறேன். ஆனால் என் வார்த்தைகளில் சிக்காமல் என்னை மேலும் மேலும் நசுக்கிப் போடுகின்றன உன் நினைவுகள்.

ஏனிப்படி என் ஒவ்வொரு செல்லிலும் உன் நேசமென்ற விஷத்தை விதைத்துவிட்டுப் போய்விட்டாய்? உன் அப்பா சொன்னபடி, வேறு யாரையாவது கட்டிக் கொண்டிருந்தால் 'துரோகி' என்று உதறிவிட்டாவது வாழ்ந்திருப்பேன். ஆனால் என்னைத் தவிர யாரையும் நினைக்கக்கூடக் கூடாது என்றல்லவா உயிரைவிட்டிருக்கிறாய்? ஏன் என்னை இப்படி நிரந்தரக் கடனாளியாக்கினாய் மல்லி?

காலம் சிறந்த மருந்து என்கிறார்கள். இதோ 7 வருடத்துக்குப் பின்னும் எனக்கு சாயபு கிணற்றடிதான் உன் மடி போலத் தோன்றுகிறது. உன் சுவாசக் காற்று இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் என் சுவாசமும், உன் உள்ளங்காலை ஸ்பரிசித்த இந்த நிலத்தில் உன் அதிர்வைத் தரிசிக்கிற என் உயிரும், உன் நேசத்தின் நெருக்கத்தைக் கொஞ்சமும் இழக்கவில்லை. ஆனாலும் நாளைக்கு எனக்குக் கல்யாணம் மல்லி. துரத்தித் துரத்தி உன் தங்கையை எனக்குக் கட்டி வைக்கிறார்கள். உன் சாயலும் உன் ரத்தமும் எனது நாளைய மனைவிக்கு இருந்தாலும் அவள் நீயாகிவிட மாட்டாள், மல்லி.

ஆனால் நீ இங்கே விட்டுப்போன உன் ஆன்மாவைத் திரும்பப் பெற, என் நேசத்தை நீ அருகிருந்து அனுபவிக்க, என் உயிர்த்துளியில் நீ உருவாகி வருவாய் என்கிற எதிர்ப்பார்ப்பில் நான் என் மணவறைக்குச் செல்கிறேன். என்னை உயிர்ப்பித்துக் கொடுக்க என் மகளாய் வந்து விடு மல்லி...

உன் ப்ரியமானவன்.

lolluvathiyar
27-10-2007, 06:29 AM
ஆழ்ந்து அனுபவித்து எழுதிய ஒரு அனுபவம். மனதை குத்தி கொண்டிருந்த ஒரு உன்மையின் பாரத்தை மன்றத்தில் இறக்கி வைத்திருகிறீர்கள் போல இருக்கு. உங்கள் மணம் இனி நிச்சயம் அமைதி அடையும்.


உன் அப்பா சொன்னபடி, வேறு யாரையாவது கட்டிக் கொண்டிருந்தால் 'துரோகி' என்று உதறிவிட்டாவது வாழ்ந்திருப்பேன்.

துரோகி ஆனாலும் தவறில்லை ஆனால் நம்மை துரோக்கி ஆக்கி சென்றவளை மன்னித்து மறந்து விடுவது தான் சிறந்தது.

மனோஜ்
12-11-2007, 01:58 PM
உள்மனதை அழகாய் வெளிபடுத்தியது அருமை சடகோபன் வாழ்த்துக்கள்

பூமகள்
12-11-2007, 03:20 PM
கதை நகர்ந்த விதம் முழுக்க ஒருவரின் உணர்வை அவரின் மனம் சொல்வது போல சொல்லியிருப்பது வித்தியாசம்..
அழகான கதை... துயரான முடிவு..!
காதலை இத்தனை ஆழமாய் யோசித்த அந்த நாயகர் தம் காதலியின் இழப்பைக் கண்டு எப்படி மனம் உடைந்திருப்பார் என்று படித்த எமக்கு நன்றாகவே விளங்குகிறது.
ஆயினும்... திருமணம் வரை காதலியை நினைப்பது குற்றமில்லை. மாற்றாள் ஒருத்தியை மனைவி ஆக்கிய பின் பழைய காதலியை நினைத்து வருந்துவது ஒரு விதத்தில் அந்த மனைவிக்கு உண்மையாய் இல்லாதது போல் ஆகும்.
கதையின் நாயகர் மனைவியின் மேல் அன்பாய் எல்லாவற்றையும் மறந்து வாழ்வது தான் சிறந்தது.
காலம் மருந்தாக அமையும்.
வாழ்த்துகள் சடகோபன்.

இளசு
12-11-2007, 08:54 PM
பிணத்துக்கும் வலிக்கிறதே...

இந்த ஒருவரியில் எல்லாமே அடக்கம்..

ஆனாலும், இன்னொரு உயிர்ப்பின் தொடக்கத்தில்..
இந்த சோகம் '' முடிவதே'' நல்லது..


பாராட்டுகள் சடகோபன்..

மிகத்திறமையான கதையாசிரியர் நீங்கள். வாழ்த்துகள்!

மலர்
13-11-2007, 06:09 PM
"பணம் இருந்தால் ஜாதியெல்லாம் அடிபட்டுப் போகும், அப்பு.
அப்படியாவது ஒழிந்து போகட்டும்...


நாளைக்கு எனக்குக் கல்யாணம் மல்லி. துரத்தித் துரத்தி உன் தங்கையை எனக்குக் கட்டி வைக்கிறார்கள். உன் சாயலும் உன் ரத்தமும் எனது நாளைய மனைவிக்கு இருந்தாலும் அவள் நீயாகிவிட மாட்டாள், மல்லி.
விரும்பி போகும் பொது விலகிபோன உறவுகள்
விலகும் போது விரும்புவது ஏனோ.....

சடகோபன் கதையை ஆழ்ந்து உள்வாங்கி அழகாய் எழுதியமைக்கு என்னுடைய பாராட்டுக்கள்....

அறிஞர்
13-11-2007, 07:59 PM
படித்தவுடன்.. மனதை கனக்க வைத்துவிட்டது....

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.. நண்பரே...