PDA

View Full Version : உன் கனவுகளை தேடுகிறேன்



அகத்தியன்
03-10-2007, 03:50 AM
உன் கனவுகளை தேடுகிறேன்
எதில் ஒளித்தாய்?
நான் உண்ணும் உன் புன்னகையிலா?
இல்லை....
உன் பார்வை என்னும் சவுக்க்குகளிலா?
எதில் ஒளித்தாய்?

கடைசிப்பக்கம் தொலைந்த மர்ம நாவலாகிப்போனாய்-
நீ எனக்கு.
எதில் மலர்வாய்?
எதில் உலர்வாய்?
எப்போதும் போல் குழப்பந்தான்.
ஆனாலும்,
உன்னில் என்றும் வசிக்கிறேன்.
உன் கனாக்களை தேடுவதில்
என் காலத்தை கழிக்கிறேன்.

நீ மட்டும்
அப்படியே இரு
என் வாழ்வின் சுவாரசியங்கள்
உன்னில்தான் நிரம்பி வழிகின்றன.

பென்ஸ்
03-10-2007, 04:19 AM
காதலை தேடுகிறீரோ இல்லை காதலியை தேடுகிறீரோ... இந்த தேடல் தொடரட்டும்
காதலி கிடைத்தாலும் மனைவியில்...
காதல் கிடைத்தாலும் இல்லறத்தில்..

வாழ்த்துகள் அகத்தியன்..

ஷீ-நிசி
03-10-2007, 04:22 AM
நல்ல தேடல் கவிதை..

வாழ்த்துக்கள்!

சிவா.ஜி
03-10-2007, 04:34 AM
தேடல்களே சுவாரசியமானவைதான்...அதிலும்,காதலியிடம்,காதலைத் தேடினாலும்,கனவைத்தேடினாலும் எல்லாம் இன்பமே.

எதில் மலர்வாய்?
எதில் உலர்வாய்?
எப்போதும் போல் குழப்பந்தான்.
ஆனாலும்,
உன்னில் என்றும் வசிக்கிறேன்.
உன் கனாக்களை தேடுவதில்
என் காலத்தை கழிக்கிறேன்.

நல்ல வரிகள்,காலம் முழுவதும் கனவுகளைத் தேடாமல்,அந்த தேடலுக்கு முற்றுப்புள்ளியும்,வாழ்க்கையின் தொடக்கத்துக்கு ஒரு அரைப்புள்ளியும் இட்டு இனிதே இல்லறம் தொடங்க வேண்டும் இந்த கவிதையின் நாயகன்.
வாழ்த்துக்கள் அகத்தியன்.

ஆதவா
05-10-2007, 03:16 AM
அகத்தியன். தேடல் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி. உள்ளங்களைத் தேடுபவன் மனிதன். உணர்வுகளைத் தேடுபவன் மாமனிதன். நீங்கள் தேடுவதோ கனவுகள்.

கனவுகள் விதைக்கப்படுவதுமில்லை. ஒளிக்கப்படுவதுமில்லை. மறைத்துவைக்க அவை உணர்வுகளோ பொருள்களோ கூட இல்லை. விமர்சனமிடமுடியா கவிதைதான் கனவுகள்.
அவளின் கனவுகளுக்கு யார் வேண்டுமாயின் இருக்கலாம். ஆனால் ஒளித்து வைக்கப்பட்ட ஒரு கனவுக்குள் யார் இருக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.

கவிதையில் இன்னும் புதுமையைச் சேர்த்தியிருக்கலாம். முதல் பாரா மிக அருமை. அதன்படி பிடித்து அப்படியே தொடர்ந்திருக்கவேண்டும்.

காதலும் கனவும் ஒன்று... இரண்டுமே சில நேரங்களில் நிலைக்கும் சில நேரங்களில் மறைந்துவிடும்..... வாழ்வோடு பொருத்திப் பாருங்கள். உண்மை புரியும்.

வாழ்த்துக்கள்.

ஓவியன்
05-10-2007, 09:08 AM
நம் கனவுகளின் தேடல் சாதாரணம்....
நம் காதலியின் கனவுகளைத் தேடுவது அசாதாரணம்....

அசாதாரணத் தேடல் நடாத்தும் அகத்தியனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

தொடர்ந்து தேடுங்க அகத்தியரே....!!! :)