PDA

View Full Version : ஒரு நாள் ஒரு கனவு....!



நுரையீரல்
04-10-2007, 10:09 PM
நேற்று இரவு பதினோறு மணி இருக்கும், நமது மன்றத்தில் சில தலைப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அன்பர் அமரன் எழுதிய "அழகிய தீ...! − சிறுகதை" கண்ணில்பட, அதை ஓபன் செய்து படித்துக் கொண்டிருந்தேன். கதை கவிதையாய் இருந்தது. அதற்கு நம் மன்றத்தினர் எழுதிய பின்னூட்டங்கள் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டிருந்தது. வாத்தியார் எழுதிய பின்னூட்டத்தில் மட்டும் கொஞ்சம் கோயமுத்தூர் லொள்ளு, இலைமறை காய் போல இருந்தாலும், குபுக் என்று என்னையும் மறந்து சிரித்தேன்.

இரண்டு அறைகள் தள்ளியிருக்கும் படுக்கையறையிலிருந்து, மனைவி மற்றும் குழந்தைகளின் விளையாட்டு சிரிப்புச் சத்தம் வந்து கொண்டிருந்தது. "அம்மா, தம்பியைப் பாருங்கம்மா, தூங்கவிடாம தொந்தரவு பண்றான்..", என்று பெரியபையன் அம்மாவிடம் சொன்னான். அதற்கு, "டேய், விளையாடாமா சீக்கிரம் தூங்கு, இல்லேனா உங்கப்பன கூப்பிட்டு அடிக்க சொல்வேண்டா.....", என்று என் மனைவியும் சிறிய மகனை மிரட்டினாள்.

சிறிய மகன் அம்மாவுக்கு அடங்காத அஞ்சா நெஞ்சன், எனக்கும் மட்டுமே பயப்படுவது போல் நடிப்பான், ஏனென்றால், நானும் அவனை மிரட்டுவது போலல்லவா நடிக்கிறேன். நிறைய தடவை சொல்லிப்பார்த்து எரிச்சலடைந்த மனைவியின் கோபம் என்னை நோக்கி திரும்பியது. "என்னங்க............, என்னங்க.......... கம்புயூட்டர ஆஃப் பண்ணிட்டு இங்க வர்றீங்களா..... இல்ல நாங்க அங்க வரட்டுமா......." என்றாள்.

"ஐயோ, ராட்சஸி வேற குட்டிச்சாத்தான்களை கூட்டிட்டு இங்க வந்தானா, நம்ம டப்பா டான்ஸ் ஆடிடுமே" என்று கணிணியை ஷட்டவுன் செய்யாமலேயே ஆஃப் செய்துவிட்டு படுக்கையறையை நோக்கி ஓடினேன். "ஏண்டி, காட்டுக்கத்து கத்தற, எல்லாரும் பேசாம தூங்க வேண்டியது தானே....", என்றேன். "யோவ், இங்கபாரு பலதடவை சொல்லிருக்கேன் உங்கிட்ட, பசங்க முன்னாடி வாடி, போடி சொல்லாதனு, அப்புறம் நான் பொல்லாதவ ஆயிடுவேன் ஆமா..." என்று மிரட்டலுடன் கூறினாள்.

"என் பொண்டாட்டி சொல்றத தான் செய்வா, செய்றதத்தான் சொல்வா....", என்பது என் பத்துவருட திருமண வாழ்க்கை அனுபவம். ஒரு தடவ நான் மப்புல இருக்கும்போது என் உச்சந்தல முடிய பிடிச்சு மாவாட்டுற மாதிரி ஆட்டி, கும்மு கும்முனு கும்மியிருக்கா, இதை வெளிய சொன்னா, எனக்குத்தானே அவமானம்னு மனசுக்குள்ளேயே நொந்து நூடுல்ஸ் ஆன தினங்கள் தான் அதிகம்.

"ஸாரிடா, செல்லம்...", என்று அவள் அருகில் அனுசரனையுடன் உட்கார்ந்தேன். மனதிற்குள், ஒரு நாளைக்கு இல்லேனா இன்னொரு நாளைக்கு வைக்கிறேன்டி வேட்டு..., என்று நினைத்துக் கொண்டே படுக்கையில் கிடந்தேன். பத்து நிமிடத்தில் அனைவரும் உறங்கிவிட்டனர் போலும், Centralized A/C செய்யப்பட்ட வீட்டினுள்ளேயே, ஒரு தனியறையில் A/C கம்ப்ரஸர், ப்ளோயர் இருப்பதால் அதன் இயக்கம் மட்டும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

எனது கண்ணை மூடியிருப்பது மட்டும் நினைவு இருந்தாலும் நான், சிறிது சிறிதாக என் சுயநினைவை இழந்து உறக்கத்திற்குள் சென்று கொண்டிருந்தேன். என் உடல் சுருங்கி, உள்ளம் அகன்ற குழந்தைப் பருவத்துக்குள் சென்றிருக்கிறேன் என்றே சொல்லவேண்டும். ஆம், நான் கனவு கொண்டிருக்கிறேன். அதுவும் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களையல்லவா கனவாய் காண்கிறேன்.

ரயில்பெட்டி போன்று வரிசையாகக் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள், அவை ஒவ்வொன்றும் மூன்று அறைகளைக் கொண்டிருந்தது. முதல் அறை 10க்கு 10 அடிகள் கொண்டது. அந்த அறை முழுவதும் நிரப்பியது போன்ற ஒரு இரும்பு கட்டில், இது தான் எங்கள் குடும்பத்தின் புரொடக்சன் மெஷின், புரியலயா அட இது தாங்க எங்க பெற்றோரின் ஜல்ஜா பண்ற குல்ஜா கட்டில். பகல் நேரங்களில் இதில் யாரும் அமரமாட்டார்கள். இக்கட்டிலின் மேலே, கிழிந்த பெட்சீட்டால் கவர் செய்யப்பட்ட ஒரு பஞ்சு மெத்தை இருக்கும். ஏழைகளின் பஞ்சு மெத்தையில் உட்கார்ந்தால், ஒரு திடமான பெஞ்சில் உட்கார்ந்தது போன்ற உணர்வையே தரும். எங்கே வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் பஞ்சுமெத்தையின் தன்மை அறிந்து விடுவார்களோ என்று அஞ்சியே, அதை மடித்து ஓரத்தில் வைத்திருப்போம்.

இந்த வரவேற்பரை கம் பெட்ரூமில் தான் கிழிந்த காக்கிக்கலர் ட்ரவுசர், பட்டன்கள் போய் பின்னூசியால் குத்தப்பட்ட சட்டை சகிதம் நின்று கொண்டிருக்கிறேன். எனது பின்னால் நிற்கும் அம்மா, எனது பரட்டைத் தலைக்கு தேங்காய் எண்ணை வைத்து தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஏண்டா, குளிச்சு எத்தன நாள் ஆச்சு, தலையில கப்பு அடிக்குது...", என்று என் மண்டையில் ஒரு கொட்டு கொட்டினார்கள்.

"சும்மா, எதுக்கெடுத்தாலும் கொட்டாதம்மா, சோப் தீர்ந்து ஒரு வாரம் ஆச்சு, வாங்கினீங்களா...", என்று எதிர் கேள்வி கேட்டேன். "அத ஏண்டா, ஊருக்கு கேக்குற மாதிரி கத்தி சொல்ற..." என்று அதற்கும் ஒரு கொட்டு கிடைத்தது. "ஊம், ஊம், ஊம்..........", என்று அழ ஆரம்பித்தேன்.

"சண்டாள நாயே, வீட்டுக்குள்ள அழுகுறியா... முதல்லயே வீட்டுக்குள்ள கஷ்டம், இதுல நீ வேற அழுது என் உயிர வாங்குறியா...." என்று முதுகில் ரெண்டும் வைத்தார்கள்.

"நீ அடிச்சதால் தானே அழுகுறேன், ஒண்ண வளத்துறதுக்கே துப்புல்ல இதுல பத்தாவதா என்ன வேற பெத்துட்டு அடிக்கிறயா...", என்று கேள்வி கேட்டு கை ஓங்க, நான் என்ன 2007ன் குழந்தையா?

அம்மா அடியின் வலியைக்காட்டிலும், தனது ஏழ்மையை மறைப்பதற்காக மேலும் என்னை அடித்தது தான், என் அழுகையை கூட்டியது. சிறுவனக்கெப்படி தெரியும் ஏழ்மை மறைக்கப் படவேண்டுமென்று.

"சரி, சரி அழுகையை நிறுத்துடா....... சும்மா, நீலிக்கண்ணீர் வடிச்சுட்டு...." என்று அம்மாவின் அதட்டல் அதிகமாகவே, என் அழுகையைச் சத்தத்தை நிறுத்தி மனதில் மட்டுமே அழுது கொண்டிருந்தேன்.

"ஊம், ஊம், ஊம்............ அம்மா பால், ஊம்........ தீக்கிதம் பால் குதும்மா...", என்ற பிஞ்சு மொழியின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, என் காதில் விழுகிறது. எனக்கும், மனைவிக்கும் நடுவில் உறங்கிக் கொண்டிருக்கும், மூன்று வயதான இரண்டாவது குழந்தையின் தொடைகளில் ஓங்கி ஒரு அடி வைக்கிறாள், என் மனைவி.

"சனியன் புடிச்சவனே, அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கு... தூங்க வந்தா அப்பன் விடுறதில்ல, தூக்கம் வந்தா பையன் விடுறதில்ல..." என்று சலித்துக் கொண்டே பால் கலக்க கிட்சனை நோக்கி நடந்தாள் என் மனைவி.

கனவு கலைந்தது.

கதையின் மூலம் நான் சொல்ல வருவது: சிறுவனாக வரும் ஏழைத்தாயின் மகனும், குழந்தையாக வரும் பணக்காரத்தாயின் மகனும், அம்மாவால் அடிக்கப்படுகிறார்கள். விலங்குகளுக்கு கூட ஒரு புளுகிராஸ் இருக்கிற காலமிது, குழந்தைகளை அடிக்காதீர்கள்.

rajaji
05-10-2007, 03:18 PM
சில இடங்களில் நகைச்சுவையும் சில இடங்களில் நெருடல்களும் பிணைந்த பதிப்பு.....

(நண்பரே உங்களுக்கு அசாதாரண தைரியம் உண்டு....)

lolluvathiyar
05-10-2007, 03:42 PM
ஆகா ராஜா உங்கள் முதல் கதையை படித்து பிரமித்து போனேன். உங்கள் அனுபவங்களை மிக அருமையாக சொல்லி இருகிறீர்கள். பத்தாவது மகனா நம்பவே முடியவில்லை. எப்படி தான் சமாளித்தார்களோ. ஆனால் உங்கள் பெற்றோர் இத்தனை கஸ்டத்திலும் உங்களை வளர்த்தி இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருகிறார்கள்.

உங்களை பாராட்டுவதற்க்கு பதிலாக உங்கள் அம்மாவை தான் பாராட்ட வேண்டும்

ஜெயாஸ்தா
06-10-2007, 03:01 AM
வாத்தியார் சொன்னமாதிரி உங்கள் பெற்றோர்களைப் பாராட்டவேண்டும். பத்தாவதாக இருந்தும் கூட இந்த மாதிரி உங்களை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவந்திருப்பதை. சரளமான நடை உங்களுக்கு வருகிறது. தொடர்ந்து உங்களிடமிருந்து நிறைய கதைகளை எதிர்பார்க்கிறேன்.

நுரையீரல்
06-10-2007, 03:32 AM
கதையைப் படித்து கருத்துச் சொன்ன நண்பர்களுக்கு நன்றிகள் பல. இக்கதையின் மூலம் சொல்ல வந்த முக்கிய விஷயமே, குழந்தைகளை அடிக்காதீர்கள் என்பதே. தந்தை சிறுவனாக இருக்கும்போது ஏழ்மையில் இருக்கிறான், அதை விளக்கவே அவனுடைய குடும்ப சூழல் மற்றும் பிறப்பு வரிசை ஆகியவற்றை சொன்னேன். மகன் செல்வந்தர் வீட்டு குழந்தையாக இருக்கிறான், அதை விளக்கவே கம்ப்யூட்டர், வீட்டிலுள்ள அறைகள், சென்ட்ரலைச்ட் ஏ.ஸி எல்லாம் சொன்னேன்.

சிவா.ஜி
06-10-2007, 04:56 AM
பாராட்டப்படவேண்டிய உங்கள் பெற்றோர்....பெற்றொரும் பெருமைப்படவேண்டிய மகனாக நீங்கள்.ஒன்டுக்குடித்தனம் என்ற ஒரு சங்கடமான அவஸ்தையை அனுபவித்தவன் என்ற முறையில் என்னால் அந்த ஏழைத்தாயின் பரிதவிப்பை மிக நன்றாக உணரமுடிகிறது.காட்சிகளின் விவரிப்பு மிக அருமை.அன்று அடிவாங்கிய குழந்தைக்கும்,இன்று அடிவாங்கிய குழந்தைக்கும் வித்தியாசம் பொருளாதாரத்தில் இருக்கிறது...ஆனால் அடி என்னவோ விழுந்துகொண்டுதான் இருக்கிறது.பெரும்பான்மையான பெற்றோர்கள் செய்யும் தவறு இது.சின்னக்குழந்தைகளை அடிக்கடி இப்படி அடித்தால்..முரட்டுத்தனமாகிவிடுவார்கள். கூடுமானவரை மிரட்டியே காரியம் சாதிக்கவேண்டும்.பாராட்டுக்கள் ராஜா.

தளபதி
06-10-2007, 05:58 AM
தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நண்பரே!!

எனக்கு என்னவோ அந்த இரண்டு தாயின் செயல்களிலும் வருத்தம் வரவில்லை. குழந்தைகளை அடிக்காதீர்கள் என்று சொல்லவந்தாலும், எந்த அளவு அடி, எந்த நேரத்தில் எந்த அளவிற்கு அந்த குழந்தைக்கு பயன்படும் என்று அந்த தாயிற்கு தெரியும். தான் எத்தனை முறை வேண்டுமானாலும் அடிக்கலாம், ஆனால் தந்தையோ மற்றவர்களோ ஒரு அடி கூட அடிக்கவிடமாட்டாள். தந்தையைக் கூப்பிடுவதே, தான் கொடுக்க நினைக்கும் சின்ன அடியையும் தவிர்ப்பதற்காகவே. அவர் வந்து மிரட்டினால் காரியம் கைக்கூடாதா என்ற எண்ணம் தான் அது.

என் அம்மாவிடம் அடிவாங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை அடித்துவிட்டு அவள் கை வலிப்பதாகச் சொல்லும்போது "நான் வளர்கிறேனே அம்மா" என்று சொல்வேன். மீண்டும் அடிக்க துரத்துவார்.

நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு, எல்லா ஆண்மகன்களுக்கும் நடப்பதுபோல் எனக்கும் என் அம்மாவிற்கும் கொஞ்சல்களில் இடைவெளி விழ, என் தம்பிக்கு மட்டும் நிறைய முத்தங்கள் கிடைப்பதைப் பார்த்து பொருமிய நான், ஒருமுறை என்னை அடிக்கவந்தபோது, அடிக்கமட்டும் எப்போதும் போல் என்னைத் துரத்துகிறீர்களே, ஏன் அம்மா எனக்கு முத்தம் கொடுப்பதை நிறுத்திவிட்டீர்கள்??" ஒருகணம் நின்று விட்டு, கோபம் மறந்து என்னை அணைத்து எனக்கு முத்தமிட்ட தாயின் வாயிலாக அனைத்து தாயையும் பார்க்கிறேன். அவர்களுக்குத் தெரியும் எப்போது குழந்தயை அடிக்கணும் அணைக்கணும் என்று.

கோழி மிதித்து குஞ்சு முடமாகாது. தாயை தவிர யாருக்கும் (தந்தையும் உட்பட) இது பொருந்தாது.

நீங்கள் எழுதிய விதம் எனக்கு மிகவும் பிடித்தது. சரளமாக உங்கள் எழுத்து அழகிய மலர்சரம் போல் சென்றது. மீண்டும் உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

சிவா.ஜி
06-10-2007, 06:49 AM
தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நண்பரே!!

எனக்கு என்னவோ அந்த இரண்டு தாயின் செயல்களிலும் வருத்தம் வரவில்லை. குழந்தைகளை அடிக்காதீர்கள் என்று சொல்லவந்தாலும், எந்த அளவு அடி, எந்த நேரத்தில் எந்த அளவிற்கு அந்த குழந்தைக்கு பயன்படும் என்று அந்த தாயிற்கு தெரியும். தான் எத்தனை முறை வேண்டுமானாலும் அடிக்கலாம், ஆனால் தந்தையோ மற்றவர்களோ ஒரு அடி கூட அடிக்கவிடமாட்டாள். தந்தையைக் கூப்பிடுவதே, தான் கொடுக்க நினைக்கும் சின்ன அடியையும் தவிர்ப்பதற்காகவே. அவர்களுக்குத் தெரியும் எப்போது குழந்தயை அடிக்கணும் அணைக்கணும் என்று.

கோழி மிதித்து குஞ்சு முடமாகாது. தாயை தவிர யாருக்கும் (தந்தையும் உட்பட) இது பொருந்தாது.
.

ஆஹா...இதில் இப்படி ஒரு கோணம் இருக்கிறதா..? அசத்திட்டீங்க தளபதி.மிக அழகான விளக்கம்...ஏற்றுக்கொள்ளக்கூடியது.பாராட்டுக்கள்.

பூமகள்
17-10-2007, 06:38 PM
இரு வேறு சூழல்களில் வளரும் இளஞ்சிறார்களின் மனோநிலைப் பற்றி அழகா சொல்லியிருக்கீங்க S.ராஜா அண்ணா.
இது தான் ஜெனரேசன் கேப் என்று சொல்வார்களோ??
குழந்தைகளைப் பொறுத்தவரை... அவர்கள் வளரும் சூழலும் அவர்களின் குணாதியசங்களின் வடிவமைப்புக்கு ஒரு காரணமாக அமையும் என்று கண்டுபிடித்துள்ளனர். அத்தகைய வகையில் இரு வேறு பரிணாமத்தை எங்களுக்கு வெகு எதார்த்தமான எழுத்துக்களின் மூலம் சொல்லி அசத்திவிட்டீர்கள்...!!
மிகுந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள் ராஜா அண்ணா.

நேசம்
18-10-2007, 07:26 AM
கதையின் மூலம் நான் சொல்ல வருவது: சிறுவனாக வரும் ஏழைத்தாயின் மகனும், குழந்தையாக வரும் பணக்காரத்தாயின் மகனும், அம்மாவால் அடிக்கப்படுகிறார்கள். விலங்குகளுக்கு கூட ஒரு புளுகிராஸ் இருக்கிற காலமிது, குழந்தைகளை அடிக்காதீர்கள்.



நிங்க* அடி வாங்கிய* போது புளுகிராஸ் வ*ந்து இருக்க*லாம்

தங்கவேல்
20-10-2007, 08:09 PM
குழந்தைய அடிக்காம வளர்ப்பதா ? என்னய்யா சொல்லுறீங்க? எங்க வீட்டு வாலுகளை ஒரு பத்து நிமிடம் வைத்து இருங்கள் ? அவ்வளவுதான் முடியை பிச்சுக்கு ஓட வேண்டியது தான். அதுவும் சின்னது இருக்கே அதுவே முடியெல்லாம் பிச்சு வீசிறும்..

வலிக்காமல் பயப்படும்படியா அடிப்பது போல மிரட்டனும். விடுற சவுண்டில் கப்சிப்னு உட்காரணும்.

எங்க வாலுகள் இரண்டும் ஏம்பா கத்துறே என்பார்கள் பட்டாத்தான்யா புரியும்

நுரையீரல்
21-10-2007, 09:37 AM
குழந்தைய அடிக்காம வளர்ப்பதா ? என்னய்யா சொல்லுறீங்க? எங்க வீட்டு வாலுகளை ஒரு பத்து நிமிடம் வைத்து இருங்கள் ? அவ்வளவுதான் முடியை பிச்சுக்கு ஓட வேண்டியது தான். அதுவும் சின்னது இருக்கே அதுவே முடியெல்லாம் பிச்சு வீசிறும்..

வலிக்காமல் பயப்படும்படியா அடிப்பது போல மிரட்டனும். விடுற சவுண்டில் கப்சிப்னு உட்காரணும்.

எங்க வாலுகள் இரண்டும் ஏம்பா கத்துறே என்பார்கள் பட்டாத்தான்யா புரியும்
ண்ணோவ்... எங்க வீட்டிலயும் ரெண்டு இருக்கு. பெரிசு பொறுமையின் சிகரம். சிறிசு வீச்சருவா வேலுச்சாமி கையில கிடைக்குறதையெல்லாம் வீசுவான்.

குழந்தைய மிரட்டக்கூடாதுனு பள்ளிக்கொடத்துலயே சட்டம் இருக்கு. அத வீட்டுக்கும் போடணும். தன்னம்பிக்கையில்லாத பெற்றோர்கள் தான் குழந்தைகளை அடிப்பார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம்.

எங்க வீட்டு செல்லக்குட்டிகள் ரெண்டையும் நாங்க தான் வளத்துறோம். ஆனா ஏன் குணத்தில் வேறுபாடு? மனிதனின் குணம் மரபணு ரீதியாக தீர்மானிக்கப்படுது. குழந்தைகளை மிரட்டி வளர்த்துவதிலயும் எனக்கு உடன்பாடில்லை. அவ்வாறு செய்தால், பிற்காலத்தில் மிரட்டுரவனுக்கெல்லாம் பயந்து அடிபணியறதா வளரும் ( நம்ம தான் உதாரணம்)

நேசம்
21-10-2007, 09:57 AM
தாய் கண்டிப்பாக இருந்தால், தந்தை அரவணைக்கனூம் அல்லது தந்தை கண்டித்தால் தாய் அரவணைக்கனும். சொல்லிதான் திருத்தனும்.அப்படியும் செய்தால் அடித்தும் அடிக்காத மாதிரி கண்டிக்கனும்..எதற்கெடுத்தாலும் அடித்தால் அக்குழந்தை முரடனாக மாறுவான்

சுகந்தப்ரீதன்
22-10-2007, 02:26 PM
முதலில் மிக நேர்த்தியாக கனவை கூறிய s.ராஜா அண்ணாவுக்கு எனது பாராட்டுகள்... சுவையான உரைநடை தமிழ் தங்களுக்கு...! மேலும் படைத்தளிக்க வேண்டுகிறேன்..!


தாய் கண்டிப்பாக இருந்தால், தந்தை அரவணைக்கனூம் அல்லது தந்தை கண்டித்தால் தாய் அரவணைக்கனும்.
உண்மைதான் நேசம் அண்ணா...! என் தந்தை என்னை அடிக்கவே மாட்டார்.. என் அன்னை பூவிளக்குமாறு பிஞ்சுடுமுன்னு தென்னவிளக்குமாறாலயே விளாசுவாங்க... ஆனாலும் மூக்க தொடைச்சி சட்டையில தொடைக்குற மாதிரி எல்லாத்தையும் மறந்துட்டு மறுபடியும் தப்பு பண்ணிட்டு அடிவாங்க தயாராயிடுவேன்... அப்படி அடிவாங்கினதாலதான் இன்னைக்கு இங்கிட்டு என்னால மன்றம் வந்து உலாத்த முடியுது..!:icon_rollout:

இதயம்
19-01-2008, 06:24 AM
இதை படிக்காம எப்படி மிஸ் பண்ணினேன்..?!! எப்படியோ இன்னைக்கு படிச்சாச்சி.!!

கதை வடிவத்தில் உங்கள் அனுபவத்தை கொடுத்திருக்கீங்க..! தாய் குழந்தை மேல் காட்டும் கண்டிப்பு நிச்சயம் கோபமோ, குரூரமோ கிடையாது. நாம் என்ன தான் குழந்தைகளை கொஞ்சினாலும், தவறி எப்பவாவது ஒரு அடி அடித்துவிட்டால் அவர்களை நம் அருகில் கொண்டு வர மிக சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனா, தாய் அடிச்சா அந்த அடியை வாங்கிக்கொண்டே தாயையை கட்டிக்கொள்ள வரும் குழந்தைகளை எளிதாக காணலாம். காரணம் தாயன்பு..!

குழந்தைகளை இம்சிப்பது என்பது தந்தைமார்களுக்கு கூடாது என்று வலியுறுத்திச்சொல்லவேண்டிய விஷயம். அவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் தண்டனைகள் அவர்களை மன ரீதியாக மிகவும் பாதிக்கிறது. தாயின் கோபங்களும், தண்டனைகளும் ஏற்படுத்தும் பள்ளங்கள் அன்பு கொண்டு நிரப்பப்படுகின்றன. ஆனால், தந்தை அதை நிரப்ப விரும்பினாலும் குழந்தைகள் நம்மை அனுமதிப்பதில்லை. கடவுளின் படைப்பில் ஏன் இந்த முரண்பாடு..? கடவுள் நம்பிக்கை இல்லாத ராசா இதற்கு பதில் சொல்வாரா..?

நல்ல அனுபவம். பகிர்தலுக்கு நன்றி..!

நுரையீரல்
19-01-2008, 07:12 AM
குழந்தைகளை இம்சிப்பது என்பது தந்தைமார்களுக்கு கூடாது என்று வலியுறுத்திச்சொல்லவேண்டிய விஷயம். அவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் தண்டனைகள் அவர்களை மன ரீதியாக மிகவும் பாதிக்கிறது. தாயின் கோபங்களும், தண்டனைகளும் ஏற்படுத்தும் பள்ளங்கள் அன்பு கொண்டு நிரப்பப்படுகின்றன. ஆனால், தந்தை அதை நிரப்ப விரும்பினாலும் குழந்தைகள் நம்மை அனுமதிப்பதில்லை. கடவுளின் படைப்பில் ஏன் இந்த முரண்பாடு..? கடவுள் நம்பிக்கை இல்லாத ராசா இதற்கு பதில் சொல்வாரா..?

நல்ல அனுபவம். பகிர்தலுக்கு நன்றி..!
எதிர்பால் கவர்ச்சி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், அதை நான் சொல்லி புரியவைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை. இதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை தெரியுமோ??

உங்கள் குழந்தைகள் இரண்டும் (அ) இரண்டின் ஒன்றாவது உங்கள் மேல் அலாதிப்பிரியம் வைத்திருப்பார்கள், காரணம் -> எதிர்பால் கவர்ச்சி.

என் துரதிருஷ்டம் -> இரண்டும் ஆண் குழந்தைகள், என்னைவிட என் மனைவியின் மேல் தான் அவர்களுக்கு ஈர்ப்பு அதிகம். ஒருவேளை என்னைப் போன்று குழந்தைப் பேறு உங்களுக்கும் or vice varsa கிடைத்திருந்தால் உங்கள் கேள்விக்கான விடையை அனுபவித்து புரிந்திருக்கலாம்..

புரிந்ததோ, புரிந்ததோ, புரிந்ததோ... (2வதும், 3வதும் echo)

இதயம்
19-01-2008, 07:28 AM
எதிர்பால் கவர்ச்சி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், அதை நான் சொல்லி புரியவைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை. இதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை தெரியுமோ??

புரிந்ததோ, புரிந்ததோ, புரிந்ததோ... (2வதும், 3வதும் echo)

எதிர் பால் கவர்ச்சி எதற்குத்தான் சொல்வது என்றில்லையா..? பெண்மையை, தாய்மையை எப்போது நீங்கள் சரியாக புரியப்போகிறீர்கள் ராசா..? தாயின் மீதான அந்த ஈர்ப்புக்கு காரணம் எதிர்பால் கவர்ச்சி அல்ல..! தாய்மையும், அதனுள் புதைந்திருக்கும் தாயன்பும் தான்..! இன்னொன்றையும் சொல்கிறேன்.. மனைவியை ஆண்கள் மிகவும் நேசிக்க காரணம், அவளின் எதிர்பாலும், உடல்கவர்ச்சியும் அல்ல..! அவளிடம் கணவன் காணும் தாய்மையின் அடையாளங்கள் தான்..!!

என் இரு பெண் குழந்தைகளுக்கும் என்னை விட அவர்கள் தாய் மீது தான் அதிக பாசம், அன்பு..! என் இரு தங்கைகளுக்கும் என் தந்தையை விட என் தாய் மீது தான் பாசமும் அன்பும்..! நீங்கள் சொன்ன எதிர்பாலின விதிப்படி அவர்கள் என் தந்தை மீதல்லவா அதிக அன்பை கொண்டிருக்க வேண்டும்..?!! இவை என் சொந்த அனுபவங்கள். நான் பார்த்தது, கேட்டது என்று எல்லாவற்றிலும் பெரும்பாலானவை தாய்மையின் மீதான ஈர்ப்பு தான் அதிகம். குழந்தைகளில் ஆணோ, பெண்ணோ அவர்கள் அதிகம் நேசிப்பது தாயைத்தான்..! தந்தை எந்த குற்றமற்றவராக இருந்தாலும் நான் நம்பும் கடவுள், நீங்கள் நம்பும் இயற்கை செய்த ஓரவஞ்சனை இது..! ஓரவஞ்சனை என்று சொன்னதால் காரணமின்றி பெண்களுக்கு நற்பெயர் கிடைப்பதாக நினைத்துவிடாதீர்கள். அவர்களின் அன்பு, அரவணைப்பு, தியாகம், புரிதல், அர்ப்பணிப்பு எப்போதும் ஆண்களை விட மேல் தான்..!! இதை நீங்கள் நம்பவில்லை என்றால் குழந்தைகளுக்கு அதிக அன்பு தாய் மீதா..? தந்தை மீதா என்று ஒரு ஓட்டெடுப்பு நடத்துவோம்..!! ஆனால், முடிவை நான் சொல்லிவிடுகிறேன். தாய் தரப்பு தான் வெற்றியடையும்...!! மற்றவர்களை சந்தோஷப்படுத்த என்றே பிறப்பெடுத்தவர்கள் பெண்கள். இதை எப்போது நீங்கள் உணரப்போகிறீர்களோ தெரியவில்லை..!!

எக்கோ விஷயத்தில் நான் காப்பிரைட் செய்திருக்கிறேன். உபயோகப்படுத்த வேண்டும் என்றால் என் அனுமதி பெற்றாக வேண்டும்.. இல்லையென்றால் நீதிமன்றத்திற்கு போவேன் என்று உங்களை எச்சரிக்கிறேன்..! எச்சரிக்கிறேன்..!! எச்சரிக்கிறேன்..!!! (2வது, 3வது..ஹி..ஹி...:D:D)