PDA

View Full Version : அகதி



Hayah Roohi
23-10-2007, 05:18 AM
என்
சுட்டு விரல் பட்டு
சிலிர்க்கும்...
வேலியோர மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்...
மேகப்பஞ்சு!


அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்...
ஒற்றை நிலா!

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பி
வரவேற்கும்
முன் வாசல் வேப்ப மரம்!


என்
கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!


நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்
பதித்த
நதிக்கரை!



............................
ஒன்றும் ரசிக்கவில்லை
.............................


எல்லாமே
எனக்கு அந்நியமாய்....


எனக்கெதிராய் சதி
செய்வதாய்.....
.........................


....................................
என் உயிர் முளைத்து
சடைத்த
என் தேசம்
எனக்கினி சொந்தமில்லை!!!

சுகந்தப்ரீதன்
23-10-2007, 05:57 AM
என் உயிர் முளைத்து
சடைத்த
என் தேசம்
எனக்கினி சொந்தமில்லை!!!
கண்ணீரை வரவைக்கும் கவிவரிகள் இவை... வேரோடு பிடுங்கி வேறிடத்தில் நட்டதன் வேதனையும் வெறுமையும் தங்களின் கவிவரிகளில்.. ஏக்கங்கள் நிறைந்ததாய் துக்கங்களை மட்டும் துணையாய் கொண்ட அகதிகளின் வாழ்வையும் மன உணர்வையும் மிக அழகாக வெளிபடுத்திய ரூகிக்கு எனது வாழ்த்துக்கள்..!

யவனிகா
23-10-2007, 09:52 AM
ஹயா ரூஹி...உங்களது ஒவ்வொரு கவிதையும் உயிரின் உள்ளே ஊடுருவுவதாகவே உள்ளது.மனதை வலிக்கச் செய்யும் வார்த்தைகள். ,தொடருங்கள்.
தோழி யவனிகா.

ஷீ-நிசி
23-10-2007, 12:22 PM
பிரமாதம்... வாழ்த்துக்கள்!

அமரன்
23-10-2007, 01:51 PM
கதி இல்லாதவர்களை
அகதி என்பார்கள்...

அதிகதியில் ஓடுவோருக்கு
அகதி நிலை -தேசத்தில்
கதியாக பலர் இருந்தும்..

நெருடும் இந்நிலை
நெருங்காதிருக்கட்டும்
எதிர்கால சந்ததியினருக்கு..

Hayath
25-10-2007, 12:24 PM
ஈழத்து அகதிகளின் உணர்வை இயல்பாய் அப்பட்டமாய் உங்கள் கவிதை தெரிவிக்கிறது.தொடர்ந்து இதுப் போன்ற கவிதைகளை வெளியிட்டு உங்கள் சோகங்களை, சுகங்களாக மாற்றிக் கொள்ளுங்கள்.

இனியவள்
25-10-2007, 01:36 PM
பலர் அனுபவித்துக்
கொண்டிருக்கு கொடுரமான
வலிகள் உங்கள் கவி
வரிகளிலே வாழ்த்துக்கள்

அகதி என்னும் ஆடை
பூண்டு..

அந்நியன் முன் கை கட்டி
வாழும் அவலமும்..

ஓவ்வொரு விடியலிலும்
பிறக்குமா எமக்கோர்
விடியலென ஏங்கும் காலம்
கானல் நீராய் மறைந்தோடும்
காலம் தொலை தூரத்தில்
இல்லை..