PDA

View Full Version : மூச்சே என் முயற்சி...!



யாழ்_அகத்தியன்
09-10-2007, 01:58 PM
உயிர்கள் அற்ற உடல்களோடு
உறங்கி இருக்கிறேன்

பிணங்கள் எரியும் வெளிச்சத்தில்
நிலாரொட்டி உண்டிருக்கிறேன்

குண்டு மழைக்குள்ளும் குடையோடு
இடம்பெயர்ந்திருக்கிறேன்

அசைக்கமுடியாத
ஆணிவேரின் உச்சியிலிருந்து
சுனாமியால் தப்பியிருக்கிறேன்

இருபத்தி நான்கு மாதங்கள்
இருட்டறையில் சிவராத்திரி
மேளமாய் அடிவாங்கியிருக்கிறேன்

பெயர் தெரியாத பனிமலை தேசத்தில்
பிணமாய் உருண்டிருக்கிறேன்

கைப்பாசை உதவியோடு ஐந்துநாள்
பட்டினியை பிச்சை எடுத்து
முடித்திருக்கிறேன்

விழுந்தால் மீனுக்கு நான்
பாய்ந்தால் எனக்கு நான்
தெரிந்தும் கப்பல்விட்டு
கப்பல் பாய்ந்திருக்கிறேன்

ஆனால்.....
என்னை மூச்சுவிட்டுக் கொண்டே
முயற்சிக்காமல் இருக்கச் சொன்னால்

மூச்சு விட்டுக் கொண்டே
இறந்துபோவேன் நான்.


-யாழ்_அகத்தியன்

சிவா.ஜி
09-10-2007, 02:16 PM
போராட்டங்களின் வலியை..வேதனையோடு உணர்த்துகிறது கவிதை.இத்தனைக் கொடுமைக்குப் பிறகும் முயற்சி விடாத அந்த போராட்டக்குணம்.....சிலிர்க்கவைக்கிறது. நாளை நல்லது நடக்குமென்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள் யாழ்-அகத்தியன்

ஜெயாஸ்தா
09-10-2007, 02:22 PM
கரையில் மோதி மோதி சற்றும் சலிக்காத அலை போல, சுற்றும் சுற்றல் நிற்காத பூமி போல, காலைச்சூரியன், மாலைச்சந்திரன் போல, மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்கிறீர்கள். முயற்சிக்கு பரிசாக தோல்விகள் நம்மை முத்தமிட்டாலும் மீண்டும் மீண்டும் முயல வேண்டும என்பதை கவிதை நமக்கு அறிவுறுத்துகிறது. (அப்பாட காதல் கவிதையை விட்டு சற்றே கரையேறியிருக்கிறீர்கள்...!)

யாழ்_அகத்தியன்
09-10-2007, 03:09 PM
வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்

காதல் கவி எழுத
கைசேர்ந்த பேனாவை
சமுதாயத்துக்காய் எழுத
வைக்க பெரும் பாடு படுகிறேன்

இப்போதுதான் காதல்தவிர்ந்து
கவி எழுத முயற்சி செய்கிறேன்
முடிந்தவரை தவறு இருந்தால்
மன்னிக்கவும்

( நான் கவிஞனல்ல கிறுக்கன் என்பதே உண்மை)

சூரியன்
09-10-2007, 04:06 PM
முயற்சியை பற்றி அழகாக எடுத்துரைத்திருக்கின்றீர்.
வாழ்த்துக்கள் நண்பரே,தொடர்ந்து கவி படையுங்கள்.

rocky
11-10-2007, 03:36 PM
உயிர்கள் அற்ற உடல்களோடு
உறங்கி இருக்கிறேன்
பிணங்கள் எரியும் வெளிச்சத்தில்
நிலாரொட்டி உண்டிருக்கிறேன்
குண்டு மழைக்குள்ளும் குடையோடு
இடம்பெயர்ந்திருக்கிறேன்
அசைக்கமுடியாத
ஆணிவேரின் உச்சியிலிருந்து
சுனாமியால் தப்பியிருக்கிறேன்
இருபத்தி நான்கு மாதங்கள்
இருட்டறையில் சிவராத்திரி
மேளமாய் அடிவாங்கியிருக்கிறேன்
பெயர் தெரியாத பனிமலை தேசத்தில்
பிணமாய் உருண்டிருக்கிறேன்
கைப்பாசை உதவியோடு ஐந்துநாள்
பட்டினியை பிச்சை எடுத்து
முடித்திருக்கிறேன்
விழுந்தால் மீனுக்கு நான்
பாய்ந்தால் எனக்கு நான்
தெரிந்தும் கப்பல்விட்டு
கப்பல் பாய்ந்திருக்கிறேன்
ஆனால்.....
என்னை மூச்சுவிட்டுக் கொண்டே
முயற்சிக்காமல் இருக்கச் சொன்னால்
மூச்சு விட்டுக் கொண்டே
இறந்துபோவேன் நான்.
-யாழ்_அகத்தியன்


அன்புள்ள நன்பர் அகத்தியனுக்கு, கவிதை மிகவும் அருமை.கற்பனைக் கவிதைகளில் என்றுமே கிடைக்காத உணர்வுகள் அனுபவக் கவிதைகளில் வெளிப்படும். அந்த வகையில் உங்களின் இந்த கவிதை நீங்கள் அனுபவித்த துயரத்தையும் உங்களின் உறுதியையும் எங்களுக்கு மிக நன்றாகவே உணர்த்துகிறது. வாழ்வில் மிகச் சிறிய தோல்விகளுக்கும் ஏமாற்றங்களுக்குமே கூட மனமுடைந்து போகும்
மனிதர்களுக்கு மத்தியில் இந்த தைரியம் பாராட்டத்தக்கது மட்டுமல்ல கற்றுக்கொள்ளப்படவேண்டியதும்தான். வாழ்க்கைப் புத்தகத்தின் ஒரு பக்கமான காதல் தோல்விக்காகவே உயிரை விடுவோர்களுக்கும் பள்ளிப் பரிட்சையில் தோற்றதற்க்காக துவண்டு விடுவோரையுமே எங்களூரில் அதிகம் கண்டிருக்கிரோம். உங்களின் தைரியம் அவர்களுக்கு பாடமாகும். ஒருவேளை இந்த தைரியம் உங்களின் சூழ்நிலைகளால்
வந்திருக்களாம். எதுவாயினும் உங்களின் முயற்சியையும் தைரியத்தையும் கைவிடாதீர்கள். நிச்சயம் அந்த சூழல் மாறும் நாள் வரும். ஆடையில்லா மனிதன் கூட அரை மனிதனாகலாம் ஆனால் முயற்சி செய்யாதவன் மனிதனே இல்லை என்றே சொல்லிவிடலாம். முயற்சி செய்யாமல் மூச்சு விடுவதை விட முயற்சி செய்துகொண்டே மூச்சை விடுவது மேல். மீண்டும் ஒரு முறை கூறிவிடுகிறேன் கவிதை மிகவும் அருமை நண்பரே.

யாழ்_அகத்தியன்
11-10-2007, 03:39 PM
உங்க வாழ்த்துக்கும்,கருத்துக்கும்
மிக்க நன்றிகள் தொடர்ந்தும் படியுங்கள்

ஓவியன்
12-10-2007, 05:13 AM
விழுந்தால் மீனுக்கு நான்
பாய்ந்தால் எனக்கு நான்
தெரிந்தும் கப்பல்விட்டு
கப்பல் பாய்ந்திருக்கிறேன்

என்னே வரிகள், வரிகளிலே வலிகள்....
ஒரு தேர்ந்த கவிஞனாலே கூட இவ்வளவு தேர்ந்த வரிகளைத் தேர்ந்தெடுக்க இயலாது, இங்கே தேற வைத்திருப்பது உங்கள் தேர்ந்த அனுபவம். அனுபவத்தை விட தேர்ந்த ஆசான் வேறென்ன இருக்க முடியும்.

பாராட்டுக்கள் அகத்தியன், முத்தாய்ய்ப்பான முடிவு அப்படியே கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது.

அமரன்
12-10-2007, 08:28 AM
ஒரு போராளியின் பதிவேடு..

அவன் பயணப்பாதையில்
இடறிய தடைகளுக்கும்
பட்ட இடர்களுக்கும்
தடயமாக இருக்கும் பதிவேடு..

வேதனை வரிகளைக்கொண்ட
சோதனைக்காலப் பேழை...

இதயம் துடிக்கும் வரை
சாதனை செய்யத்துடிக்கும்
ஒருவனின் சாசனம்....

ஆனாலும் இவன்
ஆயுதம் தாங்கியவனல்ல...

குடும்பத்தை தாங்க
இன்னல்களைத் தாங்கி
தேசம் தாண்டிய போராளி..

இந்தப்பயணம்
தொடர்ந்துகொண்டு இருப்பது
வேதனையின் உச்சம்.

அன்பரே!
கவிக்கு வாழ்த்து சொல்லமுடியாது
உம்முடன் பகிர்ந்துகொள்கிறேன்...

சாம்பவி
12-10-2007, 10:20 AM
வீரியமிக்க வரிகள்.... !
முயற்சிக்கும் எவருக்கும்
வெற்றி அது
முடிவில் சிக்கும்.. !

யாழ்_அகத்தியன்
12-10-2007, 10:39 AM
உங்கள் வாழ்த்துக்களை படிக்கும்போது
என்னை மீறி சந்தோச படுகிறேன்

உங்க வாழ்த்துக்கும்,கருத்துக்கும்
மிக்க நன்றிகள் தொடர்ந்தும் படியுங்கள்

அக்னி
12-10-2007, 11:59 AM
உயிர் போக்கும் அபாயங்களுடன்,
உயிர் வாழப் போராட்டம்...

வலிகளின் உச்சம், வரிகளில்...
தொடருங்கள் யாழ்_அகத்தியன் அவர்களே...