PDA

View Full Version : தேடித்தாருங்கள் என் பேனாவையாவது!!!



யாழ்_அகத்தியன்
16-10-2007, 12:43 PM
என் முதல் கவிதையை
யார் கேட்டாலும் அழகாய்
எழுதிக் காட்டுகிறது உன்
பெயரை என் பேனா.

என்று எழுதியதும்
என் பேனாதான்

விலக விலகத்தான் காதல்
அதிகரிக்குமாமே எங்கே ஒரு
தடவை கண்மூடித் திற

என்று எழுதியதும்
என் பேனாதான்

உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு நீ
காதலிக்காததால் தலைக்கனம்
என்கவிதைகளுக்கு

என்று எழுதியதும்
என் பேனாதான்

உனக்கு யாரோ ஒருவனின்
கவிதை பிடித்ததில் இருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்னில் ஏதாவது ஒன்று உனக்கு
பிடித்ததில் கவிதையாவது
இருக்கட்டுமே என்று.

என்று எழுதியதும்
என் பேனாதான்

அவள் என்னைக் கொஞ்சம்
கொஞ்சமாய் மறந்து தொலைத்த
பாதையில்_ நான்என்னைத் தேடி
எடுத்துக் கொண்டேன் அவளை
நினைத்து வாழ

என்று எழுதியதும்
என் பேனாதான்

களைப்பில் எந்த இடத்திலும்
இளைப்பாறிவிடாதே அந்த
இடத்தில் இளைப்பாறியே
களைத்து போகிறேன் நான்.

என்று எழுதியதும்
என் பேனாதான்

கரைந்த துளியை தேடும்
புல் போல் தேடுகிறேன் உனை
நீ வேரோடு கலந்ததை மறந்து

என்று எழுதியதும்
என் பேனாதான்

நீ இல்லாத காதலும்
காதல்இல்லாத நீயும்
என்றும் எனக்கு தோல்வியே!

என்று எழுதியதும்
என் பேனாதான்

உன் கோவத்தை என் மேல்
இறக்கி வைத்துவிட்டு போய்விடுவாய்
பாவம் நான் படாத பாடுபடுகிறேன்
உன் கோவத்தை யாரிடமாவது
இறக்கி வைக்க.

என்று எழுதியதும்
என் பேனாதான்

நீ
தாமதமாய் வரும்வரை
எப்படி சமாளிபேன் என்
கவிக்குழந்தைகளை
ஒவ்வொன்றும் அம்மா
வேணும் என்கிறது.

என்று எழுதியதும்
என் பேனாதான்

நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி
இருக்கலாம்
அப்படியென்றாலாவது
அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!

என்று எழுதியதும்
என் பேனாதான்

தினம் ஒரு கவி எழுதி
உன்னைத் தேட விட்டேன்
எல்லாமே களைப்பில் உன்
ரசிகைகளைத்தான் தேடித்தருகிறது

என்று எழுதியதும்
என் பேனாதான்

அவளைச் சிரிக்கவைத்து அழாமல்
எடுத்துக் கொடுத்தேன் என் செத்தவீட்டு
புகைபடக்காரனாய் அவளின் கல்யாணவீட்டுப்
புகைப்படத்தை

என்று எழுதியதும்
என் பேனாதான்

உன்னைச் சுற்றி வரச்சொன்னா
என் கவிதைகள் உலகம் சுற்றிவருகிறது

உலகம் சுற்றி வரச்சொன்னா நான்
உன்னை சுற்றி வருகிறேன்

என்று எழுதியதும்
என் பேனாதான்

உண்மையில்
ராசியான பேனாதான்
என்னவள் போல்

தயவு செய்து யாரவது
தேடித் தர முடியுமா..?
இரண்டில் ஒன்றையாவது

-யாழ்_அகத்தியன்

ஓவியன்
16-10-2007, 12:48 PM
கம்பன் வீட்டுக் கைத் தறியும்
அழகாக கவி பாடுமாமே.......!
இங்கே அகத்தியனின் பேனாவும்
அழகாக, அசத்தலாக "காதல்" பாடுகிறதே....! :)

பாராட்டுக்கள் யாழ்-அகத்தியன், தெளிவான நேர்த்தியான வார்த்தைப் பிரயோகத்திற்கு ஒரு சபாஷ்!

கவிதை தான் கொஞ்சம் நீள...ம், இருந்தாலும் அது கூட அழகாகத் தானிருக்கிறது.

யவனிகா
16-10-2007, 12:52 PM
கவிதை அள்ளுதுங்க யாழ் அகத்தியன்...குட்டிக் கவிதைகளை வழியெங்கும் பிரவிக்கிறது உங்கள் கவிதை...ஆனால் வலியை மட்டும் நாங்கள் சுமக்கிறோம்...என்ன நியாயமிது? பாராட்டுகளை எப்படி வார்த்தைகளாக்குவது? எப்படித் தேடினாலும் கஞ்சப்பட்டுப் போகிறது மொழி...என் மனதிலிருந்து சொன்ன பாராட்டினை உங்கள் தொலைந்த* பேனா கிடைத்த*வுட*ன், அத*னிட*ம் கேளுங்க*ள்.அழகாய் எழுதிக் காட்டும்.

யாழ்_அகத்தியன்
16-10-2007, 01:29 PM
உங்க பாரட்டுக்காகவே புதுப்பேனா
வாங்கி கிறுக்கலாம் போல இருக்கிறது

(ஆற்றில் என்ன ஒரு மீனா ஓடுது கடையில என்ன ஒரு பேனாவா இருக்கு)

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

ஜெயாஸ்தா
16-10-2007, 01:37 PM
புள்ளி வைத்து கோலமிட்டாற் போல் சின்னசின்னக்கவிதைகளை தொகுத்து ஒரு அற்புதமான காதல் கலவையை தந்து மனதை பல வித உணர்ச்சிகுவியலாய் மாற்றிவிட்டீர்கள். நன்றி.

நேசம்
16-10-2007, 06:23 PM
"உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு நீ
காதலிக்காததால் தலைக்கனம்
என்கவிதைகளுக்கு"


சிறு சிறு மணிகளை கோர்த்த மாலையை போல் அழகான கவிதை யாழகத்தியன்− வாழ்த்துக்கள்