PDA

View Full Version : அவளைக் கொன்றுவிடு!



சிவா.ஜி
06-10-2007, 10:19 AM
இன்னும் சிறிது நேரத்தில் ஒரு கொலை செய்யப்போகிறேன்.யாரை...என்னைப் பெற்றவளை....'படுபாவி..பெத்தவளையே கொலைசெய்ய துணிஞ்சிட்டியே...நீயெல்லாம் ஒரு மனுஷனா' நீங்கள் திட்டுவது கேட்கிறது.ஆம்...இந்த நொடியில் நான் மனிதனில்லை....மனம் மரத்த ஒரு மிருகம்.ஏன் அவளைக் கொலைசெய்யவேண்டும்...?சொல்கிறேன்.அந்த காரியத்தை செய்தபின் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காது...அதனால் இப்போதே சொல்லிவிடுகிறேன்..சொல்லிமுடித்ததும்..இன்னும் கொஞ்சம் வேகம் வரும் அது என் செயலுக்கு உதவியாக இருக்கும்.

அம்மாவின் அப்பாவும் செல்வந்தர்,அப்பாவின் அப்பாவும் செல்வந்தர்.இருவரும் வெகு அழகாக தங்கள் பிள்ளைகளின் திருமண வியாபரத்தை நல்லமுறையில் நடத்தி ஏராளமான பணத்தை இவர்களுக்கு விட்டுச்சென்றார்கள்.தொழில் எதுவும் செய்யவில்லையென்றாலும் ஏழரை (ஏழு என்பதே ஏன் வழக்கத்தில் இருக்கவேண்டும்)தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்.வழக்கமான பணக்கார பெற்றோரின் உதாசீனத்தில் நானும் என் அண்ணனும் வளர்ந்தோம்.பெரிய பாசமெல்லாம் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.நடு இரவில் வீடு திரும்பும் பெற்றோர் தூங்கிக்கொண்டிருக்கும் எங்களை தட்டி எழுப்பியா கொஞ்சுவார்கள்.அப்படியே கொஞ்சினாலும் அந்த 'மழலை'மொழி கேட்க எங்களால் மு(டி)தியாது.

அண்ணன் அவன் போக்கில் வளர்ந்தான்,எவ்வளவு செலவு செய்கிறோம் என்ற கணக்கே இல்லாமல் செலவழித்தான்.கெட்ட சகவாசம்,கெட்ட பழக்கவழக்கங்கள்...அவனைக் கண்டிக்க யாருமில்லை.படிப்பு ஏறவில்லை.ஆனால் நான் வித்தியாசப்பட்டேன்.எங்கள் தலைமுறையில் யாருடைய மரபணுவோ எனக்கு வாய்த்திருக்கவேண்டும்.படிப்பு ஒழுங்காக வந்தது.கணிணித்துறையில் பொறியியல் படித்தேன்.
வளாக நேர்முகத்தேர்விலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது.சம்பளம் ஒரு பெரிய விஷயமில்லை.அதைவிட அதிகமாக எனக்கு பாக்கெட்மணி கிடைத்துக்கொண்டிருந்தது.ஆனால் நான் வேறு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன்.அதற்கு இந்த வீட்டிலிருந்து வெளியேறி வசிப்பதுதான் சிறந்தது என்று நினைத்ததால் வேறு நகரம் போனேன்.

நான் பணிபுரிந்த அந்த நிறுவனத்தில்தான் காயத்ரியும் இருந்தாள்.அடடா..இதுவரை என் பெயரைச் சொல்லவில்லையே...என் பெயர் கார்த்திக்.இதை இங்கே சொல்ல ஒரு காரணம் இருக்கிறது.காயத்திரின் நெருக்கம் எனக்கு இந்த பேராலும்,தோற்றத்தாலும் கிடைத்தது.'நீங்க பாக்கறதுக்கு இளமையான அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் மாதிரி இருக்கீங்க...அதிசயமா அதே பேரும் உங்களுக்கு' இப்படித்தான் ஆரம்பித்தது.காஃபிஷாப்,பீச்,மாயாஜால் என்று காதலை வளர்த்தோம்.

சில நேரங்களில் பிதாமகன் லைலா மாதிரி காயூ என்னைப் பார்த்து'லூஸாடா நீ'என்று கேட்பாள்.ஏனா..? பின்ன அவளை தள்ளி உட்கார வைத்துவிட்டு அரைமணிநேரமாக அவளையே உற்று பார்த்துக்கொண்டிருந்தால் அப்படித்தான் கேட்பாள்.உண்மையில் அவளை பார்த்துக்கொண்டிருக்கும்போது பார்வை மட்டும்தான் அவள் மேல் இருக்கும்,மனதுக்குள் பாரதிராஜா படத்தின் டூயட் ஆடும் வெள்ளைத் தேவதைகள் ஆயிரம்பேர் லல்லல்லா..பாடிக்கொண்டிருப்பார்கள்.'என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனைநாளாய் எங்கிருந்தாயென்று' உள்ளுக்குள் உருகிக்கொண்டிருப்பேன்.அந்த அளவுக்கு பாசத்திற்காகவும்,காதலுக்காகவும் ஏங்கியிருந்தேன்.


காயூவின் குடும்பமும் பணக்காரக் குடும்பம்தான்.அம்மா இல்லை அப்பா மட்டுமே.எப்போதாவது கண்ணில் படும்போது மட்டும் 'என்னடா காயூ...நல்லா படிக்கிறியா..லண்டன் போறேன்..வரும்போது ஏதாவது வேணுன்னா சொல்லுடா மை ஸ்வீட் ஏஞ்சல்' என்பதோடு சரி.அவளும் என்னைப்போலவே வளர்ந்ததால் இருவரும் ஒருத்தர்மேல் ஒருத்தர் காதலை சின்ஸியராக காட்டினோம்.பாசாங்கு இல்லாத பாசத்தை பரிமாறிக்கொண்டோம்.இரண்டு குடும்பங்களுமே அந்தஸ்தில் சமமானவர்களென்பதால் இந்தக்காதல் கல்யாணத்தில் முடிவதில் எந்த தடையுமிருக்காது என்ற என் எண்ணம் இன்று காயுவை அம்மாவிடம் அறிமுகப்படுத்தியபோது உடைந்து சுக்கு நூறானது.

ஆரம்பத்தில் வரவேற்பென்னவோ பலமாகத்தான் இருந்தது.சடை ஜோக்குகளைச் சொல்லி ஆர்ப்பாட்டமாய் சிரித்தாள் அம்மா.காயூ என்னை பார்த்த பார்வையில்'ப்ளீஸ் காப்பாத்துடா கார்த்திக்'என்று கெஞ்சுவதைப்பொல் இருந்தது.கொஞ்சம் பொறுத்துக்கோ என்று நானும் கண்ணாலேயே பதில் சொன்னேன்.அம்மா காயுவின் குடும்பத்தைப்பற்றி விசாரித்தாள்,அவளுடைய அப்பா பெயர் கேட்டாள்.சொன்னதும் இன்னும் கொஞ்சம் விவரம் கேட்ட அம்மாவின் முகம் மாறியது.'அவரோட பொண்ணா நீ' கேட்ட தொணியே வித்தியாசமாக இருந்தது.அதுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவள் முகத்தை கடுமையாக்கிக்கொண்டு 'கார்த்திக் இந்த கல்யாணம் நடக்காது' என்று திட்டவட்டமாகச் சொன்னாள்.
'ஏன்.... ஏன் நடக்காது'கைகால்களெல்லாம் பதட்டத்தில் நடுங்கியபடி கேட்டேன்.
'நடக்காதுன்னா நடக்காது...இதுக்குமேல என்னை எதுவும் கேக்காதே' சொல்லிவிட்டு அறைக்குள் நுழைய இருந்தவளை இரண்டு கைகளையும் விரித்து தடுத்து கோபத்தோடு மீண்டும் கேட்டேன்..'ஏன்...காரணம் சொல்லு'

என்னுடைய முக மாற்றத்தையும்,ஆவேசத்தையும் பார்த்த அம்மா முகத்தில் அதிர்ச்சியுடன்'கார்த்திக் இந்த கல்யாணம் நடக்காதுங்கறதவிட நடக்கக்கூடாதுங்கறதுதான் பொருத்தமான வார்த்தையா இருக்கும்.'சொன்னவளைப் புரியாமல் பார்த்தேன்.மீண்டும் ஆவேசமாய்க் கத்தினேன்.அதே வேகத்தில் அம்மாவும் திரும்பக் கத்தினாள்...'ஏன்னா அவ உன் தங்கைடா' கைகாலெல்லாம் ஆட கத்தி சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்திக்கொண்டாள்.அதிர்ச்சி கொஞ்சமும் விலகாமல் திரும்பினேன்.காயு இல்லை.

நீங்களே சொல்லுங்கள் எந்த பாசத்திற்க்காக இத்தனை வருடங்களாகக் காத்திருந்தேனோ..அது காதலின் மூலமாக கிடைக்குமென்று நினைத்திருந்தேனோ,அவளை எப்படியெல்லாம் மனதில் கற்பனை செய்துவைத்திருந்தேனோ....எல்லாமே இப்போது இல்லையென்றாகிவிட்டதும் எனக்கு எப்படி இருந்திருக்கும்.காயுவின் அப்பா என் அம்மாவின் ஆண் நன்பராம்..அப்படியென்றால் அவரும் எனக்கு ஒரு அப்பாவா..?கடவுளே ஏன் இப்படி....?அந்த நேரத்தில்தான் நான் மிருகமானேன்.இப்படி ஒரு அம்மா இனி இருக்கக்கூடாது.தாய் என்ற உறவு எப்படிப்பட்டது..? தெய்வத்துக்கும் மேலாக மதிக்கப்படும் தாய்மார்களுக்கிடையில் இப்படி ஒரு ஜென்மமா...என் கேள்விகளுக்கெல்லாம்...என் மனதிடம் கிடைத்த பதில்தான் 'அவளைக் கொன்றுவிடு' என்பது.

சரி காரணத்தை தெரிந்து கொண்டீர்களல்லவா....வீணாக உபதேசம் செய்யாமல் வழிவிடுங்கள்..கதவைத்திறந்து வெளியே போனதும் கொலை செய்யவேண்டும்.

கதவைத்திறந்து வெளியே வந்தவன் அதிர்ந்தேன்.அம்மா இறந்திருந்தாள்.பக்கத்தில் அப்பா கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன். அப்பாவைப் பார்த்தேன்...


"நீ கூட என் பிள்ளையில்லையாண்டா...."

aren
06-10-2007, 10:36 AM
அருமை சிவா. சிறுகதை வெகு நேர்த்தியாக வந்திருக்கிறது. ஒரு சிறிய கருவை வைத்து அழகாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஆதவா
06-10-2007, 11:00 AM
இறுதி வரிகள் இன்னும் நெஞ்சில் இருக்கின்றன... கதை சொல்வதை அழகாய் செய்திருக்கிறீர்கள். முன்னிலையில் தன்மையாக கதை விவரிப்பது அவ்வளவு எளிதல்ல. எல்லா எக்ஸ்பெரஷன்களையும் அடக்கவேண்டும்

ஒரு கணவனின் மனதைக் கெடுத்தவள் கிட்டத்தட்ட விபச்சாரியாகத்தான் இருக்கவேண்டும். கதைப்படி! திருந்த ஒரு வாய்ப்பேனும் கொடுத்திருக்கலாம். மகனை வாழ வைத்து தந்தை செய்தது உண்மையிலேயே அவர் கார்த்திக்கு அப்பாவாக இல்லாவிடினும் அப்பாவே!

கதை அருமை

சிவா.ஜி
06-10-2007, 11:42 AM
நன்றி ஆரென்.மன்றத்தின் உறவுகளின் ஊக்கம்தான் அத்தனைப் படைப்பாளிகளையும் அடுத்த படிக்கு கொண்டு செல்கிறது.அந்த வகையில் உங்கள் பாராட்டு உற்சாகத்தைத் தருகிறது.

சிவா.ஜி
06-10-2007, 11:44 AM
டெக்னிகலான விமர்சனம்...கூடவே கதையின் போக்கை கவனித்ததால் வந்த கருத்து....மிக்க நன்றி ஆதவா.என்னவோ தண்டனை கொடுக்கவேண்டுமென தோன்றியது.கொடுத்துவிட்டேன்.

ஆதவா
06-10-2007, 11:48 AM
டெக்னிகலான விமர்சனம்...கூடவே கதையின் போக்கை கவனித்ததால் வந்த கருத்து....மிக்க நன்றி ஆதவா.என்னவோ தண்டனை கொடுக்கவேண்டுமென தோன்றியது.கொடுத்துவிட்டேன்.
அண்ணா! எதற்கும் அந்த அம்மாவின் நெஞ்சில் கார்த்திக்கின் காதை வைத்து பார்க்கச் சொல்லுங்கள்... உயிர் இருந்தால் பிழைக்க வைக்கலாம்... :rolleyes:

சிவா.ஜி
06-10-2007, 11:52 AM
அப்படி செய்து தொடர்ச்சியாக இன்னொரு ட்விஸ்ட் கொடுத்துவிடலாமா..?

ஆதவா
06-10-2007, 11:53 AM
அப்படி செய்து தொடர்ச்சியாக இன்னொரு ட்விஸ்ட் கொடுத்துவிடலாமா..?

:):):):)

சிவா.ஜி
06-10-2007, 11:54 AM
:):):):)

இப்படீன்னா........புரியலீங்கோ....

ஆதவா
06-10-2007, 11:55 AM
இப்படீன்னா........புரியலீங்கோ....

எப்படி செய்தாலும் சரியே!

lolluvathiyar
06-10-2007, 12:06 PM
கதை அற்புதம் என்று மனதில் நினைத்தாலும் பாராட்ட வார்த்தை வரவில்லை சிவா. காரனம் பாராட்டினால் கொலையை பாராட்டுவது போல ஆகிவிடுமோ என் மனசாட்சி மனமில்லாமால் உறுத்துகிறது.

கதையின் இறுதி வார்த்தை இன்னொரு கதையை விளக்கியது.

"நீ கூட என் பிள்ளையில்லையாண்டா...."

கதை கொண்டு சென்ற விதம் மிக அருமை. சந்தர்ப்ப சூல்நிலையில் ஒரு மகனின் உனர்ச்சியை அருமையாக காட்டி விட்டீர்கள்.
ஆனால்


இப்படி ஒரு அம்மா இனி இருக்கக்கூடாது.தாய் என்ற உறவு எப்படிப்பட்டது..? தெய்வத்துக்கும் மேலாக மதிக்கப்படும் தாய்மார்களுக்கிடையில் இப்படி ஒரு ஜென்மமா

தாய் என்பது பெற்றெடுத்த உறவுதான். நெறி தவறினாலும் தாய் தாய் தான். ஊருக்கே வேசியே ஆனாலும் மகனுக்கு தாய் தெய்வம் தான்.

சிவா.ஜி
06-10-2007, 12:10 PM
நிச்சயமாக தாய் தாய்தான்.ஆனால் அதைஉணரும் மகனின் மனநிலையில் அவனில்லையே...அதுதான் மனம் மரத்த மிருகமாகிவிட்டானே நியாய தர்மங்களை யோசிக்கும் சக்தி அவன் மூளைக்கு அந்த நிமிடத்திலில்லையே...இப்படித்தானே பல கொலைகள் உணர்ச்சிவயத்தில் நடந்துவிடுகிறது.நீங்கள் சொன்னது உண்மைதான் வாத்தியார்.ஆனால் கொலையைப் பார்க்காதீர்கள் 'கதை'யை பார்த்து சொல்லுங்கள்..தேறுகிறதா என்று.

மலர்
07-10-2007, 12:51 PM
அன்பு சிவா அண்ணா....

இந்த கதையை படிக்கும் போதும் சரி இப்போதும் சரி எப்படி விமர்சிக்க என்றே தெரியலை..

கார்த்திக்கின் பக்கத்தில் இருந்து பார்த்தால் இப்படி பட்ட பெற்றோருக்கு பிள்ளையாய் பிறந்ததை விட அவன் செய்த தவறு என்ன?

தாய் என்பவள் கடவுளுக்கு சமம்..தான்.
ஆனால் இவளை பார்த்தால் பேய் மாதிரியல்லவா இருக்கு....


நீ கூட என் பிள்ளையில்லையாண்டா..

மனைவி தன் கணவனைப்பார்த்து இந்த குழந்தை நமக்கு பிறக்கவில்லை என்று சொன்னால் எந்த ஆண் தான் கொலைகாரனாக மாறாமல் இருப்பான்......

கதை அருமை அண்ணா.....
இந்த தங்கையின் மனமார்ந்த பாராட்டுக்கள்..

ஜெயாஸ்தா
07-10-2007, 01:06 PM
கடைசியில் வரியில் கதையின் திருப்பத்தை மறைத்துவைத்திருந்தது நல்ல முயற்சி. கதையின் கருவைவிட கதையோட்டம் நன்றாக இருந்தது சிவாஜி.

சிவா.ஜி
07-10-2007, 01:13 PM
நன்றி மலர்...இந்த மாதிரியான கதைகளுக்கு விமர்சனம் செய்யமுடியாதுதான்.ஏனென்றால் இது முழுக்க முழுக்க கமர்ஷியலானகதை..இதில் நான் எந்த கருத்தும் சொல்ல வரவில்லை.
எனவே கதையை கதையாய் படித்து சொன்னதற்கு நன்றி.

சிவா.ஜி
07-10-2007, 01:15 PM
கடைசியில் வரியில் கதையின் திருப்பத்தை மறைத்துவைத்திருந்தது நல்ல முயற்சி. கதையின் கருவைவிட கதையோட்டம் நன்றாக இருந்தது சிவாஜி.

சரியான கருத்து ஜே.எம். கதையோட்டத்திற்க்காகத்தான் இந்த கதையை எழுதினேன். மலருக்குச் சொன்னதைப்போல எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. நன்றி ஜே.எம்...சரியான புரிதலுக்கு.

தளபதி
07-10-2007, 01:28 PM
தாயைக் கொல்லப் போகிறேன் என்று மகன் கிளம்பியவுடன் பரபரப்பு ஏற்பட்டது, காரணம் கண்டவுடன் சிறிது களைப்படைந்தேன். ஒரு தாயைக் கொல்ல இது தவிர வேறு நல்ல காரணம் ஒரு மகனுக்கோ அல்லது அவளது கணவனுக்கோ கிடைக்காது. இதன் மூலம் அவள் பண்பாடு இல்லாதவள் என்று பொருள் கொள்ளலாம். ஒரு பெண்ணால் நல்லதைச் செய்யவும் முடியும் கெட்டதை மறைக்கவும் முடியும்.

ஆனால் அவள் எந்த பண்பாட்டை காப்பாற்றுவதற்காக இந்த உண்மையை இப்போது சொன்னாள்?? இது தான் எனக்கு புரியவில்லை. அதுவும் அவள் வாயேலேயே சொன்னது கொஞ்சம் நெருடலாக உள்ளது. இந்த இடத்தில் எழுத்தாளர் சிறிது யோசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

நண்பரே!! சிவாஜி, உங்களிடம் எப்போதும் வித்தியாசம் இருக்கும், ஆனால் இந்த கதையைப் பாராட்டமுடியவில்லை. ஏனென்று தெரியவில்லை. நான் தவறாக உணர்ந்திருந்தால் மன்னிக்கவும்.

சிவா.ஜி
07-10-2007, 01:37 PM
கண்டிப்பாக தவறு இல்லை குமரன்.நான் ஏற்கனவே சொன்னதைப்போல இது லாஜிக் இல்லாத கமர்ஷியல் கதை.இதில் எந்த கருத்துமில்லை...ஒரு ட்விஸ்ட் கொடுக்கும் லேசான 120 வோல்ட் அதிர்ச்சிக்காக மட்டுமே எழுதப்பட்ட கதை. ஆனால் நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன். தாய் தன் வாயாலேயே ஏன் சொன்னாளென்றால்...என்னதான் நெறி இழந்தவளென்றாலும் தெரிந்தே ஒரு சகோதரன் சகோதரியை மணந்துகொள்வதை அவளால் பார்க்கமுடியுமா...? அதேபோல...அந்த மகன் தாயைக்கொன்றது, வெறும் அவள் நெறி இழந்தவள் என்பதால் மட்டுமல்ல...தன் தங்கையிடமே இதுநாள்வரை காதலியாய் நினைத்து பழகிவந்திருக்கிறோமே..அந்த பாதகத்தை செய்ய இவளும் ஒரு காரணம் என்றா ஆத்திரத்தாலும்தான்.விமர்சனத்திற்கு மிக்க நன்றி

அன்புரசிகன்
07-10-2007, 01:54 PM
கதையை நகர்த்திய விதம் அருமை. குமரன் கூறுவதுபோல் இறுதியில் காட்டிய பாசம் சற்று வித்தியாசமாகவே உள்ளது.

பாராட்டுக்கள் சிவாஜி.

சிவா.ஜி
07-10-2007, 01:57 PM
நன்றி அன்பு.

பூமகள்
07-10-2007, 04:56 PM
ஒரு காதல் கதை என்று நினைத்த எனக்கு... த்ரில்லர் ஸ்டைலில் கொண்டு சென்று....ஏற்கனவே தெரிந்த கருதானென்றாலும் முடிவில் ட்விஸ்ட் வைத்து முடித்த விதம் மிக அருமை.
வாழ்த்துகள் சிவா அண்ணா.
காதல், பாசம், கோபம், டிவிஸ்... எல்லாமே கனகச்சிதம்.
ஒரு சிறுகதைக்கு இருக்கவேண்டிய அனைத்தும் இருக்கு...
ஏனோ கொலைன்னு சொல்லி பயமுறுத்திட்டீங்க...
சிவா அண்ணா.. ஒரு அன்பு வேண்டுகோள்...
அடுத்து ஒரு ரத்தம் காட்டாத ஒரு மென்மையான கதை தங்கைக்காய் தரமுடியுமா??

அமரன்
07-10-2007, 05:54 PM
இது லாஜிக் இல்லாத கமர்ஷியல் கதை

சிவா..நேற்று இக்கதை படித்து விட்டு (அவசராவசரமாக) ஆதவாவின் பின்னூட்டதை ஒட்டி இருவேறு கோணத்தில் எனது கருத்தை தட்டச்சினேன். ஆனால் மேலும் பல பேசி வேண்டி இருந்ததால் ப்திவுசெய்யாமல் சேமித்துவிட்டு (இன்று முக்கியமான ஒன்றுகூடல் ஒன்று இருந்தமையால்) உறங்கிவிட்டேன். இப்போ வந்து பார்த்தால் உங்கள் இந்த வரி அப்பின்னூட்டத்தை இங்கே இடவிடாமல் செய்து விட்டது... கிளைர்ச்சியான (திரில்) கதை நகர்த்தல். அதிரடி திருப்பமாக முடிவு. பாராட்டுகள்.

ஓவியன்
07-10-2007, 06:19 PM
மன்றத்தின் க்ரைம் கதாசிரியராக பரிணாமடைந்து கொண்டிருக்கும் சிவாவின் சிறுகதைகளில் திருப்பு முனையான கதை. கதைக் கரு ஒரு க்ரைம் கதையின் பாணியிலமைகப்பட்டுள்ளமையால் இதிலே சமூக கருத்துக்களை எதிர்பார்க்க இயலாதுடன் சரியா, தப்பா என்று விவாதிக்கவும் முடியாது...

ஆனால் க்ரைம் கதைகளை எழுதுகையில் குற்றாவாளி இறுதியில் அகப்படுவதாகவோ, ஒரு நீதி கிடைப்பதாகவோ முடிப்பது சமூதாயத்திற்கு நலனானது. அந்த வகையில் கதையினை கொண்டு நடாத்திய விதமும் முடித்தவிதமும் அருமை. க்ரைம் கதைகளின் வெற்றி பெரும்பாலும் முத்தாய்ப்பான முடிவுகளிலே தங்கியிருக்கும். அந்த வகையிலே அசத்தலாக முடித்து தன்னை நிரூபித்துள்ளார் சிவா,ஜி. இங்கே கதை நகர்த்திச் செல்லப்பட்ட வேகம் குறிப்பிடத்தக்கது, வரிகளுக்கு வரிகள் விறு விறுப்பு, காட்சிகளை விபரித்த விதமென எல்லாம் அழகாக இருந்தது.

மொத்தத்திலே சிறந்த ஒரு க்ரைம் கதைக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இணைய நண்பன்
07-10-2007, 07:47 PM
வித்தியாசமான கதை அமைப்பு.அதுவும் சொன்ன விதம்..அடடா...ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி.கதையை நான் விமர்சிக்க வில்லை.கதை சொன்னவிதம் அருமை.பாராட்டுக்கள்

சிவா.ஜி
08-10-2007, 08:00 AM
அன்புத்தங்கை பூமகள்(உங்கள் வேண்டுகோளின்படி அடுத்த கதை மென்மையானதாக இருக்கும்),அமரன்(தனிமடல் கருத்து படித்தேன்..பிரமாதம்..பின்னர் கதைக்கலாம்),ஓவியன்(மிக அழகான பின்னூட்டம்) மற்றும் இக்ராம் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பூமகள்
08-10-2007, 08:17 AM
அன்புத்தங்கை பூமகள்(உங்கள் வேண்டுகோளின்படி அடுத்த கதை மென்மையானதாக இருக்கும்)
மிக்க மகிழ்ச்சி அண்ணா. இந்த அன்புத் தங்கையின் வேண்டுகோளை ஏற்றதற்கு மிகுந்த நன்றிகள்.
உங்களின் படைப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்...!!:icon_b:

மனோஜ்
27-10-2007, 03:59 PM
சிவா நல்ல கதைஅமைப்பு ரிசல்ட் நன்று

நேசம்
28-10-2007, 10:35 AM
தாய் கொல்ல கிளம்பும் ஒருத்தன் அதற்கான காரணங்களை கூறும்போது முடிவு வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அது போலவே இருந்தது. வாழ்த்துக்கள் சிவா − ஜி

அக்னி
13-11-2007, 02:21 AM
என்ன சொல்ல இந்தக் கதை பற்றி...
திக் திக் ஆரம்பம்...
பணக்கார மேல்தட்டு குடும்பப் பின்னணி...
வாழ்வை செம்மையாக வாழத்துடிப்பவன் மேல் படர்ந்த மென்மைக் காதல்...
அவன் இயல்பை வன்மையாக்கும் தாயின் நடத்தை...
திடீரென ஆக்ரோஷம் கொண்டு தாயைக் கொலை செய்த தந்தை...

விறுவிறுப்புக் குன்றாத கதைக்குப் பாராட்டுக்கள்...

ஆனால், இன்று நாகரீகம் என்ற போர்வையில் நிஜமாக இப்படியான நிகழ்வுகள் நிகழ்கின்றன என்பதும் உண்மையே.
கலாச்சாரம் என்பது, சாரமற்றுப் போய்க்கொண்டிருக்கின்றது.

சரி... உண்மையிலேயே இப்படி ஒரு நிகழ்வு நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம்.
திருமணம் முடித்தபின்னர் தாம் சகோதரர் என்று தெரிய வந்தால்...
யார் தவறு..?

விடையில்லாத வினாக்கள்...
ஆனால், தவிர்க்கக்கூடிய நிகழ்வுகள்...

சிவா.ஜி
13-11-2007, 03:18 AM
அடடா...திறனாய்வு வித்தகரின் இந்த பின்னூட்டம் அருமை.விமர்சனமும்..கூடவே சமுதாய நிகழ்வுகளைக்குறித்து ஆழமான கேள்வியும்.என்னிடமும் இதற்கு பதிலில்லை.ஆனாலும் அப்படி நிகழக்கூடாது என்றே மனம் விழைகிறது.நன்றி அக்னி.

அக்னி
13-11-2007, 03:34 AM
அடடா...திறனாய்வு வித்தகரின் இந்த பின்னூட்டம் அருமை.விமர்சனமும்..கூடவே சமுதாய நிகழ்வுகளைக்குறித்து ஆழமான கேள்வியும்.என்னிடமும் இதற்கு பதிலில்லை.ஆனாலும் அப்படி நிகழக்கூடாது என்றே மனம் விழைகிறது.நன்றி அக்னி.
ஆனால், மனைவி மீது வீண்பழி சுமத்தி, விவாகரத்துக் கோரிய நிலையில், குழந்தையின் தந்தை யார் என்று, நீதிமன்றத்தினூடாக, மருத்துவ பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்ட நிகழ்வையும் நான் அறிந்திருக்கின்றேன்...

இப்படியான சீர்கேடுகள் நிகழக்கூடாதென்றுதான் என் மனமும் இறைவனை வேண்டுகின்றது...

MURALINITHISH
22-09-2008, 09:40 AM
என்னடா இது சிவாவின் எழுத்தில் தாயை பற்றி தாறுமாறா என்று படிக்க தொடங்கியவன் படித்து விட்டேன் ஆம் சில பே(தா)ய்கள் இப்படி தரங்கெட்டவர்களாக இருந்து குழந்தைகளின் எதிர்காலத்தை கெடுக்கிறார்கள்

சிவா.ஜி
22-09-2008, 10:31 AM
தாய் என்ற உறவு களங்கமே இல்லாதது. ஆனால் இப்படியும் சில பெண்கள் மேல்மட்ட குடும்பங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைத் தாய்மார்களெனக் கருதாமல் வெறுமனே பிள்ளையைப் பிரசவித்தவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

மிக்க நன்றி முரளிநிதிஷ்.

சுகந்தப்ரீதன்
28-09-2008, 10:20 AM
அண்ணா.. இது கதைத்தான் என்று நீங்கள் கூறினாலும் ஏடுத்துக்கொண்ட களம் எனக்கு ஏற்புடையதாய் இல்லை..!! இக்கதையில் வருவதுபோலான தாய்கள் மிகசிலரே.. எந்த ஒரு விசயத்துக்கும் விதிவிலக்கு உண்டு என்பதைப்போலத்தான் இவர்கள்..!! பாவம் தவறுதலாய் பாரதத்தில் பிறந்துவிட்டதுதான் அவர்கள் செய்த குற்றம்..!!

தவறானவள் என்றவுடன் ஏற்கமுடியாமல் உணர்ச்சி வேகத்தில் கொல்லத்துணிந்த மகனும் கொன்றுவிட்ட கணவனும்..யதார்த்தம்..!! ஆனால் தவறானவன் என்று தெரிந்தும் தந்தையாக கணவனாக சகித்துக்கொண்டு இன்றைக்கும் வாழ்கிறார்களே நம்நாட்டில் பலபெண்கள்.. அதை அவர்களின் இயலாமை என்பதா இல்லை யதார்த்தம் என்பதா..??

சிவா.ஜி
29-09-2008, 05:11 AM
சுபி, எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு. அந்த விதிவிலக்குகளே அதிகம் பேசப்படுகின்றன. தன் கள்ளக்காதலுக்காக பெற்ற மகனையே கொன்ற தாயை எங்கள் பகுதியில் அனைவரும் அறிவார்கள்.

ஆனாலும் நீங்கள் எழுப்பியுள்ள கேள்வி சிந்திக்க வேண்டியதுதான். இப்போதும் தன் கணவனின் துரோகத்தை சகித்துக்கொண்டு வாழும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் தங்கள் கால்களில் சுயமாக நிற்க* இயலாததால்தான். தங்களை அப்படி உறுதிசெய்துகொண்டால், அவலங்களைத் தாங்கிக்கொண்டு வாழத் தேவையிருக்காது.

நன்றி சுகந்த்.

சிவா.ஜி
29-09-2008, 05:13 AM
வணக்கம் கிஷோர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. எப்போதும்போல நீங்கள் தரும் உற்சாகப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.