PDA

View Full Version : மணல் வீடாய் ஒரு சினேகம்



யவனிகா
22-10-2007, 07:07 PM
அது சென்னையின் உயர்தட்டு மக்களுக்கான குடியிருப்பு...பெரிய பங்களா டைப் வீடுகளும், அவற்றைக் காபந்து செய்யும் காம்பௌண்டுச் சுவர்களும், உறுதியான இரும்பு கேட்டுகளுமாக அந்த இடம் நட்சத்திர அந்தஸ்து பெற்று விளங்கியது.தெருக்களின் இருபுறமும் மரங்கள் நிழலைத் தந்து அந்த இடத்தையே தண்ணென்று வைத்திருந்தன.

வலதுபுற வீடு ஒன்றின் பால்கனியில் ஒரு சிறுமி நின்று கொண்டு, ஆளில்லாத ரோட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.நன்கு குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி, அணிந்திருந்த ஃபிராக்,உயர்தர காலணிகள் என்று அந்தக் குட்டிப்பெண் பார்த்தவுடன் கருத்தைக் கவரும் வகையில் இருந்தாள்.அவள் பெயர் காவ்யா.காவ்யாவிற்கு வயது ஆறு..
காவ்யாவிற்கு அன்று பொழுதைக் கழிப்பது சிரமமாக இருந்தது.அம்மா வழக்கம் போல வெளியே போய்விட்டாள்.ஆயா குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.அதனால் தான் கையில் பொம்மையுடன் பால்கனிக்கு வந்து ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதிர்ப்புறத்தில் புதிதாய் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.தெருவில் மணலும்,ஜல்லியுமாய் கொட்டிக் கிடக்கிறது.கட்டப்படும் வீட்டின் மேல் தளத்தில் சித்தாள்கள் தலைச்சுமையுடன் நடந்துகொண்டிருப்பது காவ்யாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது...இது யாரு இன்னொரு பாப்பா? வெளியே கொட்டி வைத்திருக்கும் மணலில் வீடு கட்டி விளையாடுறது? காவ்யாவின் கண்கள் அங்கே மணலில் விளையாண்டு கொண்டிருந்த குழந்தையை ஆர்வமுடன் பார்த்தன.சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தானும் அவ்வாறு விளையாடவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.

அம்மா வருவதற்கு இன்னும் நேரம் ஆகும்.ஆயா தூங்கிக்கொண்டிருக்கிறாள்.பூனை நடை நடந்து மெல்ல மெல்ல கீழே வந்தாள்.டி.வி.யில் ஆயா அவளுக்காக போட்டுவிட்டிருந்த டாம் அன் ஜெர்ரி, பார்ப்பவர் யாரும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சண்டை பிடித்துக் கொண்டிருந்தது. மெல்ல அடி வைத்து மெயின் கேட்டை நெருங்கினாள். நல்ல வேளை மெயின் கேட் சும்மா தான் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. சுதந்திரம் கிடைத்த சந்தோசத்தில் ஒரே ஓட்டமாக எதிர் வீட்டுக்கு ஓடினாள்.
குடுகுடு வென ஓடிபோய் மண்ணில் விளையாண்டு கொண்டிருந்த அந்த பாப்பாவின் முன்னால் நின்றாள்.அதுவும் தலையை உயர்த்தி இவளைப் பார்த்தது.காவ்யா அணிந்திருந்த ஆடைகள், அவளுக்கு வியப்பளித்திருக்க வேண்டும், திறந்த வாய் மூடாமல் காவ்யாவைப் பார்த்தபடி நின்றது.
காவ்யாதான் முதலில் பேசினாள்

,உம் பேர் என்ன? எம் பேர் காவ்வியா..
.
சிறிது நேர மௌனத்திற்குப் பின் அந்த பாப்பா பேசியது,"என்னோட பேரு குப்பி. நீ எங்கிருந்து வர்ற?"

காவ்யா சொன்னாள் "நா எதிர் வீடு.நீ மண்ணில வெளாண்டிருந்ததப் பாத்துதான் வந்தேன்.நானும் விளையாட்டுக்கு வரவா?

இதற்கிடையே குப்பியைப் பார்த்து விடுவோம். குப்பிக்கும் வயது ஆறிலிருந்து ஏழுக்குள் தான் இருக்கும்..குப்பி சித்தாள் சின்னத்தாயின் மகள், கட்டப் பட்டுக்கொண்டிருக்கிற வீட்டின் பின்புறம் தற்காலிகமாக குடிசை போட்டுத் தங்கி இருக்கின்றார்கள். குப்பியுடன் சேர்த்து மொத்தம் மூன்று பெண் குழந்தைகள். குப்பிக்குப் பின் பிறந்தவர்கள். மொத்தக் குடும்பத்தின் ஜீவனமும் சின்னத்தாய் ஒருத்தியின் உழைப்பில் இருக்கிறது.சரி,சிறுமிகளிடம் வருவோம்.

இன்னும் ஆச்சர்யம் மாறாத விழிகளுடன் காவ்யாவைப் பார்த்தாள் குப்பி. "சரி,உன்னோட அம்மா எங்க?" என்றாள் காவ்யா,குப்பியிடம்

"அங்க பாரு மேல வேல செய்யுது பாரு, அதான் என் அம்மா, என்றாள் குப்பி அம்மாவைக் கைகாட்டி.

"அவளோ உயரத்தில வேலை செய்யறாங்களே பயமா இருக்காதா? "

"பயமெல்லாம் இருக்காது.நானும் பெரியவளானா இதே போலத் தான் வேலை செய்வேன்" என்றாள் மிடுக்காக

"சரி ஏன் உன் துணியில இத்தனை ஓட்டை." காவ்யா.

"அதுவா, அம்மாக்கு தைக்க நேரமில்ல. நாளைக்கி தெச்சுத் தருவா.உன் சொக்கா ரொம்ப அழகாயிருக்கு. சேப்புக்கலரு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.சரி உன் அப்பா எங்கே?"

"டாடி பிசினெஸ் டூர் போயிருக்கார்,பாதி நாள் வீட்ல இருக்க மாட்டார். ஃபாரின் போயிருவார்.மம்மி லேடிஸ் கிளப் போவாங்க,ஆயா கூடத்தான் நான் இருப்பேன்"

"எங்கப்பா கூடத்தான் மாசத்தில பாதிநாள் ஓடிப்போயிருவாரு, அப்புறம் எப்பாச்சி வீட்டுக்கு வந்து அம்மாவ அடிச்சி காசு வாங்கிட்டு மறுபடி போயிருவாரு"

"ஐ, எங்கப்பாவும், உங்கப்பாவும் சேம்தான், சரி நீ ஏன் மொட்டை போட்டுருக்கே, நீளமா முடி வளர்த்து பின்னல் போடலாமில்ல,அது எனக்கு ரொம்ப பிடிக்கும்"

"அதுவா,தலையில எண்ண வெக்காததால கட்டி வந்துதா, அம்மா மொட்டை போட்டுட்டா .நீ மட்டும் ஏன் முடி விடல? குட்டியா வெட்டி வெச்சிருக்க?"

"எனக்கு ஆசைதான், அம்மாக்கு நேரமில்ல, ஆயா அம்மாகிட்ட சொல்லி போனவாரம் முடிய வெட்டிட்டாங்க, ரொம்ப அழுதேன் தெரியுமா?"

"சரி, அழுவாதே, வளந்திரும்.சரி நீ என்னெல்லாம் வெளாடுவே?"

"எங்கிட்ட நெறைய டாய்ஸ் இருக்கே?டெடிபேர், சின்ரெல்லா,பார்பி. உங்கிட்ட இருக்கா? நீ என்ன பொம்மையெல்லாம் வெச்சிருக்க?"

"பொம்மயெல்லாம் அம்மா வாங்கித் தர மாட்டா, எனக்குத்தான் வீட்டில ரெண்டு தங்கச்சிப் பாப்பா இருக்கே, அவங்க கூடத்தான் வெளாடுவேன்"

"ஓ ரியலி! நீ ரொம்ப லக்கி, எனக்குத்தான் விளையாட யாருமே இல்ல, எப்பவும் டி.வி. தான் பார்க்கணும்"

"உங்க வீட்டில டி.வி.யெல்லாம் இருக்கா? டி.வி. பாக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்."

"நீ வேணா எங்க வீட்டுக்கு வாயேன். நம்ம ரெண்டு பேரும் விளையாடலாம். டி.வி. பாக்கலாம்"

"அம்மாகிட்ட கேட்டிட்டு வரேன், சரியா. நீ என்ன சாப்பிட்ட காலையில?நான் ஒண்ணுமே சாப்பிடல. இன்னைக்கு வீட்ல பழயது கெட்டுப் போச்சா...அம்மா கொட்டிட்டா"

"நானும் தான் சாப்பிடல. ஆயா சீக்கிரமா சாப்பிடின்னு, என்ன தலைல கொட்டிட்டாங்க. எனக்கு ரொம்ப வலிச்சிதா...அழுதுட்டே சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டேன். அவளும் தட்டை அலம்பி வெச்சிட்டா!"

நேற்றுப் பெய்த மழையால், கொட்டிக்கிடந்த மண் ஈரமாக இருந்தது. ஈர மண்ணில் இருவரும் வீடு கட்டி விளையாட ஆரம்பித்தார்கள். யாரோ ஒரு குட்டிப்பெண்ணுடன் குப்பி விளையாடுவதைப் பார்த்த குப்பியின் அம்மா சின்னத்தாயி தலைச்சுமையை இறக்கிவைத்து விட்டு கீழே இறங்கி வந்தாள்.

யாரு குப்பி இது? என்றாள் குப்பியைப் பார்த்து.

"நான் இதோ இந்த வீட்டிலிருந்து வர்றேன்,குப்பி கூட விளையாட வந்தேன் ஆன்ட்டி" என்று பதில் சொன்னாள் காவ்யா.

"அட என்னமா பேசுது குட்டி?" மோவாயில் கையை வைத்து வியந்தாள் சின்னத்தாயி.

அந்நேரம் வேகமாய் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்..

"ஐ அம்மா, அம்மா நான் இங்கே இருக்கேன்"காவ்யா ஆர்வமாய் அந்தப் பெண்ணை அழைத்தாள். காவ்யாவைப் பார்த்தவுடன் அவள் முகம் சட்டெனச் சுருங்கியது.

"காவ்யா நீ இங்கே என்ன பண்ற? ஆயா எங்கே? கதவ எப்படித் திறந்த? இப்பிடி வெளியே வந்து மணல்ல விளையாடி உடம்புக்கு ஏதாவது வந்தா யாரு பாக்கிறது?ஆயாவை சொல்லணும்,வா வீட்டுக்கு" காவ்யாவின் பதிலை எதிர் பார்க்காமல் அவள் கையைப் பிடித்து இழுத்தபடி வீட்டை நோக்கி நடந்தாள்.

�அம்மா..,கொஞ்ச நேரம் வெளையாண்டுட்டு வர்றம்மா� அழுத காவ்யாவை அவள் கண்டுகொள்ளவில்லை. காவ்யா குப்பியைப் பார்த்தபடி அழுது கொண்டே போனாள்.அவளுக்குத் தெரியும் நாளை முதல் வாசல் கேட் அடைத்துப் பூட்டப் படும் என்று.

சிறிது நேரமே பழகினாலும் காவ்யாவிடம் மனதளவில் ஒட்டிக்கொண்ட குப்பி, காவ்யா போன திசையையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்..

lolluvathiyar
23-10-2007, 07:07 AM
மிக அருமையான கதை. கதை என்று சொல்வதை விட உன்மை என்று தான் சொல்ல வேண்டும். மேல் தட்டு மக்கள் சுத்தம் என்ற மாயையில் தங்கள் குழந்தைகளை தவறாக வளர்கிறார்கள். (மனலை தொட்டாலே சளி பிடித்து விடும் அளவுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் வளர்கிறார்கள்.

நான் இப்படி தான் முதலில் வசதி படைத்தவர்கள் இருக்கும் ஏரியாவில் குடி இருந்தேன். ஏன்னுடைய இளம் வாழ்கை கிராமத்தில் கழித்ததால், எனக்கு அந்த ஏரியா பிடிக்கவே இல்லை. அக்கம் பக்கத்தில் யாரும் ஒட்டுவதில்லை. ஒரு மெட்டீரியல் லைபாக தோன்றியது. பிறகு குழந்தைகளுக்காவே வேறு ஏரியா போய் விட்டேன். அந்த வீதியில் நிரைய ஏழைகளும் குடி இருக்கும் வீடுகளும் இருகிறது. உன்மையில் பயமில்லாமல குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப முடிகிறது.

நான் வீட்டில் இருக்கும் போது மழை வந்தால் என் குழந்தைகளை மழையில் நனைந்து விளையாட அனுமதிப்பேன். சளி பிடிக்காது. பரிட்சை லீவில் எங்க தோட்டத்துக்கு அனுப்பி விடுவேன். ஆடு மாடு மேய்க்க அனுமதிக்கும்படி என் பெற்றோரிடம் சொல்லி விடுவேன்.
ஆடு முடுக்கீட்டு வரும் போது என் குழந்தைகளின் முகத்தில் கானபடும் சந்தோசம் எந்த விடியோ கேம் அல்லது டிவியும் தராது.
பாராட்டுகள்

நுரையீரல்
23-10-2007, 09:35 AM
கதை ரொம்ப டச்சிங்கா இருக்கு. வாத்தியார் கூட சூப்பரா பின்னூட்டமும், தன் வாழ்க்கையை ஒற்றிய பின்னூட்டத்தை கொடுத்திருக்கிறார்.

நான் கூட ஏழையாகப்பிறந்து, ஏழையாக வளர்ந்தவன். இப்போது நல்ல நிலைமையில் இருந்தாலும், மீண்டும் ஒருமுறை பிறந்தாலும் அதே ஏழ்மை வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கிறேன். ஆனால், ஏழையாக இருந்தபோது அதை வெறுத்தவனல்லவா நான். இதற்குத்தான் "இக்கரைக்கு அக்கரை பச்சை" என்று கூறுவார்களோ....

யவனிகா
23-10-2007, 09:43 AM
மேல் தட்டு மக்கள் சுத்தம் என்ற மாயையில் தங்கள் குழந்தைகளை தவறாக வளர்கிறார்கள்..
பாராட்டுகள்

பின்னூட்டம் அளித்த லொள்ளு வாத்தியாரண்ணா அவர்களுக்கும், எஸ்.ராஜா அவர்களுக்கும் நன்றி.
சுத்தம் என்பது ஒன்று விசயம் என்றாலும், மேல் தட்டுப்பிள்ளைகள், சாதாரண கூலித்தொழிளாளிகளின் குழந்தைகளுடன் விளையாடினால் அவர்கள் கௌரவம் என்னாவது? பிள்ளைகளின் சந்தோசத்தை விட அவர்களின் கௌரவமே முக்கியம் என்று நினைக்கும் பெற்றோர்களே அதிகம்.

சூரியன்
23-10-2007, 10:53 AM
கதையை மிகவும் உணர்ச்சிகரமாக எழுதியுள்ளீர்.
இந்த வரிகள் மிகவும் கவர்ந்தன.

அம்மா..,கொஞ்ச நேரம் வெளையாண்டுட்டு வர்றம்மா அழுத காவ்யாவை அவள் கண்டுகொள்ளவில்லை. காவ்யா குப்பியைப் பார்த்தபடி அழுது கொண்டே போனாள்.அவளுக்குத் தெரியும் நாளை முதல் வாசல் கேட் அடைத்துப் பூட்டப் படும் என்று.

பூமகள்
23-10-2007, 11:36 AM
யவனி அக்காவிடமிருந்து நெஞ்சைத் தொடும் மற்றுமொரு நல்ல கதை...!!!
காவியா.. குப்பி பாத்திரபடைப்பின் வித்தியாசம்..
மாடி வீட்டுக் குழந்தை...ஏழைச் சிறுமி.... அனுபவ வித்தியாசங்கள்.. ஏற்றத்தாழ்வு... அழகாய் காட்டினீர்கள் யவனி அக்கா..!
கொஞ்சம் உரையாடலில் குழந்தைத்தனம் இல்லாதது போல தோன்றியது.
இன்னும் மெருகேற்றியிருக்கலாம். மற்றபடி அனைத்தும் அருமை அக்கா.
வாழ்த்துகள்..!!

யவனிகா
23-10-2007, 11:41 AM
யவனி அக்காவிடமிருந்து நெஞ்சைத் தொடும் மற்றுமொரு நல்ல கதை...!!!
காவியா.. குப்பி பாத்திரபடைப்பின் வித்தியாசம்..
மாடி வீட்டுக் குழந்தை...ஏழைச் சிறுமி.... அனுபவ வித்தியாசங்கள்.. ஏற்றத்தாழ்வு... அழகாய் காட்டினீர்கள் யவனி அக்கா..!
கொஞ்சம் உரையாடலில் குழந்தைத்தனம் இல்லாதது போல தோன்றியது.
இன்னும் மெருகேற்றியிருக்கலாம். மற்றபடி அனைத்தும் அருமை அக்கா.
வாழ்த்துகள்..!!

நன்றி பூமகள்,உரையாடலில் குழந்தைத் தனம் சற்றே குறைந்தது உண்மையே..ஆனால் இப்போதைய குழந்தைகள் கூட பெரிய மனித தோரணையில் பேசத்துவங்கி விட்டன.சரியா நான் சொல்வது? இருப்பினும் அடுத்தமுறை படைப்பை இன்னும் மெருகேற்றி அளிக்கிறேன்.வாழ்த்துக்களுக்கு நன்றி தங்கையே!

அறிஞர்
24-10-2007, 03:36 PM
தங்களின் கதை அவ்வளவாக படித்தது இல்லை... இன்று படித்தேன்... அருமை....

நம்மில் பலர் வாழ்ந்த வாழ்க்கை.. நடுத்தர வாழ்க்கை... மணல் வீடு கட்டி... ஓடியாடி விளையண்ட கால பொற்காலம்.

உயர்தர வாழ்க்கை... குழந்தைகளுக்கு ஒரு சிறைக்கூடமே...

அமரன்
24-10-2007, 04:40 PM
கதையைப் படித்ததும்
பழைய பாதை பார்த்து
தலை விரும்பி திரும்புகிறது...!

மழை நாட்களில்
குளிர்நீர் ஸ்பரிசம்
அறியாத நாட்களில்லை.
ஜுரமோ சளியோ
அறிந்த நாளும் இல்லை..!

பக்கத்து வீட்டுப்பையன் - என்றுமே
மழையுடன் சினேகம் கொண்டதில்லை..
மூக்கடைப்பும் மூக்கு நீரோட்டமும்
அவனுடன் சினேகம் கொன்றதில்லை..!

அதி சுகாதாரம் என நினைத்து
இசைவாக்கம் அறுக்கும் செயல்பாடு,
சுத்தம் பேணும் நிலைப்பாடு
இரண்டுக்கும் உண்டு பலவேறுபாடு..!
**********************************************************
அம்மாவின் அரவணைப்பு
அப்பாவின் கண்டிப்பணைப்பு
இரண்டும்
எட்ட இருந்து கிட்டும் நிலை
உயர் தட்டு மழலைகளுக்கு...!

உயிர் தடங்கும் வலி இது...!

பணத்தை தேடி
காணாமல் போகும் அப்பன்,
பணத்துடன் அடிக்கடி
ஓடிபோகும் அப்பன்,

இருவர் ஒப்பீடும்
அருவா முனை பப்பாளி...!

காற்றடித்தும் பிரகாசிக்கும் "குப்பி" விளக்கு.
காற்றெடுத்து பிரகாசிக்கும் "குழல்" விளக்கு..
இடைப்பட்ட வித்தியாச விளக்கம்
உரையாடல் வடிவில் துலங்குகிறது...!

கெட்டவைகள் அண்டிவிடும் நினைப்பில்
கேட்டுகளை பூட்டும் குடும்பங்களுக்கு
கொட்டும் பாரிய கொட்டாக இக்கதை...!

கொட்டக் கொட்ட விழித்து எழுதி
விழிக்க விழிக்க கொட்டினாலும் - இவ்
வகையறாக்களுக்கு கிட்டுமா விழிப்பு...!!!!

நேசம்
25-10-2007, 03:23 AM
இரு குடும்பங்களின் சூழ்நிலையை இரு குழந்தைகள் முலம் அழகாக சொல்லியுள்ளார்.குழந்தைகளின் உரையாடலில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்(குறையாக சொல்லவில்லை)

யவனிகா
25-10-2007, 04:06 AM
பின்னூட்டம் அளித்த சூரியன், அறிஞர் அவர்களுக்கு நன்றி,கதையை விட அமரன் அவர்களின் பின்னூட்டமே எனக்கு அதிகம் பிடித்தது.எப்படித்தான் பின்னூட்டங்களைக் கூட, சிந்தித்து, நேரம் செலவு செய்து,நேர்த்தியாக நெய்யப்பட்ட பட்டாடையைப் போல வழங்குகிறாரோ தெரியவில்லை.உங்கள் பின்னூட்டத்திற்காகவே படைப்புகளைப் படைக்கலாம் போல்.
நேசம் சொன்னது போல உரையாடலை இன்னும் நேர்த்தியாகத் தந்திருக்கலாம், சரியாக அமைய வில்லை,அவசர கதியில் அமைந்தது போலவே நானும் உணர்கிறேன்.தொடந்த்து விமர்சியுங்கள் நேசம்.

ஆதவா
06-11-2007, 06:59 AM
முந்திய ஜாலியான கதையைப் படித்துவிட்டு இங்கே வந்தால், சற்றே உணர்வுபூர்வ கதைஒன்று இங்கே தழுவிக் கிடக்கிறது..

கதைகதையாம் காரணமாமில் வசனங்களே அதன் நிறை... இங்கே வசனக் குறைபாடு உள்ளது.. குறிப்பாக, காவ்யா பேசும் வசனங்களில் ஓரிரு இடங்கள் குழந்தை என்ற நினைவை விட்டு அகலவைக்கிறது.

பெரும்பாலான பணக்கார வீடுகளில் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிப்பதில்லை. காரணம், பயம். தனது வாசலிலேயே வாகன விபத்து ஏதும் நிகழ்ந்துவிடலாம் என்ற பயம்.

மணல் விளையாட்டு என்பது அந்த பணக்கார பெண்மனியே பார்த்திருக்கக் கூடும். ஆனால் அது சுகாதாரமற்ற விளையாட்டாகவே கருதுவார்கள். இது அவர்களின் தவறா என்பது தெரியாது.... ஏனெனில் நான் இரண்டுக்கும் இல்லாத நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறேன்.

இங்கே தோழமை பிரிக்கப்படுகிறது... அந்த குழந்தை மட்டுமே அறிந்தவாறு.

என்னைக் கேட்டால், கதை சொன்னவிதத்தில் காவ்யாவின் அம்மா தவறு செய்தார் என்றோ, பணக்கார புத்தியைக் காண்பித்தார் என்றோ சொல்லமாட்டேன்...

அருமை. பாராட்டுகள்.

யவனிகா
06-11-2007, 07:13 AM
நன்றி ஆதவா. நீங்கள் சொன்ன அதே கருத்துத்தான் எனக்கும். நான் காவ்யாவின் அம்மாவை குறை சொல்லவில்லை. சில நேரங்களில் சில உறவுகள் சூழ்நிலை காரணமாகப் பிரிக்கப்படுகின்றன. யாரையும் குறை சொல்வதற்கில்லை. பின்னூட்டமளித்த உங்களுக்கு நன்றி.