PDA

View Full Version : அப்பா...!



அமரன்
02-10-2007, 07:42 AM
கருப்பை அதிர்வுகளை
அன்னை பிரதிபலிக்க
இருதயத்தில் பிரதிஎடுக்கும்
அன்பின் பிரதிநிதி.

இரைப்பை நிரப்பியபால்
ஓரவாயுடன் விரவும்போது
புசிக்காமலே பசியாறும்
பரமாத்மாவின் தூதுவன்.

மார்பில் நர்த்தனமிடும்
மிதிகளின் ஸ்பரிசத்தால்
மார்பகத்தில் மின்மினிகளை
மிதக்கவிடும் கவிஞன்.

பிஞ்சுகை விரல்களால்
சின்னவிரலை சிறைபிடித்து
தத்தி தத்தி நடக்கும்போது
சித்திரம்காணும் ஓவியன்.

ஏடுகளைப் புரட்டும்
விரல்கள் சொல்லுமவன்
மேனிவிட்ட நீரின் கனதி.
பட்டமே அதன் பெறுதி.

சோகங்களின் சினேகம்
அகற்றும் பகலவன்
அந்திமகாலம் வரை
களத்து மேட்டுகாரன்..

மோகன சாகரத்தால்
மோகமூட்டும் நிலவவன்
அறுவடை காலம்வரை
சோளக்காட்டு பொம்மை.

ஆதிமுதல் அந்தம்வரை
நிஜமாகவும் நிழலாகவும்
தோள்கொடுக்கும் தந்தை
நிகரில்லா உறவன்றோ.!

சிவா.ஜி
02-10-2007, 08:02 AM
ஆஹா...அற்புதமான அப்பா கவிதை. அமரனின் ஒவ்வொரு வரிகளையும் மிக மிக ரசித்தேன்.
தன் பிள்ளைகளின் திறமைகளை அறுவடை செய்யும் களத்துமேட்டுக்காரணாகவும்,அவற்றைக் காவல்காக்கும் சோளக்காட்டு பொம்மையாகவும் இருப்பதோடல்லாமல்,உற்ற தோழனாகவுமிருந்து அவர்களுக்காகவே வாழும் அந்த ஜீவன்....மகத்தானது.மனமார்ந்த பாராட்டுக்கள் அமரன்.

க.கமலக்கண்ணன்
02-10-2007, 08:05 AM
அப்பாவின் பரிவையும்

அன்பையும் வழிகாட்டுதவையும்

அழகாய் கவிதை

அள்ளித் தெளித்திட்ட

அமரனுக்கு வாழ்த்துக்கள்...

பூமகள்
02-10-2007, 08:19 AM
அப்பாவெனும் ஒரு சொல்லில்
அகிலம் கண்டேன் வியந்தவிழியால்..!!

வாசல் வழியே வெளியாக்கி
வழிகாட்டியாகி வழிநடத்தி
விண் தொட வைக்கும்
வேந்தன் நீ..!!

அடம்பிடிக்கும் குழந்தைக்காய்
அறியாமல் பிடித்த பரிசு
வாங்கி வியக்கவைக்கும்
அன்பூற்று நீ!

அறிவியல் அரசியல்
அனைத்தும் புகட்டி
அலசிப் பார்த்து
அகிலம் உணர்த்தும்
அறிவாக்கம் நீ..!!

உயிர் கொடுத்து
உடல் வளர்த்து
என்னில் தம்
கனவைக் காணும்
அப்பா நீயன்றோ??

மிக அழகான அப்பா பற்றிய கவி..!! ஆழமான வரிகள்..வரிக்கு வரி... கற்பனை மின்னுகிறது அமர் அண்ணா.
இந்த கவி எளிய நடையில் புரியும்படியிருந்தது. பாராட்டுக்கள்..!!
அதற்காக முன் எழுதிய நடையை விட வேண்டாம். நாங்கள் அவ்வகை கவிகளில் தான் நிறைய கற்கிறோம்.
தொடர்ந்து வழங்குங்கள்..!!
பாராட்டுக்கள்.!! கலக்கி என்னை கலங்கடித்து வைத்துவிட்டீர்கள் பாசத்தால்..!!

சூரியன்
02-10-2007, 08:24 AM
தந்தையை பற்றிய வரிகள் நன்று.
இந்த வரிகள் அழகுடன் உள்ளன..
(மோகன சாகரத்தால்
மோகமூட்டும் நிலவவன்
அறுவடை காலம்வரை
சோளக்காட்டு மொம்மை.)

இலக்கியன்
02-10-2007, 08:25 AM
தந்தைதினத்தில் தந்தைக்கு ஒரு கவிதை சிறப்பு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. வாழ்த்துக்கள் அமரன் அண்ணா

இனியவள்
02-10-2007, 08:26 AM
கவிதை அழகு
அமர் உங்கள் வைர வரிகளால்
மின்னுகின்றன..

அப்பா ஹீம் குடுத்து வைக்க வேண்டும்
தாய் தந்தையோடு வாழ்வதற்கு :)

அமரன்
02-10-2007, 09:50 AM
மிக்க நன்றி அன்புள்ளம்கொண்ட உறவுகளே!
மன்றத்தில் இதுவரை எத்தனையோ கவிதைகள் அம்மாவுக்காக..ஷீ மட்டுமே அப்பாவுக்காக கவி புனைந்திருந்தார் (எனக்குத் தெரிந்து). ஏன் என்ற கேள்வி என்னுள் முளைத்து வெளிப்பட்ட பதிலே இக்கவிதை. உங்களுக்கும் பிடித்ததில் இரட்டிப்பாகிறது எனது மகிழ்ச்சி.

சிவா.ஜி
02-10-2007, 01:37 PM
மிக்க நன்றி அன்புள்ளம்கொண்ட உறவுகளே!
மன்றத்தில் இதுவரை எத்தனையோ கவிதைகள் அம்மாவுக்காக..ஷீ மட்டுமே அப்பாவுக்காக கவி புனைந்திருந்தார் (எனக்குத் தெரிந்து). ஏன் என்ற கேள்வி என்னுள் முளைத்து வெளிப்பட்ட பதிலே இக்கவிதை. உங்களுக்கும் பிடித்ததில் இரட்டிப்பாகிறது எனது மகிழ்ச்சி.

அமரன் அடியேனும் ஒரு கவிதை அப்பாவுக்காக எழுதியிருக்கிறேன்.

அப்பா (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=215183#post215183)

அமரன்
02-10-2007, 01:44 PM
அமரன் அடியேனும் ஒரு கவிதை அப்பாவுக்காக எழுதியிருக்கிறேன்.

அப்பா (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=215183#post215183)

ஆமா..சிவா. அப்போ நான் கத்துக்குட்டி ஆழமாக விமர்சிக்கவில்லைன்னு நினைக்கின்றேன்..

ஜெயாஸ்தா
02-10-2007, 02:14 PM
தந்தை... அடிக்க வேண்டிய நேரத்தில் அடித்து, அணைக்க வேண்டிய நேரத்தில் அணைத்து, சரியான பாதையில் நடக்கக்கற்றுக்கொடுப்பவர். உற்ற தோழனாய், குருவாய் நடந்து நம்மை வழிநடத்தும் அன்பு சாகரம்.
பொருளடர்ந்த வரிகளில், நிறைவான கருவோடு, உணர்வால் உருவான கவிதை நன்று அமரன்.

மன்மதன்
02-10-2007, 03:03 PM
ஆதிமுதல் அந்தம்வரை
நிஜமாகவும் நிழலாகவும்
தோள்கொடுக்கும் தந்தை
நிகரில்லா உறவன்றோ.!

கண்டிப்பா அமரன்... எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.. பாசத்தை கவிதையாக வடித்துள்ளீர்கள்.. பாராட்டுகள்..

மீனாகுமார்
02-10-2007, 04:13 PM
அப்பாவின் தலைக்கு ஓர் மகுடம். அப்பாவோடு உறவாடும் வாய்ப்பு எனக்கு இல்லாவிடினும், என் அம்மாவுக்குள்ளேயே என் அப்பாவைக் கண்டுவிட்டதாலும், நான் அப்பாவாக என் கடைமையை செய்யும் போது உங்கள் கவிதை வரிகள் நெஞ்சை வருடுகின்றன......

தந்தை.. இவர் அறிவின் சிகரம். நன்றி அமரன்...

ஷீ-நிசி
03-10-2007, 04:20 AM
அப்பா என்பது மிக உன்னத உறவு. அருகில் இருக்கும்போது அவரின் அருமைகள் நமக்கு தெரிவதில்லை.

அப்பாவிற்கான கவிதை நன்று அமரன்.

சாம்பவி
03-10-2007, 05:04 AM
அப்பா..
அனைவரின் முதல் வியப்பு. !
நண்பனாய்... ஆசானாய்
வழிகாட்டியாய்...
கலங்கரை விளக்காய்...
அப்பப்பா... !
அழகிய அப்பா கவிதை.
அளித்த அமரனுக்கு நன்றி. !

.

அமரன்
03-10-2007, 11:22 AM
கவிதையை விமர்சித்து என்னை வளர்க்க உதவிய தமிழ்தந்த உறவுகளுக்கு நன்றி..

அம்மா,அப்பா இருவேறு அன்புத் துருவங்கள்..இரண்டும் இணைந்து பார்ப்பது கொள்ளை இன்பம்.. ஒருவரில் இருவரையும் காண்பது சற்றே வலிகலந்த பேரின்பம்..


உங்களில் ஒருவன்,

ஆதவா
05-10-2007, 03:30 AM
அமரன். பெரும்பாலும் அப்பாவுக்கு கவிதை வடிப்பதில்லை. ஏனெனில் அன்னையை எந்த அளவுக்கு கவிதையில் பொருத்துகிறார்களோ அந்த அளவுக்கு அய்யனைப் பொருத்துவதில் சிரமப்படுகிறார்கள். இங்கே ஷீ-நிசி மற்றூம் சிவா.ஜி எழுதக் கண்டிருக்கிறேன். நானும் பல கவிதைகள் அப்பாவைப் பற்றி எழுதி வைத்திருக்கிறேன். இங்கே அல்ல. எனது சொந்த ஏட்டில். ஆனால் சிறப்பித்து அல்ல.

சிறப்பித்து எழுதிய உங்களை உண்மையிலேயே பாராட்டுகிறேன். நல்ல கவிதை. வார்த்தைகளும் பிரமாதம். பெரும்பாலும் அப்பாக்கள் (நாளை நாம் ஆனாலும்) தன் மகனை ஒரு வித கட்டுக்குள் வர நினைப்பார்கள். மகனின் இஷ்டப்படி வளரட்டும் என்று சொல்பவர்கள் கூட அப்படித்தான். அந்த கட்டுக்குள் வர முரண்டு பிடித்து தறிகெட்டு ஓடும் சில பறவைகள் வாழமுடியாமல் போவதைக் காணலாம். ஓரிரண்டு இதற்கு விதிவிலக்காய் செயல்படலாம்... நான் முன்பொரு சமயம் எழுதிய அந்த கவிதைகளே மேற்ச்சொன்ன எண்ணத்திற்கு சாட்சி.

சிசு பிறப்பதற்கு முன்னிருந்து அது நல்லபடியாக வளர்வதற்கு பின் வரை எல்லாவற்றையும் கவனித்து ஒரு தந்தையாகமட்டுமல்லாமல் ஆசானாகவும், அறிவுரையாளனாகவும், அனுபவஸ்தனாகவும் தன் மகனுக்கோ மகளுக்கோ தோழனாகவும் இருக்கிறார். தந்தையை விட நல்ல தோழனுமில்லை, தந்தையைவிட நல்ல வழிகாட்டியுமில்லை.

ஆதிமுதல் அந்தம்வரை
நிஜமாகவும் நிழலாகவும்
தோள்கொடுக்கும் தந்தை
நிகரில்லா உறவன்றோ.!

நிழலாக தோள்கொடுப்பதை நிதானித்து உணரலாம்.

நல்ல கவிதை... வாழ்த்துக்கள் அமரன்.

அமரன்
09-10-2007, 08:19 AM
நன்றாக உணர்ந்த பின்னூட்டம் நன்றி ஆதவா..