PDA

View Full Version : போதிமரக் காலங்கள்



sadagopan
08-10-2007, 07:57 AM
உன் விழிப்பார்வை என்மீது
பட வைத்த நம் கல்லூரிப்
பருவ நாட்கள்
என்னை எனக்கே
உணரவைத்த
போதிமரக் காலங்கள்!

தாயை இழந்தவன்
தந்தையைப் பிரிந்தவன்
உன் வரவால்
நட்புறவால்
தனிமை மறந்தேன்
நட்பின் அருமை உணர்ந்தேன்!

என்னை எனக்கே காட்டியவள்
உன்னிலும் நானே
உறைந்திருப்பதாய்
ஏன் சொன்னாய்?

கொஞ்சும் மொழியில்லை
கோவில் சேர்ந்து
போனதில்லை
பஞ்சனைய உன் கேசம்
என் விரல்
பரவிப் படர்ந்ததில்லை!

இத்தனையும் செய்யாமல்
வந்த பக்குவமும்
சொல்லாமல்
ஒரு காதல்!

ஏன்?
எதற்கு?
எப்படி?

"புரியவில்லை" என்றேன்!

"வேலையொன்று தேடிக்கொள்!
கல்லூரியின்
கடைசி நாள்
புரியும்" என்றாய்!

மாமலையும் ஓர் கடுகாய்
முயற்சி!

மாணவக் கூடு
கிழிந்த நாளில்
புரியாதவற்றைப்
புரியச் சொல்லும்
ஆசிரியனானேன்!

அரசுப்பணி!
காதலைப்
புரிய வைக்க
நீ வருவாய்
என்றிருந்தேன்!

புரிந்துவிட்டால்
பூமி சுழலும்
சூட்சுமம்
புரிந்துவிடும்
என்றுதான்

காலச்சுழலில்
கட்டாயக்
கல்யாணச் சுனாமியில்
கண்ணீரும்
கம்பலையுமாய்
காணாமல் போனாயோ?

காதல்!

நீ புரிந்த
தவறா?
நான் புரியா
தவறா?

அமரன்
08-10-2007, 10:15 AM
ஒரு காதல் கதையை அருமையாக சொல்லி உள்ளீர்கள். கல்லூரிப்பருவத்தை கூட்டுப்புழுவுக்கு ஒப்புமை ஆக்கியது நல்ல் முயற்சி. காதலியின் பௌதிக உடல் பிரிவிற்கு காரணம் கட்டாய திருமணம். கட்டாய திருமணத்தின் காரணம் வாசகன் சிந்தனைக்கு. விரும்பியதை தெரிவு செய்து அதன் மீது வசதியாக சாய்ந்துகொள் என்பது போன்ற பாங்கு இது.
காதல் என்றாலே தவறு என்னும் மனவோட்டம் இன்னும் வழக்கொழிந்துபோகவில்லை. அதே தவறை அனுமதியுடன் செய்தால் தவறு தப்பி விடுகிறது. சய்தவர்கள் பிளைத்துக்கொள்கிறார்கள். என்னே விந்தை.
வாழ்த்துகள் சடகோபன்.

பூமகள்
08-10-2007, 10:47 AM
என்னே அழகான கவி...!! வார்த்தைக்கோவையின் சுவை ருசித்து மகிழ்ந்தேன்.
ஒரு அழகிய கவிதையின் காதல் கதையையே அடக்கிவிட்ட உங்களின் கவித்திறன் வியப்பில் ஆழ்த்துகிறது.
தொடர்ந்து அசத்துங்கள்... எங்களை கல்லூரி காலத்துக்கு மீட்டுச் சென்றதற்கு மிகுந்த நன்றிகள்.
வாழ்த்துகள் சகோதரரே..!!

ஜெயாஸ்தா
08-10-2007, 12:04 PM
காதல் சரியா தவறா
காதல் வரமா சாபமா
காதல் பிரிவா உறவா
விடையில்லாத காதல்....!
காதல்வரியில்லாத இதயங்களே இல்லையெனலாம். பராட்டுக்கள் சடகோபன். (ஆமாம் சடகோபன் எந்தக்கல்லூரியில் படித்தீர்கள்? சதக்கத்துல்லா அப்பா கல்லூரி? சேவியர்ஸ்,? ஜான்ஸ்? இந்துகால்லூரி?)

ஓவியன்
09-10-2007, 03:03 AM
சடகோபன்!

காதலைப் போலவே மென்மையாக பயணித்து, வரிகளில் தமிழ் செழுமை குலுங்க பயணித்த கவிதை நதி இரு கிளைகளாக பிரிந்து விட்டதே...??

நதிகள் பிரிவது பூகோள அமைப்புக்களுக்கு அமையவே, அப்படியே காதலும் பிரிவது சமூக சூழ் நிலை அமைப்புக்களுக்கு அமையவே....

இங்கே காதலும் தவறில்லை, இந்த நிலையைப் புரியாமல் இருப்பது தப்பில்லை....

அழகான ஒரு கவிதை நதிக்கு என் பாராட்டு பூக்கள் உங்கள் கவி ஆற்றங்கரையெல்லாம் தூவட்டும்...