PDA

View Full Version : மாடுகள்முட்டி மலை சரியுமா???(படி...பிடித்)sifania
19-10-2007, 07:07 PM
"உங்கள் குரல்" என்ற மாத இதழில் ஆசிரியர், கவிஞர்"சீனி நைனா முகம்மது" அவர்கள் இயற்றியது- நன்றி-

மாடுகள்முட்டி மலை சரியுமா???
-------------------------

பாராட்டத்தான் எண்ணுகிறேன் என்ன செய்வது?-அட
பன்றிகளைச் சிங்கமென்று எப்படிச் சொல்வது?
மாறாட்டத்தால் இலக்கியமா மயக்கம் காண்பது?-சிறு
மண்புழுக்கள் வளைவதையா 'ட'னா என்பது?கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?-அதைக்
கண்டுவிட்டால் உன்முகமேன் கருகித் தீய்வது?
கவிஞனாக ஆசையென்றால் கற்றுப் பார்ப்பது- அது
கைவராது போனதென்றால் விட்டுத் தீர்ப்பது!கவிதையுடன் உரைத்துணுக்கா கைகள் கோப்பது?-மலர்க்
கதம்பத்துடன் கற்களையா கூட்டுச் சேர்ப்பது?
புவிபுகழும் புதுமையென்றா புலம்பித் திரிவது?-என்ன
புதுமையடா அலிகள் கூடிப் பிள்ளை பெருவது!கடிதத்துக்கே மொழியறியான் கதைக்குப் போவது-அதில்
காலைவிட்டு வாலைநீட்டிக் கவிஞன் ஆவது
வடிவமின்றி முடிவுமின்றி வரியை ஒடிப்பது-அதை
வரம்பில்லாத கவிதையென்றா கயிறு திரிப்பது?சிப்பிக்குள்ளே சிறுதுகளும் முத்தாய் மாறலாம்-கலைச்
சிந்தையிலே உணர்வுபொங்கிக் கவிதை ஊறலாம்
குப்பைக்குள்ளே கோழிகிண்டிப் புழுவைத் தின்கலாம்-அது
குன்றிமணி யானதென்றால் யாவர் நம்பலாம்?குடைபிடிக்கும் குஞ்சர்களை மேடை ஏற்றலாம்-வெறுங்
கூலங்களை நூலாய்ப்போட்டுக் கூத்துக் காட்டலாம்!
துடைப்பத்துக்கும் பட்டுக்குஞ்சம் கட்டிப் பார்க்கலாம்-அது
துள்ளித்துள்ளிக் கவிஞனென்று ஊரை ஏய்க்கலாம்!காலம்மாறும் ஊரும்தேறும் கல்வி சிறந்திடும்-இந்தக்
காலிப்பானை சட்டிகளைக் காறி உமிழ்ந்திடும்!
கோலம்மாறி எத்தர்களின் கொட்டம் ஒடுங்கிடும்-புகழ்க்
குன்றின்மீது தமிழ்க்கவிதை என்றும் ஒளிர்ந்திடும்!


வம்பர்கூடித் தமிக்கவிதை மரபை உடைக்கவா? -சில
மாடுமுட்டி மலைசரிந்து மண்ணில் கிடக்கவா?
கும்பலோடு குஞ்சரோடு முயன்று பாரடா!-உங்கள்
குறுக்கொடித்துக் கொழுப்படக்கும் கவிதை வீறடா!

நன்றி

யவனிகா
20-10-2007, 04:54 AM
மேற்கண்ட கவிதையில் எனக்கு உடன்பாடு இல்லை...வெறுமே எதுகை மோனைக்குள்ளும், உவமை உருவகங்களுக்கிடையேயும் ,வார்த்தை ஜாலங்களுக்குள்ளேயும், சந்த நடைக்குள்ளும் அடைபட்டிருப்பதன்று கவிதை...சொல்லும் கருத்தை நச்சென்று மக்கள் மனதில் ஏற்றுவது தான் கவிதை.

கவிதை நடையில் இல்லாமல், தாளம் பொருந்தாத எத்தனையோ கவிதைகள் கூட வெற்றி பெற்றிருக்கின்றன...உலகை உலுக்கி இருக்கின்றன.

கவிதை என்ன இவர்களின் தனிப்பட்ட சொத்தா? இல்லை எடுத்தவுடன் பென்சில் பிடித்து பிழையின்றி கவிதை, யார் தான் வடிக்க முடிக்கமுடியும்?

காலம் நம்மைச் செதுக்கும் போது நல்ல கவிதைகளை நாமும் செதுக்குவோம்..எடுத்தவுடன் இப்படித்தான் என்று இலக்கணம் வகுத்தாலெப்படி? ஒன்றாம் வகுப்பு முடித்துத் தானே கல்லூரி போக முடியும்...

பாமரன் கவிதை எழுதக் கூடாதா? கூலித் தொழிலாளி பாடும் கானா கவிதை இல்லையா? விவசாயி பாடும் ஏற்றப் பாடல் கவிதையில்லையா? பெற்றவள் பாடும் தாலாட்டு கவிதையில்லையா?இல்லை வெறும் சந்தக்களுக்குள் நம்மை புதைத்துக் கொண்டு சாகத்தான் வேண்டுமா?

ஏன் அலிகள் பிள்ளை பெறக்கூடாதா? அவர்கள் மனிதர்கள் இல்லையா?அவர்களும் இயன்றால் பிள்ளை பெறட்டும்...அவர்கள் பிள்ளை அவர்களுக்கு சொத்தல்லவா? நமக்கு வேண்டுமானால் அவர்கள் சொத்தைகளாக இருக்கக் கூடும்..

தேர்ந்த கவிதான் கவிதை எழுத வேண்டுமென்றால் கவிச்சமரை இழுத்து மூடத்தான் வேண்டும்...எதோ பொழுதுபோக்காக நாங்களும் படைக்கிறோம் அதிலும் மண்ணா?

அடிக்க அடிக்க அம்மியும் நகருமென்றால் மாடு முட்டிக் கூட மலையும் சரியலாம்...

sifania
20-10-2007, 12:34 PM
மன்னிக்க வேண்டும்!.நான் யாரையும் குறைகூறுவதற்காக இங்கு இந்தக் கவிதையை பதியவில்லை!!
படித்ததில் பிடித்தது......அவ்வளவுதான்!
நன்றி

யவனிகா
20-10-2007, 02:57 PM
நானும் உங்களை குறை கூறுவதற்காக இதை சொல்லவில்லை.மேலும் இதை எழுதியவர் நீங்கள் அல்லரே. என் மனதில் பட்டதைச் சொன்னேன்,தவறு இருப்பின் மன்னியுங்கள்

sifania
21-10-2007, 12:55 PM
இதே கவிஞரின் மற்றொரு படைப்பு(உங்கள் குரல் மாத இதழ்)

இவனா தமிழன்???
==============


இவனா தமிழன்? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்குக் கூடப் பொறுக்காது- இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைப்பேறு!

தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ்மர பெல்லாம் மீறுகிறான் -அதைத்
தடுத்தால் பாம்பாய்ச் சீறுகிறான்!

வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான்
வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் - அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

தானும் முறையாய்ப் படிப்பதில்லை
தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை
தானெனும் வீம்பில் தாங்கிய பணியில்
தன்கடன் பேணி நடப்பதில்லை -நல்ல
தமிழே இவனுக்குப் பிடிப்பதில்லை!

இவனுக்கு முன்னே பலபேர்கள்
இவனுக்குப் பின்னும் வருவார்கள்
தவணைகள் தீரும் தவறுகள் மாறும்
தமிழுக்கு நன்மை புரிவார்கள் -இவன்
தந்ததைத் தெருவில் எறிவார்கள்!

தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
அமுதென நஞ்சை அருந்துவர் போலே
அழிவினைக் கூவி அழைப்பவனே - தான்
அடைந்ததை எல்லாம் இழப்பவனே!

நன்றி