PDA

View Full Version : செண்பக மரம்



யவனிகா
15-10-2007, 07:27 PM
நான் கோகிலா. உங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்லும் இந்நேரம்... தலைப்பிரசவத்திற்காக சவூதியிலிருந்து கோவை செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன். மெல்லிய அதிர்வுகளுடன், சீராகப் பறந்து கொண்டிருக்கிறது சவூதி ஏர்லைன்ஸ் விமானம். லிப்ஸ்டிக் தீட்டப்பட்ட உதடுகளால் செயற்கையாகச் சிரித்து, பழரசம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர் விமானப் பணிப்பெண்கள். எட்டு மாதம் நிரம்பிய என் குட்டிப்பெண் ஸ்ருதிகா, கொலுசணியாத குட்டிக்கால்களால் என் வயிற்றுக்குள் உதைத்துக் கொண்டிருக்கிறாள்.

எதிர் சீட்டிலும் தமிழ் குடும்பம்தான். அந்தத் தம்பதியினரின் சுட்டிப்பயல் சரியான அறுந்த வால் போலும். சீட்டின் மேல் ஏறுவதும் இறங்குவதுமாக சேட்டை செய்து கொண்டிருக்கிறான்."டேய் அருண், குரங்கு மாதிரி சீட்டு மேல ஏறாத.. பைலட் அங்கிள்கிட்ட பிடிச்சு குடுத்துருவேன்" என்று அவனுடைய தந்தை அவனை மிரட்டுகிறார்.

குரங்கு மாதிரியா? அவருடைய வார்த்தைகள் எனக்கு சிரிப்பை வரவழைத்து, என் பதின்ம வயதுகளை நினைவுக்குக் கொண்டுவருகிறேன்... இதோ நினைத்தாலே தித்திக்கும் அந்த நினைவுகள்...

அப்போது எனக்கு வயது 16. பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். அது மார்கழி மாதத்தின் புலர் காலைப் பொழுது... கோவை மாவட்டம், சிங்காநல்லூர், இயற்கையாகவே ஏஸி செய்யப்பட்டு குளிரில் இருந்தது. தெருக்களெல்லாம் சுத்தமாகப் பெருக்கித் துடைக்கப்பட்டு, அவரவர் கைத்திறனுக்கேற்ப கோலங்கள் வரையப்பட்டு... கோலத்தின் நடுவில் சாணிப்பிள்ளையார் எருக்கம்பூச்சூடி ஜம்மென்று அமர்ந்திருந்தார்.

"டீ கோகிலா... காலங்காத்தால எந்திருச்சமா... குளிச்சிட்டு கோயிலுக்குப் போனமான்னு இல்லாம... குரங்கு மாதிரி மரம் ஏற ஆரம்பிச்சாச்சா? எறங்கு கீழே... பூப் பறிச்சதெல்லாம் போதும்...", என்று உச்ச ஸ்தாயில் அலறுகிறாளே இது என் அம்மா.

கொப்பும், கிளையுமாய் அடர்ந்திருந்த செண்பக மரத்தின் மேல்கிளையில் லாவகமாய் கால்களைப் பதித்தவாறு நின்று கொண்டு, "அம்மா, இங்கிருந்தே பிள்ளையார் கோயில் தெரியுதே... சாமியெல்லாம் கும்பிட்டாச்சி... வேணும்ணா தோப்புகரணமும் போடவா?" என்று பதிலுக்கு நானும் கத்தினேன்.

"சனியனே... கீழே விழுந்து கையக் கால உடைச்சாதான் உனக்கு புத்தி வரும். ஏங்க இங்க பாருங்க உங்க செல்ல மகள.. மரத்து மேல நின்னுகிட்டு பதிலுக்கு பதில் எகத்தாளமா பேசிட்டிருக்கா..." என்று அப்பாவை துணைக்கழைத்தார் அம்மா.

அப்பா வருவதற்குள் எல்லாப் பூவையும் பறித்துவிட்டு இறங்கலாமென்றால், பறிக்கும் படியாகவா பூத்திருக்கிறது செண்பக மரம்... நூற்றுக்கணக்கில் பூக்கள்... பச்சை இலைகளுக்கிடையில் மஞ்சள் நிறப் பூக்கள். கவிதை போல பூத்து பூரித்து நின்றிருந்தது என் செண்பக மரம். கைக்கு வந்ததெல்லாம் பறித்து விட்டு கிளை கிளையாக கால் வைத்து கவனமாக இறங்கினேன். கடைசிக் கிளைக்கு வந்து தொப்பென்று நான் குதிக்கவும், அப்பா வரவும் சரியாக இருந்து.

என்ன கோகி இது.. பூ வேணும்னா மோகனைக் கூப்பிட்டு பறிக்க வேண்டியது தானே.. நீ ஏண்டா மரமேறுற? செல்லமாய்த் திட்டினார் அப்பா. போப்பா, மோகன் பறிச்சா பாதிப் பூவை அவன் ஸ்கூல் பிள்ளைங்களுக்கும், டீச்சருக்கும் கொண்டு போய்விடுவான். அப்புறம் என் ஃபிரண்ஸ்க்கு ஒன்னுமே இருக்காது...

"தினமும் தானடி உன் சினேதிகளுக்குப் பூ குடுக்கிறே? ஒரு நாள் அவங்க பூவெக்கலேன்னா, எந்த மாப்பிள்ளை கோவிச்சுகப்போறானாமா?" திட்டியபடியே நான் பறித்து வைத்திருந்த செண்பக மலர்களை ஊசி நூலால் கோர்க்க ஆரம்பித்தாள் அம்மா. ஊர்ல எல்லாரும் மல்லிகை, கனகாம்பரம், முல்லைன்னு கோத்து சரம்மா வெப்பாங்க... உங்க பொண்ணு மட்டும் தான் செண்பகத்தையே அறையடி நீளத்திக்கு கோர்த்து வெக்கிறா. இவ பவிசுக்கு நாளைக்கு புள்ளய வளத்த லச்சணம் பாருன்னு மாமியாக்காரி என்னை திட்டப்போறா?

போகுது போ. சும்மா கிடக்கிற பூவுதானெ... வெச்சிட்டுப் போறா விடு.. வேணும்னா மாமியார் இல்லாத குடும்பமாப் பாத்து அவளக் குடுத்தாப் போகுது.

அப்பா எனக்கு சப்போர்ட்டுக்கு வந்ததில் ஏக குசி. அவசர அவசரமாகக் குளித்துக் கிளம்பி, தலை பின்ன அம்மாவிடம் வந்தேன். அம்மா எண்ணை வெக்காதே. தளரப் பின்னுமா, டைட்டா பின்னல் போடாதே... அப்புறம் தலை வலிக்கும், என்று கண்டிசன்களைப் பிறப்பித்துக் கொண்டே தலை பின்னி முடித்தேன்.

அம்மா அழகாக கோர்த்து வைத்திருந்த செண்பகச் சரத்தை, தலையில் வைத்து ஹேர்பின் கொண்டு குத்தினாள். கோகி எல்லாப் பூவையும் ஸ்கூலுக்கு எடுத்துட்டு போகாதடி. கொஞ்சம் வீட்ல வெச்சிட்டுப் போ. நம்ம கமலா வந்தா குடுக்கலாம்.

இங்க பாரு, அடுத்த வாரம் எனக்கு எல்லா சப்ஜெட்டிலும் இன்டெர்னல் இருக்கு. இப்பவே எல்லா டீச்சரையும் பூவக் குடுத்து சரிக்கட்னாத்தான் நல்ல மார்க்கு போடுவாங்க.. உனக்கு நான் நல்ல மார்க் வாங்கனுமா வேண்டாமா? சொல்லுமா? வேணும்னா மோகன் கிட்ட சொல்லி மரத்தில மீதியிருக்கிற பூவ பறிக்கச் சொல்லி, கமலா அத்தைக்கு குடு சரியா? தலையில் அம்மா சூடி விட்ட பூச்சரத்தை கண்ணாடியில் சரிபார்த்தபடி பள்ளிக்குக் கிளம்பினேன்.

என்னுடைய வாகனம் என் லேடிஸ் சைக்கிள். அவள் சும்மா சிங்கம் மாதிரி பாய்ந்து செல்வதால் "சிம்ம ராணி" என்று பெயரிட்டு இருந்தேன். சிம்ம ராணியின் மேல் ஆரோகணித்தேன், யாரோ தலை முடியைப் பிடித்து இழுப்பது போல இருந்தது... என்னுடைய நீண்ட கருங்கூந்தல், சைக்கிள் கேரியரின் கீழுள்ள பிரேக் வொயரில் பட்டு இழுத்துக் கொண்டிருந்தது. அதை சரி செய்து விட்டு சைக்கிளை பள்ளியை நோக்கிச் செலுத்தினேன், பயணிக்கும் இந்த நேரத்தில் என் செண்பக மரத்தைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்.

நான் ஆறாவது படிக்கும் போது, கோவை அக்ரி காலேஜில் ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டேன். அதில் முதல் பரிசு ஜெயித்த போது தான், மிகச் சிறிய இந்த செண்பக நாற்றை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அதை முகமெல்லாம் பல்லாக வீட்டுக்குக் கொண்டு வந்தேன். என்னடி இது போட்டில ஜெயிச்சா ஒரு சோப்புப் பெட்டி, புஸ்தகம்னு குடுக்காம செடியக் குடித்து விட்டிருக்காங்கனு பாட்டி கிண்டல் செய்ததக் கூட பொருட்டாவே எடுக்கலை நான்.

செடி நடும் வைபவம் சீரும் சிறப்புமாக அன்று மாலையே நடைபெற்றது. கொல்லைப் புறத்தில் குழிதோண்டி ராசியான என் கையால் செடியையும் நட்டாகி, நன்றாக வளர வேண்டி சாமி விபூதியையும் மண்ணில் போட்டாச்சி. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இலை விட்டு வளர்ந்தாள் செண்பா... நான் அவளை அப்படித்தான் கூப்பிடுவேன். இடையில் அவளைக் காப்பாற்ற நான் கொஞ்சம் கஸ்டம் தான் பட்டுப் போனேன். வில்லன் என் சித்தி மகன் மோகன் ரூபத்தில் வந்தான்.

எங்கள் வீடும் சித்தப்பா வீடும் தனி தனி தான் என்றாலும் இருவருக்குமே கொல்லைத் தோட்டம் பொதுவானது. நான் எப்போதெல்லாம் மோகனுடன் சண்டையிடுகிறேனோ, அப்போதெல்லாம் அவன் என் மீது உள்ள கோபத்தில் செண்பாவின் இலையை உருவுவது, கிளையை உடைப்பது போன்ற பழி தீர்க்கும் செயல்களில் ஈடுபடுவான். இதனைத் தடுக்க நான் வெண்ணிற அட்டைகளில் வாசகங்களை எழுதி மரத்தில் மாட்டி வத்தேன். "உன்னைப் போல நானும் உயிர்தானே.. என்னைக் கிள்ளாதே... "தயவு செய்து உன் கோபத்தை என் மேல் காட்டாதே" போன்ற வாசகங்கள்...

இதனால் மோகனின் தொந்தரவு குறைந்தாலும்... செண்பாவிற்கு வேறுவழியில் அபாயங்கள் காத்திருந்தது. செண்பாவின் பக்கத்துத் தோழியான முருங்கை மரத்து கம்பளிப் பூச்சிகள் செம்பாவைத் தாக்காமலும்... அவ்வப்போது கவனக்குறைவாகத் திறந்து போட்ட கொல்லைப் படல் வழியாக வரும் வெள்ளாடுகளிடமிருந்தும் செம்பாவைக் காப்பாற்ற நான் அரும் பாடு பட்டேன்.

ஒத்தச்செடிய நட்டு வெச்சிட்டு பொழுதன்னைக்கும் அதையே பாத்திட்டு இருக்காதே, ஆகற பொழைப்ப பாரு என்று பாட்டி என்னை திட்டினாலும், நான் செம்பாவிடம் தான் பழியாய் கிடப்பேன். காலை எழுந்ததும் பிரஸ்ஸை எடுத்திட்டு மரத்துக்கிட்ட போனா, பல்லு போதும் போதும் சொல்லர வரைக்கும் தேய்ச்சிட்டு, இன்னைக்கு எத்தனை எலை புதிசா வந்திருக்குன்னு கணக்கெடுத்துட்டுத் தான் வருவேன். இப்படியாக செம்பா என் வாழ்வில் மாற்ற முடியாத பாகமாக மாறிப்போனாள்.

இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஆள் உயரத்திற்கு வளர்ந்து விட்டாள். "ஏன்டி இத்தனை வருசமாகியும் மரம் பூக்கலையே... அந்த வெளக்குமாரை எடுத்து நல்ல நாளு அடி வைய்யு... பூக்காத மரமும் வெக்கப்பட்டுட்டு பூத்திடும்" பாட்டி இப்படி சொன்னவுடன் வரிந்து கட்டிக் கொண்டு பாட்டியிடம் சண்டைக்குப் போனேன்.

"அவ பூக்கிறப்ப பூப்பா.. உனக்கு என்ன இப்ப பூவெக்க அவசரம்... உன் வேலையப் பாத்தமா வெத்தலையப் போட்டமான்னு இருக்கனும்.. யோசனை சொல்ற வேலையை எல்லாம் தாத்தாவோட நிறுத்திக்கோ புரியுதா?

"எனக்கென்னடி ஆத்தா வந்தது, நீயாச்சு உன் மரமாச்சு..." என்று பாட்டி முகவாய் கட்டையை தோளில் இடித்தபடி போய் விட்டாள்.

அந்த வருடம் பத்தாம் வகுப்பு பரிச்சை லீவில் தான் நான் பெரிய மனுசி ஆனேன். விடுவார்களா வீட்டில்? வாழை மரம் கட்டி, தெருவை அடைத்து பந்தல் போட்டு ஊரையே அழைத்திருந்தார்கள் சீருக்கு. மாடிக்கு மைக் செட் கட்டப் போன என் தம்பி மோகன் அலறி அடித்து ஓடிவந்தான்."அக்கா...அக்கா.. செம்பக மரம் பூத்திருச்சி...ஓடிவா..மஞ்சள் பூவு ஓடிவா..."

பெரிய பச்சை நிறப் பட்டுப் புடவை தடுக்க, வந்திருந்த விருந்தினர்களையெல்லாம் கடந்து கொல்லைக்கு ஓடினேன். என்னடா மோகன் பூவையே காணமே? என் கண்னுக்கு பூ தட்டுப்படாத ஏமாற்றம், அக்கா மாடிக்குப் போனாத் தெரியும் வாக்கா என்று அவன் சொல்ல, தட தடவென்று மாடியில் ஏறினோம் இருவருமாக..

அக்கா அங்க பாரு மஞ்சக் கலருல அடுக்குப் பூ. டேய் ஆமாண்டா.. கண் நிறையப் பூவை பார்ப்பதற்குள்ளாகவே தலையில் குட்டி, உறவுப் பட்டாளம் என்னை கீழே இழுத்து வந்து விட்டார்கள். அம்மாவின் அர்ச்சனை வேறு. அன்று நடந்த என்னுடைய பூப்பு நன்னீராட்டு விழாவில் எல்லாரும் சொன்னது இன்னைக்கும் நினைவு இருக்கிறது "புள்ளைக்கு சுத்திப் போடுங்க... முகம் என்னைக்கும் இல்லாம இன்னைக்கி பூரிப்பா இருக்கு..." அது செம்பா பூத்ததனால் வந்த பூரிப்பென எனக்குத்தான் தெரியும்.

அதன் பின் சம்பா நூற்றுக் கணக்கில் பூத்துத் தள்ளியதும் அதைப் பறிக்க எனக்கும் மோகனுக்கும் அடிதடி நடந்ததும் வேரு விசயம். செண்பகம் மற்ற பூக்களை போலன்றி மிகவும் அரிதான பூ. மணமும் ரம்மியமானது. அதும் செம்பா பூப்பது அடுக்கு செண்பகம்... செண்பகாவினால் அந்த சுற்றுவட்டாரத்திலேயே எங்கள் வீட்டுக்குத் தனிப் பெருமை.

பூ வாங்க வரும் சிறுமிகளும்.. அக்கா நாளைக்கி கல்யாணத்துக்குப் போரேன் பத்து பூ வேணும் என்று முன்பதிவு செய்பவர்களாலும் அம்மா தன்னை ஒரு விஐபியாக உணர்ந்தாள். மரமேறிப் பூப் பறித்ததும், செண்பகப் பூவை சரமாகத் தொடுத்து சூடுவதும், நான் கல்லூரி செல்லும் போதும் தொடர்ந்தது.

அப்போது தான் ஒருநாள் என்னவர் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தார். மிகுந்த சங்கோஜத்துடன் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் என்று ஒரு அசட்டு சிரிப்புடன் கூறினார், எங்களுக்கென இரண்டு நாற்காலிகள் கொல்லையில் செண்பக மரத்தின் கீழ் போடப்பட்டன. மென்று முழுங்கி இவர் என்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டு முடிப்பதற்குள், முப்பது முறை கைக்குட்டையால் முகம் துடைத்து விட்டார்.

திடீரென செண்பகப்பூ ஒன்று அவர் தலையில் பட்டென்று விழுந்தது. ஏற்கனவே படபடப்பில் இருந்த அவர் தலையில் பாறாங்கல் விழுந்தது போல எழுந்தார். நான் என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். எனக்கு ஆச்சர்யம்... செண்பகத்தின் காம்பு வலிமையானாது... பறித்தாலன்றி உதிராது.. எப்படி அவர் தலையில் விழுந்தது, செம்பா அவரை ஒ.கே சொல்லிவிட்டாளோ? எனக்கும் அவரைப் பிடித்துப் போய் விட்டது.

எங்கள் திருமணம் தட தடவென்று நடந்து முடிந்தது. அவர் சவூதியில் வேலை பார்ப்பதனால் உடனே நாங்கள் சவூதி கிளம்ப வேண்டியதாகிவிட்டது. என் குடும்பத்தையும், செண்பகாவையும் பிரிந்த இந்த ஒருவருடத்தைப் பற்றி எழுதக்கூட நான் விரும்பவில்லை.

இந்த ஒருவருடத்தில் ஊரில் எத்தனை மாற்றங்கள்... பாட்டி இறந்து போய்விட்டாள். சித்தப்பா பக்க வாதத்தால் படுத்த படுக்கை ஆகிவிட்டார். எல்லோரையும் பார்க்கும் சந்தோசத்தில், என் நிறைமாத வயிற்றைத் தூக்கிக் கொண்டு, இமிக்கிரேசன் எல்லாம் முடித்து வெளியே வந்தேன். நான் எதிர்பார்த்தபடியே அம்மா, அப்பா, அவர் வீட்டு உறவுகள் எல்லாரும் சூழ்ந்து கொண்டனர். அங்கிருந்து வீடு செல்லும் போது நடு இரவாகிவிட்டது.

போன உடன் உடல்நிலை சரியில்லாத சித்தப்பாவை பார்த்து பேசி... அம்மா கையால் தோசை சாப்பிட்டு, கட்டிலில் அம்மா மடியில் சாய்ந்தபடியே பிரயாணக் களைப்பில் உறங்கிப் போனேன். விடியக் காலையில் தான் உறக்கம் கலைந்தது. செம்பாவின் ஞாபகம் வந்தவளாய் கொல்லைப் பக்கம் போனவள்... கோடாரி கொண்டு யாரோ வயிற்றைக் கிழித்தது போல அதிர்ந்து அலறினேன். என் சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து அம்மா அடித்துப் பிடித்து ஓடி வந்தாள்.

"அம்மா செம்பா எங்கே? யாரு வெட்டினா? எதுக்கு வெட்டினா?" என் அலறலுக்குக் காரணமான செம்பா வெட்டுண்டு, அடிமரம் மட்டும் ஒரு அடி நீளத்திற்கு துருத்திக் கொண்டிருந்தது.

அம்மா ஆயிரம் சமாதானம் சொன்னாள். பாட்டி இறந்தபின் சொத்து தகறாரில், சித்தப்பா மதில் சுவர் எழுப்புவதற்கு வசதியாக, இரவோடு இரவாக மரத்தை வெட்டியதாகவும்... அடுத்த நாள் அவர் பக்க வாதத்தில் விழுந்து விட்டதாகவும்.. அது பச்சை மரத்தை வெட்டிய சாபம் தான் என்று ஊரே பேசுவதாகவும் அம்மா கூறிய எதுவுமே என் காதுகளில் விழவில்லை.

என் உயிரையே யாரோ உருவி எடுத்துவிட்டது போல உணர்ந்தேன், வெட்டப்பட்ட அடிமரத்தில் ஈரமாக ஏதோ கசிவிருந்தது. என் நிலையைப் பார் என்று செம்பா என்னிடம் அழுவதாகப்பட்டது. ஏராளமான கற்பனைகளுடன் வந்த எனக்கு ஏமாற்றங்கள் மட்டுமே மிச்சமானது. அத்துனை உறவுகளும் அருகில் இருந்தாலும், மிக நெருங்கிய ஒருவரை இழந்த உணர்வு...

மோகன் இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.அவன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்வில் குறுகிப்போனான். அவன் தந்தை தானே மரத்தை வெட்டியது. அவன் பலமுறைகள் மன்னிப்புக் கேட்டுவிட்டான். யாரை நொந்து என்ன பயன்?

இந்த நிலையில் ஒரு நல்ல முகூர்த்தத்தில், ஸ்ருதிகாவைப் பெற்றெடுத்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன். குழந்தையைக் குளிக்க வைக்க ஒரு பாட்டி வருவார்கள். எங்கள் ஊர்ப்பகுதியில், அண்டா நிறைய தண்ணீரில் குழந்தையை நீவிக் குளிக்க வைப்பார்கள். அதற்கு கொல்லைபுறம் தான் ஏது எனப்பட்டதால், அங்கேயே குளியல் திருவிழா போல நடைபெறும். நான் கொல்லைப் பக்கம் போவதையே தவிர்திருந்தாலும், பாட்டிக்கு உதவி செய்ய போகவேண்டியதாய் இருந்தது.

கொல்லையில் புத்தகம் படித்தபடி இருந்த மோகன், என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தான். வீட்டுப்பிரச்சனைக்குப் பின் எங்கள் சகஜ நிலை பாதிக்கப்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். மோகனுக்கு என்ன தோணியதோ தெரியவில்லை, அருகில் வந்து ஸ்ருதியை பார்த்தவன், "அக்கா உனக்குப் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு நான் தானே பூப்பறிக்க மரமேற வேண்டும் என்று நினத்திருந்தேன்..." என்றபடி வெட்டுப்பட்ட மரத்தினருகே போனவன் "அக்கா, அக்கா இங்கே வாயேன் என்று கத்தினான்.இங்க பாருக்கா செம்பா இலை விட்டிருக்கா... மீண்டும் துளித்துருக்கா..." என்றான் சந்தோசத்துடன்"

ஆமாம்.நான் பார்த்த போது, வெட்டுண்ட இடத்தில் வெளிர்பச்சை நிறத்தில் புதியதாக நான்கு இலைகள் வந்திருந்தன. செம்பா மீண்டும் உயிர்த்திருந்தாள் என் ஸ்ருதிக் குட்டிக்காக.

(சுபம்)

பூமகள்
15-10-2007, 07:34 PM
அக்கா...ஆரம்பமே..... விண்ணைத் தொடும் உயரத்தில்... அசத்திட்டீங்க..
முழுகதையும் படிக்க இமைகள் இடர்செய்வதால்... நாளை படித்து விலாவாரியாக பின்னூட்டம் இடுகிறேன். இது முதல் பின்னூட்டம் தர வேண்டி அன்பு அக்காவிற்காய்...!!
மன்னித்தருள்க அக்கா..!!
அப்படியே... என் கதையையும் ("பருவநட்சத்திரங்கள்") பாருங்க... யவனி அக்கா..!!

அன்புரசிகன்
15-10-2007, 07:46 PM
கதையை அருமையாகவும் தத்ரூபமாகவும் உண்மைச்சம்பவம் போலவும் (உண்மைச்சம்பவமா??) தந்திருக்கிறீர்கள். உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது... (எனக்கு செண்பகப்பூ தெரியாது. சிலவேளை பார்த்திருப்பேன். இதுதான் அது என்று தெரிந்திருக்காது)

பாராட்டுக்கள்.

நேசம்
15-10-2007, 07:55 PM
அவளின் அன்புக்காக துளிர் விட்டதோ அல்லது அவள்து குழந்தைக்காக .
ஆரம்பம் முதல் முடிவு வரை கதை நகர்த்தி சென்ற விதம் பல படைப்புகளை தந்தவர் பொல் இருந்தது. வாழ்த்துக்கள் யவனிக்கா

மலர்
15-10-2007, 07:56 PM
யவனிகா அக்கா....
முதலில் பிடியுங்கள்
என்னுடைய பாராட்டுக்களை...
கதையோடு ஒன்றியே போய்விட்டோம்......தெரியுமா..

ஒவ்வொரு வரியுமே அழகாக சித்தரிச்சிருக்கீங்க....
செம்பாவை வெட்டியபோது உண்மையிலே கொஞ்சம் வலித்தது..
ஆனால் மறுபடியும் ஸ்ருதிக் குட்டிக்காக செம்பா துளிர்த்த போது.. நிரம்ப சந்தோஷம்......

மலர்
15-10-2007, 07:59 PM
.. நாளை படித்து விலாவாரியாக பின்னூட்டம் இடுகிறேன். இது முதல் பின்னூட்டம் தர வேண்டி அன்பு அக்காவிற்காய்...!!


யக்கோவ் இங்கேயும் அடிச்சி புடிச்சி
துண்டு போட்டு முத சீட்டு பிடிச்சிட்டியா.....
ஹீ....ஹீ....வாழ்த்துக்கள்

பூந்தோட்டம்
15-10-2007, 08:30 PM
நல்ல கதை.

அடுத்த தொடர் எப்போது? கதை எழுதுவது பற்றி எங்களுக்கும் சொல்லித்தரலாமே..மன்றத்தில் ஏதும் திரி இருந்தால் தாருங்கள் நண்பர்களே

யவனிகா
16-10-2007, 06:41 AM
அன்புத் தங்கைகளின் வாழ்த்து கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.பெண்களின் மனம் இயல்பிலேயே வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலார் குணம் பெற்றது...அதுவும் நாம் வைத்து வளர்தத மரத்தை யாரேனும் வெட்டினால், தாங்குமா...கதைப்படிதான் அந்த மரம் என் ஆசைக்காகத் மீண்டும் துளிர்தது.ஆனால் நிஜத்தில்...இருந்த சுவடே தெரியாமல் அந்த இடத்தையே சிமெண்ட் போட்டு மூடிவிட்டார்கள்...

சுகந்தப்ரீதன்
16-10-2007, 07:43 AM
சொந்த கதையை சுவையாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா..! ஒவ்வொரு வரியிலும் தாங்கள் வாழ்வை ரசித்து வாழ்வதை அழகாக வெளிபடுத்தி உள்ளீர்கள்..! அதற்க்கு பக்கபலமாய் தங்களின் உரைநடை அமைந்துள்ளது..! மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்..!

lolluvathiyar
16-10-2007, 07:56 AM
ஆரம்பத்தில் ஒரு நகைசுவை கதைபோல அனுபவ கதை போல சென்றது. அந்த சென்பா மீது ஒரு சகோதரி பாச பினைப்பை விளக்கி நெகிழ வைத்து விட்டீர்கள். என்ன செய்ய தவிர்க முடியாத சில காரனங்களால் நாம் வளர்த்த மரத்தை நாம் சில சமயங்களில் வெட்ட வேண்டி வருகிறது.
ஆனால் அந்த செம்பா மீண்டும் வளர ஆரம்பித்து விட்டது அடுத்த யவனிக்காவுக்காக.
பாராட்டி 5 * மற்றும் 500 இபணம்

யவனிகா
16-10-2007, 08:48 AM
யக்கோவ் இங்கேயும் அடிச்சி புடிச்சி
துண்டு போட்டு முத சீட்டு பிடிச்சிட்டியா.....
ஹீ....ஹீ....வாழ்த்துக்கள்

என்னா தங்கச்சி இப்படி சொல்லிட்ட...நீ சீட்டுப் போட்டுத் தருவேன்னு எத்தனை நேரம் காத்திருந்தேன் தெரியுமா? அப்புறம் தான் நானே சீட்டுப் புடிச்சேன். ஒருபக்கம் உனக்கும் மறுபக்கம் பூவுக்கும் துண்டு போட்டு இடம் பிடிச்சிருக்கேன், ஊரச் சுத்தாம வந்து சேருங்க..

ளொள்ளு வாத்தியாரண்ணாவிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

அன்புரசிகன்
16-10-2007, 08:53 AM
அன்புத் தங்கைகளின் வாழ்த்து கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.பெண்களின் மனம் இயல்பிலேயே வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலார் குணம் பெற்றது...அதுவும் நாம் வைத்து வளர்தத மரத்தை யாரேனும் வெட்டினால், தாங்குமா...கதைப்படிதான் அந்த மரம் என் ஆசைக்காகத் மீண்டும் துளிர்தது.ஆனால் நிஜத்தில்...இருந்த சுவடே தெரியாமல் அந்த இடத்தையே சிமெண்ட் போட்டு மூடிவிட்டார்கள்...

பாத்தீங்களா... நம்மள கண்டுக்கவே இல்ல... :traurig001::traurig001::traurig001:

மலர்
16-10-2007, 08:56 AM
பாத்தீங்களா... நம்மள கண்டுக்கவே இல்ல... :traurig001::traurig001::traurig001:

யக்கோவ் பாவம் அண்ணன் அழுறாரு....
பேசாம ஒரு குச்சி முட்டாய் வாங்கி குடுத்துரு

அன்புரசிகன்
16-10-2007, 09:00 AM
யக்கோவ் பாவம் அண்ணன் அழுறாரு....
பேசாம ஒரு குச்சி முட்டாய் வாங்கி குடுத்துரு

இதிலும் பார்க்க யவனிகா அக்கா பரவாயில்லை...

சாம்பவி
16-10-2007, 09:52 AM
நட்டு வைத்த தாவரம்
தோழியானது..... !
விட்டுப் போன போது
மூளியானது... !
ஜனித்தக் குருத்துப் பார்த்து
புத்துயிர் பெற்றது... !

செம்பா...,,
நட்டு வைத்ததால் அவள்
உன் தாய்....!
அவள் பூத்த போது
நீயும் பூத்தாய்.... !
பொட்டு வைக்கும் ஆணை
அடையாளம் கண்டு பூப் பொய்தாய்... !
அவள் குலம் தழைக்க....
நீயும் துளிர்த்தாய்...
ஸ்நேகிதியல்ல... நீயும்
அவள் தாய்... !
.

பூமகள்
16-10-2007, 10:49 AM
செண்பக மரத்தின் காற்றில் நாங்களும் உங்களோடு இளைப்பாறிய உணர்வு...!!
மீண்டும் மரம் துளிர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி..!!
கதை நகர்ந்த விதம்..... வார்த்தையாடல் வெகு எதார்த்தம்... கதாபாத்திரங்களை தாங்கள் இயல்பாக உள் கொண்டு வருவது மிக அழகு.
வாழ்த்துகள் யவனி அக்கா..!!
செண்பா மீண்டும் விரைவில் பூப்பாள் என்று நம்புவோம்..!!

யவனிகா
16-10-2007, 11:11 AM
பாத்தீங்களா... நம்மள கண்டுக்கவே இல்ல... :traurig001::traurig001::traurig001:

இப்ப கண்டுகிட்டேன் குச்சி முட்டாய் எதுக்கு? கப் ஐஸே வாங்கித்தற்றேன்,லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்றேன்,நன்றிகள் அன்பு ரசிகன்,சுகந்தன், நேசம்.தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கும்..யவனிகா.


நட்டு வைத்த தாவரம்
தோழியானது..... !
விட்டுப் போன போது
மூளியானது... !
ஜனித்தக் குருத்துப் பார்த்து
புத்துயிர் பெற்றது... !
.

அன்புத் தோழி சாம்பவி, கவிதையான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி...உள்ளத்தைத் தொடுகின்றன உங்கள் வரிகள்.

அக்னி
16-10-2007, 12:39 PM
மனதில் உணர்வலைகளை தோற்றுவிக்கும் கதை... கதாசிரியரின் எழுத்துநடை...
வாசிக்கும்போது, பறந்து, பயணித்து, பரிசிற்காய் பெருமைப்பட்டு, நட்டு வைத்து, போரிட்டுக் காத்து, பூக்கும்போது பூரித்து, செம்பா வெட்டப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியுற்று, கவலைப்பட்டு, மீண்டும் துளிர்க்கும்போது மகிழ்ந்து...
கதையின் அத்தனை உணர்வலைகளும் நிஜவலைகளாக மனதை சலனப்படுத்துகின்றன...
மனதிற்குள் காட்சிப்படுத்தப்படுகின்றன...
முத்தாய்ப்பாக ஒரு தாவரம், முன்னிலைப்படுத்தப்பட்டது, அழகிய வித்தியாசமான சிந்தனைச் சிறப்பு...


என் பதின்ம வயதுகளை நினைவுக்குக் கொண்டுவருகிறேன்...
Teen-age என்பதற்கு முதன்முறையாக தமிழர்த்தம் தெரிந்து கொண்டேன்...

பாராட்டுக்கள் பலவுடன்...
மென்மேலும் மிளிர வாழ்த்துக்களும் பல...

யவனிகா
16-10-2007, 01:04 PM
மிகவும் நன்றி அக்கினியாரே...உங்கள் மோதிரக் கையால் குட்டுப் பட்டாலும் அது எனக்கு பாக்கியமே...ஆனால் நீங்களோ பாராட்டி வாழ்த்தியுள்ளீர்கள். மன்றத்திலே நாம் படைக்கும் படைப்புகளைக் காட்டிலும் பின்னூட்டங்கள் பலமடங்கு மிளிர்வுடன் பரிணமிக்கும்.அதற்கு எடுத்துக்காட்டு உங்களின் இந்தப் பின்னூட்டம்.

ஜெயாஸ்தா
16-10-2007, 02:01 PM
இனி செண்பக மரம் பார்த்தால் இந்தக் கதைதான் ஞாபகம் வரும். கலங்கவெச்சுட்டீங்க யவனிகா....!

யவனிகா
16-10-2007, 06:46 PM
நன்றிகள் ஜெயாஸ்தா...அப்புறம் இந்த பேருக்கு என்ன அர்த்தம்...நீங்க தானே எனக்கு கௌரவப் பட்டமெல்லாம் குடுத்து சிறப்பிச்சது? ஏதோ மூணு நாளு பேரை பிரிச்சிப் போட்டு சேர்த்திருக்கீங்கன்னு தெரியுது ஆனா என்னன்னு குழப்பமா இருக்கு.நீங்களே சொல்லுங்க பெயர் விளக்கம்.

அக்னி
16-10-2007, 06:55 PM
அதற்கு எடுத்துக்காட்டு உங்களின் இந்தப் பின்னூட்டம்.
மகிழ்வுதரும் கௌரவிப்பு...
ஆனால், உண்மையில்
உங்கள் எழுத்துக்களிலெல்லாம் கற்றுக்கொள்ளும் கத்துக்குட்டி நான்...

சிவா.ஜி
17-10-2007, 05:26 AM
இதைக் கதையாகவே நினைக்க முடியவில்லை. கோகிலாவின் விழிகளுக்குள் உட்கார்ந்துகொண்டு முன்னே நிகழும் நிகழ்வுகளை ரத்தமும் சதையுமாக உணரவைத்த, அற்புதமான எழுத்தாற்றலின் அழகான வெளிப்பாடு.
தோழியாக ஒரு மரம்...பிரிவுக்குப் பின் உறவாக உருவெடுத்த மரம்...வெட்டுபட்டு நிற்கும் நிலயைப் பார்த்து வேதனையில் துடிக்கும் மெல்லிய மனதை பாசத்தோடு உணர்கிறேன்.நிஜத்தில் வெட்டப்பட்டு விதி முடிந்த சென்பாவை கற்பனையில் மீண்டும் துளிர்க்கவைத்த உங்கள் தாயுள்ளம்...நெகிழவைக்கிறது.வாழ்த்துகள் யவனிகா.

யவனிகா
17-10-2007, 08:50 AM
நிஜத்தில் வெட்டப்பட்டு விதி முடிந்த சென்பாவை கற்பனையில் மீண்டும் துளிர்க்கவைத்த உங்கள் தாயுள்ளம்...நெகிழவைக்கிறது.வாழ்த்துகள் யவனிகா.

நிஜம் தான் அண்ணா...செண்பகா இருந்த இடத்தில் சிமெண்ட் போட்டு மூடினாலும்...என் மனதிலே என்றும் அவளி நட்டு வைத்து நீறுற்றிக்கொண்டு தான் இருக்கிறேன்.உங்கக் பாராட்டிற்கு நன்றிகள்.

அமரன்
24-10-2007, 03:25 PM
செண்பக மலர்களை
கண்களால் தழுவும் போது
துய்க்கும் இன்பம் போல
மெய் மறக்க வைக்கிறது கதை..!

கந்தக பூமியின் வாசத்தில்
சுகந்தத்தைக் கலக்கும் நறுமணம்
மூக்குக் குடைய - சுவாசம்
ஏறி இறங்குவது போல
பரவசம் பிரசவிக்கும் எழுத்து நடை...!

கதாநாயகி பூப்பெய்தியபோது
கதை நாயகி பூப்பெய்து
வாழ்த்தி மகிழ்ந்தது முத்தாய்பு..!

துளிருக்காக தளிர் விட்ட முடிவு
களிதரும் கதைக்கு திகட்டா வடிவு....!

ஆரம்ப கால செல்லக்கோபத்தில்
செம்பாவைத் சீண்டிய மோகன்
ரம்பை போல ஆன செம்பாவை
அப்பா அழித்துவிட சோகமாவது
வளர்ச்சியின் முதிர்ச்சி....

ஒட்டு மொத்தத்தில்
கதை சொன்னவிதத்தில்
தெரிகிறது நல்ல தேர்ச்சி....!

இதயம்
30-10-2007, 07:18 AM
நான் கோகிலா. உங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்லும் இந்நேரம்...

ஒரு படைப்பு படித்தவனின் மனதில் தன்னை மீறிய சந்தோஷம், துன்பம், பாதிப்பு ஆகிய ஏதோ ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ ஏற்படுத்தினால் அது அப்போது வெற்றி அடைகிறது. அந்த வகையில் யவனிகாவின் "செண்பக மரம்" என்ற அற்புத படைப்பு பெரும் வெற்றி பெறுகிறது. சில வேளைகளில் நல்ல கதை கருக்கள் இருந்தும், எழுத்து நடை ஒத்துழைக்காத பொழுது படைப்பு தோல்வியடைந்துவிடும். அதே போல் நல்ல எழுத்து நடை கதைக்கருவின் பலவீனத்தால் பலனற்றுப்போய்விடும். ஒரு சிறந்த கதைக்கு தேவையான நல்ல கரு, அருமையான எழுத்து நடை ஆகிய இரண்டும் இந்த கதையில் ஒருங்கே நின்று செண்பக மரம் சாய்ந்து விடாமல் தாங்கி நிற்கின்றன.

படைப்புகளில் புகுத்தப்படும் எழுத்து நடை புதுமைகள் அந்த படைப்பை இன்னும் உயர்த்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அந்த வகையில் நிகழ்காலத்தில் ஆரம்பித்து, பின் கடந்த காலத்தை நினைவு கூர்ந்து, பின் மீண்டும் நிகழ்காலத்தில் சுபமான திருப்பத்துடன் முடித்த அந்த பாணி மிகவும் வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது..! கதையில் படைப்பாளி கதாபாத்திரங்களை உலவ விட்ட விதம், உரையாடல்களை நூல் பிடித்தது போல் முரணின்றி நகர்த்திய நேர்த்தி இந்த கதைக்கு பெரும் பக்க பலம்.

இதையின் கதாநாயகியான செண்பக மரத்தைப்பற்றி பேசியே ஆக வேண்டும். மனிதர்களே உணர்ச்சியற்ற மரமாகி, உலகத்தை சீரழித்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு மரத்தை மனித உயிருக்கு நிகரான இடத்தில் வைத்து ஆராதித்த கோகிலாவிடம் யவனிகாவின் இயல்பான குணத்தை பார்க்கிறேன். இந்த கதையை படிக்கும் போது "மழை பெய்யும் ஒரு மாலை நேரத்தில் பெய்யும் மழையை ஜன்னல் வெளியில் வேடிக்கை பார்க்கும்" சுகானுபவம் ஏற்பட்டது, அது வெட்டப்பட்டதை படிக்கும் வரை..! செண்பக மரத்தைப்பற்றி கோகிலா சிலாகித்ததை ஒன்றி ரசித்த நான், அந்த மரம் வெட்டுண்டதை அறிந்த போது என் இதயத்தை வேதனை கோடாரி பதப்பார்த்ததை மறுக்க முடியவில்லை. அந்த மரத்தின் இழப்பு கோகிலாவை போலவே எனக்கும் மனதில் ஒரு நீங்கா ரண வடுவை ஏற்படுத்தி விட்டது.

ஒரு முடிவுக்குப்பின் இன்னொரு தொடக்கம் இருக்கிறது என்பது இயற்கையின் நியதி. அந்த நியதி கோகிலாவின் செண்பக மரத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குடும்ப பிரச்சினையின் விளைவால் வெட்டிவீழ்த்தப்பட்ட செண்பக மரம், கோகிலா இன்னொரு ஒரு உயிரை பெற்றெடுத்த வேளை துளிர் விட்ட போது செண்பக மரத்தின் முந்தைய முடிவு நிரந்த முடிவல்ல, அது இன்னொரு அற்புதமான தொடக்கத்திற்கான ஆரம்பம் தான் என்பதை உணர முடிந்தது. ஒரு கலவரத்தால் அழிக்கப்பட்ட குடும்பத்தின் கடைசி உயிரான கர்ப்பிணிப்பெண் ஒருத்தி, தான் இறக்கும் முன் ஈன்று விட்டு செல்லும் ஒரு முதல் உயிராக அந்த மரத்தின் துளிரை உணர்கிறேன்.

இந்த கதையை பொருத்தவரை ஒரே ஒரு குறையை மட்டும் யவனிகாவிடம் சொல்ல வேண்டும். ஒரு மனித உயிருக்கும் மேலாக அன்பு செலுத்தி, உறவு கொண்டாடிய செண்பக மரத்தை பற்றிய இந்த கதையின் தலைப்பை "செண்பகம்" என்று குறிப்பிடாமல் "செண்பக மரம்" என்று குறிப்பிட்டு அதன் மேலான அன்பை வாசகர்கள் குறைத்து மதிப்பிட வழி ஏற்படுத்திவிட்டீர்களோ என்பது எண்ணம். மற்றபடி மனம் நெகிழ வைக்கும் முடிவுடன் கூடிய அற்புத படைப்பு இந்த செண்பக(ம்) மரம்..!

பாராட்டுக்கள் யவனிகா..!!

Hayah Roohi
30-10-2007, 09:50 AM
அருமையான கதை ..........
நெஞ்சை உருக்கியது யவனி அக்கா....

யவனிகா
30-10-2007, 12:14 PM
"செண்பகம்" என்று குறிப்பிடாமல் "செண்பக மரம்" என்று குறிப்பிட்டு அதன் மேலான அன்பை வாசகர்கள் குறைத்து மதிப்பிட வழி ஏற்படுத்திவிட்டீர்களோ என்பது எண்ணம். மற்றபடி மனம் நெகிழ வைக்கும் முடிவுடன் கூடிய அற்புத படைப்பு இந்த செண்பக(ம்) மரம்..!பாராட்டுக்கள் யவனிகா..!!

எப்போதும் போலவே இம்முறையும் அசத்தலான,அறிவுப்பூர்வமான உங்கள் பின்னூட்டம் கண்டு நெகிழ்ந்தேன்,உங்களது பின்னூட்டங்களுக்காவே படைப்புகள் பல படைக்கலாம் போல...குறையையும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இப்போது தான் அது எனக்கு உரைக்கிறது.கதையை ரசித்துப் படித்துள்ளீர்கள் எனத்தெரிகிறது...ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயாய் உணர்கிறேன்.இதயப்பூர்வமான தங்களது பின்னூட்டத்திற்கு நன்றிகள் இதய*ம்.

QUOTE=Hayah Roohi;291513]அருமையான கதை ..........
நெஞ்சை உருக்கியது யவனி அக்கா....[/QUOTE]

நன்றி ஹயா.

மதி
09-11-2007, 03:12 AM
அற்புதமான படைப்பு..மெல்லிய நீரோட்டம் போல சொற்றாடல்..
கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. மரம் வெட்டுப்பட்டது தெரிந்தவுடன் நம் மனமும் சுருங்கி பின் இறுதியில் முகத்தில் சின்னதாய் ஒரு புன்சிரிப்பு.. இது போதுமே கதையின் வெற்றிக்கு..

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் யவனிகா..

யவனிகா
09-11-2007, 10:08 AM
அற்புதமான படைப்பு..மெல்லிய நீரோட்டம் போல சொற்றாடல்..
கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. மரம் வெட்டுப்பட்டது தெரிந்தவுடன் நம் மனமும் சுருங்கி பின் இறுதியில் முகத்தில் சின்னதாய் ஒரு புன்சிரிப்பு.. இது போதுமே கதையின் வெற்றிக்கு..

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் யவனிகா..

நன்றி மதி அவர்களே!

ஆதவா
09-11-2007, 10:32 AM
இப்பத்தான் வாழை னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சேன்.... அடப்பாவமே! ஏங்க.... என்னை முன்னேற விட மாட்டீங்களா?:)

கிட்டத்தட்ட உங்கள் கதையே! எனது வாழைக் கதையும். அதில் சிறு பிள்ளை, ஒரு செவிட்டு பக்கத்துவீட்டுக் காரன், ஒரு கண்டிப்பான அம்மா... அப்பறம் வாழை... வாழையை வெட்டி விட்டமமயால் அழும் அந்த குழந்தையை மையமாக வைத்து கதை ரெடி பண்ணி வைத்தால்...... இங்கே முந்திக் கொண்டீர்கள் செண்பகமாய்..

கதையோடு அந்த சூழ்நிலையை கற்பனை செய்ய வைத்தாக்ல் அது தரம் என்று நினைப்பவன் நான்.. அதில் வெற்றி இந்த கதைக்கு.

கோகிலாவின் அம்மாவும் அப்பாவும் பேசும் வசனங்கள் இயல்பு நடை. மனதோடு நினைத்து சொல்லும் கதையோட்டம், கவிதை...

மேலும் தொடர்க..

யவனிகா
09-11-2007, 11:00 AM
இப்பத்தான் வாழை னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சேன்.... அடப்பாவமே! ஏங்க.... என்னை முன்னேற விட மாட்டீங்களா?:)


மேலும் தொடர்க..

நன்றிங்க ஆதவன்..வாழையை பதித்து,வெட்டப்பட்ட அதை வாழ வையுங்கள்...செண்பகத்துக்கு ஜோடியாய் இருந்துட்டுப் போகட்டும்.ஒரே கதைக் கருவை மாறுபட்ட உங்கள் எழுத்திலும் பார்க்க ஆவலாய் உள்ளேன்.

இளசு
10-11-2007, 11:08 AM
ஒவ்வொரு சொல்லும் ஒரு செண்பகப்பூ..
வரிகள், வசனங்கள் அடுக்குப்பூ..
மொத்தக்கதையே மணக்கும் மயக்கும் மலர்மாலை..

கடைசியில் துளிர்த்தது செம்பா மட்டுமா..
எம் விழிகளும்..

பாராட்டச் சொற்களில்லை யவனிகா..
துளிகள் கோர்த்து மாலையாக..
எழுதிய கரங்களில்..

வாழ்க!

மலர்
10-11-2007, 11:17 AM
முழுகதையும் படிக்க இமைகள் இடர்செய்வதால்... நாளை படித்து விலாவாரியாக பின்னூட்டம் இடுகிறேன். இது முதல் பின்னூட்டம் தர வேண்டி அன்பு அக்காவிற்காய்...!!
மன்னித்தருள்க அக்கா..!!


ஹீ,,,ஹீ,,,, பூமகள் அக்காவுக்கு
இன்னும் அந்த நாளைக்கு வரலியோ,, :D:D
:icon_rollout::icon_rollout:

பூமகள்
10-11-2007, 11:41 AM
ஹீ,,,ஹீ,,,, பூமகள் அக்காவுக்கு
இன்னும் அந்த நாளைக்கு வரலியோ,, :D:D
:icon_rollout::icon_rollout:
மலரு...:cool: இதைப் பார்க்கலையோ..............?? :D:D
அந்த நாள் வந்து ரொம்ப நாள் ஆச்சுமா... தங்கை மலரு....!!:icon_p:

செண்பக மரத்தின் காற்றில் நாங்களும் உங்களோடு இளைப்பாறிய உணர்வு...!!
மீண்டும் மரம் துளிர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி..!!
கதை நகர்ந்த விதம்..... வார்த்தையாடல் வெகு எதார்த்தம்... கதாபாத்திரங்களை தாங்கள் இயல்பாக உள் கொண்டு வருவது மிக அழகு.
வாழ்த்துகள் யவனி அக்கா..!!
செண்பா மீண்டும் விரைவில் பூப்பாள் என்று நம்புவோம்..!!

மலர்
10-11-2007, 12:20 PM
மலரு...:cool: இதைப் பார்க்கலையோ..............?? :D:D
அந்த நாள் வந்து ரொம்ப நாள் ஆச்சுமா... தங்கை மலரு....!!:icon_p:


ஹீ...அக்கா நீங்க அந்த முதல் பின்னூடத்தில்
எடிட் பண்ணாததுக்கு தான் குடுத்தேன்

மாதவர்
04-12-2007, 04:53 PM
நெஞ்சை தொட்டுவிட்டது.

மனோஜ்
10-12-2007, 06:31 PM
யவயி(ய)க்கா உண்மைகதையை அழகாய் சொல்லும் பங்கு மிக மிக அருமை கதைஅருமை சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

கதையில்
பயணிக்கும் இந்த நேரத்தில் என் செண்பக மரத்தைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்.
என்று கூறி மீன்டும்
நான் கல்லூரி செல்லும் போதும் தொடர்ந்தது.
என்று இரண்டும் ஒட்டாது போனமாதிரி ஒரு பிளிங்
வித்தியாசமா விமர்சிக்க எடுத்த முயற்சி தப்பா நினைக்காதிங்க(ய)வனிக்கா

செல்வா
03-01-2008, 09:16 PM
அக்கா ரொம்ப எளிமையான நடையில..... அமைதியா ஓடுனாலும் உள்ளே ஆழமாருக்குற நதி மாதிரி..... அமைதியான நடையில ஆழமான உணர்வுகள்.

செண்பக மரம் வெட்டப்பட்டத படிக்கும் போது...... நான் சிறுவயதில ஓடியாடி வாழ்ந்த வேப்பமரத்த வெட்டும் போது வெட்டவிடாம கட்டிப்புடிச்சுட்டு அழுதது தான் ஞாபகம் வருது......

மயூ
04-01-2008, 04:48 AM
ஒரு செண்பக மரத்தை வைத்துப் பின்னிய கதை அருமை.. அசந்தே போய்விட்டேனுங்க!!!

பாராட்டுக்கள் நண்பரே!!!

தொடர்ந்தும் பல கதைகள் எழுதுங்க வாசிக்கக் காத்திருக்கின்றேன்!

பாரதி
04-01-2008, 05:37 PM
மரம் என்றாலும் மனம் என்றாலும் ஆழப்பதிந்து விடுகின்றன. அடுக்கு செண்பகத்தின் வாசனை மன்றத்தில் எந்நாளும் வீசிக்கொண்டிருக்கட்டும். அருமையான கதையை தந்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் யவனிகா.

யவனிகா
19-01-2008, 06:09 PM
கதை பலசாகிப் போனாலும்...பின்னூட்டங்கள் அதை புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. நன்றி சகோதரர்களே.