PDA

View Full Version : முதிர்ந்த இலைகள்



Hayah Roohi
25-10-2007, 06:48 PM
நிலா காயும் முன்னிரவில்....
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!


என்
ஆன்மாவுக்குள் பீறிட்ட
சின்ன நீரூற்றின்
பிரவாகம்....
கரை உடைக்கிறது!!!


தாகம்!
தாகம்!


முளையாய்
அரும்ப முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!



தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்...
என் கனவுகள்!!!



ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!


இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல் ஓடும்
வாழ்க்கை....
ஒற்றையடிப்பாதையாய்.....



ஒழுங்கையோ
ஒற்றையடி!

முள்பட்டே
கிழிந்த
பாதங்கள்!


ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!



ஆண் அல்ல
என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!


திறமை வெள்ளத்தின்
வீச்சை
மூச்சடக்கி......
துளித்துளியாய்...
தேவைகளில் பெய்!!


பிரார்த்தனை விழிகளின்
ஈரத்தில்...
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்....
ஒரு
தாய்ச்சிறகின்
கதகதப்பாய்....
என் தொழுகை!!!!


வானம்
தொட்டு விடத்
துடிக்கும் உள்ளமே!!
நில்!!

அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!

யவனிகா
25-10-2007, 07:00 PM
எதேனும் ஒரு தருணத்தில் உங்கள் கவிதையைப் படிக்க நேரிடுகிறது. நேரிடும் தருணங்களெல்லாமே நெருப்பெனத தகிக்கிறது என் மனம், திடீரென வந்து மனதை தீப்பிடிக்க வைக்கிறீர்கள், தொழுகை இத்தனை இதமானதா?நாத்திகமாய் என் மனம் நம்பத்தயங்குகிறது, வார்த்தைகள், ஸ்திரமாக என் நாத்திக வேடத்தைக் கலைக்க முயலுகின்றன, தொடருங்கள்.

Hayah Roohi
25-10-2007, 07:05 PM
நன்றிகள் யவனிகா....