PDA

View Full Version : தூக்கம் விற்ற காசுகள்



சுகந்தப்ரீதன்
07-10-2007, 01:17 PM
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்று விட்டு

கனவுகள்
புதைந்துவிடுமென தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மரஉச்சியில் நின்று
ஒரு தேன்கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பாக்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன்!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோம்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளூர்
உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளை
நினைத்துப்பார்க்கும் போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழைய சடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பறிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு

ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்து விடுகிறது
எங்களின் நீ...ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்

அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைதாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்து விடுகிறார்கள்!

"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டு பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹாமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சத்தம்
யாருக்கு கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு

இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழைய முகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

- ரசிகவ் ஞானியார், துபாய்

**********************************************************************

மன்ற நண்பர்களே...! இந்த கவிதையின் சொந்தகாரர் ரசிகவ் ஞானியார் யாரென்று எனக்கு தெரியாது. இந்த கவிதை எனக்கு எப்போதோ மின்னஞ்சலில் வந்து சேர்ந்தது. கவிதையில் அயல்தேசத்து ஏழைகளின் வாழ்வையும் அவர்களின் மன உணர்வையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் நமது ரசிகவ் ஞானியார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை இங்கே பதித்தேன்!

யவனிகா
07-10-2007, 02:35 PM
தொண்டையை அடைத்து, விழிகளை நிரப்பிய கவிதை ,வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல இந்த கவிதை....எம் வெறுமை சூழ்ந்த வாழ்க்கையை காட்டுகிறது...சிட்டுக் குருவியாய் விட்டு விடுதலை ஆகி , தாய் மடி தேடி பறக்கத் தான் நினைக்கிறது மனது...என்ன செய்வது குருவியின் கால்கள் பொருளாதார இரும்புச் சங்கிலியால் பிணைக்கப் பட்டுள்ளதே?கவிதையைப் பகிர்ந்த சுகந்தப்ரீதனுக்கு வாழ்த்துக்களுடன்,
யவனிகா

ஓவியன்
07-10-2007, 02:41 PM
ஒரு வருடத்திற்கு முன்னர் அன்புடன் கூகிள் குழுமத்தில் கிடைத்தது இந்த கவிதை. இன்றும் எனது கணினியின் முகப்பில் ஒரு ஜெ.பி.ஜி கோப்பாக இருக்கிறது. அடிக்கடி நான் வாசித்துக் கொள்ளும் ஒரு கவிதை. ஏனென்றால் இந்த கவிதையின் யதார்த்தம் உயிர்மை உணர்ந்தவர் நாம்.

வரிகளால் வடிக்கப்பட்ட கவிதையல்ல இது, மாறாக வலிகளால் செதுக்கப்பட்ட கவிதை.

ஜெயாஸ்தா
07-10-2007, 02:46 PM
இந்த கவிதையை எழுதிய ரசிகவ்ஞானியார் திருநெல்வேலி-மேலப்பாளையத்தை சார்ந்தவர். அவரும் கலாவதிராஜா என்று ஒருவரும் சேர்ந்து எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு ஒன்று படித்த ஞாபகம் எனக்கு இருக்கிறது.

மலர்
07-10-2007, 02:52 PM
நான் ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...
என்னிடமும் இமேஜாக தான் உள்ளது...

rajaji
07-10-2007, 02:52 PM
வெளிநாடுகளில் துன்பப்படும் இளைஞர்களின் துன்பம் ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது.....

தற்போது இவர்களுக்காக பெருமூச்சு விடுவது ஒன்றைத்தான் என்னால் செய்ய முடியும்.....

ஆனால் நாளை எனக்காகவும் யாராவது பெருமூச்சு விடுவார்கள்...............

மலர்
08-10-2007, 08:52 PM
வரிகளால் வடிக்கப்பட்ட கவிதையல்ல இது,
மாறாக வலிகளால் செதுக்கப்பட்ட கவிதை.

ஓவியன்...
இந்த வரிகள் ரொம்ப ஆழமானது...
எனக்கு அழகாய் விமர்சிக்க தெரியலை..
ஆனால் ரொம்ப பிடிச்சிருக்கு...

சுகந்தப்ரீதன்
09-10-2007, 01:01 PM
யவனிகா நாளை எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில்தான் பாலைவனத்தில் பாதங்கள் திரிகின்றன! மாறும் என்ற மாறாத நம்பிக்கை கொள்வோம்!
ஓவிய அண்ணா உண்மைதான் இந்த கவிதையின் யதார்த்தம் உயிர்மை உணர்ந்தவர் நாம்.
அன்புள்ள ஜே.எம் க்கு எனது நன்றிகள் கவிஞ்ரை பற்றி தெரிவித்தமைக்கு!
மலர் மற்றும் ராஜாஜிக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்...!

பூமகள்
09-10-2007, 05:03 PM
இன்று தான் இக்கவியைப் படிக்கிறேன்.
கண்ணீர் ஏனோ எட்டி அதுவும் பாடித்துவிட்டுச் சென்றது.
அயல் தேசத்தில் சகோதரர் படும் வேதனையை நன்றாகவே எதார்த்தமாய் வடித்திருந்தார் கவிஞர்.
அற்புதக் கவிதையை தொகுத்து தந்த ப்ரீதன் சகோதரருக்கு நன்றிகள் கோடி.

ஓவியன்
09-10-2007, 06:54 PM
வரிகளால் வடிக்கப்பட்ட கவிதையல்ல இது,
மாறாக வலிகளால் செதுக்கப்பட்ட கவிதை.

ஓவியன்...
இந்த வரிகள் ரொம்ப ஆழமானது...
எனக்கு அழகாய் விமர்சிக்க தெரியலை..
ஆனால் ரொம்ப பிடிச்சிருக்கு....

என்ன மலர் இப்படி சொல்லிட்டீங்க, விமர்சிக்க தெரியலைனு சொல்லிட்டு, நச்சென "ஆனால் ரொம்ப பிடிச்சிருக்கு" என்று அழகாக விமர்சித்து விட்டீர்களே...

உங்கள் மனதில் இந்த வசனம் ஆழ ஊன்றியமையை இதை தெளிவாக விமர்சிக்கவும் முடியுமா...?

அதற்கு மிக்க நன்றி மலர்....!