PDA

View Full Version : கதை கதையாம் காரணமாம் - நிறைவுபெற்றது.யவனிகா
10-10-2007, 07:02 PM
ஆஸ்கார் விருது வாங்கியே தீருவேன் என்ற மனைவியை அதிர்ச்சியுடன் பார்த்தார் பட்டாபி.

"கதைக்கெல்லாம் ஆஸ்கார் கொடுக்க மாட்..." பாதியுடன் வாயை மூடிகொண்டு பேஷ்...பேஷ் பிரமாதம் என்றார். வாயை விட்டு அதுக்கு வேற வாங்கிக் கட்டணுமா என்ன?

கதை எழுதறதுன்னு முடிவு பண்ணியாச்சு. நல்ல மேட்டர் வேணுமே? மூளையை கசக்கி, துவைத்து, அலசி, சொட்டு நீலம் போட்டு... யோசித்தாள் கமலா.

இத்தனை நேரம் சொப்பு விளாண்டுட்டிருந்த கமலாவின் கடைக்குட்டி மீனு ஓடி வந்தாள். அம்மா பத்திரிக்கைக்கு எழுதப் போறீயா? எனக்கு கூட நிறையப் பாட்டு தெரியும்... நான் சொல்றேன்... நீ எழுது... நாந்தான் உனக்கு சொல்லிக் குடுத்தேன்னு மட்டும் யார்கிட்டயும் சொல்லப்படாது... சரியா?

"தோ...தோ நாய்க்குட்டி... துள்ளி வா..வா.. நாய்க்குட்டி" என்று ராகம் போட்டு ஆரம்பித்தாள். சனியனே... வந்து வாச்சிருக்கு பாரு எனக்குன்னு... அந்தண்டை போ.. தொப்.. தொப் என்று முதுகில் அடிவாங்கியதில் அழுது கொண்டே அப்பாவிடம் ஓடினாள்.

அவள ஏம்மா அடிக்கற? கதை வேணும்னா எங்கிட்ட கேக்க வேண்டியது தானே.. மேதாவித் தனமா பேசறானே இது கமலாவின் புத்திர சிகாமணி வெங்கி. அம்மா இதப் பாரு... இப்ப ஹாரி பாட்டர் கதைதான் ஹாட் டாபிக். அதையே சாரி பாட்டர்ன்னு மாத்திர வேண்டியது தான்... நம்ம அம்புஜம் பாட்டி தான் சூனியக்கார கிழவி.... மோதிரத்தை அடிச்சுண்டு துடப்பக் கட்டைல ஏறிப் பறந்துண்டே போறா... நம்ம விச்சு தாத்தா ஒட்டடக் குச்சில துரத்திண்டு போறார்... எப்படியிருக்கு ஓப்பனிங்?

ஏண்டா அம்மா இப்பத்தான் மொத கத எழுதறா? எடுத்தவுடனே அபசகுனமா தொடப்பக்கட்டை. வெலக்குமாறுன்னு அச்சு பிச்சுன்னு ஒளரிண்டு... நல்ல தண்ணி சொம்பு.. இல்லை பசுமாடு வராப்ல ஸ்டார்டிங் வெக்கக்கூடாதாடா அம்பி? இது பட்டாபி.

ரெண்டு பேரும் செத்த வாயை மூடறேளா? வீட்ல நா ஒருத்தி இருக்ககேன்றதையே எல்லாரும் மறந்துட்டேளா? இது மூத்த குமாரத்தி வனஜா. அம்மா நோக்கு நான் சொல்ல மாட்டேனா நல்ல கதை? கேளு... நம்ம அம்புஜம் பாட்டி அடிக்கடி சொல்லுவாளே.. தேங்காய் சட்னி அரைக்கறச்ச பொட்டுக்கடலைய சிந்தாம அரைன்னு.. நீதான் வாய்க்கு கொஞ்சம்... கல்லுக்கு மிச்சம்ன்னு அரைப்பியே... அப்படி அரைக்கறச்ச ஒரு பொட்டுக்கடலை கீழே விழுந்துடுத்து... அது அப்படியே உருண்டுட்டு வீடு வீடாப் போயி நீயும் பாட்டியும் போடற சண்டையப் பத்தி கோள் சொல்லுது. அதான் கதை எப்படி இருக்கு?

"நிறுத்து..நிறுத்து... இதே கதையத்தான அந்த சுசித்ரா பொண்ணு குறு மிளகின் கதைன்னு எழுதிச்சு" இது பட்டாபி.

அதாருண்ணா சுசித்ரா எனக்கு தெரியாம? திடுக்கிடுகிறாள் கமலா..

"அதான் கமலு... ரேடியோ மிர்சில வருமே... வெடவெடன்னு... முருங்கக்கா மாதிரி... மூக்கு மட்டும் எடுப்பா இருக்குமே.. அந்தப் பொண்ணுதான் குறுமிளகின் கதைய எழுதிச்சி.. அவார்டு கூட வாங்கிச்சே..", இது பட்டாபி.

.நேக்குக் கூடத் தெரியாம எப்படிதான் இப்படி பொது அறிவு பொங்கித்தோ உங்களுக்கு? அந்தக் கதை வேண்டாண்டி... அப்புறம் காப்பி அடிச்ச கதைன்னு கேஸ் போடுவாள்.. கோர்ட்டு படியேறாத குடும்பம்டி இது.

ஏன்னா! உங்க தங்கை எதித்த ஆத்துக்காரனோட ஓடிப்போனாளே அதைக் கதையா எழுதட்டா?

"அடிச்சண்டாளி.. .குடும்ப மானத்தை பத்திரிக்கை வரைக்கும் கொண்டு போகத் துணிஞ்சிட்டாளே உன் பொண்டாட்டி... ஏண்டியம்மா உன் பொறந்தாத்தில ஓடிப்போகாத கதையா? அதையே எழுதிடியம்மா... ஏம்மா எம்மகளை வெச்சுத்தான் நீ கதை எழுதி... பெரிய்ய்ய்ய்ய கதாசிரியர் ஆகணுமா?".. .இது பட்டாபியின் அம்மா அம்புஜம்.

நீ வேற சும்மாயிரும்மா... அதையெல்லாம் கமலி எழுதமாட்டா? இல்ல கமலு?

"ஆமா அப்படியே எழுதிட்டாலும்..", நொடிக்கிறாள் அம்புஜம் பாட்டி. இத்தனை களேபரத்திற்கிடையில் என்ட்ரி குடுக்கிறார்... பட்டாபியின் தந்தை விச்சு... என்னம்மா மருமகளே கதைதான வேணும்.... முக்கு வீட்டு தமிழ் வாத்தியார் என் ஃபிரண்டு தானே அவன் கிட்ட கேட்டா சொல்லப்போறான்... சொல்லி வாயை மூடவில்லை.

அந்தாளு சாதாரண வாத்தியாரில்லை... லொள்ளு வாத்தியாரு... மடிசார் கட்டிண்டு நான் நடந்து போறச்சே.. மொறைச்சு பாத்திண்டே "போட்டிருக்கும் மடிசார் வேசம் பேஷாப் பொருந்துதே...
எனது பார்வை கழுகுப் பார்வை தெரிஞ்சுக்கோன்னு பாடறான்னா"
கழுகுப் பார்வையாமா... சரியான கொரங்குப் பார்வை... பி.வாசு பையன்னு நெனப்பு... ஏன்னா நான் அவ்வளவு அழகாவா இருக்கேன் மாம்பழ மடிசார் கட்டுல..?

அப்படியில்ல கமலு... உன்னைப் பார்த்தா வாத்தியோட செத்துப்போன எள்ளுப் பாட்டிய பாத்த மாதிரி இருக்காமா... அதனால தான் வாத்தி அப்படிப் பாத்திருக்கார்..

இதை இப்படியே விட்டா சரியாகாதென புரிந்து கொண்ட பட்டாபி...

என்ன கமலு... யோசிச்சு யோசிச்சு கண்ணுக்குக் கீழே கருவளையமே போட்டிடுத்து போ... எளம் வெள்ள்ரிக்கா நறுக்கி வெச்சிருக்கேன்... அதை கண்ணில வெச்சிட்டு தூங்கினா கனவில நல்ல கதையா தோணும்... என்று எஸ்ஸாகிறார்.

மறுநாள் காலை... பயத்துடன் எழுந்து வருகிறார் பட்டாபி.

எண்ணன்ணா... எழுந்துட்டேளா? சூடா உங்க கையால காப்பி போட்டுண்டு வாங்க...

காப்பியுடன் வரும் பட்டாபி... என்னடா செல்லம்... ஏதாவது கதை கிடைச்சுதா?

கதையா...?அதெல்லாம் வேலையில்லா பொம்மனாட்டி பண்ற வேலைன்னா... எனக்கு மணி, மணியா புள்ளைங்க இருக்கு... கண்ணுக்கு நெறைவா நீங்க இருக்கேள்... உங்களையெல்லாம் கவனிக்கறத விட்டுட்டு கதை,கத்திரிக்காய்ன்னு டயத்த வேஸ்ட் பண்ணச் சொல்றேளா?பேப்பர் செலவு, போஸ்டல் செலவுன்னு ஆம்படையான் சம்பாதிக்கறத விசிறி அடிக்கற பொம்மனாட்டி நான் இல்ல...

எதிர் பாராத திடீர் திருப்பத்தால அதிர்ந்து நிற்கிறார் பட்டாபி

ஆனான்னா... பெரிசா இல்லன்னாலும் இந்த வைரமுத்து, பா.விஜய் அளவுக்கு கவித என்னால எழுத முயும்னு நெனைக்கிறேன்.... கவிதைல ஒரு அட்வான்டேஜ் இருக்குண்ணா... பக்கம் பக்கமா எழுத வேண்டியது இல்லை.. நாலு வரி யாருக்கும் புரியாத மாதிரி எழுதினாப் போறும்... பக்கத்துக்கு நாலு லைன்... நாப்பது பக்கம்... புஸ்தகமே போட்டுரலாம்.... அதாண்னா ஃபேஷனே.... மூச்சு விடாமல் தொடர்கிறாள்.

அதிர்ச்சி தாங்காமல் மயக்கம் போட்டு விழுகிறார் பட்டாபி

(முற்றும்)

பூமகள்
10-10-2007, 07:35 PM
பேஸ் பேஸ் மாமி....
கதை கவிதை..... ஆகப்போறது...
ஆனா.. கமலா மாமி முற்றும் போட்டு முடிச்சிட்டேளே??
எங்களாத்து மக்களெல்லாம் அழுத்திட்டு வரா மாமி....!!
செத்த இருங்கோ... நீங்க அடுத்த கதையில வருவீங்கன்னு சொல்லி ஒரு அறிக்கை விட்டுடுங்கோ மாமி..
பாவம்.. பச்ச பிள்ளக.... ஏங்க வச்சிராதீங்கோ....

அற்புதமான சிறுகதை...!!
முடிவு அழகாய் இருக்கிறது யவனி அக்கா.
தொடராக்கியிருக்கலாம் என்பது என் ஆதங்கம்.

தொடர்ந்து அசத்துங்க யவனி அக்கா.

அன்புரசிகன்
10-10-2007, 07:45 PM
அடக்கடவுளே... கவிஞர்களுக்கு ஆப்பா????

பாராட்டுக்கள் யவனிகா.

மலர்
10-10-2007, 08:06 PM
ம்......மாமி கூட கவிதை எழுத ஆரம்பிட்டாளா....
பேஷ் பேஷ்...
வாழ்த்துக்கள் யவனி அக்கா....

நுரையீரல்
11-10-2007, 03:23 AM
எல்லாரும் மாமிக்கே சப்போர்ட் பண்றேளே....... பட்டாபி மாமா நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாத்தேளா......

ஜெயாஸ்தா
11-10-2007, 06:42 AM
மாமி கவிதை எழுதப் போறாங்களா....? மன்றத்துக் கவிஞர்களே ஓடுங்கள்...!

யவனிகா
11-10-2007, 07:00 AM
நான் எழுத ஆரம்பிக்கறக்கு முன்னமே இத்தனை ரசிக சிகோண்மணிகளா நேக்கு...நேக்கு கையும் ஓடல..காலும் ஓடல...சீக்கிரமே புஸ்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பேன்...நம்ம அறிஞர் அய்யா தலமைல...மறுக்காம வரணும்,அறு சுவை அரசர் நடராசன் தவலை வடையும்...ரவா கேசரியும் போடப் போறார்...கண்டிப்பா வந்திடுவேள் தான...

அன்புரசிகன்
11-10-2007, 07:06 AM
நான் எழுத ஆரம்பிக்கறக்கு முன்னமே இத்தனை ரசிக சிகோண்மணிகளா நேக்கு...நேக்கு கையும் ஓடல..காலும் ஓடல...சீக்கிரமே புஸ்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பேன்...நம்ம அறிஞர் அய்யா தலமைல...மறுக்காம வரணும்,அறு சுவை அரசர் நடராசன் தவலை வடையும்...ரவா கேசரியும் போடப் போறார்...கண்டிப்பா வந்திடுவேள் தான...

அதுக்காகவாவது வரவேண்டும்.

ஆனால் மலரிடம் மட்டும் அல்வா கிண்டுவதற்காக பணம் கொடுத்துவிடாதீர்கள். பின்னர் எமது வயிற்றை நாம் கிண்ட வேண்டி வரும்....

அமரன்
11-10-2007, 07:17 AM
அட சட்டென்று முடிஞ்சிருச்சே என்று சலிக்க வைத்துவிட்டீர்கள் யவனிகா. அறுசுவை நடராஜன் சுவையை ருசித்துக்கொண்டிருக்கும்போது பாதியில் முடிந்து வயிற்று எரிச்சலைக்கிளப்புமே அந்த மாதிரியான சலிப்பு இது..
கதையை விட கவிதை எழுதுவது சுலபமானதுதான். அது எழுதுபவருக்கு. படிப்பவருக்கு. அதுவும் கமலா மாமி கவிதைகளை படித்துக்காட்டி வெள்ளோட்டம் பார்ப்பது எங்கே? குடும்பத்தில்தானே...பலருக்கு தூக்கம் கெட்டு பித்துப்பிடித்து அலையப்போகிறார்கள்..அதிலும் குட்டி போட்ட பூனைபோல வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி வரும் திருவாளர் பட்டாபியின் நிலைமை சொல்லத்தேவையில்லை...பல்சுவைக்கதையை நல்ல பதத்துடன் தந்த உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

யவனிகா
11-10-2007, 07:43 AM
அட சட்டென்று முடிஞ்சிருச்சே என்று சலிக்க வைத்துவிட்டீர்கள் யவனிகா

முடியக் கூடிய பந்தமா நேக்கு...மன்றத்து கூட...மன்றம் எனக்கு பொறந்த ஆம் போல அமரு அம்பி...எப்ப வேணா பொறப்ப்டு வருவேன்...பழக்க தோசத்துல இந்த பூமலரு கோழிய அடிச்சு கொழம்பு வெச்சுடப் போறா..நல்ல வத்தக் குழம்பும், சுட்ட அப்ளாமும் சமைச்சா இப்பவே வருவா கமலா மாமி...

மலர்
11-10-2007, 07:57 AM
ஆனால் மலரிடம் மட்டும் அல்வா கிண்டுவதற்காக பணம் கொடுத்துவிடாதீர்கள். பின்னர் எமது வயிற்றை நாம் கிண்ட வேண்டி வரும்....

ஆமாம் பின்ன வாயை திறக்கவே மாட்டீர்கள்....

அன்புரசிகன்
11-10-2007, 08:08 AM
ஆமாம் பின்ன வாயை திறக்கவே மாட்டீர்கள்....

இப்பமட்டும் முடியுதாக்கும்...

அமரன்
11-10-2007, 08:13 AM
இப்பமட்டும் முடியுதாக்கும்...
அது அல்வா...
இது அருவா

பூமகள்
11-10-2007, 09:00 AM
எல்லாரும் மாமிக்கே சப்போர்ட் பண்றேளே....... பட்டாபி மாமா நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாத்தேளா......
கவல பாடாதீங்கோ..பட்டாபி மாமா...... தங்கைச்சி நா இருக்கச்சே... உங்கள மாமி என்ன பண்ணிட முடியும்....??

சிவா.ஜி
11-10-2007, 12:30 PM
கமலா மாமி பேஷ் பேஷ்...கதைன்னா இதுன்னா கதை....அசத்திட்டேள் போங்கோ....

நுரையீரல்
12-10-2007, 02:18 AM
எல்லாரும் மாமிக்கே சப்போர்ட் பண்றேளே....... பட்டாபி மாமா நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாத்தேளா......கவல பாடாதீங்கோ..பட்டாபி மாமா...... தங்கைச்சி நா இருக்கச்சே... உங்கள மாமி என்ன பண்ணிட முடியும்....??

இதுவல்லவோ பாசம் தங்கச்சி!
உன் பாசத்த நெனக்கரச்சே எனக்கு அழுக:traurig001: அழுகையா:traurig001: வருது, எங்க நான் அழுது:traurig001:, அந்த சோகம் தாங்க முடியாம நீயும் அழுதிடுவியோனு:traurig001: நெனகரச்சே, வர்ற அழுக கூட நின்னு போயிடுத்து.

பூமகள்
12-10-2007, 05:02 PM
இதுவல்லவோ பாசம் தங்கச்சி!
உன் பாசத்த நெனக்கரச்சே எனக்கு அழுக:traurig001: அழுகையா:traurig001: வருது, எங்க நான் அழுது:traurig001:, அந்த சோகம் தாங்க முடியாம நீயும் அழுதிடுவியோனு:traurig001: நெனகரச்சே, வர்ற அழுக கூட நின்னு போயிடுத்து.
பட்டாபி அண்ணா........
உச்சி குளுந்து போச்சு நேக்கு நீங்க பேசறத கேட்கச்சே..!!
நன்னா தீர்காயுசா இருங்கோ அண்ணா..
பகவான் உங்கள கைவிட மாட்டார்......!!

யவனிகா
13-10-2007, 02:02 PM
பட்டாபி அண்ணா........
உச்சி குளுந்து போச்சு நேக்கு நீங்க பேசறத கேட்கச்சே..!!
நன்னா தீர்காயுசா இருங்கோ அண்ணா..
பகவான் உங்கள கைவிட மாட்டார்......!!

ஏண்ணா, இது யாரு புது பாச மலரூ...ஓடிப்போன உங்க தங்கை கூட உங்க மேல இத்தனை பாசமா இல்லயேண்ணா...இந்தப் பொண்ணு யாரு பட படன்னு பட்டாசு மாதிரி பேசிக்கிட்டு... வக்கீலாத்து மாமி அவ பிள்ளையாண்டாணுக்கு நல்ல பொண்ணிருந்தா சொல்லுன்னு சொன்னா...இந்தப் பொண்ண கேட்டுப் பாக்கலாமா?

பையன் பத்தரை மாத்துத் தங்கம்னா...அப்படியே உருக்கி காதில கைல மாட்டிக்கலாம்...கோடு கிழிச்சு அந்தண்டை இந்தண்டை போகப்படாதுன்னு சொன்னா அவசர ஆத்தரத்துக்கு கொல்லைப் பக்கம் கூட போகாம அப்படியே நிப்பானாம்...என்ன வக்கீலாத்து மாமிக்குத் தான் வாயி அதிகம்...இந்தப் பூவு அங்க போனா கோந்து போட்டு மாமி வாயை ஒட்டிட மாட்டாளா...அதனால கேக்கிறேன்...கேட்டுச் சொல்லறேளா..சட்டுனு பேசி முடிச்சா தீபாவளியா தல தீபாவளியா கொண்டாடிடலாம்...நமக்கு பட்சணம் வாங்கிற செலவு இல்லை பாருங்கோ..

lolluvathiyar
13-10-2007, 02:42 PM
அருமையான கதை, முதல் பாகம் படித்தவுடன் மன்றம் கிடைக்கததால் 2 நாள் கழித்து தான் இந்த 2 ஆம் பாகம் படிக்க முடிந்தது.
ஆமா அது ஏனுங்க கடைசியில் என்னை (அப்பாவி லொள்ளுவாத்தியார் ) வம்பிழுக்கிறீர்கள். இருங்க இருங்க லொள்ளபுரி வரலாற்றில் வச்சுகிறேன்

ஜெயாஸ்தா
13-10-2007, 02:51 PM
இருங்க இருங்க லொள்ளபுரி வரலாற்றில் வச்சுகிறேன்

வாத்தியாரே இதில் வில்லங்கம் ஒன்றுமில்லையே....?

அக்னி
16-10-2007, 10:33 PM
கதை எழுத முற்பட்டதையே ஒரு கதையாக எழுதிவிட்டீர்கள்...
இந்தக்கதையிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால்,
முழுமையான உரையாடலே, காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கவரும் நகைச்சுவை கலந்த வரிகள், கதையில் எம்மை மகிழ்வாய் நகர்த்துகின்றது...
பாராட்டுக்கள் யவனிகா அவர்களே...
மேலும் மேலும் எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள் உங்கள் படைப்புக்களை...

யவனிகா
17-10-2007, 08:58 AM
நன்றிகள் அக்கினியாரே...உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊக்கம் அளிக்கிறது. குழந்தை நடை பயில்வது போலவே என் எழுத்துக்கள்..தடுக்கி விழுந்தாலும் பதறி ஓடி வந்து கைபிடித்து தூக்கி விடும் மன்ற உறவுகளின் முன்னிலையில் நடை பயில்வதே சுகம் தான்.

நேசம்
21-10-2007, 10:26 AM
நாயகி கமலா − கதையிலிருந்து கவிதை
நிங்க கவிதையிலிருந்து கதையா. சூப்பர் அதுவும் உரையாடல்தான் இந்த கதையின் ஹைலைட்− வாழ்த்துக்கள் யவனிக்கா

யவனிகா
21-10-2007, 04:25 PM
நாயகி கமலா − கதையிலிருந்து கவிதை
நிங்க கவிதையிலிருந்து கதையா.


என்னங்க நேசம் மறைபொருள் வெச்சு வாரி விடறீங்க போல...கமலா அளவுக்கா நான் மோசமா போயிட்டேன்?

பூமகள்
21-10-2007, 04:42 PM
ஏண்ணா, இது யாரு புது பாச மலரூ...ஓடிப்போன உங்க தங்கை கூட உங்க மேல இத்தனை பாசமா இல்லயேண்ணா...இந்தப் பொண்ணு யாரு பட படன்னு பட்டாசு மாதிரி பேசிக்கிட்டு... வக்கீலாத்து மாமி அவ பிள்ளையாண்டாணுக்கு நல்ல பொண்ணிருந்தா சொல்லுன்னு சொன்னா...இந்தப் பொண்ண கேட்டுப் பாக்கலாமா?
பையன் பத்தரை மாத்துத் தங்கம்னா...அப்படியே உருக்கி காதில கைல மாட்டிக்கலாம்...கோடு கிழிச்சு அந்தண்டை இந்தண்டை போகப்படாதுன்னு சொன்னா அவசர ஆத்தரத்துக்கு கொல்லைப் பக்கம் கூட போகாம அப்படியே நிப்பானாம்...என்ன வக்கீலாத்து மாமிக்குத் தான் வாயி அதிகம்...இந்தப் பூவு அங்க போனா கோந்து போட்டு மாமி வாயை ஒட்டிட மாட்டாளா...அதனால கேக்கிறேன்...கேட்டுச் சொல்லறேளா..சட்டுனு பேசி முடிச்சா தீபாவளியா தல தீபாவளியா கொண்டாடிடலாம்...நமக்கு பட்சணம் வாங்கிற செலவு இல்லை பாருங்கோ..
ஆஹா...மாமி..... பிள்ளையாண்டா வீட்டுல பேசிடேளா??? எங்க ஆத்துல வந்து செத்த விசயத்தை போட்டு வையுங்கோ......!! என் புக்காத்து மாமி வாயை ஒட்டுப்புடறேன் கமலா மாமி.... கவலைய விடுங்கோ... மைதா மா கரைச்சி கோந்து எல்லாம் தயார்பண்ணிட்டேன்...!! :icon_b:
(பகவான் கிருபையால் எல்லாம் நன்னா நடந்தா சரி தான் மாமி....!!)

நேசம்
21-10-2007, 06:46 PM
என்னங்க நேசம் மறைபொருள் வெச்சு வாரி விடறீங்க போல...கமலா அளவுக்கா நான் மோசமா போயிட்டேன்?


அப்ப*டியில்லை. இர*ண்டையும் ஓப்பிட்டு எழுத*னும் தோன்றிய*து.நாய*கி க*ம*லா எழுத*வும் இல்லை.எழுத*வும் போற*தில்லை. ஆனால் நிங்க*ள் ...

ஆதவா
06-11-2007, 06:33 AM
வெறும் டயலாக்கிலேயே செல்லும் கதை... தொய்வு சிறிதும் இன்றி... படு எதார்த்தமான குடும்பப் பாங்கில், சொன்ன விதத்தில்..... அடடா... பேஷ் பேஷ்.... ரொம்ப நன்னாருக்கு..

ஜாலியாக செல்லுகிற ரயிலை திடீரென கவிழ்த்துவிட்டது போல இருக்கிறது இறுதியில் நீங்கள் இட்டிருக்கும் "முற்றும்"

கதையில் பெரும்பாலும் வீட்டு வர்ணனைகள், அல்லது பலவித வர்ணனைகள் இருக்கும். அந்த கதையோடு நாம் ஒன்றி அந்த இடத்தை கற்பனை செய்து கொள்ள ஏதுவாக கதாசிரியர்கள் மேற்கொள்ளும் உத்தி... இந்த கதையில் அப்படியில்லை எனினும் அந்த இடத்தை என்னால் கற்பனை செய்துகொள்ள முடிகிறது.. இது திறமையான கதை என்பதை சொல்லாமல் சொல்லுகிறது....

துளியும் இடறில்லா அய்யராத்து வசனம்... மாமியின் உருவம் இன்னும் கண்களைவிட்டு நீங்காமல் இருக்கிறது,... பாக்கியம் ராமசாமி கதைகளில் இவ்வகை நடையைக் கண்டிருக்கீறேன்.. அதற்கும் மேலாக ரீச் ஆகியிருக்கிறது உங்கள் நடை.

வாழ்த்துகள்.

யவனிகா
06-11-2007, 08:35 AM
நன்றி ஆதவரே...முற்றும் போட்டது எப்போது வேண்டுமானலும் முற்றுப் பெற்று மீண்டும் முளைக்கலாம்....பின்னூட்டத்திற்கு நன்றி.