PDA

View Full Version : வாலிப தேசம்...!



அமரன்
13-10-2007, 07:43 PM
பறிக்காது வாடும்
பூக்களை காணும்போது
வாடும் தன்மை...

நெஞ்சை அள்ளும்
மோகமில்லா மோகனமாக
தவழும் புன்னகை

வலிக்காமல் கன்னமிடும்
கள்ளமில்லாப் பார்வை..

கண்ணீரையும் கள்ளையும்
பகுத்தறியும்
சலைவை செய்த மூளை.

களங்கமில்லா அகத்தின்
கலக்கத்தை துடைக்கும்
உள்ளத் தூய்மை.

வீசும் வார்த்தைகளில்
பூச்சியச்செறிவில்
திராவக கலவை..

வரண்ட தோட்டத்தை
புழுதி கிளப்பாது
குளிர்விக்கும் மேன்மை...

கொடுத்த வாழ்வை
பாடம் பயிற்றுவிக்கும்
பாசறை ஆக்கும்
கறைபடியா நடத்தை.

இத்தனையும் நிறைந்த
கொள்ளையிடும் காவலர்கள்
நிரம்பிய வாலிப தேசம்
நிஜமாவது எப்போது...!

சாம்பவி
13-10-2007, 08:05 PM
கோனார் நோட்ஸ் எங்கே நண்பரே.. !

.

அமரன்
14-10-2007, 08:36 AM
கோனார் நோட்ஸ் எங்கே நண்பரே.. !

:confused::confused::confused: உதவமுடியுமா?

சூரியன்
14-10-2007, 08:58 AM
கவிதையை நன்றாக தந்துள்ளீர்.
வாழ்த்துக்கள் அமரன் அண்ணா..

அமரன்
14-10-2007, 09:01 AM
நன்றி சூரியன்.. கவிதையை உங்கள் பார்வையில் கொஞ்சம் விமர்சித்து இருக்கலாமே..

சுகந்தப்ரீதன்
14-10-2007, 09:03 AM
வீசும் வார்த்தைகளில்
பூச்சியச்செறிவில்
திராவக கலவை..

இந்த இடத்துல கொஞ்சம் தடுமாற வச்சிட்டீங்க... அழகா கணித அறிவியலையும் வெளிபடுத்துறீங்க..வாழ்த்துக்கள் அண்ணா..! ஆமா இங்க ஏன் வாலிப தேசம்ன்னு எழுதுனீங்கன்னுதான் புரியல அண்ணா..!

அமரன்
14-10-2007, 09:14 AM
எல்லாத்திற்கும் கெமிஸ்ரிதான் காரணம் சுகந்தன்..நன்றி.

சுகந்தப்ரீதன்
14-10-2007, 09:20 AM
அப்படியா அண்ணா.. உங்க கெமிஸ்ரி ஒர்க்கவுட் ஆக வாழ்த்துக்கள்( நான் வேதியல்ல வீக்கு அண்ணா..!)

பூமகள்
14-10-2007, 09:21 AM
பறிக்காது வாடும்
பூக்களை காணும்போது
வாடும் தன்மை...
பூக்களின் பிறவிப்பயன்.... பூவையரின் கூந்தலில் தான் இருக்கிறது. அந்த சூடாப்பூக்களைக் காணும் போது சூட பூவையில்லை என்னும் வருந்தும் தன்மை.... எனக்கு இங்கு பெண் சிசு கொலையும், பூக்களை சூட இயலா இளம்விதவையும் நியாபகம் வருகின்றன.
ஒரு பொருள்படும்படி எழுதிய கவி... எனக்கு பல பொருள்களை காட்டுகிறது.. பாராட்டுகள் அமர் அண்ணா.

நெஞ்சை அள்ளும்
மோகமில்லா மோகனமாக
தவழும் புன்னகை
அழகிய சிரிப்பு..... காதலில்லாத கள்ளமற்ற உன்னதச்சிரிப்பு கொண்ட இளைய தலைமுறை முகங்கள். அற்புதம்...!!

வலிக்காமல் கன்னமிடும்
கள்ளமில்லாப் பார்வை..
"நிமிர்ந்த நன்னடை! நேர்கொண்ட பார்வை!" என்ற பாரதி கூற்று நியாபகம் வருகிறது. அசத்தல்..!

கண்ணீரையும் கள்ளையும்
பகுத்தறியும்
சலைவை செய்த மூளை.
போலி முகங்களின் முதலைக் கண்ணீரையும் உண்மை ஏழையின் நிஜ வலியையும் உணர்ந்து பகுத்தறியக்கூடிய அறிவு ஊற்றுகளாய் மாற வேண்டிய இன்றைய இளைய தலைமுறை....!!
நல்லதொரு கருத்து...!!

களங்கமில்லா அகத்தின்
கலக்கத்தை துடைக்கும்
உள்ளத் தூய்மை.
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, தூய உள்ளதோடு தர்மத்தை காக்கும் நடத்தை..!! அகத்தின் தூய்மை கட்டாயம் வேண்டும் இன்றைய இளைய தலைமுறைக்கு..!!

வீசும் வார்த்தைகளில்
பூச்சியச்செறிவில்
திராவக கலவை..
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய்க்கவர்ந் தற்று" என்ற வள்ளுவரின் கூற்றுக்கு புதிய அடைமொழி..!!
பேசும் வார்த்தைகளில் 0% அக்னி வார்த்தை பிரயோகம்.. இனிமையாக பேசு என்று கூறிய விடயம். மிக அழகான வரிகள்..!! :icon_b:

வரண்ட தோட்டத்தை
புழுதி கிளப்பாது
குளிர்விக்கும் மேன்மை...
வாடும் உள்ளங்களை பூக்களின் வனமாக்கும் மனப்பாங்கு...!! மென்மையோடு மேன்மை உள்ளம்...!! அழகான வரிகள் அண்ணா.

கொடுத்த வாழ்வை
பாடம் பயிற்றுவிக்கும்
பாசறை ஆக்கும்
கறைபடியா நடத்தை.
கிடைத்த வாழ்வில் ஒழுக்கமாய் வாழ்ந்து வருங்காலத்து சந்ததிகளுக்கு பாடமாகும் சீரிய நடத்தை...!! :icon_b:

இத்தனையும் நிறைந்த
கொள்ளையிடும் காவலர்கள்
நிரம்பிய வாலிப தேசம்
நிஜமாவது எப்போது...!
இத்தனை அழகான விசயங்களும் நிறைந்த வாலிப சமுதாயம் விளைவது எப்போது? என்ற உங்களின் உண்மையான ஏக்கமும் ஆசையும் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.
அமர் அண்ணாவின் கையிலிருந்து மீண்டுமொரு அழகான கவி வரிகள்..!! மிகவும் ரசித்தேன் எல்லா வரிகளையும்..!!
அழகான கோர்வை வரிகள்...!! சிறப்பான கருத்துகள்...!!
வாலிப தேசம்..... உங்களின் மனம் போல் விரைவில் உருவாகும் என்று நம்புகிறேன்.

ஜெயாஸ்தா
14-10-2007, 11:30 AM
பறிக்காது வாடும்
பூக்களை காணும்போது
வாடும் தன்மை...


நல்ல கவிதை. நன்றி அமரன்

எப்படிப்பட்ட இளைஞர் கூட்டம் நமக்கும் நாட்டுக்கும் தேவை என்பதை கவிதை வாயிலாக கனவு கண்டுள்ளீர்கள். இதில் ஒரு சிலதான் நிஜமாகமல் இருக்கக்கூடும். மற்றவை நிச்சயம் நிஜமாகும். நிற்க.

இந்த வரிகளை அன்பு, கழிவிரக்கம் கொண்ட இளைஞனின் இதயத்தை சுட்டிக்காட்ட தாங்கள் பயன்படுத்தியுள்ளீர். ஆனால் வாடும் பூவை கண்டாலே மனம் வாடும் அந்த இளைஞன் எப்படி அந்த பூவை செடியிலிருந்து, பிரிக்க, பறிக்க சம்மதிப்பான். கொஞ்சம் இடிக்கிறதே....

அமரன்
14-10-2007, 05:08 PM
ஒரு பொருள்படும்படி எழுதிய கவி... எனக்கு பல பொருள்களை காட்டுகிறது.. பாராட்டுகள் அமர் அண்ணா.

நன்றி பூமகள். ஆழ்ந்து படித்து கருத்து தெரிவித்து உள்ளீர்கள். நாம் ஏதோ ஒன்றை மனதில் வைத்து புனையும் கவிதைகள் சிலவேளைகளில் அக புற தாக்கங்களுக்கு அமைய வாசகனால் வேறு கருவுடன் பொருத்திப்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்தக்கவிதையை எழுதும்போது பல முகங்களை காட்டும் என நினைத்தேன். அது நிகழ்ந்துள்ளது என்பதை உங்கள் பின்னூட்டப் பதிவு உணர்த்துகிறது.

அமரன்
14-10-2007, 05:13 PM
இந்த வரிகளை அன்பு, கழிவிரக்கம் கொண்ட இளைஞனின் இதயத்தை சுட்டிக்காட்ட தாங்கள் பயன்படுத்தியுள்ளீர். ஆனால் வாடும் பூவை கண்டாலே மனம் வாடும் அந்த இளைஞன் எப்படி அந்த பூவை செடியிலிருந்து, பிரிக்க, பறிக்க சம்மதிப்பான். கொஞ்சம் இடிக்கிறதே....
நன்றி ஜேம். செடிக்கு அழகு கொடுத்துவிட்டு மரிக்கும் பூவை விட சூடப்பட்டு வாடும் பூ எனக்கென்னமோ பிறவிப்பயன் அடைந்ததாகப் படும். இக்கவியில் நீங்கள் பூவை பூவாகவும் பார்க்கலாம். குறியீடாகவும் பார்க்கலாம் ஜேம்..

இலக்கியன்
14-10-2007, 05:18 PM
மாற்றம் கான வேண்டும் சொல்லும் சிந்தனை மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள். பூமகளின் கருத்தும் புதிய பார்வை

சாம்பவி
14-10-2007, 08:00 PM
பொருளுரை தந்த
பூமகளுக்கு நன்றி.. ! :)
ஆயினும் ஆசிரியரின்
பொழிப்புரை வேண்டி....

சாம்பவி.. !
.

ஓவியன்
19-10-2007, 05:40 PM
ஆகா அமரன்!!!

ஒரு பெண்ணின் நிலையிலிருந்து எப்படி, இவ்வளவு உணர்வுகளை யதார்த்தமாக வெளிக்காட்ட முடிந்தது...???

பறிக்காத பூக்களை, இன்னும் மணமாகா பெண்ணோடு ஒப்பிட்டது நல்ல உவமை. பூஜைக்கு செல்லாத புஸ்பத்தைப் பார்த்த கொழுகொம்பில்லா பூங்கொடி தன்னோடு ஒப்பிட்டு அந்த புஸ்பத்திற்காக வருந்துகிறது....

மோகமில்லா புன்னகையுடன், பிறர்மனம் வலிக்கா கள்ளப் பார்வையுடன் பூச்சிய செறிவு, அதாவது அமிலமுமின்றி காரமுமின்றி நீரைப் போல பிறரை வாட்டாத வார்த்தைப் பிரயோகத்துடன் தேர்ந்த மூளை, கொடுத்த வாழ்க்கைப் பாதையில் நயம்பட நடாத்தும் லாவகம் அமையப் பெற்றும் இன்னும் அந்த பாதை திறக்கப்படாமல் காத்திருக்கும் பெண்களுக்காக "காவலனே கள்வனாகாகி காதலனாகும் நாள் வராதா என" அமரன் வடித்த கவி வரிகள் அற்புதம்...

அழகான, அருமையான வார்த்தைப் பிரயோகங்கள் பாராட்டுக்கள் அமரா...!!

நேசம்
19-10-2007, 05:48 PM
ககோதரி சாம்பவி கோனார் நோட்ஸ் வேண்டாம். பூமகளின் அர்த்தமுள்ள் விமர்சனத்தை பாருங்கள். அமரன் ஜி நிங்கள் எதிர்பார்க்கும் இளைய சமுதாயம் ஒரு நாள் வரும்.. அருமையான கவிதை

அமரன்
20-10-2007, 12:29 PM
நன்றி அன்பர்களே..! நீங்கள் அமைத்துக்கொடுக்கும் பாதையில் தட்டுத்தடுமாறி நடைபயிலும் எனக்கு மேலும் கைதட்டி நம்பிக்கை கொடுத்த உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி.

அமரன்
20-10-2007, 12:44 PM
பறிக்காது வாடும்
பூக்களை காணும்போது
வாடும் தன்மை...

விதவை/முதிர்கன்னி மீதான வாட்டப்பார்வை. தூய்மையான நாடலுக்கான அடித்தளம்.

நெஞ்சை அள்ளும்
மோகமில்லா மோகனமாக
தவழும் புன்னகை
அவர்கள்மீதான கபடமற்ற புன்னகை. அவர்களிடம் மட்டுமல்லாத அனைத்து பெண்களிடத்திலும்/ஆண்களிடத்திலும் சினேகமான புன்னகை. (கபடக்கலப்பு உள்ளது செனேகமன்று என்பது எனது கருத்து)

வலிக்காமல் கன்னமிடும்
கள்ளமில்லாப் பார்வை..
வக்கிரமில்லாத பார்வை. இன்னொரு விதமாகச் சொன்னால் சப்புக்கொட்டி ருசிக்கும் பார்வை இல்லாத ரசிப்புத்தன்மையை பறை சாற்றும் பார்வை. அது மாசற்ற நட்பு/காதலில் அதிகம் உள்ளது என்பது எனது பக்க தீர்மானம்.

கண்ணீரையும் கள்ளையும்
பகுத்தறியும்
சலைவை செய்த மூளை.
விஷமப் புன்னகைபோல விசங்கலந்த கண்ணீரையும், மனமகிழ்வு மிகுதியால் உள்ளப்பெருக்கு கண்ணீரையும் கண்டறியும் தன்மை. (இப்போ பல ஆண்கள்/பெண்களுக்கு இது இல்லை என்பது எனது தாழ்மையான நிலை.

களங்கமில்லா அகத்தின்
கலக்கத்தை துடைக்கும்
உள்ளத் தூய்மை
நட்போ காதலோ அன்போ எதுவானாலும் கொடுத்துப்பெறுவது மிக்கியம். அப்படிக்கொடுத்துப்பெறுவது கலங்கிய குட்டையை துலங்க வைக்கும் வல்லமை கொண்டது. அந்த தூய்மை எல்லோருக்கும் தேவை.

வீசும் வார்த்தைகளில்
பூச்சியச்செறிவில்
திராவக கலவை..
மென்மையான மயிறகு சாமரம் வீசும் வார்த்தைகளின் கோர்வை. ஒவ்வொருவருக்கும் அவசியமான போதை.

வரண்ட தோட்டத்தை
புழுதி கிளப்பாது
குளிர்விக்கும் மேன்மை...
எத்தனை வீட்டில் வறுமை சூரியன் ஆட்சி உச்சத்தில் உள்ளது. அங்கே சல சலப்பை ஏற்படுத்தாத சிலுசிலுவை ஏற்படுத்தும் நகர்வு. நுகராப்பூக்களை விரவிநிற்கும் கறுப்பை துடைக்கும் இயல்பு.

கொடுத்த வாழ்வை
பாடம் பயிற்றுவிக்கும்
பாசறை ஆக்கும்
கறைபடியா நடத்தை.
கொடுத்ததை பறிக்காத வழிகாட்டியாக வாழ்வாங்கு வாழும் பாங்கு.


இத்தனையும் நிறைந்த
கொள்ளையிடும் காவலர்கள்
நிரம்பிய வாலிப தேசம்
நிஜமாவது எப்போது...!

இத்துணை வாலிப அங்கத்தவர்கள் கட்டிக் காவல் காக்கும் எனது கனவு தேசம் விரைவில் மலருமா?

பூமகள்
20-10-2007, 01:22 PM
அற்புதமான விளக்கம் அமர் அண்ணா.
பாராட்டுகள்..!!
நிச்சயம் மலரும் கூடிய விரைவில் உங்களின் கனவு தேசம்...!!
வாழ்த்துகள்...!!

ஓவியன்
20-10-2007, 01:28 PM
ஆகா அமரா!!!

விளக்க முற்பட்டு, நான் நான் சொதப்பிட்டேன் போல... :eek:

அமரன்
20-10-2007, 01:30 PM
இல்லை ஓவியன். சாயல் ஒன்றுதான். யார் கவிதைகளானாலும் பலசாயல்களைக் கொள்ளவேண்டும். அதுதான் எனக்குப் பிடித்தமானது. பொதுவாக கவிதை எழுதிய மனநிலையை ஒரு போதும் கவிச்சுடரில் கொடுத்து என் கருத்தை சுடர்விட்டுப் பொலிய நான் விடுவதில்லை. ஆனால் அப்படிச் செய்யவேண்டும் என்று ஒரு அன்பர் எடுத்துரைத்தது எனக்குச் சரியாகப்பட்டது. அதன் விளைவே இது.

ஜெயாஸ்தா
20-10-2007, 01:33 PM
அமரனின் அற்புதமான விளக்கத்திற்கு கைதட்டி (கொஞ்சம் அசந்தா உங்களையும் தட்டுவோம் முதுகில்:lachen001:) பாராட்டை தெரிவிக்கிறோம். பார்க்கிறவர்களின் மனதிற்கேற்ப குணம்காட்டும் தன்மை கவிதைக்கும் உண்டு....!

ஓவியன்
20-10-2007, 01:34 PM
இல்லை ஓவியன். சாயல் ஒன்றுதான். யார் கவிதைகளானாலும் பலசாயல்களைக் கொள்ளவேண்டும். அதுதான் எனக்குப் பிடித்தமானது.

உண்மைதான் அமரா, ஆனால் இப்போதெல்லாம் முன்பு போல் என்னால் உங்கள் கவிக்கருவைப் பிடிக்க முடிவதில்லை...

உங்கள் வேகத்திற்கு நம்மால் ஓடி வர முடியாதுள்ளது போல....:)
சிகரம் தொடும் உங்கள் கவிப்பயணத்திற்கு என் வாழ்த்துக்கள் எப்போதும் உங்களோட் நிற்கட்டும்....! :)