PDA

View Full Version : காதல் குளிர் - 3



gragavan
08-10-2007, 08:00 PM
காதல் குளிர் - 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12435)

"ஒன்ன மாதிரி பொண்ணுதான்" ப்ரகாஷா யோசிக்கவேயில்லை.

"என்னது...என்ன மாதிரி பொண்ணா?" சின்னதாய் ஒரு மகிழ்ச்சி மழை ரம்யாவுக்குள். ஆனால் மண்டு அதை ஒழுங்காகப் புரிந்து கொள்ளவில்லை.

"என்ன மாதிரிப் பொண்ணா....ம்ம்ம்ம்ம்....என்னையே ஒன்னால சமாளிக்க முடியலை...இதுல என்ன மாதிரி வேற....ஆனா இன்னொரு கண்டிஷனை மறந்துட்டியே."

"என்ன கண்டிஷன்?" ப்ரகாஷாவிற்கு எதையாவது விட்டு விட்டோமா என்று திடீர்ச் சந்தேகம்.

"ஆமா. பொண்ணு பெரிய எடத்துப் பொண்ணா இருக்கனும். பொண்ணு கவுடா பொண்ணா இருக்கனும். அப்பத்தான ஒன்னோட ஸ்டேடசுக்குப் பொருத்தமா இருக்கும். இல்லைன்னா ஒங்கப்பாம்மா ஒத்துக்குவாங்களா? கனக்புராவச் சுத்தி இருக்குற நெலமெல்லாம் ஒங்களோடதானே. நீ வேலைக்கு வந்ததே ஒங்கப்பாவுக்குப் பிடிக்கலை. ஒன்னோட தொந்தரவு தாங்காமத்தான் ஒரு நாலஞ்சு வருசத்துக்கு வேலையப் பாருன்னு விட்டு வச்சிருக்காரு. போதாததுக்கு நீ இங்க வேலைக்கு வந்ததுமே டொம்லூர்ல வீடு. ஆபீஸ் போக வரக் காரு. அப்படியிருக்குறப்போ பொண்ணும் நல்லா வசதியா இருந்தாத்தான வீட்டுல ஒத்துக்குவாங்க."

ரம்யா கேட்ட கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. சந்திர கவுடாவின் செல்வாக்கு கனக்புரா வட்டாரத்தில் மிகப் பிரபலம். நல்ல நிலம் நீச்சு விவசாயம் பணம். ஊர்க்கட்டுமானம்.....சங்கம்..இத்யாதி இத்யாதி...வீட்டிற்கு கடைசிப் பிள்ளையான ப்ரகாஷா படித்ததில் அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இருக்கின்ற நிலத்தையும் பண்ணைகளையும் சொத்துகளையும் பார்த்துக் கொள்ளாமல் வேலைக்குப் போக வேண்டும் என்று விரும்பிய பொழுது கனக்புராவையே ஆத்திரத்தில் குலுக்கி விட்டார். வேறு வழியில்லாமல் நான்கைந்து வருடங்கள் கெடு குடுத்து அனுப்பி வைத்தார். திருமணம் முடிவானதும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கனக்புரா வந்து விட வேண்டும் என்பதும் அவருக்கும் ப்ரகாஷாவின் அண்ணன் சுரேஷாவிற்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதும் அவர் கட்டளை. இது ப்ரகாஷாவிற்கும் தெரிந்ததுதான். ஆனால் அவனுக்கு ஊரில் உட்காரவும் விருப்பமில்லை. வேலை செய்ய வேண்டும். தானாக வீடு வாசல் வாங்க வேண்டும் என்று விரும்புகிறவன். நாலு இடங்களுக்குப் போக வேண்டும். நிறைய பேரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசையோடு இருப்பவனைக் கனக்புராவிற்குள் கட்டிப் போடலாமா? நமக்குத் தெரிகிறது. சந்திரகவுடாவுக்குத் தெரியலையே.

"என்னடா யோசனைக்குள்ள போயிட்ட. நான் சொன்ன கண்டிஷன் சரிதானே." பொய்ப் பெருமிதம் பொங்க அவனைப் பார்த்தாள். பார்த்ததும் முகம் மாறினாள்.

"டேய்...சாரிடா. I didnt mean to hurt you. நீ அதுக்காக இப்படியெல்லாம் வருத்தப் படாத. உன்னைய இப்பிடிப் பாக்கவே எனக்குப் பிடிக்கலை."

ப்ரகாஷா சகஜமாக இருப்பது போல காட்டிக் கொண்டான். "ஹே முட்டாளா....சும்மா யோசனே. You didnt hurt me. மொதல்ல சாப்டு."

டெல்லியில் விமானம் தரையிறங்கும் போது குளிராக இருப்பதாக அறிவித்தார்கள். இருவரும் குளிரை அனுபவித்தபடியே வெளியே வந்தார்கள். சப்யா ஏற்பாடு செய்திருந்த டாக்சிச் சக்கரங்கள் நொய்டாவை நோக்கிச் சுற்றின. பின் சீட்டில் ப்ரகாஷாவின் தோளில் சாய்ந்தபடி தூங்கி விட்டாள் ரம்யா. எப்படித்தான் தூங்கினாளோ? இவனால்தான் தூங்க முடியவில்லை. பின்னே...காதலிக்கும் பெண்...தோளில் சாய்ந்து நிம்மதியாகத் தூங்குகிறாள். இவனுடைய மனம் மட்டும் தூங்கவில்லையே. அவள் சாய்ந்திருப்பது அவன் தோள் என்பதால்தான் அவள் நிம்மதியாகப் பாதுகாப்பாகத் தூங்குகிறாள் என்பது அவளுக்கும் புரியவில்லை. அவனுக்கும் புரியவில்லை. மண்டு + மண்டு...இவர்களுக்குக் காதல்தான் குறைச்சல். ரம்யாவின் கதகதப்பு டெல்லிக் குளிரை விரட்டி விட்டுக் காதல் குளிரை மூட்டியது. சப்யா சித்ரா வீடு வரும்வரையிலும் என்னென்னவோ நினைத்து நினைத்துத் தவித்தான்.

"ஏஏஏஏஏஏஏஏ கழுத...." வீட்டிற்குள் நுழைந்த ரம்யாவைகச் சித்ரா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். "பார்த்து எவ்ளோ நாளாச்சு. ஆராமாயிருக்கியா(நல்லாருக்கியா)?" ப்ரகாஷாவைப் பார்த்து "பாரோ...ஆராமா?" என்றும் கேட்டாள்.

ரம்யாவிற்கு சித்ராவைப் பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவளோடு துள்ளித் துள்ளி பெங்களூரையே கதிகலக்கிய சித்ரா இப்பொழுது பார்ப்பதற்கே வேறு மாதிரி இருந்தாள். "நீ வெயிட் போட்டிருக்கடீ." முதல்முதலாக தன்னுடைய தோழியை ஒரு அம்மாவாகப் பார்க்கிறாள் அல்லவா.

ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு அந்த இடத்தில் ஆனந்தச் சூறாவளி வீசியது. அந்தப் புயலில் நான்கு பெரிய திமிங்கிலங்கள் விளையாடின. பெங்களூரில் இருந்து சப்யாவுக்கும் சித்ராவுக்கும் அவர்கள் குழந்தை ஃபெராமியருக்கும் (Faramir) வாங்கி வந்த உடைகளையும் பரிசுகளையும் கடை விரித்தனர். என்ன பெயர் என்று பார்க்கின்றீர்களா? சப்யாவும் சித்ராவும் Lord of the Rings என்ற புத்தகத்தின் பரம ரசிகர்கள். அதில் வரும் ஃபெராமியர் பாத்திரம் இருவருக்கும் பிடித்ததால் அந்தப் பெயரையே மகனுக்கும் வைத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிப் பேசித்தான் இருவருக்குமே காதலே வந்தது.

"சரிடீ. நேரமாச்சு. மொதல்ல எல்லாரும் போய்த் தூங்குங்க. காலைல சீக்கிரம் எந்திரிச்சுக் குளிச்சிக் கெளம்பனுமே..." சித்ரா அனைவரையும் விரட்டினாள்.

"என்னது? சீக்கிரம் எந்திரிச்சிக் கெளம்பனுமா? எங்க கெளம்பனும்?" பக்பக்கினாள் ரம்யா.

"ஹே ரம்மீ...ப்ரகாஷா சொல்லலையா? சித்ராவும் ப்ரகாஷாவும் படா பிளான் போட்டாங்களே. என்னம்மா ரம்மீக்கு ஒன்னுமே தெரியாதா?"

பொங்கினாள் ரம்யா. "சப்யா...அவங்கதான் சொல்லலை. நீ சொல்லீருக்கலாமே. ப்ரகாஷா கூட வர்ரான்னு நீயும் சொல்லலை. டாக்சியோட மொபைல் நம்பர் குடுக்க ஃபோன் பண்ணீல்ல. அப்ப சொல்லீருக்கலாம்ல. இப்ப சித்ரா ப்ரகாஷா மேல பழி போடுறியா?"

"சரண்டர். சரண்டர். சரண்டர் ரம்மீ. ப்ரகாஷா...நீயே ஹேண்டில் பண்ணுப்பா."

"ரம்யா.... ஒனக்கு தாஜ்மஹல் பாக்க தும்ப நாள் ஆஷை இருக்குல்ல. நானும் போயிருக்கேன். சப்யாவும் சித்ராவும் போயிருக்காங்க. ஆனா நீ போகலை. ஒனக்காகத்தான் தாஜ்மஹல் பாக்க பிளான் பண்ணேன். சித்ரா சப்யா ஒத்துக்கினாங்க. அதான்."

"சரி. சரி. எனக்காகத்தான் எல்லாரும் தாஜ்மகால் போறோமாக்கும். எனக்காக இப்பிடி ஒரு திட்டம் போட்டதுக்கு ரொம்ப நன்றி மிஸ்டர்.ப்ரகாஷா. எனக்குத் தெரியாமலே எனக்குப் பிடிச்சதுக்குத் திட்டம் போடுறது. ம்ம்ம்ம்ம். போற போக்குல என்னோட கல்யாணம் தேனிலவுன்னு எல்லாத்துக்கும் எனக்குப் பாத்த மாப்பிள்ளை மாதிரி நீயே திட்டம் போடுவ போல."

ப்ரகாஷாவின் வாயில் ஒரு கிலோ அல்வா. தித்திப்புக்குத் தித்திப்பு. பேச முடியாமல் வாயும் ஒட்டிக்கொண்டது.

"ஏண்டீ. ப்ரகாஷாவுக்கு என்ன கம்மி? அழகில்லையா? அறிவில்லையா? துட்டு இல்லையா? He is handsome and hot. அவன் மாப்பிள்ளையா வந்தா ஒத்துக்க மாட்டியா?" சித்ரா வேண்டுமென்றே வாயைக் கிண்டினாள். அவளுக்கு ரொம்ப நாளாகவே ரம்யாவின் மேல் சந்தேகம். கழுதை....ஆசையை மனதுக்குள் வைத்துக் கொண்டு பேச மாட்டேன் என்கிறாளோ என்று. அதுவும் ஒருவிதத்தின் உண்மைதானே. ப்ரகாஷா மேல் தனக்குத் தோன்றும் உரிமைக்குக் காதல் என்று பெயர் என்று ரம்யாவுக்குப் புரிந்து விட்டால் போதுமே. அதுவுமில்லாமல் ரம்யாவின் வீம்பு வேறு.

"என்னது...ப்ரகாஷாவை கல்யாணம் செஞ்சுக்கனுமா? நாங்க நல்ல ஃப்ரண்ட்ஸ் பா. அப்படித்தான் நான் நெனைக்கிறேன். டாக்சீல வீட்டுக்கு வரும் போது கூட...ப்ரகாஷா தோள்ளதான் சாஞ்சு தூங்கீட்டு வந்தேன். எனக்குள்ளயோ ப்ரகாஷாக்குள்ளயோ அந்த மாதிரி ஆசை இருந்தா அப்படி வந்திருக்க முடியுமா? சொல்லு ப்ரகாஷா?" ப்ரகாஷாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவன் வாயில் இருந்த அல்வாவானது பிரசவ நடகாய லேகியமாகியது. இப்பொழுதும் பேச முடியவில்லை.

"அதுவுமில்லாம ப்ரகாஷா எவ்ளோ பெரிய எடம். அவன் கன்னடம். நான் தமிழ்."

"சித்ரா தமிழ். நான் பெங்காலி." முடுக்குச் சந்தில் ராக்கெட் ஓட்டினான் சப்யா.

"சரி. சரி....இதப் பத்தி இப்பப் பேச வேண்டாம். எனக்குத் தூக்கம் வருது. காலைல எந்திரிக்கனும்." பேச்சை வெட்டினாள் ரம்யா. அவளால் உணர்ச்சிகளைத் தாங்க முடியவில்லை. தாங்க முடியாத உணர்ச்சிகள் எழும் பொழுது அவைகளை அனுபவிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியாதவர்கள், அந்த உணர்ச்சிகளை அடக்கி விடுவார்கள். அல்லது அந்த உணர்ச்சிகளே தங்களுக்கு இல்லை என்று ஏமாற்றிக் கொள்வார்கள். ரம்யா அதைத்தான் செய்தாள். சித்ராவும் சப்யாவும் இதைப் பற்றித் திரும்பவும் எதுவும் சொல்வார்கள் என்று ஒரு நொடி நினைத்தால். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் வாயடைத்து நின்றிருந்ததைப் பார்த்து விட்டு அவளுடைய ஏமாற்றத்தையும் மறைத்துக் கொண்டு அவளுக்கென்று சித்ரா ஒதுக்கிக் கொடுத்திருந்த அறைக்குள் "குட் நைட்" சொல்லி விட்டு தூங்கப் போனாள்.

ப்ரகாஷாவின் மனதில் இருந்த ஏமாற்றத்தை சப்யாவுக்கும் சித்ராவுக்கும் அவனது முகம் டீவி போட்டுக் காட்டியது. ப்ரகாஷாவின் முதுகில் மெதுவாகத் தட்டினான் சப்யா. "Dont worry Prakasha. It will work. She is still Kid. Now go to sleep. Itz too late. Good night."

ஹாலில் இருந்த பெரிய சோபா அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் வசதியாக படுத்துக் கொண்டான் குளிருக்கு இதமாகக் கம்பளி போர்த்துக் கொண்டாலும் இரண்டு வெந்நீர் ஊற்றுகள் அவன் கண்களில் திறந்தன. "தூத்தூ....கண்டு அள பாரது (சீச்சீ ஆம்பள அழக்கூடாது)" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தூங்கிப் போனான்.

தொடரும்...
காதல் குளிர் - 4 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12811)

அன்புரசிகன்
08-10-2007, 08:11 PM
அட.... அழவைத்துவிட்டாளே.... பெண்களுக்கே உரித்தானதோ? எதுக்கெடுத்தாலும் நாம ரொம்ப க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் என்று ஒரு பெரிய 16" திரையை போட்டுவிடுகிறார்கள்.

ரொம்ப சூப்பரா போகுது. ஆனா வாறது தான் ரொம்ப ஸ்லோவாக இருக்குது...

தொடருங்கள் அண்ணா...

gragavan
08-10-2007, 08:24 PM
வணக்கம் அன்புரசிகன். பாராட்டிற்கு நன்றி. வாரத்துக்கு ஒன்னுதான் எழுத முடியுது. அவ்ளோதான் நேரம் இருக்கு. :(

அன்புரசிகன்
08-10-2007, 08:38 PM
வணக்கம் அன்புரசிகன். பாராட்டிற்கு நன்றி. வாரத்துக்கு ஒன்னுதான் எழுத முடியுது. அவ்ளோதான் நேரம் இருக்கு. :(

பரவாயில்லை. ஆகும் போது தாருங்கள். எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அடுத்த குளிர்காலத்திற்காக...

மலர்
08-10-2007, 08:48 PM
ராகவன் அண்ணா
கதை சூப்பராய் போய் கொண்டிருக்கிறது...
அடுத்த பாகம் படிக்கும் ஆவலை இப்போதே கொடுத்து விட்டீர்கள்..

ஆனால் பாவம் ப்ரகாஷாவை தான் அநியாயமாய் அழ வைத்து விட்டீர்கள்.....

lolluvathiyar
09-10-2007, 05:47 AM
சித்ராவும் சப்யாவும் இதைப் பற்றித் திரும்பவும் எதுவும் சொல்வார்கள் என்று ஒரு நொடி நினைத்தால். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் வாயடைத்து நின்றிருந்ததைப் பார்த்து விட்டு அவளுடைய ஏமாற்றத்தையும் மறைத்துக் கொண்டு அவளுக்கென்று சித்ரா ஒதுக்கிக் கொடுத்திருந்த அறைக்குள் "குட் நைட்" சொல்லி விட்டு தூங்கப் போனாள்.


காட்சிகள் அனைவரையும் சுன்டி இழுத்தபடி வேகமாக செல்கிறது. அடுத்த பாகத்துக்கா ஆவலுடன் காத்திருக்கிறோம். அனுப*வ*மில்லாம*ல் இ ந்த* வ*ரி எழுதி இருக்க* முடியாது.

அக்னி
16-10-2007, 03:45 PM
காட்சிகள் விரைவாகவும் விவரிப்பாகவும் நகருகின்றன்...
காதல் சின்னம் நோக்கி, காதலை பரிமாறிக்கொள்ளாத இரு உள்ளங்கள், பரிமாறிக்கொண்ட உள்ளங்களோடு செல்லப்போகின்றனவா...?
அடுத்த பாகத்தில் தாஜ்மகாலில் சந்திக்கலாமா...

சூரியன்
16-10-2007, 03:55 PM
=gragavan;282974
"என்னது...ப்ரகாஷாவை கல்யாணம் செஞ்சுக்கனுமா? நாங்க நல்ல ஃப்ரண்ட்ஸ் பா. அப்படித்தான் நான் நெனைக்கிறேன். டாக்சீல வீட்டுக்கு வரும் போது கூட...ப்ரகாஷா தோள்ளதான் சாஞ்சு தூங்கீட்டு வந்தேன். எனக்குள்ளயோ ப்ரகாஷாக்குள்ளயோ அந்த மாதிரி ஆசை இருந்தா அப்படி வந்திருக்க முடியுமா? சொல்லு ப்ரகாஷா?" ப்ரகாஷாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.



அவள் இப்ப்டி சொல்வாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்..
ஏன் நாங்களும் எதிர்பார்க்கவில்லை..

பூமகள்
01-11-2007, 04:10 PM
டெல்லியை அடைந்து, நோய்டா சென்று.... அழகான எதார்த்தமான விவரிப்பு..!!
காட்சி கண்முன் விரிகிறது 70 mm திரையரங்கில் பார்ப்பது போல் உள்ளது. பிரகாஷா கனவில் ரம்யா வருவாளா??? அடுத்த பாகத்தில் உங்களை சந்திக்கிறேன் சகோதரர் ராகவன்.
கதைவிவரிப்பு அருமை. என்னைப் போன்ற சின்ன விதைகளுக்கு கதையில் முளைவிட செதுக்கும் செழித்த மண் போல் உங்களின் கதைக்களங்கள் உதவுகின்றன.
வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் சகோதரர் ராகவன்.

இளசு
18-11-2007, 09:12 PM
தாங்க முடியாத உணர்ச்சிகள் எழும் பொழுது அவைகளை அனுபவிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியாதவர்கள், அந்த உணர்ச்சிகளை அடக்கி விடுவார்கள். அல்லது அந்த உணர்ச்சிகளே தங்களுக்கு இல்லை என்று ஏமாற்றிக் கொள்வார்கள்.

அழகாய்ச் சொன்னீர்கள் ராகவன்..

மனவியலில் வல்ல இனிய பென்ஸ் கருத்தையும் அறிய ஆவல்..

அல்வா லேகியம் ஆனதும்..
முட்டுச்சந்தில் ராக்கெட்டும்
ஆம்பளை அழக்கூடாது என்ற வீம்பும்

உங்கள் எழுத்தில் தெறித்த ரசமான முத்துகள்... வாழ்த்துகள்!

மகா, பாரோ என கொஞ்சம் கன்னடம் கற்றுக்கொடுத்த புண்ணியமும்
உங்களைச் சேருகிறது!

மன்மதன்
20-11-2007, 05:03 PM
மறுக்கப்பட்ட காதலில் அழாத ஆண்களே இல்லை எனலாம். உன் கதாநாயகன் மட்டும் விதிவிலக்கா என்ன?

கதாபாத்திரங்களுக்கு பெயர் சூட்டுவதில் வல்லவன்யா நீ..!