PDA

View Full Version : மருதத்தில் - பயணக்கட்டுரைஆதவா
06-10-2007, 01:06 PM
திருப்பூருக்கு அருகே உள்ள ஊத்துக்குளி தமிழ்நாட்டில் வெண்ணை மற்றும் நெய்க்கு பிரபலமான ஊர். அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ தொலைவில் ஊத்துக்குளி ரயில் ஸ்டேசனுக்கு சற்றூ தொலைவில் வேலம்பாளையம் அமைந்திருக்கிறது. சுத்தமான கிராமம், வயல்சார்ந்த மருதநில ஊர் வேலம்பாளையம்.

வேலம்பாளையம் செல்லுவதற்கு ஒருநாளைக்கு மூன்று முதல் ஐந்து பேருந்துகள் வரை வரும். இல்லையெனில் நடந்துதான் செல்லவேண்டும். மருதத்திற்குரிய வயல் காடுகளும் பீக் காடுகளும் முதலில் வரவேற்கின்றன. சிறு பொழுதான வைகறையில் அதாவது காலை ஐந்து அல்லது ஆறு மணியளவில் இங்கே நடைபெறும் தொழிலைக் காணலாம். ஊரில் மொத்தம் எண்ணிப்பார்த்தால் ஐம்பது வீடுகள் இருக்கும். பெரும்பாலும் சொந்தமாக வயல் வைத்திருப்பவர்கள் அதிகம். காலை எட்டு மணியளவில் வயலுக்குச் சென்று பார்வையிட்டால் பசுமையின் குளிர்ச்சியும் சுத்தமான காற்றும் நம்மை வரவேற்கும். ஓரிரு பெட்டிக் கடைகளைக் காண நேரிடலாம். நகரத்து கடைகளைப் போலல்லாமல் வரவேற்பு இங்கே கிடைக்கிறது. அதோடு நமக்குத் தேவையான தின்பண்டத்தை எடுக்கும்போது அந்த நல்லுள்ளம் படைத்தவர்கள் கணக்கு வழக்கின்றி பணம் வாங்குவதோடு நாம் கேட்காமலேயே தருவதும் கிராமத்துக்கே உரிய பாசம். வயலுக்குச் செல்லும் வழியில் ஆடு மேய்ப்பவர்களைக் காணலாம். அவ்வாறு மேய்ப்பவர்கள் லட்சாதிபதிகள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். அங்கங்கே சுற்றித் திரியும் கோழிகளும் குஞ்சுகளும், காவல் நாய்களும் நம்மை விருந்தாளியாகவே பார்க்கின்றன. வயலை அடைந்ததும் ஒருவித வாசம் நம்மைக் கவர்கின்றன. அதோடு பாசமும் கவர்கின்றன. அங்குள்ள கிழத்திகள் வரவேற்று உபசரிக்கிறார்கள். வயல் சார்ந்த மருத நிலமாகையால் வீட்டுக்கு அருகே கிணறு வெட்டியிருப்பதைக் காணலாம். அதோடு ஊரில் எண்ணிப் பார்த்தால் வீடுகளின் எண்ணிக்கையைவிட கிணறுகளின் எண்ணிக்கை கூடுதல் என்பது சிறப்பு. கிழத்திகளின் உபசரிப்பைத் தாண்டி, அவர்களின் கொட்டகையைப் பார்வையிட நேரிடுகையில் அங்கே வளரும் எருமைகளையும் பசுக்களையும் ஆடுகள் மற்றூம் கோழிகளையும் காண நேரிடலாம். மருத நில மக்களுக்கு பெரும்பாலான தொழில் வயலிலேயே முடிந்துவிடுகிறது. பகுதி நேரத் தொழிலாக பால் கறத்தல், கோழி வளர்த்தல், ஆடு வளர்த்தல், போன்றவைகள் நடைபெறுகின்றன. இவற்றை பெரும்பாலும் கீழ் மக்கள் செய்கிறார்கள். பால் கடையும் கடைச்சிகள், ஆடு மாடு மேய்க்கும் கடையர்கள், களை பிடுங்கும் உழத்திகள், நாற்றூ நட்டு பயிரிடும் உழவர்கள் என பலரைக் காணமுடிகிறது. இவர்கள் அனைவரும் அரிசன மக்கள். நாளொன்றுக்கு அறுபது ரூபாய்க் கூலியில் வேலை செய்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு இவர்களிடம் நிலம் பறித்த சோகம் இன்னும் கண்களுக்குள் தென்படுகிறது. மருதநிலத்திற்குரிய பூச்சிகளாகிய பட்டாம்பூச்சிகளும் மண்புழுக்களும் சில பாம்பு வகைகளும் காணலாம். தென்னை மரம், பனை மரம், ஆலமரம் மற்றும் வேப்பமரங்கள் பெரும்பாலான ஊரை ஆக்கிரமித்திருக்கின்றன.

காய்கறிகள், கிழங்குகள், கடலை வகைகள், தென்னை, பனை, திணை(மாவு) எனப் பல உணவுப் பொருட்களை பயிரிட்டு வளர்க்கிறார்கள். இந்த ஊர்ச் சிறப்பு இங்கே கண் வலிக்கு நிவாரணியாக ஒரு செடியை வளர்க்கிறார்கள். அழகான பூக்களுக்கு இடையே வளரும் காய்களை நறுக்கி காயவைத்து அரைத்து கிலோ முந்நூறு வரையிலும் விற்கிறார்கள். பெரும்பாலான தோட்டங்களில் இந்த வகைச் செடியைக் காணமுடிகிறது. தெளுவு இங்கே காய்ச்சுகிறார்கள். சுத்தமான தெளுவு கிடைக்கிறது. சுவையாகவும் இருக்கிறது. பெரும்பாலும் தென்னைமரத்துத் தெளுவுதான் இங்கே இருக்கின்றன. ஒருசிலர் பனைமரத்துத் தெளுவையும் காய்ச்சுகிறார்கள்.

அனைவரின் வீட்டிலும் கிணறு வெட்டிவைத்திருக்கிறார்கள். ஒருசிலர் வீட்டில் இரண்டு கிணறு வரை காணப்படுகிறது. அரசு கொடுக்கும் இலவச மின்சாரத்தின் வாயிலாக நிலத்தடி நீரை எடுத்து கிணற்றில் விட்டு, பின் மீண்டும் வயலுக்கு வாய்க்கால் வழியாக பாய்ச்சுகிறார்கள். எந்த நேரமும் நீர் இறைக்கும் மோட்டார் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு பண்ணைக்காரர்களும் சுமார் இருபது முப்பது ஏக்கர் அளவில் நிலம் வைத்திருப்பார்கள். அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். அனைத்து வயலுக்கும் நீரை வாய்க்கால் சுமந்து செல்கிறது. அழகாக அமைக்கப்பட்ட பாத்தியின் வழியே நீர் செல்கிறது. இவர்கள் துணி துவைப்பது முதல் குளிப்பது வரை இந்த வாய்க்காலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வயலை விட்டு வெளியே வந்தால் பலரது வீட்டில் சிறு சிறூ கைவினைத் தொழில்களைக் காணலாம். பனை ஓலையில் கூடை பின்னுவது முதல் விசிறி செய்வது வரையிலும் தொழில்கள் நடைபெறுகின்றன. வீட்டைச் சுற்றிலும் உணவுப்பொருட்கள், தானியங்கள் இறைந்துகிடக்கின்றன. கோழிகள், வாத்துகள், ஆடுகள் ஆகியன அங்கங்கே சுற்றித் திரிகின்றன.

பெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் இல்லை. பீக்காடுகளுக்குத்தான் செல்லவேண்டும். அச்சுறுத்தும் ஊர்வன வகைகள் அதிகம் நடமாடுவதாக சொல்லுவார்கள். என்றாலும் நான் இருந்தவரையிலும் எந்த பிரச்சனையுமில்லை. ஊரில் கேபிள் வசதி இல்லாததால் டிடி எச் உபயோகப்படுத்துகிறார்கள். மேலும் அந்த ஊருக்கு ஒரே கிணறுதான். ஆழம் அதிகம். கிணறுக்கு வெகு அருகே ஒரு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. சிறு பிராயத்தில் அங்கே தாயம் ஆடியிருக்கிறேன். இன்றும் பல பெரிசுகள் அங்கே ஆடுபுலி ஆட்டம் ஆடுவதைக் காணலாம். அந்த கோவில் சுமார் நூறு வருடப்பழமை என்று கூறப்படுகிறது.

ஒருவாறாக குறிஞ்சி மற்றும் மருத நில ஊர்களை ரசித்து ருசித்து நகரம் வந்து சேர்ந்தால் அது நரகமாகவே தென்படுகிறது. இயற்கையான சூழல், காடு மேடு, மலை, வாசம். பீக்காடுகள், சிலிர்த்திடும் காரணிகள், கிராமத்து பாசம், தெளுவு, என அனைத்தையும் விடவா வேறு ஒரு சந்தோசம் இருக்கப் போகிறது......

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/02102007137.jpg

கிராமத்தின் எழிலைப் பாருங்கள்...
http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/02102007125.jpg

ஒரு வீட்டின் பின்புறத்தில்

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/01102007111.jpg

கண் வலி மருந்தாக இந்த பூவிலிருந்து வரும் காயை உலர வைத்து பொடியாக்கி மருந்தாக மாற்றுகிறார்கள். இதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/01102007095.jpg

அங்கே வளரும் ஒரு பயிர் (வெண்டைக்காய்)

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/01102007075.jpg

இங்கு வளரும் உயிரினங்கள்..... என்னே அருமை!!

துளித்துளியா
06-10-2007, 01:14 PM
அவை செங்காந்தள் மலர்கள் .

மிக அழகிய சரியான வர்ணனைகள்.அனைத்தும் அருமை.

கிராமியத்தை புகைப்பட வாயிலாக தெள்ளத்தெளிவாக்கினீர்கள்.

சூரியன்
06-10-2007, 01:14 PM
நண்பரே திருப்பூரில் நிறைய வேலம்பாளையம் இருக்கிறது..
நீங்கள் சொல்வது எதுவோ?

15.வேலம்பாளையம்
63.வேலம்பாளையம்

சிவா.ஜி
06-10-2007, 01:18 PM
ஆதவாவின் அடுத்த நிலப்பயணமும் அழகாக வெளிவந்திருக்கிறது.எவ்வளவு வெள்ளந்தியான மனிதர்கள்,எத்தனை அழகு கொட்டிக்கிடக்கும் வயலும்,காடுகளும்...அருமையான புகைப்படங்கள்.
அங்கு வாழும் மனிதர்களைப் பார்க்கும்போது,ஒரு ஏக்கம் படர்வதை தடுக்க முடியவில்லை.கிராம வாழ்க்கை உண்மையிலேயே சொர்க்கம்தான்.அருமையான பயணக்கட்டுரைக்கு வாழ்த்துக்கள் ஆதவா.

ஆதவா
06-10-2007, 01:20 PM
அவை செங்காந்தள் மலர்கள் .

மிக அழகிய சரியான வர்ணனைகள்.அனைத்தும் அருமை.

கிராமியத்தை புகைப்பட வாயிலாக தெள்ளத்தெளிவாக்கினீர்கள்.

மிகவும் நன்றி துளித்துளியாய்!!!

ஆதவா
06-10-2007, 01:20 PM
நண்பரே திருப்பூரில் நிறைய வேலம்பாளையம் இருக்கிறது..
நீங்கள் சொல்வது எதுவோ?

15.வேலம்பாளையம்
63.வேலம்பாளையம்

கட்டுரையை சற்று நன்றாக படியுங்கள்....

நன்றி

ஆதவா
06-10-2007, 01:23 PM
ஆதவாவி அடுத்த நிலப்பயணமும் அழகாக வெளிவந்திருக்கிறது.எவ்வளவு வெள்ளந்தியான மனிதர்கள்,எத்தனை அழகு கொட்டிக்கிடக்கும் வயலும்,காடுகளும்...அருமையான புகைப்படங்கள்.
அங்கு வாழும் மனிதர்களைப் பார்க்கும்போது,ஒரு ஏக்கம் படர்வதை தடுக்க முடியவில்லை.கிராம வாழ்க்கை உண்மையிலேயே சொர்க்கம்தான்.அருமையான பயணக்கட்டுரைக்கு வாழ்த்துக்கள் ஆதவா.

நன்றி சிவா.ஜி அண்ணா.. அப்படியே மற்ற மூன்று நிலங்களையும் பார்க்கும்படி ஏதும் வாய்ப்பு கிடைத்தால் பயணக்கட்டுரையாகத் தருகிறேன்... கிராமத்து சுகமே தனிதான்...

சூரியன்
06-10-2007, 01:23 PM
திருப்பூருக்கு அருகே உள்ள ஊத்துக்குளி தமிழ்நாட்டில் வெண்ணை மற்றும் நெய்க்கு பிரபலமான ஊர். அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ தொலைவில் ஊத்துக்குளி ரயில் ஸ்டேசனுக்கு சற்றூ தொலைவில் வேலம்பாளையம் அமைந்திருக்கிறது. சுத்தமான கிராமம், வயல்சார்ந்த மருதநில ஊர் வேலம்பாளையம்.

இந்த பகுதியை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டேன்.மன்னிக்கவும்.

rajaji
06-10-2007, 02:44 PM
ஆதவா ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்........

எனக்கு இது போன்ற ஊர்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைதான்....
ஆனால் பல காரணங்களால் என்னால் முடிவதில்லை.....

ஆனால் உங்கள் பயணக் கட்டுரைகளைப் படிக்கும் போது அக் குறை நீங்கி விடுகிறது....

கட்டுரையோடு நீங்கள் தரும் படங்கள் சிறப்பாக இருக்கிறது....

படங்களில் ஊரின் வனப்பு தெளிவாகத் தெரிகிறது.....

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஆதவா......

aren
06-10-2007, 04:20 PM
ஆதவா, பயணக்கட்டுரை அருமை. கிராமத்து கிளர்ச்சி என்று எழுதும்போதே நினைத்தேன், கிராமம் பக்கள் சென்ற சொந்த அனுபவமாகத்தான் இருக்கும் என்று.

நன்றாக வந்திருக்கிறது கட்டுரை. தொடருங்கள்.

mukilan
06-10-2007, 07:44 PM
அருமை ஆதவா! கண்வலிக்கிழங்கு என்று சொல்வார்கள். ஆனால் கண்வலிக்கு மருந்தாகப் பயன்படுத்த மாட்டார்கள் என என்ணுகிறேன். ஆனால் இதிலிருந்து மருந்துப் பொருட்கள் தயாரிப்பார்கள்(ஆண்மைக்குறைவிற்கு உறுதியாகத் தெரியவில்லை).மருத நாடு சென்று அனுபவித்து வந்திருக்கிறீர்கள். கிழத்தி என நீங்கள் பயன் படுத்திய பதத்தின் பொருள் என்ன? கிழவி என்பதா?? கிழத்தி என்பது வயது முதிர்ந்த பெண்களைக் குறிப்பிடாது. உ:தா: காமக்கிழத்தி என்பது பரத்தையர்கள் அல்லது பாலுணர்வுக்கு மட்டும் வடிகால் தரும் துணைவியைக்குறிக்கும். கடையர், கடைச்சி போன்ற பதங்கள் இடையர் இடைச்சி போன்ற பதங்களுக்கு ஒத்த பொருள் உள்ளனவா? பயணம் முழுவதும் உங்களுடன் வந்த எனக்கு நெருடலாகப் பட்டது "பீக்காடு" என்ற சொல்லாடல்தான். என்னதான் கிராமத்தின் வழக்காயிருந்தாலும் வேறு பதம் பயன்படுத்தியிருக்கலாமே எனத் தோன்றியது. நாம் எப்பொழுதும் அது போன்ற விடயங்களை இலை மறை காயாகவே குறிப்போம் இல்லையா?எனக்கும் அது குறித்த சரியான சொல் தெரியவில்லை. மன்னிக்க. நிறைவான உங்களின் கட்டுரையில் நானும் உடன் வந்த உணர்வு. முல்லை நிலத்திற்கும், நெய்தலுக்கும் எப்பொழுது சென்று வரப் போகிறீர்கள்.

lolluvathiyar
07-10-2007, 08:42 AM
ஆதவா ஒரு கிராமத்தை பற்றி அழகாக தந்திருகிறீர்கள். குறிப்பாக அதன் மக்களை பற்றி. டவுனில் கடையில் காபி சின்ன கப்பில் தருவார்கள். கிராமத்தில் பெரிய டம்பளார் முழுக்க தருவர்கள். கிராமத்தில் ஓரிரு நாள் இருந்து வந்தால் நகரம் நரகமாகவே தெரியும்.

நீங்கள் குறிபிட்ட கிராமத்துக்கு நான் போனதில்லை. ஆனால் ஊத்துகுளிக்கு போயிருகிறேன். அங்கு கைத்தமலை மற்றும் சென்னிமலை போயிருகிறேன்.

ஜெயாஸ்தா
07-10-2007, 09:09 AM
கிராமத்தில் எவ்வளவோ விசயங்கள் இருந்தாலும் சில விசயங்கள் சரியாக கிடைப்பதில்லை. மிக முக்கியமாக நல்ல மருத்துவம் என்பது சரியாக கிடைப்பதில்லை. பிரவசம், போன்ற அவசரகாலங்களுக்கு கிராமத்திலிருந்து சுமார் 15 மைல் போக வேண்டியிருக்கிறது. ஆட்டோவில் போக ஒரு மணி நேரமாகிவிடுகிறது. அதனால் பல உயிரழப்புகளும் நேர்ந்துவிடுகிறது.

அதே போல் நீங்கள் கட்டுரையின் நீளம் கருதி சொல்லாமல் விட்ட பல விசயங்கள் உள்ளன. புதியவர் ஒரு ஊருக்குள் நுழையும் போது உங்களை யாரென்று விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 'ஏய் யாருப்பா நீ... யார் வீட்டிற்கு வந்திருக்கிறாய்?' கண்ணில் படும் அனைவருமே விசாரிப்பார்கள். அடையாளம் கண்டுகொண்டால், பெரும்பாலானோர்வீடுகளில் விருந்துபச்சாரமும் நடக்கும். நீங்கள் உங்கள் உறவினர் வீட்டை அடையும்முன்னே அவர்களின் வீட்டிற்கு நீங்கள் வந்துள்ள தகவல் சென்றிருக்கும். அதுவும் எங்கள் கிராமத்தில் ஆறு, குளம், குட்டை, மலையருவி, மலைக்குன்றுகள் என பலவகையான மனதை கொள்ளை கொள்ளும் அனைத்து அம்சங்களும் உண்டு. எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென்று வயல்களும், தோப்புகளும்...! நாங்கள் ஏதேனும் முக்கிய முடிவுகள் (காதலிக்கு கடுதாசி கொடுப்பது உள்பட) எடுப்பதாயிருந்தாலும் மலைக்குன்றிகளின் மேல் அமர்ந்து விவாதித்துதான் முடிவெடுப்போம்.

ஆதவா
08-10-2007, 07:19 AM
ஆதவா ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்........

எனக்கு இது போன்ற ஊர்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைதான்....
ஆனால் பல காரணங்களால் என்னால் முடிவதில்லை.....

ஆனால் உங்கள் பயணக் கட்டுரைகளைப் படிக்கும் போது அக் குறை நீங்கி விடுகிறது....

கட்டுரையோடு நீங்கள் தரும் படங்கள் சிறப்பாக இருக்கிறது....

படங்களில் ஊரின் வனப்பு தெளிவாகத் தெரிகிறது.....

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஆதவா......

மிகவும் நன்றிங்க ராஜாஜி.

நான் கொடுத்து வைத்ததாக சொல்லப்படும் அரிதான நபர்களில் நீங்களும் ஒருவர்... ஆனால் என்றென்றும் நான் அதிர்ஷ்டக்காரனல்ல. திடீரென அக்காவின் வீட்டுக்குச் செல்லவேண்டுமென்ற ஆர்வம். (குறிப்பாக கிராமம் என்பதால்) அதனால் சென்றுவிட்டேன். அதிலும் உடன் வந்தது எனது தங்கைமார்கள்/ அதனால் ஒரே அமர்க்களமாக இருந்தது.

கட்டுரையை விரும்பிப் படித்தமைக்கு நன்றி..

ஆதவா
08-10-2007, 07:19 AM
ஆதவா, பயணக்கட்டுரை அருமை. கிராமத்து கிளர்ச்சி என்று எழுதும்போதே நினைத்தேன், கிராமம் பக்கள் சென்ற சொந்த அனுபவமாகத்தான் இருக்கும் என்று.

நன்றாக வந்திருக்கிறது கட்டுரை. தொடருங்கள்.

மிக்க நன்றி ஆரென் அண்ணா. ஏதாவது ஒரு இடத்திற்கு சென்றால் அந்த இடத்தைப் பற்றீ கொஞ்சம் யோசிப்பேன். அவர்களின் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது முதல் வாழும் நிலை வரை... முதலில் சென்னை பயணம் அவ்வாறுதான் இருந்தது. பல காரணங்களால் சென்னைபற்றி எழுத முடியவில்லை.
மிக்க நன்றி

ஆதவா
08-10-2007, 07:21 AM
அருமை ஆதவா! கண்வலிக்கிழங்கு என்று சொல்வார்கள். ஆனால் கண்வலிக்கு மருந்தாகப் பயன்படுத்த மாட்டார்கள் என என்ணுகிறேன். ஆனால் இதிலிருந்து மருந்துப் பொருட்கள் தயாரிப்பார்கள்(ஆண்மைக்குறைவிற்கு உறுதியாகத் தெரியவில்லை).மருத நாடு சென்று அனுபவித்து வந்திருக்கிறீர்கள். கிழத்தி என நீங்கள் பயன் படுத்திய பதத்தின் பொருள் என்ன? கிழவி என்பதா?? கிழத்தி என்பது வயது முதிர்ந்த பெண்களைக் குறிப்பிடாது. உ:தா: காமக்கிழத்தி என்பது பரத்தையர்கள் அல்லது பாலுணர்வுக்கு மட்டும் வடிகால் தரும் துணைவியைக்குறிக்கும். கடையர், கடைச்சி போன்ற பதங்கள் இடையர் இடைச்சி போன்ற பதங்களுக்கு ஒத்த பொருள் உள்ளனவா? பயணம் முழுவதும் உங்களுடன் வந்த எனக்கு நெருடலாகப் பட்டது "பீக்காடு" என்ற சொல்லாடல்தான். என்னதான் கிராமத்தின் வழக்காயிருந்தாலும் வேறு பதம் பயன்படுத்தியிருக்கலாமே எனத் தோன்றியது. நாம் எப்பொழுதும் அது போன்ற விடயங்களை இலை மறை காயாகவே குறிப்போம் இல்லையா?எனக்கும் அது குறித்த சரியான சொல் தெரியவில்லை. மன்னிக்க. நிறைவான உங்களின் கட்டுரையில் நானும் உடன் வந்த உணர்வு. முல்லை நிலத்திற்கும், நெய்தலுக்கும் எப்பொழுது சென்று வரப் போகிறீர்கள்.மிக்க நன்றிங்க முகிலன் அண்ணா

கண்வலிக் கிழங்குதான்.... கிழங்கு என்ற விசயத்தை மறந்துவிட்டேன். எனக்கு அந்த கிராமத்து கிழத்திகள் சொன்னது கண்வலிக்கான மருந்து என்றே....

கட்டுரையை மருதநிலத்தோடு சார்ந்த பொருட்களோடு கொடுக்கவேண்டுமென்ற எண்ணத்தில் கிழத்தி முதல் கடைச்சி வரை நான் உபயோகப்படுத்தினேன். கிழத்தி என்பது கிழவி ஆகாது. மாறாக, அங்கு வாழும் பெண். அவ்வளவே! கிழத்தியை மருதத் தலைவியாகக் கொள்வார்கள். வயல்சார்ந்த நிலத் தலைவியை நான் அவ்வாறு குறிப்பிட்டேன்.

இடையன் இடைச்சி போன்ற சொற்கள் என் நினைவுக்கு வராமல் போய்விட்டது.. இருப்பினும் கடைச்சி க்கு இணையாகவே இடைச்சியைக் கருதுகிறேன். பால் வியாபாரம் முதல் பால் பொருள், எண்ணை, மாவு, கிழங்கு விற்பனை செய்யும் பெண்களை அவ்வாறு சொல்கிறேன்.

உழத்தி, உழவர், இவர்கள் வயல் வேலை செய்யும் மனிதர்கள்.... மேலும் எனது அனுமானத்திலும், மருத நிலம் பற்றி எனக்குத் தெரிந்த விசயங்களை வைத்தும் எழுதியதே இக்கட்டுரை. தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

பீக்காடுகளை வேறெப்படியும் குறிப்பிட எனக்குத் தெரியவில்லை. எனக்கு அந்த காடு ஒரு அனுபவமாக இருக்கவே, அதனைக் குறிப்பிட்டேன்...

நெய்தல் மற்றும் முல்லை நிலத்திற்கு என்றேனும் சென்றால் நிச்சயம் அதைப் பற்றிய குறிப்புகள் தருகிறேன் அண்ணா... (இப்போது இருப்பது பாலையில் :))

நன்றிகள் கோடி.

ஆதவா
08-10-2007, 07:26 AM
ஆதவா ஒரு கிராமத்தை பற்றி அழகாக தந்திருகிறீர்கள். குறிப்பாக அதன் மக்களை பற்றி. டவுனில் கடையில் காபி சின்ன கப்பில் தருவார்கள். கிராமத்தில் பெரிய டம்பளார் முழுக்க தருவர்கள். கிராமத்தில் ஓரிரு நாள் இருந்து வந்தால் நகரம் நரகமாகவே தெரியும்.

நீங்கள் குறிபிட்ட கிராமத்துக்கு நான் போனதில்லை. ஆனால் ஊத்துகுளிக்கு போயிருகிறேன். அங்கு கைத்தமலை மற்றும் சென்னிமலை போயிருகிறேன்.

நன்றிங்க வாத்தியாரே! அருகிலே இருந்தும் சென்னிமலைக்கு இதுவரை சென்றதில்லை. பெரும்பாலும் நான் ஊர் சுற்றுவது மிகக்குறைவு.. நான் இதுவரை சென்ற இடங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்...

கிராமத்து உபசரிப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. நான் ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அங்கே எனக்கு விருப்பமான கடலை வாங்கி சாப்பிட்டேன். என்னை சிறுவயதில் அங்கே அவர் பார்த்திப்பார் போலும்/ அடையாளம் கண்டுபிடித்துவிட்டார். உடனே என்னிடம் காசு வாங்க மறுத்ததோடு அல்லாமல் மேலும் இரு பாக்கட் கடலை கொடுத்தது எனக்கு உண்மையில் பாசத்தின் உச்சத்தைப் பிடித்தது போல இருந்தது. மேலும் எனது அக்காவீட்டிற்கு வெகு தொலைவில் இருக்கு ஒரு வயலுக்குச் சென்றுதான் வாய்க்காலில் குளித்து துவைத்து சாப்பிட்டு வந்தோம்.... இங்கே நகரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகே உள்ளவர்களைக் கூட எனக்குத் தெரியாது என்பதைப் பற்றி யோசித்தப்போது சிரிப்புதான் வந்தது....

ஆதவா
08-10-2007, 07:30 AM
கிராமத்தில் எவ்வளவோ விசயங்கள் இருந்தாலும் சில விசயங்கள் சரியாக கிடைப்பதில்லை. மிக முக்கியமாக நல்ல மருத்துவம் என்பது சரியாக கிடைப்பதில்லை. பிரவசம், போன்ற அவசரகாலங்களுக்கு கிராமத்திலிருந்து சுமார் 15 மைல் போக வேண்டியிருக்கிறது. ஆட்டோவில் போக ஒரு மணி நேரமாகிவிடுகிறது. அதனால் பல உயிரழப்புகளும் நேர்ந்துவிடுகிறது.

அதே போல் நீங்கள் கட்டுரையின் நீளம் கருதி சொல்லாமல் விட்ட பல விசயங்கள் உள்ளன. புதியவர் ஒரு ஊருக்குள் நுழையும் போது உங்களை யாரென்று விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 'ஏய் யாருப்பா நீ... யார் வீட்டிற்கு வந்திருக்கிறாய்?' கண்ணில் படும் அனைவருமே விசாரிப்பார்கள். அடையாளம் கண்டுகொண்டால், பெரும்பாலானோர்வீடுகளில் விருந்துபச்சாரமும் நடக்கும். நீங்கள் உங்கள் உறவினர் வீட்டை அடையும்முன்னே அவர்களின் வீட்டிற்கு நீங்கள் வந்துள்ள தகவல் சென்றிருக்கும். அதுவும் எங்கள் கிராமத்தில் ஆறு, குளம், குட்டை, மலையருவி, மலைக்குன்றுகள் என பலவகையான மனதை கொள்ளை கொள்ளும் அனைத்து அம்சங்களும் உண்டு. எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென்று வயல்களும், தோப்புகளும்...! நாங்கள் ஏதேனும் முக்கிய முடிவுகள் (காதலிக்கு கடுதாசி கொடுப்பது உள்பட) எடுப்பதாயிருந்தாலும் மலைக்குன்றிகளின் மேல் அமர்ந்து விவாதித்துதான் முடிவெடுப்போம்.

இருக்கலாம் ஜே.எம் அவர்களே! ஆனால் முந்தியெல்லாம் கிராமத்தில்தானே அத்தனை பிரசவங்களையும் பார்த்தார்கள்//// ??

நீங்களும் கிராமத்தில் இருந்து வந்தவர் போலிருக்கிறதே!! (அதிலும் கடுதாசி கொடுக்கும் இடம்...) கிராம உபசரிப்புகளுக்கு ஈடு இல்லை....

நன்றிங்க ஜே.எம்

ஜெயாஸ்தா
08-10-2007, 07:44 AM
நீங்களும் கிராமத்தில் இருந்து வந்தவர் போலிருக்கிறதே!! (அதிலும் கடுதாசி கொடுக்கும் இடம்...) கிராம உபசரிப்புகளுக்கு ஈடு இல்லை....

நன்றிங்க ஜே.எம்

ஆதாவாவா? கொக்கா? கண்டுபுடிச்சீட்டீங்களே.... ஆதாவா...! ஆரம்பத்தில் குக்கிராமமாய் இருந்த என் கிராமம் இப்போது பேரூராட்சியாய் வளர்ச்சியடைந்து, சிறிது நகரத்தின் சாயலோடு இருக்கிறது. இப்போது அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. ஆனால் இன்னும் கிராமவாசனையும் உண்டு.

ஆதவா
08-10-2007, 08:02 AM

நீங்களே குறிப்பிட்டீர்கள். அதனால் சொன்னேன்... இப்போதெல்லாம் கிராமத்தில் இருந்து வருபவர்களை என்று பொறாமையோடுதான் பார்க்கிறேன்.... பின்னே! எத்தனை பாசமிகு மனிதர்கள்.!!!

அமரன்
08-10-2007, 08:31 AM
மருதத்தின் சிறப்பு மனதை மயக்கி புத்துணர்வு தரும் முரண் செய்யும் மாருதம். அந்த மாருதம் கடந்து வரும் பாதைகளின் அதற்கு ஒப்பான வரிகளுடன் ஆதவாவின் பயணக் கட்டுரையும். தெருவின் இருமருங்கும் பச்சைக்கம்பளம் விரித்தால் போல் இல்லை இல்லை விண்டோஸ் எக்ஸ்.பியின் ஸ்டான்டர்ட் திரைபோல பச்சை பசும் வெளியும் நீல வெளியும் ஓரிடத்தில் கொஞ்சிக்குழாவும். அந்த ரசிப்புடன் நடந்துகொண்டே இருந்தால் பொட்டல் காடுகளில் ஆடு மாடுகள் மனிதரை மேய்த்துக்கொண்டிருக்கும்.அதைக்கண்ட நாய்கள் அவற்றை மேய்த்துக்கொண்டிருக்கும். அடுத்ததுதான் குடிமனைகள். நான் இருந்த பல ஊர்கள் அப்படித்தான். அந்த ஊர்களுக்கு என்னை இட்டுச் சென்றது இந்தக்கட்டுரை.

இலக்கிய நயத்துடன், புஸ்பலதாக்காவின் ஐந்திணையில் நான் படித்த விடயங்களை எப்படிக் கோர்ப்பது என்பதை அறிந்தேன்.

நன்றி ஆதவா..

ஆதவா
08-10-2007, 08:53 AM

பலே! நீங்களும் கிராமத்தில் இருந்தவரா!!

நன்றி நண்பரே!!

மலர்
09-10-2007, 01:24 AM
மருதத்தில் - பயணக்கட்டுரை
நல்லா ஊர் சுற்றி ஜாலியாய் என்ஜாய் செய்துட்டு பயணக்கட்டுரையா தாரியள்
ஆதவன் எனக்கு சில வார்த்தைகள் தான் புரியலை.. தெளுவு, கடைச்சிகள், கடையர்கள் உழத்திகள்..
இடையன் இடைச்சி தெரியும் கடையர் கடைச்சி எல்லாம் நான் படித்த கோனார் தமிழுரையில் இல்லையே
இந்த கட்டுரையை படிக்கும் போது உண்மையில் என் கிராமமும் நினைவுக்கு வந்தது.. ஆனால் இதை விட கொஞ்சம் வளர்ச்சியடைந்த நிலை.
(ஆதவாவின் மொழியில் காட்டுவாசிகள் கூட்டம்)
கிராமத்து வாழ்க்கை அது ஒரு தனி சுகம்..
வீட்டில் குளித்த நாளைவிட வயலில் மோட்டாரில் குளித்த நாட்கள் அதிகம்..அதுபோல் மரம் ஏறி திட்டு வாங்கிய நாட்கள்,சுரண்டி கட்டி கொடுக்காய் பறித்த நாட்கள்,இன்னும் எத்தனையோ..
நினைவுகளே இனிமையானது
வேப்பம்பழத்திலிருந்து ஆரம்பித்து பட்டுபூச்சிபழம்,கொய்யா பழம்,பப்பாளிபழம் என்று எதையும் விட்டுவைத்ததே கிடையாது
நன்றி ஆதவன் பழைய நினைவுகளை நினைக்க வைத்தமைக்கு..

மலர்
09-10-2007, 01:26 AM
இந்த பகுதியை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டேன்.மன்னிக்கவும்

சூரியனுக்கு மன்னிப்பா.. கிடையவே கிடையாது....
அவட்டாரில் மட்டும் கண்ணாடி போட்டால் போதாது என்று நினைக்கிறேன்

டவுனில் கடையில் காபி சின்ன கப்பில் தருவார்கள். கிராமத்தில் பெரிய டம்பளார் முழுக்க தருவர்கள்.
வாரே வா புல் டம்ளர்ல காபி குடித்த அநுபவமோ
எங்க வீட்லேயும் இன்னும் பெரிய டம்ளர் தான்..
சிறுவயதில் இருந்தே வீட்டில் காபி அல்லது டீ நிறைய குடித்து பழக்கம்.. ஆனா நான் படித்த கல்லூரி ஹாஸ்டலில் காலையில் காபி டீ எதுவுமே கிடையாது..முதலில் ரொம்ப கஷ்டப்பட்டு தான் அந்த பழக்கத்தை மாற்றினேன்

'ஏய் யாருப்பா நீ... யார் வீட்டிற்கு வந்திருக்கிறாய்?' கண்ணில் படும் அனைவருமே விசாரிப்பார்கள்.
அதானே புதிதாக யார் வந்துருக்காங்கன்னு தெரியலைன்னா அவங்களால வேலையே பாக்க முடியாது

பிரவசம், போன்ற அவசரகாலங்களுக்கு கிராமத்திலிருந்து சுமார் 15 மைல் போக வேண்டியிருக்கிறது. ஆட்டோவில் போக ஒரு மணி நேரமாகிவிடுகிறது. அதனால் பல உயிரழப்புகளும் நேர்ந்துவிடுகிறது.
தொலைபேசி வந்ததால் இப்போ கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கிறேன் அண்ணா..

நான் கொடுத்து வைத்ததாக சொல்லப்படும் அரிதான நபர்களில் நீங்களும் ஒருவர்... ஆனால் என்றென்றும் நான் அதிர்ஷ்டக்காரனல்ல.
சும்மா பில்டப் தரப்படாது
அப்புறம் நம்ம லண்டன் தாதாவிடம் இருந்து ஆட்டோ தான் வரும்

அதிலும் உடன் வந்தது எனது தங்கைமார்கள்/ அதனால் ஒரே அமர்க்களமாக இருந்தது.
நம்பி விட்டோம் ஆதவனுக்கு 5 மாமா இருப்பதையோ அவர்களுக்கு பெண்பிள்ளைகள் உண்டு என்பதையோ நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்

அங்கே எனக்கு விருப்பமான கடலை வாங்கி சாப்பிட்டேன்.

சாப்பீட்டீர்களா.. இல்லை போட்டீர்களா

இருக்கலாம் ஜே.எம் அவர்களே! ஆனால் முந்தியெல்லாம் கிராமத்தில்தானே அத்தனை பிரசவங்களையும் பார்த்தார்கள்//// ??
ஆனால் அதில் நிறைய உயிர் இழப்புக்கள் உண்டு ஆதவன்

இப்போதெல்லாம் கிராமத்தில் இருந்து வருபவர்களை என்று பொறாமையோடுதான் பார்க்கிறேன்.... பின்னே! எத்தனை பாசமிகு மனிதர்கள்.!!!அடடா.. ஜே எம் வாருங்கள் உங்களுக்கு எனக்கு எல்லாம் சுத்தி போட வேண்டும்
ஆமாம் ஆதவா நாங்க ரொம்ப பாசமானவர்கள்..
பாருங்க சொல்லும் போதே கண்ணீர் வருது....

சிவா.ஜி
09-10-2007, 10:09 AM
மலரு கலாய்ப்பெல்லாம் சூப்பரு...கலக்கும்மா கலக்கு...

தங்கவேல்
10-10-2007, 04:30 AM
அருமை ஆதவா... அருமை. எனது ஊரும் இப்படித்தான் இருக்கும். நகர வாழ்வில் சிக்கினாலும் இன்னும் கிராம வாழ்க்கைக்கு மனது ஏக்ன்குகிறது...

ஷீ-நிசி
10-10-2007, 05:10 AM
ஒரு கிராமத்தினை வெகு அழகாக விவரித்திருக்கிறாய் ஆதவா.. காட்சிகள் கண்முன்னே விரிகின்றது.