PDA

View Full Version : காதல் குளிர் - 4gragavan
15-10-2007, 06:52 PM
காதல் குளிர் - 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12435)

"ஆப்கா நாம் கியா ஹேய்" ஹிந்தியில்..இல்லை இல்லை. இந்தியில் கேட்டாள் ரம்யா. சமீபத்தில் ரம்யா பேசிய மிகப் பெரிய இந்திப் பேச்சு இதுவாகத்தான் இருக்கும்.

"மேரா நாம் கே.ஆர்.எஸ். மத்லப் கௌஷல் ரகுபீர் ஷர்மா." சொன்னது கார் டிரைவர். தாஜ்மகால் போவதற்காக ஏற்பாடு செய்திருந்த கார் விடியலிலேயே சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டது. தன்னுடைய பையைப் ப்ரகாஷாவை எடுத்து வரச் சொல்லிவிட்டுக் கீழே காருக்கு வந்தாள் ரம்யா.

அடுத்த வரியை இந்தியில் சொல்ல ரம்யா தடுமாறுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் கே.ஆர்.எஸ். "ஹம்கோ மதராஸி பாஷா, கன்னட், டெலுகு, கேரள்...சப்குச் ஆத்தா ஹே."

மனசுக்குள், "சரி சரி ஆத்தா ஒன்னோட மொகரையப் பேத்தா" என்று திட்டிக்கொண்டே முகத்தில் பொய்ப்புன்னகையோடு நின்றாள். அதற்குள் எல்லாரும் கீழே இறங்கி வந்துவிட்டார்கள். சித்ராவிடமிருந்து ஃபெராவை வாங்கிக் கொண்டாள் ரம்யா. சப்யா வசதியாக டிரைவருக்குப் பக்கத்தில் முன்னாடி உட்கார்ந்து கொண்டான்.


பின்னாடி சீட்டில் ப்ரகாஷா வலது ஜன்னலோரமும் சித்ரா இடது ஜன்னலோரமும் உட்கார்ந்து கொள்ள...ரம்யா நடுவில் உட்கார்ந்து கொண்டாள். "புருஷனையும் பொண்டாட்டியையும் பிரிச்சிட்டீங்களே" என்று பொய்யழுகை அழுத சப்யாவின் தலையில் சித்ரா "நறுக்"கினாள். கலகலப்பாகத் அவர்களது ஆக்ரா பயணம் தொடங்கியது.

டிரைவருக்குப் பேரெல்லாம் சொல்ல வேண்டுமா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது? பெரிய பாத்திரமில்லையென்றாலும் கதையில் கே.ஆர்.எஸ் ஒரு வருத்தத்திற்குரிய செயலைச் செய்யப் போகிறான். ம்ம்ம்ம்....சரி. அதை அவன் செய்யும் பொழுது எப்படிச் செய்கிறார் என்பதை அணுவணுவாகப் பார்ப்போம். இப்பொழுதே பேசி மனதை வருத்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். பயணம் வேறு மகிழ்ச்சியாகத் தொடங்கியிருக்கிறது. அப்படியே நாமும் உடன் செல்வோம். கதையில் நமது வசதிக்காக கே.ஆர்.எஸ்சும் இனிமேல் தமிழ்தான் பேசப் போகிறான்.

"சார். ஒரு உதவி"

சப்யா ஆச்சரியக்குறியோடு பார்த்தான். பயணம் தொடங்கியதும் பணம் கேட்கப் போகிறானோ என்று. ஏற்கனவே முழுப் பணமும் அலுவலகத்தில் கட்டியாகி விட்டது. டிரைவர் கையில் பேட்டா மட்டும் குடுத்தால் போதும் என்று சொல்லித்தான் அனுப்பியிருக்கிறார்கள்.

"ஒன்னுமில்லை சார். இந்தக் கார் டூரிஸ்ட் ரிஜெஸ்டிரேஷன் கார் இல்ல. இதுல டூர் கூட்டீட்டுப் போகக் கூடாது. ஒருவேளை போலீஸ் யாரும் கேட்டாங்கன்னா...காருக்குச் சொந்தக்காரர் ஒங்க நண்பர்னு சொல்லனும். அவரோட பேரு நித்தின் நயால்."

"இது வேறையா?"

"என்ன செய்றது சார். இப்பிடித்தான் போனவாட்டி ஆக்ரா போனப்போ வெள்ளக்காரங்கள ஏத்தி அனுப்புனாங்க. அவங்ககிட்ட நூறுதடவை சொன்னேன். அவங்களுக்குப் புரியவேயில்லை. என்னோட கெட்ட நேரம் போலீஸ் பிடிச்சிட்டாங்க. அங்கிரேசிக்காரன் டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லீட்டான். ரெண்டாயிரம் ரூவா தண்டம். ஆகையால டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லாதீங்க சார்."

"சரி...அவரோட பேர் என்ன நித்தின் நயால்தானே."

"ஆமா சார். அதுவுமில்லாம ஆக்ரா ஊருக்குள்ள நான் சின்னச் சின்ன ரோடு வழியாப் போறேன். எனக்கு எல்லா ரோடும் தெரியும். பெரிய ரோடுகள்ள போலீஸ் இருப்பாங்க சார். போலீஸ் கிட்ட மாட்டாம போய்ட்டு வந்தாப் போதும் சார்."

ரம்யாவுக்கு அந்தப் பக்கத்து ஊர்கள் ரொம்பவும் புதுமையாக இருந்தன. நொய்டாவை விட்டு வெளியே வந்தால் பட்டிக்காடுகள்தான். புழுதிக்காடு என்று சொல்லலாம். கரிசல் மண். ஆனாலும் ஏதோ வித்தியாசம் அவளுக்குத் தெரிந்தது. மரங்கள் நெடுநெடு மரங்களாக இருந்தன. ஒரு சாப்பாட்டுக்கடையில் நிறுத்தி ரொட்டி, சப்ஜி, சாய் சாப்பிட்டார்கள். ஃபெர்ரா விழித்துக் கொண்டதால் ரம்யாவும் ப்ரகாஷாவும் சிறிது நேரம் அவனோடு விளையாடினார்கள்.

அந்தப் பயணத்தில் ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சியில் இருந்தது. சப்யா சற்றுக் களைப்பாக இருந்தான். இரண்டு நாட்களாகக் கடுமையான வேலை. தூக்கமும் குறைவு. ஆனாலும் அனைவரும் இருக்கும் மகிழ்ச்சியில் களைப்பே தெரியவில்லை. சித்ராவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இந்தப் பயணம் முடிந்து திரும்பி வருவதற்குள் ரம்யாவைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ப்ரகாஷா ஒரு முடிவோடுதான் இருந்தான். எப்படியாவது தன்னுடைய மனதில் இருப்பதை ரம்யாவிடம் சொல்லிவிட வேண்டும். அதற்குப் பின் என்ன நடந்தாலும் சரிதான் என்ற முடிவுக்கு வந்திருந்தான். சரியான சமயத்திற்கு எதிர்பார்த்திருந்தான். பயணத்தில் ரம்யாவுக்கும் மகிழ்ச்சிதான். நேற்றிரவு சித்ரா சொன்னது இன்னமும் மனதில் இனித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒப்புக்கொள்ளத்தான் அவளால் முடியவில்லை. சரி. யாராவது மறுபடியும் பேச்செடுப்பார்கள் என்று காத்திருந்தாள். ப்ரகாஷாவின் தோளில் சாய்ந்து கொண்டு சுகமான இருந்தாள்.

ஆக்ராவிற்குள் நுழைந்ததுமே கே.ஆர்.எஸ் சந்துகளிலும் பொந்துகளிலும் வண்டியை ஓட்டினான். "மொதல்ல எங்க போறது சார்?"

"இத்மத் உத் தௌலா போங்க. அதான் மொதல்ல பாக்கனும்." சப்யா எங்கெங்கு போக வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தான்.

இத்மத் உத் தௌலாவின் வாசலில் கார் நின்ற பொழுது ஆட்டுப்புழுக்கைகளும் தள்ளுவண்டிகளும் ஓரத்தில் ஓடும் சாக்கடையும்தான் வரவேற்றன. ஆனால் உள்ளே நுழைந்ததும் அழகான பெரிய சலவைக்கல் நகைப்பெட்டி தெரிந்தது. கொஞ்ச நேரம் அதனுடைய அழகில் மயங்கியிருந்தவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்கள்.


ரம்யாவிற்கும் ப்ரகாஷாவிற்கும் வாய்ப்புக் குடுத்து சப்யாவும் சித்ராவும் ஒதுங்கியிருந்தார்கள். ரம்யாவும் ப்ரகாஷாவின் துணையை ரசித்துக் கொண்டிருந்தாள்.

"டேய்....என்ன அழகாக் கட்டீருக்காங்க பாரேன். நகைப்பெட்டி மாதிரி இருக்கு. அதுலயும் ஆத்தங்கரை ஓரம். இந்த எடத்துல சந்தோஷமா தங்கீருப்பங்கள்ள."

"முட்டாளா..இது மனே இல்ல. இது சமாதி. இங்கதான் நூர்ஜஹானோட அப்பாவையும் அம்மாவையும் பொதைச்சிருக்காங்க. இத தன்னோட தாயி தந்தைக்கோஸ்கரா நூர்ஜஹான் கட்டீருக்காங்க. அதோட நூர்ஜஹானோட சமாதியும் இதுலதான் இருக்கு."

"ஓ...அப்படியா? நூர்ஜஹானோட சொந்த ஊர் இதுதானா? அதான் இங்க கட்டீருக்காங்க"

"இல்ல. நூர்ஜஹானுக்குப் பெர்ஷியாதான் சொந்த நாடு. இப்ப ஈரான். அப்போ அப்பா இந்தியா வந்தாங்க. வர்ர வழியில நூர்ஜஹான் பொறந்திருக்காங்க. ஆனா வறுமை தாங்காம குழந்தைய விட்டுட்டுக் கெளம்பீருக்காங்க. ஆனா முடியாம திரும்ப வந்து எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் அக்பர் கிட்ட வேலைக்குச் சேந்து ரிச்சாயிட்டாங்க."

"ஆகா...இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சி வெச்சிருக்க. பெரிய ஆளுதான்."

"ஹா ஹா ஹா..இன்னொந்து சொல்றேன். யமுனா ரொம்ப ரொமாண்டிக்கான நதி. மொகல்ஸ் இந்த நதிக்கரைலதான் ரொமாண்ஸ் பண்ணீருக்காங்க. தாஜ்மகால் கூட யமுனா ஓரத்துலே இருக்குல்ல."

"ம்ம்ம்......" ப்ரகாஷாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. ஏதோ ஒரு ஈர்ப்பு. சலவைக் கல் கட்டிடத்தின் குளிர்ச்சியும் அழகும் அவள் உள்ளத்தை "என்னவோ செஞ்சு" வைத்தன. ப்ரகாஷா சொன்ன ரொமாண்டிக் அவளுக்குள் வேலையத் தொடங்கியிருந்தது. அவன் ஏற்கனவே காதல் ஊறுகாய். இருவரும் சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"ரம்யா. I love you."

தொடரும்...
காதல் குளிர் - 5 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12930)

மலர்
15-10-2007, 07:12 PM
ப்ரகாஷா சொல்லிட்டானா....
இல்லைன்னா மனசுக்குள்ள தான் சொல்லிக்கிட்டான்னு கொண்டு வந்துருவீங்களா.....

அய்யையோ.....
அண்ணா இதெல்லாம் கொஞ்சம் ஓவர்
இப்படியா சஸ்பென்ஸா கொண்டு வந்து நிப்பாட்டுவீங்க....

(அடுத்தபாகம் தனிமடலில் தருவீர்களா...)

அன்புரசிகன்
15-10-2007, 07:28 PM
"ரம்யா. I love you." இப்படிக்கூறியது ப்ரகாஷாவா அல்லது அந்த கார் ட்ரைவரா? :D :D :D ... ஏன்னா முதல்ல நீங்க சொல்லியிருக்கீங்க... அவனால பிரச்சனை வரும் என்று...

ஆனாலும் எங்களை இப்படி ஏங்க வைப்பது ரொம்ப மோசம்... ம் .. சீக்கிரம்....

மலர்
15-10-2007, 07:32 PM
"ரம்யா. I love you." இப்படிக்கூறியது ப்ரகாஷாவா அல்லது அந்த கார் ட்ரைவரா? :D :D :D ... ஏன்னா முதல்ல நீங்க சொல்லியிருக்கீங்க... அவனால பிரச்சனை வரும் என்று...

ஆனாலும் எங்களை இப்படி ஏங்க வைப்பது ரொம்ப மோசம்... ம் .. சீக்கிரம்....

ஏனுங்கோ அன்பு....
சரியாதான் சொல்லியிருக்கீங்க....
இந்த ராகவன் அண்ணா பண்ணுறது கொஞ்சமாவது நல்லாயிருக்கா....
இப்படியா சஸ்பென்ஸாவா நிப்பாட்டிட்டு போறது....

மதி
16-10-2007, 03:30 AM
அடடே...
இப்படி சுவாரஸ்யமான கட்டத்துல தொடருமா...?
ராகவன், இது உங்களுக்கே நியாயமா...?

எப்படியோ உங்க கதை படிக்க மட்டும் நேரம் சரியா மாட்டுது.. கலக்குங்க... சீக்கிரமே அடுத்த பகுதி வரட்டும்..

lolluvathiyar
16-10-2007, 07:25 AM
அப்பா ஒரு வழியா ஐ லவ் யூ சொல்லியாச்சு
எங்களுக்கு ஆக்ராவையும் சுத்தி காட்டியாச்சு
இடையில் டிரைவர் மர்மம் வேற.
தொடரட்டும்

அக்னி
16-10-2007, 03:53 PM
"ரம்யா. I love you."
எல்லோரையும் போல எனக்கும் சந்தேகம்... கற்பனையில் சொன்னானா ப்ரகாஷா... அல்லது உண்மையில் சொல்லிவிட்டானா... அல்லது கண்கள் பேசியதா..?
கே.ஆர்.எஸ் ஏதோ சூழ்ச்சி செய்வதுபோலத் தெரிகிறதே...
சரி சரி என்ன செய்வது... அடுத்த பாகம் வரும்வரை காத்திருக்கின்றேன்...

சூரியன்
16-10-2007, 04:05 PM
"
"ரம்யா. I love you."சொல்லிட்டானா..

சொல்வான மாட்டானானு ஒரே புதிரா இருந்தது..

பூமகள்
01-11-2007, 04:42 PM
எனக்கு புரிஞ்சி போச்சு...!!:D:D

ப்ரகாஷாவின் கண்ணும் ரம்யாவின் வேல் விழியும் பேசிக்கொண்டன. அதில் ப்ரகாஷாவின் விழி பேசிய வார்த்தைகள் தான் அவையாக இருக்க வேண்டும்..!!

என் கண்டுபிடிப்பை பொய்யாக்கிப்போடுவாரோ ராகவன் அண்ணா??
அடுத்த பாகத்தில் பார்ப்போம்......!!
நல்ல எழுத்து நடை...!! ஆக்ரா ரம்யாவோடு சேர்த்து முதன் முறையாய் நானு பார்த்தேன்... ஹி ஹி..!! :D:D

மன்மதன்
20-11-2007, 05:13 PM
சொல்லிட்டானா..

சொல்வான மாட்டானானு ஒரே புதிரா இருந்தது..

தலைப்பு காதல் புதிர் என்று வைத்திருக்கலாமோ..:rolleyes:

மன்மதன்
20-11-2007, 05:15 PM
போட்டு உடைச்சிட்டான்..

அடுத்த பதிவுக்கு தாவுனாத்தான்

'நடந்தது என்ன' தெரியும்..