PDA

View Full Version : காத்திருந்து... காத்திருந்து...



ஜெயாஸ்தா
07-10-2007, 01:28 PM
காத்திருக்கிறேன்...
கார்ப்பரேசன் குழாயில்
காற்று வராமல்
தண்ணீர் வரும்
காலத்திற்கு...!

காத்திருக்கிறேன்
மின் தடையில்லா
கொசுக்களுடன் உறவில்லா
இரவு தூக்கத்திற்கு...!

காத்திருக்கிறேன்
ஒன் பை டூ
காபி குடிக்காமல்
முழுக்கோப்பை
குடிக்கும் தருணத்திற்கு...!

காத்திருக்கிறேன்
காசு கொடுத்து
காலை டிபன்
நாயர்கடையில்
சாப்பிடும் நல்வேளைக்கு..!

காத்திருக்கிறேன்...
காலந்தவறி வரும்
டவுண்பஸ்
காலந்தவறாமல்
வரும் காலத்திற்கு...!

காத்திருக்கிறேன்...
செக்கிங்கிற்கு பயந்து
சிக்னலில் இறங்காமல்
டிக்கெட் வாங்கி
முறையாய் பயணிக்க...!

காத்திருக்கிறேன்...
அரக்கப்பரக்க
இண்டர்வியூக்கு
சென்று...
அதிகாரத்தலையீடில்லாமல்
வேலை கிடைக்க....!

காத்திருக்கிறேன்...
மனதை புரிந்து
கொண்ட நல் மனைவிக்கு...!

காத்திருந்து...
காத்திருந்து...
இப்போது என்வயது
அதிகமில்லை ஜென்டில்மேன்...
ஜஸ்ட் ஐம்பத்தைந்துதான்...!

இனியவள்
07-10-2007, 02:47 PM
சில காத்திருப்புக்கள்
கனிந்து இனிக்கின்றன
எம் வாழ்வினிலே

சில காத்திருப்புக்கள்
கசக்கின்றன வேப்பங்காயாய்

உங்கள் காத்திருப்புக்கள்
இனிதாய் நிறைவேறி வாழ்வில்
விருட்சமாய் வளர வாழ்த்துக்கள்

கவிதை அருமை தோழரே வாழ்த்துக்கள்

சிவா.ஜி
07-10-2007, 02:53 PM
பிரமாதமான கவிதை ஜே.எம்.இந்த காத்திருப்புகள் நம்மை காக்கவைத்தே காலத்தை நகர்த்திவிடுவதால்....இறக்கும் வரை எதுவோ ஒன்றிற்காக எப்போதும் காத்திருக்கவேண்டியுள்ளது.கவிதையில் சொல்லப்பட்ட காத்திருப்புகளில் சில கைகூடினாலும்...பல..ம்ஹீம்...சந்தேக கேஸ்தான்.

நேசம்
07-10-2007, 04:08 PM
கடைசி வரைக்கும் எதுக்காவது காத்து இருக்க வேண்டும் அதுதான் மனுஷ வாழ்க்கை. நல்ல கவிதை

ஜெயாஸ்தா
07-10-2007, 04:22 PM
உங்கள் காத்திருப்புக்கள்
இனிதாய் நிறைவேறி வாழ்வில்
விருட்சமாய் வளர வாழ்த்துக்கள்

இது நம்முடைய காத்திருப்பு மட்டுமல்ல. நம் நண்பர்களின் காத்திருப்பும்தான். ஒரு நான் ஒரு வேலை விசயமாக பெங்களுர் சென்றிருந்தேன். தங்கும்விடுதி செலவை மிச்சப்படுத்த என் நண்பர்கள் தங்கியுள்ள அறைக்குச் சென்றேன். அந்த பத்துக்கு பத்து அளவுள்ள அறையில் என்னுடைய இரு நண்பர்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பேர் தங்கியிருந்தனர். ஏழாவதாய் அன்றிரவு அவர்களோடு நானும் சேர்ந்து கொண்டேன். காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து நண்பர்கள் வேலைக்குச் செல்ல தயாராயினர். நான் கண்விழிக்கும் போது நான்கு பேர் வேலைக்கு சென்று விட்டனர். என் நண்பன் என்னை கவனிக்க வேண்டிய அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டான். காலை எட்டு மணிக்கு என்னுடைய நண்பன் எனக்கு காலையுணவு வாங்கி வந்தான். நான் சப்பிடும் முன், வேலைக்கு செல்லாமல் இருந்த அந்த புதிய நண்பரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

'என்ன நண்பா எல்லோரும் வேலைக்கு சென்றுவிட்டார்களே... நீங்கள் செல்லவில்லையா?' கேட்டேன்.
'நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்!' என்று பதிலளித்தார் அவர்.

இப்படியே பலவாறாக பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரை என்னுடன் சாப்பிடச் சொன்னேன்.
'இல்லை வேண்டாம்...!' என்று அவர் மறுத்துவிட்டார். நான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் சாப்பிடவில்லை.

பின் நான் சாப்பிட்டுவிட்டேன். சிறிது நேரம் கழித்து அவர் வெளியே சென்ற பின் நண்பனிடம், 'எதற்காக அவர் என்னுடன் சாப்பிடவில்லை?' என்று கேட்டடேன். அதற்கு என் நண்பன் சொன்னான் 'இன்னிக்கு காலையில நீ வாங்கி கொடுத்துவிடுவாய். நாளைக்கு யார் வாங்கிக்கொடுப்பார்கள்?' என்றான்.

அதாவது வேலை கிடைக்கும் வரை சிக்கனம்வேண்டி காலை சாப்பாடையே தியாகம் செய்கிறார் அந்த நபர். அவர் மட்டுமல்ல அதற்கு முன்பு வேலை கிடைக்காமல் இருந்தோர்களும் அப்படித்தான் இருந்தார்களாம். வேலைபார்க்கும் நண்பர்கள் உதவி செய்தாலும் ஏற்றுக்கொள்வதில்லையாம். எனக்கு கொஞ்சம் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது.

அவரை போன்ற நண்பர்களின் காத்திருப்புகள் மெய்யாக வேண்டும். 'கனவு மெய்ப்படவேண்டும்.'


நன்றி இனியவள்..!

ஜெயாஸ்தா
07-10-2007, 04:24 PM
இறக்கும் வரை எதுவோ ஒன்றிற்காக எப்போதும் காத்திருக்கவேண்டியுள்ளது.
ஆமாம் சிவாஜி.... சிலரின் அந்திமக்காலத்தில் அவர்கள் படும் அவஸ்தைகளைப் பார்க்கும் போது அவர்கள் எமனுக்காக 'காத்திருக்கிறார்'களோ என்று எண்ணத் தோன்றும். நன்றி சிவாஜி.

ஜெயாஸ்தா
07-10-2007, 04:26 PM
கடைசி வரைக்கும் எதுக்காவது காத்து இருக்க வேண்டும் அதுதான் மனுஷ வாழ்க்கை. நல்ல கவிதை

நன்றி நேசம். கடைசி வரை சில காத்திருப்புகள் நிறைவேறுவதேயில்லை. அதற்காக மனம் சஞ்சலப்படாமல் வாழப் பழகிக்கொள்ளவேண்டும். கிடைப்பதை வைத்து திருப்தி கொள்ளவேண்டும்

பூமகள்
07-10-2007, 04:42 PM
சமூகத்தின் இன்றைய நிலையை பிரதிபளித்திருந்தீர்கள்..!!
நல்ல கவி. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் சகோதரர் ஜே.எம்.
காத்திருப்புகளுக்கு முக்கிய தேவை... பொறுமை.
அது இருந்துவிட்டால் காத்திருப்புகள் சுமையாகாது. எதிர்பார்ப்பது சீக்கிரம் நடைபெற வேண்டும் என்பது எல்லா உள்ளங்களின் ஆசை. ஆனால் நிஜத்தில் சில காத்திருந்தால் கிட்டும் விரைவில். சில எத்தனை காத்திருந்தாலும் பொறுமையிழக்க வைக்கும். கடைசியில் கிட்டாமலேயே போகும்.
உங்களின் காத்திருப்புகள் கூடிய விரைவில் நிறைவேற வேண்டிக் கொள்கிறேன்.

ஜெயாஸ்தா
07-10-2007, 05:12 PM
நன்றி பூமகள். கவிதையை உணர்ந்து கருத்தை பிரதிபலித்தற்கு...!