PDA

View Full Version : அறை எண் 406.யவனிகா
03-10-2007, 09:30 PM
இன்றைய பொழுது இனிதாக விடியவில்லை எனக்கு. யார் முகத்தில் முழித்தேனோ தெரியவில்லை, மருத்துவமனைக்குச் செல்லும் வழியெல்லாம் ஒரே ட்ராஃபிக்.சவூதி மன்னர் எங்கள் நகருக்கு விஜயம் செய்கிறார் பராக்.. பராக்.. எனவே காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்த காவல் வாகனங்களைத் தாண்டி, சுற்றிச் சுற்றி ஊரையே வலம் வந்து மருத்துவமனைக்குள் நுழையும் போது 1 மணி நேரம் லேட்.

நுழைந்தவுடன் கடுவன் பூனை போல முகத்தை வைத்துக் கொண்டு நான் எப்படா வருவேன் என்று காத்துக் கொண்டிருந்தாள் என் சீஃப் டயடீசியன். அவள் பிலிப்பின் நாட்டைச் சேர்ந்த பேரிளம் பெண், தேவதை கொஞ்சம், ராட்சஸி மிச்சம் கலந்து செய்த கலவை. வயதோ 45, கேட்டால் போன வாரம் தான் 25 ஆம் வயதை வழி அனுப்ப கேக் வெட்டியதாகச் சொல்வாள்.எப்போதும் மேக்கப் கலையாத முகம், எப்போதாவது சிரிக்கும் உதடுகள். கையில் ஒரு ஃபைலை வைத்துக் கொண்டு எப்போதும் ஓடிக் கொண்டிருப்பாள். பாத்ரூம் போனாலும் கையில் ஃபைல் இருக்கும். அவளுக்கு நான் வைத்திருக்கும் பட்டப் பேர் "ஃபைல் பட்டம்மா�"

லேட்டாக வந்த என்னைப் பார்த்து அவள் சிரித்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நானும் அவளைப் பார்த்து "கமுஸ்தஸ்கா�?" என்றேன். பிலிப்பைனி மொழியில், எப்படியிருக்கிறாய்? என்று பொருள். "சரி,சரி 406 ஆம் அறைக்கு ஓடு, சூசைட் அட்டெம்ப்ட் கேஸ், டயட் கவுன்சலிங் தேவையாம்" என்றாள். அவள் ஏன் என்னைப் பார்த்து சிரித்தாள் என்று இப்போது தான் எனக்குப் புரிந்தது. 406 என்னுடைய வார்டு அல்ல. அது அவள் பார்க்க வேண்டிய பேஷன்ட். நான் யோசிப்பதைப் புரிந்து கொண்டாள் போலும். அது என் வார்டு தான். ஆனால் எனக்கு கொஞ்சம் அவசரவேலை இருக்கிறது, அதனால் நீ அட்டென்ட் செய்... என்றாள். எனக்குத் தெரியாதா? அவளுக்கு என்ன அவசர வேலை என்று? ரெஸ்ட் ரூம் போய் போட்ட மேக்கப்பைக் கலைத்து மீண்டும் போடுவது தான்.

இருந்தாலும் கால தாமதமாக வந்ததற்கு தண்டனையை அனுபவித்துத்தான் தீர வேண்டும். சீருடையை திருத்திக் கொண்டு கிளம்பினேன். 406 ஆம் எண் அறை நான்காவது மாடியில் இருக்கிறது. எலிவேட்டரைத் தவிர்த்து மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தேன். யாருமே உபயோகிக்காத மாடிப்படிகளில் தனியே ஏறிச் செல்லுவது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று.

குறிப்பிட்ட அறைக்குச் செல்லும் முன் நோயாளியைப் பற்றிய விபரங்களை கேட்டறிய நர்சை அணுகினேன். நர்ஸ் கேரள தேசத்து பெண். அவளிடம், என்ன கேஸ் இது சேச்சி? என்றேன். அதற்கு அவள் "அது பிசாசானு, அவிட போகன்டா மோளே... அப் பெண்குட்டி புத்தி பேதலிசசு போயி. இது நின்ட வார்டு இல்லல்லோ, எந்தினா இவிட வந்தது?...�, என்றாள் பட படப்புடன். அவளிடம் மலையாளத்தில் சம்சாரித்ததிலிருந்து தெரிந்து கொண்டவை.....

பேசண்டின் பெயர் முனீரா. சவுதிப் பெண், கை நரம்புகளைத் துண்டித்து தற்கொலை முயற்சி. அதிக இரத்த சேதம் இல்லாததால் பிழைத்துக் கொண்டாள்... உடல் எடையைக் குறைக்க உணவு ஆலோசனை தேவைப்படுகிறது.

காலையிலேயே என் தலைவி ஃபைல் பட்டம்மா, முனீராவிடம் கவுன்சிலிங்காகப் போய் இருக்கிறாள். போன சமயத்தில் முனிரா �ஒரு கையில் கோக்கும், மறு கையில் கேக்குமாக� வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறாள்... சும்மா விடுவாளா ஃபைல் பட்டம்மா... உனக்கிருக்கிற உடம்புக்கு இதெல்லாம் சாப்பிடக் கூடாது என்று பிடுங்கி வைத்து விட்டு அறிவுரையை அள்ளித் தெளித்திருக்கிறாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பின் பொங்கி எழுந்த முனிரா, பெரிய கோக் டின்னை இவள் மேல் விசிறி அடித்திருக்கிறாள். நல்லவேளை அது அவள் மேல் படவில்லை... பட்டிருந்தால் ஃபைல் பட்டம்மா ... தலையில் பெரிய கட்டம்மா� என்று பாடியிருக்கவேண்டியது தான். நடந்ததையெல்லாம் மறைத்து, என்னையும் முனீராவிடம் அனுப்பியிருக்கிறாள். இப்ப சொல்லுங்க, அவளை ராட்சஸி என்று நான் சொல்லுவேனா, மாட்டேனா?

இதையெல்லாம் கேட்ட எனக்கு கிலி பிடித்தது."சேச்சி எண்ட கூட வரூ� என்று நர்ஸையும் அழைத்துக் கொண்டு அறை எண் 406 ஐ அடைந்தேன். கதவைத் திறந்து வழக்கம் போல் முகமன் கூறினேன்.

அங்கே முனீராவைப் பார்த்த நான் அசந்து போனேன். 20 வயதுப் பெண். குழந்தை தனம் மாறாத அழகான வட்ட முகம், களையான பச்சைநிற கண்கள் என்று ஒரு மெகா சைஸ் பூங் கொத்தாக, ஒரு தேவதைபோல அமர்ந்திருந்தாள் முனீரா.. என்ன கொஞ்சம் குண்டு தேவதை... உடல் எடைதான் 100 கிலோ இருக்கக் கூடும். இடது கையில் கட்டு... வலது கையில் ஒரு பெரிய லேய்ஸ் சிப்ஸுடன், அறையிலுள்ள டி.வியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடன் அவள் பெற்றோரும் இருந்தனர்.அவர்களிடம் என்ன பிரச்சனை என்றேன் அரபியில். எதிரில் அசிரத்தையாக நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு சவுதி உடைந்த ஆங்கிலத்தில் பேசத் துவங்கினான்.

அதாகப்பட்டது, அந்த சவுதியின் பெயர் சாலேஹ். அவன் மனைவிதான் முனீரா. திருமணத்திற்குப் முன் ஒல்லியாய் அழகாய் இருந்த முனீரா திருமணத்திற்குப் பின் குண்டாகி விட்டாளாம். அதிக எடை காரணமாக முனீராவை சாலேஹ்க்கு பிடிக்காமல் போய் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உத்தேசித்துள்ளானாம். இதை அறிந்த முனீரா கை நரம்பை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள்.

இதை விசாரித்து முடிப்பதற்குள் சிப்ஸை முழுதுமாக முடித்திருந்தாள் முனீரா. இது என்னுடைய நேரம்... நான் அதிகம் பேச வேண்டிய நேரம்...
நர்ஸ் என்னை முனீராவிடம் அறிமுகப் படுத்தினாள்.. நான் அவள் உணவைப் பற்றித்தான் பேசப்போகிறேன் என்று தெரிந்து கொண்ட முனீரா, பாம்பைப் பார்த்த கீரியைப் போல என்னுடன் சண்டைக்கு வர ஆயத்தமானாள்.
நான் முனீராவிடம் முதலில் பேசிய வார்த்தைகள் "நீ ரொம்ப அழகாயிருக்கிறாயே... உனக்கு லேய்ஸ் சிப்ஸில் எந்த ஃபிளேவர் ரொம்ப பிடிக்கும்?..�, என்றேன்.

முனீரா மொத்தமாக நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தாள்.முதல் நாள் சந்திப்பிற்குப் பின் அவள் முகத்தில் லேசான சிரிப்பை நான் பார்தேன். அடுத்தடுத்த நாட்களில் பிலிப்பைனியை தடுத்து விட்டு நானே முனீராவைப் பார்க்க போனேன். எனக்கு ஏனோ முனீராவை பிடித்திருந்தது சிறிது நேரம் கிடைத்தாலும் அறை எண் 406 க்கு பச்சைக் கண் தேவதையைப் பார்க்கப் போய்விடுவேன்.

முனீரா நல்ல புத்திசாலிப் பெண். மென்மையான மலரைப் போன்றவள். முனீரா, தான் 2 மாதம் கர்ப்பமாய் இருப்பதாகவும், அதை இன்னும் தன் குடும்பத்தில் கூட யாருக்கும் தெரியப்படுத்தவில்லை என்றும், என்னிடம் தான் முதலில் சொல்வதாகவும் கூறினாள். நான் அதிர்ச்சி அடைந்தேன். வயிற்றுப் பிள்ளையுடனா தற்கொலைக்கு முயன்றாய் என்று கடிந்து கொண்டேன்.. தனக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என்றும் அதற்கு "ஃபாத்திமா" என்று பெயர் வைக்கப் போவதாகவும், அவளை நன்றாக படிக்கவைத்து ஒரு மருத்துவர் ஆக்கப் போவதாகவும் கூறினாள். பிரசவம் பார்க்க இதே மருத்துவமனைக்குத் தான் வருவேன், நீயும் என்னுடன் கண்டிப்பாய் இருக்க வேண்டும் என்றாள். நானும் சரி என்று உறுதி அளித்தேன். எனக்கும் குட்டி பச்சைக்கண் தேவதையைப் பார்க்க ஆவலாய் இருந்தது.
`
அவளைப் பார்க்கப் போகும்போதெல்லாம் தொழில் தர்மத்தை மீறி, அவளுக்குப் பிடித்த சாக்லேட்டோ, சிப்ஸோ வாங்கிச் செல்வேன்... பிள்ளைத்தாய்ச்சி பெண் ஆகையால் தற்போது எடையைக் குறைக்க வேண்டாம் என்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் போதும், எடைக் குறைப்பை டெலிவரி ஆன பின் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தேன்.

இத்தனைக்கும் எனக்கு அரபிமொழி அவ்வளவாகத் தெரியாது.அவளுக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. எங்கள் சம்பாசனைகள் பெரும்பாலும் என் பட்லர் அரபியிலும், ஊமைச் சைகைகளிலும் இருக்கும். இருப்பினும் மொழியைத் தாண்டி எங்களை ஏதோ ஒன்று பிணைத்திருந்ததை உணர்ந்தேன்.

நான்காம் நாள் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகையில் நான் அவளுடன் இருந்தேன். என்னை அணைத்து முத்தமிட்டு, தான் அணிந்திருந்த ஒரு பச்சைக் கல் மோதிரத்தை கழற்றி, என் விரலில் அணிவித்தாள். ஓய்வு எடுக்க அம்மா வீட்டுக்குப் போவதாகவும், விரைவில் என்னைத் தொடர்பு கொள்வதாகவும் கூறினாள்.
.
அதன் பின் சில நாட்கள் கழித்து, அவள் கொடுத்த தொலைபேசி எண்ணில் அழைத்தால் யாருமே எடுக்கவில்லை. நானும் வேலைப்பளுவில் முனீராவை மறந்து போனேன். 406 ஆம் அறையைத் தாண்டும் போது மட்டும் அனிச்சையாக என் கண்கள், என் கையிலிருந்த மோதிரத்தைப் பார்க்கும்.

இப்படியாக நான்கு மாதங்கள் கழிந்திருக்கும், அது ஒரு சனிக்கிழமை. அவுட் பேசண்டுகளுக்கான நேரம். சவுதி அரேபியா இயல்புக்கு மாறாக மேகமூட்டத்துடன், மழைக்கான அறிகுறிகளுடன் தென் பட்டது. நானும் இரண்டு நோயாளிகளை சந்தித்து விட்டு, உடனிருந்த நர்ஸுடன் சூடான தேநீர் பருகிவிட்டு அடுத்த நோயாளிக்காகக் காத்திருந்தேன்.

கதவு தட்டப் பட்டு, தம்பதி சமேதராக வந்தவர்களை ஏறிட்டேன். அந்தப் பெண் உடைந்து விடுவாள் போல ஒல்லியாக இருந்தாள். உடன் வந்த சவுதி பேசத்துவங்கினான். "டாக்டோரா, இவள் என் மனைவி, மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். அழுந்த முத்தமிட்டால் மூச்சு முட்டி இறந்து விடுவாள் போல...குடும்பம் நடத்தவே பயமாக இருக்கிறது. எப்படியாவது இவளைத் தேற்றுங்கள்�", என்றான்.

எங்கேயோ பார்த்தமுகம் அவனுடையது, எல்லாம் பேசி முடித்து கணிணியில் பதிவதற்காக, என்ன பெயர்?என்று கேட்டேன். �சாலேஹ்� என்றான். அட இது முனீராவின் கணவன்! இப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது. நான் குழம்பிப் போனவளாய் முனீரா எப்படி இருக்கிறாள்? என்று கேட்டேன்.

முனீரா மருத்துவமனியிலிருந்து போன, நான்காவது வாரம், சாலேஹ் வேறொரு பெண்ணைத் ரகசியத் திருமணம் செய்திருக்கிறான். அதைத் தாங்க முடியாத முனீரா தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு (இந்த முறை பிழைக்காமல்) செத்துப் போய்விட்டாளாம், என்று சொல்லி முடித்து என் பதிலுக்கு காத்திராமல் சாலேஹ் வெளியேறினான் புது மனைவியுடன்.

"என்ன இது? சற்று முன் வரை நன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த இந்தப் பெண்ணிற்கு என்ன ஆயிற்று? திடீரென மோதிரத்தை கழற்றி வைத்துக் கொண்டு இப்படி தேம்பித் தேம்பி அழுகிறாள்??..", என்று என்னை வினோதமாகப் பார்த்தாள் உடனிருந்த நர்ஸ்.

அன்புரசிகன்
03-10-2007, 09:40 PM
மத்திய கிழக்கில் இது போன்ற சில விடையங்களை சகஜமாகத்தான் பார்த்தாகவேண்டும்.

பாராட்டுக்கள்.

உங்களின் இந்தக்கதை நிஜக்கதை போலுள்ளதே... அவ்வாறின் கூறுங்கள். இத்திரி இருக்க வேண்டிய பகுதி வேறு.

மனோஜ்
03-10-2007, 10:05 PM
உங்களுக்கு நிறை அனுபவங்கள் வரும் என்று நினைக்கிறோன் மட்டும் இன்றி அழகாக எழுதுகிறீர்கள் தொடர்ந்து பகிந்து கொள்ளுங்கள் நன்றி

மன்மதன்
03-10-2007, 10:08 PM
யவனிகா..

இது கதை மாதிரி தெரியவில்லை. அச்சு அசல் நடந்தது மாதிரியே தெரிகிறது.. அவ்வளவு நேர்த்தி.

மொழிகளை கையாண்ட விதம் அருமை.. கேரள சேச்சியின் வசனங்கள் மலையாளத்திலும், பிலிப்ஸ் முகமன் கூறுதலும் , என ஆரம்பம் முதல் கடைசி வரை, காட்சிகளை கண்முன் நிறுத்துகின்றன..

கதையின் நாயகன் ஆணா/பெண்ணா என்பதை கடைசி வரியில் வெளிப்படுத்தியது நல்ல ட்விஸ்ட்..நிறைய பேர், டாக்டர் ஒரு ஆண் என்றே நினைத்திருப்பர்..

இது கதையல்ல... நிஜம்தானே...

பாரதி
04-10-2007, 02:44 AM
என் மனமார்ந்த பாராட்டுக்கள் யவனி. யானியின் இசை போல, தெளிந்த நீரோடை போல வெகு நேர்த்தியாக சொல்லி இருக்கிறீர்கள். கதையின் முடிவு இப்படி இருக்கும் என்பதற்காகவே இடையிடையே நகைச்சுவை கலக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணுகிறேன். அன்றாடம் நாம் காணும் விசயங்களில் இருந்தே நன்றாக கற்பனை கலந்த கதை அல்லது உண்மையான கதை சொல்வது உங்களுக்கு மிக நன்றாக வரும் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

ஜெயாஸ்தா
04-10-2007, 03:13 AM
ஆரம்பம் முதல் இறுதி வரை படிக்க விறுவிறுப்பாக இருந்தது யவனிகா. படிக்கும் போது உண்மைக்சம்பவத்தின் சாயல்கள்தான் அதிகம் தென்படுகிறது. தொய்வில்லாத சரளமான நடை. படிப்பதற்கு மேலும் ரசனையாயிருக்கிறது.

யவனிகா
04-10-2007, 04:10 AM
உண்மைதான் சகோதர*ர்களே, நீங்கள் யூகித்தது.
இது உண்மைச் சம்பவம் தான்.நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சகஜமில்லாத சில சம்பவங்கள் நீங்காத வடுவாக நெஞ்சில் தங்கி விடுகின்றன.அவற்றை இவ்வாறு மனதிலிருந்து இறக்கி வைப்பது சற்று ஆசுவாசம் அளிப்பதாகவே இருக்கிறது.களம் தந்த மன்றத்திற்கும்,பின்னூட்டம் அளித்த தங்களுக்கும் நன்றிகள்.

தளபதி
04-10-2007, 06:05 AM
உண்மைதான் சகோதர*ர்களே, நீங்கள் யூகித்தது.
இது உண்மைச் சம்பவம் தான்.நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சகஜமில்லாத சில சம்பவங்கள் நீங்காத வடுவாக நெஞ்சில் தங்கி விடுகின்றன.அவற்றை இவ்வாறு மனதிலிருந்து இறக்கி வைப்பது சற்று ஆசுவாசம் அளிப்பதாகவே இருக்கிறது.களம் தந்த மன்றத்திற்கும்,பின்னூட்டம் அளித்த தங்களுக்கும் நன்றிகள்.

எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. நம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நம்மை நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். அதை நாம் பகிர்ந்து கொள்ளும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும். இது போன்று நானும் என் வாழ்க்கையில் நடந்ததை என் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வேன்.

ஆனால் இது சோகமான சம்பவம். மேலும் மனது கிடந்து அடித்துக் கொண்டிருக்கும். மொழிக்குமேல் நாம் சிலருடன் ஒன்றிப் போய்விடுவதும், அவர்களுக்கு கஷ்டம் என்றால் நம் மனது பாடாய் படுத்துவதும் நம் இந்தியர்களுக்கே உரிய நல்ல குணம். இது உண்மை, இந்த பகிர்வு உங்களுக்கு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

சோகமோ அல்லது சந்தோசமோ பகிரும்போது ஆசுவாசம் கிடைக்கும்.

சிவா.ஜி
04-10-2007, 06:15 AM
கதையோ உண்மைச்சம்பவமோ....வெகு நேர்த்தியாக அளிக்கப்பட்டிருக்கிறது.ஒரு தேர்ந்த எழுத்தாளரின் லாவகம் தெரிகிறது.மன உணர்வுகள் மிகச் சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.பாவம் அந்த சவுதி பெண்.அந்த கணவனை நினைத்தால் கோபம் வருகிறது.முதல் மனைவி குண்டாக இருப்பதால் பிடிக்கவில்லை,அடுத்த மனைவி ஒல்லியாக இருப்பதால் பிடிக்கவில்லயாம்.என்ன ஜென்மங்கள் இவர்களெல்லாம் என்று தோன்றுகிறது.அருமையான எழுத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் யவனிகா.

பூமகள்
04-10-2007, 06:57 AM
யவனிகா அக்கா...
படித்தவுடனே ஊகிக்க முடிந்தது கண்டிப்பாக இது உண்மைச் சம்பவமாகத்தான் இருக்கவேண்டுமென்று..
அந்த குட்டி தேவதையும் குண்டு தேவதையையும் கொன்று விட்டு இன்னொரு பெண்ணுடன் அந்த கணவனை நினைக்கையில் ஆத்திரம் பயங்கரமாய் வருகிறது. இதற்கு சவுதியில் தூக்குதண்டனை கிடையாதா?
தற்கொலைக்கு தூண்டுகோளாக இருந்த அவனை தூக்கில் போடனும்...
நேர்த்தியான எழுத்துக்கள்... நகைச்சுவையை மிகவும் ரசித்தேன்.. இறுதியில் கண்கள் பனிக்கச் செய்துவிட்டீர்கள் அக்கா.
தொடர்ந்து எழுதுங்கள். நிறைய கற்க வேண்டும் உங்களிடம் இருந்து...!!

யவனிகா
04-10-2007, 07:18 AM
..
அந்த குட்டி தேவதையும் குண்டு தேவதையையும் கொன்று விட்டு இன்னொரு பெண்ணுடன் அந்த கணவனை நினைக்கையில் ஆத்திரம் பயங்கரமாய் வருகிறது.

என்ன செய்வது பூமகள்?..தேவதைகள் கூட சமயங்களில் ஆண்களுக்கு அலுத்துத் தான் போய்விடுகிறார்கள்.

அருமைச் சகோதரர்கள் தளபதி,சிவா...
உங்கள் பாராட்டு எனக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.நன்றிகள்.

இதயம்
04-10-2007, 08:25 AM
மிகவும் பரப்பரப்புடன் படிக்க வைத்து, முடிவில் என் மனதை பாதித்த நிகழ்வு இது. இதை நான் கதை என்று ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பதை சகோதரி யவனிகா இது உண்மைச்சம்பவம் என்றதை படிப்பதற்கு முன்பே உறுதி செய்து கொண்டேன். கற்பனையில் ஒரு கதையை எழுதுவதற்கும், நடந்த நிகழ்வை உள்வாங்கி, உணர்ந்து எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. கதைகளில் பொதுவாக எதார்த்தமும், உணர்வுகளின் உயிரோட்டமும் குறைவாக இருக்கும். நான் கண்ட, அனுபவித்த சம்பவங்களை எழுதும் போதே நம்மை அறியாமல் நாம் உணர்ந்த உணர்வும் அதில் இரண்டற கலப்பதை மறுக்க முடியாது. நான் என் பதிவுகளில் சவுதி தேசத்தவரைப்பற்றி நிறைய பெருமையாக உயர்த்தி எழுதியிருக்கிறேன். அதற்கு காரணம், அவர்களிடம் நான் உணர்ந்த உயர்ந்த குணங்களை மற்றவர்களிடம் தெரியப்படுத்தவும், எல்லா சவுதியினரும் ஒன்றே என்ற ரீதியில் அவர்கள் மேல் சேற்றை வாரி இறைக்கும் சிலரின் விமர்சனக்கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் பதிலுரைக்கவும் தான்.

எல்லோரிடமும் எல்லா நல்ல குணங்களும் இருப்பதில்லை என்பது போல் சவுதியினரிடமும் நான் குறைகளை கண்டிருக்கிறேன். அதில் என்னை வியக்க, அதிர்ச்சியடைய, அதிருப்தி அடைய வைத்த விஷயங்களில் ஒன்று என்ன தெரியுமா..? கட்டிய மனைவியிடம் அவர்கள் காட்டாத காதல்..! "இஸ்லாமினுடைய பிரதிநிதிகளே நாங்கள் தான்" என்பது போல் நடந்து கொள்ளும் இவர்கள், இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்தும் மனைவியை நேசித்தல், குடும்பத்தை நேசித்தல், மனைவிக்கான உரிமைகளை அளித்தல், அவளின் உணர்வுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றில் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். சவுதியில் குடும்ப கட்டமைப்பு என்பது அடித்தளம் இடப்படாத கட்டிடம் போல் மிகவும் பலவீனமாக இருக்கிறது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை என்பது காணக்கிடைக்காத விஷயம். மகன் திருமணமானால் அந்த திருமணத்திற்கு முன்பே அவன் தனிக்குடித்தனத்திற்கு தேவையான வீடு, பொருட்கள் எல்லாம் தயார் செய்யப்பட்டு தனி வாழ்க்கை என்ற பெயரில் தனித்து விடப்படுகிறான்.

சரி..! இவர்களின் மனைவி மீதான காதல் உணர்வு அழிவதற்கு காரணம் என்ன..? வரதட்சிணை என்ற வன்கொடுமையை அழிக்க இஸ்லாம் கொண்டு வந்த "மஹர்" என்ற மாற்று முறையை பெண் வீட்டார் பணம் பெற தவறாக பயன்படுத்தும் போது வரும் வினைகளில் இதுவும் ஒன்று. சவுதியில் ஒரு ஆணுக்கு திருமணம் செய்ய, இந்தியாவில் ஒரு பெண் படும் கஷ்டத்திற்கு ஈடாக இருக்கிறது. அவனுடைய வருமானம், வாழ்க்கைச்சூழல் தெரியாமல் அளவுக்கு அதிகமாக அவனிடம் மஹர் கேட்டு, அதை அவன் சேகரிக்க நாயாய், பேயாய் உழைத்து, விழி பிதுங்கி திருமணம் செய்யும் போது அவள் மீது மனதில் உள் ஓரத்தில் ஒரு வெறுப்பே மிஞ்சி இருக்கும். திருமணத்திற்கு பிறகு அவள் அவனின் கட்டுப்பாட்டில் இருப்பாள் என்றாலும், திருமணம் என்ற அந்தஸ்தை, பெருமையை அடைய பெண் அவனை உழைத்து, பொருள் சேர்க்க வைத்து கஷ்டப்படுத்துவதால் அங்கே காதலின் கல்லறை அமைதியாக தயாராகிறது. நம் ஊரில் வரதட்சிணையில் கடுமையாக இருந்து, அதை வாங்கிய பிறகே திருமணம் செய்யும் கணவன் மேல் மனைவிக்கு முழு ஈடுபாடு வருமா..? அது போல் தான்..!!

அடுத்து, பல்வேறு அடிப்படைக்காரணங்களுக்காக இஸ்லாம் அறிவித்த பல தார முறையை தன்னுடைய சுயநலத்திற்காக தன் அந்தஸ்து, பணம் பலம் கொண்டு பயன்படுத்திக்கொண்ட ஆண்களால் காதலின் கல்லறை வெகு வேகமாக கட்டப்பட்டு வளருகிறது. தன் கண்ணை இன்னொருத்தியை ஏறெடுத்தும் பார்க்க கூடாது என்று நினைக்கும் ஒரு பெண், தன் கணவன் ஆசைப்பட்டால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டு வருவான் என்கிற போது அவளுக்கு கணவன் மீதும், அவனுக்கு மனைவி மீதும் காதல் வலுவடைய வாய்ப்பே இல்லை. இப்படித்தான் அரேபியர்கள் தன் மார்க்கம் சொன்னதை தன் சுய இலாபத்திற்காக தவறாக பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கையின் சந்தோஷங்களை அழித்துக்கொள்கிறார்கள். இதற்கு காரணம் அரேபியரா அல்லது மறு தார அனுமதி அளித்த இஸ்லாமா என்பது சிலரின் கேள்வியாக இருக்கும். இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லீம்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். இந்திய முஸ்லீம்கள் தன் இணையின் மீதான காதலில் எந்த வகையில் குறைந்தவர்கள்..? அல்லது எத்தனை சதவீதம் முஸ்லீம்கள் மனைவியை விட்டு மறுதாரம் செய்கிறார்கள்.? புரிந்திருக்கும் குறை எங்கு என்று..!! நம்மவர்களை இஸ்லாமியர்கள் என்ற காரணத்திற்காக அரேபியர்களோடு ஒப்பிட முடியவே முடியாது. ஆனால், என்றாவது ஒரு நாள் அவர்கள் உடல் இன்பம் மட்டும் வாழ்க்கை இல்லை, சந்தோஷம் இல்லை என்றும், அதையும் தாண்டி அன்பு என்ற அற்புத விஷயம் இருக்கிறது என்பதை புரிய அவர்களுக்கு ஒரு நாள் வரும். ஆனால், அந்த நேரம் அவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வாய்ப்புகள் இருக்காது.

மனதை பாதிக்கும் நிகழ்வுகளை கொண்ட கதைகள் சிறப்படையும். அது போன்ற கதைகளின் அடி ஆழத்தில் அனுபவங்களில் உயிரோட்டம் இருப்பது அதற்கு பெரும் பலம். சகோதரி தான் நேரில் கண்ட சம்பவங்களை முன் நிறுத்துவது போல் எழுதியிருக்கிறார். தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் மீது கழிவிரக்கமும், அதற்கு காரணமான அந்த கொடியவனின் மீது கொலைவெறியும் வருகிறது. ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமாக இருந்து விட்டு அவனால் இன்னொரு பெண்ணை எப்படி மணக்க முடிகிறது.? அவனுக்கு இரக்கம் என்பதே கிடையாதா..? மனசாட்சி உறுத்தி கொல்லாதா..? அந்த பெண் குண்டானதற்காக இன்னொரு மணத்திற்கு துணிந்தவன் அடுத்து வந்த பெண் ஒல்லியாக இருப்பதற்காக இன்னொரு பெண்ணை மணக்க நினைத்து மீண்டும் ஒல்லிப்பெண்ணின் மரணத்திற்கு காரணமாக இருக்கமாட்டான் என்பது என்ன நிச்சயம்..? சவுதியில் நேரடியாக கொலை செய்தவனுக்கு தான் மரண தண்டனையே தவிர, தற்கொலைக்கு தூண்டியவனுக்கு இல்லை..!! அதனால் தான் இது போன்ற இழிபிறவிகள் மீண்டும், மீண்டும் அதே தப்பை செய்ய காரணமாகிறது. தேசம் கடந்து மொழி கடந்து நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க பொதுக்காரணம் ஒன்று போதும். அது தான் அன்பு..! அது தானே உங்களையும், அந்த குண்டுப்பெண்ணையும் எல்லாம் கடந்து இணைத்தது..? உங்களின் அன்பில் குறைந்த சதவீதத்தில் அந்த பாவி காட்டியிருந்தால் ஒரு உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். கண்டவர்கள் மேலெல்லாம் மோகம் கொள்ளும் அந்த நாய்க்கு எங்கே தெரியப்போகிறது அன்பின், காதலின் மகத்துவம்.? இந்த திரியின் தலைப்பை கண்டு "ஹை..யவனிகாவின் நகைச்சுவை கதை..!" என்று ஆர்வத்துடன் வந்த நான், முழுதும் படித்துவிட்டு இதயம் கனத்து நின்றேன். அப்பாவிப்பெண் முனீராவின் முடிவு உங்களை மட்டும் அழ வைக்கவில்லை, என்னையும் தான்.. மனதால்..!!

அமரன்
04-10-2007, 08:28 AM
சீரான வீதியில் நகரும் அலங்காரம் மிகுந்த தேர் போல கதை நகர்வு. உற்சவர் யாரென தீர்மானிக்க எவ்வித சந்தர்ப்பமும் கொடுக்காது, ஆங்காங்கே நகைச்சுவை துணுக்குகள் தோரணங்களாக ஆட, மெல்லிய இழையாக ஒரு பாசக்கோட்டின் மேல் நகரும் கதை சடுதியாக நின்றது போல கனமான முடிவு. அட இதை நித்தம் காண்கின்றேனே என எண்ணவைக்கும் விதமாக சம்பவக்கொர்வை விபரிப்பு. வேலைத்தளத்தில் பல்வேறுமொழி வணங்கங்களுக்கு தலையசைத்து, தலைசாய்த்து பதிலளிக்கும் அனுபவம் கதையை படிக்கும்போது ஏற்பட்டது பதத்திற்கு ஒரு துளி. இதயபூவமாக பாராட்டுகிறேன் யவனிகா.

கதையின் கரு பற்றி அதிகம் பேச முடியாது. கற்பனையாக இருந்தால் அது தவறு; இது தவறு என ஏதோ எமது கருத்துகளை சொல்லலாம். உண்மைச்சம்பவதிற்கு இது பொருந்தாது..தொடருங்கள் யவனிகா.

யவனிகா
04-10-2007, 08:49 AM
நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரர் இதயம் அவர்களே, சவூதியில் ஆண்களுக்குப் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல.நம்ம ஊர்ப் பெண்களிடம் காண்பதைப் போல பணிவு,பாசம்,அமைதி எவற்றையும் அவர்களிடம் காண்பது அரிது,கணவன் சம்பளம் வாங்கியதும், முதல் வேலையாக அவன் வாங்கிய சம்பளத்தை ஆடை,அணிகலன் வாங்கி ஊதாரித் தனமாக செலவழிப்பார்கள்.அவர்கள் அப்படி செய்ய வில்லையென்றால் கணவன் பணம் சேர்த்து இன்னொரு திருமணம் செய்து கொள்வான்.ஜாடிக்கேற்ற மூடி போல, அவர்களுடைய வாழ்க்கை முறை.இதில் விதிவிலக்காக வாழ்ந்து வரும் தம்பதியினரும் உள்ளனர்.
உங்களது விரிவான விமர்சனத்திற்கு நன்றி.உங்களது இஸ்லாம் குறித்த செய்திகள் அத்துனையும் அருமை.மாஷா அல்லாஹ்.மப்ரூக்.

அன்புள்ள அமரன்,
மன்ற*த்தின் தமிழ் ஜாம்பவானாகிய உங்களிடமிருந்து கிடைத்த பாராட்டுக்கு நன்றி.இது வசிஷ்டர் வாயால் எனக்குக் கிடைத்த பிரம்ம ரிஷிப் பட்டம்.

lolluvathiyar
04-10-2007, 02:52 PM
யவனிக்கா, கதையை படிக்க ஆரம்பித்த போது நகைசுவை கதை போலவே சென்றது. இடையில் டாக்டர் பேசன்ட் பினைப்பை கொண்டு வந்து. இறுதியில் சோகத்தில் முடிந்து விட்டது.
வீட்டுக்கு விட்டு வாசபடி என்பார்கள். அதை மாற்றி நாட்டுக்கு நாடு வாசபடி எனலாம்

பென்ஸ்
04-10-2007, 04:25 PM
உங்கள் உணர்வுகளை பகிர நினைத்தமைக்கு நன்றி யவனிகா....

மருத்துவமனையில் நடந்த ஒரு உணர்ச்சிபூர்வமான ஒரு நிகள்வை கொடுத்து இருக்கிறிர்கள்... நடந்த சம்பவத்தை அப்படியே கதை சொல்லுவது போல் சொல்லி இருப்பது அருமை... ஒரு திரைப்படம் பார்ப்பது போல் இருந்தது...

டயட் கவுன்சிலிங் செய்யும் நீங்கள் உங்கள் பணியில் இருந்து சிறிதே தவறிவிட்டீர்களே என்பது என் கருத்து. நம்மிடம் வருபவர்களை மருத்துவர்கள் நோயாளிகள் என்று சொன்னாலும் நாம் அவர்களை "கிளையன்ட்ஸ்" என்று சொல்ல வேண்டும் என்பதை நான் வற்புறுத்துவேன்... மேலும் நீங்கள் இங்கு அவர்களது பெயரையும் குடும்ப விவரங்களையும் கொடுத்திருப்பது, கவுன்சிலிங் விதிகளை மீறுகிறதோ என்று பயப்படுகிறென்... மாற்று பெயர் கொடுத்திருந்தாலும் இக்கதையின் ஒரு பகுதியில் ஒரு டிஸ்கிளைமர் கொடுத்து இருக்கலாம்...
கவுன்சிலிங் செய்ய நீங்க அவரிடம் அழகாக "ரேப்போ" உருவாக்கியது பாராட்டதக்கது, ஆனால் நீங்கள் உங்கள் கிளையன்டிடம் அவசியமான ஒரு உறவையும் மீறி உணர்ச்சிபூர்வமான ஒரு உறவை உருவாக்கி இருக்கிறிர்களோ என்ற பயமும் வருகிறது... இதனாலே நமது கடமையும் மீறி நாம் அவர்களிடம் உணர்ச்சிபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்... உதாரனம் --- சாக்கலேட் கொடுப்பது...
மேலும் நீங்கள் உங்கள் கிலையன்டிடம் இருந்து உங்களுக்கான பீசை தவிர பரிசோ வேறு எதுவும் வாங்குவது நலம் அல்லவே....

உங்கள் மென்மையான மனதையும், நல்ல குணத்தையும் பாராட்டுகிறென்... ஆனால் தொழிலில் உணர்வுகலை இனைப்பது சரியல்ல.. குறிப்பாக கவுன்சிலிங்கில்...
எப்போதும் உங்கள் கிளைன்டிடம் இருந்து ஒரு கை தூர வித்தியாசத்தை கையாளுங்கள்....

வாழ்த்துகள்....

Narathar
04-10-2007, 04:37 PM
யவனிகா..........
உங்கள் கதையை படித்ததும் பலதரப்பட்ட எண்ண ஓட்டங்களை என்னுள்ளே விதைத்துவிட்டீர்கள்
பின்னர் பின்னூட்டங்களை படித்தபோது என் எண்ணக்கோலங்கள் எழுத்துவடிவில் என் சகோதர சகோதரிகள் யாத்து விட்டார்கள்

எனவே வாழ்த்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.....
உங்களுக்கு கதை எழுத நன்றாக வருகிறது.....
விட்டு விடாமல் தொடருங்கள்

யவனிகா
04-10-2007, 07:36 PM
நம்மிடம் வருபவர்களை மருத்துவர்கள் நோயாளிகள் என்று சொன்னாலும் நாம் அவர்களை "கிளையன்ட்ஸ்" என்று சொல்ல வேண்டும் என்பதை நான் வற்புறுத்துவேன்... மேலும் நீங்கள் இங்கு அவர்களது பெயரையும் குடும்ப விவரங்களையும் கொடுத்திருப்பது, கவுன்சிலிங் விதிகளை மீறுகிறதோ என்று பயப்படுகிறென்... மாற்று பெயர் கொடுத்திருந்தாலும் இக்கதையின் ஒரு பகுதியில் ஒரு டிஸ்கிளைமர் கொடுத்து இருக்கலாம்...
நீங்கள் உங்கள் கிளையன்டிடம் அவசியமான ஒரு உறவையும் மீறி உணர்ச்சிபூர்வமான ஒரு உறவை உருவாக்கி இருக்கிறிர்களோ என்ற பயமும் வருகிறது... இதனாலே நமது கடமையும் மீறி நாம் அவர்களிடம் உணர்ச்சிபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்... உதாரனம் --- சாக்கலேட் கொடுப்பது...
மேலும் நீங்கள் உங்கள் கிலையன்டிடம் இருந்து உங்களுக்கான பீசை தவிர பரிசோ வேறு எதுவும் வாங்குவது நலம் அல்லவே....

அன்புச் சகோதரர் பென்ஸ்,
முதலில் உங்கள் பாராட்டிற்கு நன்றி. நீங்கள் கூறியது சரி தான். நோயாளிகளுக்கு பதில் கிளையன்ட்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம் தான்.இனி இந்தப் பிழை வராமல் பார்த்துக் கொள்கிறேன், தவிர கதையில் பயன் படுத்தப்பட்ட பெயர்கள் அனைத்தும் கற்பனையே. டிஸ்கிளைமர் பற்றி அறிவுறுத்தியமைக்கு நன்றிகள். அடுத்த கதையில் அதைக் கண்டிப்பாக உபயோகிக்கிறேன்.

என்னதான் மருத்துவத்துறையில் இருந்தாலும் நாமும் மனிதர்கள் தானே. இன்னும் முழுதாய் மரத்துப்போகாத மனதால், சில நேரங்களில் என் கிளையன்சைக் கூட மனதளவில் நெருங்கி விடுகிறேன் தான், அது தவறென நானே கூட யோசித்தது உண்டு.

தவிர சவூதி கிளையன்சிடம் ஒரு பழக்கம் உண்டு, அவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது அன்பின் அடையாளமாக ஹதியா என்ற பெயரில் சிறு பரிசுகளைத் தருவார்கள். அதை மறுத்தால் அவர்களை அவமதிப்பதாக கருதுவார்கள்.
என் செய்கைகளை நான் நியாயப்படுத்துவதாக நீங்கள் எண்ண வேண்டாம், தாழ்மையான தன்னிலை விளக்கம் அளிக்கிறேன். தவிர இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையென்றாலும் இடையிடையே கதை குறித்த சுவாரசியத்திற்காக கற்பனையையும் கலந்துள்ளேன். அதனால் தான் இதை முதலில் கதைப் பகுதியில் பதிந்தேன், பின்னர் அது உண்மைச் சம்பவங்கள் பகுதிக்கு மாற்றப் பட்டுள்ளது.

உங்களது விமர்சனம் என்னை மென்மேலும் செதுக்குவதாகவே உணர்கிறேன், தொடர்ந்து குறைகளைச் சுட்டிக் காட்டவும்

நட்புடன்
யவனிகா.

ஓவியன்
07-10-2007, 08:06 PM
என் மனதைக் கல்லாக்கிய சம்பவப் பகிர்வு, தெள்ளிய நீரோடை போன்ற எழுத்து பிரவாகம் கைவரப் பெற்றிருக்கிறது உங்களுக்கு, யவனிகா பாராட்டுக்கள்.

ஆக்கத்தின் ஆழத்தில் லயித்து பின்னூட்டங்களைப் பார்த்தால், அவை இயம்பி நிற்கும் கருத்துக்கள் பற், பல....

உண்மைகளுடன் உணர்ச்சிகளை சேர்த்து உணர்ச்சிக் குவியலாக அன்பு இதயத்தின் பின்னூட்டமும், நடுவு நிலமையுடன் அசத்தலான தனக்கே உரிய வித்தியாசமான பார்வையுடன் கூடிய பென்ஸ் அண்ணாவின் பின்னூட்டமும் அருமை.

யவனிகா, பெரும்பாலான மனித மனங்கள் இப்படித்தான் "இருப்பதை விட்டு, விட்டு பறப்பதைத் தேடி அலையும்" அதற்கு இந்த சம்பவத்தில் வந்த கணவனும் விதிவிலக்கல்ல....

எனக்கு பிடித்த ஒரு பாடல் வரிகள் "கண்ணிரண்டும், செவியும் திறந்திருந்தால் சுற்றி சுற்றி இன்பமிருக்கு". இந்த வரிகள் தான் எவ்வளவு உண்மையானவை, கண்களும் செவிகளும் இருந்தும் தன்னை சுற்றி இருந்த அந்த அழகான, இன்பமான வாழ்க்கையை தவறவிட்ட அந்தக் கணவன் பார்வையிருந்தும் குருடனே, செவிப்புலனிருந்தும் செவிடனே.....

யவனிகா
07-10-2007, 08:22 PM
அன்புச் சகோதரர் ஓவியன்,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்,குருடர்கள்,செவிடர்கள் மத்தியில் தான் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழிக்க வேண்டியிருக்கிறது,கோவணம் கட்டிய ஊரில் பேண்ட் போட்டவன் முட்டாள் என்பதைப் போல, இவர்களிடையே மாட்டி விழி பிதுங்குகிறது வாழ்க்கை.
நன்றியுடன்
யவனிகா

arun
30-07-2008, 08:40 PM
பெரும்பாலும் சவுதியில் இரு பாலருக்குமே மறுமணம் செய்வது சாதாரணமான நிகழ்வு தான்

தங்களின் கதையில் வரும் பெண்ணை போல தற்கொலை செய்வது மிகவும் குறைவு என நினைக்கிறேன்

நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் தான் படிக்கும்போதே நேரில் இருந்த உணர்வை போல தோன்றுகிறது

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
30-07-2008, 08:50 PM
நான் சவூதியில் இருந்து பார்த்த வரை இங்கே ஆண்கள் பாடுதான் திண்டாட்டம் பேசாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற ஆண்கள்தான் மிகைத்திருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன். முதல் முறையாக இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதையை கேள்விப்படுகிறேன். ஒரு காமிக்ஸ் படித்த திருப்தி என்றாலும் அந்த பெண்ணை நினைத்துப் பார்க்கையில் திருப்தி ஒட்ட வில்லை. நன்றி யவனிகா தகவலுக்கு.

அறிஞர்
30-07-2008, 10:25 PM
உண்மை சம்பவத்தை... நேர்த்தியாய் கொடுத்துள்ளார் தோழி...
மனதை பாதிக்கிற சம்பவங்களுக்கு என்று முடிவு வருமோ...
நன்றி யவனிகா..

meera
31-07-2008, 06:44 AM
யவணியக்கா, படிக்க ஆரம்பித்த போது உங்கள் எழுத்தால் சிரிக்கத்தான் தோன்றியது.அந்த பிலிப்பைனியை பற்றிய வர்னனை அப்படி இருந்தது.
ஆனால் முடிவில் கண்கள் குளமாயின என்பதே உண்மை. தொய்வில்லாத உங்கள் எழுத்தின் வண்ணம் அருமை. உலகில் உள்ளா எல்லா பெண்களும் இப்படித்தானா? கணவன் கைவிட்டால் தற்கொலையைதான் தேடுவார்களா???

விகடன்
17-08-2008, 10:35 AM
மிகவும் உருக்கமான அனுபவந்தான்..
அனுபவித்தால்த்தான் வலியின் ஆழம் உணரமுடியும்.

பகிர்விற்கு நன்றி மட்டுமே எம்மால் சொல்லமுடியும்.

விகடன்
17-08-2008, 10:37 AM
உலகில் உள்ளா எல்லா பெண்களும் இப்படித்தானா? கணவன் கைவிட்டால் தற்கொலையைதான் தேடுவார்களா???
உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியவில்லை?