PDA

View Full Version : பிறவா வரம்



kavitha
12-10-2007, 11:08 AM
விரிந்தே கிடக்கிறது உன் வானம்
மிக வெளிச்சமாய்...

வானமே தெரியவில்லை எனக்கு
ஒரே இருளாய்..

குடை பிடித்து பூ விரிக்கின்ற பாதை உனது
பாதையே தெரியாது இருளுக்குள் நடப்பது எனது

சூரியன் உனது ஒளி
தீப்பந்தமே எனது ஒளி

மேகம் கூட பஞ்சு மெத்தையாகும் உனக்கு
மேகமும் அழும் நடந்து போகையில் எனக்கு

நீ தூங்கினால் இரவு
விழித்தால் பகல்

நான் எழுந்தாலும்
விடியவில்லை எனது இரவு


இதில் நீ எங்கே?
நான் எங்கே?

இறைவா...
இனி ஒரு பிறப்பது இல்லாமல் வேண்டும்
ஒரு வேளை பிறந்தாலும்
உனைப்போல ஆணாக பிறக்கவேண்டும்.

கஜினி
12-10-2007, 11:13 AM
இத்தனை சோகம் வேண்டாம் சகோதரி. ஆண்கலெல்லாம் பெண்களாய் பிறக்க தொணிக்கையில் உங்களில் மட்டும் ஏனிந்த குழப்பம்.

kavitha
12-10-2007, 11:23 AM
நன்றி கஜினி..

"இக்கரைக்கு அக்கரைப் பச்சை" என்கிறீர்களா?

அக்னி
12-10-2007, 11:53 AM
வெளிச்சம் தேடும் இருளின் உலா...

தீபமாய் சுடர்!
சுடரைச் சுற்றிலும் இருள்..,
சுடரின் நடுவிலும் இருள்...

ஆண்மையும் பெண்மையும் நெருக்கமாகவே அருகருகாய்...
வெளிச்சம் இன்றேல் இருளையோ, இருள் இன்றேல் வெளிச்சத்தையோ,
உணர முடியாது... வகுக்க முடியாது...
இரண்டும் தேவையே...

மனதை தவிக்கவைக்கும் வரிகள்... பாராட்டுக்கள் கவிதா அவர்களே...

ஆதவா
12-10-2007, 01:32 PM
நீண்டநாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் கவியையும் கவியையும் வரவேற்கிறேன்.

விமர்சனம் பிறகு.

kavitha
15-10-2007, 07:37 AM
வெளிச்சம் தேடும் இருளின் உலா...

தீபமாய் சுடர்!
சுடரைச் சுற்றிலும் இருள்..,
சுடரின் நடுவிலும் இருள்...

ஆண்மையும் பெண்மையும் நெருக்கமாகவே அருகருகாய்...
வெளிச்சம் இன்றேல் இருளையோ, இருள் இன்றேல் வெளிச்சத்தையோ,
உணர முடியாது... வகுக்க முடியாது...
இரண்டும் தேவையே...

மனதை தவிக்கவைக்கும் வரிகள்... பாராட்டுக்கள் கவிதா அவர்களே...

நன்றி அக்னி.

kavitha
15-10-2007, 07:38 AM
நீண்டநாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் கவியையும் கவியையும் வரவேற்கிறேன்.

விமர்சனம் பிறகு.

நன்றி ஆதவன். உங்கள் பின்னூட்டத்தை வாசிக்க ஆவலுடன்..

பூமகள்
15-10-2007, 07:46 AM
மேகம் கூட பஞ்சு மெத்தையாகும் உனக்கு
மேகமும் அழும் நடந்து போகையில் எனக்கு
...
இதில் நீ எங்கே?
நான் எங்கே?

இறைவா...
இனி ஒரு பிறப்பது இல்லாமல் வேண்டும்
ஒரு வேளை பிறந்தாலும்
உனைப்போல ஆணாக பிறக்கவேண்டும்.
பெரும்பான்மையான பெண்களின் மனவோட்டத்தை எடுத்தியம்பிய நல்ல கவி.. சகோதரி கவி..!!
உங்களின் கவிக்கருத்தை என் இதயமும் வழிமொழிகிறது.
இனி ஒரு பிறப்பு எடுப்பின் கட்டாயம் ஆணாய் தான் பிறக்க வேண்டும்.
பாராட்டுகள் கவி..!!
இன்னும் கவி அமுது படையுங்கள்..!!
வாழ்த்துகள்..!!

சுகந்தப்ரீதன்
15-10-2007, 07:48 AM
திடீர்ன்னு வரிங்க திடீர்ன்னு போறிங்க...! எப்பவும் எங்களுடன் இருந்தா எவ்வளவு நன்றாக இருக்கும் உங்க கவிதையை போலவே உங்களின் இருப்பும் எங்களுக்கு...
மங்கையராய் பிறப்பதற்க்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்கிறார்கள்.. நீங்கள் ஆணாய் பிறக்க ஆசைவடுவதுமேனோ..? கஜினி சொல்வது போல இக்கரைக்கு அக்கரை பச்சை... ஆணாய் பிறந்தவனுக்குதான் தெரியும் ஆணின் அவஸ்தை.. ஆகையால் பெண்ணாய் பிறந்ததற்க்கு பெருமை கொள்ளுங்கள்...!

kavitha
15-10-2007, 08:17 AM
பெரும்பான்மையான பெண்களின் மனவோட்டத்தை எடுத்தியம்பிய நல்ல கவி.. சகோதரி கவி..!!
உங்களின் கவிக்கருத்தை என் இதயமும் வழிமொழிகிறது.
இனி ஒரு பிறப்பு எடுப்பின் கட்டாயம் ஆணாய் தான் பிறக்க வேண்டும்.
பாராட்டுகள் கவி..!!
இன்னும் கவி அமுது படையுங்கள்..!!
வாழ்த்துகள்..!!

நன்றி பூமகள்.
பெண்ணாகப்பிறந்ததில் ஆனந்தம், பெருமிதம் ஒருபுறம் இருந்தாலும் இக்கலிகாலத்தில் இப்படிப்பிறந்துவிட்டோமே என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது.

அமைதியாய் இருந்தால், "உம்மனாம்மூஞ்சி" - சத்தமாய் பேசினால், "வாயாடி"

உரிமையைக்கேட்டால் "சண்டைக்காரி" - கேட்காவிட்டால் "ஏமாளி"

சரியெனப்பட்டதை செய்தால் "அடங்காப்பிடாரி" - செய்யாவிட்டால் "திரணியற்றவள்"

சொல்வதற்கு எல்லாம் தலையாட்டினால் "நல்ல பெண்மணி" , சுயமாய்ச் சிந்தித்தால் "வீண்விதண்டாவாதி"

மொத்தத்தில் சுதந்திரம் என்பது கேட்டுக்கிடைப்பது. கிடைக்காவிட்டால் ஊமையாய் இருப்பது.

உண்மை நிலை இது தான். இது ஒரு உள்ளக்குமுறல் தோழி.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

kavitha
15-10-2007, 08:22 AM
திடீர்ன்னு வரிங்க திடீர்ன்னு போறிங்க...! எப்பவும் எங்களுடன் இருந்தா எவ்வளவு நன்றாக இருக்கும் உங்க கவிதையை போலவே உங்களின் இருப்பும் எங்களுக்கு...
மங்கையராய் பிறப்பதற்க்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்கிறார்கள்.. நீங்கள் ஆணாய் பிறக்க ஆசைவடுவதுமேனோ..? கஜினி சொல்வது போல இக்கரைக்கு அக்கரை பச்சை... ஆணாய் பிறந்தவனுக்குதான் தெரியும் ஆணின் அவஸ்தை.. ஆகையால் பெண்ணாய் பிறந்ததற்க்கு பெருமை கொள்ளுங்கள்...!

:lachen001: சரி சுகந்தப்ரீதன். இனி, என்னால் படைக்க நேரம் கிடைக்காவிட்டால் படிப்பதற்காவது இயன்ற வரை வரப்பார்க்கிறேன். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

பூமகள்
15-10-2007, 08:24 AM
நிதர்சன வார்த்தைகள் தோழி கவி..!!
இந்த காலம் பெண்களுக்கான காலமாக இல்லை..!!
பெண்களை சக மனிதமாக பார்க்கும் பார்வை இன்று எங்குமே காணக்கிடைக்காத ஒன்றாகிவிட்டது பெருத்த வேதனை அளிக்கும் விசயமே...!!
திரைப்படம் முதல் வரைபடம் வரை... பெண்களை பொருளாக பார்க்கும் கடவுள் படைத்த கேலிச்சித்திரமாக பார்க்கும் மனப்பான்மை சமுதாயத்தில் மேலோங்கி வருவதை யாரும் மறுப்பதற்கு இல்லை..!!

பெண்களை வாயளவில் தெய்வமாக சொல்லும் பலர், நிஜத்தில் தம் வீட்டு பெண்களை அடிமையாய் நடத்துவது வேதனையான ஒன்று..!!

இவ்வுலகம் ஆண்களுக்கானதாய் மாறிப்போய் கிடக்கிறது நெடுங்காலமாய்..!!!

இன்று அதுவே நவீனத்துவ அரிதாரம் பூசி... புது பொலிவுடன் அதே பழைய பின்னோக்கு பார்வையுடனே..!!

மனக்குமுறலை ஏற்படுத்திய நல்ல கவி..!!
நன்றிகள் தோழி..!!

சுகந்தப்ரீதன்
15-10-2007, 08:47 AM
என்ன பூமகள் அக்கா குத்தி காட்டுறீங்களா...? ஆனாலும் நீங்க சொல்வதுதான் உண்மை அதை மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது...!

பூமகள்
15-10-2007, 08:58 AM
புரிந்து நடந்தால் சரி தான் தம்பி ப்ரீதன்..!!
இதில் குத்திக் காட்ட என்ன இருக்கு??
உண்மையை விளக்கினேன்.. கொஞ்சம் காரம் கூடிவிட்டதோ??

பென்ஸ்
15-10-2007, 09:25 AM
ஒன்று எதற்காக வடிவமைக்கபட்டுள்ளதோ அதன் பணியை அது செய்யம்யுடியாமல் போகும் போது, அது பலனற்றதாய்..!!!
வடிவமைக்கபட்டு ஒன்று அதன் பணியை செய்யாமல் அதன் இயல்பை தாண்டி வேறு ஒன்றை செய்யும் போதும் , அது பயனற்றதாய்....

பயனற்றதாய் போனால் அது தோல்வியே....

நமது படைப்பின் பயன் அறிய வேண்டும்,
அதை முளுமையாக செய்யவேண்டும்....

ஆனால் இதை எல்லாம் தாண்ட வேண்டும் என்று முயற்ச்சித்து வெற்றிபெறும் போது அது சாதனையாகும்...
இல்லை வெறும் சோதனையாகும்...
ஆனால் சோதனையால் புலம்புவது நியாயம் இல்லை....


இவ்வுலகம் ஆண்களுக்கானதாய் மாறிப்போய் கிடக்கிறது நெடுங்காலமாய்..!!!


இது இயலாமையா...
இல்லை பயமா....

எதுக்கு புலம்புறிங்க... மாற்றிகாட்டுங்கள்...

அமரன்
15-10-2007, 09:36 AM
உலக முதல் சக்தி என்பதை எல்லோரும் உணரும்வரை இந்நிலை தொடரும் என்பதில் ஐயமில்லை. இதை அக்காலத்திலும் இக்காலத்திலும் ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி உணரவில்லை. ஆதிபகவன் என வள்ளுவன் விளித்தபோது அக்கால பெண்கள் எதிர்த்து இருக்க வேண்டும். ஆதவனை ஆணுக்கும் நிலவைப் பெண்ணுக்கும் ஒப்புமையாக்கும்போது பெண்ணை குளிர்ச்சி என்கிறார்கள் என்று ஏமாற்றப்படுவது தெரியாமல் இறுமாந்து இருக்காதிருக்கவேண்டும். அப்போதுகூட ஆணாதிக்க சமூகம்தான் இருந்தது எனச்சொல்ல முடியாது. பெண்கள் கோலோச்சிய காலங்களும் இருந்ததாக என் சிற்றறிவு சொல்கிறது....

கலிகாலம் என்று சொல்லப்படும் இந்நவீன யுகத்தில், பல தேசங்களில் இந்நிலை முற்றிலும் இல்லை என்றே சொல்வேன். இன்னும் சொல்லபோனால் பல தேசங்களின் தலை எழுத்தை மாற்றும் வல்லமை மிகுந்த சக்திகளாக பெண்கள் தமது சக்தியை வெளிக்காட்டுகிறார்கள். இதே நிலை எம்தேசங்களில் வரவேண்டும்;வரும். எப்போது??

கண்ணகின் கண்களில் தீப்பந்தம் கொண்டு திரியவில்லை. அவளுக்குள் இருந்து நெருப்புத்தான் அங்கே தாண்டவம் ஆடியது (அது சரியா தப்பா என்பதை தவிர்ப்போம்) அதே நெருப்புக் கங்குகள் இப்போதும் ஒவ்வொருவரின் உள்ளேயும் உள்ளன. அதைக் கக்குங்கள். உங்களுக்கான வேலிகளை எரியுங்கள். தடைகளை அகற்றுங்கள். எதிர்பாலாரில் யாராவது உங்களுக்கு உதவ இருக்கலாம். பெண்களுக்கே உரித்தான நுணுக்கமாக ஆராய்ந்தறியும் அறிவை பயன்படுத்தி அவரைக் கண்டறியுங்கள்..

அப்படியான சில நவீன கண்ணகிகளும் நல்ல ஆண்களும் நெடிய பயணத்துக்கான அடிகளை எடுத்து வைத்துவிட்டனர். அவசரமும் ஆதங்கமும் அவர்களை அவ்வப்போது நிலைதடுமாற வைத்தாலும் கலாச்சாரம் என்னும் முதலை வாயை அகலத் திறந்து வைத்தாலும் சளைக்காது பயணித்து இலக்கை அடைவார்கள் என்பது திண்ணம்..

அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்கவேண்டும் என வேண்டாமல் பெண்ணாகப் பிறந்து புதிய எண்ணங்கள் விதைத்து, புதிய விதி சமைக்க வரம்கேளுங்கள்..

ஏதாச்சும் தவறாக இருந்தால் இச்சிறியவனை மன்னிக்கவும் கவிதாக்கா...

பூமகள்
15-10-2007, 10:09 AM
இது இயலாமையா...
இல்லை பயமா....

எதுக்கு புலம்புறிங்க... மாற்றிகாட்டுங்கள்...
அது இயலாமையும் இல்லை... பயமும் இல்லை.. புலம்பலும் இல்லை.. பென்ஸ் அண்ணா.
நிஜத்தில் நிறைய பெண்களின் நிலை தான் அது.
மாற்றம் வேண்டுமென்பதே என் விருப்பமும்.
இருப்பதைச் சொன்னேன்... இனி இருக்காது ஆக்குங்கள் என்று சொல்கிறீர்கள்....!!
அப்போ... ஒப்புக்கொள்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா??

அமரன்
15-10-2007, 10:15 AM
இருக்கு என்பது என் கருத்து...அதில் சமபங்கு பெண்களுக்கு.
வலிமை தெரியாமல் வலிக்கிறது என்றால் அது யார் தப்பு.

வலியோர் எளியோராக விழையும்போதே
சாதாக்கள் வலியோராக விளைகிறார்கள்..

ஒத்துக்கொள்வீர்களா....

நேசம்
15-10-2007, 10:26 AM
பெண்ணாய் பிறக்க தவம் செய்து இருக்க வேண்டும். எம்மா உனக்கு எந்த கவலை(கவிதை சூப்பர்)

பென்ஸ்
15-10-2007, 01:42 PM
அது இயலாமையும் இல்லை... பயமும் இல்லை.. புலம்பலும் இல்லை.. பென்ஸ் அண்ணா.
நிஜத்தில் நிறைய பெண்களின் நிலை தான் அது.
மாற்றம் வேண்டுமென்பதே என் விருப்பமும்.
இருப்பதைச் சொன்னேன்... இனி இருக்காது ஆக்குங்கள் என்று சொல்கிறீர்கள்....!!
அப்போ... ஒப்புக்கொள்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா??

பூ...

பெண்கலை சமுதாயத்தில் இன்னும் வளரவில்லை, அங்கிகாரம் தரபடவில்லை என்னும் விசயத்தை வாதத்தில் வைத்தால், ஒருவேளை நான் ஒத்து போகலாம்... ஆனால் ஆண்கள் தான் பெண்களை அடக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதை என்னால் ஒத்து கொள்ள முடியாது...

தோழி கவிதா, தன்னுடைய கவிதையில் பெண்ணை ஒரு ஆணுடன் ஒப்பிடுகிறர்...
இயல்பான எண்ன இயக்கம்...
மேலும் அவர் கூறுகையில், எங்குமே அவர் ஆண்கள்தான் பெண்னை அடக்குகிறர் என்று சொல்லவில்லை...
ஆண்கள் சுதந்திரத்தை எடுத்து கொள்ளுகிறர்கள் அவ்வளவே....

ஆனால் நீங்கள் பெண்களை ஆண்கள் தான் அடக்கி வைத்திருக்கிறர்கள் என்று சொல்லுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... இது ஆண்கள் மீது அவசியமில்லாமல் தொடுக்கபட்ட குற்ற சாட்டு...

ஒவ்வொறு சமுதாயத்திற்க்கும் ஒவ்வொரு வழிமுறை...

வலிமையானது தன்னை விட வீக் ஆன ஒன்றை அடக்கியாளுவது இயல்பே...
மாமியார், தன் புது மருமகளை
சம்பாதிக்கும் மருமகள் தன் ஏழை மாமியாரை...
அக்கா தம்பியை..
அண்ணன் தங்கையை...

கணவன் - மனைவி, அவரவர் நிலையை பொறுத்து ...

இது மனித ஜென்மத்தில் மட்டும் அல்ல மிருகங்களும் இப்படிதான்...
வலியது ஆளும்...

ஆனால் மனிதன் ஆறாவது அறிவு, கலாசாரம் என்று இருப்பதால் தனக்கு இனையாக பெண்னை நினைக்க முயலுகிறன்...
சில பெண்களும் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் அடியை போடுகிறர்கள், துணி துவைக்க வைக்கிறர்கள்...

இந்த 33% இட ஒதுக்கீடு கூட சுத்த அவசியமில்லாத விசயம்... திறமையும், தகுதியும் இருப்பவனுக்கு முதலிடம் கொடுக்கனும்...

பூ...
ஒரு பெண் ஆனை விட பல இடங்களில் சிறப்பாக துலங்குகிறாள்...
ஏன் ஆண்களால் பெண்களை விட ஆசிரியர் பணியில் சிறக்க முடியவில்லை...
அப்பாவிடம் வளந்த குழந்தையைவிட அம்மாவிடம் வளர்ந்த குழந்தை ஏன் ஒழுக்கமா இருக்கு???
இப்படி பல கேள்விகள் கேட்டுபார்த்தால் புரியும்...

(அதுக்காக நாங்க இதுக்கு மட்டுமா, என்று குதக்க கேள்வி கேட்க்காமல்.. சுய பரிசோதனை செய்து பாருங்கள்)

ஆண் ஆணாக இருக்கடும்....
பெண் பெண்ணாக இருக்கடும்...
இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கட்டும்...

பூமகள்
18-10-2007, 04:32 AM
பூ...

பெண்கலை சமுதாயத்தில் இன்னும் வளரவில்லை, அங்கிகாரம் தரபடவில்லை என்னும் விசயத்தை வாதத்தில் வைத்தால், ஒருவேளை நான் ஒத்து போகலாம்... ஆனால் ஆண்கள் தான் பெண்களை அடக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதை என்னால் ஒத்து கொள்ள முடியாது...

தோழி கவிதா, தன்னுடைய கவிதையில் பெண்ணை ஒரு ஆணுடன் ஒப்பிடுகிறர்...
இயல்பான எண்ன இயக்கம்...
மேலும் அவர் கூறுகையில், எங்குமே அவர் ஆண்கள்தான் பெண்னை அடக்குகிறர் என்று சொல்லவில்லை...
ஆண்கள் சுதந்திரத்தை எடுத்து கொள்ளுகிறர்கள் அவ்வளவே....

ஆனால் நீங்கள் பெண்களை ஆண்கள் தான் அடக்கி வைத்திருக்கிறர்கள் என்று சொல்லுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... இது ஆண்கள் மீது அவசியமில்லாமல் தொடுக்கபட்ட குற்ற சாட்டு...

பென்ஸ் அண்ணா....

தாங்கள் என் கருத்தை தவறாக புரிந்து கொள்ளும் படி நான் தெளிவில்லாமல் எழுதிவிட்டேனோ???
எனது எந்த பதிவிலும் ஆண்கள் தான் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் பெண்களை என்று கூறவேயில்லையே...............!!
இதோ இந்த என் கருத்துக்களைத் தான் உங்களுக்கு அவ்வண்ணம் தோன்ற காரணமாக உள்ளதா??

பெண்களை வாயளவில் தெய்வமாக சொல்லும் பலர், நிஜத்தில் தம் வீட்டு பெண்களை அடிமையாய் நடத்துவது வேதனையான ஒன்று..!!
இப்படித் தானே சொன்னேன்... இதில் ஆண்கள் தான் அப்படி நடத்துகிறார்கள் என்று மட்டும் எவ்விதம் எடுத்துக் கொள்ள இயலும்??
பெண் சிசுக்களை பெண்களே கள்ளிப் பால் கொடுத்து கொல்லுவதும் இன்னும் பல கிராமங்களில் நடந்தவண்ணம் தானே உள்ளது??
என் வாதம், அப்படியான மனப்பான்மை கொண்ட இருபாலரும் கூட பெண்களை வீட்டில் சரிவர நடத்துவதில்லை என்று சொல்ல வந்தேன்.

இங்கு என்னை ஆண்களின் மேல் மட்டும் குற்றம் சாட்டுபவளாய் கூறியிருப்பது வேதனை தருகிறது.

இதயம்
18-10-2007, 05:17 AM
சுதந்திரம் என்பதன் உண்மையான பொருள் அந்த சுதந்திரத்தின் பயனை ஆராய்ந்து தெளிதலில் இருக்கிறது. சிலர் சுதந்திரம் என நினைக்கும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு சுதந்திரம் இல்லை என்று மறுக்க வாய்ப்பு இருக்கிறது. உதா. ஒரு பெண் அரைகுறை ஆடை அணிந்து அந்நியர் முன் வலம் வர நினைப்பது அவளைப்பொருத்தவரை சுதந்திரமாக இருக்கலாம். ஆனால், அதனுள் பொதிந்திருக்கும் உண்மை என்னவென்றால், அவள் சுதந்திரம் என நினைக்கும் அது அவளுக்கு சீரழிவை அல்லவா ஏற்படுத்தும்.? அதே போல் சுதந்திரம் என்பது சுதந்திரத்தை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும். நன்மையை, மகிழ்ச்சியை தராத அந்த செயல் சுதந்திரமாக இருக்க வாய்ப்பில்லை.

பெண்களைப்பொருத்தவரை சுதந்திரம் என்பது ஆண்களால் மறுக்கப்படுகிறது என்பது உண்மை தான். குறிப்பாக "சுதந்திரம் கொடுக்கிறேன் பேர்வழி" என்ற பெயரில் ஆண்கள் செய்யும் சில செயல்கள் பெரும்பாலும் அவர்களின் உள்நோக்கத்திற்காகவே இருக்கும். உதா. மனைவியை வேலைக்கு அனுப்பி சுதந்திரம் கொடுப்பதாக பெயர் பண்ணும் ஆண், அதனுள் இருக்கும் சம்பாத்தியம் என்ற பொருளாதார உள்நோக்கத்தை எத்தனை பெண்கள் அறிவார்கள்..? ஆணை பொறுத்தவரை பெண்களின் சுதந்திரம் ஆண்களின் சுதந்திரம், தகுதி, திறமை, சந்தோஷம், அந்தஸ்து போன்றவற்றிற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். எப்போதும் பெண்கள் தகுதியில், திறமையில், உழைப்பில், மதிப்பில், அறிவில் ஆண்களுக்கு கீழே தான் என்ற கருத்து பெரும்பாலான ஆண்களிடம் இருக்கத்தான் செய்கிறது. அது ஆண்களால் உருவாக்கப்பட்ட மாயத்தோற்றமே அன்றி வேறில்லை. அதற்கு காலம் காலமாக எல்லா வகையிலும் தன்னை தாழ்த்தி ஆண்களை உயர்த்திய பெண்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது. "என்னை விட சிறந்தவன்" என்று ஒருவர் சொல்வதால் சொன்னவர் முட்டாள் என்றோ அல்லது கேட்டவர் அறிவாளி என்பதோ அர்த்தமாகாது. தன் அறிவை குறைத்து சொல்வதால் எதிர் தரப்பு சந்தோஷமடையும் என்ற கணிப்பு என்பதே உண்மை.

பெண்களுக்கு சுதந்திரம் என்ற பெயரில் தேவையில்லாத சுதந்திரத்தை ஆண்கள் கொடுப்பதும் நடக்கிறது. அது பெண்களை எந்த வகையிலும் முன்னேற்றாது. அது ஆண்களை சந்தோஷமாக வைத்திருக்க ஆண்களால் செய்யப்படும் யுக்தி மட்டுமே..!

பெண்கள் முழு சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் என்று சொல்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி..! ஆண், பெண் இருவரும் சரிசமமாக பங்கு வகிக்க வேண்டிய திருமண ஒப்பந்தத்திற்கு பெண் தரப்பிலிருந்து பெறப்படும் வரதட்சிணையின் நோக்கம் என்ன..? பெண் எந்த வகையில் குறைந்தவள்..? ஒரு விபச்சாரியிடம் சென்றால் கூட அந்த சில மணி நேரங்களுக்காக பெரும் விலை கொடுத்து வரும் ஆண், அன்பையும், இன்பத்தையும், பாசத்தையும் அள்ளி வழங்கி கடைசி வரை கூடவே இருந்து இன்பத்தை கொடுக்கும் பெண்ணாய், வேலைக்காரியாய், சமையல்காரியாய், தோழியாய், தாதியாய் இருக்கும் மனைவி என்ற பெண்ணுக்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகுமா..? பிரசவம் என்பது மறுபிறப்பு என்பது தெரிந்தும் ஒவ்வொரு முறையும் மனம் விரும்பி ஒரு உயிரை பிரசவிக்கும் அந்த தியாகம் ஆண்களுக்கு வருமா..? யாரோ ஒரு சிலர் செய்த இழிவான செயல்களால் பெண்ணினமே களங்கப்பட்டு விடுமா..? என்னைக்கேட்டால் நான் அடுத்த பிறவியில் பெண்ணாக பிறக்க வேண்டும். அது மட்டும் போதாது.! பெண்ணின் பெருமைகள் தெரிந்த ஆண்களுக்கு தாயாக, மகளாக, மனைவியாக ஆக வேண்டும்..!!

பென்ஸ்
18-10-2007, 09:19 AM
பெண்கள் சுதந்திரம் பற்றி ஏன் பேசுகிறீர்கள்.... அவர்கள் என்ன அடிமையா, இல்லை அடக்கியாளபடுபவர்களா????
சுதந்திரமாக இருப்பவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள், சுதந்திரம் கொடுங்கள் என்பது எதற்க்கு????

பெண்கள் சுதந்திரமாக இரவில் வெளியே வரமுடியுமா என்று கேட்கிறீர்கள்... !!!
எங்கள் ஊரில் வருகிறார்கள்... :D
ஆனால் நான் வெளிநாடு செல்லும் போது இரவில் என்னால் இரவில் நியூயார் நகரில் நடக்க முடியவில்லை....:rolleyes:

இதயம்....
நான் அடுத்தவர்களை ஆள நினைக்கும் ஆண்களை நான் மாச்சிஸ்மோ என்பேன்..
மாசிஸ்மோ- எனப்படும் மக்கள் தங்களை சார்ந்தவர்களை மற்றும் சுற்றி இருப்பவர்களை தன் மன, உடல் வலிமையாலும் தலைமை தாங்குவார்கள்...
இவர்களீடம் எல்லா வகை உணர்வுகளும் சரி விகிதத்தில் இருக்கும்..
கண்டிப்பை வெளிபடுத்த கோபப்படுவார்கள் ஒரு இருபுற பயணளிக்கும் உறவை வைத்திருப்பார்கள்...
இவர்கள் ஆண் பெண் பேதமில்லாமல் எவராக இருந்தாலும் தன் கருத்துகளை சமமாக வைப்பார்கள், நிலை நிறுத்துவார்கள்...
மேலும் இது சமுதாயத்தில் எதிர்பார்க்கபட்டது.

வலிமையானது ஆளும்...

காண்டலிசா ரைஸ்... ஏன் ஜெயலலிதாவே எடுத்துகோங்க... எல்லோரும் வலிமையை தான் தலைமையாக எடுத்து கொள்ளுவார்கள் (தன் கருத்து மட்டும், எண்ண வேர்களோடு ஒத்து போகையில்) ... பெண்கள் வரக்கூடாது என்று எல்லா ஆண்களும் நினைத்திருந்தால் நமக்கு ஒரு இந்திராகாந்தியோ, ஜெயலலிதாவோ இருந்திருக்க முடியாது....


எனவே.. "இவ்வுலகம் ஆண்களுக்கானதாய் மாறிப்போய் கிடக்கிறது நெடுங்காலமாய்..!!!" என்ற சிந்தனையை தவிற்க்கலாம் என்பது என் கருத்து....


இதயம்... வரதச்சினை பற்றி நீங்கள் கேட்டதற்க்கான பதில் ஏற்க்கனவே மன்றத்தில் விவாதிக்கபட்டது ... "வரதட்சணைக்கு அடிப்படை காரணமும், அதை (http://tamilmantram.com/vb/showthread.php?t=6184) .." என்ற தலைப்பில் பேசினோம்.. இன்னும் விவாத்க்க விரும்பினால் அங்கே தொடரலாம்....

பூ...
அன்பு குழந்தையே...
நான் உன்னை தவறாக நினைத்ததாக தவறாக நினைத்துவிட்டாயே.... இல்லையம்மா...
உன் கருத்தில் இருந்த வேறுபாட்டை சாடினேன்...
நான் அப்படி செய்தது தவறா... ???
தவறாக தோன்றினால் நான் கேட்க்கலாம்தானே???

சிவா.ஜி
18-10-2007, 09:27 AM
எனவே.. "இவ்வுலகம் ஆண்களுக்கானதாய் மாறிப்போய் கிடக்கிறது நெடுங்காலமாய்..!!!" என்ற சிந்தனையை தவிற்க்கலாம் என்பது என் கருத்து....

இதுவேதான் என் கருத்தும்.பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிலையில் இப்போது அவர்கள் இல்லை.ஆணுக்கு நிகராக அவர்களும் சாதிக்கும் காலம் இது.ஊடகங்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்வதைப் பெரிது படுத்திக் காட்டுகின்றன.சில பெண்கள் அதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு..இந்த ஆண்களே இப்படித்தான் என்று நினைத்துவிடுகிறார்கள்.ஆனால் பூமகள் போன்ற சிந்தித்து முடிவெடுக்கும் பெண்கள் இரு பக்க நியாயத்தையும் சரி வர புரிந்துகொள்கிறார்கள். அதைத்தான் அவரது பதிலும் காட்டுகிறது.ஒரு குடும்பத்திலிருக்கும் பலரும்,பெண்களையும் சேர்த்துதான்...பெண்களை அடக்கி ஆளப்பார்க்கிறார்கள் என்று சொல்கிறார்.பென்ஸ் அவர்களின் அலசல் மிக அருமை.

ஆதவா
06-11-2007, 04:45 AM
கவிதைக்கான விமர்சனம் என்ற நிலைதாண்டி விவாதமாக மாறிவிட்டது பதிவுகள்..


மேலும்,


தன்னைத் தானே சுருக்கி மதிப்பிடும் ஒரு பெண்ணின் கவிதையே இது...


பென்ஸ் சொல்லுவதைப் போல, நீங்களே ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? இருளுக்குள் மூழ்கி இருப்பதைக் காட்டிலும் சிறு பந்தமாவது பற்றி, வானம் பார்க்க சுயபரிசோதனை செய்யவியலாதா?


பெண்கள் நினைத்தால் எதுவும் முடியும்,, இது அடிக்கடி நான் கேட்கும் வசனம். எவ்வளவு தூரம் உண்மை என்பதை இக்கவிதைப் பெண்ணைப் போன்றவர்கள் நிரூபிக்கவேண்டுமன்றோ?


நான் எழுந்தாலும்
விடியவில்லை எனது இரவு...


பெண்ணடிமை என்பதை நீங்கள் இங்கே சுட்டவில்லை எனிலும், பெண் அடிமைபட்டேதான் இருக்கிறாள்.. அதற்கு பல உதாரணங்கள் எம்மால் காட்ட இயலும். ஆனால் அதற்கு சரிநிகர் காரணமும் அதே பெண்தான்...


இறைவனை உங்களோடு ஒப்பிட்டு சொல்லும் நீங்கள், அந்த இறைவனில் பெண்மை உண்டென்பதை ஏன் மறுத்து சொல்கிறீர்கள்... (உனைப் போல ஆணாக பிறக்க..)


வார்த்தைகள் நறுக்கி வைத்து சமைத்த அருமையான குழம்பு, கவிதை
வீணே வசனம் பேசும் எழுத்துக்கள் இல்லாமையே இது தரமான கவிதை என்று சொல்லவைக்கிறது.


கருத்து உடன்பாட்டைக் காட்டிலும் அமைப்பு உடன்பாட்டில் எனக்கு பிடித்தமிருக்கிறது.


கவிதை வார்த்தைகள் அனைத்தும் அருமை.... நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் உங்களின் உயிர் கவிதை இன்னும் வளரவேண்டும் என்பது எனது கோரிக்கை...

இளசு
08-11-2007, 07:28 AM
நீண்ட நாட்களுக்குப்பின் கவீயின் கவிதை.

அதனால் மகிழ்ச்சி..

சுயமதிப்பீடா? இல்லை மற்றவர் பார்வையில் நாம் - என்ற புறமதிப்பீடா?
கவிக்கருவில் பச்சாதாபமும் பரிதவிப்பும் வழிகின்றன..

உடல், மூளை பலத்தால், நிறத்தால், ஆயுத/செல்வ பலத்தால்
ஆண்டாண்டு காலம் மனிதனை மனிதன் ''அடக்கி'' ஆண்ட வரலாறு நமது.

ஏன். நியோண்ட்ரதால் மனித இனத்தையே கொன்றழித்த
சதிகார, கொடூர ஹோமோ சேமியன் இன வாரிசுகள் நாம் அனைவரும்.

உறங்கும் தலைநகர் மீது காட்டெருமையாய் மோதி
வீதிகளில் குருதி ஓடவிட்ட மிருக வரலாறும் நமது..

காடு விட்டு சமூகம் வந்த நாகரீக விலங்கு நாம்.

பேதங்கள் சட்டென கிடைக்காத தேசத்தில்
தொழில், வர்ணம் என சாதி வைத்து அடக்கி வாழும் கேடுகெட்ட வம்சம் நமது.

இந்த மனித வரலாற்றில்
வால்காவில் பெண் தலைமையேற்க -

பின் கர்ப்பம், பிரசவ நலிவு, பிஞ்சைக் காக்கும் பொறுப்பு என
தாய்மை கொஞ்சம் பின்வாங்க...

எங்கோ எப்போதோ ஆண்பால் -
அன்பு, காதல், பாசம், அடக்குமுறை, வன்முறை எல்லாம் கலந்துகட்டி பிரயோகித்து,
பெண் பாலை பின்னழுத்தி வைத்து வெற்றி பெற்று -

அடக்கி ஆளும் வரலாற்றுக்கு ஐம்பது சதம் சாசுவதமாக்கிக்கொண்டது.

சில வீறுகொண்ட மங்கையர் இதைக் கீறி வென்றாலும்
சில நுற்றாண்டுகளாய் ஆண் விலங்கு கொஞ்சம் சாந்தமாகி வந்தாலும்


கவீயின் கவிக்கரு பெரும்பாலான நிஜம்.
(பென்ஸ் போன்ற மனவளப் பெருந்தகைகள் சொற்பமே..)

ஆனாலும் இந்நிலைக்கு
அடக்கிய ஆணுக்கும்
அடங்கிய பெண்ணுக்கும்
ஆளுக்குப் பாதி குற்றப்பொறுப்புண்டு..

படைப்பில் சமமென்றாலும் - உடல்/மனப்
பயன்பாட்டில் வேற்றுமைகள் உண்டென்பதை உணர்ந்து
ஒரு வண்டியின் இரு இன்றியமையாச் சக்கரங்கள் என
பரஸ்பர மரியாதை/புரிந்துணர்வுடன்..

சுதந்தரம்/உரிமை என்ற சொற்கள் தேவையற்றதாய் ஓர் உயர்நிலை வருமா?

ஆணை ஆண் அடக்கும் மிருக நிலை..
வலிவற்றவனை வாய்ப்பு கிடைத்தால் மிதிக்கும் (பூட்ஸ் காலால்) இழிநிலை

இவை மாறும்போது, இதுவும் மாறலாம்.

ஆனால்.... மாறுமா? மாறுவோமா????

ஷீ-நிசி
08-11-2007, 07:55 AM
வாழ்த்துக்கள் கவிதா!

நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் கவிதையை கண்டதில் மிக சந்தோஷம்!

பெண்ணாய் ஏனடா பிறந்தோம் என்று சில கால சூழ்நிலையில் அடிபட்ட ஒரு பெண்ணின் மனக்குமுறல் கவிதா அவர்களின் கவிதை வரிகளில் தெளிவாய் புரிகிறது. நம்மை அந்த எண்ணத்தோடு பயணிக்கவைக்கிறது!

இந்த சமூகம் என்னைப் பொருத்தவரையில் பெண்களுக்கு ஆண்களைப்போல சுதந்திரத்தினை தரவில்லை.. இத்தனை கோடி பெண்களில் ஒரு இந்திராகாந்தி, ஒரு ஜெயலலிதாவை மட்டும் தான் இந்த சமூகம் தந்திருக்கிறது என்கிறபோதே பெண்களின் சுதந்திர சதவிகிதம் எந்த அளவு என்று தெரிகிறது..

பெண்ணிற்கு மட்டும்
கர்ப்பபையை வைத்த இறைவா!
அதை ஆணிற்கும்
வைக்க மறந்ததேனோ!

கரு உண்டாகும் பாக்கியம்,
இருவரில் எவருக்கேனும்
உருவாகலாம்!
ஆண் அவருக்கும் கூட
கருவாகலாம்.... என்று
வைத்திருந்தால்.......

பெண்களின் வலி(மை)யை
ஆண்களும் உணர்ந்திருப்பாரே!